Saturday, August 22, 2009

நாஸி வேட்டை


1941, நாஸிக்களின் ஆதிக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் பிரான்ஸ் நாடு. நாஸிக்களின் கண்களில் இருந்து மறைந்து வாழும் யூதர்களை கண்டுபிடிப்பதற்காக ஹிட்லரால் நியமிக்கப்பட்டிருக்கிறான் காலனல் ஹான்ஸ் லாண்டா ( Christophe Waltz ).

லாண்டா மிகுந்த புத்திசாலி. நயமாகப் பேசி தகவல்ளைப் பெற்றுக் கொள்வதில் வல்லவன். ஜெர்மானியர்கள் போன்று சிந்திக்காது யூதர்கள் போல் சிந்திப்பவன். கொலை செய்யத் தயங்காதவன்.

ஒர் வீட்டில் நடைபெறும் தேடுதல் வேட்டையின் போது சொஸானா (Mélanie Laurent) எனும் யூத இனத்தை சேர்ந்த இளம் பெண் அவன் பிடியிலிருந்து தப்பி ஒடி விடுகிறாள். அப்பெண்ணின் குடும்பத்தையே தன் வீரர்களால் கொன்று குவித்து விடுகிறான் ஹான்ஸ் லாண்டா.

அமெரிக்க லெப்டினண்ட் அல்டோ ரெய்ன் (Brad Pitt) தலைமையில் பிரான்ஸிற்கு ரகசியமாக வருகிறது ஒர் அமெரிக்க யூத வீரர்கள் குழு. இவர்கள் நோக்கம் இயலுமானவரை நாஸிக்களை கொன்று குவிப்பது. வருடங்கள் ஓட ஓட வெற்றிகரமாகவும், ரகசியமாகவும், நாஸிக்களின் வயிறுகளில் இவர்களின் பெயரைக் கேட்டாலே சிலவித மாற்றங்களை உண்டாக்கி விடும் வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் அல்டோவின் குழு, ஒர் ரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆங்கிலேய உளவாளிகளுடன் கை கோர்க்கிறது.


இங்கிலாந்திற்காக ரகசியமாக உளவு பார்க்கும் ஜெர்மன் நடிகையான பிரிட்ஜிட்டின் தகவல் படி, பாரிஸில் இடம்பெறவிருக்கும் ஒர் திரைப்படத்தின் முதல் திரையிடலில் நாஸிக்களின் பல உயர் அதிகாதிரிகள் கலந்து கொள்வார்கள் என்பது அல்டோ குழுவிற்கு தெரிய வருகிறது. இவ்வுயர் அதிகாரிகள் குழுவில் டாக்டர் கேய்பல்ஸ், ஹிட்லர் ஆகியோரும் அடங்குவர்.

inglourious-basterds-20090813091738991_640w திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு இமானுவல் எனும் பெண்ணொருத்தியால் நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்ஜிட்டின் உதவியுடன் திரையரங்கினுள் நுழைந்து அதனை டைனமைட்கள் மூலம் வெடிக்க வைத்து தவிடு பொடியாக்கி விடுவது என திட்டம் தீட்டுகிறான் அல்டோ. படம் திரையிடப்படும் திரையரங்கின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக ஹான்ஸ் லாண்டா நியமிக்கப்படுகிறான். தன் மனதில் ஹான்ஸ் லாண்டா குறித்த ஆறாத வஞ்சத்தை வளர்த்துக் கொண்டே, இம்மானுவல் எனும் பெயரில் திரையரங்கை நிர்வகித்து வரும் யூதப் பெண்ணான சொஸானா இத்தருணத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தனக்கென ஒர் ரகசிய திட்டத்தை உருவாக்குகிறாள்.

ஒர் தனி வீடு, காற்றில் அசையும் கொடிகளின் மீது துவைத்த துணிகளைக் காயப் போடும் ஒர் இளம் பெண், அருகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் தந்தை, தீடிரென தூரத்தில் புழுதியைக் கிளப்பியவாறு வீட்டை நோக்கி வரும் நாஸி ஜீப்புக்கள் என செர்ஜியோ லியோனின் வெஸ்டர்ன் படங்களினை நினைவூட்டும் ஆரம்பக்காட்சி, பிண்ணனி இசை, காட்சி அமைப்பு என வெஸ்டர்ன் படங்களின் சாயல் படத்தில் தாராளமாக உண்டு.

படத்தின் கதை ஜந்து அத்தியாயங்களில் கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில் வீடொன்றிற்கு விசாரணைக்காக வரும் ஹான்ஸ் லாண்டா வீட்டின் உரிமையாளனை விசாரிக்கும் அந்தக் காட்சியே லாண்டாவைப் பற்றி முழுதும் கூறிவிடுகிறது. அதே போல் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைக்கிறது.

inglourious-basterds-20090813091743397_640w புத்திசாலித்தனமான வசனங்களாலும், நீண்ட உரையாடல்கள் மூலமாகவும் காட்சித் தருணங்களின் அழுத்தத்தை அதிகரிப்பதுடன், பார்வையாளர்களையும் அந்த அழுத்தத்தினை உணர வைத்து விடுகிறார் இயக்குனர் Quentin Tarantino. ஆனால் இது எல்லா அத்தியாயங்களிற்கும் பொருந்திப் போகவில்லை என்பது வேதனை. வன்முறைக் காட்சிகளின் உக்கிரத்தை அவற்றினுள் இழையும் நகைச்சுவை மூலம் தணியச் செய்திருக்கிறார் டாரண்டினோ. இறுதி அத்தியாயம் ரசிகர்களை பரபரக்க வைக்கும் ஒர் அத்தியாயம். எண்ணற்ற எதிர்பாராத திருப்பங்கள் மூலம் ரசிகனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் இயக்குனர். எந்த ஒர் கணத்திலும் பார்வையாளன் மனதில் நினைத்திருக்கும் ஒவ்வொர் முடிவையும் தகர்க்கிறது திரைக்கதை. இறுதியில் வரலாற்றையும் சற்று மாற்றி விடுகிறது.

நாஸிக்களை கொல்வதற்காக பிரான்ஸ் வரும் அல்டோ குழுவினரின் வீரதீர செயற்பாடுகளான, நாஸிக்களின் மண்டைத்தோலை வெட்டி எடுத்தல், பேஸ்பால் பேட்டால் தலையை அடித்து மூளையை சிதறச் செய்தல் போன்றவை நாஸிக்கள் மீது பார்வையாளர்களை இரக்கம் கொள்ள வைத்து விடுகின்றன. அல்டோ பாத்திரத்தில் வரும் பிராட் பிட் எவ்வளவு முயன்றாலும் அப்பாத்திரத்துடன் ஒன்றிப் போகாது அன்னியப்படுகிறார்.

inglourious-basterds-20090629050820665_640w படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஹான்ஸ் லாண்டா. மென்மையான பாவனையும், குள்ள நரித்தனமும், மயக்கும் சிரிப்பும் சற்றுக் கோமளித்தனமும் ஒருங்கே இணைந்த அப்பாத்திரத்தினை சுவைத்து சுவைத்து செய்திருக்கிறார் ஆஸ்திரிய நடிகரான கிறிஸ்டோப் வால்ட்ஸ். இவ்வருட கேன்ஸ் விழாவில் சிறந்த ஆண் நடிகரிற்கான விருதினை இப்படத்தில் நடித்ததற்காக அவர் பெற்றிருக்கிறார். இத்தாலிய திரைப்படக் கலைஞர்களாக திரையரங்கில் நுழையும் அல்டோ குழுவினர்க்கும், ஹான்ஸ் லாண்டாவிற்குமான உரையாடல் காட்சியில் அவர் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். அவர் உடல் மொழி அவரை ஒர் அப்பாவி போன்று தோற்றுவித்து அவர் ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.

திரையிடப்படும் திரைப்படத்தில் ஜெர்மனிய வீரனொருவனின் துப்பாக்கி குண்டுகளிற்கு பலியாகி விழும் அமெரிக்க வீரர்களைக் கண்டு ஹிட்லர் மகிழ்ச்சியுற்று இவ்வருடத்தின் சிறந்த திரைப்படம் இதுதான் என கேய்பல்ஸைப் பாராட்ட கேய்பல்ஸ் ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி செம காமெடி. படத்தில் மனதினை நெகிழ வைக்கும் ஒரே ஒர் பாத்திரம் யூதப் பெண்ணாக வரும் மெலானி. அவளின் வாழ்க்கை அவளை புன்னகைக்க வைத்த தருணங்கள் மிக அரிதே. வஞ்சத்தின் மூலம் புன்னகைக்க நினைத்த அவளின் முடிவு எதிர்பாராதது.

இறுதிக்காட்சியில், வழமையான டாரண்டினோ பாணியில் அல்டோ ஒர் காரியத்தை ஆற்றி விட்டு இதுதான் என் மாஸ்டர் பீஸ் என்பார். ஆனால் இத்திரைப்படம் நிச்சயமாக டாரண்டினோவின் மாஸ்டர் பீஸ் அல்ல. (**)

18 comments:

  1. ஆங்கிலத் திரைப்படவிமர்சகர்கள் டராண்டினாவின் மாஸ்டர் பீஸ் எனத்தான் கொண்டாடுகிரார்கள்.இம்மாதிரித் தலைப்புகளுக்கே இங்கு அனுமதியில்லை என்பதால் தரவிறக்கம் செய்துவிட்டேன்/ஆங்கில சப்டைட்டில்களை பெற முடியவில்லை.விரைவில் ஆங்கில சப்டைட்டில்கள் கிடைத்ததும் பார்த்துவிடுகிறேன்

    ReplyDelete
  2. அருமை நண்பரே. இன்று திரையரங்கில் ஸ்டார் ட்ரெக் பார்த்தேன் அப்போது இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரைப் போட்டுக் காட்டினார்கள். ஹிட்லர் வெறுப்படைந்து உறுமும் காட்சியும் அதில் அடக்கம். இலங்கையில் வெளியாக எப்படியும் இரண்டு மாதங்களாவது ஆகும். அதுவரை பொறுமனமே!!!

    ReplyDelete
  3. காதலரே, இந்த வாரம் வெளியான படத்திற்கு சுட சுட ஒரு விமர்சனத்தை களமேற்றி விட்டீர்களா... அபாரம்

    சமீப காலத்தில் ஹிட்லர் மற்றும் நாஜி ஜெர்மனி தான் ஹாலிவுட் சினிமாகாரர்களுக்கு அட்சயபாத்திரமாக விளங்குகிறது போல. த ரீடர், வால்கிய்ரே வரிசையில் இப்போது இன்க்ளோரியஸ் பாஸ்டர்ட்ஸும் சேர்ந்திருக்கிறது. போரில் வெற்றி பெற்ற நேச நாடுகளில் இவ்வகை படங்கள் மனதை கொள்ளை கொண்டாலும், எதிர் எண்ணங்கள் கொண்ட அணியானாலும், போரின் மூலம் மாறாத வடுகளை சுமந்து கொண்டிருக்கும் ஜெர்மன் மக்கள் இவ்வகை படங்களை தங்களை மற்றவர்கள் இன்றும் எள்ளி நகையாட பயன்படுத்துகிறார்கள் என்று மனம் வருந்த கூடுமோ என்னமோ.... ஒரு சர்வாதிகாரியின் வினைகளை, அவர்கள் இன்னும் அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    டாரண்டினோ தன் படங்களிலேயே இதுதான் மாஸ்டர் பீஸ் என்று கூறுகிறார். ஆனால் அவர் 10 வருடங்களாக உழைத்த உழைப்பு என்று விக்கிபீடியா கூறும் படத்தை விமர்சகர்கள் அவ்வளவு சிறப்பாக எடுத்துரைக்கவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை கால ஓட்டத்தில் தன் மனதில் இருந்த காட்சியமைப்புகளை அவரே பல முறை மாற்றி எடுத்ததின் விளைவாக இருக்கும் போல... இந்த படம் உங்கள் மதிப்பிலும் 2 ஸ்டார்கள் பெற்றதில் ஆச்சர்யம் இல்லை. தரமான பிரதியில் படம் கிடைக்க பெற்றவுடன் மீண்டும் கருத்து பதிகிறேன்.

    நீங்கள் கூறியது போல வாட்ஸின் உருவத்தோற்றம் அவர் கதாபாத்திரத்தின் கொடூரத்தை வித்தியாசமான தொனியில் கூறியிருப்பது ட்ரயிலர் மற்றும் காட்சி படங்களில் தெரிகிறது. படத்தில் வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும், கேனாஸ் விருது வழங்கி அவரின் நடிப்பிற்கு கவுரவம் தேடி கொடுத்திருக்கிறார்கள்.

    கலைஞனுக்கு கதாபாத்திரம் ஒரு பொருட்டல்ல என்பதை நம் ஊர் அல்டாப்பு கதாநாயகர்களும் உணரும் காலம் வருமா ????

    இப்படிக்கு சமீபத்தில் எங்கள் அண்ணா பார்த்து உணர்ச்சியில் கலங்கி நிற்கும் அப்பாவி பொதுஜனம் :(

    ReplyDelete
  4. நண்பரே

    ப்ரான்ஸ் மக்களுக்கு இன்னும் ஜெர்மன் மீது தீராத ஆத்திரம் குமுறிக் கொண்டிருப்பது திரைப்படங்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, டாக்ஸி திரைப்படங்கள்.

    எனக்கு ரிசர்வ்யர் டாக்ஸ் படமே இன்னும் பிடித்திருக்கிறது. ப்ராட் பிட் தற்போது மிக தெளிவாக தன்னுடைய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார். வேறு ஒரு கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறார் போல படுகிறது.

    ரபீக், எங்கள் அண்ணாவும் ஒரு மாஸ்டர் பீஸ். பொக்கிஷம் ஒரு பொக்கிஷம். இதுக்கெல்லாம் கலங்கிட்டா எப்படி? வேட்டைக்காரன் டோய் வேட்டைக்காரன் டோய் இந்த பாட்டை கேட்கும்போது உங்களின் வயிறு கலங்கவில்லை?

    டிஸ்ட்ரிக்ட் 9 என்ற படத்தினை பற்றி நிறைய பாராட்டுரைகள் வருகின்றன. காதலர் அதை பற்றியும் எழுதவேண்டும்.

    ReplyDelete
  5. அய்யானார் அவர்களே, மாஸ்டர் பீஸ் என்றும், அல்ல என்றும் கருத்துக்கள் வெளியாகினாலும், இது ஒர் மாஸ்டர் பீஸ்தானா என்பதனை இன்னும் ஒர் இருபது வருடங்கள் கழித்து வரலாறுதான் கூறவேண்டும். அதற்குரிய வாய்ப்புக்கள் அரிதே. வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் ஜே, திரைப்படத்தில் ஹிட்லரை வைத்து செம காமெடி செய்திருக்கிறார்கள். இரு மாதத்தில் வந்து விடும் என்பதே நல்ல செய்திதானே காத்திருங்கள். கருத்துக்களிற்கும் தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

    ரஃபிக், ஜெர்மனியர்கள் இது போன்ற படைப்புக்களை சாதாரணமாகவே எடுத்துக்கொள்கிறார்கள். மனதுள் சில வேளைகளில் விசனப்படுகிறார்களோ என்னவோ.

    டாரண்டினோ படத்தை ரசிக்கும் படி எடுத்திருக்கிறார், அவரின் கதை சொல்லும் திறன் மிளிர்கிறது. ஆனால் மாஸ்டர் பீஸ் என்று அவர் கூறினால் அதில் அவரின் கருத்து மட்டுமே அடங்கியிருக்கிறது.

    திறமையான நடிப்பிற்குதானே ரஃபிக் விருது இதில் வில்லன் என்ன காமெடியன் என்ன தகுதியானவரிற்கு வழங்கப்படும்போதுதான் விருதிற்கே சிறப்பு.

    காப்டன் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா ஒர் உலகக் காவியம் என்பது என் கருத்து அப்படத்தினை மறுபடியும் பாருங்களேன் என் கருத்தை ஆமோதிப்பீர்கள் :)) கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ஜோஸ், பிரான்ஸ் மக்கள் குமுற மட்டும் செய்வார்கள் ஆனால் அடிதடி என்றால் உதவிக்கு வேறு யாராவது வந்து உதவினால்தான் :) டாக்ஸி படங்களும் மாஸ்டர் பீஸ் என்று கூறிவிடலாம்தான், ஆனால் டாக்ஸியின் நடிப்பிற்கு இதுவரை யாரும் விருது தராததால் விட்டுவிடுகிறேன்.

    ரிசர்வ்வுவார் டாக்ஸ் சிறந்த படம். சிறந்த திரைக்கதை, சுடுறதுன்னா சுடனும் வசனம் மீண்டும் பிரபல்யமாகியது. ஹிந்தியில் கூட அக்கதையை எடுத்திருந்தார்கள்.

    டிஸ்டிரிக்ட் 9 இங்கு இன்னமும் வெளியாகவில்லை, திரைக்கு வந்ததும் பார்த்து விட்டு பதிவிடுகிறேன். தயாரித்திருப்பது பீட்டர் ஜாக்சன் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  6. 2 ஸ்டார்கள் தானா? படம் ஒன்றும் அவ்வளவு மட்டம் இல்லையே. Valkyrie உடன் ஒப்பிடும் போது படம் 1000 மடங்கு தேவலாம். இது டொரண்டினோவின் மாஸ்டர் பீஸ் இல்லாவிடினும் மிக நல்ல திரைப்படம். ஒரு வகையில் பார்த்தால் படம் மீள் புனைவு தான். நீங்கள் படம் பார்த்த போது உணர்ந்த்தை விட, படம் முடிந்த பின் அதை மனதில் திரும்ப ஓட்டி பார்த்த போது, மிகச் சிறப்பாகவே தோன்றியது. என்னோட மதிப்பில் 4/5. இந்த படத்தைப் பற்றி என்னுடைய வலைமனையிலும் எழுதியிருக்கிறேன். வந்து பாருங்களேன். ஓட்டும் போட்டாச்சு...

    ReplyDelete
  7. பிரசன்னா ராசன் அவர்களே, இரு நட்சத்திரங்கள் என்பது இத்திரைப்படத்திற்கு நான் வழங்கிய நட்சத்திரங்கள் அவ்வளவே. அதனை விட இத்திரைப்படத்திற்கு வழங்கிட முடியவில்லை. ஒவ்வொருவரும் ஒர் படைப்பை ரசிக்கும் விதம் வேறானாதாகவிருக்கும் இல்லையா.

    இத்திரைப்படத்தை மனதில் மீள ஓட விடும் போதும் கூட அது தரும் சலனங்களில் ஆழமில்லை நண்பரே.

    வருகைக்கும், உங்கள் மனம் திறந்த கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  8. அருமையான பதிவு
    //படத்தில் மனதினை நெகிழ வைக்கும் ஒரே ஒர் பாத்திரம் யூதப் பெண்ணாக வரும் மெலானி//
    உண்மை தான். இன்றளவில் என்னை நெகிழ வைப்பதும் அந்த பெண் தான்

    ReplyDelete
  9. //ஒவ்வொருவரும் ஒர் படைப்பை ரசிக்கும் விதம் வேறானாதாகவிருக்கும் இல்லையா.//

    கண்டிப்பாக. உங்களின் ரசனை அப்படி இருக்கிறது. ஆனால், எனக்கு மிகவும் பிடித்து போய் விட்டது. என்ன செய்ய?

    எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு புத்தகத்தின் மூலமே நான் இந்த இயக்குனரை தெரிந்து கொண்டேன். அதில் இருந்து இவரின் தீவிர ரசிகன் நான். அந்த புத்தகத்தினை மைய்யமாக கொண்ட என்னுடைய பதிவை பதிக்க உங்கள் பதிவு காரணமாக இருக்கிறது.

    ReplyDelete
  10. excellent blog and super narration. i just loved it. keep it going.

    ReplyDelete
  11. வேல்கண்ணன் அவர்களே உங்களையும் நெகிழ வைத்து விட்டாளா அந்தப் பெண்... உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்களிற்கு மிகவும் பிடித்திருப்பது உங்கள் ரசனையின் வெளிப்பாடு. இதில் செய்வதற்கு ஏதுமில்லை நண்பரே. வேறுபாடுகளால் நிறைந்ததுதான் உலகம்.

    வேதா அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. //ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்களிற்கு மிகவும் பிடித்திருப்பது உங்கள் ரசனையின் வெளிப்பாடு. இதில் செய்வதற்கு ஏதுமில்லை நண்பரே. வேறுபாடுகளால் நிறைந்ததுதான் உலகம்//

    நான் கூறியதில் தவறில்லையே?இருப்பின் மன்னிக்கவும். எனக்கு பிடித்து விட்டது. உங்களை முழுவதுமாக கவரவில்லை. நான் இந்த படத்தை என்னுடைய டைரியில் குறித்து வைத்து பார்த்தேன், ரிலீஸ் ஆகும் நாள் மறக்க கூடாது என்று.

    ReplyDelete
  13. நண்பர் ஜாலிஜம்பர் அவர்களே, நீங்கள் கூறியதில் தவறு ஏதுமில்லை, நீங்கள் மனம் திறந்து கருத்தை கூறுவதைத்தான் நான் என்றும் விரும்புகிறேன். நான் எழுதிய பதிலை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். வேறுபாடான ரசனைகளின் வெளிப்பாடுகளால் நிறைந்ததுதான் உலகம், அதில் நீங்களும், நானும் உண்டு. இதில் நாங்கள் செய்வதற்கு ஏதுமில்லை. ரசிப்பதைத் தவிர என்பதைத்தான் நான் அப்படிக் கூறியிருந்தேன். எவ்வகையிலாவது உங்கள் உணர்வுகளை வேதனைப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் நண்பரே.

    ReplyDelete
  14. // எவ்வகையிலாவது உங்கள் உணர்வுகளை வேதனைப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன் நண்பரே.//

    நீங்கள் இவ்வாறு கூறத் தேவை இல்லை நண்பரே. நீங்கள் யார் மனதையும் (விரும்பினால் கூட) புண் படுத்த முடியாத நபர்.

    ReplyDelete
  15. இன்றுதான் பார்க்க முடிந்தது.

    நான் பார்த்த இரண்டாம் உலகப் போர் படங்களில் இது முதல் வரிசையில் நிற்கும். அருமையான பதிவு. படத்தை பார்க்க தூண்டியது. நன்றி. உங்களின் சென்றார்a பதிவு குறித்து விரைவில் நான் ஒரு பதிவு இடுகிறேன்.

    ReplyDelete
  16. நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    காமிக்ஸ்பிரியரே, கருத்துக்களிற்கு நன்றி, உங்கள் பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. இன்று இராக்கிலும், அப்கானிஸ்தானிலும் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்கா,பிரிட்டன் நாடுகள் 100 ஹிட்லர்களுக்கு சமம்.

    ReplyDelete
  18. காப்.டைகர் அவர்களே உங்கள் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஹாலிவூட்டில் பெரும்பாலும் அவர்களை உலகைக் காப்பவர்களாகவே சித்தரிக்கிறார்கள் இல்லையா.

    ReplyDelete