Saturday, August 15, 2009

கோதுமைகளின் துரோகம்


1945- ஏப்ரல்- ஹிரோசிமா

gen2 இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாட்டுப் படைகளிற்கு எதிராக ஜப்பான் நடாத்தி வரும் கடும் யுத்தம் அதன் இறுதி மூச்சை அடையும் நேரம் மெல்ல மெல்ல நெருங்கி கொண்டிருந்தது. ஹிரோசிமாவில், போரின் உக்கிரமான பிடிக்குள் சிக்கி வதங்கும் குடும்பங்களில் நாகாவோகாவின் குடும்பமும் ஒன்றாகும்.

ஜப்பானிய நகரங்கள் மீது அமெரிக்க விமானங்கள் இரவு , பகல் பாராது தங்கள் குண்டு வீச்சுக்களை நிகழ்த்துகின்றன. மக்கள் தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள பதுங்குகுழிகளிற்குள் அடைக்கலம் தேடுகிறார்கள். வானத்தில் அழகான மேகங்களையோ, நட்சத்திரங்களையோ பார்ப்பதை விடுத்து, அழிவின் தூதர்களை பார்க்க வேண்டிய காலமது.

வறியவனான நாகாவோகா, தனக்கிருக்கும் ஒர் சிறிய நிலத்தில் கோதுமைப் பயிரை பயிரிட்டு வருகிறான். நிலத்தில் உழைத்த நேரம் போக மீதி நேரத்தில் தன் வீட்டில் கர்ப்பமுற்றிருக்கும் தன் மனைவி கிமியுடன் மரத்தாலான காலணிகளையும் அவன் உருவாக்குகிறான்.

அவனது மூத்த மகன் கோஜி படிப்பை நிறுத்தி விட்டு ஏனைய மாணவர்களைப் போலவே, ஜப்பானிய ராணுவத்திற்காக ஊதியமின்றி தொழிற்சாலையில் வேலை பார்க்கின்றான். எய்கோ எனும் ஒர் இனிய மகள் , இதற்கு பின்பு மூன்று ஆண் பிள்ளைகள். இதில் அகிரா, பள்ளியில் படிக்கும் சிறுவர்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் திட்டத்தினால் ஒர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறான். எஞ்சிய சிறுவர்களான ஜென்னும், சிஞ்யியும் குறும்புக்காரர்கள். தங்கள் தந்தையின் கோதுமை நிலத்தில் அவர் கூட ஒத்தாசையாக வேலை செய்கிறார்கள்.

அவர்கள் வீட்டில், வறுமையும், பசியும் குடும்ப அங்கத்தினர்களாகவே அவர்களுடன் வாழ்ந்து வருகின்றன. ஒர் யுத்தத்தினால் அதிகம் பாதிப்புள்ளாகும் வறிய வர்க்கமல்லவா அவர்கள். நாகாவோகா, ஜப்பானின் போர்க் கொள்கைக்கு எதிரான கருத்துடையவன். மக்களை எண்ணியே பார்க்காத சில பணக்காரர்களினதும், முட்டாள் ராணுவத்தினதும் கூட்டுச் சதிதான் போர் எனும் எண்ணம் கொண்டவன். நாகாவோகாவின் இக்கருத்துக்கள் அவனை தேசத்துரோகி எனும் பட்டத்திற்கு தகுதியுள்ளவையாக்குகின்றன. போரிற்கு ஆதரவான கருத்துக்கள் கொண்ட, தான் குடியிருக்கும் பகுதியின் தலைவரை அவன் நேரடியாகவே எதிர்க்கின்றான்.

gen3 அயலவர்களால் அவன் பிள்ளைகளும் துரோகியின் பிள்ளைகள் எனக் கிண்டல் செய்யப்படுகிறார்கள். வீட்டில் நிலவும் வறுமை காரணமாக தங்கள் பெற்றோர்கள் உருவாக்கிய மரத்தாலான காலணிகளை விற்பதற்காக எடுத்து செல்கிறார்கள் ஜென், எய்கோ, மற்றும் சிஞ்ஜி. இவர்கள் வழியில் குறுக்கிடும், அவர்கள் குடியிருக்கும் பகுதியின் தலைவரின் மகன் ரியுசிச்சி, அவர்களை துரோகிகள் என கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறான். பின் தன் நண்பர்களுடன் காலணிகள் இருந்த சிறு வண்டியை நீரினுள் தள்ளி விட்டு, அவனை எதிர்க்கும் எய்கோவின் ஆடைகளை அவிழ்க்க முயல்கிறான் . இதனால் ஆத்திரம்டையும் ஜென், ரியுசிச்சியின் விரல்களை கடித்து துண்டாக்கி விடுகிறான்.

தன் மகனின் நிலை கண்டு கோபமுறும் தலைவர், பொலிஸிடம் நாகாவோகா போரை எதிர்க்கும் ஒர் தேசத்துரோகி என புகார் தந்து அவனை கைது செய்ய வைக்கிறார். கைது செய்யப்பட்ட நாகாவோகாவை பொலிஸ் கடுமையான முறைகளில் விசாரிக்கிறது. எவ்வளவு அடி வாங்கினாலும் ஜப்பான் செய்யும் போர் அனாவசியமானது எனும் தன் கருத்திலிருந்து நகாவோகா மாறாதவனாகவேயிருக்கிறான்.

gen4 தந்தைக்கு ஏற்பட்ட நிலையை அறியும் சிறுவர்கள் ஜென்னும், சிஞ்யியும் மனம் கொதிக்கிறார்கள், குடியிருக்கும் பகுதியின் தலைவரை அவர் தனியே வரும் வேளை பார்த்து தாக்கியும் விடுகிறார்கள். சிறுவர்களின் அடாவடியில் காயமடைந்த தலைவர், நாகாவோகாவின் வீட்டிற்கு வந்து வாக்கு வாதம் செய்கிறார். வாக்கு வாதம் நிலை தவறிப் போகவே கிமியை அவர் அறைந்து விடுகிறார். இதனால் ருத்ரமாகும் கிமி, கத்தி ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு தலைவரை வீதியில் வைத்து தாக்கச் செல்கிறாள். நிலைமை விபரீதமாகும் முன்னர் நாகாவோகாவின் அயலவனான கொரிய நாட்டைச் சேர்ந்த பக் என்பவன் கிமியை தடுத்து சாமதானம் செய்துவிடுகிறான்.

ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது கொரிய நாட்டைச் சேர்ந்தவர்களும், சீனர்களும் பலவந்தமாக ஜப்பானிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்கள். கடுமையான வேலைகளில் அமர்த்தப்பட்ட அவர்கள் மிகவும் மோசமன முறையில் மனிதாபிமானமற்ற வகைகளில் ஜப்பானியர்களால் நடாத்தப்பட்டார்கள். களமுனைகளில் போரிட்டு ஜப்பான் நாட்டிற்காகப் பலியானார்கள். பெரும்பான்மையான ஜப்பானிய மக்களோ அவர்களை சக மனிதர்களாக நினைத்துப் பார்க்கவேயில்லை. ஆனால் நாகாவோகா மனிதர்கள் யாவரும் ஒன்றே, கொரியர்களையும் நாங்கள் மதிக்க வேண்டும் என்ற நல்மனம் கொண்டவன். தன் குழந்தைகளிற்கும் அவன் இதைக் கற்றுத் தருகிறான்.

குடியிருக்கும் பகுதியின் தலைவரை, கிமி கத்தியால் தாக்கி கொலை செய்ய முயன்றாள் எனும் தகவல் அயலவர்கள் மத்தியில் வேகமாகப் பரவிவிடுகிறது. நாகாவோகாவின் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க ஆரம்பிக்கிறார்கள் அப்பகுதியில் வாழ்பவர்கள். தம் பிள்ளைகள் கூட நாகாவோகாவின் பிளைகளுடன் பழகக்கூடாது எனத் தடையும் விதிக்கிறார்கள்.

gen5 ஜென் கல்வி கற்கும் பாடசாலையில், யுத்தம் மகத்தானது என்றும் மற்றும் ஜப்பானிய மன்னரிற்காகவும், மண்ணிற்காகவும் பிள்ளைகள் தங்கள் உயிரைக் கொடுத்தல் வேண்டும் எனவும் வஞ்சகக் கருத்துக்கள் ஏதுமறியாத பிஞ்சு உள்ளங்களிற்கு ஊட்டப்படுகின்றன. வகுப்பில் யுத்தத்திற்கு எதிராக தன் கருத்துக்களை எழுதியதால் ஜென் கடுமையாக தண்டிக்கப்படுகிறான். அவன் சகோதரியான எய்கோ, திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டு, உடைகளை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள். துரோகிகள் என்றே அவர்களை எல்லாரும் அழைக்கிறார்கள். நேர்மைக்கு ஒத்த சொல்லாக சில நேரங்களில் துரோகம் அமைந்து விடுகிறது போலும். பக் மாத்திரம் எப்போதும் போன்று அவர்களுடன் மிகவும் மரியாதையுடன் பழகுகிறான்.

வீட்டில் உணவு ஏதுமின்றி பட்டினியால் வாடும் குழந்தைகளைப் பார்த்து மனம் உடைந்து அழுகிறாள் கிமி. தங்களிற்கு உதவி செய்ய யாருமே இல்லை என்பதால் அவள் தளர்ந்து போகிறாள். வேறு வழியில்லாது பரந்த புற்தரைகளில் வாழும் வெட்டுக்கிளிகளை பிடித்து உண்டு பசியாறுகிறார்கள் அவர்கள். பொலிஸும் நாகாவோகாவை விடுவித்து விடுகிறது. வீடு வரும் நாகாவோகா தன் குடும்பத்தின் நிலை கண்டு மனம் உடைந்து போகிறான். தன் குடும்பத்தினருடன் சேர்ந்து அவனும் வறுத்த வெட்டுக்கிளிகளை உண்ணத் தயாராகிறான். நாகாவோகா விடுதலையாகி வீடு திரும்பி விட்டதை அறியும் கொரியன் பக், தன் கஷ்டத்தின் மத்தியிலும் நாகாவோகா வீடு திரும்பியதைக் கொண்டாடச் சொல்லி அவர்களிற்கு சிறிது அரிசி தருகிறான்.

gen6 பாடசாலையில் தன் குழந்தைகளிற்கு நேர்ந்த கதியை அறிந்து விடும் நாகாவோகா, அவர்களின் பாடசாலைக்கு சென்று தன் குழந்தைகளின் எதிரிலேயே அவர்களிடம் முறை தவறி நடந்து கொண்ட ஆசிரியர்களை தாக்குகிறான். அப்பாவிச் சிறுவர்களை போரிற்கு தயார் செய்யும் கொலைகாரர்கள் எனவும் அவர்களைக் கடிந்து கொள்கிறான். பாடசாலையில் இருந்து ஜென்னுடனும், எய்கோவுடனும் வீடு திரும்பும் வழியில் தன் கோதுமை வயலைக் காணச் செல்லும் நாகாவோகா அச்சிறிய வயல் நசுக்கி சிதைக்கப்பட்டிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

தன் வயலை மீண்டும் உருவாக்கி காட்டுவேன் என சபதமிட்டு வீடு திரும்பும் நாகாவோவிற்கு இன்னுமோர் அதிர்சி அவன் வீட்டில் காத்திருக்கிறது. அவன் மூத்த மகனான கோஜி விமானப் படையில் இணையப் போவதாக தெரிவிக்கிறான். தந்தையின் அறிவுரைகள் எதுவும் அவனை தடுத்து விட முடியாமல் போகின்றன.

தான் பணிபுரிந்த தொழிற்சாலையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், துரோகியின் மகனும் துரோகி எனும் அவப்பெயருமே தான் இம்முடிவிற்கு வருவதற்கு காரணமாக அமைந்தன என்பதை தன் இரு சகோதரர்களான ஜென், சிஞ்ஜி ஆகியோரிடம் அவன் பகிர்ந்து கொள்கிறான். இதனாலாவது தன் குடும்பத்திற்கு வந்து சேர்ந்திருக்கும் அவப்பெயர் நீங்கும் என்று கோஜி நம்புகிறான். பின்பு தன் சகோதர்களிடமிருந்து விடை பெற்றுச் செல்கிறான் கோஜி. தன் மகன் உயிரோடு திரும்ப வேண்டுமே என தன் மனதினுள் அழுகிறான் நாகாவோகா.

இதே வேளையில் அமெரிக்காவில் மன்ஹாட்டன் எனப் பெயரிடப்பட்ட ஒர் திட்டம் மூன்று வருடங்களின் பின் வெற்றிகரமான முடிவிற்கு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் அணு குண்டு ஒன்றை உருவாக்கல் ஆகும். உருவாக்கப்பட்ட அணு ஆயுதத்தின் உண்மையான தாக்கம் என்னவென்று உறுதியாக தெரியாத நிலையிலேயே, ஜப்பானை போரிலிருந்து ஒடுக்குவதற்காக நான்கு ஜப்பானிய நகரங்கள் பிரதான இலக்குகளாக தெரிந்தெடுக்கப்பட்டன. கோகுயுரா, ஹிரோசிமா, கியோட்டோ, நிகாட்டா என்பனவே அந்த நான்கு நகரங்கள் ஆகும்.

ஜப்பானின் பல நகரங்கள் அமெரிக்க விமானங்களினால் ஒயாத விமானத் தாக்குதலிற்கு இலக்காகின்றன. கள முனையிலோ தோல்வி ஜப்பானியர்களை ஆதரவுடன் அணைத்துக் கொள்கிறது. ஜப்பானிய அதிகார பீடம் போரின் நிலை பற்றி பொய்யான தகவல்களை மக்களிற்கு கூசாது அளிக்கிறது. இறுதி ஜப்பானியன் உயிருடன் இருக்கும் வரை யுத்தம் தொடரும் என அதிரடி அறிக்கை விடுகிறது. அப்பாவி ஜனங்களை போரை நோக்கி உந்த உறங்காத ஒர் யந்திரம் போன்று அது புதிய வழிகளை தேடிக் கொண்டே இருந்தது.

ஜூன் 1945. ஹிரோசிமாவில் உணவுப் பொருட்களிற்கான தட்டுப்பாடு மிக உக்கிரமாக இருந்தது. மக்களின் அதிருப்தி போரிற்கு எதிராக அவர்களை திருப்ப ஆரம்பித்தது. காவல் துறை உதவியுடன் ஜப்பான் அதிகாரவர்க்கம் அதிருப்தியாளார்களை அடக்கி சிறையில் அடைத்துப் போட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் வேறு வழியின்றி போரிற்கு ஆதரவு தர நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். எல்லா வகையான கஷ்டங்களையும் மக்கள் ஜப்பானிய மன்னரிற்காக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்களிற்கு அறிவுரை நல்கப்பட்டது.

கர்பமாக இருக்கும் கிமி உடலில் சத்துக்கள் குறைந்ததால் உடல் நலம் இழக்கிறாள். அவளிற்கு நல்ல உணவுதான் மருந்து எனக் கூறிவிடுகிறார் மருத்துவர். நாகாவோகா என்ன செய்வது என்று வழி தெரியாமல் தவிக்கிறான். ஜென்னும், சிஞ்ஜியும் தெருவில் பாடல்கள் பாடி பிச்சை எடுத்து அப்பணத்தை யாரிற்கும் தெரியாது ஒர் சிறு முடிச்சில் இட்டு தங்கள் வீட்டிற்குள் வீசுகிறார்கள். இந்த உதவியை தங்களிற்கு செய்வது யார் என்பது தெரியாது ஆச்சர்யம் கொள்கிறார்கள் நாகாவோகா தம்பதிகள். இது ஒரு வேளை தங்கள் அயலவனான கொரியன் பக்கின் செயலாக இருக்கலாம் என்றும் எண்ணுகிறார்கள்.

பக்கை சந்தித்து அவனிற்கு நன்றி கூறச் செல்கிறான் நாகாவோகா. பண முடிச்சுக்களை அவர்கள் வீட்டில் வீசியது தானல்ல என்று அவனிடம் கூறுகிறான் பக். இதனால் குழப்பமுற்று தெருவில் பலத்த யோசனையுடன் நடந்து செல்லும் நாகாவோகா, தெருவொன்றின் ஓரத்தில் ஒர் கும்பல் கூடியிருப்பதைக் காண்கிறான். அக்கும்பலை நெருங்கும் நாகாவோகா தன் இரு புதல்வர்களும் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பதைக் கண்டு கலங்கி விடுகிறான்.

அன்று அப்பாவிகள் போல் வீடு திரும்பி வரும் தன் இரு புதல்வர்களையும் அணைத்துக் கொண்டு அழும் நாகாவோகா, தெருவில் இனி பிச்சை கேட்கக் கூடாது என அவர்களிடம் கூறுகிறான். தங்களிற்காக சில பாடல்களைப் பாடிக் காட்டுமாறு நாகாவோகா அவர்களிடம் அன்புடன் கேட்க, உற்சாகாமாக உரத்த குரலில் கச்சேரியை ஆரம்பிக்கிறார்கள் சிறுவர்கள்.

ஜூலை 26, 1945. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய மூன்று நாடுகளும் ஜப்பானை எந்தவித நிபந்தனைகளுமின்றி யுத்தத்தை நிறுத்தி விட்டு சரணடையும் படி கூட்டாக ஒர் அறிக்கையை வெளியிட்டன. மீறி யுத்தத்தை தொடர்ந்தால் ஜப்பான் மண்ணில் பேரழிவுக்கு இடமுண்டு எனவும் எச்சரித்தன. ஆனால் ஜப்பானிய ராணுவ அதிகாரம் இறுதி ஜப்பானியன் உயிருடன் உள்ள வரை போராடுவோம் என வீம்பு அறிக்கை விட்டு இதனை தட்டிக் கழித்தது.

இந்தக் கூட்டறிக்கையை வெளியிடுவதற்கு பத்து நாட்கள் முன்பாகவே, 16.07.1945ல், அதிகாலை 5.30 மணிக்கு, நியூ மெக்ஸிகோவின் பாலைவனம் ஒன்றில் அமெரிக்கா மனித குலத்தின் முதல் அணு ஆயுதப் பரிசோதனையை வெற்றிகரமாக நடாத்தி முடித்திருந்தது.

6.08.1945, அந்தக் காலையில் ஹிரோசிமாவின் நீல வானத்தின் அழகை ஜென்னும், அவள் சகோதரியும் தங்கள் கண்களால் பருகிக் கொண்டிருந்தார்கள்.மேகங்கள் அவர்களிற்கு தேவதைக் கதைகள் சொல்லித் தந்தன. கிமி தன் அன்புக் குழந்தைகளை பாடசாலைக்கு தயாராக சொல்கிறாள். சிறுவன் சிஞ்ஜி தன்னிடம் இருக்கும் படகு ஒன்றுடன் மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்படகில் அவன் செல்ல விரும்பிய இடங்கள் மிக அழகானவை. ஹிரோசிமாவில் அன்றைய விடியல் வழமை போலவே எழுந்தது. தன்னை நோக்கி காற்றில் மிதந்து வந்து கொண்டிருக்கும் பேரழிவின் சலனத்தை அது உணரவேயில்லை.

gen7 அன்று காலை 8.16 மணியில் ஹிரோசிமாவில் நேரம் நின்று போனது…..

நாகாவோகா குடும்பம் என்னவானது?

Hodashi No Gen [வெற்றுப்பாத ஜென்], எனும் மங்காவின் முதல் பாகம் உள்ளத்தைக் கனக்க வைக்கும் ஒர் பிரதியாகும். அமெரிக்கா அணுகுண்டு வீசியதால், ஜப்பானிய நகரங்களான ஹிரோசிமா, நாகசாகி பேரழிவிற்கு உள்ளாகின என்பதும், அதன் விளைவுகள் தணிய பல வருடங்கள் ஆயின என்பதும், அமெரிக்காவின் கோரமுகத்தின் மரபுச்சித்திரம் இதுவென்பதும் பலரும் அறிந்ததே.

ஆனால் ஜப்பானில் அத்தருணத்தில் வாழ்ந்திருந்த அப்பாவி மக்களிற்கு ஜப்பானிய ராணுவமும், அரசும் ஆற்றிய கொடுமைகளும், துரோகமும் இக்கதையைப் படிக்கும் வரை எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஹிரோசிமா நகரில் வாழும் ஒர் சாதரண குடும்பத்தின் கதை வாயிலாக நான் பெற்ற வாசிப்பனுபவம் மிகுந்த அதிர்ச்சி தருவதாக இருந்தது.

gen8 ஜப்பானின் கொடும் போரிற்கு எதிரான கருத்துக்கள் கொண்ட நாகாவோகா மூலம் போரிற்கு எதிராக குரல் தந்த மக்களின் அவல நிலை குறித்த உண்மைகளைக் கூறுகிறது இம்மங்கா. அதே சமயத்தில் ஜப்பானின் போரினால் பேரழிவுக்குத் தள்ளப்பட்ட ஒர் சமுதாயத்தின் கதையாகவும் அது விரிகிறது.

ஜப்பானின் மன்னர் பெயரால் மக்கள் போரிற்கு ஆதரவு அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எல்லாத் துயரங்களையும் பொறுத்துக் கொள்ளும்படி ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். போரிற்கு எதிராக பேசுபவர்கள் துரோகிகள் என போர் வெறி பிடித்தவர்களால் ஒதுக்கப்பட்டு நொருங்கிப்போக வைக்கப்பட்டிருக்கிறார்கள். காவல் துறை, ஊர்க்காவலர்கள் எனும் அதிகாரங்களின் ஏவலர்களின், மக்கள் மீதான வன்முறை கலங்க வைக்கிறது.

ராணுவத்தில் பயிற்சிக்கு சேரும் இளைஞர்களின் உடல் மற்றும் உள்ளம் மீதான பயிற்சியாளர்களின் சித்திரவதை, பாடசாலைகளின் ஆசிரியர்களால் மாணவர்களிற்கு செய்யப்படும் மூளைச் சலவை,போர் பற்றிய உண்மை விபரங்களை மக்களிற்கு தராது தொடர்ந்து நடாத்தப்பட்ட பொய்ப்பிரச்சாரம் என ஒர் பேரழிவை எப்படி ஜப்பானிய ராணுவமும், அரசும் அழைப்பிதழ் வைத்து வரவழைத்து ஜப்பானிய மக்களை காவு கொண்டது என்பதை அப்பட்டமாக சொல்கிறது கதை.

ஒர் உண்மையான பிரதியைப் படித்திடும் போது ஏற்படும் நம்பமுடியாத உணர்வையும், வலியையும் தாண்டி இம்மங்காவை இவ்வளவு நேர்மையுடன் படைத்த கலைஞனை போற்றிடவே என் மனம் ஓடுகிறது. உண்மையை உரக்ககூறி ஒர் கலைப்படைப்பை உருவாக்கியிருக்கிறார் அவர்.

gen9 ஆசிரியர் போர் குறித்த ஜப்பானின் நிலைப்பாட்டை கடுமையாக சாடுகிறார். அமெரிக்க ஆக்கிரமிப்பையும் அவர் வன்மையாக எதிர்க்கிறார். பின்னர் வரும் ஒன்பது பாகங்களிலும் ஜென்னின் வாழ்க்கை வழியாக போரின் பின் விளைவுகளையும், வளர்சியையும் விபரிக்கிறார்.

இக்கதையை எழுதி சித்திரங்களையும் வரைந்துள்ள மங்கா கலைஞர் Keiji Nakazawa ஆவார். 1939ல் ஹிரோசிமாவில் பிறந்தவர். தன் தந்தை, ஒரு சகோதரன், ஒரு சகோதரியை அணுகுண்டு வீச்சிற்கு பறிகொடுத்தவர். இவரும், இவரது தாயும் அதிர்ஷ்டவசமாக அக்குண்டு வீச்சிலிருந்து உயிர்பிழைத்தவர்கள் ஆவார்கள். 1965ல் டோக்கியோவிற்கு சென்று பின்பு மங்கா கலைஞராக உருவெடுத்தார். தான் கண்டு அனுபவித்த சம்பவங்களைக் கலந்து இக்கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். 1973ல் இக்கதை ஜப்பானிய மங்கா சஞ்சிகையான Weekly Shonen Jumpல் தொடராக வெளியானது.

எவ்வளவிற்கு எவ்வளவு அதிர்ச்சி தரும் சம்பவங்களை இக்கதை தன்னகத்தே கொண்டிருந்தாலும், மனதை நெகிழ வைக்கும் தருணங்களும் ஏராளமாக காணப்படுகிறது. Persepolis, Mauze ஆகிய சுயவரலாறு சார்ந்து படைக்கப்பட்ட உன்னதமான சித்திர நாவல்களுடன் தனக்கென ஒர் தனியிடத்தைப் பிடித்துக் கொள்கிறது இம்மங்கா. கதையில் நாகாவோகா தன் பிள்ளைகளிற்கு பல தருணங்களில் கூறுவது இதுதான் “எவ்வளவுதான் மிதிபட்டாலும் கோதுமைப் பயிர் போல் உறுதியுடன் மீண்டும் எழுந்து நில்லுங்கள்”.

மங்காவின் தரம் [******]

ஆர்வலர்களிற்கு

Barefoot Gen

ஆங்கிலப் பிரதிகள்

8 comments:

  1. அன்பு நண்பரே

    சில நேரங்களில் சொந்த கருத்துகளை கொண்டிருப்பது ஒரு மனிதனை எவ்வளவு தனிமைப்படுத்தி விடும் என்பதை இக்கதை வாயிலாக காண்கிறேன். பேரழிவை சந்தித்தப்போதும் அடுத்த பத்தாண்டுகளில் வெகு வேகமாக எழுந்து நின்ற ஒரு மக்களின் இன்னொரு பக்கத்தை பற்றி படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    இலக்கியம், கலை போன்ற துறைகளில் ஜப்பானியர்களும் அவர்களுக்கென ஒரு தனித்தன்மையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, அவர்களுக்கென தனி சித்திரத் தொடர்கள். மங்கா.

    நல்ல சித்திரத் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளிர்கள். மெள்ள மெள்ள இச்சித்திரங்களையும் புரிந்துக் கொள்ள தொடங்கியிருக்கிறேன்.

    ReplyDelete
  2. நண்பரே அற்புதமான இன்னுமொரு மங்கா படைப்பு. யப்பானிய மொழியைப் போலவே பக்கங்களையும் வலமிருந்து இடமாகப் படிப்பது அலாதி.

    சில வேளைகளில் பெரும்பாண்மையானொர் சொல்வதை எதிர்த்து ஆக்க பூர்வமான கருத்தை நாங்கள் சொன்னாலும் அதை இந்த சமூகம் ஏற்காது என்பதற்கு இந்த கதை ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

    தமிழாக்கம் அருமை நண்பரே. தொடர்ந்தும் தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    ReplyDelete
  3. ஜோஷ், இக்கதை என்னை அதிர்ச்சியடைய வைத்ததுமல்லாது உலகம் முழுதும் ஒடுக்கப்படுபவர்களின் நிலை ஒன்றுதான் போலும் என்று எண்ணவும் வைத்தது.

    கருத்துக்களை இன்றுகூட எம்மால் சுதந்திரமாக கூறிவிட முடிகிறதா என்ன, பல மனிதர்கள் வெளிப்படுத்த முடியாத தங்கள் கருத்துக்களுடன் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள்.

    இரண்டாம் பாகத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்து வரப்படும் கொரிய நாட்டவர்களிற்கு சிகிச்சை அளிக்காது அவர்களை இறக்கவிட்ட ஜப்பானிய மருத்துவர்கள் குறித்த காட்சி மனதைக் கலங்க வைக்கிறது.

    நீங்கள் மங்கா ரசிகராக உருமாறினால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். வேண்டுமானால் சுந்தரியிடம் :) கேளுங்கள். வருகைக்கும் முதன்மைக் கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    ஜே, நீங்கள் கூறுவது உண்மையே. பெரும்பான்மை என்பது ஒர் பலம் அதனை எதிர்ப்பது என்பது எப்போதும் எளிதானதாக இருந்து விடுவதில்லை.

    என் தமிழாக்கம் உங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. சிறந்த படைப்பை அறிமுகப் படுதியதற்கு நன்றிகள். இன்னும் பல நாடுகளில் அதிகார வர்க்கங்களால் மக்கள் மீது யுத்தம் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நன்கு வளர்ச்சியுற்ற நாடு ஒன்றின் மறு பக்கத்தை வெளிபடுத்தும் கதை. நேற்றுத்தான் தொலைக்காட்சியில் இரண்டாம் உலகப்போரின் சில வீடியோக்களைப் பார்த்தேன். மிகவும் கொடிய யுத்தம். மென்மேலும் பல இம்மாதிரியான சிற்ந்த படைப்புக்களை வெளியிட எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சித்திரங்கள் அருமையாக இருக்கின்றன.

    ReplyDelete
  6. Tharani, யுத்தம் எதுவாக இருந்தாலும் அதில் அழிவுகள் நிச்சயம் உண்டு. சப்பைக்கட்டுக்கள் அழிவுகளை மூடி மறைத்து விடுகின்றன. ஊடகங்கள் கூட தங்கள் நலன்களையே அதிகம் கருத்தினில் கொள்ளும் காலமிது. எது உண்மை என்று நம்புவதே இயலாத செயலாக மாறிவிட்டது. கருத்துக்களிற்கும், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி.

    ஜாலிஜம்ப்பர் அவர்களே, கதை வெளியாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் இச்சித்திரங்கள் மனதைக் கவர்ந்து விடுகின்றன என்பது உண்மையே. குடும்பமாக இருந்து உணவருந்தும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த பக்கங்களில் ஒன்றாகும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. காதலரே,

    பெரும்பாலான ஹிரோசிமா நாகசாகி அணுகுண்டு தாக்கதல் தொடர்பான கதைகளில், அமெரிக்காவின் கொடூர செயலை தான் பட்டை தீட்டி வர்ணித்திருப்பர், ஆனால் அந்த படுபாதக செயலுக்கு அச்சாரம் இடபட்ட ஜப்பானிய ஆட்சியாளர்களின் கீழ் கஷ்டங்களை பொறுத்து தங்கள் வாழ்க்கையை நரகமாக கழித்த ஒரு குடும்பத்தின் கூக்குரலை சரியாக படம் பிடித்து காட்டியிருக்கிறார் கதாசிரியர் நகசவா.

    • 'அமெரிக்க அண்ணாத்தைக்கு குமட்டுல குத்து' என்ற தன் தேசத்தின் வெற்றிக்கு கொக்கரிக்கும் ஜென், அதே நேரத்தில் வெறிபிடித்த ஆசிரியரிடம் அடி வாங்கும் போதும் கூட, 'என் அப்பாவுக்கு தான் மைந்தன், ஜப்பானிய மன்னருக்கல்ல' என்று தைரியமாக கூறும் கட்டம்

    • சிறையில் செத்து பிழைத்து வந்திருக்கும் அப்பாவிற்கு ஒவ்வொருவரும் தங்கள் உணவை அளிக்கும் போது, சிறுவன் சிஞ்சி மட்டும் தன் உணவை விட்டு பிரிய மறுக்கும் குழந்தைதனம்,

    • தன் குடும்பத்தின் மேல் விழுந்த துரோக பழியை தீர்க்க தன்னையே போரில் பணயம் வைக்க துடிக்கும் மூத்த சகோதரன்.

    என்று ஒவ்வொரு கட்டத்திலும் ஓவியங்களும் கதையமைப்பும் மனதை கொள்ளை கொள்கிறது. முக்கியமாக அந்த எரிந்து கொண்டே ஓடும் குதிரை, மற்றும் உருக்குலைந்த உருவங்கள் அடங்கிய கடைசி பக்கங்கள் மனதில் ஆழ பதிந்து போகிறது.

    சரியான கருத்துகளே ஆனாலும், பெரும்பான்மையில் அடிபட்டு போகும் கொடூரத்தை படம் பிடித்து காட்டியிருக்கிறது இந்த மங்கா காவியம். அதை படைத்தது போரின் கோர நாக்குகளை சரியாக உணர்ந்த ஒரு கதாசிரியர் மற்றும் ஓவியர் என்பது மேலும் மெருகூட்டியிருக்கிறது.

    அருமையான இன்னொரு மங்கா தொடரை அறிமுகபடுத்தியதற்கு நன்றி. உங்கள் ஆங்கில பிரதி பற்றிய தகவலுடன், இணையத்தில் தேடி பார்த்த போது இப்புத்தகம் இந்தியாவில் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் செய்தியை அறிந்தேன்.

    தாரா புத்தகத்தினர் மூலம் இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மங்கா சித்திரம், அவர்கள் தளத்தில் தற்போது கையிருப்பு இல்லை என்று ஏமாற்றினாலும், பிலிப்கார்ட் தளத்தில் இன்னும் விற்பனையில் இருப்பதை பார்த்தவுடன் எனக்கு மூன்று பிரதிகளை தருவித்து விட்டேன்.

    ஆங்கிலத்தில் 8 புத்தகங்களாக வெளிவந்துள்ள இந்த மங்கா காவியத்தின் மற்ற புத்தகங்களும் அங்கே கடை விரிக்கபட்டிருந்தாலும், அவை நேரடி பிரதிகள் என்பதால், விலை மிக அதிகம். எனவே, முதல் பாகத்துடன் மனதை தேற்றி கொள்ள வேண்டும் போல.

    புத்தகம் கைவந்து சேர்ந்தவுடன் படித்துவிட்டு மீண்டும் கருத்திடுகிறேன். இப்படிபட்ட ஒரு புத்தகத்தை என் சேகரிப்பில் இடம் பெற காரணமான உங்களின் பதிவிற்கு நன்றி காதலரே.

    பி.கு.: மங்கா புத்தகங்களின் தடிமமான பிரதிகள் ஸ்கானிங் செய்வதற்கு மிகவும் தொல்லை தரும் ஒரு விஷயம் என்றாலும், அந்த பக்கங்களை மிக சிரத்தையுடன் ஸ்கான் செய்ததோடு, உங்கள் நடையில் அருமையாக மொழிபெயர்த்த உங்கள் நேர்த்தியான படைப்பிற்கு பரிசாக, ஒரு ஆளுயர மாலையை அணிவிக்கலாம். தொடருங்கள் அதிரடியை.

    ReplyDelete
  8. ரஃபிக், பதிவில் நான் குறிப்பிட்ட சம்பவங்களை விட கதையில் உங்கள் மனதை கலங்கவும்,நெகிழவும் வைக்கும் தருணங்கள் தாராளாமாக உண்டு. சிறுவர் முகாமில் வதைபடும் அகிரா, உயிர் துறக்க விரும்பாது வாழத்துடிக்கும் தற்கொலை வீரன், போரில் கால்களையும், தன் மகனையும் பறிகொடுத்த போர் வீரனின் சம்பாத்தியத்திற்காக கண்ணாடிகளை உடைக்கும் ஜென் என சொல்லிக் கொண்டே போகலாம்.

    குதிரை எரிந்து கொண்டு ஓடும் அப்பக்கத்திற்கு மனைதை பறிகொடுத்தவர்களில் நானும் ஒருவன் நண்பரே.

    கண்டு, அனுபவித்து, வாழ்ந்துணர்ந்த கலைஞனின் ஆக்கம், வெறும் கற்பனையில் பூத்த ஆக்கத்தைக் காட்டிலும் வீர்யமாக இருக்கும் என்பதற்கு இக்கதை ஒர் சான்று.

    மேலும் இந்தியாவில் புத்தகங்கள் இணையதளத்தில் கிடைக்கின்றன எனும் தகவலையும், கூடவே சுட்டிகளையும் வழங்கியதற்கு நன்றிகள்.

    பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆங்கிலப்பதிப்பின் மொழியாக்கம் எனக்கு அதிக திருப்தி தரவில்லை. பிரெஞ்சு மொழியில் புதிய பதிப்பு மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது. கதையைப் படித்தபின் என்னுடன் உங்கள் கருத்துக்களை நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆளுயர மாலையை அற்புத அழகி மெகான் ஃபாக்ஸை கொண்டு எனக்கு அணிவித்து மகிழுங்கள் :)) தடிமனான புத்தகங்களை ஸ்கேன் செய்தல் சற்று சிரமமானது என்பது உண்மைதான். விரைவில் உங்களிற்கும் அந்தப் பாக்கியம் கிட்டட்டும். உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும் கனிவான கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete