Friday, July 24, 2009

படித்துக்காட்டாத கவிதை


1958. மேற்கு ஜெர்மனி. பள்ளி விட்டு வீடு திரும்பும் இளைஞன் மைக்கல்[ DAVID CROSS ], வழியில் சுகவீனம் அடைகிறான். பலமாக பெய்து கொண்டிருக்கும் மழையில் இருந்து ஒதுங்கி, ஒர் கட்டிடத்தின் தாழ்வாரப் பகுதியில் அடைக்கலம் தேடுகிறான். அவனின் நிலையைக் கண்டு இரங்கி, மைக்கலை அவனுடைய வீடு வரை பாதுகாப்பாக கூட்டிச் செல்கிறாள், டிராம் வண்டியில் டிக்கட் பரிசோதகராக பணிபுரியும் பெண்னான ஹனா(KATE WINSLET ).

மூன்று மாத காலமாக நோயுடன் போராடிய பின் உடல் நலம் பெறும் மைக்கல், ஹனாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்பி மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைக் காண வருகிறான். வீட்டை விட்டுப் பணிக்காகக் கிளம்பும் முன், ஹனா உடை மாற்றுவதைக் காணும் மைக்கல் அவள் பால் ஈர்க்கப்படுகிறான். ஹனாவும் அவனை தன் காதலனாக ஏற்றுக் கொள்கிறாள்.

வேலையில் சிறப்பாக செயற்பட்டதால் ஹனாவிற்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அவள் அலுவலகப் பிரிவிற்கு பதவி உயர்தப்படுவதாக அவளின் உயரதிகாரி தெரிவிக்கிறார். அன்று மைக்கலுடன் சற்று ஆவேசமாக நடந்து கொள்கிறாள் ஹனா. சில நாட்களின் பின் அவளைத் தேடி வரும் மைக்கல் அவள் வீட்டைக் காலி செய்து விட்டு சென்றிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

1966. சட்டக் கல்வி மாணவனாக இருக்கும் மைக்கல், தன் பேராசிரியர் ஒருவருடன் நீதிமன்றத்தில் நிகழும் வழக்கு ஒன்றை காணும் பார்வையாளனாக கலந்து கொள்கிறான். ஆஷ்விட்ஸ் யூத வதை முகாம்களில் காவலர்களாக செயற்பட்ட சிலரிற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு அது. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மத்தியில் தன் காதலி ஹனாவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் மைக்கல்…..

1995ல் பெர்லினில் தன் அபார்ட்மெண்ட் ஜன்னலினூடாக தெருவில் செல்லும் டிராம் வண்டி ஒன்றினைக் கண்டு கொள்ளும் மைக்கல் ( RALPH FIENNES ) தன் கடந்த காலத்தை நினைவு கூர்வதாக ஆரம்பிக்கிறது கதை.

பதினைந்து வயதில் பெண் உடல் ஒர் மகத்தான ரகசியமாக இருக்கும். மைக்கலும் அந்த ரகசியத்தை அறிய விரும்பி ஹனாவுடன் காதலில் வீழ்ந்து விடுகிறான். முதலில் காமம் என்று ஆரம்பிக்கும் உறவு படிப்படியாக வேறு ஒர் திசைக்கு திரும்புகிறது. தன்னுடன் காதல் செய்யும் முன்பாக மைக்கலை தனக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டச் சொல்கிறாள் அவள்.

the_reader01 அவள் விரும்பியபடியே அவளிற்கு பல புத்தகங்களைப் படித்துக் காட்டி, வார்த்தைகள் எனும் மந்திரம் மூலம் அவளைச் சிரிக்க, கனவு காண, குதூகலிக்க, நொருங்கி அழ வைக்கிறான் மைக்கல். காதல் செய்யும் கட்டிலிலும் சரி, குளியல் தொட்டியிலும் சரி, அவளிற்கான அவன் வாசிப்பு தொடர்கிறது. டின் டின் காமிக்ஸ் ஒன்றைக் கூட அவன் ஹனாவிற்கு படித்துக் காட்டுவான். அவன் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஹனா பசியில் இரை தேடும் ஒர் விலங்கினைப் போன்று உள்ளெடுத்துக் கொண்டிருப்பாள்.

தன்னிடம் ஒர் வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்ட ஹனா, நாஸிகளின் வதை முகாமில் மரணத்திற்கு அனுப்ப அவள் தேர்ந்தெடுக்கும் பெண்களை, அவளிற்கு புத்தகங்களை வாசித்துக் காட்டப் பணித்தாள் என்பதை மைக்கல் நீதிமன்றத்தில் அறியும் போது, ஹனா அவனிடம் இது வரை சொல்லாத ஒர் ரகசியம் எதுவென்பதை அவன் புரிந்து கொள்கிறான்.

அந்த ஒர் ரகசியத்தை நீதிமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த விரும்பாத ஹனா, அதற்கு விலையாக நீதிமன்றத்தால் ஆயூள் தண்டனையைப் பெற்றுக் கொள்கிறாள்.

வழக்கு நடைபெறும் தருணத்தில் ஹனாவினைச் சிறையில் காணச் செல்லும் மைக்கல் அவளைக் காணாமலே திரும்பி வந்து விடுகிறான். கடந்த காலத்தில் தன் கடமையெனக் கருதி அவள் செய்த செயல்கள், அவள் மேல் அவன் கொண்ட காதலை எரித்து விட்டனவா இல்லை தான் செய்த செயல்களை எந்த மன்னிப்பும் வேண்டாது தைரியமாக ஒத்துக் கொள்ளும் ஹனா போன்ற ஒருத்தியுடன் தான் காதல் கொண்டோமே என்பதை சமூகம் அறியும் போது இவனும் அவளுடன் சேர்ந்தவனே என அச்சமூகம் தந்து விடும் ஒழுக்க நீதி தீர்ப்புக்கு அஞ்சியா என்பது நீரின் அடியில் ஒடும் தடமாகும்.

பருவங்கள் ஓடுகின்றன, மணமாகி, ஒர் பெண் குழந்தைக்கு தகப்பனாகி, விவாகரத்தாகி, தன் தகப்பனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஊர் திரும்புகிறான் மைக்கல். அங்கு அவன் அறையில் ஹனாவிற்கு அவன் படித்துக் காட்டிய புத்தகங்களைக் காண்கிறான் அவன், அவன் படித்துக் காட்டிய ஒவ்வொரு பக்கங்களும் ஹனாவின் ஒவ்வொரு ஸ்பரிசங்களை அவனிற்கு நினைவு படுத்துகின்றன. இதனால் உந்தப்படும் அவன், புத்தங்களை தான் வாசித்து, அதனை ஒலி நாடாவில் பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவிற்கு அனுப்பி வைக்கிறான்.

6a00d83451d69069e201053625e896970b-800wi வெளியுலகில் இருந்து எந்த தொடர்பும் இல்லாது சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஹனாவிற்கு, பூக்காத செடி ஒன்று மொட்டுக்கள் விட்டதைப் போன்று மாறிவிடுகிறது சிறை வாழ்க்கை. மைக்கலின் குரல்களின் வழி வெள்ளமாக பெருகும் சொற்களில், சிறையின் தனிமையை மூழ்கடிக்கிறாள் அவள். சிறையில் உள்ள நூலகத்தில் மைக்கல் படித்துக் காட்டும் புத்தகங்களை எடுத்து வந்து, அவன் குரல் விதைக்கும் சொற்களை ஆசையுடன் தடவிப் பார்க்கிறாள். ஆனால் மைக்கல் அவளைப் பற்றியோ அல்லது தன்னைக் குறித்தோ எதையும் கேட்காதவனாகவும், சொல்லாதவனாகவும் இருக்கிறான். தன் வாழ்வில் முதல் முறையாக, மைக்கலுடன் உரையாடுவதற்காக எழுதப் பழக ஆரம்பிக்கிறாள் ஹனா.

அவள் மைக்கலிற்கு எழுதும் கடிதங்களிற்கு அவன் பதிலளிப்பதில்லை. சாகசக் கதைகள் வேண்டாம் காதல் கதைகளை அனுப்பு என எழுதுகிறாள் ஹனா. முதுமை அவளை ஆட்கொள்கிறது. அவள் விடுதலை பெறும் நாளும் நெருங்குகிறது.

விடுதலை நாள் அன்று ஹனாவை அழைத்து செல்ல வரும் மைக்கலிற்கு ஹனா தரப்போகும் அதிர்சி என்ன என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

BERNHARD SCHILINK எனும் ஜெர்மனிய எழுத்தாளரின் THE READER எனும் நாவலைத் தழுவி இப்படம் உருப்பெற்றிருக்கிறது. ஜெர்மனியில் நடந்த யூதர் மீதான கொடுமைகள் மீது, புதிய தலைமுறையின் பார்வையை, ஜெர்மனி நாடு ஏற்றுக் கொண்ட அவமானத்தை, ஒர் கண்டிப்பான ஆட்சியாளன் கீழ் எதுவும் செய்ய முடியாது இருந்து விட்ட மக்களின் குறுகலை, உண்மைக் குற்றவாளிகள் யார் என்ற கேள்விக்கான பதிலை, சமூக ஒழுக்க நெறிகள் அனுமதிக்காத காதல் ஒன்றின் வழியாக காட்ட முயன்றிருக்கிறது திரைப்படம்.

the-reader-jpg நாஸிகளின் கீழ் தடுப்பு முகாம்களில் பணி புரிந்த பெண் காவலராக கேட் வின்ஸ்லெட், இவரின் நடிப்பை பற்றி கூறுவதை விட, ஹனா பாத்திரம் இவரிற்கு ஆஸ்காரை வாங்கித் தந்தது என்று கூறி விடலாம். கலங்க வைக்கும் நடிப்பு. சிறையில் தன்னைக் காண வரும் மைக்கல் கேட்கும் கேள்விகளிற்கு அவர் தரும் பதில்கள் மிக நேர்மையானவை, அத்தருணத்தில் அவர் முகத்தில் கொண்டு வரும் உணர்ச்சி அற்புதம். என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என அவர் நீதிபதிக்கு விடுக்கும் கேள்வி, நீதிபதிக்கு மட்டுமானதல்ல.

இளைய மைக்கலாக வரும் டேவிட் குரொஸ் எனும் ஜெர்மனிய இளைஞரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது, ஹனாவிற்காக நிலக்கரி எடுத்து வரும் வேளையில் அவர் முகத்தில் கரி பட்டு விடும், அதனைக் கண்ணாடியில் பார்த்து விட்டு ஹனாவைப் பார்த்து அவர் சிரிக்கும் சிரிப்பு, மறக்க முடியாதது. ஹனாவின் கடந்த காலத்தை அறிந்த பின் அவளைக் காண விரும்பியும் அதனைத் தவிர்க்கும் கட்டங்களில் அவரின் நடிப்பு இவர் ஒர் இளம் நடிகரா என்று கேட்க வைக்கிறது. ரால்ப் ஃபியனை பற்றிச் சிறப்பாக கூற ஏதுமில்லை.

வதை முகாம் ஒன்றில் குவிந்திருக்கும் காலணிகளும், திறந்திருக்கும் அடுப்பின் கதவுகளும் மெளனமாக கதைகள் சொல்கின்றன. மிக சிறப்பான ஒளிப்பதிவு. குறிப்பாக ஹனாவின் அறைக் காட்சிகள். படத்தினை சிறப்பாக இயக்கியிருப்பவர் STEPHEN DALDRY எனும் ஆங்கில இயக்குனர் ஆவார்.

குற்றவாளிகள், துரோகிகள் என எம்மால் சுலபமாக மற்றவர்களை கூறிவிடவோ, இகழவோ முடிகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த தருணங்களின் மீது நாம் வாழ்ந்திருப்போமேயானால் அப்பட்டங்கள் எமக்கும் சிறப்பாக பொருந்தியிருக்கும் என்பதைக் கண்டு கொள்ளலாம். படத்தில் ஹனா குறித்து இளைஞனாக இருக்கும் மைக்கல் ஒர் கவிதை எழுதுவான், அந்தக் கவிதை அவனால் என்றும் அவளிற்கு படித்துக் காட்ட முடியாத கவிதையாகவே போய் விடுகிறது. (***)

13 comments:

  1. கனவுகளின் காதலரே,

    படத்தை பல முறை ரசித்து பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் - எனக்கு என்ன எண்ணங்கள் தோன்றியதோ அதனை அப்படியே எழுத்து வடிவில் பார்க்கிறேன்.

    வாழ்த்துக்கள்.

    உங்களின் தொடர்ந்த ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
    தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்

    ReplyDelete
  2. காதலரே,

    நீங்கள் இதுவரை பதிந்த படங்களில், முதல் முறையாக நீங்கள் விமர்சிக்கும் ஒரு படத்தை நானும் ஏற்கனவே பார்த்திருக்கிறேன் என்ற பெருமை எனக்கு.

    கேட் வின்ஸ்லேட்டுக்கு அகாடமி விருது கிடைக்க வைத்த படம் என்று கேள்விபட்டவுடன் இந்த படத்தை தருவி பார்த்தேன். என்ன ஒரு அற்புதமான திரையமைப்பு, மெல்லிய இசை போல செல்லும் காட்சிகளில், திடீரென்று வேகம் கூடி கொள்வதும் (முக்கியமாக அந்த அறை காட்சிகள் ;)), பின்பு அது பிற்காலத்தில் சோக காட்சிகளில் புதைந்து போவதையும் தத்ரூபமாக அதே நேரத்தில் தொய்வில்லாமல் எடுத்து காட்டிய இயக்குனருக்கு பாராட்டுகள்.

    // பதினைந்து வயதில் பெண் உடல் ஒர் மகத்தான ரகசியமாக இருக்கும். //
    இதை யாராலும் மறுத்து பேச முடியுமா... முக்கியமாக எனக்கு இன்றும் அந்த ரகசியம் விளங்க வில்லை என்பது தான் பிரச்சனை ;)

    // அச்சமூகம் தந்து விடும் ஒழுக்க நீதி தீர்ப்புக்கு அஞ்சியா என்பது நீரின் அடியில் ஒடும் தடமாகும்.//
    // பூக்காத செடி ஒன்று மொட்டுக்கள் விட்டதைப் போன்று மாறிவிடுகிறது சிறை வாழ்க்கை.//
    உங்கள் வார்த்தை பிரயோகத்திற்கு இன்னொரு சான்று... பின்னி எடுக்கிறீர்கள் காதலரே.... இப்படி சரளமாக எழுத நான் தவம் செய்தாலும் நடக்காது :)

    // ஒர் கண்டிப்பான ஆட்சியாளன் கீழ் எதுவும் செய்ய முடியாது இருந்து விட்ட மக்களின் குறுகலை //
    கண்டிப்பாக. ஒரு கொடுங்கோலனின் இரும்புபிடிக்குள் சிக்கி தவிக்கும் போது, ஊரோடு ஒத்து வாழ்வது சிறந்தது என்று எண்ண யாருக்கும் தோன்றும். சினிமா போல அனைவரும் ஹீரோயிஸம் காட்ட நிஜத்தில் சாத்தியமில்லை.

    // மிக சிறப்பான ஒளிப்பதிவு. குறிப்பாக ஹனாவின் அறைக் காட்சிகள் //
    இதை மறுக்கதான் என்னால் முடியுமா.... என்ன இந்த படத்தை என்னுடைய தனிபட்ட கணிணியில் மட்டும் வைத்து பார்க்கவே முடிந்தது... காரணம் என்னவென்று சொல்லவும் வேண்டுமா :)

    அருமையான படத்திற்கு அதே விருவிருப்பில் நேர்மையான விமரிசனத்தை கொடுத்திருக்கிறீர்கள்... சமீபத்தில் நான் பார்த்த இன்னொரு ஹிட்லர் கால அடக்குமுறை பற்றிய படம் வால்கிய்ரீ... அதில் கூட தன்னுடைய ஆட்சியாளனின் முடிவுகள் ஒட்டு மொத்த ஜெர்மானியர்களின் முடிவல்ல என்பதை வரையறுக்க கதாநாயகன் முயன்று தோற்பதை காட்டி இருந்தார்கள். ஆனால் அப்படத்தில் கதாநாயகனின் முடிவு பச்சாதாபத்தை ஏற்படுத்தவில்லை. இந்த படம் அந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு சான்று - படத்தின் இயக்குனர் மற்றும் வின்ஸ்லேட்டின் நடிப்பு.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

    ReplyDelete
  3. கேட் வின்ஸ்லட்டுக்கு ஆஸ்கார் விருது வாங்கி கொடுத்த திரைப்படம் என்று பார்த்த திரைப்படம்.

    சிறிதும் ஏமாற்றாமல் நகர்ந்த திரைப்படமும், திரைக்கதையும் மனதில் அப்படியே ஆணி அடித்தது போல பதிந்துவிட்டது. உண்மையில் அருமையான திரைப்படம்.


    மனதை கனக்கவைக்கும் முடிவு!

    உங்களின் நடையில் ஒரு அருமையான விமர்சனப் பதிவு நண்பரே. தொடருங்கள்.

    Mr. J
    Mr. J Comics

    ReplyDelete
  4. அன்பு நண்பரே,

    படித்து காட்டாத கவிதை. மிகச் சரியான பெயர். படத்தின் பின்னணி இசை பற்றியே தனியாக விமர்சனம் எழுதலாம்.

    படத்தினை பற்றிய உங்கள் விமர்சனம் அருமை. உண்மையான உணர்ச்சிகளுடன் வந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.

    சிறப்பான திரைப்படம், சிறப்பான விமர்சனம்.

    ReplyDelete
  5. ஜாலி ஜம்பர் அவர்களே, உங்கள் கனிவான முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ரஃபிக், இப்படத்தினை நீங்கள் பார்ததையிட்டு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு அம்சம், கண்களிற்கு தெரியாத நிர்வாணம்.
    இப்படி அழகாக எப்படித்தான் எடுக்கிறார்களோ என்று வியக்க வைக்கும் அந்த அறைக் காட்சிகள். நீங்களும் அதை ரசித்திருக்கிறீர்கள் என்பது நல்ல ரசனைக்கு பஞ்சமில்லை என்பதன் அடையாளம்.

    ஜோஸ்வா முனிவர் தலை மீது நீங்கள் சத்தியம் செய்தாலும் உங்களிற்கு இன்னமும் அந்த ரகசியம் புலப்படவில்லை என்பதனை நான் நம்ப மாட்டேன் :)).

    வல்கிரி எனும் படத்தை பார்த்திருக்கிறேன் என் நண்பர் ஜோஸின் முகச்சாயல் கொண்ட ஒரு நடிகர், டாம் குருஸ் ஆக இருக்கலாம் அதில் முக்கிய வேடம் ஏற்றிருப்பார். இறுதிக் கட்டங்கள் சற்று கதிகலங்க வைக்கும். துரோகத்திற்கு உலகெங்கும் ஒரே தண்டனைதான் போலும். உங்கள் ஆதரவிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் ஜே அவர்களே, நீங்கள் கூறியபடி மனதைக் கனக்க வைக்கும் முடிவுதான். அதில் கூட அவள் படித்த புத்தகங்களை அவள் உதவிக்கு நாடுவது என்ன ஒர் சோகம். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. எப்போது ப்ளக்சாட் பதிவு? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ஜோஸ், நன்றி. தன்னைப் பற்றி ஒர் கவிதை எழுதுகிறான் என்பதை ஹனா அறிந்து கொள்ளும் போது மகிழ்சியுடனும், ஆர்வத்துடனும் ஆற்றிலிருந்து அதனைப் படித்துக்காட்டு என ஒர் சிறுகுழந்தை போல் கேட்பார்.

    மைக்கலின் நோட்டுப்புத்தகத்தில் அக்கவிதை, ஹனாவிற்கு அவன் அனுப்பி வைத்த ஒலிநாடாக்களின் பட்டியலிற்கு அருகில் இருக்கும். ஆனால் அவன் அக்கவிதையை அவளிற்கு படித்துக் காட்டவேயில்லை. இதனையே தலைப்பாக வைத்தேன்.

    மிகவும் நேர்மையான திரைப்படம் இது என்பது என் கருத்து. பிண்ணனி இசை பற்றி எழுதாதது, தவறுதான். அதனைச் சுட்டிக்காட்டியதற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  6. ஆழமான திரைப்படம் அழகான பதிவு

    ReplyDelete
  7. படத்தின் முதல் பாதியில் கேட் வின்ஸ்லெட் தனது முழுத் ‘தெறம’யையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்!

    அவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. நண்பர் வேல்கண்ணன் அவர்களே, அழகான கருத்துக்களிற்கும், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கும் நன்றி.

    மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, மீண்டும் உங்களை கருத்துக் களத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஆரம்பக்காட்சிகளை விடவும் அதற்கு பின்வரும் காட்சிகளே அவரிற்கு விருதை வாங்கித்தந்தது என்று நம்புகிறேன். சிறையில் தன்னைச் சந்திக்க யாரோ வந்திருக்கிறார்கள் என்று எண்ணிக் காத்திருந்து ஏமாந்து அவர் நடந்து செல்லும் போது அவரின் நடையில் உள்ள துவளல் எனக்கு மறக்கவில்லை.

    உங்கள் குறும்பான கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.

    ReplyDelete
  9. பிளாக்சாட் பதிவு அடுத்தவாரம் வெளிவரும் என்று நம்புகின்றேன். எல்லாம் எங்கள் லயன் குழுமத்தார் மாதிரி காலம் பிந்திபிந்தியே வெளிவருது ;)

    ReplyDelete
  10. நண்பர் ஜே அவர்களே, பதிவு தாமதமாவதற்கு உதாரணமாக லயன் காமிக்ஸா, இன்று தான் மாண்டவன் மீண்டான் சந்தாப் பிரதி கிடைக்கப் பெற்றேன். இது விரைவாகவே வந்து சேர்ந்தது என்று கூறலாம் :)

    ReplyDelete
  11. @KK
    பிளாக்சாட் பதிவு இட்டாகிவிட்டது ;)

    ஹி..ஹி.. இந்தவருடமாவது லயன் மாதா மாதம் வரட்டும்...

    ReplyDelete
  12. //படத்தின் முதல் பாதியில் கேட் வின்ஸ்லெட் தனது முழுத் ‘தெறம’யையும் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்!

    அவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!//

    இதனை நான் வழி மொழிகிறேன்.

    ReplyDelete
  13. நண்பர்களே, படித்துக்காட்டாத கவிதை யூத்ஃபுல் விகடன்.காமில், ப்ளாக் கார்னரில் இடம் பெற்றிருக்கிறது என்பதை உங்களிடம் மகிழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete