Friday, May 15, 2009

வாளும் வாலும்!!!

வணக்கம் அன்பு நண்பர்களே,

கடந்த பதிவிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு என் நன்றிகள். பதிவு குறித்த உங்கள் கருத்துக்களிற்கான என் கருத்துக்களை நீங்கள் அப்பதிவின் கருத்துப் பெட்டியில் காணலாம். இனி வழமை போன்றே நண்பர்களின் வலைப்பூ உலா.

சித்திர நினைவலைகள் எனும் பதிவினை தந்திருக்கிறார் நண்பர் BB.

தமிழ் காமிக்ஸ்களை அதிக விலை கொடுத்து வாங்குவது சரியா, என்பதை அழகாக விளக்கியிருக்கிறார்

முத்து விசிறி அவர்கள். காமிக்ஸ் இதழ்களை எப்படி பாதுகாப்பாக பேணுவது என்ற விளக்கமும் உண்டு.

பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் கதைக்கு முன்னோட்டம் தந்திருக்கிறார் நண்பர் ரஃபிக். பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நண்பர் விஸ்வா பதிவுகளை வேக அம்புகளாக எய்து கொண்டிருக்கிறார். இறுதி அம்பு இஸ்னோகுட்.

நண்பர் லக்கி லிமட் அவர்கள் பிலிப் காரிகன் கிளாசிக் கதை ஒன்றினை தரவிறக்கம் செய்ய உதவியிருக்கிறார்.

இனி வித்தியாசமான இரண்டு ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் ஒர் காமிக்ஸ் கதைத்தொடர் பற்றிய பதிவுக்குள் செல்வோம்.

ஏகாந்தமான இரவு. கிருஷ்ணபஷத்து நிலவு நீர்க் கால்வாய்களால் சூழப்பட்ட வெனிஸ் நகரின் மீது சில்லென ஒளிர, அதன் விம்பம் நீரின் மேல் வெள்ளியாய் சிதறி இள நங்கையாய் சிரிக்கிறது

numérisation0001

நகரத்தின் ஒடுங்கிய தெருக்களில் மக்கள் இசை நாடகங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். கூரையின் மேலிருந்து ஒர் பூனை கூட நாடகத்தினை ரசித்துக் கொண்டிருக்கிறது. நகரின் மூலை முடுக்கெல்லாம் கலை பிழைத்துக் கொண்டிருக்கிறது.

நீர்க் கால்வாய் ஒன்றின் அருகில் நிற்கும் ஒர் படகு நாடக அரங்காக மாற்றம் கொண்டிருக்கிறது. அரங்கின் முன்பாக ஓநாய் மற்றும் ஆடு வேடமிட்ட கலைஞர்கள் நீதிக்கதை ஒன்றினை நடித்துக் காட்ட அதனை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறது ஒர் கும்பல்.

அக் கும்பலில் உள்ள ஒர் உருவத்திற்கு ஓநாய் ரத்த வெறி பிடித்த, கொடிய மிருகமாக நாடகத்தில் சித்தரிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கவில்லை. உருவம், தன்னருகில் நிற்கும் நண்பனிடம் ஓநாய்களை இழிவு படுத்தும் இக்கூத்தினை தன்னால் இனியும் தாங்கி கொள்ள முடியாது எனக் கூறியவாறே இடத்தை விட்டு நகர்கிறது.

ஒநாய்க் குலத்தின் கவுரவம் சிதைபடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த உயர்ந்த உள்ளம் தான் யார்?

dcdc1 இதோ அந்த உயர்ந்த உள்ளத்திற்குரியவர். பெயர் டான் லோப், ஸ்பெயின் தேசத்தை சேர்ந்தவர். இக்கதையின் நாயகர்களில் ஒருவர். எலிகளைத் தவிர வேறு எதனையும் கண்டு அஞ்சாதவர். பிடித்த பாடல் ஓஆயி ஓஆயி ஏஆயி…

கும்பலில் இருக்கும் டான் லோப்பின் நண்பர் ஓநாயின் நீதிக் கதையை ஒர் சிறு நகைப்புடன் பார்த்து ரசிக்கிறார். நீதிக் கதை முடிவடைந்து விட நாடகக் குழுவின் தலைவன் சுற்றி நின்ற ரசிகர் கூட்டத்தினரிடம் தன் தலையில் அணிந்த தொப்பியை கவிழ்த்து, கலையை வளர்க்க உதவி செய்யுங்கள் என்றவாறே அவர்கள் தரும் சில்லறைகளை அதனுள் பெற்றுக் கொள்கிறான்.

சில்லறைகள் தேறியதும் நாடகக் குழுத் தலைவன், அடுத்த காட்சியாக இடம்பெறப் போவது கொக்கும், நரியும் நீதிக் கதை என அறிவிக்கிறான். அறிவித்தலைக் கேட்ட டான் லோப்பின் நண்பரிற்கு பகீரென்கிறது. மெதுவாக இடத்தை விட்டு நழுவுகிறார் அவர். கலா ரசிகனான அவர் ஏன் இவ்வறிவித்தலைக் கேட்டதும் நாடக அரங்கை விட்டு இத்தனை விரைவாக விலகிச் செல்கிறார்?dcdc1

இதோ அந்தக் கலாரசிகர். பெயர் டான் ஆர்மண்டோ. பிரான்சு தேசத்தவர். ரோமியோ வேலைகளில் எத்தர். பெண்களைக் கண்டு விட்டால் பிரான்சு தேச ஆடவர்களைப் போலவே வழிவது இவருடன் கூடப்பிறந்தது. கவிதைகளை கன்னிகளைக் கண்டதும் படைப்பவர்.

லோப்பும் , ஆர்மண்டோவும் சிறந்த நண்பர்கள். வாள் வீசுவதில் வல்லவர்கள். பிரான்சு தேசப் படையில் பணியாற்றியவர்கள். நீதிக்காக போராட தயங்காத வீர நெஞ்சங்கள்.

தெருவில் விரைவாக நடந்து சென்று கொண்டிருக்கும் டான் லோப்பை நெருங்கும் ஆர்மண்டோ, தம்மை மனிதர்கள் கலைகளில் சித்தரிக்கும் விதத்தை எண்ணி மனம் வருந்துகிறான். அவனை ஒர் விடுதியில் சென்று உணவருந்தலாம் என அழைக்கிறான் லோப். நிலவு ஒளிரும் தெருக்கள் வழி ஏரியைப் பார்த்து ரசித்தவாறே நடக்கிறார்கள் நண்பர்கள். இந்த ரம்யத்தை குலைப்பது போல் காற்றில் மிதந்து வருகிறது ஒர் அழுகைச் சத்தம்.

அழுகைச் சத்தம் வந்த திக்கை நோக்கி விரையும் நண்பர்கள், ஏரிக் கரையிலிருந்து அழும் ஒர் முதியவனைக் காண்கிறார்கள். இம் முதியவன் வேறு யாருமல்ல. செனில் எனும் பெயர் கொண்ட, பணத்தாசை பிடித்த ஒரு வணிகன். பல கப்பல்களின் அதிபதி. செனில் ஏன் அழுகிறான் என்பதனை நண்பர்கள் விசாரிக்க, தன் மகன் ஆண்ட்ரியோவை துருக்கி கப்பல் ஒன்றில் பிடித்து வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமெனில் ஐநூறு வெள்ளிக் காசுகளை தான் தர வேண்டுமெனவும், தான் இதற்கு சம்மதிக்காததால் தன் மகனை அவர்கள் அல்ஜீரிய தேசத்திற்கு எடுத்துச் சென்று அடிமையாக விற்கப் போவதாகவும் கூறுகிறான். தன் மகனை நல்ல விலைக்கு விற்று துருக்கியர்கள் லாபம் சம்பாதிப்பதை எண்ணி தன் மனம் வேகுவதாக புலம்புகிறான் செனில்.

dcdc2 செனிலின் மகனை தாங்கள் துருக்கி கப்பலிலிருந்து மீட்டுத் தரத் தயார் என்று கூறுகிறார்கள் நண்பர்கள். பணம் வாங்கிக் கொள்ளாது இலவசமாக இதனை நண்பர்கள் செய்ய சம்மதிப்பதால் அதை ஏற்றுக் கொள்கிறான் செனில். ஆண்ட்ரியோவை காப்பாற்றி தன் மாளிகைக்கு கொண்டு வரும் படி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறான். ராம்போ பாணியில் மீட்பு நடவடிக்கைக்கு தயாராகி விட்ட லோப்பும், ஆர்மண்டோவும் ஏரிக்குள் குதித்து துருக்கி கப்பலை நோக்கி நீந்த ஆரம்பிக்கிறார்கள்.

குளிர்ந்த நீர் கொண்ட ஏரியில் நீந்தி துருக்கி கப்பலை அண்மிக்கும் அவர்கள், அக்கப்பலிலிருந்து ஏரிக்குள் ஒர் சிறு படகு இறக்கப் படுவதை மறைந்திருந்து கண்காணிக்கிறார்கள். அப் படகு கரையை நோக்கி செல்ல ஆரம்பித்ததும் கப்பலின் நங்கூரச் சங்கிலியின் மீது ஏறி துருக்கி கப்பலின் மேற் தளத்தில் குதிக்கிறார்கள் இருவரும்.

கப்பலின் மேற்தளத்தில் காவலிற்கு நின்ற இரு காவல்காரர்களை அடித்து வீழ்த்தி விட்டு ஆண்ட்ரியோவைத் தேடுகிறார்கள் நண்பர்கள். ஆனால் கப்பலில் ஆண்ட்ரியோ இல்லை. கப்பலில் சிறைப் பிடிக்கப் பட்டவர்களினை அடைத்து வைக்கும் அறையென எண்ணி டான் லோப் ஒர் கதவைத் திறக்க அதிலிருந்து வெறியுடன் பாய்கிறார்கள் துருக்கி வீரர்கள்.

இதே சமயம் துருக்கி கப்பல் காப்டனின் அறையில் நுழையும் ஆர்மண்டோ ஒர் பெட்டியினுள் வைக்கப்பட்ட ஒர் போத்தலினுள் இருந்த ஒர் வரைபடத்தை கண்டு பிடித்து விடுகிறான். பணயக் கைதி அங்கு இல்லையென்ற நிலையில் கடலில் குதித்து துருக்கி வீரர்களின் வாட்கள் மற்றும் துப்பாக்கிகளின் இலக்குகளிருந்து கையில் வரைபடத்துடன் தப்பி நீந்தி செல்கிறார்கள் நண்பர்கள்.

துருக்கி கப்பலிலிருந்து ஏரியினுள் இறக்கப்பட்ட படகு கரையை அடைகிறது. படகிலிருந்து கால்வாயின் கரையில் இறங்கும் துருக்கி கப்பலின் காப்டன் காதர், விடிவதற்குள் தான் திரும்பி வந்து விடுவதாக படகோட்டிகளிடம் தெரிவித்து விட்டு நகரின் நிலவொழுகும் ஒடுங்கிய தெருக்கள் வழி நடக்க ஆரம்பிக்கின்றான்.

அவன் கால்கள் அவற்றின் நடையை நிறுத்திய போது அவன் முன்னிருந்த வீட்டின் கைப்பிடி சிங்க தலையொன்றின் வடிவிலிருந்தது. கைப்பிடியை கதவின் மீது அடித்து ஒலி எழுப்பி தன் வரவை அறிவிக்கிறான் காதர். உடனே கதவு தானாக திறந்து கொள்ள உள்ளே நுழைகிறான் அவன்.

உயர்ந்த தூண்களின் மீது எரிந்து கொண்டிருக்கும் மெழுகுதிரிகளின் வெளிச்சத்தில் வெளவால்கள் சடசடக்க, படிகளைக் கடந்து சிறிய வாயில் ஒன்றினூடாக அறை ஒன்றினுள் நுழைகிறான் காதர். அங்கு அவனை வரவேற்கிறான் ரசவாதி பெசாலெல். பெசாலெல்லின் முதுகு சற்றுக் கூனியிருக்கிறது. நீண்ட வெண் தாடி. அவன் அறையில் குடுவைகளில் திரவங்கள் குமிழிக் கொண்டிருக்க, வினோத ஐந்துகள் கண்ணாடி ஜாடிகளில் காட்சி தருகின்றன. விந்தைப் பொருட்களால் நிரம்பிக் கிடக்கிறது அந்த அறை. உருளைக்கிழங்குகளிற்கு கை கால்கள் முளைத்ததை போன்று காட்சி தரும் சிறு உருவங்கள் அறையில் நடை பயில, பூனை ஒன்று அவற்றினைப் பார்த்து கோபமாய் சீறுகிறது. காதர் தன்னிடமிருந்த ஒர் ஆவணத்தை எடுத்து பெசாலெல்லிடம் தருகிறான்.

dcdc3 லிபிய கடற்கரை ஒன்றில் ஒதுங்கிய பெட்டகம் ஒன்றிலிருந்து ஒர் வரைபடத்தையும், ஆவணத்தையும் கண்டெடுத்தாக பெசாலெல்லிடம் கூறுகிறான் காதர். ஆவணத்திலுள்ள எழுத்துக்கள் தனக்குப் புரியாத படியால் அதனை படித்துப் பார்த்து அதில் எழுதியுள்ளதை தனக்கு விளக்கும் படியும் வேண்டிக் கொள்கிறான்.

ஆவணத்தில் உள்ள எழுத்துக்களைப் பார்த்ததும் பெசாலெல்லின் கண்கள் ஆச்சர்யத்தினால் விரிகின்றன, ஆவணத்தைக் கவனமாக ஆராயும் அவன் மறைந்து போன நாகரீகம் ஒன்றினைச் சேர்ந்த எழுத்துக்கள் அவை எனப் பிரமிக்கின்றான்.

மேலும் ஆவணம் தாஞ்ஜரின் தீவுகளின் அற்புதமான புதையலைப் பற்றி கூறுகிறது என்பதனையும் தெரிவிக்கின்றான். அப் புதையலை அடைவது எளிதல்ல என்றும் காதர் பல அபாயங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும் எனக்கூறும் பெசாலெல், அபாயங்களை எதிர் கொள்ள காதரிற்கு ஒர் கிணற்றின் ஆழத்திலிருக்கும் சந்திரக்கல்லை எடுத்து தருகிறான். காதர், பெசாலெலிற்கு ஒர் பெறுமதியான குறுவாளை சன்மானமாக வழங்கிய போதும் அதனை மறுத்து விடுகிறான் பெசாலெல். தனக்காக காத்து நிற்கும் படகை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றான் காதர்.

dcdc4

டான் லோப்பும், டான் ஆர்மண்டோவும் நகரிலிருக்கும் செனிலின் மாளிகைக்கு செல்கிறார்கள். அவர்களை தன் அறையினுள் அழைக்கும் செனில், துருக்கி கப்பலில் கைதிகள் யாரையும் நீங்கள் கண்டிருக்க மாட்டீர்களே எனக் கூற வியப்படைகிறார்கள் நண்பர்களிருவரும்.

தன் மகனான ஆன்ட்ரியோ தன்னிடமிருந்து ஐநூறு வெள்ளிக் காசுகளை அபகரிப்பதற்காக அவன் சேவகன் ஒருவனுடன் சேர்ந்து ஆடிய சதி நாடகம் இது எனவும், அவர்களின் திட்டத்தினை தான் முறியடித்து விட்டதாகவும் கூறுகிறான் செனில். தாங்கள் கவர்ந்து வந்த வரைபடமுள்ள போத்தலை செனிலிடம் காட்டும் நண்பர்கள், புதையல் வேட்டைக்கு செல்ல ஒர் கப்பலையும், கப்பலாட்களையும் தந்து உதவும் படி அவனிடம் வேண்டுகிறார்கள்.

பேராசை கொண்ட செனில் நண்பர்களை ஏமாற்றும் விதமாக புதையலை பங்கிட விரும்புகிறான். அவனில் நம்பிக்கை கொள்ளாத ஆர்மண்டோ புதையல் பங்கீடு பற்றி முடிவெடுக்க தங்களிற்கு ஒரு நாள் அவகாசம் தர வேண்டுகிறான். மாளிகையை விட்டு செல்லும் அவர்கள் செனில் கேட்டுக் கொண்டும் வரைபடத்தினை அவனிடம் தராது தங்களுடன் எடுத்து செல்கிறார்கள். நண்பர்களிருவரையும் தொடர்ந்து சென்று தக்க சமயத்தில் அவர்கள் வசமிருக்கும் வரை படத்தினை கவர்ந்து வரும்படி தன் மகன் ஆண்ட்ரியோவிற்கு கட்டளையிடுகிறான் செனில்.

dcdc7

மாளிகையை விட்டு வெளியேறும் நண்பர்கள் உணவு விடுதி ஒன்றை அடைந்து, மதுவுண்டு உணவருந்துகிறார்கள். இவர்களின் உரையாடல் அவ்விடுதியில் தன் நண்பர்களுடன் வந்திருந்த ஹெர்மின் எனும் அழகியின் கவனத்தை ஈர்க்கிறது.

ஆண்ட்ரியோ , கபட நாடகமாடி தன் தந்தையிடம் ஐநூறு வெள்ளிக் காசுகளை அபகரிக்க திட்டமிட்டது இந்த அழகி ஹெர்மினை மணந்து கொள்வதற்காகவே. ஆனால் ஹெர்மினிற்கோ ஆண்ட்ரியோவில் காதல் இல்லை. டான் லோப்பினால் கவரப்படும் ஹெர்மின், நண்பர்கள் உணவருந்தும் மேஜையை, தன் அழகு முழுதும் அவள் நடையில் காட்டி நெருங்குகிறாள், டான் லோப்பை தன்னுடன் நடனமிட அழைக்கிறாள். அவள் அழைப்பை ஏற்றுக் கொள்ளும் டான் லோப் அவளுடன் இணையாக நடனமாட ஆரம்பிக்கின்றான். சூடான நடனத்துடன் தன் தேன் குரலில் தோய்ந்த பாடல் ஒன்றைப் பாடும் ஹெர்மின், தன் காதலை டான் லோப்பிற்கு பாடிக் காட்டுகிறாள். நடனத்தின் முக்கியமான தருணமொன்றில் நடனத்தினை நிறுத்தி விட்டு தன் நண்பன் ஆர்மண்டோவுடன் விடுதியை விட்டு வெளியேறி விடுகிறான் டான் லோப். இதனால் கோபம் கொள்கிறாள் ஹெர்மின்.

dcdc5 நன்றாக மது அருந்திய படியால் ஆர்மண்டோவிற்கு போதை தலைக்கேறி விட, அழகி ஹெர்மினை டான் லோப் உதாசீனம் செய்ததைக் கூறி அவனைக் கிண்டல் செய்கிறான். நண்பர்களை தன் அடியாட்கள் சகிதம் பின் தொடர்ந்து வந்த ஆண்ட்ரியோ, அவர்களிடமிருந்து வரைபடமுள்ள போத்தலைக் கைப்பற்ற இதுவே தக்க தருணம் என தீர்மானித்து, அடியாட்களை ஏவி விடுகிறான். மூகமூடி அணிந்த முரடர்கள் போத்தலைத் தரும்படி நண்பர்களிடம் கேட்க, தன் கையிலிருந்து மதுப்போத்தலை அவர்களை நோக்கி வீசுகிறான் ஆர்மண்டோ. உக்கிரமான ஒர் வாள் சண்டை தெருவில் ஆரம்பமாகிறது.

டான் லோப் திறமையாக வாள் வீச, ஆர்மண்டோ போதையில் சற்று தடுமாறுகிறான். தன் வீட்டு மாடியிலிருந்து தெருவில் நடக்கும் மோதலைக் பார்க்கும் அழகிய மலரொன்றை, தன் போதையிலும் நிதானமாக அவதானித்து விடும் ஆர்மண்டோ, அழகியை நோக்கி கவிதைகளை சுழற்றுகிறான். மாடியிலிருந்து குதி, ஓடிப் போய்விடலாம் என்கிறான். ரோஜாப் பூவொன்றை கிள்ளி மாடியை நோக்கி வீசுகிறான். தொடரும் மோதலில் முரடர்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டு ஓட, ரகசியமாக நழுவும் ஆண்ட்ரியோவை எட்டிப் பிடிக்கிறான் டான் லோப்.

ஆண்ட்ரியோ அணிந்திருந்த மூகமூடியை டான் லோப் கழற்றி விட்டு, அவனை தங்களை தாக்க சொல்லி அனுப்பியது யார் என விசாரிக்கிறான். மாடியிலிருந்து ஆண்ட்ரியோவைக் காணும் அழகி அது அவன் அண்ணன் ஆண்ட்ரியோ எனவும், அவனை ஏதும் செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறாள். தான் வணிகன் செனிலின் பாதுகாப்பில் உள்ள ஒர் அனாதை என்பதையும் அவள் ஆர்மண்டோவிடம் கூறுகிறாள்.

dcdc6 ஆண்ட்ரியோவோ உரக்க கூச்சலிட்டு அவ்வழி சென்று கொண்டிருந்த நகரக் காவலர்களினை உதவிக்கு அழைக்கிறான், அங்கு வரும் நகரக் காவலர்கள் டான் லோப்பின் கதைக்கு செவிமடுக்காது அவன் ஆயுதங்களைக் களைந்து விட முயற்சிக்க அவர்களுடன் மோத ஆரம்பிக்கிறார்கள் நண்பர்கள். இதே வேளை மாடிக்கு ரகசியமாக வரும் செனில் ஆர்மண்டோவின் தலையை நோக்கி ஒர் மன்மதன் சிலையை எறிய அது அவன் தலையில் மோதி மயக்கமடைகிறான் அவன். ஆர்மண்டோ மீண்டும் கண்விழிக்கும் போது நகரச் சிறையில் கால்களில் விலங்கு போடப்பட்ட நிலையில் டான் லோப்புடன் தான் அடைக்கப் பட்டுள்ளதை தெரிந்து கொள்கிறான்.

நகரிலிருந்து தன் கப்பலிற்கு திரும்பும் துருக்கி கப்பலின் தலைவன் காதர், வரைபடம் கவர்ந்து செல்லப்பட்டதையிட்டு கோபம் கொள்கிறான். அவனை சாந்தப் படுத்தும் யூசுப் எனும் முதிய கடலோடி, தனக்கு அவ்வரைபடம் மனப்பாடமாக உள்ளது எனக்கூற, தாஞ்ஜரின் தீவுகளை நோக்கி கப்பலை பாய் விரிக்க சொல்கிறான் காதர்.

சிறையிலிருக்கும் நண்பர்களைத் தேடி வரும் செனில், வரைபடத்தினை தன்னிடம் ஒப்படைத்தால் அவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தான் செய்வேன் என உறுதி தருகிறான். வேறு வழி தெரியாத நண்பர்கள் வரைபடத்தினை செனிலிடம் தந்து விடுகிறார்கள். நீதி மன்றத்திற்கு எடுத்து வரப்படும் நண்பர்களின் வழக்கில், நண்பர்களிற்கு ஐம்பது வருடங்களிற்கு கப்பலில் துடுப்பு வலிக்கும் தண்டனையை பெற்றுத் தருகிறான் செனில். வட்டத்தீவுகளின் கொடூரன் என அழைக்கப்படும் காப்டன் மெண்டோஸாவின் கப்பலிற்கு தண்டனையை நிறைவேற்ற எடுத்து செல்லப்படுகிறார்கள் நண்பர்கள்.

வரைபடத்தை கவர்ந்து கொண்ட செனில் தன் மகன் ஆண்ட்ரியோவை புதையலை தேடி எடுத்து வர அனுப்புகிறான். தந்தைக்கு தெரியாமல் ஹெர்மினைக் கடத்திக் கொண்டு, வரைபடம் சகிதமாக புதையல் வேட்டைக்கு கப்பலில் புறப்படுகிறான் ஆண்ட்ரியோ.

dcdc8 காப்டன் மெண்டோஸாவின் கப்பலில் துடுப்பு வலிக்க அமர்த்தப்படும் நண்பர்கள், அவர்கள் மத்தியில் இயூசுபே எனும் சிறு முயலும் தண்டனை பெற்றிருப்பதை அறிகிறார்கள். இயூசுபே வலிமையாக துடுப்பு வலிக்காததால் தங்களிற்கு வேலை இரட்டிப்பாகிறது எனக்கூறி முயலை தாக்கும் சக கைதியிடமிருந்து முயலைக் காப்பாற்றுகிறான் ஆர்மண்டோ. ஆனால் உணவு உண்ணும் போது சக கைதி இயூசுபேயிடமிருந்து உணவை பறித்து உண்பதற்கு முயற்சிக்கையில் ஏற்படும் சச்சரவில், இயூசுபேக்கு கப்பலின் ஒழுக்க விதிகளை மீறியதற்காக நூறு கசையடிகள் தண்டனையாக அளிக்கிறான் மெண்டோஸா. இதனை எதிர்த்து குரல் எழுப்புகிறார்கள் நண்பர்கள், ஆனால் அதே சமயம் காதரின் கப்பல் மெண்டோஸாவின் மாலுமிகளின் பார்வையில் தட்டுப்பட அக்கப்பலை தாக்க ஆயத்தமாகிறது மெண்டோஸாவின் கப்பல்.dcdc9

துருக்கி கப்பலின் கதி என்ன? நண்பர்கள் விடுதலை அடைந்தார்களா? ஆண்ட்ரியோவின் பயணம் என்னவாயிற்று? காதரினதும், நண்பர்களினதும் புதையல் வேட்டைக் கனவு நிறைவேறுமா? இக் கேள்விகளிற்கு விடையளிக்கிறது DE CAPE ET DE CROCS எனும் இக் காமிக்ஸ் தொடர்.

நாடக பாணியில் அமைந்த கதை சொல்லல், செவ்விலக்கிய பொக்கிஷங்கள் சிலவற்றின் உல்டா பண்ணிய வசனங்கள். வீரம், துரோகம், காதல்,காமெடி, புதையல், காத்திருக்கும் அபாயங்கள் என விறு விறுப்பாக பாய்கிறது கதை.

கடமையே கண்ணான டான் லோப், காதலும், கன்னிகளும் கண்ணான டான் ஆர்மண்டோ என அநீதிக்கு எதிராக போராடும் இரு நாயகர்கள், வஞ்சகன் செனில், செல்வங்கள் மீது பற்றுக் கொண்டிருந்தாலும் தங்கமான மனம் கொண்ட காதர், துள்ளல் அழகி ஹெர்மின், அப்பாவி முயல் இயூசுபே என மனதில் ஒட்டிக் கொள்கின்றன பாத்திரங்கள். தாஞ்ஜரின் தீவுகளின் புதையைலைக் கைப்பற்றுவதிலுள்ள அபாயங்களின் முன்கூட்டிய சுவையை கதாசிரியர் ALAIN AYROLES முதல் ஆல்பத்திலேயே உணர்த்தி விடுகிறார்.


dcdc10

அலன் 1968ல் பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். கதை சொல்லலும், சித்திரங்களும் இவர் மனதிற்கு பிடித்தமான காரியங்கள். அங்குலொம் நுண்கலைக் கல்லூரியின் சித்திரக்கதைப் பிரிவில் 1986ல் இணைந்து கொண்டார். கற்பனை உலகொன்றை சிருஷ்டித்து அதில் கற்பனைப் பாத்திரங்களாக மாறி நடிக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ளவராயிருந்தார். இக்கதை தொடரை உருவாக்குவதில் இக்கற்பனை விளையாட்டு அவரிற்கு மிகவும் உதவியாகவிருந்தது. ஜெஃப் ஸ்மித்தின் BONE சித்திரக்கதை தொடரினை பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்தவர்களில் ஒருவர் எனும் பெருமைக்குரியவர்.

நிலவு ஒளியில் குளிர்ந்து மிளிரும் வெனிஸ் நகரின் இரவுக் காட்சிகளில் ஆரம்பித்து வெனிஸ் நகரின் வனப்பை சிறப்பாக சித்தரித்துள்ளார் ஓவியர் JEAN LUC MASBOU. காதர், பெசாலெல்லினை அவன் மர்ம வீட்டில் சந்திக்கும் காட்சி, முயல் இயூசுபேயின் அப்பாவித்தனமான முக பாவனைகள், சாகசக் கதை என்றாலும் கூட சித்திரங்களில் காணப்படும் கிண்டல் தொனி என தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார் அவர்.

ஜான் லூக் பிரான்சில் பிறந்தது 1963ல். காமிக்ஸ்களிற்கு கதை எழுதுவது என்பது இவர் சிறுவயது முதலே இவருடன் கூட வளர்ந்த ஆசை. ஆரம்பத்தில் ஓவியராகப் பணியாற்றினாலும், மனதிலிருந்த கதை சொல்லும் ஆசை இவரை சித்திரக்கதை துறைக்கு இழுத்து வந்தது. இவர் எழுதிய கதைகள் வாசகர் மத்தியில் வரவேற்பை பெறாத காரணத்தினால் அனிமேஷன் துறைக்குள் புகுந்தார். பின் தனக்கு ஏற்கனவே அறிமுகமான அலனுடன் இணைந்து இத்தொடரிற்கு சித்திரங்களை வரைய ஆரம்பித்தார். இவரின் சிறப்பான ஓவியங்கள் இத்தொடரின் வெற்றிக்கு ஒர் காரணம் என்றால் அது மிகையல்ல.

பழமை+ புதுமை+இளமை சரிவிகிதத்தில் கலந்த சிறந்த கதைத்தொடர் இதுவாகும்.கதைக்கு உயிரூட்டும், நகைச்சுவை கலந்த சிறப்பான சித்திரங்கள் கதையின் சுவையை மேலும் அதிகரித்து விட, ரசிகர்களின் மத்தியில் பலமான வரவேற்பை பெற்று விட்ட தொடராக இக்காமிக்ஸ் தொடர் அமைந்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லை. 1995லிருந்து 2007 வரை எட்டு ஆல்பங்கள் இக்கதைத் தொடரில் வெளியாகி உள்ளன. ஒன்பதாவது ஆல்பத்தின் வரவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நண்பர்களே பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை தயங்காது என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆல்பத்தின் தரம்****


ஆர்வலர்களிற்கு

DE CAPE ET DE CROCS

TRAILER

18 comments:

  1. நண்பரே,

    கிருஷ்ணபஷத்து நிலவு வெனிஸ் நகரத்தில்... அட்டகாசமான வர்ணணை. சாண்டில்யனுக்கு பிறகு உங்களிடத்தில்தான் பார்க்க முடிந்தது.

    படங்கள், பின்னணி விவரங்கள் எல்லாம் பிரமாதம். ரெட்வால் என Brian Jacques ஒரு தொடர் நாவல் எழுதியிருப்பார். சித்திரப் புத்தகமாகவும் வந்தது என கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொடர் நாவல்கள் அவை.

    அது போலவே ஓநாய் மற்றும் நரி மஸ்கட்டீர்கள். புதையல். பழைய நாகரிகம். பிரமாதமாக உள்ளது.

    நிறைய சித்திரக் கதை ஒவியர்கள் வெனிஸ் நகரை பற்றி வரையும் போது ஒருவித காதலுடன் வரைகின்றார்கள் என்பதை கவனித்திருக்கிறேன். சென்னையை விட நன்றாக இருக்குமா வெனிஸ்?
    :)

    முதல் இரண்டு பக்கங்களை பார்க்கும்பொழுதே கண்ணை மூடிக்கொண்டு ஐந்து நட்சத்திரங்களை கொடுத்திருக்கலாமே? கைவசம்தான் நிறைய இருக்கின்றனவே?

    முதலை குகை பெயரே பிரமாதமாக இருக்கிறது. மற்றொரு தொடரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    Cheers!

    ReplyDelete
  2. காதலரே, என்னடா வழக்கமான வியாழன் இரவு பதிவை காணவில்லை என்று பார்த்தால், வெள்ளி இரவுக்குள் ஆஜராகி விட்டீர்களே... அதுவும் அற்புதமான ஒரு புத்தகத்தின் விமரிசனத்துடன். ஓவியங்கள் மிகவும் அருமை, வண்ண சேர்க்கை இன்னும் சிறப்பு... பொறுமையாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன். ஜோஸ் எப்படிதான் 1 மணி நேரத்தில் படித்து முடித்தாரோ :)

    ÇómícólógÝ

    ReplyDelete
  3. நண்பர் ஜோஸ், உங்களிடத்தில் தப்ப முடியுமா, சாண்டில்யன் இல்லாவிடில் கிருஷ்ணபஷத்து எனும் சொல் எனக்கு சில வேளைகளில் தெரியாதே போயிருக்க கூடும். இச்சொல் மூலம் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டேன்.

    சென்னையை நான் வந்து பார்த்து விட்டு, நவஜோ மதகுருவை வெனிஸுக்கு அழைத்து சென்று பார்த்து விட்டு மட்டுமே எந்த நகரம் அழகு என்பதனைக் கூற முடியும். அது வரை கனவுக் காட்சி தான்[ கனவில் மதகுரு கிடையாது]

    ஐந்து நட்சத்திரங்களை நீங்கள் வழங்கிய பின்பு வேறு கேள்வி என்ன வேண்டிக் கிடக்கிறது.

    உங்களிற்கு வெனிஸ் நகரில் ஒர் சின்ன வீடு இருப்பதாக கதையில் வருகிறதே உண்மையா!!!

    முதன்மைக் கருத்துக்களிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. ரஃபிக், பதிவை இவ்வாரத்தினுள் முடிக்க முடியுமா என்றே சந்தேகமாக இருந்தது. நேற்று வரை முடியவில்லை. சரி ஆறுதலாக வரும் வாரம் இடலாம் என தொடர்ந்தேன். இன்று முடிந்து விட்டது. வரும் வாரம் வரை பதிவை காக்க வைக்க இஷ்டமில்லாததால் பதிவிட்டு விட்டேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ஜோஸ் அவர்களின் வாசிப்பின் வேகம் பற்றி நானே அவரிடம் கூறி பொறாமைப் பட்டது உண்டு. ஆசீர்வதிக்கப் பட்டவர்.

    ReplyDelete
  5. காதலரே,
    ஒவ்வொரு தடைவையும் ஒவ்வொரு புது காமிக்ஸ் பற்றி பதிவு இட்டு உங்கள் பதிவை காதலிக்க வைத்து விடுகிறீர்கள் . எனக்கு இந்த மாதிரி கற்பனை உலக கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும் . சிறு வயதில் இதே மாதிரி கதைகள் படிக்கும் போது இதே
    போல் உலகம் இருக்கக்கூடாத என ஏங்கியது உண்டு .

    இம்முறை உங்கள் கற்பனை கனவு உலகத்தில் என்னையும் இழுத்து விட்டு விட்டீர்கள் .
    அந்த அப்பாவி முயலின் (அதாவது நான்) சித்திரம் மிகவும் அருமை. கடைசியில் சாவியை வைத்து கொண்டு நிற்கும் ஸ்டைல் அருமை . அப்பாவி என்பதற்க்காக கயிற்றில் கட்டி தொங்க விட்டு விட்டீர்கலே ! இக்கதை ஆங்கிலத்தில் வரவில்லையா தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை .

    பி.கு: MOBY DICK இன் பழைய MARVEL ஆங்கில காமிக் எடுத்துவிட்டேன் .

    Lovingly,
    Lucky Limat
    Browse Comics

    ReplyDelete
  6. நண்பர் லக்கி லிமட் அவர்களே, நண்பர்களிற்கு புதிதானவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் வலைப்பூவின் நோக்கம். சில வேளைகளில் எம்மை நாம் விரும்பும் கற்பனை உலகிற்கு இவ்வகையான கதைகள் எடுத்து சென்று விடுகின்றன. ஆங்கிலத்தில் இன்னமும் இக்கதை தொடர் வெளியாகவில்லை என்றே கருதுகிறேன். சில வேளைகளில் சினிபுக் வெளியிடக்கூடும்.

    கயிற்றில் தொங்கவிட்டது மட்டுமல்ல, கடைசி ஸ்கேனில் பீரங்கி குண்டு பாய்ந்து வந்து கயிற்றை அறுக்க நீங்கள் பறந்து போவதை அவதானிக்கவில்லையா.

    கழுத்திற்கு ஒரு கயிறு தொடரில் நீங்கள் விடுபட்டுப் போனது என் மனதில் இருந்தது. அதற்குப் பரிகாரமாக என்னால் இயன்ற ஒர் சிறு முயற்சி. உங்களிற்கு பிடித்திருந்ததா?

    கருத்துக்களிற்கும், உங்கள் ஆதரவிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  7. கனவுகளின் காதலரே,

    மீண்டும் ஒரு அற்புதச் சித்திரத் தொடரை தங்களுக்கே உரிய கவிதை நடையில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்! நன்றி!

    பொதுவாகவே நான் கார்ட்டூன் படங்களை விரும்பிப் பார்ப்பேன்! அதில் வரும் இரண்டு கால் ஜட்டி போடாத மிருகங்களின் சாகஸங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்!

    காமிக்ஸ் வடிவில் பார்த்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! அதிலும் ஒரு சரித்திரக் கதை என்றால் காமெடிக்கும், சாகஸத்திற்கும் கேட்கவா வேண்டும்!

    அருமையான சித்திரங்கள், அற்புதமான சாகஸக் கதை என வெற்றிக்கு வித்திடும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இக்கதை தமிழில் முழு வண்ணத்தில் வெளிவருவதென்பது ஒரு நிறைவேறாதக் கனவே!

    இதில் வரும் வில்லனைப் பார்த்தால் தலைப்பாகை வைத்த ஷெரீஃப் டாக்புல் மாதிரி இருக்கிறார்!!!

    மீண்டும் ஒரு கடல் சார் காமிக்ஸ் பதிவு! நீங்கள் பேசாமல் கடல்களின் காதலர் என பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. நமது ஹீரோக்கள் கப்பலில் அடிமைகளாய் அல்லலுறுவதைக் கண்டதும் கவுண்டரின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது!

    “தண்ணீல வேலைன்னு ஒரு பன்னி சொல்லுச்சு!”

    -படம் : சேதுபதி,I.P.S.

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  9. தலைவர் அவர்களே, முன்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தினை பார்த்த போது அதில் வரும் கப்பல் சாகசக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தன. அதிலும் அதோ அந்தப் பறவை போல பாட்டும் மிக பிரபலமான ஒன்று.

    கடலில் பயணம் செய்து சாகசங்கள் செய்வது என் கனவு,முன்பு சாவி வார இதழில் கடல் தான் என் காதலி என்னும் தொடர் வெளிவந்தது. நான் ரசித்த ஒர் கட்டுரைத் தொடர் அது. கடல் புறாவை ஏன் ஒருவரும் திரைப்படமாக எடுக்கவில்லை என்று நான் ஏங்குவதும் உண்டு.

    இக்கதையில் ஒரு திருப்பமாகவே நண்பர்கள் கப்பலில் கைதிகளாக செல்வது அமையும், ஆனால் அது எனக்குப் பிடித்த திருப்பமாக அமைந்து விட்டது.

    எனக்கும் ஜட்டி போடாதவர்களின் சாகஸங்கள் பிடிக்கும், ஆனால் கார்ட்டூனில் அல்ல!!!

    வருகைக்கும், அன்பான ஆதரவிற்கும் நன்றி தலைவர் அவர்களே.

    ReplyDelete
  10. காதலரே,

    அருமையான நடை. கவிதை கலந்த சொல்லாடல்கள் மற்றும் சிறந்த கதை என்ற கூட்டணி உங்களிடம் இருக்கும்போது நீங்கள் ஆட்சி அமைப்பதை யாரால் தடுக்க இயலும்?

    தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் உரிமையை இந்த பதிவின் மூலம் பெற்று உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    மிருகங்களின் சாகசங்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதனால் தான் தேசமலர் இதழில் தொடர்கதையாக வந்து பின்னர் லயன் காமிக்ஸ் இதழில் மந்திர ராணி என்று வந்த கதை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அந்த தொடரின் ஆங்கில வடிவம் முழு வண்ணத்தில் இருக்கும்.இந்த கதையின் சித்திரங்கள் அந்த அளவிற்கு சிறந்து விளங்குகின்றன.

    ஓவியர் மருது (சினிமாக்களில் டிராட்ஸ்கி மருது) இந்த புதிய பாணி ஓவியங்களின் ரசிப்பு தன்மையை பற்றி மணிக்கணக்கில் கூறி இருக்கிறார். அதன் பிறகே என்னால் புதிய பாணி ஓவியங்களின் நுணுக்கத்தை உணர முடிந்தது.

    இந்த தொடரில் நமது கதாநாயகர்கள் கப்பலில் அடிமைகளாக இருந்த காட்சி மினி லயனில் வரும் மாயத்தீவில் அலிபாபா என்ற கதையை நினைவு படுத்தியது. அந்த தொடரை நீங்கள் படித்து இருக்கிறீர்களா? அருமையாக இருக்கும்.இல்லைஎனில் வரும் வாரம் வரை காத்திருங்கள்.

    ReplyDelete
  11. விஸ்வா, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி ஆனால் தலைவர் குண்டு வைப்பதாக கூறி எச்சரித்துள்ளதால் ஆட்சியை அமைக்கும் காரியத்தை அவரிடமே விட்டு விடுகிறேன்.

    நீங்கள் குறிப்பிட்டுள்ள மந்திர ராணி மற்றும் அலிபாபா கதைகளைப் படித்ததில்லை. அதனால் உங்கள் பதிவுகள் மூலம், சில பக்கங்களை பார்க்கவும், கதைகளைப் பற்றி அறிந்திடவும் முடியும் என்று நம்புகிறேன். பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ஓவியர் மருது தன் காமிக்ஸ் காதல் பற்றி பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் உரையாடி, அவர் கருத்துகளையும் விளக்கங்களையும் கேட்டறியும் வாய்பு கிடைத்த நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்.

    கருத்துக்களிற்கும் தொடர்ந்து உங்கள் உற்சாகமான ஆதரவிற்கும் நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  12. கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html

    லெட் த கும்மி ஸ்டார்ட்.

    --
    பூங்காவனம்,
    எப்போதும் பத்தினி.

    ReplyDelete
  13. உங்களுக்கு மட்டும் எப்படிதன் இப்படிப்பட்ட கதைகள் கிடைகேறதோ.... அருமையான சித்திரம்... எளிமைன்யான தமிழகம்.... நன்றாக இருக்கிறது... அணைத்து பக்கங்களும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  14. நண்பர் ரமேஷ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. சினிபுக் உங்கள் ஆசையை நிறைவேற்றிடும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  15. அடடா இந்த முறை சற்று ரொம்ப காலம் எடுத்து விட்டேன் போலிக்கே, திரும்ப வர,,, சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டா போச்சு.... ஹி ஹி ஹி.....

    // வெனிஸ் நகரின் மீது சில்லென ஒளிர, அதன் விம்பம் நீரின் மேல் வெள்ளியாய் சிதறி இள நங்கையாய் சிரிக்கிறது //
    கவிதை வரிகளால் என்னை கொல்கிறீர்கள் காதலரே. நிலவின் பிம்பத்தை இதை விட சிறப்பாக ஒருவர் வர்ணித்து விட முடியாது. காதலருக்கு கேட்கவோ வேண்டும். ஆனால் மன்னிக்கவும், அது என்ன "கிருஷ்ணபஷத்து நிலவு", பிறை நிலவை இப்படியும் கூறலாமா? எனது சிறு மூளைக்கு விளங்கவில்லை. சாண்டில்யன் எல்லாம் நமக்கு ரொம்ப தூரம் :)

    // பிடித்த பாடல் ஓஆயி ஓஆயி ஏஆயி… //
    அட இந்த நாயகர் கூட தமிழ் படங்கள் பாரக்கிறாரா... பேஷ் பேஷ்

    // கொக்கும், நரியும் நீதிக் கதை என அறிவிக்கிறான். அறிவித்தலைக் கேட்ட டான் லோப்பின் நண்பரிற்கு பகீரென்கிறது //
    அடடா அப்படி பகீரென்று வரும் அளவுக்கு அந்த நீதிக்கதையில் நரிக்கு அப்படி என்ன நடந்தது என ஆவல் தான் அதிகரிக்கிறது

    // தன் மகனை நல்ல விலைக்கு விற்று துருக்கியர்கள் லாபம் சம்பாதிப்பதை எண்ணி தன் மனம் வேகுவதாக புலம்புகிறான் செனில் //
    என்ன ஒரு நெஞ்சை நக்கும் காமடி சென்டிமென்ட்..... ஹி ஹி ஹி
    பெண்டு பிள்ளைகளை பெற்று போட்டு விட்டு அவர்களை விலைக்கு விற்பது அடிமட்ட மக்களிடம் மட்டுமல்ல செல்வ சீமான்களிடமும் உண்டு என்று சாட்டை அடி அடித்திருக்கிறார் கதாசிரியர், காமடி கலந்து.

    // ஆன்ட்ரியோ தன்னிடமிருந்து ஐநூறு வெள்ளிக் காசுகளை பகரிப்பதற்காக அவன் சேவகன் ஒருவனுடன் சேர்ந்து ஆடிய சதி நாடகம் //
    அடடா, தமிழ் படம் நிறைய பார்த்து கத்துக்கொண்டிருப்போனோ சிறுவன்....... ஆனால், வணிகக்கார அப்பாவிற்கு ஏற்ற பையன் தான் மகன்.... :)

    அட பாவமே, கடைசியில அல்லக்கை குண்டு சொட்டை தலையன் ரோல் தானோ எனக்கு... ராம்போ என்று பெயர் வைத்தது இதை குறிக்கதானா... காதலரே... என்ன கொடுமை சார் இது? :)

    ஜோஷ் பிரபுவின் சின்ன வீடா, அடடா இடம் தெரியாம போயிற்றே...

    ஹெர்மினுடன் டன்லோப் ஆடும் ஆட்டம் மற்றும் பாட்டு (காதலர் இதிலும் புகுந்து விளையாடி விட்டீர்)... அருமை....

    பேரம் பேசி கொண்டிருக்கும் தந்தையை தொந்தரவு செய்யும் சின்ன பையன், ஆரவமான தெருவில் சத்தமே இல்லாமல் கூரை மீது நடக்கும் பூனை, செனிலின் மகனை காப்பாற்ற ராம்போ பாணியில் நாயகர்கள் செய்யும் சேட்டை, பொசேலேலின் மாளிகையில் இருக்கும் கடிகாரத்தின் அழகிய வடிவமைப்பு,பூனையை பார்த்து பயப்படும் கை கால் முழைத்த உருளை, பொக்கிஷத்தை பற்றி கேள்விபட்டதும் மேஜையில் இருந்து செனில் தொபீர் என்று விழுவது, வாள் சண்டையின் இடையே கூட கதாநாயகர்களின் காமடி தொனி, சண்டையின் நடுவே எலிக்காக பயப்படும் நாயகன், சின்ன முயலின் பயம் கழந்த அழகிய முக பாவனை, என்று கட்டத்திற்கு கட்டம் ஓவியரின் உழைப்பும், கதாசிரியரின் கற்பனையும் தெளிக்கபட்டிருக்கிறது. அவற்றை அருமையாக ஸ்கான் செய்து வெளியிட்டமைக்கு நன்றி காதலரே.

    நடுவே நமது காமிக்ஸ் நண்பர்களை கனகச்சிதமாக சேர்த்து (முக்கியமாக லக்கி லிமட் முயலாக அறிமுகமாகும் கட்டம் அபாரம்), வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் கவிதை வரிகளை தெளித்தது, என்று மெனக்கெட்டு பதிவை பலபடுத்தி இருக்கிறீர்கள். முழு கதையையும் உங்கள் மொழியாக்கத்தில் பார்ப்பது சாத்தியமில்லை என்றாலும், பேராசை படாமல் இருக்க முடியவில்லை

    சரித்திர கதையில் சரி விகிதத்தில் காமடி மற்றும் மனிதர்கள் நடுவே மிருகங்களை உலவ விட்டிருக்கும், இந்த சித்திர தொடர் வெற்றி பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.

    இன்னொரு அருமையான கதையை எங்களுக்கு அறிமுகபடுத்திய காதலருக்கு நன்றிகள். ஆன்லைனில் கிடைத்தால் படங்களை மேயவாவது இறக்கம் செய்து பார்த்து விட வேண்டியதுதான்.... தொடர் இன்னும் முழுமையாக வெளியாகாததால் சினிபுக் இதை இப்போதைக்கு மொழிமாற்றம் செய்ய மாட்டாக்ள் என்றே எண்ணுகிறேன். சினிபுக்கின் உரிமையாளர் ஓலிவர் பின்பற்றும் பாணி அது. எனவே காத்திருக்க தான் வேண்டும்.

    உங்களுக்கு கிடைக்கும் பொக்கிஷங்களை பார்த்து பொறாமை அதிகமாகி நான் பச்சை நிறத்துக்கு மாறி கொண்டிருப்பதாக வீட்டில் கூற ஆரம்பித்து விட்டார்கள்... எல்லாம் உங்கள் புண்ணியம்மைய்யா :)

    பி.கு: பதிவின் நடுவே என்னுடைய போன் பக்கத்துக்கு சுட்டி அமைத்தற்கு நன்றிகள் காதலரே. விருவிருப்பான சென்ற அந்த தொடரின், முதல் 4 புத்தகங்களை மட்டும் வெளிவிட்டு விட்டு தூங்கி கொண்டிருக்கும் அந்த பதிப்பகத்தார் மட்டும் என் கையில் கிடைத்தால் என்ன செய்வேன் என்றே தெரியாது. காமிக்ஸ் மீது காதல் இல்லாமல் வெளியிடும் எந்த பதிப்பகமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. அவர்கள் சீக்கிரம் அதை உணருவார்கள் என்று பிரார்த்திக்கிறேன்.

    ÇómícólógÝ

    ReplyDelete
  16. // எனக்கும் ஜட்டி போடாதவர்களின் சாகஸங்கள் பிடிக்கும், ஆனால் கார்ட்டூனில் அல்ல!!! //

    காதலரின் ட்ரேட்மார்க் டச்...... :)

    ÇómícólógÝ

    ReplyDelete
  17. ராம்போ ரஃபிக் அவர்களே,

    சாண்டில்யன் பெண்களை வர்ணிப்பதை நீங்கள் படித்தீர்களானால் மயங்கி விடுவீர்கள், கதையை இரண்டு வரி வைத்துக் கொண்டு வர்ணனையால் பத்துப் பக்கம் நிரப்பி விடுவார் அவர். அவர் எழுத்துக்களை படித்த எனக்கு மஞ்சள் அழகி போலவே கிருஷ்ணபஷத்து நிலவும் நினைவில் நிற்கின்றன.முன்னிரவின் நிலவை அப்படிக் குறிப்பார்கள்.

    என்ன ரஃபிக் கொக்கு நரியை விருந்திற்கு அழைத்த கதை தெரியாதா, நமீதா கூட கவுரவ வேடத்தில் வருவாரே.

    தன்னால் தன் மகனை விற்று லாபம் பார்க்க முடியவில்லையே என்னும் செனிலின் ஏக்கம், செனில் பணத்தின் மீது எவ்வளவு ஆசை கொண்டவன் என்பதை அழுத்தமாக கூறி விடுகிறது என்பது உண்மை.

    செனிலிடமிருந்து 500 வெள்ளிகளை கவருவதாவது! ஆண்ட்ரியோ இறந்தால் கூட அதில் ஏதாவது லாபம் கிடைக்குமா எனப் பார்ப்பான் செனில்.

    ராம்போ ரஃபிக் தன் சாகசங்களை ஆண்ட்ரியோவுடன் தொடர்கிறான் என்பதனை மறக்க வேண்டாம்.

    கட்டம் கட்டமாக சித்திரங்களை ரசிக்கும் உங்களைப் போன்ற காமிக்ஸ் காதலர்களிற்கு இது ஒர் விருந்து.

    நீங்கள் பச்சை நிறமாக மாறுவதை போன்றே இலக்கியத்தில் ஒர் நோய் உண்டு. அதற்கு பசலை என்று பெயர். நீங்கள் ஒர் குழந்தை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    விரைவில் முழு போன் தொடரும் உங்களிற்கு கிடைத்திட வேண்டுமென்பதே என் அவா. அற்புதமான தொடர் அது.

    உங்களிற்கு ஜட்டி போடாதவர்களின் சாகசங்கள் இப்போதைக்கு பிடிக்காது. ஏனெனில் நீங்கள் ஒர் குழந்தை. ஹிஹிஹி

    மிக சிரத்தையாக என் பதிவுகளைப் பற்றி நீங்கள் அளிக்கும் கருத்துக்களிற்கு என் உளமார்ந்த நன்றி அன்பு நண்பரே.

    பி.கு ஜோஸ் பிரபுவின் சின்ன வீட்டின் முகவரியை உங்கள் மெயிலிற்கு அனுப்பி வைத்துள்ளேன்.

    ReplyDelete
  18. சிறுவயதில் நான் படித்த மந்திர தந்திரக்கதைகளை நியாபகப் படுத்தி விட்டது இந்த கதை.சித்திரங்களும் அருமையாக இருந்தது.

    இந்த தொடர் ஒரு வெற்றித்தொடர் ஆக அமைந்ததில் வியப்பே இல்லை.

    பதிவுக்கு நன்றி காதலனே.

    ReplyDelete