Monday, April 25, 2011

நீலக்கிளிகள் இரண்டு


ப்ளு, நீலவண்ணம் கொண்ட ஒரு அரியரக கிளியாகும். பிரேசில் காடு ஒன்றில் இருந்து அதன் பறக்கும் பருவத்தின் முன்பாகவே கடத்தப்படும் அக்கிளி, அமெரிக்காவின் மின்னொசோட்டாவில் வாழும் லிண்டா எனும் சிறுமியின் கைகளிற்கு வந்து சேருகிறது.

காலங்கள் ஓடுகின்றன லிண்டாவும், ப்ளுவும் மிகச்சிறந்த நண்பர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். ஆனால் ப்ளுவிற்கு பறப்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இந்நிலையில் ப்ளுவின் இருப்பை அறிந்து அதனை தேடி வரும் டுலியோ எனும் மருத்துவன், ப்ளு அவன் இனத்திலேயே இறுதி ஆண் எனும் தகவலை லிண்டாவிற்கு தெரிவிக்கிறான்.

தன் பறவைக்காப்பகத்தில் உள்ள ஜூவல் எனும் பெண்கிளியுடன் ப்ளுவை ஜோடி சேர வைத்து, அதன் மூலம் அக்கிளிகளின் இனம் அழிவதிலிருந்து காப்பாற்றுவதற்கு தனக்கு உதவும்படியும் டுலியோ வேண்டுகோள் விடுக்கிறான். இதற்கு சம்மதித்து லிண்டாவும், ப்ளுவும் ரியோ நகரிற்கு செல்கிறார்கள் ஆனால் அங்குதான் விதி விளையாடுகிறது. காப்பகத்தில் பாதுகாப்பாக இருந்த இரு நீலவண்ணக் கிளிகளும் பறவைக் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டுவிட, ஒரு பக்கம் பறக்க முடியாத ப்ளுவும், ஜுவலும் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்க, மறுபுறம் காணாமல் போன கிளிகளை தேடி தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள் லின்டாவும், டுலியோவும்…..

Ice Age அனிமேஷன் திரைப்பட வரிசைகளில் இணை இயக்குனராகவும் பின் இயக்குனராகவும் தன் திறமையை வெளிப்படுத்திய இயக்குனர் Carlos Saldanha அவர்களின் சமீபத்திய திரைப்படமான Rio அதன் ஆரம்பக்காட்சிகளிலேயே திரையில் விரியும் வண்ணக்கோலங்களால் மனதை கவர்ந்திழுத்து விடுகிறது. மின்னொசோட்டா மாநிலத்தின் மூஸ்லேக் நகரில் பனிக்காலம் ஒன்றின் மூலம் Ice Age ஐ ஒரு குறுகிய கணம் அவர் நினைவுகூர்ந்தாலும், ரியோ நகரில் நகரும் திரைப்படத்தின் பெரும் பகுதியானது களிப்பான சூட்டால் மனதை வசியம் செய்யும் வண்ணக்கோலமாகவே தொடர்கிறது. கதை நிகழும் காலம் கார்னிவல் காலம் என்பது கூடுதல் வண்ணத்தை திரைப்படத்திற்கு அள்ளிக் கொண்டு வந்துவிடுகிறது.

rio-2011-18519-1884383972உதய காலம், ஒரு காட்டில் வசிக்கும் புள்ளினங்கள் துயில் கலைகின்றன. ஆனால் இது பிரேசிலில் உள்ள ஒரு காடு. துயில் கலையும் பறவைகள் சம்பா நடனம் ஆடி, பாடி களிக்கும் காட்சியுடன் ஆரம்பமாகும் திரைப்படம் முடிவடைவதும் காடு ஒன்றில் பறவைகளின் சம்பா நடனத்துடன்தான். அந்தக் ஆரம்பக் காட்சி தந்த உவகை, களிப்பு, மகிழ்ச்சி, வண்ணம், நகைச்சுவை என்பவற்றை படத்தின் நீளத்திற்கும் வெற்றிகரமான ஒரு கோலமாக போட்டிருக்கிறார் இயக்குனர் சல்டான்ஹா.

லிண்டாவின் புத்தக கடையில் சால்வையை கழுத்தில் சுற்றிக் கொண்டு, சூடான சாக்லெட் பானத்தை ருசித்து பருகிய ப்ளு, ரியோவில் நீலப்பைங்கிளியான ஜூவலின் அழகில் மயங்கி அவளைக் காதல் வலையில் வீழ்த்த எடுக்கும் முயற்சிகளும், கடத்தல்காரர்களிடமிருது தப்புவதற்கு பறக்க முடியாமல் கால்களால் சாகசம் காட்டுவதும், வீட்டுக் கிளியான உனக்கு காட்டில் வாழ்தல் பற்றி என்ன தெரியும் என ப்ளுவிடம் சீறிப் பாயும் ஜூவலும், விடுதலைக்காக அவள் எடுக்கும் முயற்சிகளும், இந்த இரு நீலக்கிளிகளிற்கும் இடையில் மெல்ல உருவாகும் காதலும் என கதையின் இரு பிரதான பாத்திரங்களும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் திரைப்படத்தில் ரியோ நகரும் ஒரு பிரதான பாத்திரமே.

கார்னிவல் கொண்டாட்டங்களிற்காக தன்னை அலங்கரித்துக் கொண்ட்டிருக்கும் அந்த உயிரான நகரின் காடுகள், பவேலாக்கள், நகர தெருக்கள், கடற்கரைகள் என சுற்றி சுற்றி அனிமேஷனில் மயக்கியிருக்கிறார்கள். ப்ளுஸ்கை ஸ்டுடியோவின் மிகச்சிறந்த படைப்பாக இன்றைய நாளில் இதனைக் கொள்ளலாம் என்பதே என் எண்ணம். பிரதான பாத்திரங்களை மட்டுமின்றி சிறிய துணைப் பாத்திரங்களையும்கூட ஆர்வத்துடன் ரசிக்கும் வண்ணம் உருவாக்கி உலா வர விட்டிருக்கிறார்கள்.

rio-2011-18519-1168718146பறவைக் கடத்தல்காரக்களின் அடியாளாக வந்து மிரட்டும் வெண்கிளி, ரியோ நகரிற்கு வரும் உல்லாச பிரயாணிகளிடம் ஜேப்படி செய்யும் மந்திகள், இசைக் கலைஞர்களான குருவிகள், நீலக்கிளிகளை காதலில் இணைய வைக்க முயற்சிக்கும் டூக்கான் பறவை, புல்டாக் லூயி என அனைத்து துணைப் பாத்திரங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரசிக்க வைக்கிறார்கள்.

நீலக்கிளிகளை கண்டு கொண்டதாக ஸ்மார்ட் போனில் தன் பாஸிற்கு டெக்ஸ்டோ தரும் மந்தி, வீதிச் சமிக்சை விளக்கில் குளிர் காயும் குருவி என அருமையான நறுக்குகள் திரைப்படம் முழுதும் இறைந்து கிடக்கின்றன. பறவைகளின் சம்பா கிளப்பில் நடக்கும் அட்டகாசமான ஆடல் பாடல், ட்ராம் வண்டியின் மீது அமர்ந்து நீலக்கிளிகள் பயணம் செய்யும் போது டூக்கான் பறவை செர்ரி பூங்கொத்துகளின் இதழ்களை தட்டி மழையாக பொழிய செய்ய அந்தக் கணத்தில் ஒலிக்கும் அந்த மென்மையான பாடல் எனும் காட்சிகள் திரைப்படத்தின் நட்சத்திரக் காட்சிகள். இசை சொல்லவே வேண்டாம். பாடல்கள் இடுப்பை நெளிக்க வைக்கும் ரகம். வீடு திரும்பி பறவைகளின் சம்பா கிளப்பில் ஒலித்த பாடலிற்கு கெட்ட ஆட்டம் போட்டேன். அப்பாடலின் இறுதியில் நடிகை ஆன் ஹாத்தவே ஒரு லாலா இழுப்பார் பாருங்கள்... டார்லிங் ஹாத்தவே உன் லாலாவிற்கு நான் அடிமை.

தன் பிறந்த மண்ணிற்கு தன் அன்பை செலுத்த விரும்பிய இயக்குனர் சல்டான்ஹா அதனை அற்புதமாக செலுத்தியிருக்கிறார். அவர் வழங்கியிருக்கும் ரியோ ஒரு கோலகலமான, குஷியான, இளமையான கார்னிவல். [***]

ட்ரெயிலர்

Sunday, April 10, 2011

மரண அடி வாங்குதல் அல்லது Sucker Punch


தன் தாயின் மரணத்தின் பின், அவள் விட்டுச் சென்ற சொத்துக்களிற்காக ஆசைப்படும் தன் வளர்ப்பு தந்தையால் மனநலம் குன்றியோர்க்கான விடுதி ஒன்றில் சேர்க்கப்படும் ஒரு இளம் பெண், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்குகிறாள்….

300 திரைப்படத்தின் வெற்றியின் பின்பாக இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் தோற்றதில்லை. அவரின் சமீபத்திய திரைப்படமான Sucker Punch ம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி விட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் எதிர்பாராத குத்து மூலம் நாக் அவுட் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் திலகம் ஸாக் ஸ்னெய்டர் அவர்கள்.

தனக்கு எதிராக மனநலம் குன்றியோர் விடுதியில் ஒரு சதி நிகழப்போகிறது என்பதை அறியும் இளம் பெண்னான பேபி டால், அங்கிருந்து தப்பித்து செல்ல எடுக்கும் முயற்சிகளை இரு வேறு கற்பனை அடுக்குகளில் திரையில் அடுக்குகிறார் இயக்குனர். யதார்த்தம் என்பதற்கு அல்லது உண்மையான நிகழ்வு என்பதற்கு மெலிதான ஸாடோ மாச்சோ அலங்காரப் பூச்சு பூசி, வீடியோ விளையாட்டுகளை விஞ்சிவிடும் வகையிலான அபத்த ஆக்‌ஷன்களையும்--- கற்பனையே என்றாலும் கூட--- திரையரங்கில் மென்மையான பூமி அதிர்ச்சி ஒன்றின் உணர்வை வழங்கக் கூடிய இசையையும் அதனுடன் கோர்த்து, தன் வழமையான மென்னசைவு ஆக்‌ஷன்களையும் கலந்து அடுக்கியிருக்கிறார் இயக்குனர்.

sucker-punch-2011-14779-587591752ஆனால் யதார்தத்தினை கற்பனையின் மூலம் அழகூட்டல் என்பது எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்த விளைவுகளை வழங்கி விடுவதில்லை. உலக யுத்தக் காலம், மத்திய காலம், எதிர்காலம், ஜப்பானிய பூதகணங்களின் காலம் என ரசிகர்களை வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆக்‌ஷன் விருந்துக்காகவும், சஸ்பென்ஸிற்காகவும் இட்டுச் செல்ல விரும்பிய இயக்குனரின் முயற்சியானது திரைப்படத்தின் இளம் நாயகிகளைப் போலவே அயர்ச்சியையும், களைப்பையும் உருவாக்குகிறது. அந்த இளம் நாயகிகள் போலவே ஸாக் ஸ்னெய்டரின் இப்படைப்பும் விரைவில் கவர்ச்சியை இழந்து ரசிகனை சலிப்பின் உச்சத்தில் நெளிய வைக்கிறது. பயங்கரமான ஆக்‌ஷன்களை புரியும் இளம் நாயகிகளின் முகபாவங்களையும் நடிப்பையும் உடல்மொழியையும்!! பார்த்து அழுவதா சிரிப்பதா அல்லது தலையை முன்னால் இருக்கும் ரசிகனுடன் மோதுவதா எனும் நிலை உருவாகிறது.

மொத்தத்தில் ஸாக் ஸ்னெய்டரிற்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்களை எல்லாம் அழித்து விடும் அளவில் குத்தாட்டம் போடுகிறது Sucker Punch. திரைப்படத்தில் குட்டைக் கால்சட்டைகள், பாவாடைகளுடன் வரும் நாயகிகளையும் சேர்த்து இத்திரைப்படம் ஒரு கொடூரமான வன்கனவாகவே திரையில் உருப்பெறுகிறது. மொக்கை எனும் சொல்லிற்கு இத்திரைப்படம் அட்டகாசம் எனும் அர்த்தத்தை வழங்குவதில் பெரு வெற்றி கொள்கிறது.

ட்ரெய்லர் [இதுவே போதும்]

Friday, April 1, 2011

செந்தாமரைகள் சின்னக் கெண்டைக்காக அல்ல


oko1 அந்தியின் வண்ணம் சுற்றுப்புறத்தை தீப்பிடிக்க வைக்க, ஏரியின் மத்தியில் ரம்யமாக எழுந்து நிற்கும் விடுதியில், சின்னக் கெண்டை எனும் பெயர் கொண்ட இளம் பெண்ணுடன் அந்த சுகமான தருணத்தின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறான் நோபுயுரோ.

அந்த வீட்டின் அருகில் நிற்கும் உயர்ந்த மரமொன்றின் கிளையில் தன் உடலைக் கிடத்தியவாறே அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் சின்னக் கெண்டையின் இளைய சகோதரனான டிக்கு. தன் சகோதரியை தன் உயிருள்ள வரை பாதுகாப்பேன் என சபதம் பூண்டவன் அவன். எதிர்காலத்தில் பெயர் பெற்ற ஒர் சாமுராய் வீரன் ஆகி விட வேண்டும் எனும் ஒர் கனவை உள்ளத்தில் விதைத்து வைத்திருப்பவன்.

விடுதியின் அருகில் உள்ள மண்பாதையில் நடந்து வரும் முதிய துறவி நோசின், மரத்தின் கிளையில் இருக்கும் டிக்குவை கீழே இறங்க வைத்து தியானம் செய்வதற்காக அழைத்து செல்கிறார். துறவியின் மூச்சில் ஸக்கே மதுவின் வாசம் சுழல்கிறது. தியானத்திற்கு அது சில சமயங்களில் துணையாகிடும் என டிக்குவிடம் கூறுகிறார் துறவி. மரமொன்றின் அடிப்பகுதியில் வாழ்ந்து வரும் குளிரான நிழலில் தியானம் ஆரம்பமாகிறது.

ஏரியிலிருந்து தன் கண்களை விலக்காத நோபுயுரோ, சின்னக் கெண்டையின் வயிற்றில் ஒர் உயிர் வளர்வதை அவளிடம் தெரிவிக்கிறான். சின்னக் கெண்டையின் விழிகள் ஆச்சர்யத்தால் விழிக்கின்றன. தன்னால் கூட உணர்ந்து கொள்ள முடியாதிருக்கும் விடயம் ஒன்றை நோபுயுரோ எவ்வாறு அறிந்து கொண்டான் எனும் கேள்வி அவளிடம் எழுகிறது. நோபுயுரோவின் சொற்களில் கரைந்திருக்கும் ரகசியம் என்னவென்று அவள் அவனிடம் வினவுகிறாள். அவளின் கேள்விக்கு சரியான பதில் தராது இருக்கும் நோபுயுரோ, தான் தன் எஜமானன் ஒக்கோவைப் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறான். ஏரியின் மேல் பறக்கும் வெண்பறவைகள் சூரியனைப் பிடிக்க விரைந்து பறந்து கொண்டிருந்தன.

அந்தக் கப்பலின் அறையொன்றின் உத்திரத்திலிருந்து தலை வெட்டப்பட்ட பூதத்தின் ராட்சத உடல் அவலட்சணமான ஒர் மீனைப் போல் தொங்கிக் கொண்டிருக்கிறது. மரகத வண்ண விளக்குகள் உமிழும் ஒளியால் சூழப்பட்டிருக்கும் அந்த அறையில், நீண்ட சுங்கான் ஒன்றைப் புகைத்தவாறே, பஞ்சனையில் சாய்ந்து கிடக்கிறான் அகாச்சி சான். அவன் அருகில் அமர்ந்திருக்கும் இளம் பெண் ஒர் தந்தி இசைக்கருவியை இசைக்க, பரவும் இசையில் உயிரற்ற பூதத்தின் தலை அகாச்சியின் முன் கண் மூடிக்கிடக்கிறது.

oko2 தனக்கு பெரும் தொல்லை தந்து கொண்டிருந்த கொடிய பூதத்தை ஒழித்துக்கட்டிய பூதவேட்டையன் ஒக்கோவைப் பாராட்டும் அகாச்சி சான், ஒக்கோவிற்குரிய சன்மானத்தை அவனிற்கு வழங்கி படகில் அவனை வழியனுப்பி வைக்கிறான். தன்னை எதிர்பார்த்து, ஏரியிலிருக்கும் விடுதியில் காத்திருக்கும் சகாக்களின் திசை நோக்கி படகை செலுத்த சொல்கிறான் ஒக்கோ.

இரவின் போர்வையில் நோபுயுரோ தங்கியிருக்கும் விடுதியை ரகசியமாக அண்மிக்கின்றன இரு கப்பல்கள். அக்கப்பல்களில் இருக்கும் கொள்ளையர்கள் அதிரடியாக விடுதியைத் தாக்க ஆரம்பிக்கிறார்கள். வாள்களாலும்,அம்புகளாலும் தீண்டப்பட்ட மனித உடல்கள் உயிரற்றுக் கீழே விழ, விடுதியில் இருந்த இளம் பெண்கள் யாவரும் கொள்ளையர்களின் கப்பலில் பலவந்தமாக ஏற்றப்படுகிறார்கள்.

எதிர்த்து தாக்கும் நோபுயுரோவை தந்திரமாக யுத்தப் பொம்மை ஒன்றை வைத்து வீழ்த்துகிறார்கள் கொள்ளையர்கள். தன் சகோதரி சின்னக் கெண்டை, கொள்ளையர்கள் கப்பலில் ஏற்றப்படுவதைக் காணும் டிக்கு கத்த ஆரம்பிக்க அவன் வாயை தன் கரங்களால் மூடி விடுகிறான் துறவி நோசின். துறவிக்கும் உயிர் முக்கியமல்லவா. விடுதிக்கு தீ வைத்து விட்டு, மீண்டு எழும் நோபுயுரோவை கடலினுள் அம்புகளால் தூதனுப்பி வைத்து ஏரியோடிச் செல்கிறார்கள் தம் முகங்களைக் காட்டாத அக்கொள்ளையர்கள்.

படகில் விடுதி திரும்பும் ஒக்கோ, விடுதி முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதைக் காண்கிறான். தன் குழுவினரைக் கடிந்து கொள்ளும் அவன், இளம் பெண்களை கவர்ந்து செல்வதற்காக கொள்ளையர்கள் யுத்தப் பொம்மை ஒன்றை பயன்படுத்தியது அசாதரணமான ஒன்று என்று வியக்கிறான். தன் குழுவினருடன் உடனடியாக அவ்விடத்தை விட்டு நீங்க விரும்பும் ஒக்கோ, கொள்ளையர்களை தொடர்ந்து சென்று பழிதீர்க்க துடிக்கும் நோபுயுரோவின் மனதையும் மாற்றிக் கொள்ளச் சொல்கிறான்.

இந்த உரையாடல்களினூடு தயங்கியவாறே ஒக்கோவை நெருங்கும் சிறுவன் டிக்கு, தன் சகோதரி சின்னக் கெண்டையை காப்பாற்றித் தரும்படி அவனிடம் மண்டியிட்டு வேண்டுகிறான். வறுமையின் பிள்ளையான டிக்கு, அதற்கு சன்மானமாக ஒக்கோவின் முன் வைக்கும் துருப்பிடித்த தூண்டில்களையும், பழைய சீப்பு ஒன்றையும் பார்வையிடும் ஒக்கோ ஆத்திரம் கொண்டு டிக்குவை திட்டுகிறான்.

oko3 ஒக்கோவிற்கு வழங்குவதற்கு தன் துன்பமான இருப்பை தவிர தன்னிடம் வேறு ஏதுமில்லை, அதனை எடுத்துக் கொள்ளும்படி ஒக்கோவிடம் வேண்டும் டிக்குவிடம், உன் வாழ்வை எனக்கு வழங்குகிறாயா எனக் கேட்கிறான் ஒக்கோ. தன் சகோதரியின் மீது சத்தியம் செய்து ஒக்கோவிற்கு தன் வாழ்வை அர்ப்பணிக்கிறான் சிறுவன் டிக்கு. வழியில்லாதவன் கண்களில் வழியும் ஏரிகளில் மீன்கள் நீந்துவது இல்லை என்பதை அறியாத நீர்ப்பறவைகள் உண்டா என்ன.

ஒக்கோவின் படகினை செலுத்தல், அதன் பராமரிப்பு, சமையல் செய்தல் போன்ற எடுபிடி வேலைகளை அவன் ஆற்ற வேண்டும் என டிக்குவிற்கு கட்டளையிடுகிறான் ஒக்கோ. முதிய துறவி நோசின் அவன் கல்விக்கு பொறுப்பாக நியமிக்கப்படுகிறார். தன் வாழ்க்கை முழுதும் ஒக்கோவிற்கு நன்றிக் கடன் பட்டிருப்பதாகக் கூறி கண்ணீர் சொரிகிறான் டிக்கு. அவன் கண்ணீரையும் ஏந்திக் கொண்ட ஒக்கோவின் படகு அவ்விடத்தை விட்டு அலைகள் மேல் நீந்தியது.

ஏரியில் மிதந்து சென்ற படகு, ஏரியின் கரைகளில் அமைந்திருந்த கிராமங்களைத் தாண்டி ஆளரவம் இல்லா நீர்ப்பரப்பில் பயணத்தை தொடர்கிறது. முதிய துறவி நோசின் வழிகாட்ட டிக்கு படகை செலுத்துகிறான். பயணத்தின் ஒர் தருணத்தில் ஏரியில் நிமிர்ந்து நிற்கும் குன்று ஒன்றின் மீது அமைந்துள்ள ஒர் ஆலயத்தின் அருகில் சென்று நிற்கிறது படகு.

சிதிலமான நிலையிலிருக்கும் அந்த ஆலயத்தின் அடிவாரத்தில், நீரில் வாழும் ராட்சத ஜந்துக்களின் எலும்புக்கூடுகள் குவிந்து கிடக்கின்றன. ஏரியின் மீது வெண்முத்தாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இரவின் நிலவு அந்த எலும்புகளை குளிரச்செய்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

ஆலயத்தின் உட்புறத்தில் கடல் உயிரினங்கள் காணிக்கையாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. மீனின் கவிச்சி நாற்றம் ஆலயத்தை மூழ்கடித்து கொண்டிருந்தது. ஆலயத்தின் மத்தியில் காணப்படும் சிறிய நீர் தொட்டி ஒன்றின் முன்பாக மண்டியிட்டு அமர்கிறார்கள் துறவியும், டிக்குவும்.

oko4 தன் ஸக்கே மதுவை காணிக்கையாக தந்து நீர் தேவதையை அழைக்கிறான் துறவி. அக்காணிக்கை மதுவை உவப்புடன் ஏற்றுக் கொண்டு தொட்டியிலிருந்த நீர், உருவம் பெறத்தொடங்குகிறது. நீர் உருவம் கொண்டு நிற்கும் தேவதையிடம் சின்னக் கெண்டை குறித்த தகவல்களைக் கூறும்படி வேண்டுகிறான் துறவி. சிறுவன் டிக்கு, தன்னிடம் இருந்த சின்னக் கெண்டையின் சீப்பை நீர் தேவதையின் உடலில் அமிழ விட, அவன் சகோதரி பற்றிய தகவல்களை ஈர்க்க ஆரம்பிக்கிறது நீர் தேவதை.

சிறிது நேரத்தில் நீரால் தான் கொண்ட வடிவத்தை உடைத்துக் கொண்டு தொட்டியில் விழும் தேவதை, ஜொலிக்கும் மீனை தொடர்ந்து சென்றால் அது சின்னக் கெண்டை இருக்குமிடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்லும் எனக்கூறி நீரில் கலக்கிறது.

குன்றின் அருகே ஏரியில் நிற்கும் படகின் அருகில் எங்கிருந்தோ தோன்றி நீந்திக் கொண்டிருக்கும் ஜொலிக்கும் மீனை தொடர்ந்து செல்ல ஆரம்பிக்கிறது ஒக்கோ குழுவினரின் படகு.

நூறு விலாங்குகள் எனப் பெயர் கொண்ட துறைமுகத்தில் அமைந்திருக்கும் செந்தாமரை சூதாட்ட விடுதியில் இருக்கும் ஒர் அறையில் கொள்ளையர்களால் கடத்தி வரப்பட்ட இளம் பெண்கள் மீது நீர் ஊற்றி அவர்கள் மயக்கம் கலைக்கப்படுகிறது. பின்பு அவர்கள் அழகாக்கப்பட்டு வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள்.

இளம் பெண்கள் இருந்த அறையின் கதவு திறக்க, ஒர் குள்ளப் பெண்மணியும், தன் முகத்தை வெள்ளை நிறமான துணியால் மூடி மறைத்த உயர்ந்த ஒர் உருவமும் விடுதி உரிமையாளனுடன் உள்ளே நுழைகிறார்கள். வரிசையாக நின்ற இளம் பெண்களின் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு அவர்கள் உடல்கள் அழகிய நிர்வாணமாக்கப்படுகிறது. ஆடையின்றி நிற்கும் பெண்களை நெருங்கி அவர்கள் உடல்களை பரிசோதிக்கும் குள்ளப் பெண்மணி சின்னக் கெண்டையை தேர்வு செய்து நீ காத்திருந்த வாக்கு இவள்தான் என நெடிந்துயர்ந்து நிற்கும் உருவத்திடம் தருகிறாள்.

சின்னக் கெண்டையை தன் அவலட்சணமான விரல்களால் தீண்டும் அந்த உயர்ந்த உருவம், பின் அவளை அறையில் இருக்கும் ஒர் பெரிய ஜாடியினுள் நுழையச் சொல்கிறது. சின்னக் கெண்டை ஜாடியினுள் அமர்ந்து கொள்ள அந்த ஜாடி மூடப்பட்டு பணியாளர்களால் அவ்வறையை விட்டு தூக்கி செல்லப்படுகிறது.

oko5 அறையில் நிற்கும் ஒருவனிடமிருந்து வாளொன்றை உருவிக் கொள்கிறது அந்த உயர்ந்த உருவம். பின் நிர்வாணமான இளம் பெண்களை தவிர்த்து ஏனையோரை அறையை விட்டு நீங்கச் சொல்கிறது.

அறையின் கதவுகள் மூடப்பட்டதும், தன் கையிலுள்ள வாளை மேலே உயர்த்துகிறது அந்த நெடிய உருவம். குருதி இதழ்கள் கோலமிட, இறந்த பூக்களாய் தரையில் உதிர்கிறார்கள் அந்த இளம் பெண்கள்.

ஏரியில் ஜொலிக்கும் மீனை தொடர்ந்து வந்த ஒக்கோவின் படகு, செந்தாமரை விடுதியின் முன்பாக ஜொலிக்கும் மீன் மறைந்து விட, அவ் விடுதியை நெருங்குகிறது. படகிலிருந்து இறங்கும் ஒக்கோ குழுவினர் விடுதியின் படிகளில் ஏறிச்செல்கிறார்கள். இதே சமயம் சின்னக் கெண்டை இருக்கும் ஜாடியை அதே படிகள் வழி கீழே இறக்கி வருகிறார்கள் பணியாளர்கள். ஜாடியைப் பின் தொடர்ந்து வருகிறது ஒர் மூடிய பல்லக்கு…

விடுதியில் நடக்கப் போவது என்ன? சின்னக் கெண்டையை கவர்ந்து செல்லும் உயர்ந்த உருவம் யார்? சின்னக் கெண்டையிடம் அந்த உருவம் கண்டு கொண்டது என்ன? சின்னக் கெண்டையை ஒக்கோ குழுவால் காப்பாற்ற முடிந்ததா? என்பவற்றிற்கு விடை தருகிறது OKKO எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பம்.

1108 களில், ஜப்பானின் மத்திய காலப்பகுதியில் அதிகாரங்களை தம் வசப்படுத்திக் கொள்ள பெரும் குலங்கள் தமக்கிடையே மோதிக் கொண்டிருக்க, இப்பகுதிகளிலிருந்து விலகி பூதவேட்டை நடாத்தும் குழு ஒன்றின் தலைவனாக எந்தவித கட்டுக்களுமற்ற சுதந்திர வீரனான ஒக்கோ, தன் உண்மையான அடையாளத்தைக் காட்டாது சிகப்பு முகமூடியால் தன் முகத்தை மறைத்து இருக்கும் அசுர பலம் கொண்ட நோபுயுரோ, ஸக்கே மதுப்பிரியரான ஒர் முதிய துறவி, சிறுவன் டிக்கு ஆகியோரின் சாகசங்களைக் கூறுகிறது கதை.

oko6 விழிகளை மயக்கும் சித்திரங்களும், அதிரடித்திருப்பங்களுமாக கதை நகர்கிறது. ஆக்‌ஷன், மந்திரம், மர்மம் என விறுவிறுப்பான கதை சொல்லலும், கதை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் இடங்களும் வாசகர்களை கவர்ந்து விடுகின்றன.

ஜப்பானின் பூத வேட்டையர்கள் பற்றிய கதை என்பதே ஒர் புதிய அனுபவமாக உள்ள போது, கதையில் தோன்றும் அமானுட பாத்திரங்கள் வாசகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டுவதாக உள்ளன.

இயற்கையின் ஆதார மூலங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு, வெளி என்பவற்றை மையமாக கொண்ட வட்டங்களாக OKKO தொடர் நகர்கிறது. ஒவ்வொரு ஆதார மூலத்திற்கும் இரண்டு ஆல்பங்கள் வழி கதை சொல்லப்படுகிறது. இது வரை ஐந்து ஆல்பங்கள் வெளியாகியுள்ள தொடரில் நாம் பார்த்தது நீர் வட்டத்தின் முதல் பாகமாகும்.

இத்தொடரிற்கு சிறப்பாக கதையையும், சித்திரங்களையும் உருவாக்கியிருப்பவர் HUB எனும் பிரெஞ்சுக் காமிக்ஸ் கலைஞர் ஆவார். 1969ல் அனெசி எனும் ஊரில் பிறந்தவர். இயற்பெயர் Humbert Chabuel. காமிக்ஸ்களிற்கு சித்திரம் வரைவது என்பது இவர் வாழ்நாள் கனவாக இருந்தது. 1992ல் லுக் பெஸனுடன் இனைந்து 5th Element திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். காமிக்ஸ் துறையில் பணியாற்றுவதில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம் இவரிற்கு பிடித்தமான ஒன்று. அந்த சுதந்திரத்தின் உவகையில் OKKO காமிக்ஸ் தொடரில் அற்புதமாகப் பணியாற்றி வருகிறார். கதைக்கு அவர் வரையும் சித்திரங்களே அதற்கு சான்று பகர்ந்திடும். வாசகர்களின் கண்களிற்கு விருந்து நிச்சயம். [***]

இப்பதிவுவானது 04/08/2009 ல் எழுதப்பட்டது.


ஏனைய ஆல்பங்கள்

Sunday, March 13, 2011

நினைவைத் தொலைத்த நெருப்பு


பெர்லினில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கும் டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ், அவனது மனைவியுடன் பெர்லினிற்கு பயணமாகிறான். விமான நிலையத்திலிருந்து அவர்கள் தங்கவிருக்கும் ஹோட்டலிற்கு வந்திறங்கும் தருணத்தில் தனது சூட்கேஸ் ஒன்றை விமான நிலையத்தில் தவற விட்டு வந்திருப்பதை மார்ட்டின் ஹாரிஸ் அறிந்து கொள்கிறான்.

தன் மனைவியை ஹோட்டலில் விட்டு விட்டு விமான நிலையத்தில் தான் தவற விட்ட சூட்கேஸை தேடிச் செல்லும் மார்டின் ஹாரிஸ் , ஒரு விபத்துக்குள்ளாகி கோமா நிலைக்கு தள்ளப்படுகிறான். நான்கு நாட்களின் பின்பாக கோமா நிலையிலிருந்து கண் விழிக்கும் மார்டின் ஹாரிஸ் தன் மனைவியை அவள் தங்கியிருக்கும் ஹோட்டலிற்கு தேடிச் செல்கிறான், ஆனால் அவளோ அவனை யார் என்று தெரியாது என மறுப்பதுடன், மார்ட்டின் ஹாரிஸ் எனும் பெயரில் வேறு ஒரு நபரையும் அவள் கணவனாக அவனிற்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள்…..

கடந்த கால நினைவுகளை விபத்தில் தொலைத்து தன் அடையாளத்தை தேடி ஓடும் இன்னொரு மனிதனின் கதை இதோ. ஜேசன் பொர்னிற்கு பின்பாக XIII காமிக்ஸ் தொடரின் மக்லேன், அவ்வழியில் இன்று டாக்டர் மார்ட்டின் ஹாரிஸ். Taken திரைப்படத்தின் குறிப்பிடத்தக்க வெற்றி நடிகர் Liam Neeson அவர்களிற்கு சமீப காலமாக ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை அவர் விரும்பியோ விரும்பாதோ பெற்றுத் தந்திருக்கிறது. அவரும் தன் பிரத்தியேக பாணியில் நடிப்பிலும் ஆக்‌ஷனிலும் சிறப்பிக்க தவறுவதில்லை. இயக்குனர் Jaume Collet Serra இயக்கியிருக்கும் Unknown திரைப்படத்தில் லியம் நீசனிற்கு ஆக்‌ஷனை விட அவர் நடிப்பை காட்டவே அதிக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது எனலாம்.

படத்தின் ஆரம்பக்காட்சிகள் மார்ட்டின் ஹாரிஸ் தம்பதியினரின் நெருக்கத்தையும், காதலையும் பார்வையாளர்களிடம் சிறப்பாக எடுத்து வருகின்றன. இக்காட்சிகளில் வழியாக மனதில் உறுதிப்படுத்தப்படும் கணவன் மனைவி எனும் உறவு, தொடரவிருக்கும் திரைப்படத்தின் மர்மத்தை இறுதிவரை ரசிகனிடம் கசிய விடாது காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. கோமா நிலையிலிருந்து மீண்டெழுந்து வரும் மார்ட்டின் ஹாரிஸ், தன் மனைவி தன்னை யாரெனத் தெரியாது எனக்கூறி பிறிதொருவனை தனக்கு பதிலாக கணவன் எனக் காட்டும்போது உடைய ஆரம்பிக்கும் அவனில் உருவாகும் குழப்பத்திலும், வேதனையிலும் அந்த சூழ்நிலை விதைக்கும் புதிரிலும் மாட்டிக் கொள்கிறோம் நாம். உண்மையான மார்டின் ஹாரிஸ் யார் என்பதை நிரூபிப்பதற்காக நிகழும் சம்பவங்களினூடாக பார்வையாளன் மர்ம முடிச்சின் இறுக்கத்தில் மெதுவாக பிணைக்கப்படுகிறான்.

தான் யாரென்பது மிகப் பிரம்மாண்டமான ஒரு கேள்வியாக மார்ட்டின் ஹாரிஸ் முன் எழுகையில் அவனுடன் சேர்ந்து நாமும் கலங்கிப் போகிறோம். தன் மனைவியிடமும், அதிகாரிகளிடமும் தன் அடையாளத்தை உண்மையெனக் காட்ட எடுக்கும் முயற்சிகளில் மார்ட்டின் தோற்கும் போதெல்லாம் அவன் மீது நாம் பரிதாபம் கொள்ள ஆரம்பிக்கிறோம், அவன் தன் அடையாளத்தை நிரூபித்திட வேண்டுமென நாம் ரகசியமாக விரும்புகிறோம். இங்கு இயக்கமும் சரி, நடிகர் லியம் நீசனும் சரி தம் பங்கை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். மார்ட்டின் ஹாரிஸ் மீது நாம் கொள்ளும் அந்த பரிதாபம்தான் உச்சக் கட்டத் திருப்பத்தின்போது எம்மை விழிகளை உயர்த்த வைக்கிறது. இப்படி எம்மை ஏமாற்றி விட்டார்களே என அந்த திருப்பத்தை வெகுவாக ரசிக்க உதவுகிறது. இருப்பினும் படத்தின் ஆரம்பக் காட்சிகளில் உணர்ச்சிகரமான ஒரு படமாகவே Unknown உணரப்படக்கூடியதாகவிருக்கிறது. மார்ட்டின் ஹாரிஸை நிழலாக சிலர் பின் தொடர்கிறார்கள் என்பதும், அவன் மீதான கொலை முயற்சியும் திரைப்படத்திற்கு ஆறுதலாக விறுவிறுப்பை எடுத்து வருகின்றன.

sans-identite-2011-19089-449337095ஆனால் Unknown ஒரு வேகமான த்ரில்லர் அல்ல. அசர வைக்கும் அதிரடியான ஆக்‌ஷன்களையும் அது தன்னிடத்தில் கொண்டிருக்கவில்லை. மெதுவான வேகத்தை கொண்ட இத்திரைப்படம் அதன் கச்சிதமான மர்ம முடிச்சாலும், அதில் இடம் பிடிக்கும் துணைப்பாத்திரங்களாலும், அப்பாத்திரங்களில் உறைந்திருக்கும் மனித நேயத்தாலுமே பார்வையாளனிற்கு நெருக்கமாகி வருகிறது. டேக்கனும், ஜேசன் பொர்னும் டீக்கடையில் சந்திப்பு, இறுதி மூச்சை வெட்டும் த்ரில்லர் என்ற விளம்பர வாசகங்கள் எல்லாம் இத்திரைப்படத்தை வரையறுப்பதற்கு சற்று மிகையானவையாகவே எனக்கு தோன்றுகிறது. மார்ட்டினின் அடையாளத்தை கண்டுபிடிக்க உதவும் துப்பறிவாளன் ஜுர்கன், மார்ட்டின் நண்பனான பேராசிரியர் ராட்னி கோல் ஆகிய பாத்திரங்கள் சிறிதளவு நேரம் தோன்றினாலும் மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஜூர்கன் பாத்திரத்தில் தோன்றும் நடிகர் Bruno Ganz ன் நடிப்பு கதாநாயகனின் நடிப்பைவிட என்னை மிகவும் கவர்ந்தது. ஜூர்கனும், ராட்னி கோலும் சந்திக்கும் அக்காட்சி ஜான் லுகாரின் உளவு நாவல் ஒன்றை படிப்பதுபோல் ஒரு உணர்வை எனக்கு வழங்கியது. திரைப்படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த காட்சி அதுதான் என்பேன்.

வழமை போலவே நாயகனுடன் துணைக்கு ஓடும் நாயகியாக பாத்திரமேற்றிருக்கிறார் நடிகை Diane Kruger. ஆனால் தன் பரிதாபமான வாழ்க்கை நிலையை மாற்றிக் கொள்வதற்கு 4000 யூரோக்களிற்காக பாடுபட்டு உழைக்கும் அவரின் பாத்திரப் படைப்பு மென்மையாக மனதை தொட்டு விடுகிறது. லியம் நீசனின், கம்பீரத்தையும் அட்டகாசமான நடிப்பையும் எதிர்பார்த்து சென்ற எனக்கு, குழப்பமுற்று, களைத்து, கலங்கிய நிலையில் ஓடும் லியம் நீசனையே படத்தின் பெரும் பகுதியிலும் காண முடிந்தது. நான் எதிர்பார்த்த லியம் நீசன் எழுந்து வந்து டாய்ய்ய்ய்! எல்லாத்தையும் நான் மறக்கலைடா… என்று டயலாக் சொல்லி மரண அடி அடித்த ஐந்து நிமிடத்திற்குள் திரைப்படம் நிறைவு பெற்று விடுகிறது. அவ்வகையில் இது ஒரு ஏமாற்றமே. போஸ்டரில் அசத்திக் கொண்டிருக்கும் லியம் நீசன் படத்தில் இல்லை!!! ஒளிப்பதிவாளர் கலாச்சாரக் காவலர் கழகத் தலைவரா என்று ஐயம் எழ வைக்கும் வகையில் முக்கிய காட்சிகளில் முக்கிய பகுதிகளை படம் பிடிக்காது தொண்டாற்றியிருக்கிறார். இது ஒரு பயங்கரமான ஏமாற்றமாகும். மேலும் முக்கியமான மர்மம் விடுபட்ட பின், இப்படியான ஒரு மார்ட்டின் ஹாரிஸ் பாத்திரத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய அதிரடி ஆக்‌ஷன் தீனியின் பற்றாக்குறை குறித்த ஆதங்கமும் எழவே செய்கிறது. அதிர்ச்சியால் மறைந்த நினைவுகள் சில அதிர்ச்சியாலேயே மீண்டும் நினைவிற்கு வருவது கறுப்பு வெள்ளை தமிழ் படங்களிலேயே காட்டப்பட்டிருக்கிறது.

படத்தின் அந்த முக்கியமான திருப்பத்தை அற்புதமாக இறுதிவரை கொண்டு வந்து சேர்த்த இயக்குனர் திறமைசாலிதான். அதேபோல் உச்சக் கட்டக் காட்சிகளிலும் ஒரு வேகம் தொற்றிக் கொள்கிறது. அந்த தருணங்கள் ஒரு நிறைவான திரில்லரிற்குரிய உணர்வுகளை திரைக்கு அப்பால் கடத்துவதில் வெற்றி பெறுகின்றன. அவற்றிற்காகவேனும் இப்படத்தை பார்த்து வைக்கலாம். அதிகம் எதிர்பார்க்காமல், குறிப்பாக லியம் நீசனிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காமல் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் Unknown க்கும் இடமுண்டு. [**]

ட்ரெயிலர்

Sunday, March 6, 2011

காத்திருந்த பாறை


மலையேறுவதில் அதிக விருப்பம் கொண்ட இளைஞனான Aron Ralston, வார இறுதி ஒன்றை மலைக்குன்றுகளும், கணவாய்களும் பெருகிய இயற்கைப் பூங்கா ஒன்றில் கழிக்க செல்கிறான். அப்பிரதேசத்தில் மிகுந்த உற்சாகத்துடன் மலையேறி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஏரோன், இரு குன்றுகளிற்கிடையிலுள்ள பிளவொன்றினுள் முன்னேற முயலும்போது ஒரு பாறை சரிந்து அவன் கரத்தின் மீது வீழ்ந்து இறுகிக்கொள்கிறது. ஏரோன் எங்கு சென்றான் என்பதை அவனிற்கு நெருங்கியவர்கள் யாரும் அறிந்திராத நிலையில், அவன் உதவிக்கு வர எவருமே இல்லை எனும் இக்கட்டான சூழலில், பாறையில் அகப்பட்ட தன் கரத்தை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஏரோன்….

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், சர்ச்சையையும் உருவாக்குவதில் வெற்றி கண்ட Slumdog Millionaire திரைப்படத்தின் இயக்குனரான Danny Boyle அவர்களின் சமீபத்திய படைப்புதான் 127 Hours. 2003ல் ஏரோன் ரால்ஸ்டன் எனும் மலையேறியின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு நூலைத் தழுவி இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்லாம்டாக் மில்லியனெர் திரைப்படத்தில், புதிர்க் கேள்விகளுடன் நாயகன் ஜமால் மலிக் நிகழ்த்திடும் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் களித்திட, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் ஒரு தேசமும், அரங்கொன்றில் நாயகனை சூழ அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டமும் உன்னிப்புடன் தயாராக இருக்கும். அவனது ஒவ்வொரு பதிலுக்கும் கிடைக்கும் கரகோஷங்களும், ஆரவாரங்களும் அவனை உற்சாகப்படுத்தும். 127 Hours நாயகன் ஏரோனின் நிலையோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானது.

சிக்கிக் கொண்ட பிளவையே அரங்கமாக கொண்டு, தன் கரத்தை பாறையிலிருந்து விடுவிப்பதற்காக தனியனாக அவன் அரங்கேற்றும் அவல நாடகத்தை கைதட்டி ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ, விசிலடிக்கவோ அங்கு யாருமில்லை. அவன் இருத்தல் குறித்த எந்த அக்கறையும் இன்றி உலகம் தன் பாட்டிற்கு இயங்கிச் செல்வதுபோல் ஒரு காகம் அவன் மாட்டிக் கொண்ட பிளவின் மேலாக பறந்து செல்கிறது. தன் அவல நாடகத்தின் அறிவிப்பாளனாக, நாயகனாக, பார்வையாளனாக, ஒளிப்-பதிவாளனாக அவனே இருந்தாக வேண்டிய நிலை. திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் ஏரோன் இதனை நிகழ்த்தியே காட்டுகிறான். மனதைக் கலங்க வைக்கும் தருணங்களில் ஒன்றாக அது திரைப்படத்தில் இடம்பிடிக்கிறது. ஐந்து நாளிற்கு மேலாக பிளவினுள் இடம்பெறும் ஏரோனின் வாழ்வா சாவா எனும் போராட்டத்தையே எம்மை பார்வையாளர்களாக்கி திரையில் வடிக்கிறார் இயக்குனர் டேனி பாய்ல்.

ஒரு பிளவிற்குள், ஒரு மனிதனை மட்டுமே வைத்து ஐந்து நாட்களிற்கு ஒரு கதையை நகர்த்துவது என்பது எளிதான ஒன்றல்ல. திரைப்படத்தின் ஆரம்பத்தில் மலைக்குன்றுகளை நோக்கி ஏரோன் பயணப்படும் போதும், மலைக்குன்றுகள், கணவாய்கள், ரகசிய நீர்நிலைகள் என்று அவன் அலைந்து மகிழும் கணங்களிலும் திரைப்படத்தில் இளமையின் தீவிரமான உற்சாகம் வேகமாக பீறிட்டு ஓடுகிறது. அதேபோல் ஒரு முக்கிய முடிவை எடுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன் கரத்தை விடுவிக்க ஏரோன் முனையும் உச்சக்கட்டக் காட்சிகளில் எம் கரத்திலேயே கத்தி புகுந்து அறுக்கும் உணர்வின் தாக்கத்தை எம்மால் எட்டிவிட முடிகிறது. அக்காட்சிகளின் அப்பட்டமான குரூரம் அரங்க இருக்கைகளில் ரசிகனை அசெளகரியத்துடன் நெளிய வைக்கிறது.

127-heures-2011-19393-667242516ஆரம்பக் காட்சிகளின் உற்சாகம், உச்சக்கட்ட அதிர்ச்சி எனும் இரு புள்ளிகளிற்கிடையில் ஏரோன் பிளவிற்குள் கழிக்கும் மணித்துளிகளை அவன் கடந்த காலம் குறித்த நினைவலைகள் மூலமும், விடுதலையை வேண்டும் மனம் இயற்றும் இனிய கனவுகள் வழியேயும் நிரப்புகிறார் இயக்குனர். தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் காதலி என ஏரோனின் மனம் கடந்த காலத்தை அசைபோட்டு மீள்கிறது. சிறைப்பட்ட மனிதனின் ஏக்கம்போல் இச்சைகள் குறித்த கனவுகள் அவனை மூழ்கடிக்கின்றன. தன் உறவுகள் தன் மீது காட்டும் அன்பையும், அக்கறையையும் தன் அதீதமான தன்னம்பிக்கையால் உதாசீனப்படுத்தும் ஒருவனாகவே இங்கு ஏரோன் உருப்பெறுகிறான். பிறரின் உதவிகள் இன்றி தன்னால் தனித்து எதையும் சாதிக்க முடியும் என்ற அவன் மனப்பான்மையையும், அவன் அதீத தன்னம்பிக்கையையும் காலம் முதல் அவனிற்காக காத்திருந்து அவன் கரத்தின் மேல் விழும் அப்பாறை சப்பளித்து விடுகிறது.

தான் வாழும் உலகின் உறவுகளை தவிர்த்து தனியனாக வாழ விரும்பும் ஏரோன், மலைகள் உள்ள பூங்காவில் வழி தவறி விட்ட பெண்களிற்கு தானே முன் சென்று வழிகாட்டுகிறான். அங்கு அவன் கழிக்கும் பொழுதுகளில் அவன் வேறு மனிதனாக இருக்கிறான். மலையும் மலை சார்ந்த இடமும் அவன் இறுக்கத்தை கட்டவிழ்க்கிறது. அவனை பிறிதொரு இனிதான மனநிலைக்கு தள்ளுகிறது. அவனை விடுவிக்கிறது. அவனை சிறைப்பிடிக்கிறது.

ஏரோனின் நினைவலைகளும், கனவுகளும் பார்வையாளனை கட்டிப்போட வைப்பதில் தகுந்த விதத்தில் செயலாற்றாது போக இப்பகுதியில் தன் இயக்கத்தில் இறங்கிவிடுகிறார் இயக்குனர் டேனி பாய்ல். ஏரோனின் கடந்தகால மீட்டல்கள் சலிப்பை பிளவினூடு மெதுவாக கடத்தி வருகின்றன. அவ்வகையில் பாதிப் படத்தினையே இயக்குனாரால் திறமையாக பரிமாறக் கூடியிருக்கிறது.

உற்சாகாமான ஆரம்பக் காட்சிகளில் ரகுமானின் இசை அதிரடிக்கிறது. குறிப்பாக மலைக் குன்றுகளிற்கு ஏரோன் கிளம்பிச் செல்லும் வேளையில் ஒலிக்கும் பாடலும் இசையும் உணர்வுகளை அதிர வைக்கின்றன. ஆனால் பாறையில் தன் கரத்தை மாட்டிக்கொண்டு ஒரு மனிதன் போராடிச் சோர்ந்து கிடக்கிறான், ஒரு நாளில் குறுகிய நேரத்திற்கு மட்டுமே அவன் மாட்டியிருக்கும் பிளவிற்குள் சூரியன் தன் கதிர்களால் வருடிச் செல்லும். அந்த வேளை வருகிறது. சூரியக் கதிர்கள் மென் விரல்களென அவன் மேல் வீழ்கிறது. அந்த ஸ்பரிசம் அந்த மனிதனின் பால்ய கால நினைவுகளைத் தூண்டுகிறது. தன் தந்தையுடன் அவன் பார்த்து ரசித்த சூரிய உதயங்களை அவன் மனம் மீட்டெடுக்கிறது. இந்த தருணத்தில் பின்னனி இசை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாது அந்தக் காட்சிகள் தரும் உணர்வுகளிலிருந்து பார்வையாளனை விலத்தி எடுத்து செல்வதாகவே ரகுமானின் இசை இருக்கிறது. ரகுமானின் இசை மிகச் சிறப்பாக செயற்பட்ட திரைப்படமாக இது இல்லை என்பதுதான் என் கருத்து.

படத்தின் மிகச் சிறந்த திறமை எதுவெனில், அது ஏரோன் வேடத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் James Franco தான். எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சிலந்தி மனிதனின் வைரி. வீடியோ கமெராவில் தானே நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி பதிவு செய்யும் காட்சி, உச்சக்கட்டக் காட்சி என்பவற்றில் மனங்களை இளக வைத்து விடுகிறார் ஜேம்ஸ் பிராங்கோ. அவர் திறமையைக் காட்ட கிடைத்த வாய்பை தவறாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளம் நடிகர்.

ஏரோன் அகப்பட்ட பிளவினுள் பார்வையாளனை இறக்கி, அவனை ஏரோன் இடத்தில் நிறுத்துவதே என் நோக்கம் என்றிருக்கிறார் டேனி பாய்ல். இந்த நோக்கத்தில் அவரிற்கு கிடைத்திருப்பது முழுமையான ஒரு வெற்றியல்ல. விலங்குகளிற்கு பொறி வைக்கப்படும் சமயங்களில் அவற்றில் மாட்டிக் கொள்ளும் விலங்குகள் அதிலிருந்து தம்மை விடுவிக்க பொறியில் மாட்டிய தம் அவயவங்களை அறுத்துக்கொண்டு தப்புவதுண்டு. பொறிகளில் வாலோ, ஒரு காலோ மட்டும் எஞ்சியிருக்கும். அவ்விலங்குகளின் விடுதலையின் விலையாக, தழும்பாக அந்த அவயவங்கள் மாறிப்போகும். ஏரோனின் கரம் அவனை பிரபலமாக்கியது, அந்தக் கரம் இன்றும்கூட அவன் விடுதலையினதும், தொடரும் வாழ்வினதும் அடையாளமாக, மலையும் மலை சார்ந்த இடங்களிற்கும் அவனுடன் சலிக்காது துணை சென்று கொண்டேயிருக்கிறது. அவன் மறைவின் பின்பாகக்கூட அந்தக் கரத்திற்காகவே அவன் பெரிதும் நினைவுகூறப்படுவனாக இருப்பான். [**]

ட்ரெய்லர்

Sunday, February 27, 2011

தில்


பதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..

ஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.

நீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.

true-grit-2011-18464-2069476055டாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.

கோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர்! பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ரொஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]

ட்ரெயிலர்

Saturday, February 26, 2011

வானகப் பருந்து


sh1பிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.

1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்தியப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.

கிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…

sh2கிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.

ஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.

sh3ஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.

செவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.

sh4செவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள்ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.

தொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]

Wednesday, February 23, 2011

உடும்புக் குஞ்சானின் நுனி


குத்து டைம்ஸ் ஆசிரியரின் விகாரமான மனக்கோலத்தினை என் பக்கங்களிற்கு அவர் அளித்திருக்கும் தலைப்பிலிருந்தே வாசகர்கள் தெளிந்துணர்ந்திட முடியும். இத்தரைக்கும் மேன்மைதகு திரு உடும்புக் குஞ்சான் அவர்களின் க்ரொனிக்கல்ஸ் என்றே தலைப்பிடுமாறு அவரை நான் வேண்டிக் கொண்டிருந்தேன் [பார்க்க படம்]. வழமைபோலவே ஒரு ஏளனச் சிரிப்பை உதிர்த்த அவர், நீ எழுதப் போகும் பக்கங்களிற்கு நான் வைக்கும் தலைப்பு இதுதான் என்று விட்டார். அதிகம் பேசினால் அந்த தலைப்பிலிருந்து உடும்பை நீக்கி விடுவேன் எனவும் எச்சரித்தார். அவர் சொல்லிற்கு மறுபேச்சு இல்லை என்பதால் உடும்புக் குஞ்சானின் நுனி [க்ரொனிக்கல்ஸ்] துடிக்க வேண்டிய வேளைகளில் துடித்து அடங்கும் என்பதை வாசக அன்பர்களிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற ஞாயிறு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சூரியன், கனரக வாகனப் புகையினுள் மறைந்து போன பருவ சிட்டின் முகம் போல் போக்கு காட்டினான். உடும்பு மார்க் மழைக்கோட்டினுடாக என் வால் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. வானில் இருந்து சிந்திய சில துளிகள் வாலை ஸ்பரிசித்து கிச்சு கிச்சு மூட்டின. நான் என் தொப்பியை சரி செய்து கொண்டேன். அப்படியிருந்தும் தூறல் முகத்தில் அடித்தது ஒரு வித கடுப்பை அளித்தது. தெரு, சிட்டுக்கள் நடமாட்டம் இல்லாது கல்லறைபோல் இருந்தது. நான் என் நீண்ட நாக்கை ஒரு முறை நீட்டி உள்ளிழுத்தேன். கெட்ட பழக்கம். சிறுவயது முதல் இருந்தே இருக்கிறது. விட முடியவில்லை. வழமைபோலவே காக்காநரி கஃபேயை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

காக்காநரி கஃபேயில் வழமையான கூட்டம். நரியார் கல்லாவில் உட்கார்ந்திருந்தார். காகம் கல்லாவின் பின்பாக ஊன்றியிருந்த தடியின் உயரத்தில் அமர்ந்திருந்து கடையைக் கண்காணித்துக் கொண்டிருந்தது. வயதான பாட்டி ஒருவர் வடை சுட்டுக் கொண்டிருக்கும் போட்டோ சுவரில் தொங்கியது. நான் கஃபேக்குள் நுழைந்தபோது தடியில் இருந்த காகம், அதன் கரகரத்த குரலில் காலை வணக்கம் உடும்புக் குஞ்சான் என்று தன் தலையை சரித்தவாறே வரவேற்றது. கல்லாவிலிருந்த நரியின் வால் உஷாராகி அடங்க, அது என்னைப் பார்த்து நரிச் சிரிப்பு சிரித்தது. நலமாக இருக்கிறீர்களா உடும்புக் குஞ்சான் என்றார் நரியார். ஏதோ போகுது என்றேன் நான்.

கல்லாவிற்கு அருகில் இருந்த மேசையில் நான் போய் அமர்ந்து கொண்டேன். இதில் ஒரு காரணம் இருக்கிறது. காக்காநரி கஃபேயில் பரிமாறும் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் குரங்குகள் ஆவார்கள். முதலாளிகளின் கண்களிற்கு அகப்படாது குரங்கு சேஷ்டைகளை காட்டுவதில் எத்தர்கள். ஆனால் நல்லவர்கள். எனக்கு நாக்கு. அவர்களிற்கு சேஷ்டை. பிறக்கும்போதே ஒட்டிக் கொண்ட பண்புகள். வெட்டி எறிந்தால் இயல்பு குலையும். நான் நீண்ட நாள் வாடிக்கையாளன் என்பதால் சேஷ்டைகளின் அளவும் கவனிப்பின் அளவிற்கு இருக்கும். கல்லாவின் அருகில் இருந்தால் இந்த சேஷ்டைகளின் அளவு குறைவாக இருக்கும்.

jewish-connection-16282-459425600நான் மேசையில் அமர்ந்ததைக் கண்ட கிங்காங், என் மேசையை நெருங்கினான். வாங்க குஞ்சான் என்றான். சொன்னேன் இல்லையா, சேஷ்டைகள் இப்படித்தான் ஆரம்பமாகும். நரியார் தொண்டையைச் செருமினார். சூடாக இறால் வடை இருக்கிறது, சாப்பிடுகிறீர்களா என்றான் கிங்காங். இரண்டு இறால் வடை, ஒரு இஞ்சி தேனீர், தொட்டுக் கொள்ள மிளகாய் சட்னி என்றேன் நான். எனக்கு அருகில் இருந்த மேசையில் புத்தகப் புழுவார் அமர்ந்திருந்தார். சந்திர வட்டக் கண்ணாடி, நீல ஆமைக் கழுத்து ஸ்வெட்டர், காக்கி ஜீன்ஸ் என கலக்கலாக இருந்தார். மேசையில் இருந்த பேப்பர் தோசை ஆறிக் கொண்டிருக்க புத்தகமொன்றில் ஆர்வமாக மூழ்கியிருந்தார்.

நான் என் தலையை சற்று குனிந்து புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன். கூளமாதாரி என்றிருந்தது. என் அசைவை அவதானித்து விட்ட புத்தகப் புழுவார், என்ன உடும்புக் குஞ்சான், அமைதியாக வந்திருக்கிறீர்கள் எனக் கேட்க, நான் தலையை அசைத்தவாறே அவர் கையிலிருந்த புத்தகத்தை சுட்டினேன். இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன், ஆடு மேய்க்கும் சிறுவனான கூளையன் குறித்த முதல் அத்தியாயத்திலேயே மனதை கனக்க செய்துவிடுகிறார் பெருமாள்முருகன், படித்து விட்டு உங்களுடன் முழுதும் பகிர்ந்து கொள்கிறேன் என்றார். சொன்ன மறுகணமே புத்தகத்தினுள் மீண்டும் நுழைந்து விட்டார். கொடுத்து வைத்த பிறவி.

நரியார் மீண்டும் செருமினார். சில சமயங்களில் உணர்ச்சிகளை நரியாரால் கட்டுப்படுத்த முடியாது போகும், அப்போது செருமல் ஊளையாகி விடும். வாடிக்கையாளர்கள் இதற்கு பழக்கப்பட்டு விட்டதால் சிக்கல்கள் ஏதுமில்லை. உடும்புக் குஞ்சான், Holy Rollers எனும் திரைப்படத்தைப் பார்த்தேன் என ஆரம்பித்தார் நரியார். கிங்காங் நான் கேட்டவற்றை மேசையில் கொண்டு வந்து வைத்தான். நான் நன்றி கிங்காங் என்றேன். ஆ, பன்றி அதோ அந்த மூலையில் தன் நண்பியுடன் கொஞ்சிக் கொண்டு இருக்கிறார் என்றவாறே நகர்ந்தான் கிங்காங். இதை அவன் பன்றியாரிற்கும் கேட்கும் வகையில் கூறியதால் பன்றியார் கிங்காங்கை ஒரு முறைப்பு முறைத்தார். பின் தன் நண்பியுடன் இழைந்து கொண்டார்.

jewish-connection-2011-16282-573290385மிகவும் ஆச்சாரமான யூதக் குடும்பத்து பையன் சாம் கோல்ட். தனது தந்தையின் துணிக்கடையில் பணிபுரிந்தவாறே படிப்பையும் தொடர்கிறான். சாமின் தந்தைக்கு அவனை யூத மதகுருவாக ஆக்கிப் பார்க்க வேண்டும் என ஆசை. சாமிற்கோ வேறு தொழில் செய்து நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என ஆசை. சாமின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. மக்கர் பண்ணும் காஸ் அடுப்புடன் மல்லுக் கட்டி வாழும் குடும்பம் அது. சாமின் அயலவனான யோசெப், பணம் சம்பாதிக்க ஒரு வழி இருக்கிறது என சாமிடம் கூறுகிறான். ஆம்ஸ்டர்டாமிலிருந்து சில மருந்துகளை அமெரிக்காவிற்கு எடுத்து வந்தால் அதற்கு நல்ல பணம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கிறான். சாமும் இதற்கு சம்மதிக்கிறான். மருந்துகளையும் ஆம்ஸ்டர்டாமிலிருந்து எடுத்து வருகிறான். ஆனால் அம்மருந்துகள் Ecstasy எனப்படும் மனதை இலகுவாக்கும் ஒரு வகை இன்ப போதை மாத்திரைகள் என்பதை அவன் அறிந்து கொள்கிறான். முதலில் தயங்கினாலும் கிடைக்கும் பணத்திற்காக எக்ஸ்டசி வில்லைகளை ரகசியமாக அமெரிக்காவினுள் கடத்தி வருபவனாக தொடர்ந்து செயற்பட ஆரம்பிக்கிறான் சாம். அவனது வாழ்க்கையில் உருவாகும் மாற்றங்களைதான் Holy Rollers படம் கூறுகிறது. படத்தை Kevin Acsh இயக்கியிருக்கிறார் என்று சொல்லி முடித்து விட்டு திராட்சை வத்தல் ஒன்றை வாயிலிட்டு சுவைக்க ஆரம்பித்தார் நரியார்.

படத்தில் விசேஷமாக ஏதாவது என்றவாறே நான் வடையை சட்னியில் தொட்டுக் கடித்தேன். விசேஷம் என எதுவும் இல்லை. உண்மை நிகழ்வுகளை வைத்தே படத்திற்கான திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். 1996 லிருந்து 1998 க்குள் இப்படியான ஆச்சாரமான யூதக் குடும்பத்து இளைஞர்களை கழுதைகளாக பாவித்து ஒரு மில்லியனிற்கு மேலாக எக்ஸ்டசி வில்லைகளை அக்கடத்தல் கும்பல் கடத்தியிருக்கிறது.

ஆச்சாரமான யூத குடும்பம் ஒன்றின் மீதான பார்வை ஆச்சர்யமூட்டுவதாக இருந்தது. பணம் சம்பாதிக்க ஆசைப்படாத யூதக் குடும்பம் ஒன்றை திரையில் காண்பது ஆச்சர்யமான ஒன்றுதானே. நரியார் கண்ணை சிமிட்டியவாறே தொடர்ந்தார். ஆச்சாரம் மிகுந்த யூதக் குடும்பங்களில் தம் பெண்களை திருமணம் செய்யப் போபவர்கள் குறித்த கண்டிப்பான விசாரணை இருப்பது கூட வியப்பான ஒன்றுதான். சாமிற்கு பெண் தர மறுக்கும் யூதக் குடும்பம், சாமின் நிழலான நடவடிக்கைகள் அறியப் பெற்றவுடன் அவனை நல்ல வழிக்கு கொண்டு வரமுயற்சிக்கும் அவன் நண்பன் மற்றும் யூத மத குரு, அவனை தன் சமூகத்திலிருந்து விரட்டி விட முன் வரும் பாசம் மிகுந்த தந்தை என ஒரு ஆச்சாரமான யூத சமூகத்தின் ஒற்றுமையின் முக்கியத்துவம் படத்தில் காட்டப்படுகிறது. சாமிற்கும் அவன் தந்தைக்குமிடையிலான காட்சிகள் நெகிழ வைப்பவை. Social Networkல் மார்க் ஸுக்கர்பெர்க்காக தோன்றிய Jesse Eisenberg தான் சாமாக நடித்திருக்கிறார். அருமையாக நடித்திருக்கிறார். ஆனால் படம் மிகையான காட்சிகள் ஏதுமின்றி மிகவும் மெதுவாகவே நகர்கிறது. ஒன்றரை மணி நேரம் போனது மூன்று மணிநேரம் போல் பிரமையை தந்தது. பெரும் ஸ்டூடியோக்களின் ஆதரவின்றி சிறு தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படம் ஆச்சர்யங்கள் குறைந்த ஒரு சிறுகதைபோலவே இருக்கிறது என சொல்லி முடித்த நரியார், பன்றியாரின் பில்லிற்கு காசு வாங்கி மீதியை அளித்தார்.

மீதியை வாங்கிக் கொண்டே கஃபேயை விட்டு தன் நண்பியுடன் மிகையாக இழைந்தவாறே வெளியேறினார் பன்றியார். எனக்கு நாக்குடன், பெருமூச்சு ஒன்றும் வெளியில் வந்தது. நரியார் என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சிரித்தார். தடியில் அமர்ந்திருந்த காகம், பாண்டிச்சேரியிலிருந்து என் நண்பர் இந்த இசையைக் கேட்க சொன்னார் நீயும் கேட்டுப் பார் என்றவாறே அருகில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தியது. குழலிசை, பியானோவிசை, வயலினிசை என வழிய ஆரம்பித்த இசையானது, பூட்டிய அறையில் போடப்பட்ட அகிற் புகைபோல் படர ஆரம்பித்தது. அருமையாக இருக்கிறதே, இந்தக் கரிய காலைகூட ஒருவித அழகை இந்த இசையால் பெறுகிறதே, இதனை அமைத்தவர் யார் என்று காக்கையாரிடம் கேட்டேன். கிரேக்க நாட்டை சேர்ந்த Yanni எனும் கலைஞன். இது நைட்டிங்கேல் எனும் நறுக்கு. இணையத்தில் இவர் இசை கிடைக்கிறது கேட்டு ரசி என்றார் காக்கையார்.

சற்று நேரம் அந்தக் இசைக் கலைஞனின் இசையை கேட்டு ரசித்தேன். பின் கஃபேயிலிருந்து வெளியேறினேன். இசை எனக்குள் வந்து விட்டாற்போல் ஒரு உணர்வு. இந்த நாள் அழகுடன் முடியும் என்று உணர்ந்தேன். என்னைக் கடந்து சென்ற சுமாரான சிட்டுக்கள்கூட அழகாக தெரிந்தார்கள். நிமிர்ந்து வானத்தைப் பார்த்தேன் அழுக்கான கிழிந்த திரைச்சீலைக்கு பின்பாக நின்று புன்னகைக்கும் சிட்டுப்போல் சூரியன் தெரிந்தான்.

குத்து டைம்ஸிற்காக உடும்புக் குஞ்சான்

Saturday, February 19, 2011

அன்னமாகி நின்றாள்


நீயூயார்க் நகர பாலே குழுவில் நடனம் ஆடும் பெண்களில் ஒருவளாக நினா இருக்கிறாள். அக்குழுவின் கலையரங்கில் புதிய நிகழ்ச்சி ஒன்றை வழங்க விரும்பும் பாலே நடன இயக்குனன் தாமஸ் அதற்காக Swan Lake எனும் படைப்பை தேர்ந்தெடுக்கிறான். அந்த படைப்பின் பிராதான வேடத்தை ஏற்க தாமஸ், நினாவை தெரிவு செய்கிறான். அரிதான இந்த வாய்பிற்காக காத்திருந்த நினாவில் இந்த பிரதான பாத்திரம் சில மாற்றங்களை உருவாக்க ஆரம்பிக்கிறது…

தம் வாழ்க்கையையே கலைக்காக ஒப்புக்கொடுத்து அந்தக் கலையாகவே உருமாறிடும் கலைஞர்களை நாம் கலைத்துறைகளில் காணமுடியும். கண்டிப்பான ஒழுக்கமும், கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நிறைந்ததாகவும், உலகின் இன்பங்களை தம் கலைக்காக தியாகம் செய்ததாகவும் அவர்கள் வாழ்க்கை அமைந்திருக்கும். பாலே நடனக்காரி நினாவும் அவ்வகையான கலைஞர்கள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்வதற்கு தகுதியான ஒருத்தியாகவே தன் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள்.

சிறு வயது முதலே பாலே நடனத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழும் நினா, தான் ஒரு நட்சத்திரமாக மிளிரும் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள். கடுமையான பயிற்சிகளும், உழைப்பும் நிறைந்த அவள் நடன வாழ்க்கையின் ஒரு திருப்பமாக Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் அதிர்ஷ்டம் அவளை வந்தடைகிறது.

சாதாரண ஒரு இளம் பெண்ணிற்குரிய உலக வாழ்வை முற்றிலுமாக தவிர்த்து, நடனப் பயிற்சிகள், வீடு, கண்டிப்பான உணவுமுறை என தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள் நினா. நினாவின் தாய் அவளை இன்னமும் ஒரு சிறுமிபோலவே கவனித்து வருகிறாள். நினாவின் மேல் மிகையான அக்கறை கொண்டவளாகவும் இதன் வழியாக ஒரு வகையில் நினாவின் மேல் அழுத்தங்களை பிரயோகிப்பவளாகவும் அவள் இருக்கிறாள்.

ஒரு பாலே நடனத்தின் பிரதான பாத்திரத்தை தமதாக்கி கொள்வதற்கு, நடனம் ஆடும் பெண்கள் மத்தியில் பெருத்த ஆர்வமும், போட்டியும் எப்போதும் இருந்தே வருகிறது. இந்நிலையில் அந்த வாய்ப்பு நினாவிற்கு எதிர்பாராத விதத்தில் கிடைக்கையில் அதானல் அவள் பூரித்துப் போய்விடுகிறாள். தனக்கு கிடைத்த சந்தர்பத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுவதற்காக அவள் தன் பயிற்சிகளை கடுமையாக்க ஆரம்பிக்கிறாள்.

Swan Lake ல் பிரதான பாத்திரத்தை ஏற்கும் நர்த்தகி, இரு அன்னங்களின் வேடங்களை மேடையில் ஆடியாக வேண்டும். தூய்மையும், சாந்தமும், அழகும் பொருந்திய வெள்ளை அன்னத்தின் பாத்திரத்தை எந்த சிரமமும் இல்லாமல் ஆடிவிடும் நினாவிற்கு, தந்திரமும், கவர்ச்சியும், சூதும் நிறைந்த கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை அதற்கேற்ற உணர்வுகளுடன் நிறைவாக ஆட முடியாமல் இருக்கிறது. இந்தக் கறுப்பு அன்னத்தின் பாத்திரத்தை தன் ஆட்டத் திறமையால் பூரணமான ஒன்றாக்க கடுமையாக உழைக்கும் நினாவின் ஆளுமையில் கறுப்பு அன்னம் தன் இறகுகளை பிறப்பிக்க ஆரம்பிக்கிறது. இந்த ஆளுமைக்கும், நிஜ நினாவிற்குமான போராட்டத்தையும், அது அவள் வாழ்க்கை முறையில் இட்டு வரும் மாற்றங்களையும், ஓய்வற்ற இப்போராட்டம் வழி தன் கலையை பூரணமாக்குவதற்கு நினா தரும் விலை என்ன என்பதையும் அதிர வைக்கும் விதத்தில் Black Swan ல் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Darren Aronofsky.

black-swan-2011-14580-559664933நினா பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகை Natalie Portman, இதுவரை அவர் திரையில் ஏற்ற வேடங்களில் மிகவும் குழப்பமான, தீவிரமான, உடல் மற்றும் உள ரீதியாக அவரை அயர்ச்சியுற செய்துவிடும் ஒரு பாத்திரத்தை, ரசிகர்கள் வியப்படைய வைக்கும் அளவு செய்து காட்டியிருக்கிறார். அவரின் உழைப்பு திரையில் தனித்து தெரிகிறது. தன் தாய், நடன இயக்குனன் தாமஸ், தனக்கு கிடைத்திருக்கும் பிரதான பாத்திரத்தை தட்டிச் செல்லும் திறமை படைத்த நடனக்காரி லில்லி ஆகியோர் வழியாக அவள் பெறும் அழுத்தங்களுடன், நிஜத்திற்கும், கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத சூழல் ஒன்றில் அவள் மாட்டிக் கொண்டு, தன் உண்மையான எதிரி யார் என்பதை அடையாளம் காணவியலாது, தன் அடையாளத்தின் எல்லைகளை வரையறுக்கும் சுயாதீனம் இழந்து, தன் லட்சியக் கனவிற்காக நினா ஓடும் ஓட்டம் எம்மை மூச்சு வாங்க வைக்கிறது. அபார சக்தியை செலவழித்து நினா பாத்திரத்தை நிறைவான ஒன்றாக ஆக்கியிருக்கிறார் நத்தாலி போர்ட்மேன். அப்பாவியாக இருந்த ஒரு இளம்பெண் எவ்வாறு கரிய அன்னமெனும் இருளின் சுழிக்குள் தன் கலையால் அமிழ்ந்து போகிறாள் என்பதை நினாவின் பாத்திரம் சொல்லவெண்ணா வலிகளுடன் ஆடித்தீர்க்கிறது.

படம் ஆரம்பித்தது முதற் கொண்டே, நினாவின் பிறழ்வுகளிற்குள்ளும், வேதனைகளிற்குள்ளும், அச்சங்களிற்குள்ளும், அரிதாக கிடைக்கும் அவள் புன்னகைகளிற்குள்ளும் பார்வையாளனை தன் இயக்கத்தால் இழுத்து சென்றுவிடுகிறார் இயக்குனர். திரையில் நினா ஒவ்வொரு முறையும் குழப்பமடையும் நிலையிலும் பார்வையாளனையும் அக்குழப்பத்தில் முழுதாக பங்கேற்க செய்து விடுகிறது டாரென் அரொனொஃப்ஸ்கியின் நேர்த்தியான இயக்கம். நினாவின் ஆளுமையில் ஏற்படும் மாற்றங்களை படிப்படியாக செறிவாக்கி, அதன் உச்சத்தில் அந்த ஆளுமையின் தீவிர வெளிப்பாட்டை அதன் முழு சக்தியுடனும், வெறியுடனும் திரைப்படுத்துவதில் அபார வெற்றி கண்டிருக்கிறார் டாரென். நினாவின் அப்பாவித்தன்மை தேயத் தேய அவளுள் கறுப்பு அன்னம் பூரணமாகிக் கொண்டு வருவதை தன் பாணியில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அவர். நினாவின் நகங்கள் வெட்டப்படும் காட்சிகளில் எம் கால் விரல்கள் கூசுவது அவரின் அழுத்தம் மிகுந்த இயக்கத்திற்கு சான்று. நடன இயக்குனன் தாமஸாக வேடமேற்றிருக்கும் Vincent Cassel தன் வேடத்தை சிறப்பாக செய்திருக்கிறார் ஆனால் நத்தாலி போர்ட்மேனின் பாத்திரம் ஏனைய எல்லா நடிகர்களையும், அவர்களின் திறமைகளையும் இரக்கமின்றி விழுங்கிப் பசியாறுகிறது.

பாலே நடனக்காட்சிகளில் கமெரா சுற்றி, சுழன்று, வளைந்து, அதுவும் ஒரு பாலே நடனக் கலைஞனாகிவிடுகிறது. திரையில் ஒலிக்கும் பிண்ணனி இசை, இருளையும், அச்சத்தையும், வேதனையையும் மனதில் கூட்டிச் செல்கிறது. உச்சக்கட்டக் காட்சியில் நத்தாலி போர்ட்மேனின் அபாரமான திறமை, டாரெனின் இயக்கம், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து ஒரு அதிர வைக்கும் முடிவை கண்களை சிமிட்ட முடியாது உறைந்துபோன நிலையில் ரசிக்க வைக்கின்றன. டாரெனின் இயக்கத்தில் வெளியாகிய தீவிரமான படங்களில் Black Swan க்கு முதலிடம் உண்டு. நத்தாலி போர்ட்மெனின் திரையுலக வாழ்வில் கறுப்பு அன்னம் அவரை மலை உச்சிக்கு தள்ளியிருக்கிறது. அதிலிருந்து விழுவதோ இல்லை இன்னமும் மேலே செல்வதோ இனி அவரின் கைகளிலேயே உள்ளது. உக்கிரமான உளவியல் த்ரில்லர் ரசிகர்களையும், டாரென் அரொனொஃப்ஸ்கியின் தீவிர ரசிகர்களையும் கறுப்பு அன்னம் தன் கவர்ச்சி சிறகுகளிற்குள் மயக்கி விடும் மந்திரத்தை கொண்டேயிருக்கிறது. [***]

ட்ரெயிலர்

Saturday, February 12, 2011

கொஞ்சம் திக்குங்கள் என் ராஜாவே


நிர்ப்பந்தங்கள் மிகுந்த சூழ்நிலைகளில் 1936ல் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான் ஆறாம் ஜார்ஜ். சிறுவயது முதலே அவனிற்கு இருக்கும் திக்குவாய் காரணமாக அவன் தாழ்வுணர்வு கொண்டவனாகவும், மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்கு சிரமப்படுபவனாகவும் இருக்கிறான்….

Colin Firth அமைதியான நடிகர்களின் பட்டியலில் சத்தமின்று இடம்பிடித்துக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர். அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகரான Hugh Grant பெற்ற புகழின் அளவுகூட அவரிற்கு கிடைத்திருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதே. மங்கிய ஒளியில் தோன்றி மறையும் ஒரு நிழல் நாயகனாகவே அவரின் திரை வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வெளியாகிய A Single Man எனும் திரைப்படம் காலின் ஃபர்த் எனும் நடிகர் மேல் பல ரசிகர்கள் கொண்டிருந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியது. அத்திரைப்படத்தில் அவரின் அமைதியான பண்பட்ட நடிப்பு பலரின் விழிகளையும் வியப்பால் விரிய வைத்தது. அந்த திரைப்படம் ஒரு தற்செயல் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணமாக வந்து சேர்ந்திருக்கிறது The King's Speech எனும் திரைப்படம். திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Tom Hooper இயக்கியிருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், கண்காட்சி ஒன்றை நிறைவு செய்து உரையாற்ற வேண்டிய இளவரசன் ஆல்பர்ட், தன் திக்குவாய் காரணமாக சில சொற்களிற்கு மேல் அந்த உரையை தொடர முடியாத நிலையில் திணறுவதையும், பெரும் மக்கள் திரளின் முன்பாக அவமானத்தில் அவன் குறுகிப்போவதையும் நாம் காண்கிறோம். காலங்கள் ஒடுகின்றன, ஆறாம் ஜார்ஜ் மன்னனாக முடிசூடிக் கொண்ட நிலையில் இளவரசன் ஆல்பர்ட், ஹிட்லர் தன் நாட்டு மக்கள் முன்னிலையில் ஆவேசமாக உரையாற்றுவதையும், ஹிட்லரின் பேச்சில் மதிமயங்கி கிடக்கும் ஜனத்திரள் அவன் பேச்சினால் உந்தப்பட்டு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பரிப்பதையும் திரையில் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த இரு காட்சிகளின் ஒப்பீடுமே மக்களிடம் உரையாடல் என்பதன் முக்கியத்துவத்தை சிறப்பாக உணர்த்திவிடுகின்றன. தன் பேச்சால் மக்களை கவர முடியாத எவருமே அவர்கள் மனதில் இடம்பிடிப்பதில்லை, மக்களை நெருங்கிவிடுவதில்லை, மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்வதில்லை. மேடைப் பேச்சுக்களை நம்பி ஏமாறி வரும் மக்கள் கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் இளவரசன் ஆல்பர்ட்டின் தலையாய பிரச்சினையோ தன் குறைப்பிரசவ வார்த்தைகளால் பிறரை எதிர்கொள்வது என்பதாக இருக்கிறது.

le-discours-d-un-roi-2011-18825-1562528584 இளவரசன் ஆல்பர்ட் தன் திக்குவாயை குணப்படுத்துவதற்காக பல மருத்துவர்களை அணுகுகிறான், ஆனால் எந்த சிகிச்சையும் அவனிற்கு பலனளிப்பதில்லை. குணப்படுத்த முடியாத இந்தக் குறை அவனை எளிதில் கோபம் கொள்ள வைப்பவனாக மாற்றுகிறது, குடி மக்கள் மத்தியில் அவன் பிரசன்னமாகும் போதெல்லாம் இந்த திக்குவாயால் அவன் தலை குனிய வேண்டியிருக்கிறது. தன் ஆளுமையை அவன் முடக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் மனைவியான எலிசபெத் அவனை எப்போதும் தேற்றுபவளாகவே இருக்கிறாள். அவள் தோள்கள் அவன் குனிந்த தலையை அன்புடன் தாங்கிக் கொள்கின்றன. அவர்கள் தோள்கள் அவர்களிருவரினதும் கண்ணீரையும் தாங்கிக் கொள்ளும் அனுபவத்தில் தேர்ந்திருக்கின்றன. எலிசபெத்தான் Lionel Logue எனும் சாதாரண ஒரு பேச்சுத்திறன் சிகிச்சையாளனிடம் இளவரசன் ஆல்பர்ட்டை அழைத்து செல்கிறாள். தன் கணவனின் இடர் களைவதில் அவள் இடையுறாது முன்னிற்கிறாள்.

லியனல் லோக், ஒரு வெற்றி பெறாத மேடை நடிகன். இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்பதற்காக இளவரசன் ஆல்பர்ட்டிற்கு சிறப்பான சலுகைகளையோ, கவனிப்பையோ அவன் வழங்குவதில்லை. தன்னிடம் சிகிச்சை பெறும் சாதாரண ஒரு நபரைப் போன்றே இளவரசனையும் லியனல் கவனித்துக் கொள்கிறான். ஆனால் லியனல் தன்னிடம் சிகிச்சை பெற வருபவர்களின் மீது அதிக அக்கறை கொள்பவனாக இருக்கிறான். அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காக அவன் சில வேளைகளில் எல்லைகளை மீறவும் தயங்குவதில்லை.

the-king-s-speech-2010-18825-953387368 ஆரம்பத்தில் லியனலின் நிபந்தனைகள் காரணமாக லியனலை தூக்கி எறியும் ஆல்பர்ட் பின் அவன் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் மிகையற்ற நட்பு ஒன்று உருவாகிறது. அந்த நட்பு அதன் எல்லைகளை அறிந்திருக்கிறது. அதற்குரிய பிரிவுகளையும், சந்தேகங்களையும் அது கண்டு மீள்கிறது. லியனல் லோக் பாத்திரத்தில் பண்பட்ட நடிகரான Geoffrey Rush அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு சில்லிங்கிற்காக ஆல்பர்ட்டை சீண்டுவதும், தன் வித்தியாசமான பயிற்சி முறைகளால் ஆல்பர்ட்டை புரட்டி எடுப்பதும், தன் துடுக்குத்தனமான வசனங்களால் இளவரசனை எதிர் கொள்வதுமாக சிறப்பான பாத்திரம் அவரிற்கு. மன்னன் முடிசூடும் இருக்கையில் அவர் அமர்ந்திருந்து ஆல்பர்டை சீண்டி, தூண்டியெழுப்பும் காட்சி கலக்கலாக இருக்கிறது. தனக்கு நன்றி செலுத்த வேண்டுமானால் தன்னை ஒரு Knight ஆக்கலாம் என ஆறாம் ஜார்ஜ்ஜிடம் அவர் அடிக்கும் கிண்டல், அக்மார்க் ஆங்கிலேயக் கிண்டல்.

திக்குவாய் குறைபாட்டால் தாழ்வுணர்வு கொண்ட ஆல்பர்ட்டை, தன் பயிற்சிகள் மூலம் அவன் அகத்துடனே மோதச் செய்கிறான் லியனல். தன் மீது நமிக்கையிழந்திருந்த ஆல்பர்ட் மெதுமெதுவாக தன்னம்பிக்கை பெற ஆரம்பிக்கிறான். படிப்படியாக அவன் சொற்கள் திக்கும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூட வேண்டியிருக்கிறது. ஹிட்லரின் படைகளை எதிர்த்து செய்யப் போகும் போரிற்காக அவன் இங்கிலாந்து நாட்டு மக்களிடம் வானொலி வழியாக உரையாற்ற வேண்டியிருக்கும் மிகப் பெரிய சவாலும் அவனை வந்து அடைகிறது. அந்த சவாலை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் உச்சக்கட்டமாக அமைகிறது.

le-discours-d-un-roi-2011-18825-713197437 படம் ஆரம்பித்தது முதலே தன் அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை அள்ளி எடுக்கிறார் காலின் ஃபர்த். தன் இயலாமையால் தனிமையில் அழுது வெம்புவதானாலும், தன்னிடம் கதை சொல்லுமாறு கேட்கும் தன் குழந்தைகளிடம் திக்கியவாறு கதை கூறுவதானாலும், தன் தந்தை இறந்த நிலையில் லியனல் லோக்கிடம் தன் மனதை திறப்பதானாலும், தனக்கெதிராக சதி செய்கிறாய் எனக் குற்றம் சாட்டும் தன் மூத்த சகோதரனிடம் தன் கருத்தை கூற முடியாமல் திக்குவதானாலும், அதே சகோதரனிற்காக லியனிலிடம் நீ துரோகி என வெடிப்பதானாலும், மக்களிடம் ஆற்ற வேண்டிய உரைக்காக அழுத்தங்கள் நிறைந்தநிலையில் பரபரவென தயாராவதானாலும் காலின் ஃபர்த் திரைப்படத்தில் வழங்கியிருப்பது அசத்த வைக்கும் நடிப்பு. மதிப்பை தேடி வரவைக்கும் நடிப்பு. இயக்குனர் மிகச் சிறப்பான ஒரு பாத்திரத்தை காலின் ஃபர்த்திடமிருந்து உருவி எடுத்திருக்கிறார். அந்த உரைக்கு முன் அவர் எடுக்கும் ஆயத்தங்கள் ஜாலியான அதிரடி.

the-king-s-speech-2010-18825-1864527704 படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வானொலி உரையை முடித்தபின் காலின் ஃபர்த் தன் உடல்மொழியில் கொண்டுவரும் மாற்றம் அபாரமானது. கம்பீரமும், ராஜகளையும் சூடி அவர் அரண்மனையில் வீறு பெற்று நடந்து வரும் அத்தருணம் படத்தின் மிக முக்கியமான தருணம். இளவரசன் எட்வர்ட்டின் காதல் விவகாரங்கள், இங்கிலாந்தின் அரசியல் என்பன திரைப்படத்தின் நிதானமான வேகத்தை மேலும் நிதானமாக்கி விடுகின்றன. காலின் ஃபர்த்தின் மனைவியாக வேடமேற்றிருக்கும் ஹெலனா பொன்ஹாம் கார்ட்டரை இப்படியான ஒரு அடக்கமான வேடத்தில் காண்பதே ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. டிம் பர்ட்டனின் அடுத்த இயக்கத்தில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

வழமை போலவே இசை மனதை நெகிழ வைக்க உதவுகிறது. நல்ல திரைக்கதை, சிறப்பான இயக்கம் என்றிருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது காலின் ஃபர்த்தும், ஜியோப்ஃரி ரஷ்ஷுமே. ஆஸ்கார் விருது எல்லாம் இந்த பண்பட்ட கலைஞர்களின் திறமைக்கு சரியான அங்கீகாரமாக அமையப் போவதில்லை என்பதே என் கருத்து. மன்னனின் இந்த உரை, தித்தித்தித்-திக்கும் ராஜோபசாரம். [***]

ட்ரெயிலர்