
மலையேறுவதில் அதிக விருப்பம் கொண்ட இளைஞனான Aron Ralston, வார இறுதி ஒன்றை மலைக்குன்றுகளும், கணவாய்களும் பெருகிய இயற்கைப் பூங்கா ஒன்றில் கழிக்க செல்கிறான். அப்பிரதேசத்தில் மிகுந்த உற்சாகத்துடன் மலையேறி மகிழ்ந்து கொண்டிருக்கும் ஏரோன், இரு குன்றுகளிற்கிடையிலுள்ள பிளவொன்றினுள் முன்னேற முயலும்போது ஒரு பாறை சரிந்து அவன் கரத்தின் மீது வீழ்ந்து இறுகிக்கொள்கிறது. ஏரோன் எங்கு சென்றான் என்பதை அவனிற்கு நெருங்கியவர்கள் யாரும் அறிந்திராத நிலையில், அவன் உதவிக்கு வர எவருமே இல்லை எனும் இக்கட்டான சூழலில், பாறையில் அகப்பட்ட தன் கரத்தை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறான் ஏரோன்….
ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், சர்ச்சையையும் உருவாக்குவதில் வெற்றி கண்ட Slumdog Millionaire திரைப்படத்தின் இயக்குனரான Danny Boyle அவர்களின் சமீபத்திய படைப்புதான் 127 Hours. 2003ல் ஏரோன் ரால்ஸ்டன் எனும் மலையேறியின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு நூலைத் தழுவி இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஸ்லாம்டாக் மில்லியனெர் திரைப்படத்தில், புதிர்க் கேள்விகளுடன் நாயகன் ஜமால் மலிக் நிகழ்த்திடும் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் களித்திட, தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்கும் ஒரு தேசமும், அரங்கொன்றில் நாயகனை சூழ அமர்ந்திருக்கும் மக்கள் கூட்டமும் உன்னிப்புடன் தயாராக இருக்கும். அவனது ஒவ்வொரு பதிலுக்கும் கிடைக்கும் கரகோஷங்களும், ஆரவாரங்களும் அவனை உற்சாகப்படுத்தும். 127 Hours நாயகன் ஏரோனின் நிலையோ இதற்கு முற்றிலும் எதிர்மாறானது.
சிக்கிக் கொண்ட பிளவையே அரங்கமாக கொண்டு, தன் கரத்தை பாறையிலிருந்து விடுவிப்பதற்காக தனியனாக அவன் அரங்கேற்றும் அவல நாடகத்தை கைதட்டி ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ, விசிலடிக்கவோ அங்கு யாருமில்லை. அவன் இருத்தல் குறித்த எந்த அக்கறையும் இன்றி உலகம் தன் பாட்டிற்கு இயங்கிச் செல்வதுபோல் ஒரு காகம் அவன் மாட்டிக் கொண்ட பிளவின் மேலாக பறந்து செல்கிறது. தன் அவல நாடகத்தின் அறிவிப்பாளனாக, நாயகனாக, பார்வையாளனாக, ஒளிப்-பதிவாளனாக அவனே இருந்தாக வேண்டிய நிலை. திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் ஏரோன் இதனை நிகழ்த்தியே காட்டுகிறான். மனதைக் கலங்க வைக்கும் தருணங்களில் ஒன்றாக அது திரைப்படத்தில் இடம்பிடிக்கிறது. ஐந்து நாளிற்கு மேலாக பிளவினுள் இடம்பெறும் ஏரோனின் வாழ்வா சாவா எனும் போராட்டத்தையே எம்மை பார்வையாளர்களாக்கி திரையில் வடிக்கிறார் இயக்குனர் டேனி பாய்ல்.
ஒரு பிளவிற்குள், ஒரு மனிதனை மட்டுமே வைத்து ஐந்து நாட்களிற்கு ஒரு கதையை நகர்த்துவது என்பது எளிதான ஒன்றல்ல. திரைப்படத்தின் ஆரம்பத்தில் மலைக்குன்றுகளை நோக்கி ஏரோன் பயணப்படும் போதும், மலைக்குன்றுகள், கணவாய்கள், ரகசிய நீர்நிலைகள் என்று அவன் அலைந்து மகிழும் கணங்களிலும் திரைப்படத்தில் இளமையின் தீவிரமான உற்சாகம் வேகமாக பீறிட்டு ஓடுகிறது. அதேபோல் ஒரு முக்கிய முடிவை எடுத்துக் கொண்டு பாறையிலிருந்து தன் கரத்தை விடுவிக்க ஏரோன் முனையும் உச்சக்கட்டக் காட்சிகளில் எம் கரத்திலேயே கத்தி புகுந்து அறுக்கும் உணர்வின் தாக்கத்தை எம்மால் எட்டிவிட முடிகிறது. அக்காட்சிகளின் அப்பட்டமான குரூரம் அரங்க இருக்கைகளில் ரசிகனை அசெளகரியத்துடன் நெளிய வைக்கிறது.
ஆரம்பக் காட்சிகளின் உற்சாகம், உச்சக்கட்ட அதிர்ச்சி எனும் இரு புள்ளிகளிற்கிடையில் ஏரோன் பிளவிற்குள் கழிக்கும் மணித்துளிகளை அவன் கடந்த காலம் குறித்த நினைவலைகள் மூலமும், விடுதலையை வேண்டும் மனம் இயற்றும் இனிய கனவுகள் வழியேயும் நிரப்புகிறார் இயக்குனர். தன் குடும்பம், தன் நண்பர்கள், தன் காதலி என ஏரோனின் மனம் கடந்த காலத்தை அசைபோட்டு மீள்கிறது. சிறைப்பட்ட மனிதனின் ஏக்கம்போல் இச்சைகள் குறித்த கனவுகள் அவனை மூழ்கடிக்கின்றன. தன் உறவுகள் தன் மீது காட்டும் அன்பையும், அக்கறையையும் தன் அதீதமான தன்னம்பிக்கையால் உதாசீனப்படுத்தும் ஒருவனாகவே இங்கு ஏரோன் உருப்பெறுகிறான். பிறரின் உதவிகள் இன்றி தன்னால் தனித்து எதையும் சாதிக்க முடியும் என்ற அவன் மனப்பான்மையையும், அவன் அதீத தன்னம்பிக்கையையும் காலம் முதல் அவனிற்காக காத்திருந்து அவன் கரத்தின் மேல் விழும் அப்பாறை சப்பளித்து விடுகிறது.
தான் வாழும் உலகின் உறவுகளை தவிர்த்து தனியனாக வாழ விரும்பும் ஏரோன், மலைகள் உள்ள பூங்காவில் வழி தவறி விட்ட பெண்களிற்கு தானே முன் சென்று வழிகாட்டுகிறான். அங்கு அவன் கழிக்கும் பொழுதுகளில் அவன் வேறு மனிதனாக இருக்கிறான். மலையும் மலை சார்ந்த இடமும் அவன் இறுக்கத்தை கட்டவிழ்க்கிறது. அவனை பிறிதொரு இனிதான மனநிலைக்கு தள்ளுகிறது. அவனை விடுவிக்கிறது. அவனை சிறைப்பிடிக்கிறது.
ஏரோனின் நினைவலைகளும், கனவுகளும் பார்வையாளனை கட்டிப்போட வைப்பதில் தகுந்த விதத்தில் செயலாற்றாது போக இப்பகுதியில் தன் இயக்கத்தில் இறங்கிவிடுகிறார் இயக்குனர் டேனி பாய்ல். ஏரோனின் கடந்தகால மீட்டல்கள் சலிப்பை பிளவினூடு மெதுவாக கடத்தி வருகின்றன. அவ்வகையில் பாதிப் படத்தினையே இயக்குனாரால் திறமையாக பரிமாறக் கூடியிருக்கிறது.
உற்சாகாமான ஆரம்பக் காட்சிகளில் ரகுமானின் இசை அதிரடிக்கிறது. குறிப்பாக மலைக் குன்றுகளிற்கு ஏரோன் கிளம்பிச் செல்லும் வேளையில் ஒலிக்கும் பாடலும் இசையும் உணர்வுகளை அதிர வைக்கின்றன. ஆனால் பாறையில் தன் கரத்தை மாட்டிக்கொண்டு ஒரு மனிதன் போராடிச் சோர்ந்து கிடக்கிறான், ஒரு நாளில் குறுகிய நேரத்திற்கு மட்டுமே அவன் மாட்டியிருக்கும் பிளவிற்குள் சூரியன் தன் கதிர்களால் வருடிச் செல்லும். அந்த வேளை வருகிறது. சூரியக் கதிர்கள் மென் விரல்களென அவன் மேல் வீழ்கிறது. அந்த ஸ்பரிசம் அந்த மனிதனின் பால்ய கால நினைவுகளைத் தூண்டுகிறது. தன் தந்தையுடன் அவன் பார்த்து ரசித்த சூரிய உதயங்களை அவன் மனம் மீட்டெடுக்கிறது. இந்த தருணத்தில் பின்னனி இசை எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லாது அந்தக் காட்சிகள் தரும் உணர்வுகளிலிருந்து பார்வையாளனை விலத்தி எடுத்து செல்வதாகவே ரகுமானின் இசை இருக்கிறது. ரகுமானின் இசை மிகச் சிறப்பாக செயற்பட்ட திரைப்படமாக இது இல்லை என்பதுதான் என் கருத்து.
படத்தின் மிகச் சிறந்த திறமை எதுவெனில், அது ஏரோன் வேடத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் James Franco தான். எதிர்பார்த்திராத வகையில் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார் சிலந்தி மனிதனின் வைரி. வீடியோ கமெராவில் தானே நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி பதிவு செய்யும் காட்சி, உச்சக்கட்டக் காட்சி என்பவற்றில் மனங்களை இளக வைத்து விடுகிறார் ஜேம்ஸ் பிராங்கோ. அவர் திறமையைக் காட்ட கிடைத்த வாய்பை தவறாமல் உபயோகித்துக் கொண்டிருக்கிறார் அந்த இளம் நடிகர்.
ஏரோன் அகப்பட்ட பிளவினுள் பார்வையாளனை இறக்கி, அவனை ஏரோன் இடத்தில் நிறுத்துவதே என் நோக்கம் என்றிருக்கிறார் டேனி பாய்ல். இந்த நோக்கத்தில் அவரிற்கு கிடைத்திருப்பது முழுமையான ஒரு வெற்றியல்ல. விலங்குகளிற்கு பொறி வைக்கப்படும் சமயங்களில் அவற்றில் மாட்டிக் கொள்ளும் விலங்குகள் அதிலிருந்து தம்மை விடுவிக்க பொறியில் மாட்டிய தம் அவயவங்களை அறுத்துக்கொண்டு தப்புவதுண்டு. பொறிகளில் வாலோ, ஒரு காலோ மட்டும் எஞ்சியிருக்கும். அவ்விலங்குகளின் விடுதலையின் விலையாக, தழும்பாக அந்த அவயவங்கள் மாறிப்போகும். ஏரோனின் கரம் அவனை பிரபலமாக்கியது, அந்தக் கரம் இன்றும்கூட அவன் விடுதலையினதும், தொடரும் வாழ்வினதும் அடையாளமாக, மலையும் மலை சார்ந்த இடங்களிற்கும் அவனுடன் சலிக்காது துணை சென்று கொண்டேயிருக்கிறது. அவன் மறைவின் பின்பாகக்கூட அந்தக் கரத்திற்காகவே அவன் பெரிதும் நினைவுகூறப்படுவனாக இருப்பான். [**]
ட்ரெய்லர்
