Monday, November 22, 2010

தாத்தா சுட்டா தப்பாது


பிரான்ங் மோசஸ் [Bruce Willis], CIAன் அதிரடி ஏஜெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். தனது ஒய்வு வாழ்க்கையை சலிப்பின் துணையுடன் வாழ்ந்திருக்கும் பிரான்ங்கிற்கு, அவனிற்கு ஓய்வூதியத்தை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் சாரா எனும் பெண்மீது ஒரு ஈர்ப்பிருக்கிறது.

250px-Warren_Ellis_Red_3_cover சாராவுடன் தொலைபேசியில் உரையாடுவதும், முளைவிடும் அவகாடோ விதை ஒன்றை கரிசனையுடன் பார்த்துக் கொள்ளுவதும், சலிப்பு ஊறிய அவன் வாழ்வின் முக்கியமான தருணங்களாக இருக்கின்றன. இவ்வாறான நிலையில் பிராங் மோசஸின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து அவனைத் தீர்த்துக்கட்ட முயல்கிறது ஒரு அதிரடிக் குழு.

இந்த அதிரடிக் குழுவானது CIA வினாலேயே அனுப்பப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளும் பிராங் மோசஸ் இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்குகிறான். CIA ன் புதிய தலைமுறை எஜெண்டுகளின் அசுர நடவடிக்கைகளை மோசஸ் முறியடித்து உண்மையைக் கண்டடைய அவனிற்கு துணை வருகின்றனர் மேலும் சில ஓய்வு பெற்ற CIA ஏஜெண்டுகள்….

திரைப்படத்தின் அதே பெயரைக் கொண்ட காமிக்ஸ் கதையொன்றின் ஒரு வரி மையக்கதையை தழுவி இயக்குனர் Robert Schwentke இயக்கியிருக்கும் RED திரைப்படத்தில் முதலில் விசிலடிக்க வைக்கும் அம்சம் அதில் இடம்பெறும்- நம்புவதற்கு சற்று சிரமமான – அதிரடி ஆக்‌ஷன். இரண்டாவது விசில் அதில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான நடிகர்களின் தெரிவிற்கு. மூன்றாவது விசில் எந்த பந்தாவுமில்லாமல் இப்படி ஒரு ஆக்‌ஷன் காமெடியில் அலட்டிக் கொள்ளாமல் அசர வைக்கும் விதத்தில் கலக்கி எடுத்திருக்கும் மார்கன் ஃப்ரீமேன், ஜான் மால்கோவிச், ஹெலன் மிரென் போன்ற பண்பட்ட கலைஞர்களிற்கு.

red-2010-18717-839584313 ரெட், காமிக்ஸ் கதையானது Warren Ellis ஆல் எழுதப்பட்டு ஓவியங்கள் Cully Hamnerல் உருவாக்கப்பட்டன. தன்னைக் கொல்ல உத்தரவிட்ட CIA யின் உயரதிகாரிகளை தனியாளாக துவம்சம் செய்யும் ஒரு ஓய்வு பெற்ற CIA ஏஜெண்டின் கதையை கொடுமையான வன்முறையுடனும் ரத்தத்துடனும் கூறும் மூன்றுபாக காமிக்ஸ் கதை அது. நகைச்சுவை என்பது அக்காமிக்ஸில் தவறியும் இடம்பெற்றிருக்காது. தன் வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை எழுத உதவியவர்களையும், அந்தப் பக்கங்களையும் CIA எவ்வாறு தந்திரமாக துடைத்தெடுக்க முயல்கிறது என்பதை அக்கதை கூறிச் செல்லும். ஆனால் காமிக்ஸின் திரைவடிவத்தில் நிறைய மாற்றங்கள், ஆச்சர்யம் தரும் போனஸாக சிறப்பான நகைச்சுவை என்பவற்றை காமிக்ஸை படித்த அன்பர்கள் காணமுடியும். [இக்காமிக்ஸை படிக்க வாய்ப்பளித்த இலுமினாட்டி அவர்களிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்- கனவுகளின் காதலன் விளம்பர சேவை]

எக்ஸ்பெண்டபிள்ஸ் திரைப்படத்தில் திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி அகன்ற மொட்டை மாமா ப்ருஸ் வில்லிஸிற்கு, நீண்ட நாட்களின் பின்பாக அவரின் மொட்டைத் தலைக்கு பொருந்திப் போகும் அழகான ஒரு விக் போல வந்து அமைந்திருக்கிறது பிராங் மோசஸ் பாத்திரம். ஓய்வு பெற்ற சிஐஏ ஏஜெண்டாக சலிப்புடன் தன் வாழ்க்கையை கடத்தும் பிராங்கிற்கு, வெளியுலகுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பிராங் பாத்திரத்தின் தவிப்பை உணர்த்தும் தருணங்களில் சிறப்பான நடிப்பை வழங்குகிறார் மொட்டை மாமா ப்ருஸ். தன் வீட்டை சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் கிறிஸ்துமஸ்கால அலங்காரங்களுடன் ஜொலிக்க தன் வீடு மட்டும் தன் தலையைப் போலவே மொட்டையாக இருப்பதை அவர் உணரும் தருணத்தில் திரையில் அவர் வழங்கும் அந்தப் பார்வை அட்டகாசம்.

red-2010-18717-637927801 பிராங்கின் வீட்டினுள் புகுந்து அவனைக் கொலை செய்ய முயலும் குழுவுடனான மோதல் காட்சிகளிலேயே, அக்காட்சிகளில் கலந்திருக்கக்கூடிய தடிப்பான அபத்தத்திலேயே ரசிகர்கள் இது எவ்வகையான படம் என்பதை தெளிந்து உஷாராகிவிட வேண்டும். இந்த உணர்தலே படத்தை மேற்கொண்டு ஜாலியாக ரசிக்க உதவும். இல்லையேல் அந்த மோதலுடனேயே திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விடுவது நல்லது. படத்தில் இருக்கும் அட்டகாசமான ஆக்‌ஷனிற்கு அளவெடுத்து தைத்த கையுறைபோல் பொருந்தி துள்ள வைக்கின்றன, பின்னணி இசையும் அதனுடன் கூடவே இழையும் பாடல்களும்.

திரைப்படம் முழுவதிலும் ப்ருஸ் வில்லிஸ் அடக்கி வாசித்திருக்கிறார். ஆச்சர்யப்படத்தக்க வகையில் அது அருமையான ஒரு விளைவை வழங்கியிருக்கிறது. ப்ருஸ் மட்டுமல்லாது படத்தின் முக்கியமான நடிகர்கள் யாவரிற்கும் சிறப்பான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் தத்தமது பாத்திரங்களை அருமையாக செய்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமேனிற்கு மட்டும் கொஞ்சம் வாய்ப்பு குறைவாக உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் சிட்டு ஒன்றின் பின்னழகை ரசிப்பவராக மார்கன் ஃப்ரீமேன் காந்தச் சிரிப்பால் கவர்கிறார்.

கிறுக்கு குணம் படைத்த முன்னாள் ஏஜெண்டாக வரும் ஜான் மால்கோவிச் படத்தில் வழங்கும் நடிப்பு சிரிப்பை அள்ளுகிறது. அவரது அதீத கற்பனைகளும், காரணப்படுத்தல்களும், கொலைவெறியும் அவரை பிற பாத்திரங்களிலிருந்து தனிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. சிஐஏன் ஓய்வு பெற்ற பெண் ஏஜெண்ட் விக்டோரியாவிற்கும் [Helen Mirren] KGB ன் ஏஜெண்டாகவிருந்த இவானிற்கும் இடையில் இருக்கும் காதல் அழகாக காட்டப்படுகிறது. இவானாக நடித்திருக்கும் நடிகர் Brian Cox சிறிய வேடம் எனிலும் கவர்ந்திழுக்கிறார். மோசஸின் கதையை முடிக்கும் பொறுப்பை ஏற்கும் சிஐஏ ஏஜெண்டான வில்லியம் கூப்பர் வேடத்தில் வரும் நடிகரான Karl Urban மிக அட்டாகாசமன ஒரு தெரிவு. அவரின் கம்பீரமும், கவர்ச்சியும் திரையை அதிரடிக்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் காமெடி கலவையாக திரைப்படம் இருந்தாலும் ஓய்வு பெற்ற மனிதர்கள் தம் சலிப்பான வாழ்விலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகளை மெலிதாக கோடிட்டு காட்டுகிறது திரைப்படம். சலிப்பான வாழ்விலிருந்து விடுபட மீண்டும், அதிரடி, காதல் போன்றவற்றில் தயங்காது இறங்கிடும் ஓய்வு பெற்ற பாத்திரங்களை திரைக்கதை முன்னிறுத்துகிறது. தர்க்கரீதியான கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காது குஷியாக பார்த்து மகிழ வேண்டிய திரைப்படமாகவே ரெட் இருக்கிறது. மேலும் இப்படத்திலிருந்து அடியேனைப் போன்ற ஆக்‌ஷன் திரைப்பட விசிலடிச்சான் குஞ்சுகள் பெற்றுக் கொள்ளக்கூடிய ஜென் தத்துவம் என்னவெனில் சிஐஏ தாத்தா சுட்டால் குறி தப்பாது என்பதாகும். [**]

ட்ரெயிலர்

Thursday, November 18, 2010

மால்கோவா மரண ரயில்


பேரழிவை ஏற்படுத்திடக்கூடிய நச்சுப்பொருளையும், எரிபொருளையும் ஏற்றிக்கொண்ட ஒரு சரக்கு ரயில்வண்டி, ஓட்டுனர் அற்ற நிலையில் தறிகெட்ட வேகத்தில் பொதுமக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியை நோக்கி விரைகிறது. நிறுத்தப்பட முடியாத ரயில் வண்டியாக கருதப்படும் இவ்வண்டியை நிறுத்தியே தீருவது எனும் முடிவிற்கு வருகிறார்கள் பிறிதொரு ரயில் வண்டியில் சரக்குகளோடு சென்று கொண்டிருக்கும் பிரான்க் [Denzel Washington] எனும் ரயில்வண்டி ஓட்டுனரும், வில்[Chiris Pine] எனும் நடத்துனரும்…..

இயக்குனர் Tony Scott, தனது அபிமான நடிகரான Denzel Washington ஐ இம்முறை ஒரு ரயில் வண்டி ஓட்டுனராக என்ஜின் பெட்டிக்குள் உட்கார வைத்து Unstoppable திரைப்படத்தில் அழகு பார்த்திருக்கிறார். கூடவே டென்சலிற்கு பேச்சுத்துணையாகவும், சிறிது ஆக்சனிற்காகவும் இளம் நடிகர் Chris Pine துணை வந்திருக்கிறார்.

பிரான்க், ரயில்வே நிர்வாகத்தால் ஒரு வகை கட்டாய ஓய்விற்கு அனுப்பப்படும் நிலையில் உள்ளவன். இளைஞன் வில், சேவையில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகும் நிலை. புதிய தலைமுறை இளைஞர்களின் வரவால், நீண்ட காலமாக ரயில்வண்டி ஓட்டும் சேவையில் இருந்த அனுபவம் பெற்றவர்களை நிர்வாகம் வெளியே அனுப்பும் நிலையைக் கொண்டு ஆரம்பாமாகும் இருவரினதும் முதல் ரயில் ஓட்டம் இருவரிற்குமிடையிலான வேறுபாடுகளின் வெளிப்பாடுகளில் ஆரம்பமாகி, தமது வாழ்க்கை கதைகளை பரிமாறி, அவர்கள் பின்பு ஒன்றுபட்டு எதிர் கொள்ளும் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மதிப்பு மிகுந்த ஒரு உறவாக பரிணமிக்கிறது.

unstoppable-2010-15331-1242763733 எவ்வாறு ஒரு ரயில் வண்டி, ஓட்டுனர் இல்லாத நிலையில் வேகமெடுத்து பேரழிவை தரிப்பாக கொண்டு பயணமாகிறது என்பதுடன் வேகமெடுக்கும் திரைப்படம், உச்சக்கட்டக் காட்சிகள்வரை தன் வேகத்தை குறைப்பதில்லை. தறிகெட்டு பயணிக்கும் ரயில், ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், ரயில்சேவை நிர்வாகம், தொலைக்காட்சி சேவைகளின் நேரடி ஒளிபரப்பு என்பவறின் ஊடாக மாறி மாறி பயணிக்கும் காட்சிகளில் வேகத்தையும், விறுவிறுப்பையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் பரபரபரப்பையும் சிறப்பாக பரிமாறியிருக்கிறார் டானி ஸ்காட். இவ்வகையான வேகமான பயணத்தினூடும் பிரான்கினதும், வில்லினதும் கதைகளை மிகச்சுருக்கமாக அவர் திரையில் பதித்தும் விடுகிறார்.

டென்ஸலிற்கு நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பெட்டியினுள் அவரின் பிரசன்னம் ஒன்று மட்டுமே போதுமான ஒன்றாகவிருக்கிறது. சற்றுத் துருத்த துடிக்கும் தனது வெண்பற்களை பளிச் அடித்து சிரித்தவாறே, உட்கார்ந்த நிலையிலேயே ஜாலியாக தன் திறமையை வழங்கியிருக்கிறார் அவர். இறுதிக் காட்சிகளில் ரயில் வண்டியின் கூரைமேல் ஓடி ஆக்‌ஷன் செய்வதாக நம்ப வைக்க கடுமையாக முயல்கிறார். இளம் நடிகரான கிரிஸ் பைன் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த இரு பாத்திரங்களினதும் வாழ்க்கைகள் கூட இந்த ரயில்வண்டியால் சிறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றன எனலாம்.

தனது வழமையான முறையில் திரையில் பதட்டத்தை தேர்ந்த கலைஞன் போல் உருவாக்கி, திகிலையும், விறுவிறுப்பையும் வேகமாக பயணிக்க வைக்கிறார் இயக்குனர் டானி ஸ்காட். ஒர் ஆபத்தான சூழ்நிலையின் முன்பாக கூட தம் லாப நஷ்டங்களை எடைபோட்டு பார்த்து முடிவெடுக்கும் அதிகாரங்களை அவர் தனக்கேயுரிய பாணியில் நகைப்பிற்குரிய வகையில் சித்தரித்திருக்கிறார். ஓடும் ஒரு ரயிலை வைத்துக் கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுவிட முடியும் என்பதை அவரின் இத்திரைப்படம் மறுக்கவியலாத வகையில் நிரூபிக்கிறது. குறிப்பாக உச்சக்கட்டக் காட்சிகளில், எடிட்டிங், ஒளிப்பதிவு[ அபாரம், அட்டகாசம்] இசை, இயக்கம் என யாவுமே டைனமைட் கூட்டுப் பக்குவத்துடன் அமைந்திருக்கிறது. செண்டிமெண்ட், ஆக்‌ஷன், நாயக பிம்ப கலவையாக வந்திருக்கும் Unstoppable, கிழட்டு டானி ஸ்காட்டால் இன்றும் கூட ரசிகர்களின் அடிவயிற்றில் திகில் பம்பரம் விட முடியும் என்பதை தெளிவாக்குகிறது. [***]

ட்ரெயிலர்

Sunday, November 14, 2010

ஷெர்லாக் ஹோல்ம்ஸும் ரத்தக் காட்டேரிகளும்


தனது பரம வைரியான புரபசர் மொரியார்டியுடனான மோதலில், சுவிஸிலிருக்கும் ரெய்க்கான்பாக் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து ஷெர்லாக் ஹோல்ம்ஸ் உயிரிழந்துவிட்டதாக பத்திரிகைகள் செய்திகளை தருகின்றன. இந்த செய்திகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஷெர்லாக், பாரிஸில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறான்.

உலகைச் சுற்றி பயணம் செய்ய வேண்டும் என்பது ஷெர்லாக்கின் நீண்ட நாள் கனவு. இக்கனவை நிறைவேற்றிட இதனைவிட தகுந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறியும் ஷெர்லாக், அதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறான்.

ஆனால் ஷெர்லாக்கின் தலை மறைவு வாழ்க்கையை கண்டுபிடித்து விடுகிறார்கள் அவனை தேடி அலைந்து கொண்டிருக்கும் லண்டனைச் சேர்ந்த ரத்தக் காட்டேரிகள். ஷெர்லாக்கை அணுகும் ரத்தக் காட்டேரிகள், தங்கள் தலைவர், ஷெர்லாக்கை சந்திக்க விரும்புவதை அவனிடம் தெரிவிக்கிறார்கள். வேறு வழிகள் அற்ற நிலையில் ரத்தக் காட்டேரிகளுடன் லண்டனிற்கு பயணமாகிறான் ஷெர்லாக்….

லண்டனில், ஈஸ்ட் எண்ட் பகுதியில் நிகழும் ஒரு ரத்தக் காட்டேரியின் தாக்குதலுடனேயே Sherlock Holmes & Les Vampires de Londres காமிக்ஸ் ஆல்பத்தின் கதை ஆரம்பிக்கிறது. ஆரம்ப பக்கங்களில், சக மனிதர்களை துன்புறுத்தும் நோக்குடைய இரு மனிதர்களை ஒரு காட்டேரி ரத்தப்பலி எடுப்பது இந்தக் காட்டேரியானது ராபின்கூட் பரம்பரையை சேர்ந்ததாக இருக்குமோ என எண்ணத் தூண்டுகிறது.

sh&v நல்ல வேளையாக அடுத்த பக்கங்களில் கதை 1891களின் பாரிஸிற்கு நகர்ந்து அங்கு ரகசிய வாழ்க்கை வாழும் ஷெர்லாக்கை அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஓவியரான Laci, தன் சித்திரங்களில் அந்தக்காலத்திற்குரிய பாரிஸ் நகரையும், இங்கிலாந்தையும் அற்புதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். தெருக்கள், உணவகங்கள், மாளிகைகள் என சிறப்பான ஓவியங்களை அவர் வழங்கியிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் பக்கங்களில் ஒளி விளையாட்டு அருமையாகவிருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டத்தை அதிகரிக்க அவர் கதை நெடுகிலும் நீள்சதுரக் கட்டங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்து தெருக்களில் வறுமையின் அடையாளத்தை சிறிதளவேனும் காட்டிய சித்திரக் கலைஞர், பாரிஸ் தெருக்களில் அதனை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தன் தந்தையின் சாயல் ஷெர்லாக்கில் தெரியும் வண்ணமாகவே அவர் ஷெர்லாக் பாத்திரத்தை வரைந்திருக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனிற்கு ரத்தக் காட்டேரிகளுடன் பயணமாகும் ஷெர்லாக், அதன் முன்பாக ரத்தக் காட்டேரிகள் குறித்த புத்தகங்களை தேடிப் படித்து அவர்களைப் பற்றியும் அவர்களை எதிர்க்கும் வழிகள் குறித்தும் நன்கு அறிந்து கொள்கிறான். ரத்தக் காட்டேரிகள் அவனைப் பாரிஸில் சந்திக்கும் வேளைகளில் சில ரத்தக்காட்டேரிகள், ஷெர்லாக்கின் ஜு- ஜிட்சு திறமைகளை சுவை பார்க்கின்றன. சில அவன் உடலில் கலந்திருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட நீரினால் கருகிப் பொசுங்குகின்றன. ஷெர்லாக்கின் துப்பறியும் திறமைக்கு பெருமை சேர்ப்பதான கதையோட்டம் இந்த ஆல்பத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ஷெர்லாக்கை தன் மாளிகையில் சந்திக்கும் ரத்தக் காட்டேரிகளின் தலைவன் செலிம்ஸ், தன் கூட்டத்தைவிட்டு பிரிந்து சென்று, இங்கிலாந்து மகாராணிக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நபர்களை போட்டுத் தள்ளும் ஓவன் எனும் காட்டேரியை ஷெர்லாக் விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மிரட்டுகிறான். தன் நண்பன் வாட்சனிற்கும் அவன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏதும் வந்துவிடக்கூடாதே எனும் அச்சத்தில் அந்த காட்டேரியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான் ஷெர்லாக்.

ஓவன் ஏன் தன் கூட்டத்திற்கு எதிராக செயல்படுகிறான்? ஓவன் எனும் காட்டேரியின் கொட்டத்தை ஷெர்லாக் அடக்கினாரா? கொடிய ரத்தக் காட்டேரிகளின் பிடியிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா? ஒவனிற்கும், செர்லாக்கிற்கும் இடையில் நிகழும் ஒரு ஜீவமரணப் போராட்டத்தின் சஸ்பென்ஸ் திருப்பத்துடன் நிறைவு பெறுகிறது ஆல்பத்தின் முதல்பாகம்.

இந்த ஆல்பத்தின் கதையை எழுதியிருப்பவர் Sylvian Cordurié ஆவார். ஆல்பத்தின் கதையின் தரம் ஹாலிவூட்டின் மட்டரக பேய்ப்படங்களை நினைவூட்டினாலும் கூட, கதை மிக வேகமாக நகர்கிறது. ஷெர்லாக்கின் வலது கரமான வாட்சன் இந்த ஆல்பத்தில் ஷெர்லாக்கின் விசாரணைகளில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மாறாக அவரைச் சுற்றி எப்போதும் ஒரு காட்டேரிக் கூட்டம் உலா வருகிறது. வழமையாக ஷெர்லாக்கின் கதைகளை வாட்சன் விபரிப்பதாக கதையோட்டம் இருக்கும் இங்கு ஷெர்லாக்கே நல்ல கதை சொல்லியாக கதையைக் கூறிச் செல்கிறார். நல்ல சித்திரங்களிற்காகவும், வேகமான கதை சொல்லலிற்காகவும் படிக்கக்கூடிய இந்த ஆல்பம் Soleil பதிப்பக வெளியீடாகும். [**]

Chronique_Des_Immortels_2La Chronique des Immortels 2

lcdim1 காமிக்ஸ் பதிவுகளை இங்கு தொடர்ந்து படித்து வரும் அன்பர்களிற்கு சில காலத்திற்கு முன்பு நாம் இங்கு பார்த்த இறக்காதவர்களின் ஏடுகள் எனும் பதிவு சிலவேளைகளில் நினைவிலிருக்கலாம். La Chronique des Immortels எனும் அந்த ஆல்பத்தின் இரண்டாம் பாகமானது 5 வருட இடைவெளியின் பின் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியானது. சென்றவாரம் அதனை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தான் வாழ்ந்த ஊரிற்கு திரும்பி வந்த அண்ட்ரெஜ் டுலேனி, தன் கிராமம் அழிக்கப்பட்டுவிட அக்கிராம ஆலயத்தில் தன் மகன் குற்றுயிரான நிலையில் இருப்பதை அறிந்து தன் மகனை தன் வாளாலேயே அவன் வேதனைகளிலிருந்து விடுவிக்கிறான். ஊரில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருந்த சிறுவன் ப்ரெட்ரிக்கை தன்னுடன் கூடவே அழைத்துச் செல்லும் அண்ட்ரெஜ் டுலேனி, கடத்திச் செல்லப்பட்ட கிராம மக்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். இதில் அவன் எதிர் கொள்ளும் ஆபத்துக்களை முதல் பாகம் விபரித்தது. சித்திரங்களும், கதை சொல்லலும் அட்டகாசமாக இருந்த ஆல்பமது.

இரண்டாம் பாகத்தின் கதையானது, அண்ட்ரெஜ்ஜின் கிராம மக்கள், சிறை வைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரமான கான்ஸ்டாண்டாவில் ஆரம்பமாகிறது. மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை ஒன்றின் ஊடாக அண்ட்ரெஜ்ஜும் சிறுவன் ப்ரெட்ரிக்கும் ஒரு முக்கிய சந்திப்பிற்காக குருட்டுக் கரடி மதுவகத்தை தேடிச் செல்கிறார்கள். ஆபத்து அவர்களை பல ரூபங்களிலும் நெருக்க ஆரம்பிக்கிறது.

சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும் அண்ட்ரெஜ்ஜிற்குமிடையில் உருவாகும் உறவின் சிக்கலான பக்கங்கள், அண்ட்ரெஜ்ஜின் கடந்த காலத்தின் சில நினைவூட்டல்கள், சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும், தனக்கும் காயங்கள் உடனடியாக ஆறிவிடுவதன் மர்மம் குறித்த அண்ட்ரெஜ்ஜின் புரியாத்தன்மை என விரியும் கதை, மரியா எனும் பெண்பாத்திரத்தை கதையோட்டத்தினூடு அறிமுகம் செய்து வைக்கிறது. மரியாவின் அழகில் ஈர்க்கப்பட்டு அவள்மேல் காதல் வயப்படுகிறான் அண்ட்ரெஜ். கதையில் திருப்பமும் மரியாவினாலேயே உருவாகிறது…

முதல் அதிர்ச்சி வருவது சித்திரங்கள் வழியாக. முதல் ஆல்பத்திலிருந்த சித்திரத்தின் சாயல் இருந்தாலும் அதை வழங்கும் பாணியை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் ஓவியக் கலைஞர் தாமஸ் வான் குமாண்ட். இந்த மாற்றத்தை இலகுவாக மனம் ஏற்க மறுப்புத் தெரிவிக்கிறது. பனி வீழ்ந்து கொண்டிருக்கும் கான்ஸ்டாண்டாவின் ஒடுங்கிய தெருக்களிலும், சதுக்கங்களிலும் இருளையும் ஒளியையும் கலந்து தெளித்திருக்கிறார் ஓவியர். எங்கிருந்தோ வந்த இனம் புரியாத ஒரு இருள் கதையை சூழ்ந்து நிற்கும் தன்மையை தாமஸின் ஓவியங்கள் கதைக்கு வழங்குகின்றன. ஆனால் அவரது பாணி தனித்துவமானது என்பதை அவர் மீண்டும் நிரூபிக்கிறார். உண்மையைக் கூறினால் அவரது ஓவியங்கள் மட்டுமே இந்த ஆல்பத்தை காப்பாற்றியிருக்கின்றன.

ஐந்து வருட காலமாக சிறப்பான விருந்து ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த வாசகனிற்கு 32 பக்கங்களில் [ ஆம், 32 பக்கங்கள் மட்டுமே கதை இடம்பெறுகிறது. மிகுதிப் பக்கங்களில் பொம்மை காட்டுகிறார்கள் ] ஒரு பிடி சோளப்பொரி அள்ளித் தந்திருக்கிறார் கதாசிரியர் பெஞ்சமன் வான் எக்கார்ட்ஸ்பர்க். விறுவிறுப்பான கதை நகர்வு காணாமல் போயிருக்க மென்சோகம் அதன் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் குறைந்த நிலையில் இறுதியில் கதையில் வரும் திருப்பம் சப்பென்று இருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளிவரவிருக்கும் மூன்றாவது பாகத்தின் முன்பாக அதிகம் காத்திருந்த வாசகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்த மலிவான ஒரு வணிக உத்தி எனவே இந்த ஆல்பத்தை கணிக்கக்கூடியதாகவிருக்கிறது. அடுத்த பாகத்திலாவது ரசிகர்களை படைப்பாளிகள் திருப்திப்படுத்தாவிடில் இத்தொடர் அதன் வீழ்ச்சியின் சரிவை நோக்கிப் பயணிப்பதை தடுக்க எந்த வழியுமேயிருக்காது. [**]

தமிழில் வெளியான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காமிக்ஸ் கதைகள்

Thursday, November 11, 2010

ஆந்தைகள் ராஜ்யம்


ஹாகூல் எனப்படும் ஆந்தைகளின் உலகில், பலவேறுபட்ட ஆந்தை இனங்களும் சுபீட்சமாக தம் வாழ்கையை நடாத்தி வாழ்ந்திருக்கின்றன. தூய ரத்தம் உடலில் ஓடும் டைடோஸ் எனும் ஆந்தைக்கூட்டமே ஆந்தைகள் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட, சர்வாதிகார போக்குடைய ஆந்தையான எஃகு அலகு, ஆந்தைகள் உலகின் அதிகாரத்தை தான் கைப்பற்றிக் கொண்டு ஆந்தைகள் உலகின் ஒரே ஒரு மன்னனாக தான் இருக்க விரும்புகிறது.

இதற்காக ஹாகூலில் வாழ்ந்திருக்கும் இளம் ஆந்தைகளை தன் ஆந்தை அடியாள்கள் மூலம் கடத்தி, அவற்றின் சிந்தனைகளை மழுங்கடித்து, தனக்காக போரிடக்கூடிய ஒரு சேனையை உருவாக்குகிறது எஃகு அலகு. இப்படியான ஒரு ஆந்தை கடத்தல்[ பிடித்தல்] படலத்தில், எஃகு அலகின் அடியாட்களின் பிடிக்குள் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக் கொள்ளுகிறார்கள் இளம் ஆந்தைகளான சொரெனும் அவனது சகோதரனுமான க்ளட்டும்.

க்ளட், டைடோஸ்கள் மத்தியில் தனக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரத்திற்காக எஃகு அலகின் பக்கம் சேர்ந்து கொள்ள, டைடோஸ்களின் கோட்டையிலிருந்து தப்பிச் செல்கிறான் சொரென். தன் தந்தை கூறிய ஆந்தை உலகின் காவலர்களின் சாகசக் கதைகளை தன் மனதில் கனவாக இருத்தி வாழும் சொரென், எஃகு அலகின் கொடிய திட்டத்திலிருந்து ஆந்தை உலகை காப்பாற்ற வேண்டி, ஹாகூல் ராஜ்யத்தின் காவலர்களை தேடி ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறான்….

Kathryn Lasky அவர்கள் சிறுவர்களிற்காக எழுதிய Guardians of Ga’Hoole எனும் மிகுபுனைவு கதை வரிசையினைத் தழுவியே Legend of The Guardians: The Owels of Ga’Hoole அசைவூட்டத் திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. 300ல் ஸ்பார்டானின் அதிரடி வீரர்களையும், வாட்ச்மேனில் தம் சூப்பர்ஹீரோ வாழ்வில் சலிப்புற்றுபோன மனிதர்களையும் திரையில் உலவவிட்ட இயக்குனர் Zack Snyder, ஆந்தைகளின் விசித்திர உலகை வெள்ளித்திரைக்கு எடுத்து வரப்போகிறார் என்பதை அறிந்தபோது, அதனை நம்பமுடியாது விழிகளை அகல விரித்தவர்களின் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

le-royaume-de-ga-hoole-la-legende-des-gardiens-2010-16888-2065043724 மிகுபுனைவு கதைகளில் கதாசிரியர்கள் சிருஷ்டித்த உலகங்களை திரையில் தீட்டுவது என்பது இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர், திறமையான ஒரு அணியின் கூட்டுடன் உருவாக்கியிருக்கும் ஆந்தைகளின் பூமி அசர வைக்கிறது. பொதுப்புத்தியில் ஆந்தைகள் இருளோடு தொடர்பு கொண்ட உயிரினங்களாக அறியப்பட்டு இருக்கையில், இயக்குனரின் ஆந்தைகள் உலகம் ஒளியால் சூழப்பட்ட, சந்துஷ்டி மிக்க, எழில் நிறைந்த ஒரு பூமியாக காட்டப்பட்டிருக்கிறது. திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்த ஆந்தைகளின் பூமிக்குள் ரசிகர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள்.

காடுகள், மலைகள், குகைகள், கடல், ஆகாயம் என ரகசியமான ஒரு கனவின் நனவு வடிவாக வியக்கவைக்கிறது செயற்கையான உத்திகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்னெய்டெரின் ஆந்தைகள் பூமி. இலைகள் மென்மையான காற்றில் நடனமிடுவதாகட்டும், அந்திச் சூரியனின் கதிர்கள் மேகங்களை ஊடுருவி சூழலை ரம்யமாக மாற்றி அடிப்பதாகட்டும், மழைத்துளிகளும், பனித்துளிகளும் அவற்றிற்கேயுரிய குளிர்ந்த அழகுடன் வீழ்ந்து சிதறுவதாகட்டும் அண்மைக்காலத்தில் இவ்வளவு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட அசைவூட்டக் காட்சிகளை நான் பார்த்ததில்லை எனலாம். சொரெனின் தங்கை, அவனது இறகுகளிற்குள் பொதிந்து தூங்கும்போது, அக்கணத்தின் மென்மையை, அந்த இறகு மெத்தையின் மென்மையை ரசிகனும் உணர்ந்து கொள்ளக்கூடிய தத்ரூபம் அது.

இயக்குனர் ஸாக் ஸ்னெய்டரிற்கு மென்னகர்வில் காட்சிகளை உருவாக்குவதில் உள்ள பிரியம் அலாதியானது. இத்திரைப்படத்திலும் அவ்வகையான காட்சிகள் உண்டு. குறிப்பாக ஆந்தைகளின் பறத்தல் காட்சிகள். மிகவும் ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பறத்தல் காட்சிகள் திரைப்படத்தில் ரசிகர்களை மயங்க செய்யும் அம்சங்களில் ஒன்று. அதிலும் புயல் மழைத்துளிகளினூடு சொரென் தன்னை இழந்து பறந்து செல்லும் காட்சியின் அழகு விவரிக்க முடியாத ஆனால் உணர மட்டுமே படக்கூடிய ஒன்றாகும். இவ்வகையான காட்சிகளின் அழகை மெருகேற்றுவதில் 3D நுட்பம் சிறப்பான பங்காற்றியிருக்கிறது.

le-royaume-de-ga-hoole-la-legende-des-gardiens-2010-16888-260125424 சண்டைக் காட்சிகளிலும் ஸாக் ஸ்னெய்டர் தயங்கவில்லை. அதே மென்னகர்வுடன் சிறுவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் வகையில் ஆந்தைகளிற்கிடையான மோதல் காட்சிகளை அவர் திரைப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியான மோதல்கள் சலிப்படைய வைக்கின்றன.

ஆந்தைகள் உலகை உருவாக்குவதிலும், அதனை அற்புதமாக ரசிகர்களிற்கு பரிமாறுவதிலும் அபார வெற்றி கண்ட ஸ்னெய்டர், திரைப்படத்தின் பாத்திரங்களை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் வலுவானவையாக உருவாக்குவதில் தவறியிருக்கிறார். சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்ட பல கதாபாத்திரங்கள் படத்தில் இருப்பினும் அதில் ஒருவர்கூட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வேதனையானது.

சண்டைக்காட்சிகளில் இருந்த ஆக்ரோஷம், பாத்திரங்களின் உணர்வுகளில் சுரமிழந்திருக்கிறது. சாகசம், போராட்டம், சகோதர பாசம், லட்சியம், வீரம், மந்திரம் எனும் அம்சங்கள் கொண்ட கதை இருந்தும், மனதை கதை முழுமையாக ஆக்கிரமிக்காத வகையில் அமைந்திருக்கிறது கதை நகர்வு. மேலும் அசைவூட்ட படைப்புக்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய நகைச்சுவையை சிறப்பாக பயன்படுத்தியிருக்ககூடிய பாத்திரங்கள் இருந்தும் திரைப்படத்தில் நகைச்சுவை மிகவும் குறைந்த அளவிலேயே காணக்கிடைக்கிறது. ஸாக் ஸ்னெய்டரிற்கும் நகைச்சுவைக்கும் இடையில் தூரம் அதிகமாக இருக்கிறது.

செரொனின் பறத்தல் முதல், காவலர்களை தேடிய அவன் பயணம், எஃகு அலகுடானான இறுதி மோதல் என படத்தின் நிகழ்வுகள் யாவும் மிகவும் அவசரகதியில் பொட்டலமாக்கப்பட்டு பார்வையாளன் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக எழும் உணர்வை தவிர்க்க முடியாது. ஒன்றரை மணி நேரத்தினுள் அசர வைக்கும் ஆந்தை உலகையும், ஆக்‌ஷனையும் வழங்கிய ஸ்னெய்டர், உணர்வுகளால் ரசிகர் மனதை கொத்தும் வாய்ப்பை இழந்திருக்கிறார். ஆந்தைகள் ராஜ்யமான ஹாகூலின் அனுபவம், மெலிதான ஏமாற்றத்தையும் கூடவே ஒரு சிறகாக உதிர்த்து செல்கிறது. [**]

ட்ரெய்லர்

Sunday, November 7, 2010

புதைக்கப்பட்டவன்


மயக்கமுற்ற நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பும் பால் கான்ராய் [Ryan Reynolds], இறுக மூடப்பட்ட சவப்பெட்டி ஒன்றினுள் வைத்து தான் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறான். அவனிற்கு துணையாக அந்த சவப்பெட்டியினுள் ஒரு ஸிப்போ லைட்டர், ஒரு கைத்தொலைபேசி கூடவே 90 நிமிடங்கள் மட்டுமே அவன் உயிர் வாழத்தேவையான ஒக்சிஜன் என்பனவும் புதைக்கப்பட்டிருக்கின்றன….

இறுக மூடப்பட்ட ஒரு சவப்பெட்டியினுள் அடைக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வுகளையும், அதிலிருந்து வெளியேறிவிட அவன் நடாத்தும் போராட்டங்களையும் மட்டுமே திரையில் காட்டி 90 நிமிடங்களிற்கு பார்வையாளர்களை சஸ்பென்ஸால் திணற அடிக்க முடியுமா எனும் கேள்விக்கு, ஆம் எனும் பதிலாக அமைந்திருக்கிறது ஸ்பானிய இயக்குனர் Rodrigo Cortés ஆங்கில மொழியில் உருவாக்கியிருக்கும் Buried எனும் இத்திரைப்படம். மிகக்குறைந்த செலவில் விறுவிறுப்பான படைப்பினை வழங்க முடியும் என்பதனையும் இத்திரைப்படம் தெளிவாக்குகிறது. திரைப்படம் ஆரம்பித்து அது நிறைவு பெறும்வரை பார்வையாளன், பால் கான்ராயுடன் மூடப்பட்ட சவப்பெட்டியினுள் இருந்தாக வேண்டிய கட்டாயம்! ஒரு கணம்கூட கமெரா சவப்பெட்டியின் உள்வெளியை விட்டு விலகுவதில்லை.

இருண்ட திரையுடனும், ஆழமான மூச்சு ஒலிகளுடனும் ஆரம்பிக்கும் திரைப்படம், ஸிப்போ லைட்டரை எரியவிட்டு தான் ஒரு புதைக்கப்பட்ட சவப்பெட்டியினுள் அடைபட்டிருப்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ளும் திகில் கணங்கள் வழியாக பார்வையாளனிற்கு முதல் அதிர்ச்சியை எடுத்து வருகிறது. அம்மனிதன் அடைக்கப்பட்டிருக்கும் அந்த ஒடுங்கிய வெளியினுள், அவனது குழப்பமும், அச்சமும், கையறுநிலையும், சவப்பெட்டியை ஸிப்போவின் ஒளி நிரப்புவதைபோல் ரசிகனின் மனதை இருளும் ஒளியும் கலந்த பரப்பாக நிரப்புகின்றன. ஸிப்போவின் ஒளியிலும், கைத்தொலைபேசியின் மிளிர்விலும், மூச்சுத்திணற வைக்கும் கோணங்களிலும் ஒளிப்பதிவானது அடைபட்ட உணர்வை திரைக்கு அப்பால் கடத்த, இசை; திகிலை செவி வழி ஊதுகிறது. இந்த மனிதன் யார்? எதற்காக அவன் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறான்? எனும் கேள்விகளிற்கான விடைகள் குறுகிய வெளியினுள் ஆரம்பமாகும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரசிகனை எட்டுகின்றன.

buried-2010-18948-624553307 2006ம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் கனரக வாகன சாரதியாக ஈராக்கில் பணிபுரியச் சென்ற ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையே பெட்டிக்குள் அடைக்கப்பட்ட மனிதன் என்பதையும், அவன் பெயர் பால் கான்ராய் என்பதையும் தொலைபேசி உரையாடல்கள் வழியாக பார்வையாளன் அறிந்து கொள்கிறான். பால் கான்ராய் ஏற்படுத்தும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், உரையாடலும் அவற்றிற்கேயுரிய திகிலை பார்வையாளனிடம் கடத்த தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் தொலைபேசி உரையாடல் ஏதோ ஒரு காரணத்திற்காக துண்டிக்கப்படும்போதும் இதயம் தன் துடிப்பை சற்று உயர்த்தி இறக்குகிறது.

தன்னைப் புதைத்த மனிதனுடன்[ அல்லது பயங்கரவாதியுடன்!] பால் கான்ராய் உரையாடும் தருணங்களில், இரு பக்கங்களிலும் இருந்து பரிமாறப்படும் வாதங்களும், நியாங்களும் இந்த இரு மனிதர்களையும் பெரும் அரசுகளின் யுத்த அரசியலிற்கு பலியான இனமாகவே அடையாளம் காட்டுகின்றன. பால் கான்ராய் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பணம் சம்பாதிக்க அமெரிக்காவிலிருந்து ஈராக்கிற்கு பணிபுரிய வந்த ஒரு மனிதன். பால் கான்ராயை புதைத்தவனிற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவனும், அவன் குடும்பமும், அவன் தேசமும்கூட எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத யுத்தமொன்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை வலிமையாக முன்வைக்கிறார் இயக்குனர். விரும்பத்தகாத இந்த நிலைக்கு இவ்விரு மனிதர்களையும் இட்டு வந்த பணத்தின் பிரசன்னம் அரூபமாக ஒடுங்கிய வெளிக்குள் நகைக்கிறது.

நிலத்திற்குள் புதைக்கப்பட்ட நிலையில் தன் மீட்பிற்காக போராடும் ஒரு மனிதனை, அவன் நாட்டின் அரசின் பிரதிநிதிகளும், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகார உச்சங்களும் எவ்விதமாக புதைக்கமுடியும் என்பதை வலி ததும்ப இன்னொரு பக்கமாக திரையில் விரிக்கிறார் இயக்குனர் ராட்ரிகோ கோர்டேஸ். அரச பிரதிநிதிகளின் மெத்தனமும், கையாலாகத்தனமும், பொய்களும், இக்கட்டான சூழ்நிலைகளில் தம் பொறுப்புகளிலிருந்து கழன்றுவிடத்துடிக்கும் முதலாளிகளின் நரித்தனமான தந்திரங்களும் மனங்களை அதிரச் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

திரைக்கதையில் தொலைபேசி உரையாடல்கள் மூலம் மனித உறவுகளின் பல்வேறுபட்ட முகங்களை சவப்பெட்டியின் மீது மோத வைத்திருக்கிறார் இயக்குனர். உரையாடல்களை மட்டும் நம்பியிராது திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் பார்வையாளனை அசர அடிக்கிறார் அவர்.

படத்தின் ஒரே ஒரு நடிகரான! ரையான் ரெனோல்ட்ஸ், ஒரு குறுகிய வெளிக்குள் அடைப்பட்ட மனிதனின் உணர்வுகளை மிகவும் சிறப்பாக திரையில் காட்டியிருக்கிறார். ஒரு சில தருணங்களில் அவரின் நடிப்பும், உரையாடல்களும் மிகையானதாகவும், பொருத்தமற்றதாகவும் உணரப்படக்கூடும் எனிலும் படத்தின் இறுதித்தருணங்களின் வேகமும், திகிலும் சவப்பெட்டியின் பிளவுகளினுடாக வந்து விழும் மணல் போல் பார்வையாளனை திக்கு முக்காட வைக்கின்றன. Buried திரைப்படம் சஸ்பென்ஸ் பிரியர்களை மூச்சடைக்க வைக்கும். [***]

ட்ரெயிலர்

Friday, November 5, 2010

ரேப் ட்ராகன் - 26


காதல் கடல், கண்ணீர் அலை

கலெக்டிக் ரோமியோ காமா ஜோஸ் அவர்களின் காதல் இம்சை

நலம்தானா என்னுயிர்க் காதலரே என்ற காதல் ஜீவக் கேள்வியை காதல் கணையாக காமா ஜோஸை நோக்கி ஏவிய மொனிக்காவை பதறிப் போனவனாக தன் பாதங்களில் இருந்து அள்ளி எடுத்தான் காமா ஜோஸ்.

- மொனிக்கா, என் அன்பே, என்ன இது, என் பாதங்களில் உன் இதழ்கள் பதிவதற்கு நான் தகுதியானவன் இல்லை. என்னைப் போன்ற ஒரு கயவனிற்காகவா நீ உன் கண்ணீரை செம்முத்துக்களாக உதிர்க்கிறாய். கூடாது பெண்ணே கூடாது. உன்னை விட்டு, உன் உயிர் காதலைவிட்டு விலகிச் சென்றவன் நான் என்பதனை மறந்துவிடாதே.

- இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்திலும், உணர்வுகளிலும் என்றும் என்னையும் நம் காதலையும் பரிசுத்தமாக காத்து வந்திருக்கிறீர்கள். என் காதலரே, உங்களை என் கண்களில் கண்டதும் எனக்குள் நிகழும் மாற்றங்கள் வேதியியலையும் வெல்கின்றனவே.

- என் உயிரே, கட்டிக் கரும்பே, காதல் எறும்பே உன்னைவிட்டு நான் பிரிந்த நாள் முதலாய், உன் கொடிய சாபத்தை நீக்குவதற்கான வழிகளை கண்டறிய விழைந்தேன். உன் சாபத்திலிருந்து உன்னை விடுவிக்கும் விமோசனத்தைக் கண்டறியாது உன்னைக் காண்பதில்லை என தவமிருந்தேன். ஆனால் கண்கள் காணாவிடிலும், என் கரங்கள் உன் அழகை தழுவாவிடிலும் என் இதயத்தின் நினைவுகளின் ஏகபோக ராணி நீ. மொனிக்கா என் பேரின்பக் காதல் மோகினி.

- அத்தான்

- அப்படி அழைக்காதே, கூசுகிறது.

- அத்தான், அத்தான், அத்தான்

- ஹொய், ஹொய், ஹொய்

இவ்வாறாக இரு காதல் புறாக்களிற்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த குலவல் காதல் சம்பாஷணையைக் காது கொடுத்துக் கேட்ட குந்தவியும், டேனியும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்கள்.

- டேனி, எமக்கு மட்டும் இப்படி ஒரு காதலர் கிடைக்காமல் போய் விட்டாரேயடி, ஆகா….காதல் என்றால் இதுவன்றோ அமர காதல் என்றவாறே டேனியைக் கட்டிப்பிடித்து கண்ணீரை சொரிந்தாள் குந்தவி.

- ஆம் இளவரசி, கொடுத்து வைத்தவள் இந்த மொனிக்கா. காட்டேரியாக இருக்க சபிக்கப்பட்டாலும், ஒரு உண்மையான ஆண்மகனின் காதலில் அவள் உயிர் வாழ்கிறாள் என்றவாறே மூக்கை உறிஞ்சினாள் டேனி.

மென்னிக்கடி மொனிக்காவிடம் மரண அடி வாங்கிய சீனன் ஷங்லிங், காதல் புறாக்களின் பரிபாஷனையை வெறுப்புடன் பார்த்தான்… உலக மா கவி செக்ஸ்பீர் மட்டும் உங்கள் காதல் நாடகத்தை காண்பார் எனில் காதல் காவியங்களை எழுதுவதை நிறுத்திவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்து விடுவார். என்ன உருக்கம், என்ன நெருக்கம். காமா, இன்றுடன் இந்த மொனிக்காவின் கதையை முடித்து உன்னை இந்த கொடூரமான காதல் சிறையிலிருந்து விடுவிக்கிறேன். ம்ம் அவளை விட்டு விலகு என்றவாறே வெள்ளிக் குறுவாள் ஒன்றை உருவினான் சீனன்.

- அத்தான், தயவுசெய்து உத்தரவு தாருங்கள் மொட்டையின் இருப்பிற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்…

- முற்றுப்புள்ளி வைப்பது நீயல்ல அழகுப் பெண்ணே, நான்…. ரஃபிக்கின் குரல் அறையை அதிர வைத்தது. பஞ்சணையில் இருந்த தன் உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கிய ரஃபிக்…. அடேய், பச்சைக் கண்ணா, நீ ஒர் உண்மையான ஆண்மகன் என்றால் என் விலங்குகளிலிருந்து என்னை அவிழ்த்து விடு. மதம் கொண்ட களிறுகள் பொருதுவதுபோல் நாம் பொருதுவோம், உன் காதலிற்கும், ஆயுளிற்கும் நான் முற்றுப்புள்ளி இடுகிறேன். மொனிக்கா… என் காதல் மொனிக்கா, உன் காதலனை நான் அழிக்கப் போகிறேன் என்று என்னை வெறுக்காதே, உன் மேல் நான் கொண்ட காதலிற்காகவே இந்த செயலை நான் செய்யப் போகிறேன். இது காதல் யுத்தம். அதன் வெற்றிச் சங்காக ஒலிக்கப் போவது என் இதயத்தின் சத்தம்…. யாரங்கே… அடேய் மொட்டைத் தலை சீனா என் விலங்குகளிலிருந்து என்னை விடுவியடா, என்னுள் இருக்கும் விலங்கை நான் விடுவிக்கிறேன்… ரஃபிக்கின் சொற்கள் தீ அம்புகளாக நாலா திக்கிலும் பறந்தன.

- ஒஹோ, இவன்தானா அந்தப் புரட்சிக்காரன். காமா, இவனைக் கொன்று விடவா, அதிகம் துள்ளுகிறான் என்றான் சீனன்.

- வேண்டாம், அவனை நம் கப்பலிற்கு எடுத்துச் சென்றுவிடலாம்..

- சபாஷ், அருமையான யோசனை காமா, இவனை அடிமை வியாபாரிகளிடம் விற்று அழகான பெண் அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம்…

- அத்தான், இந்த சீனனுடன் சேராதீர்கள். இவன் ஒரு நாசக்கிருமி.

vampire - அழகியே, அத்தான், அத்தான் என்று நீ அந்தக் கோழையை அழைக்கும்போது, அவன் செத்தான் செத்தான் என்று என் மனம் பாடுகிறது… இடையில் புகுந்தான் புரட்சிக்காரன். ரஃபிக் இருந்த பஞ்சணையை சில எட்டுக்களில் நெருங்கிய சீனன், ரஃபிக்கின் கழுத்தில் ஓடிய நரம்பொன்றினை தன் விரல்களால் ஊன்றி அழுத்தவே மொனிக்.. என்றவாறே தன் நினைவை இழந்தான் ரஃபிக்.

- ஷங்லிங், ராஜமாந்தீரிகனும், இலுமினாட்டியும் ஓட்டி வரும் புஷ்பக் விமானத்தில் குந்தவியை ஏற்றியனுப்பு. என்னை சற்று தனிமையாக மொனிக்காவுடன் இருக்க விடு. ம்ம்ம்.. கிளம்பு சீனா என்றான் காமா

- ஆமாம், கிளம்படா மொட்டைத்தலை சீனா என்றாள் கேலியாக மொனிக்கா.

- மொனிக்கா, அவனை வையாதே, அவன் ஒரு நாசக்கிருமிதான் ஆனால் அவன் உருவாக்கும் அழிவுகள் கொஞ்சமே…மொனிக்காவின் காதுகளில் மென்மையாக கிசிகிசுத்தான் காமா

- காமா, இந்த அழகியையும் கப்பலிற்கு இட்டுச் செல்லவா என்றவாறே டேனியை நோக்கி தன் தலையை நீட்டிச் சிரித்தான் சீனன்.

- அதனை விட நான் இறப்பதே மேல் என்றவாறே குந்தவியை அணைத்த டேனி... இளவரசி, பிறந்தால் அடுத்த பிறப்பில் உங்களிற்கு தோழியாக நான் பிறக்க வேண்டும் என்று கூறி இளவரசியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

ரஃபிக்கை விலங்குகளிலிருந்து விடுவித்த சீனன், அடடா இந்தக் கனம் கனக்கிறானே என்றவாறே அவனை அந்த அறையிலிருந்து இழுத்துக் கொண்டு சென்றான். அறையிலிருந்து வெளியேறுமுன்.. ஆகா என்ன அருமையான பஞ்சணை என்று கூறி காமாவை பார்த்து தன் கண்களை சிமிட்டினான். மொனிக்கா நாணினாள்.

மயங்கிய நிலையிலிருந்த ரஃபிக்கை ஆதரவுடன் நோக்கிய குந்தவி.. என் அன்பே, என் காதலே, என் விளையாட்டு இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே, உன்னை நான் மீண்டும் காணும் நாள் வருமா என்று மனதினுள் அழுதாள். மனம் வடித்த கண்ணீர் அவள் விழிகளில் அரும்ப ஆரம்பித்த கணத்தில் அறைக்குள் சிதறிக் கிடந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் அவள். அறையில் காதலும், காதலரும் தனியே நின்றனர்.

- அத்தான் இனியும் உங்களை என்னால் பிரிந்திருக்க முடியாது, என்னுடன் வந்து விடுங்கள்.

- இல்லை மொனிக்கா. உன் காட்டேரி சாபத்தை போக்க வழிகள் உண்டு என்பதாக அறிகிறேன். மன்மதக்குகை தீவுகளை தேடுபவையாகவே என் பயணங்கள் அமைந்திருக்கின்றன. அதுவரை பொறுத்திரு பெண்ணே.

- நீங்கள் திரும்பாவிடில்..

- என் இதயத்தில் உன்னையும், உன் உயிரில் என்னையும் கொண்டு இந்தக் காற்றில் உன் காதல் தேடி வருவேன்..

- அய்யகோ, அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்..

- பெண்ணே, பிரியும் நேரமிது, விடைகொடு.

மொனிக்காவின் இதழ்கள் காமாவின் இதழ்கள்மேல் பதிந்தன, காமாவின் கரங்கள் மொனிக்காவை அள்ளி அணைத்தன, அவர்கள் இருவரினதும் நாக்குகளும் ஆரத் தழுவிக் கொண்டன. சொர்க்கம் என்பது இதுதானே என்பதை இருவரும் உணர ஆரம்பித்த நிலையில் காமாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அறையின் கூரை வழியாக வெளியே பறந்தாள் மொனிக்கா.

சொகுசு விடுதியை விட்டு கனத்த மனதுடன் வெளியே வந்த காமா, வானில் ராஜமாந்தீரிகனின் புஷ்பக் விமானம், குத்து நகரின் திசையில் வேகமாக பறந்து கொண்டிருபதைக் கண்டான். புஷ்பக் விமானத்தை விழி வெட்டாது பார்த்த அவன் தோளின் மீது, மேலேயிருந்து வந்த ஏதோ ஒன்று விழுந்து உருண்டது. தன் கைகளில் அதனைப் பற்றிய காமா, நிலவு வெளிச்சத்தில் அது என்னதென்று நோக்கினான். அந்த செங்கண்ணீர் முத்து அவன் கண்களை காதலுடன் பார்த்தது. தன் கண்களை மேலே உயர்த்தினான் காமா. நிழலான ஒரு உருவம் அவனை விட்டு தூரமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது கலங்கலாக அவன் கண்களில் வீழ்ந்தது.

=================

கப்பலில் ரஃபிக்கிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான் ரஃபிக். இரவு நன்றாக ஏறிவிட்ட வேளையில் அவனது எதிர்காலமானது அந்த இரவைவிட இருளாக அவனிற்கு காட்சியளித்தது. கொடிய சீனன் தன்னை அடிமை வியாபாரிகளிடம் விற்று விடுவான் என்பதை ரஃபிக் உறுதியாக நம்பினான். இவ்வேளையில் அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. கையில் விளக்குடன் அறையினுள்ளே நுழைந்தாள் ஒரு அழகி. அவள் கண்கள் கடலினதும், ஆகாயத்தினதும் நீலத்தைக் கலந்த வண்ணத்தைக் கொண்டிருந்தன. அவள் உடலெங்கும் அழகு தோரணம் கட்டி குதூகலித்துக் கொண்டிருந்தது. விளக்கை கீழே வைத்த அவள் ஏதும் பேசாது தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். அந்த அழகி தன் ஆடைகளை களைந்ததால் பதறிப்போன ரஃபிக், பெண்ணே நீ யார், ஏன் ஆடைகளைக் களைகிறாய் என்றான்.

- ஆணழகே, இந்த துர்பாக்யவதியின் பெயர் நீல அழகி. கொள்ளையர் கப்பலில் இருக்கும் கொடியவர்களிற்கு என் உடலை பரிமாற வேண்டியது என் சாபம். அழகியின் வார்த்தைகளை கேட்ட புரட்சிக்காரனின் ரத்தம் சூடாக ஆரம்பித்தது. உள்ளம் கொதித்தது. மீசை துடித்தது.

- அழகியே, இந்தக் கொடிய செயலை உன்னை செய்யத் தூண்டியவர் யாரோ.

- வேறு யார், குரூர மனம் கொண்ட சீனன் ஷங்லிங்.

- பெண்ணே, பேரழகே, நீலப்புஷ்பமே நான் சொல்வதை நன்றாகக் கேள். கொடிய கடற்கொள்ளையர்களான காமா ஜோஸையும், ஷங்லிங்கையும் கடல் அரக்கன் புட்டுக் கிறுக்கனின் பலிபீடத்திற்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கப்பலை எனதாக்குவேன். உன்னை என் ராணியாக்குவேன். இது இந்த வானின் மீது ஆணை, இந்த வையத்தின் மீது ஆணை, இந்தக் கடலின் மீது ஆணை, ஏன் நான் உன் மேல் கொண்டிருக்கும் உயிர்க் காதல் மீது ஆணை…

ரஃபிக்கின் ஆவேசக் குரல் இருளில் ஓடிய காற்றில் கலந்து, கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தழுவியது. இதைப்போல பல சபதங்களையும், காதல்களையும் தன் உடல் மேல் தழுவவிட்ட அந்தக் கப்பல், சிருங்காரமாக ஆடிய அலைகளில் தன் உடலை நளினமாக நகர்த்தியது. தன் முன்பாக பிரம்மாண்டாமாக உருவெடுத்த அலையைக் கிழித்து உடைக்க வேகமாக முன்னே பாய்ந்தது ரேப் ட்ராகன்.

rdfin

ராஜமாந்தீரிகன் கருந்தேள், இளவரசன் இலுமினாட்டி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்கள், புரட்சிக்காரன் ரஃபிக், காமா ஜோஸ் ஆகியோரிற்கு என் அன்பான நன்றிகள்.

நண்பர்கள் அனைவரிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Sunday, October 31, 2010

விட்டத்தில் மலர்ந்த வண்ணத்திகள்


மனச்சிக்கல்கள் கொண்ட தன் மனைவியை விட்டு பிரிந்து, தன் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான் Uxbal [ Javier Bardem ]. தனக்காகவும், தன் குழந்தைகளினது ஜீவிதத்திற்காகவும் அவன் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை ஒன்றின் முடிவுகள் உக்ஸ்வாலிற்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதையும், அவன் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதையும் அவனிற்கு அறியத்தருகிறது….

மெக்ஸிக்க இயக்குனரான Alejandro Gonzalez Inarritu, Amores Perros முதல் Babel வரையிலான தன் திரைப்படங்கள் வழி, திரையில் கவித்துவமாக கதையை நகர்த்தும் தன் திறமையை சினிமா ரசிகர்களிற்கு நிரூபித்தவர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடிகரான Javier Bardem, Mar Ardentro, No Country for Old men போன்ற திரைப்படங்கள் வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட ஒரு சிறப்பான கலைஞன். இந்த இரு திறமைசாலிகளின் கூட்டணியிலும் உருவான திரைப்படமான Biutiful குறித்து ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்புகள் உருவானதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பார்சலோனாவின் புறநகர் ஒன்றில், வசதி குறைந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே Biutiful படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் வாழும் ஒரு மனிதனாகவே உக்ஸ்வால் அறிமுகமாகிறான். உக்ஸ்வாலின் தினசரி வாழ்க்கையானது சிரமமானது. தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது முதல், பார்சலோனாவில் வதிவதற்கு தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் சட்டவிரோதமாக வாழும் சீன, ஆபிரிக்க இனத்தவர்களை, முதலாளிகளிடம் வேலைக்கு அனுப்பி அதில் சிறிது பணம் ஈட்டுவதுவரை, உக்ஸ்வால் ஒவ்வொரு கணத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குனர் இன்னாரிட்டு, பல மனிதர்களின் வாழ்க்கைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் கதை சொல்லலை தவிர்த்து, கதையின் மாந்தர்கள் யாவரும் உக்ஸ்வாலுடன் ஏதோ ஒரு வகையில் நேரடித் தொடர்பை கொண்டிருப்பவர்களாக சித்தரித்திருக்கிறார். கதையும் நேர்கோட்டு பாதையில் பயணிக்கிறது. கதையின் மாந்தர்களை பாதிக்கும் எந்த ஒரு சம்பவமும் உக்ஸ்வாலையும் பாதிக்கவே செய்கிறது. அவர்களின் புன்னகையிலும், கண்ணீரிலும் உக்ஸ்வாலிற்கு பங்கு தவறாது கிடைத்துவிடுகிறது.

பார்சோலானவில் தகுந்த ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் சீன மற்றும் ஆபிரிக்க இனத்தவர்கள் மீது நிகழ்த்தபடும் சுரண்டல்களும், தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் திரைப்படுத்துவதில் பின்னியிருக்கிறார் இயக்குனர் இன்னாரிட்டு. சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் குறித்து பீற்றிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஐரோப்பாவில் இன்று அந்நிய நாட்டு மக்கள் குறித்த உண்மை நிலையானது இன்னாரிட்டு திரைப்படுத்தியதை விட மோசமான எல்லைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ஐரோப்பாவில் வதியும் அந்நியர்கள் மறுக்க மாட்டார்கள்.

biutiful-2010-18524-475996845 உக்ஸ்வாலிடம் இறந்துபோனவர்களின் ஆவிகளுடன் தொடர்பாடக்கூடிய ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலையும் சிறிது பணம் ஈட்ட அவன் பயன்படுத்திக் கொள்கிறான். இறப்பின் பின் இருக்கக்கூடிய ஒரு வாழ்வின் மீது பரிச்சயம் கொண்ட உக்ஸ்வால், தான் இவ்வுலகை விட்டு நீங்கி மறுவுலகிற்குள் நுழையும் முன், தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்க விழைகிறான், தன் தவறுகளிற்கு பிராயசித்தம் காண ஓடுகிறான், தான் தவறிழைத்த ஆன்மாக்களிடம் மன்னிப்பை வேண்டுகிறான், தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயல்கிறான். ஆனால் வாழ்வின் எதிர்பாராத அழகுகள் அவனை சுற்றி சுற்றி அடிக்கின்றன. அவன் மீது பாரங்களை படிப்படியாக ஏற்றி விட்டத்தில் மலர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மரணத்தின் பிரசன்னத்தின் முன் அவனை முடங்க வைக்கின்றன. பார்சோலானாவின் அந்நியர்களின் முகங்களினதும், அடையாளங்களினதும், வாழ்கைகளினதும் ஊடு அவர்களைப்போலவே வாழ்வின் நுண்ணிய அழகுகளை தரிசிக்க வேண்டி மரணத்துடன் போட்டி போட்டு இயங்குகிறான் உக்ஸ்வால். பொறுப்பான தந்தை பிம்பத்திற்காக உக்ஸ்வால் அயராது செயற்படுகிறான். இயக்குனர் இன்னாரிட்டுவும் தன் தந்தைக்கு இப்படத்தை சமர்பித்திருக்கிறார்.

மிகவும் சிக்கலும், கனமும் நிறைந்த உக்ஸ்வால் பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் ஹாவியர் பார்டெமின் அர்பணிப்பை பாராட்ட வார்த்தைகளை தேடுவது சிரமமான ஒன்று. படம் முழுக்க நிறைந்து நிற்கிறார் அவர். அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. அவரது திறமையின் வீச்சு ரசிகனை திகில் கொள்ள வைக்கிறது.

ஆனால், அற்புதமான ஹாவியர் பார்டெம்மின் திறமை இருந்தும் கூட திரைப்படமானது அதன் பிடியிலிருந்து பார்வையாளனை இழக்க ஆரம்பித்து விடுகிறது. இயக்குனர் இன்னாரிட்டுவின் கவித்துவமான மனம் நெகிழ வைக்கும் இயக்கம்கூட இந்த பிடியிழத்தலிலிருந்து ரசிகர்களை மீட்க முடியவில்லை. திரைப்படத்தின் துன்பங்களும், வேதனைகளும், அழுத்தங்களும் திரையிலிருந்து ரசிகனை அமுக்கி திணற வைக்கின்றன. சலிப்பின் எல்லையையும் சற்று எரிச்சலையும் அவன் உணர ஆரம்பிக்கிறான். அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன. திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு மனவுளைச்சலுடன் வெளியேறிச் செல்லும் உணர்வை திரைப்படம் வழங்குகிறது. தன் பெயரிற்கேற்ற அழகை காட்ட இன்னாரிட்டுவின் படைப்பு திணறுகிறது. ஹாவியர் பார்டெம் மட்டுமே தெரிகிறார், பெரும் அழகுடன். [**]

ட்ரெயிலர்

Friday, October 29, 2010

ரேப் ட்ராகன் - 25

சீனன் சம்ஹாரம்

ஆதிஜோக்களின் பிரதிநிதியும் பிங்பிங் மன்மதக்கலையில் வல்லவருமான மொட்டைப்பருந்து சீனன் அவர்களின் கும்மாங்கு குத்து

தன் உயிர் அவள் கைகளால் நீங்கினால் அது ஒரு பாக்யம் என்று வேண்டிய ரஃபிக்கின் கலங்கரை விளக்கில் தன் நீண்ட வேட்டைப் பற்களைப் பதித்து அவன் குருதியை உறிஞ்ச மென்னிக்கடி மொனிக்கா தயாரான தருணத்தில், பலத்த ஓசையுடன் அறையின் கூரைகளைச் சிதைத்த வண்ணம் தரையில் வந்து விழுந்து வெடித்து திறந்த பாதுகாப்புக் கவசங்கள் கபிலவிழியாளின் கவனத்தை ரஃபிக்கிடமிருந்து திசை திருப்பின.

ஆனால் பாதுகாப்பு கவசங்களிலிருந்து முதலில் வெளியேறிய அந்த உருவத்தைக் கண்டதும் மொனிக்காவின் கரங்கள் அந்த உருவத்தின் தலையை உடனடியாக கொய்து வீச பரபரக்க ஆரம்பித்தன. மேலும் தான் அந்த அறையில் இருப்பதை அவதானிக்காது தம் உடல் அழகை வெட்கம் ஏதுமின்றி உலகிற்கு காட்டி நின்ற இரு அழகுகளையும் தன் கண்களால் மேய்ந்தவாறே அந்த உருவம் நாடக பாணியில் செய்த சலாமும் மொனிக்காவினை எரிச்சல்படுத்தவே சற்றுக் கடூரமான குரலில்…அடேய், மொட்டைத்தலை சீனா என்று கத்தினாள் அவள்.

அழகுப் பதுமைகளை நோக்கி நளினமாக சலாம் வைத்த நிலையில் மொனிக்காவின் கடூரமான குரல் எதிர்பாராமல் வந்து தாக்கவே சற்று அதிர்ந்துபோன சீனன், நிமிர்ந்தான். திரும்பினான். மென்னிக்கடி மொனிக்காவை அங்கு கண்ட சீனனின் விழிகள் அச்சம் கலந்த வியப்புடன் விரிந்தன. தன் மொட்டைத்தலையில் எஞ்சியிருந்த நுரையை தடவிய சீனன்… வந்தனம் மொனிக்கா, உன்னை என் கண்கள் கண்டு காலங்கள் ஆகிவிட்டன என்றான்.

- அது உன் அன்னை செய்த புண்ணியம்… கபிலவிழியாளிடமிருந்து பதில் வெடுக்கென வந்தது…. டேய் சீனா, என் காதலை நிறைவேறாமல் செய்தது மட்டுமல்லாது என் காதலனையும் தவறான பாதையில் இட்டு செல்ல தூபம் போடுகிறாயாமே…தொடர்ந்தாள் கபிலவிழியழகி.

- உன் காதலை நான் நிறைவேறமால் செய்தேனா! இது என்ன புதுக்கதை மொனிக்கா.

- படுபாவி, நானும் அவரும் மாலைமாற்ற வேண்டிய வேளையில் நீ என் காதலரை கடத்தி செல்லவில்லையா.

- நீ உன் காதலனிடம் ஒரு முக்கிய உண்மையை தெரிவிக்காது மாலை மாற்றத் துணிந்தாய், மேலும் உன் காதலன் என் நண்பன்.

- என்ன உண்மையை நான் மறைத்தேன் சண்டாள மொட்டைப் புழுவே.

- நீ ஒரு ரத்தக்காட்டேரி எனும் உண்மையை..

சீனனின் பதில் கூரிய கட்டையாய் மொனிக்காவின் இதயத்தில் பாய்ந்தது. சீனனிற்கு எதிர் பதில் ஏதும் தர இயலாத ஒரு வெளிக்குள் தான் அடைபடுவதை கபிலவிழியாள் உணர்ந்தாள்.

- ரத்தம் உறிஞ்சும் உயிரற்ற பிறவியுடன் என் நண்பன் வாழ்ந்திருக்க நான் அனுமதியேன்… இன்றும், அன்றும், என்றும்… தன் முகத்தில் ஏளனப் புன்னகை ஒன்றை தவழ விட்டான் மொட்டைத் தலை சீனன்.

- ஏன்…ஏன்.. காதல் எனும் உணர்வை நீ எனக்கு மறுக்கிறாய். அதனைப் பருகுவதற்கு எனக்கு உரிமையில்லையா. என் காதலிற்கு குறுக்கே நிற்கும் உன்னை இன்றுடன் ஒழித்துக்கட்டுகிறேன்… ஆவேசமாக கத்திய மொனிக்கா தன் கால்களை தரையில் ஓங்கி அடிக்கவே அவள் அதி குட்டைப் பாவாடைக்குள் இருந்து சில வவ்வால்கள் அரண்டு வெளியே பறந்து சென்றன.

- ஹாஹாஹா…. உன் காதல் கோவிலில் வவ்வால்கள் வாழ ஆரம்பித்து விட்டனவா. சபாஷ், உன் காதலை நீ கோட்டை கட்டி பாதுகாத்திருக்கிறாய் மொனிக்கா.

- என் உடலும், உள்ளமும் என் காதலரிற்கு மட்டும்தான் சொந்தம்.

- அப்படியானால் உன் உயிர் யாரிற்கோ… சீனனின் இந்தக் கேள்வியால் மீண்டும் நிலைகுலைந்தாள் மொனிக்கா.

- அற்ப பதரே, என் மரணம்கூட என் காதலரிற்காகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். ஆனால் அதன் முன்பாக உன்னை நடைபிணமாக அலைய வைக்கிறேன். நள்ளிரவு வேளைகளில் உன்னை ரத்தப் பிச்சை எடுக்க செய்கிறேன். மொட்டைப் பேயாக உலாவ பண்ணுகிறேன். என் மீது விழுந்த இந்த சாபத்தின் வேதனையின் ஒரு கூறை உன்னை உணர வைக்கிறேன்… இதனைக் கூறியவாறே சீனனின் மீது வெகுவேகமாகப் பாய்ந்த மொனிக்கா, சீனனின் கால்களைப் பிடித்து அவனை தலை கீழாக தூக்கி எறிந்தாள்.

Rape Dragon அறையின் குறுக்கே வல்லூறு பாய்ச்சலில் பறந்து சென்ற சீனன் சுவரொன்றில் பலமாக மோதி கீழே விழுந்தான். கீழே வீழ்ந்த சீனனின் மீது தாமதிக்காது பாய்ந்த மொனிக்கா, தன் கரங்களால் சீனனின் தலையை அழுத்தியபடியே அவளது கூரான பற்களை சீனன் மேல் அழுத்திப் பதித்தாள்.

சுவரில் மோதியதால் கலங்கிப்போன சீனன் தன்னால் இயன்றவரை மொனிக்காவின் அசுரப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்க திமிறினான். ஆனால் மொனிக்காவின் பலத்தின் முன் அவன் திமிறல்கள் பஸ்பமாகின. தன் கழுத்தில் ஊசியாக ஏறிய மொனிக்காவின் பற்களை உணர்ந்தான் சீனன். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த சீனன், வாழ்கையில் தான் கண்ட அழகான பெண்களை நினைவில் கொண்டுவர முயன்றான். ஆனால் அந்த வேளையில்…. மொனிக்கா, அவனை விட்டுவிடு எனும் சொற்கள் அறையில் ஒலித்தன.

அந்த அறை கொண்டிருந்த வன்மத்தையெல்லாம் போக்கிவிடும் மென்மையுடன் எழுந்த அந்தக் குரலில் வாழ்ந்திருந்த இனிமை அறையிலிருந்த பெண்களின் இதயங்களை எல்லாம் ஆதுரமாக வருடிக் கொடுத்தது. அக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஒரு கணம் உறைந்தாள் மொனிக்கா. சீனனை தன் தலைக்கு மேல் தூக்கி அப்பால் வீசியெறிந்தாள். சிட்டுக்குருவிபோல் பறந்தான் சீனன்.

தன் நீண்ட கூந்தலை அழகாக கோதிவிட்ட மொனிக்கா, இனிமையான அந்தக் குரல் வந்த திக்கில் திரும்பினாள். குரலிற்கு சொந்தமான உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்தின் முன் மண்டியிட்டாள். தன் தலையை தாழ்த்தியவாறே அந்த உருவத்தின் பாதங்களை நோக்கி நகர்ந்து அவற்றை தன் இதழ்களால் முத்தமிட்டாள். அவள் இதயத்தின் ஆழமான ஊற்றுக்களிலிருந்து பீறிட்டு பொங்கி அவள் விழிகள் வழி வழிந்த கண்ணீர், அப்பாதங்களை செங்கண்ணீர் முத்துக்களால் குளிப்பாட்டியது.

- நலம்தானா என்னுயிர் காதலரே….. காமா ஜோஸின் பாலைவன இதயத்தை நோக்கி காதல் மழை அம்புகளாக பாய்ந்தன மொனிக்காவின் வார்த்தைகள்.

Sunday, October 24, 2010

ஐநூறு மில்லியன் நண்பர்கள்


Mark Zuckerberg, உலகின் மிகவும் இளவயது கோடீஸ்வரன். இன்னமும் சிகரங்களை வெல்லப்போபவன். பில்கேட்ஸையை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடப்போபவன். இன்று ஐநூறு மில்லியன் அங்கத்தினர்களை எட்டிவிட்ட ஃபேஸ்புக்கை உருவாக்கிய கர்த்தா!! The Social Network திரைப்படத்தை David Fincher இயக்குகிறார் என்பதை நான் அறிந்திராவிடில் மார்க் ஸுக்கர்பெர்க் என்பது எனக்கு பரிச்சயம் ஆகாத ஒரு பெயராகவே நீடித்திருக்கக்கூடும்.

The Social Network திரைப்படமானது இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத இணைய சமூக உறவாடல் வலை அமைப்பான ஃபேஸ்புக் எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அதன் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய மனிதர்கள் குறித்தும் பேசுகிறது.

பல்கலைக்கழக இணையத்தளங்களினுள் அத்துமீறி நுழைந்து, மாணவிகளின் போட்டோக்களைத் திருடி அவற்றை தன் வலைப்பூவில் இட்டு கவர்ச்சிக் கன்னி யார் எனும் போட்டி நடாத்திய இளம் மாணவன் மார்க் ஸுக்கர்பெர்க் [Jesse Eisenberg] எவ்வாறு உலகின் இளம் கோடிஸ்வரன் எனும் நிலையை அடைந்தான் என்பதை பிரம்மாண்டங்கள் ஏதுமின்றி அருமையான ஒரு திரைக்கதையின் வழியாக சலிப்பின்றி திரையில் விரிக்கிறது தேர்ந்த இயக்குனர் டேவிட் பின்ச்சரின் சிறப்பான இயக்கம். Ben Mezrich என்பவர் எழுதிய The Accidental Billionaires எனும் நூலைத் தழுவி திரைக்கதையானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் என்பது மார்க் ஸுக்கர்பெர்க்கின் மனதில் உதித்த கருவா இல்லை அதை அவன் வேறு யாரிடமாவது இருந்து திருடிக் கொண்டானா? ஃபேஸ்புக்கை உருவாக்குவதில் ஆரம்பநிலைகளில் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு உறுதுணையாக நின்ற அவன் ஒரே நண்பன் Eduardo Saverin [Andrew Garfield] க்கு மார்க் துரோகம் இழைத்தானா? மார்க் ஸுக்கர்பெர்க் என்பவன் எவ்வாறான ஒரு மனிதன்? எனும் கேள்விகளை திரைக்கதையின் ஓட்டமானது மனதில் எழவைக்கிறது. அதற்கேற்ப திரைப்படமானது, சட்டவல்லுனர்களும், முக்கிய கதாபாத்திரங்களும் கூடியிருக்கும் ஒரு விசாரணை அறையிலிருந்து காலத்தில் பின்னோக்கி பாய்ந்து மனதில் எழுந்த கேள்விகளிற்கு விடைதர விழைகிறது.

the-social-network-2010-17423-365668668 தங்கள் சிந்தனையில் உதித்த கருவை மார்க் ஸுக்கர்பெர்க் திருடிவிட்டான் என குற்றம் சாட்டும் Winklevoss சகோதரர்கள், தனக்கு துரோகம் இழைத்து ஏமாற்றி விட்டான் என மார்க்கை குற்றம் சாட்டும் அவன் முன்னை நாள் நண்பன் எடுவார்டோ, இவர்களின் குற்றச்சாட்டுக்களை அமைதியாக எதிர்கொள்ளும் மார்க் என பாத்திரங்கள் அனைத்தும் தமது பக்க நியாயங்களிற்காகவும், உண்மைகளிற்காகவும் போராடுபவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். இவன் நல்லவன், இவன் மோசமானவன் என யாரையுமே இயக்குனர் சுட்டிக் காட்டவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது கதைகளை கூறுவதன் மூலம் ஃபேஸ்புக்கின் வரலாறு சுவையான வகையில் பார்வையாளனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த இளம் கதாபாத்திரங்கள் வழி இன்றைய சக்தி மிகுந்த புத்திசாலித்தனம் நிரம்பிய இளம் தலைமுறையின் வெற்றிப் போட்டியையும், அதற்காக அவர்கள் செல்லக் கூடிய எல்லைகளையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

முக்காடுபோட்ட குளிர் மேலங்கியுடனும், காலில் அணிந்த செருப்புக்களுடனும் வலம் வரும் மார்க் ஸுக்கர்பெர்க், ஹர்வார்ட் மாணவ சமூகத்திலிருந்து சற்று ஒதுங்கியவனாக, கேளிக்கைகளை பெரிதும் தவிர்த்து தன் லட்சியத்திற்காக இரவு பகல் என்று கடுமையாக உழைக்கும் ஒருவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சமூகத்திடமிருந்து முற்றிலுமாக தொடர்பை துண்டித்து விட்ட ஒருவனாக இப்பாத்திரப் படைப்பு இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தன் மனதில் உறவிற்கு இடம் ஒன்றை வைத்திருப்பவனாகவே மார்க் ஸக்கர்பெர்க்கை உணர்ந்துகொள்ள முடிகிறது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் ஜெஸ் ஐஸன்பெர்க் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.

the-social-network-2010-17423-341819701 ஃபேஸ்புக்கினை மார்க் ஸுக்கர்பெர்க்குடன் இணைந்து உருவாக்கியவனாக அறியப்படும் எடுவார்டோ சேவரின் பாத்திரம் நட்பு, துரோகம், தோல்வி என அனைத்தையும் சுமந்து நின்று மனதை தொடுகிறது. எடுவார்டோவின் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Andrew Garfield தன் திறமையால் ரசிகர்களை கலங்கடிக்க வைக்கிறார். ஃபேஸ்புக்கின் எல்லைகளை விரிவிப்பதில் பெரிதும் முன்னின்ற தொழில் முனைவனான Sean Parker பாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரபல பாடகர் Justin Timberlake அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்துகிறார். எடுவார்டோவிற்கும் ஷோன் பார்க்கரிற்குமிடையில் உருவாகும் பொறாமை கலந்த வெறுப்பும், மார்க் ஸுக்கர்பெர்க்கின் அருகில் தான் மட்டுமே நெருங்கியிருக்க வேண்டும் எனும் அவர்களின் விருப்பும் இயல்பான முறையில் திரைப்படத்தில் டேவிட் பின்ச்சரால் படமாக்கப்பட்டிருக்கிறது. மூன்று இளம் நடிகர்களிடமிருந்தும் அட்டகாசமான விளைவுகளை பெறுவதில் இயக்குனர் தவறவேயில்லை.

படத்தின் திரைக்கதையோடு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் பின்னணி இசை. அருமை என்பதை தவிர சொல்ல வேறொன்றுமில்லை. வழமைபோலவே டேவிட் பின்ச்சரின் இயக்கம் திரைப்படத்தை ஒரு த்ரில்லர்போல் நகர்த்தி செல்கிறது. உரையாடல்கள் அதிகம் நிரம்பிய இத்திரைப்படத்தின் இரண்டு மணிநேரம் கடந்து செல்வதை உணர முடியாத வகையில் அவரின் இயக்கம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.

The Social Network திரைப்படம் போரடிக்குமா? இல்லவே இல்லை. பிரமிக்க வைக்குமா? நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தி மனதை நிச்சயமாக ஆக்கிரமிக்கும்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் இளம் கோடிஸ்வரன் மார்க் ஸுக்கர்பெர்க்கை சுற்றியிருக்ககூடிய ஒரு தனிமையை மெளனமாக உணர்த்துகிறது. ஐநூறு மில்லியன் நண்பர்கள் நிறைந்த ஃபேஸ்புக்கில் மார்க்க்கிற்கு ஒரு உயிர் நண்பனாவது இல்லாமலிருந்தால் அது பரிதாபமான ஒன்றுதான். [****]

ட்ரெயிலர்

Friday, October 22, 2010

ரேப் ட்ராகன் - 24


1008 நைட்ஸ்

- பின்பு என்ன நடந்தது? சிந்துபாத்திடம் இருந்து வந்த கேள்வி உவர்ப்பு பூசிய கடல் காற்றோடு வந்து புரட்சிக்காரன் ரஃபிக்கை மெதுவாக தீண்டியது. கப்பலின் மேற்தளத்தில் கயிற்றுச் சுருள்கள் மத்தியில் அமர்ந்திருந்த ரஃபிக்கின் கண்கள் முடிவற்று பரந்திருந்த கடலை நோக்கிய வண்ணமிருந்தன.

கடல் வழமைக்கு மாறாக அன்று அமைதியுடன் இருந்தது. ரஃபிக்கின் மனம், அமைதியை கடலில் கரைத்து விட்டிருந்தது. அந்தி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையின் சூரியன், அடிக்கும் செவ்வண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தான். காற்றின் இசையும், அலைகளின் சங்கீதமும் அந்தக் கணத்திற்கு மேலும் ரம்யம் சேர்த்தன.

- புரட்சிக்காரா, உன்னிடத்தில் நானிருந்தால் சிந்துபாத்திடம் கதைகள் கூறுவதில் எச்சரிக்கையாக இருப்பேன்… தன் மொட்டைத் தலையை தடவியபடியே கூறினான் அவர்களை நெருங்கிய சீனன்.

- சீனா, என்ன இது! ஏன் இப்படிக் கூறுகிறாய்! நான் என்ன தவறு செய்தேன்.. சிந்துபாத் சற்று வருத்தம் கலந்த குரலில் கேட்டான்.

- இப்படியாக நீ கேட்ட கதைகளைத்தான் சிந்துபாத்தின் சாகஸங்கள் என்ற வகையில் 1008 நைட்ஸ் தொகுப்பிற்கு நீ விற்றுவிடவில்லையா, சாகசங்களை செய்தது வேறொருவர் ஆனால் காலத்திற்கும் நிலைத்திருக்கும் பெயரைப் பெறுபவர் வேறொருவர். ஏன் காமா ஜோஸின், முன்னைநாள் கன்னிகளின் தீவு சாகஸத்தைக்கூட உன் அதிரடியென நீ அளந்து கட்டி விற்கவில்லையா.

- சீனா, புகழின் போதைக்கு அடிமையாகாத உயிர்கள் இங்கு உண்டா, பிறந்த குழந்தையிலிருந்து தள்ளு வண்டியில் மரணத்தின் இதழ் முத்தம் காத்து நிற்கும் முதியவர்வரை அதனை யாசிக்கிறார்களே. மேலும் இந்த வகையிலாவது இந்த சாகசங்கள் காலத்தில் என்றென்றைக்கும் பதியப்பட்ட கணங்களாகுமே. இந்த நல்லெண்ணத்தில்தான் என் பெயரில் ஏனையோர் சாகசங்களை கதையாக்கி விடுகிறேன்.

- சிந்துபாத், நீ கூறுவதுபோல் புகழ் உயிரின் பின்னும் நிலைத்திருப்பதுதான். ஆனால் பிறரை நாம் முட்டாள் ஆக்குகிறோம் என்பதை நாம் மறந்து விடலாகாது. ஆனால் நீ என்ன செய்ய முடியும், தாம் படிப்பதை எல்லாம் அசல் என்று நம்பிவிடும் அப்பாவி உலகம் இது…என்று கூறியவாறே மேற்தளத்தின் ஒரு பகுதியில் அந்திச் சூரியனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்த பச்சைக் கண்ணனை நோக்கி நகர்ந்தான் சீனன்.

- காமா… தன் அழைப்பிற்கு பச்சைக் கண்ணனிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காததால் சீனன் தன் பேச்சைத் தொடர்ந்தான்… கைகூடமுடியாக் காதலை நினைத்து உருகுவதில் என்ன பயன். இனியாவது நீ அவளை உன் இதயத்தின் துடிப்புகளிலிருந்து உதறிவிட்டு உன் வாழ்கையில் இன்பத்தின் தழுவல்களை அனுமதிக்க வேண்டும். இந்தக் குறுகிய வாழ்க்கையில் நீ அனுபவிக்க தவறுவதையெல்லாம் சற்று எண்ணிபார் காமா. காலம் முழுவதையும் இப்படியே கரைக்கப் போகிறாயா. போகிற போக்கில் காதலிற்காக கோவில் ஒன்றை கட்டினாலும் கட்டுவாய் போலிருக்கிறதே.

- சீனா, நீ காதலித்திருக்கிறாயா?

- அந்தக் கருமாந்திரம் எனக்கெதற்கு. காமம் அறிந்தவன் காதலை தேடுவதில்லை, காதலை தேடுபவன் தன் காமத்தை உரைப்பதில்லை. மேலும் ஒரே ஒரு பெண்ணிற்கு மட்டும் என் இதயத்தில் இடம் தருமளவிற்கு கஞ்சனல்லவே நான்.

- என்னால் அவளை மறக்க முடியவில்லையே சீனா. என் உறக்கத்தினுள் சூரியனாக விடிகிறாளே அவள். என் விழிப்பிலே உயிரென துடிக்கிறாளே அவள். அவள் கண்ணீரிற்கு காரணம் அவள் என்மேல் கொண்ட திவ்ய காதல் அல்லவா. ஒரு வேளை அவள் என்னுயிரை எடுத்துக் கொண்டாள் எனில்..ஹாஆஆஆ…. இப்போது மட்டும் அவள் என்னுயிரை எடுத்துக் கொள்ளவில்லையா என்ன… என் மனம் அதன் அமைதியின் கருவறையை கண்டு கொள்ளும்.

- காமா என்ன உளறுகிறாய், காதலிற்காக உயிரை விடுவது முட்டாள்தனம்.

- இருக்கலாம். காதலில் வீழ்ந்தபின் எவன் புத்திசாலியாக இருக்கமுடியும். அவளிற்காக நான் முட்டாளாகவே இருந்துவிடுகிறேன் என்று கூறிய பச்சைக் கண்ணன் தன் வலது கையைத் திறந்தான். அந்திச் சூரியனின் கதிர்களின் ஜாலத்தில் ஒரு சிறிய தீப்பிழம்பாய் அவன் உள்ளங்கைகளில் எரிந்தது அந்த சிவப்பு முத்து.

- புரட்சிக்காரனே உன் கதையைத் தொடர்ந்து கூறு, பின்பு என்ன நடந்தது என்பதை அறிந்தால்தான் இக்கதையை நான் யாரிடமாவது விற்கலாம் என்றான் சிந்துபாத்.

புரட்சிக்காரன் ரஃபிக்கின் எண்ணங்கள் சொகுசு விடுதியின் அறையை நோக்கி நீந்தின. இதோ இந்தக் கொள்ளையர் கப்பலில் அவன் வந்து சேர்ந்திருக்க காரணமான நிகழ்வுகள் ஆரம்பித்த அந்த அறையை அவ்வளவு இலகுவாக அவனால் மறந்துவிடமுடியுமா என்ன.

- என் கண்களை நான் மீண்டும் திறந்து மேலே பார்த்தபோது, இரு ராட்சத ஆமைகள் அந்த அறையை நோக்கி விழுந்து கொண்டிருந்தன. ஆனால் அவை ஆமைகள் அல்ல….

ஆமை ஒட்டு வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த பாதுகாப்புக் கவசங்கள் இரண்டும் அந்த அறையின் கூரையினை உடைத்த வண்ணம் பலத்த சப்தத்துடன் தரையில் மோதின. மோதிய வேகத்தில் பாதுகாப்புக் கவசத்தின் காற்றுப்பைகள் வெடித்து வீங்கின. கவசம் பாதியாக திறந்தது. முதலாவதாக திறந்து கொண்ட கவசத்திலிருந்து வெளியேறிய உருவம் எழுந்து நின்று, விழுந்த அதிர்வால் சற்று தள்ளாடியது. சிறிது கணத்தின்பின் தன்னிலைக்கு வந்த அந்த உருவம் தன் உடலில் வழிந்த பாதுகாப்பு நுரையை வழித்துவிட்டபடியே… ராஜமாந்தீரிகன் கருந்தேளின் கண்டுபிடிப்பு அற்புதம். புஷ்பக் விமானத்தை எவ்வளவு சிறப்பாக அவன் ஓட்டி வந்தான். ஆனால் இந்த இலுமினாட்டிக்குதான் வாய் ஓயாத பேச்சு. யாரையாவது வெட்ட வேண்டும் என்ற வெறி, விதேசி மோகம்..என்று புலம்ப ஆரம்பித்தது. அறையினுள் தன் பார்வையை ஓட விட்ட அந்த உருவம் அங்கிருந்த அழகுகளை கண்டதும் உடனே உஷாரானது. தன் சிரிப்பு வகைகளில் ஓடித் தேடி மன்மத சிரிப்பை கண்டுபிடித்தது. அதனை அறைக்குள் நுரைகளுடன் தூவியவாறே… அழகுச் சிலைகளே தங்கள் அந்தரங்க நாடகத்தில் அத்துமீறி கூரையை உடைத்து நுழைந்ததிற்காக என்னை மன்னியுங்கள் என்றவாறே அறையிலிருந்த பெண்களை நோக்கி நாடக பாணியில் சலாம் வைத்தது மொட்டைத் தலை சீனன் ஷங்லிங்கின் உருவம்.

Sunday, October 17, 2010

உள்ளே வரலாமா


விவாகாரத்துப் பெறவுள்ள தன் தாயுடன் வாழ்ந்து வருகிறான் 12 வயது சிறுவன் ஓவன். நண்பர்கள் யாருமற்ற ஓவன், மாலைநேரங்களில் தனியாக தன் பொழுதை பனிபெய்யும் கணங்களில் கரைக்கிறான். பாடசாலையில் அவனை துன்புறுத்தும் முரட்டு மாணவர்களை எதிர்த்து ஏதும் செய்ய அவனிடம் தைரியம் என்பது இல்லை. இந்நிலையில் அவன் பக்கத்து வீட்டிற்கு ஆபி எனும் சிறுமி குடிவந்து சேர்கிறாள். முதலில் ஓவனுடன் நண்பியாக மறுத்த சிறுமி ஆபி, பின் அவனுடன் நட்பாக ஆரம்பிக்கிறாள். ஆனால் ஓவன் வாழும் நகரத்தில் மர்மமான முறையில் திடீரென மனிதர்கள் காணாமல் போக ஆரம்பிக்கிறார்கள்….

நட்பு குறித்த திரைப்படங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மனதை நெகிழ வைத்துவிடுவதுண்டு. அதிலும் தனிமையில் வாடும் சிறுவன் ஒருவன் கொள்ளும் நட்பு என்பது நிச்யமாக உள்ளத்தை தொட்டுவிடும். இங்கு சிறுவன் ஓவன் சிறுமி ஆபியுடன் கொள்ளும் நட்பு படம் நெடுகிலும் மனதை நெகிழ வைக்கிறது. சிறுமி ஆபி ஒரு ரத்தக் காட்டேரியாக இருந்தாலும் கூட.

சுவீடன் நாட்டுத்திரைப்படமான Morse என்பதன் ஆங்கில ரீமேக்தான் இயக்குனர் Matt Reeves இயக்கியிருக்கும் Let Me In. நீயு மெக்சிக்கொவிலுள் லாஸ் பலாமோஸின் பனிபெய்யும் புறநகர்பகுதிகளிற்கு திரைப்படம் பார்வையாளனை அழைத்து செல்கிறது. அங்கு தீவிர மதபக்தி நிறைந்த ஒரு தாயுடன் தனிமை உணர்வுடன் வாழும் சிறுவன் ஓவன் அறிமுகமாகிறான். அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் தனிமையை மிகவும் சிறப்பாக திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர். அயலவர்களை வேவு பார்ப்பவனாகவும், கண்ணாடியுடன் உரையாடுபவனாகவும், பள்ளியில் சக மாணவர்களிடம் அடிவாங்குபவனாகவும் ஓவன் வலம் வருகிறான்.

LET ME IN அதேபோல் ஒவனிற்கும் ஆபிக்கும் உருவாகும் நட்பையும் அற்புதமாக இயக்குனர் திரைப்படுத்தியிருக்கிறார். ரத்தக் காட்டேரிக்கு வயதாவதில்லை. தான் ஒரு ரத்தக் காட்டேரி என்பதை ஓவனிற்கு கூற விரும்பாத சிறுமி ஆபி, அவனை விலகி செல்லவே விரும்புகிறாள். ஆனால் அவன் தனிமையும் அவள் காலகாலமாக வாழ்ந்திருக்கும் தனிமைக்கும் வித்தியாசங்கள் அதிகமில்லை. அவர்களிற்கிடையில் மெல்ல மெல்ல நட்பு முளைவிட ஆரம்பிக்கிறது ரூபிக்ஸ் க்யூப்பில் ஆரம்பமாகும் நட்பு படிப்படியாக ஊர் சுற்றல், ரோமியோ யூலியட் நாடக வாசிப்பு என நகர்ந்து வீட்டு சுவர்களின் வழியாக மோர்ஸ் சங்கேத பாஷையில் உரையாடுவது வரை வளர்வது அவர்கள் வீட்டை சுற்றி வீழ்ந்து கொண்டிருக்கின்ற பனியைவிட மென்மையாக இருக்கிறது.

ஒரு காட்டேரிப்படத்திற்குரிய திகிலும், பயங்கரமும், ரத்தமும் திரைப்படத்தில் இருந்தாலும் கூட ஒவனிற்கும் ஆபிற்குமிடையில் உருவாகும் நட்பே படத்தை ரசிகனுடன் கட்டிப் போடுகிறது. இந்த விந்தையான நட்பு அந்த இரு சிறுவர்களையும் ரத்தத்தை தாண்டி பிணைத்துவிடுகிறது. ஓவனாக வரும் Kodi Smit McPhee யும் ஆபியாக வரும் Chloe Mortez ம் மனதைக் கொள்ளை கொள்கிறார்கள். படத்தை விறுவிறுப்பாகவும் நெகிழ்வுடனும் சலிப்பின்றி நகர்த்தி சென்றிருக்கிறார் இயக்குனர் மாட் ரீவ்ஸ். சுவீடன் திரைப்படமான Morseஐ நான் பார்க்கவில்லை எனிலும் இத்திரைப்படம் என் மனதை திருப்தி செய்தது.

பொலிஸ் விசாரணையின் நெருக்கம், இனியும் ஓவனிற்கருகில் வாழ முடியாத நிலை. சிறுமி ஆபி என்ன செய்தாள்? சிறுவன் ஓவன் தனித்து விடப்பட்டானா? மனதை நெகிழவைக்கும் முடிவுடன் நிறைவடையும் இத்திரைப்படம் நட்பு என்பது நல்லவர்களையும், நல்லவற்றையும் மட்டும் சார்ந்தது அல்ல அது உறவையும் அன்பையும், தீமையையும் தாண்டி நித்தியத்தின் சாத்தியங்கள் வரை நிலைபெறச் செய்வது என்பதை அழகாகக் கூறுகிறது. காட்டேரிப் படங்களில் இது ஒரு அழகான கவிதை. [***]

ட்ரெயிலர்