Showing posts with label La Chronique des Immortels. Show all posts
Showing posts with label La Chronique des Immortels. Show all posts

Sunday, November 14, 2010

ஷெர்லாக் ஹோல்ம்ஸும் ரத்தக் காட்டேரிகளும்


தனது பரம வைரியான புரபசர் மொரியார்டியுடனான மோதலில், சுவிஸிலிருக்கும் ரெய்க்கான்பாக் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து ஷெர்லாக் ஹோல்ம்ஸ் உயிரிழந்துவிட்டதாக பத்திரிகைகள் செய்திகளை தருகின்றன. இந்த செய்திகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஷெர்லாக், பாரிஸில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறான்.

உலகைச் சுற்றி பயணம் செய்ய வேண்டும் என்பது ஷெர்லாக்கின் நீண்ட நாள் கனவு. இக்கனவை நிறைவேற்றிட இதனைவிட தகுந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறியும் ஷெர்லாக், அதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறான்.

ஆனால் ஷெர்லாக்கின் தலை மறைவு வாழ்க்கையை கண்டுபிடித்து விடுகிறார்கள் அவனை தேடி அலைந்து கொண்டிருக்கும் லண்டனைச் சேர்ந்த ரத்தக் காட்டேரிகள். ஷெர்லாக்கை அணுகும் ரத்தக் காட்டேரிகள், தங்கள் தலைவர், ஷெர்லாக்கை சந்திக்க விரும்புவதை அவனிடம் தெரிவிக்கிறார்கள். வேறு வழிகள் அற்ற நிலையில் ரத்தக் காட்டேரிகளுடன் லண்டனிற்கு பயணமாகிறான் ஷெர்லாக்….

லண்டனில், ஈஸ்ட் எண்ட் பகுதியில் நிகழும் ஒரு ரத்தக் காட்டேரியின் தாக்குதலுடனேயே Sherlock Holmes & Les Vampires de Londres காமிக்ஸ் ஆல்பத்தின் கதை ஆரம்பிக்கிறது. ஆரம்ப பக்கங்களில், சக மனிதர்களை துன்புறுத்தும் நோக்குடைய இரு மனிதர்களை ஒரு காட்டேரி ரத்தப்பலி எடுப்பது இந்தக் காட்டேரியானது ராபின்கூட் பரம்பரையை சேர்ந்ததாக இருக்குமோ என எண்ணத் தூண்டுகிறது.

sh&v நல்ல வேளையாக அடுத்த பக்கங்களில் கதை 1891களின் பாரிஸிற்கு நகர்ந்து அங்கு ரகசிய வாழ்க்கை வாழும் ஷெர்லாக்கை அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஓவியரான Laci, தன் சித்திரங்களில் அந்தக்காலத்திற்குரிய பாரிஸ் நகரையும், இங்கிலாந்தையும் அற்புதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். தெருக்கள், உணவகங்கள், மாளிகைகள் என சிறப்பான ஓவியங்களை அவர் வழங்கியிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் பக்கங்களில் ஒளி விளையாட்டு அருமையாகவிருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டத்தை அதிகரிக்க அவர் கதை நெடுகிலும் நீள்சதுரக் கட்டங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்து தெருக்களில் வறுமையின் அடையாளத்தை சிறிதளவேனும் காட்டிய சித்திரக் கலைஞர், பாரிஸ் தெருக்களில் அதனை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தன் தந்தையின் சாயல் ஷெர்லாக்கில் தெரியும் வண்ணமாகவே அவர் ஷெர்லாக் பாத்திரத்தை வரைந்திருக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனிற்கு ரத்தக் காட்டேரிகளுடன் பயணமாகும் ஷெர்லாக், அதன் முன்பாக ரத்தக் காட்டேரிகள் குறித்த புத்தகங்களை தேடிப் படித்து அவர்களைப் பற்றியும் அவர்களை எதிர்க்கும் வழிகள் குறித்தும் நன்கு அறிந்து கொள்கிறான். ரத்தக் காட்டேரிகள் அவனைப் பாரிஸில் சந்திக்கும் வேளைகளில் சில ரத்தக்காட்டேரிகள், ஷெர்லாக்கின் ஜு- ஜிட்சு திறமைகளை சுவை பார்க்கின்றன. சில அவன் உடலில் கலந்திருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட நீரினால் கருகிப் பொசுங்குகின்றன. ஷெர்லாக்கின் துப்பறியும் திறமைக்கு பெருமை சேர்ப்பதான கதையோட்டம் இந்த ஆல்பத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ஷெர்லாக்கை தன் மாளிகையில் சந்திக்கும் ரத்தக் காட்டேரிகளின் தலைவன் செலிம்ஸ், தன் கூட்டத்தைவிட்டு பிரிந்து சென்று, இங்கிலாந்து மகாராணிக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நபர்களை போட்டுத் தள்ளும் ஓவன் எனும் காட்டேரியை ஷெர்லாக் விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மிரட்டுகிறான். தன் நண்பன் வாட்சனிற்கும் அவன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏதும் வந்துவிடக்கூடாதே எனும் அச்சத்தில் அந்த காட்டேரியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான் ஷெர்லாக்.

ஓவன் ஏன் தன் கூட்டத்திற்கு எதிராக செயல்படுகிறான்? ஓவன் எனும் காட்டேரியின் கொட்டத்தை ஷெர்லாக் அடக்கினாரா? கொடிய ரத்தக் காட்டேரிகளின் பிடியிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா? ஒவனிற்கும், செர்லாக்கிற்கும் இடையில் நிகழும் ஒரு ஜீவமரணப் போராட்டத்தின் சஸ்பென்ஸ் திருப்பத்துடன் நிறைவு பெறுகிறது ஆல்பத்தின் முதல்பாகம்.

இந்த ஆல்பத்தின் கதையை எழுதியிருப்பவர் Sylvian Cordurié ஆவார். ஆல்பத்தின் கதையின் தரம் ஹாலிவூட்டின் மட்டரக பேய்ப்படங்களை நினைவூட்டினாலும் கூட, கதை மிக வேகமாக நகர்கிறது. ஷெர்லாக்கின் வலது கரமான வாட்சன் இந்த ஆல்பத்தில் ஷெர்லாக்கின் விசாரணைகளில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மாறாக அவரைச் சுற்றி எப்போதும் ஒரு காட்டேரிக் கூட்டம் உலா வருகிறது. வழமையாக ஷெர்லாக்கின் கதைகளை வாட்சன் விபரிப்பதாக கதையோட்டம் இருக்கும் இங்கு ஷெர்லாக்கே நல்ல கதை சொல்லியாக கதையைக் கூறிச் செல்கிறார். நல்ல சித்திரங்களிற்காகவும், வேகமான கதை சொல்லலிற்காகவும் படிக்கக்கூடிய இந்த ஆல்பம் Soleil பதிப்பக வெளியீடாகும். [**]

Chronique_Des_Immortels_2La Chronique des Immortels 2

lcdim1 காமிக்ஸ் பதிவுகளை இங்கு தொடர்ந்து படித்து வரும் அன்பர்களிற்கு சில காலத்திற்கு முன்பு நாம் இங்கு பார்த்த இறக்காதவர்களின் ஏடுகள் எனும் பதிவு சிலவேளைகளில் நினைவிலிருக்கலாம். La Chronique des Immortels எனும் அந்த ஆல்பத்தின் இரண்டாம் பாகமானது 5 வருட இடைவெளியின் பின் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியானது. சென்றவாரம் அதனை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தான் வாழ்ந்த ஊரிற்கு திரும்பி வந்த அண்ட்ரெஜ் டுலேனி, தன் கிராமம் அழிக்கப்பட்டுவிட அக்கிராம ஆலயத்தில் தன் மகன் குற்றுயிரான நிலையில் இருப்பதை அறிந்து தன் மகனை தன் வாளாலேயே அவன் வேதனைகளிலிருந்து விடுவிக்கிறான். ஊரில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருந்த சிறுவன் ப்ரெட்ரிக்கை தன்னுடன் கூடவே அழைத்துச் செல்லும் அண்ட்ரெஜ் டுலேனி, கடத்திச் செல்லப்பட்ட கிராம மக்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். இதில் அவன் எதிர் கொள்ளும் ஆபத்துக்களை முதல் பாகம் விபரித்தது. சித்திரங்களும், கதை சொல்லலும் அட்டகாசமாக இருந்த ஆல்பமது.

இரண்டாம் பாகத்தின் கதையானது, அண்ட்ரெஜ்ஜின் கிராம மக்கள், சிறை வைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரமான கான்ஸ்டாண்டாவில் ஆரம்பமாகிறது. மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை ஒன்றின் ஊடாக அண்ட்ரெஜ்ஜும் சிறுவன் ப்ரெட்ரிக்கும் ஒரு முக்கிய சந்திப்பிற்காக குருட்டுக் கரடி மதுவகத்தை தேடிச் செல்கிறார்கள். ஆபத்து அவர்களை பல ரூபங்களிலும் நெருக்க ஆரம்பிக்கிறது.

சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும் அண்ட்ரெஜ்ஜிற்குமிடையில் உருவாகும் உறவின் சிக்கலான பக்கங்கள், அண்ட்ரெஜ்ஜின் கடந்த காலத்தின் சில நினைவூட்டல்கள், சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும், தனக்கும் காயங்கள் உடனடியாக ஆறிவிடுவதன் மர்மம் குறித்த அண்ட்ரெஜ்ஜின் புரியாத்தன்மை என விரியும் கதை, மரியா எனும் பெண்பாத்திரத்தை கதையோட்டத்தினூடு அறிமுகம் செய்து வைக்கிறது. மரியாவின் அழகில் ஈர்க்கப்பட்டு அவள்மேல் காதல் வயப்படுகிறான் அண்ட்ரெஜ். கதையில் திருப்பமும் மரியாவினாலேயே உருவாகிறது…

முதல் அதிர்ச்சி வருவது சித்திரங்கள் வழியாக. முதல் ஆல்பத்திலிருந்த சித்திரத்தின் சாயல் இருந்தாலும் அதை வழங்கும் பாணியை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் ஓவியக் கலைஞர் தாமஸ் வான் குமாண்ட். இந்த மாற்றத்தை இலகுவாக மனம் ஏற்க மறுப்புத் தெரிவிக்கிறது. பனி வீழ்ந்து கொண்டிருக்கும் கான்ஸ்டாண்டாவின் ஒடுங்கிய தெருக்களிலும், சதுக்கங்களிலும் இருளையும் ஒளியையும் கலந்து தெளித்திருக்கிறார் ஓவியர். எங்கிருந்தோ வந்த இனம் புரியாத ஒரு இருள் கதையை சூழ்ந்து நிற்கும் தன்மையை தாமஸின் ஓவியங்கள் கதைக்கு வழங்குகின்றன. ஆனால் அவரது பாணி தனித்துவமானது என்பதை அவர் மீண்டும் நிரூபிக்கிறார். உண்மையைக் கூறினால் அவரது ஓவியங்கள் மட்டுமே இந்த ஆல்பத்தை காப்பாற்றியிருக்கின்றன.

ஐந்து வருட காலமாக சிறப்பான விருந்து ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த வாசகனிற்கு 32 பக்கங்களில் [ ஆம், 32 பக்கங்கள் மட்டுமே கதை இடம்பெறுகிறது. மிகுதிப் பக்கங்களில் பொம்மை காட்டுகிறார்கள் ] ஒரு பிடி சோளப்பொரி அள்ளித் தந்திருக்கிறார் கதாசிரியர் பெஞ்சமன் வான் எக்கார்ட்ஸ்பர்க். விறுவிறுப்பான கதை நகர்வு காணாமல் போயிருக்க மென்சோகம் அதன் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் குறைந்த நிலையில் இறுதியில் கதையில் வரும் திருப்பம் சப்பென்று இருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளிவரவிருக்கும் மூன்றாவது பாகத்தின் முன்பாக அதிகம் காத்திருந்த வாசகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்த மலிவான ஒரு வணிக உத்தி எனவே இந்த ஆல்பத்தை கணிக்கக்கூடியதாகவிருக்கிறது. அடுத்த பாகத்திலாவது ரசிகர்களை படைப்பாளிகள் திருப்திப்படுத்தாவிடில் இத்தொடர் அதன் வீழ்ச்சியின் சரிவை நோக்கிப் பயணிப்பதை தடுக்க எந்த வழியுமேயிருக்காது. [**]

தமிழில் வெளியான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காமிக்ஸ் கதைகள்