Showing posts with label Alejandro Gonzalez Inarritu. Show all posts
Showing posts with label Alejandro Gonzalez Inarritu. Show all posts

Sunday, October 31, 2010

விட்டத்தில் மலர்ந்த வண்ணத்திகள்


மனச்சிக்கல்கள் கொண்ட தன் மனைவியை விட்டு பிரிந்து, தன் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான் Uxbal [ Javier Bardem ]. தனக்காகவும், தன் குழந்தைகளினது ஜீவிதத்திற்காகவும் அவன் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை ஒன்றின் முடிவுகள் உக்ஸ்வாலிற்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதையும், அவன் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதையும் அவனிற்கு அறியத்தருகிறது….

மெக்ஸிக்க இயக்குனரான Alejandro Gonzalez Inarritu, Amores Perros முதல் Babel வரையிலான தன் திரைப்படங்கள் வழி, திரையில் கவித்துவமாக கதையை நகர்த்தும் தன் திறமையை சினிமா ரசிகர்களிற்கு நிரூபித்தவர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடிகரான Javier Bardem, Mar Ardentro, No Country for Old men போன்ற திரைப்படங்கள் வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட ஒரு சிறப்பான கலைஞன். இந்த இரு திறமைசாலிகளின் கூட்டணியிலும் உருவான திரைப்படமான Biutiful குறித்து ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்புகள் உருவானதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பார்சலோனாவின் புறநகர் ஒன்றில், வசதி குறைந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே Biutiful படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் வாழும் ஒரு மனிதனாகவே உக்ஸ்வால் அறிமுகமாகிறான். உக்ஸ்வாலின் தினசரி வாழ்க்கையானது சிரமமானது. தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது முதல், பார்சலோனாவில் வதிவதற்கு தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் சட்டவிரோதமாக வாழும் சீன, ஆபிரிக்க இனத்தவர்களை, முதலாளிகளிடம் வேலைக்கு அனுப்பி அதில் சிறிது பணம் ஈட்டுவதுவரை, உக்ஸ்வால் ஒவ்வொரு கணத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குனர் இன்னாரிட்டு, பல மனிதர்களின் வாழ்க்கைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் கதை சொல்லலை தவிர்த்து, கதையின் மாந்தர்கள் யாவரும் உக்ஸ்வாலுடன் ஏதோ ஒரு வகையில் நேரடித் தொடர்பை கொண்டிருப்பவர்களாக சித்தரித்திருக்கிறார். கதையும் நேர்கோட்டு பாதையில் பயணிக்கிறது. கதையின் மாந்தர்களை பாதிக்கும் எந்த ஒரு சம்பவமும் உக்ஸ்வாலையும் பாதிக்கவே செய்கிறது. அவர்களின் புன்னகையிலும், கண்ணீரிலும் உக்ஸ்வாலிற்கு பங்கு தவறாது கிடைத்துவிடுகிறது.

பார்சோலானவில் தகுந்த ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் சீன மற்றும் ஆபிரிக்க இனத்தவர்கள் மீது நிகழ்த்தபடும் சுரண்டல்களும், தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் திரைப்படுத்துவதில் பின்னியிருக்கிறார் இயக்குனர் இன்னாரிட்டு. சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் குறித்து பீற்றிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஐரோப்பாவில் இன்று அந்நிய நாட்டு மக்கள் குறித்த உண்மை நிலையானது இன்னாரிட்டு திரைப்படுத்தியதை விட மோசமான எல்லைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ஐரோப்பாவில் வதியும் அந்நியர்கள் மறுக்க மாட்டார்கள்.

biutiful-2010-18524-475996845 உக்ஸ்வாலிடம் இறந்துபோனவர்களின் ஆவிகளுடன் தொடர்பாடக்கூடிய ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலையும் சிறிது பணம் ஈட்ட அவன் பயன்படுத்திக் கொள்கிறான். இறப்பின் பின் இருக்கக்கூடிய ஒரு வாழ்வின் மீது பரிச்சயம் கொண்ட உக்ஸ்வால், தான் இவ்வுலகை விட்டு நீங்கி மறுவுலகிற்குள் நுழையும் முன், தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்க விழைகிறான், தன் தவறுகளிற்கு பிராயசித்தம் காண ஓடுகிறான், தான் தவறிழைத்த ஆன்மாக்களிடம் மன்னிப்பை வேண்டுகிறான், தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயல்கிறான். ஆனால் வாழ்வின் எதிர்பாராத அழகுகள் அவனை சுற்றி சுற்றி அடிக்கின்றன. அவன் மீது பாரங்களை படிப்படியாக ஏற்றி விட்டத்தில் மலர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மரணத்தின் பிரசன்னத்தின் முன் அவனை முடங்க வைக்கின்றன. பார்சோலானாவின் அந்நியர்களின் முகங்களினதும், அடையாளங்களினதும், வாழ்கைகளினதும் ஊடு அவர்களைப்போலவே வாழ்வின் நுண்ணிய அழகுகளை தரிசிக்க வேண்டி மரணத்துடன் போட்டி போட்டு இயங்குகிறான் உக்ஸ்வால். பொறுப்பான தந்தை பிம்பத்திற்காக உக்ஸ்வால் அயராது செயற்படுகிறான். இயக்குனர் இன்னாரிட்டுவும் தன் தந்தைக்கு இப்படத்தை சமர்பித்திருக்கிறார்.

மிகவும் சிக்கலும், கனமும் நிறைந்த உக்ஸ்வால் பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் ஹாவியர் பார்டெமின் அர்பணிப்பை பாராட்ட வார்த்தைகளை தேடுவது சிரமமான ஒன்று. படம் முழுக்க நிறைந்து நிற்கிறார் அவர். அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. அவரது திறமையின் வீச்சு ரசிகனை திகில் கொள்ள வைக்கிறது.

ஆனால், அற்புதமான ஹாவியர் பார்டெம்மின் திறமை இருந்தும் கூட திரைப்படமானது அதன் பிடியிலிருந்து பார்வையாளனை இழக்க ஆரம்பித்து விடுகிறது. இயக்குனர் இன்னாரிட்டுவின் கவித்துவமான மனம் நெகிழ வைக்கும் இயக்கம்கூட இந்த பிடியிழத்தலிலிருந்து ரசிகர்களை மீட்க முடியவில்லை. திரைப்படத்தின் துன்பங்களும், வேதனைகளும், அழுத்தங்களும் திரையிலிருந்து ரசிகனை அமுக்கி திணற வைக்கின்றன. சலிப்பின் எல்லையையும் சற்று எரிச்சலையும் அவன் உணர ஆரம்பிக்கிறான். அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன. திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு மனவுளைச்சலுடன் வெளியேறிச் செல்லும் உணர்வை திரைப்படம் வழங்குகிறது. தன் பெயரிற்கேற்ற அழகை காட்ட இன்னாரிட்டுவின் படைப்பு திணறுகிறது. ஹாவியர் பார்டெம் மட்டுமே தெரிகிறார், பெரும் அழகுடன். [**]

ட்ரெயிலர்

Thursday, August 12, 2010

விம்மும் நாய்கள்


பந்தயத்தில் பொருதும் நாயை துப்பாக்கியால் சுடுவதிலிருந்து, குறிபார்த்து அடித்ததும் சிதறும் கோலிக் குண்டுகள்போல் திசையெங்கும் நிகழ்வுகள் ஓட ஆரம்பிக்கின்றன.

மூன்று வாழ்க்கைகளை அவைகளை சுற்றிவரும் நாய்களுடன், வெவ்வேறு நிலைகளிலிருந்து பார்வையாளனிடம் எடுத்து வரும் மெக்ஸிக்க இயக்குனர் Alejandro Gonzalez Inarritu வின் திரைப்படமான Amores Perros [நாய்க் காதல்] சிரமங்கள் ஏதுமின்றி அதிர, நெகிழ, கலங்க வைக்கிறது. மூன்று வாழ்க்கைகளும் வேறுவேறு எனிலும் குறித்த ஒரு தருணத்தில் அவை தம்மில் சந்திந்து மீள்கின்றன எனலாம்.

ஒழுக்கநெறிகளிற்கு பொருந்தாது, தன் சகோதரனின் மனைவியின்மீது வாலிபன் ஒருவன் கொண்டுள்ள காதல். தன் குடும்ப வாழ்வில் அன்பைக் காணமுடியாது, தன் மனைவியைத் தாண்டி அழகான ஆசைநாயகி ஒருத்தி மீது ஒருவன் கொள்ளும் காதல். எதை உதற முடிந்தாலும் வானத்தை எம்மேல் இருந்து உதறமுடியாது என்பதுபோல் தன் மகள்மீது ஒரு தந்தை கொண்ட அன்பு. இவையாவும் கதையின் ஒரு தருணத்தில் ஒரு புள்ளியில் தொட்டுச் செல்கின்றன. இவர்கள் அனைவரையும் சுற்றி நாய்கள் இருக்கின்றன.

தன் சகோதரனின் மனைவிமீது காதல் கொள்ளும் வாலிபன், அவன் விரும்பிய வாழ்வை அடைய அவன் பேணிவளர்க்கும் நாய், நாய்ச்சண்டைகளில் வெற்றி பெற்று அவனிற்கு உதவுகிறது. ஆனால் பின்பு துரோகத்தின் கடியை வலியுடன் அவன் சகித்து கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த நாயானது துப்பாக்கியால் சுடப்படும்போது அவனது கனவுகள் புதைகுழிகளில் விழித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தன் காதலை அவன் மீண்டும் நெருங்கி தன் வாலை ஆட்டியபோதும்கூட அவன் தொடரும் பயணத்தில் தனிமையே அவனுடன் பயணிக்க காத்திருக்கிறது. கண்ணீரை கண்டு தனிமை ஓடிவிடுவதில்லை. மாறாக வழியும் கண்ணீரை பெரும்தாகத்துடன் நக்கி அது தாகம் தீர்க்கும்.

ஆசைநாயகியின் செல்ல நாய், புதிதாக அவர்கள் குடிபுகுந்த வீட்டின் ஒரு குழியில் ஓடி மறைந்தபின்பாக அந்த மனிதனின் காதல் வாழ்க்கை தறிகெட்டு ஓட ஆரம்பிக்கிறது. வாழ்க்கையின் குழிகளில் திடீரென நிரம்பும் வெறுமைகளை எதைக்கொண்டு வெளியே எடுக்கலாம்? இருள்கவிய ஆரம்பித்து விட்ட மனப்பரப்புக்களினை நோக்கி நாலு கால்களில் விரைந்து நெருங்கி வரும் அன்பும், காதலுமே புற்தரைகளின் பறவைக்கீத காலைகளை அங்கு இசைக்க வைக்ககூடும்.

amores_l துப்பாக்கியால் சுடப்பட்ட நாயானது தன் மகளின் நினைவால் வாடும் மனிதனின் கைகளை வந்தடைந்தபின்பாக அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுடன் அது மறைமுகமாக மோத ஆரம்பித்துவிடுகிறது. கடந்த காலம் எவ்வாறாக இருப்பினும் அன்பு அம்மனிதனை செலுத்தும் திசையில் அவன் எடுத்து வைக்கும் முதல் அடி புன்னகையுடன் ஆரம்பமாகிறது. அது தன் ஜோடிப்புன்னகையை கண்டடைய பாதையின் ஓரங்களில் அரும்பும் பாசத்தின் வெதுவெதுப்பான சுவடுகள் உதவிடும்.

அன்புடன் வளர்க்கும் நாய்கள் எதிர்பாராதவிதமாக கடித்துவிடுவது போலவே வாழ்க்கையின் நிகழ்வுகளும் இம்மனிதர்களை கடந்து செல்கின்றன. அவர்கள் மீது காயங்களையும், பற்தடங்களையும் அவை பதிக்கின்றன. எவை வாழ்க்கைகளின் மீது மண்ணை அள்ளிப் போடுபவையோ, அவை வழியேதான் ஒளிபூசிய புதியதொரு துவக்கத்தின் நாணம் கொண்ட சிரிப்பும் காத்திருக்கிறது.

பந்தயத்தில் வெற்றிகொள்ள வெறித்தனமாக மோதும் நாய்கள் போலவே மனிதர்களும் பணத்திற்காகவும், வெற்றிக்காகவும், புகழிற்காகவும், அன்பிற்காகவும் மோதிக்கொள்கிறார்கள். காதலிற்காக உறுமுகிறார்கள். அறங்கள் குறித்த கலக்கங்கள் ஏதுமின்றி புணர்கிறார்கள். எந்த இலக்குமின்றி வாழ்க்கையின் பக்கங்களில் எழுதிய கனங்களை தள்ளுவண்டியில் தள்ளியபடியே தெருவில் அலைகிறார்கள்.படுக்கை அறைக்கு வெளியே உறங்குகிறார்கள். படுக்கை அறைக்கதவுகளை பிறாண்டுகிறார்கள். குண்டடிபட்டு சாகிறார்கள். நாய்கள் ஏக்கம் கொண்டு விம்முவதைப்போலவே மனிதர்களின் உணர்வுகளும் விம்முகின்றன. நாய்களின் அரூப அவதாரங்களாக அவர்கள் மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனிதன் தப்பித்து ஓடலாம், துரோகங்களை எதிர்கொள்ளலாம், புகழின் அதீத உயரங்களிலிருந்து உருகும் பனியின் கண்சிமிட்டல்களாக கீழே இறக்கப்படலாம், அர்த்தமற்ற வாழ்வின் மாறாத வட்டச்சுழலின் யந்திரச்சுற்றிலிருந்து துள்ளும் மீனென விடுபட்டு வேறு ஒரு சுழலில் பயணிக்க ஆரம்பிக்கலாம். ஆனால் காதலும், அன்பும், பிரியமும் அவனைவிட்டு பிரியாது அவன் கூடவே ஒரு நாய்போல் அவன் கால்களை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அவைதான் எல்லா வலிகளையும், கண்ணீர்களையும் வறளச்செய்து அவன் முன்பாக கிளைகளென விரியும் வாழ்வின் முடிவற்ற பாதைகளின் கண்காணா எல்லைகள் வரையும் வினோத சித்திரங்களை கண்டடையும் அவன் பயணத்தில் அவன் அருகே பயணிக்கின்றன. அவனை மேலும் வாழச் சொல்கின்றன. நாய்கள் கடிக்கின்றன. ஈரலிப்பான தம் நாக்குகளினால் வருடிக்கொடுக்கவும் செய்கின்றன.

சற்று நீண்ட திரைப்படமாகவிருந்தாலும் தேர்ந்த நடிகர்கள், அழகியல் கரைந்த காட்சிமொழி, இசை, சிறப்பான இயக்கம் என Amores Perros நல்லதொரு அனுபவம். [***]