Sunday, February 22, 2015

Bs & Cs - Feb 2015

காடு இருக்கிறது. உயிருடனும் ஆன்மாவுடனும். மோகினியாக தேவதையாக குழந்தையாக எப்போது எதுவென மனிதர் அறிந்திட வழி தராத பெருவுருவாக. காட்டின் குழந்தைகளாக பளிச்சர்கள் இருக்கிறார்கள். காட்டில் பிறந்து இறந்து தங்கள் ஆன்மாக்களை காட்டின் விருட்சங்களில் பதித்து கிளைதழுவும் காலத்தினூடு நிலைப்பவர்கள் அவர்கள். காடு தன் குழந்தைகளிற்கு தரவேண்டியதை தருகிறது, எடுக்க்க வேண்டியதை எடுக்கிறது, காக்கும் உருவாக இருக்கிறது. காட்டிற்கு வெளியே இருந்து மனிதர்கள் வந்தார்கள். வேட்டை, பயிரிடல், மரம் வெட்டுதல், மூலிகை திருட்டு என அவர்கள் பேராசைகளின் வடிவங்கள் காட்டை அழிக்க ஆரம்பித்தன ... காடு தன்னை காப்பாற்றிக் கொள்ளுவதற்கான வழிகளையும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.

காட்டின் குழந்தைகளான பளியர்கள், விலங்குகள், வேட்டையர்கள், விவசாயிகள், மரத்திருடர்கள், கஞ்சா பயிரிடுபவர்கள், மூலிகை திருடர்கள், அதிகாரத்தின் பிரதிநிதிகள் என கானகன் நாவலின் பாத்திரங்கள் காடு ஒன்றை வழிபடுபவர்களினதும், அதை சீரழிப்பவர்களினதும் பட்டியலாக நீள்கிறது.
மிகச்சிறந்த வேட்டையன் தங்கப்பன் காட்டின் வேட்டைக்கென இருக்கும் விதிகளை மீறி கொடூர தாண்டவம் ஆடிச்செல்லும்போது அவன் முடிவிற்கென காட்டினால் அனுப்பபட்ட குழந்தையாக பளியர்கள் பழங்குடி இனத்தை சேர்ந்த வாசி இருக்கிறான். விலங்குகள் தம் வாழ்வாதாரம் பறிக்கப்படுகையில் எதிர்வினை கொண்டு இயங்குகின்றன. காட்டிற்கும் அதை அழிப்பதை குறித்த எந்தக் கிலேசமும் இல்லாத மனிதனிற்கும் இடையிலான போராட்டம் வரையும் சித்திரங்கள் காடு முழுதும் வலியின் வண்ணத்துடன் நிறைந்து விருட்சங்களின் குரலாக ஒலிக்கின்றன.

நான்கு பருவங்களில் கதையை சொல்லும் கதாசிரியர் லக்‌ஷ்மி சரவணக்குமார் அப்பருவங்களில் காடு கொள்ளும் கோலங்களையும் மனிதர்கள் எடுக்கும் ரூபங்களையும் தன் வரிகளில் சிறப்பாக சொல்ல விழைகிறார். அவர் வரிகளில் மனித உணர்வுகள் காட்டின் ஆன்மாவோடு கலக்கவும் அதனை கிழிக்கவும் இணைகின்றன. மனிதனின் இச்சைகள், பாசங்கள் என்பன வெக்கையும், குருதியும், கண்ணீருமாய் பூக்கின்றன. உறவுகள் பருவங்கள் என வடிவம் காட்டி நீள்கின்றன.

தங்கப்பன், வாசி, சடையன் எனும் பாத்திரங்கள் சிறப்பாக படைக்கபட்டிருக்கின்றன. தங்கப்பனின் மூன்று மனைவிகள் கதையில் தரும் அனுபவமும் குறிப்பிடத்தக்கதே. காட்டிற்கு மனிதனும், விலங்கும் வேறல்ல. அது தன்னை அழிக்க துடித்தவனை தன் வழியே அணைத்து விடுகிறது. காட்டின் மனிதனும் விலங்கும் வேறல்ல தம்மை அழிப்பவர்களை அவர்கள் இணைந்தே அழிக்கிறார்கள். கானகன் நல்லதொரு படைப்பு. ஆனால் காடுகள் தோற்றுக் கொண்டே இருப்பது போல தோன்றினாலும் அழியப்போவது யார் என்பது நமக்கு தெரியும்.




அமானுஷயர்களால் ஏமாற்றப்படுவதில் ஒரு வெறி இருக்கிறது. அது போதை. அதிலிருந்து விடுபடுவதற்கு ஒரே வழி நாம் அமானுஷயர்களாகி விடுவதுதான்..... பாண்டி மைனர் சித்ரா பெளர்ணமி அன்று நரோநாயாக விஸ்வரூபம் எடுக்க காத்திருக்கையில் கூறியது.

நீங்கள் நரோநாயாக உருமாறவேண்டுமெனில் உங்களை ஒரு நரோநாய் காயப்படுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி நரோநாய் தன் வில்லன்களிடமிருந்து தப்பித்து செல்லும் வழியில் எதேச்சையாக நீங்கள் குறுக்கே வருவதுதான். இதை நான் சொல்லவில்லை Glen Duncan எழுதிய The Last Werewolf நாவல் வாசிப்பனுபவம் கற்று தந்த பாடமிது. கதையில் மானுடர்களாக இருந்து அமானுட நரோநாய்களாக மாறும் இரு பாத்திரங்களும் இவ்வாறு தப்பி ஓடும் நரோநாய்களின் குறுக்கே வந்தவர்களே. ஜேக்கோப் மார்லோவ் தப்பியோடும் நரோநாயிடம் காயமுற்றது கதை கூறப்படுவதற்கு 167 வருடங்கள் முன்பாக. ஆகவே ஜேக்கிடம் கூறுவதற்கு விடயங்கள் நிறைய இருக்கிறது. கூறுகிறான்.

காயமுற்றதன் பின்பாக அவன் உருமாற்றம். அவன் வாழ்க்கை மாறிய விதம். அவன் இழப்புக்கள். அவன் இன்று இருக்கும் நிலைக்கு அவன் எப்படி வந்தான். அவன் எதிரிகள். அவன் நண்பர்கள், அவன் உணர்வுகள், அவன் எண்ணங்கள் என கதை சுவாரஸ்யமாகவே ஆரம்பிக்கிறது. பலமான எதிரிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கையில் ஒரு இனம் அதன் அழிவை நோக்கியே செல்லும். ஜேக்கின் நிலையும் அதுவே. அவனே இவ்வுலகின் கடைசி நரோநாய்.

அவனை தீவிரமாக வேட்டையாட துடிக்கும் WOCOP அமைப்பு, தம் ஆய்வுகளிற்காக அவனை கைப்பற்ற துடிக்கும் காட்டேரி குடும்பங்கள், தான் நித்திய வாழ்வை பெறுவதற்காக அவனை காட்டேரிகளிடம் ஒப்படைக்க ஒப்பந்தம் போடும் ஒரு கோடிஸ்வரி, இவர்களினூடு 167 வருட நரோநாய் வாழ்வின் சலிப்பின் எல்லையை எட்டிவிட்ட ஜேக் தன் கதையை கனத்த சித்தாந்தங்கள் துணையுடன் சொல்லுகிறான். அதுவே இக்கதையின் எதிரி. என்னை பொறுத்தவரையில்.

கதை சொல்லியின் மொழியில் இருக்கும் எள்ளலும், கிண்டலும் ரசிக்கப்படக்கூடியவை என்பது வாசிப்பை தூக்கி சென்றாலும் ஜாக்கோப்பின் சித்தாந்த விரிவுகள் ஒரு எல்லைக்குமேல் தாங்க முடியாத ஒன்றாக உணரப்படக்கூடியதாகிவிடுகிறது. மேலும் கதையின் திருப்பபுள்ளியின் பின் கதை எடுக்கும் அனாவசியமான நீட்சி சலிப்பையே தருகிறது. முடிவு இன்னொரு பாகத்தை கதாசிரியர் தொடர்வதற்கு வகை செய்யும் வகையில் சிறப்பாக திட்டமிடப்பட்டு இருக்கிறது. உச்சக்கட்ட காட்சிகள் உணர்ச்சிகரமான குடும்பசித்திரம் ஒன்றில் ஹாரர் படக்காட்சிகளை அமுக்கியது போல இருக்கிறது.

நரோநாய்களிற்கு பாலியலுணர்வு கட்டுக்கடங்காமல் பாயும் என்பதும் நாவலில் பல தருணங்களில் விரிவாக விபரிக்கப்பட்டு இருக்கிறது.முன்பாதி வேகமும், விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் பின் பகுதியில் தேய்பிறையாகிவிடுகின்றன. ஆனால் கதை முடிவது பெளர்ணமி ஒன்றின்போது. அமானுஷயர்களாக விரும்புவர்கள் ஆர்வத்துடன் படித்து ..... ஏமாறலாம் :)



டெம்ப்லர்கள் இன்னும் எத்தனை ரகசியங்களை பரபரப்பு நாவலாசிரியர்கள் கற்பனைகளில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கான பதில் இலகுவானதல்ல ஆனால் அந்நாவலாசிரியர்களின் படைப்புக்களை டெம்ப்லர்களின் ரகசியம் எனும் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு விபரீதமாக நான் ஏமாறுவதற்கு ஒரு எல்லை இருக்காது என்றே தோன்றுகிறது. அதற்கு சமீபத்தைய உதாரணம்  Raymond Khoury எழுதி பின்  நான்கு காமிக்ஸ் ஆல்பங்களாக தழுவப்பட்டிருக்கும் Le Dernier Templier. வாசிப்பின்போதே எப்படி இது சர்வதேசவிற்பனைத்திலகமானது எனும் கேள்வியை என்னுள் எழுப்பும் படைப்புகளில் இதுவும் அடக்கம்.

ந்யூயார்க் நகர், மெட்ரோபொலிட்டன் அருங்காட்சியகம், வத்திக்கன் தன் செல்வங்களில் ஒரு பகுதியை ஒரு கண்காட்சியாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறது. அங்கு டெம்ப்லர்கள் வேடத்தில் வரும் நபர்கள் சில பொருட்களை வன்முறை வழியால் கவர்ந்து செல்கிறார்கள். கவர்ந்து செல்லப்பட்ட பொருட்களில் டெம்ப்ளர்களால் உபயோகப்படுத்தப்பட்ட ஒரு குறியாக்கியும் அடக்கம் ....

இதன்பின் வத்திக்கனும், ந்யூயார்க் காவல்துறையும், FBI ஐயும் இன்னும் தொல்பொருளாய்வாளர்களும் கவர்ந்து செல்லப்பட்ட குறியாக்கியை தேட ஆரம்பிக்கிறார்கள் ... ஒவ்வொருவரின் தேடலின் பின்பாகவும் உள்ள நோக்கங்கள் வேறானவை ...

புனித நகரான ஜெருசலேமானது டெம்ப்ளர்கள் கையை விட்டு எதிரிகளின் கைகளிற்கு செல்கையில் அங்கிருந்து ஒரு ரகசியம் ஐரோப்பிய மண்ணிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது ... இந்த ரகசியத்தை எடுத்து செல்லும் மனிதர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள் ஒருபுறமாகவும் ...  இந்த ரகசியத்தை அறிந்து கொள்ள இன்றைய நாளில் விரும்பும் மனிதர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் மறுபுறமாகவும் ... என்றுமே இந்த ரகசியமானது உலகிற்கு தெரிய வரக்கூடாது என பாடுபடும் மனிதர்களின் செயல்கள் ஒரு புறமாகவும் என கதை கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையில் மனிதர்களின் எதிர்கொள்ளல்களை விபரிக்கிறது.

மதம் எனும் அமைப்பின் ஸ்திரதன்மை, சமூகம் ஒன்றன் மீது அது உருவாக்கும் தாக்கம், அமைதியான உலகொன்றிற்கான அதன் அவசியம் என மதம் சார்ந்தும் ... அது மறைக்க விரும்பும் உண்மையை வெளிப்படுத்த விரும்புவோர்களின் எதிர்வாதங்கள் சார்ந்தும் கூறப்படும் கதையில் புதிதாக எதிர்பார்க்க ஏதும் இல்லை.  காமிக்ஸ் ஆல்ப வடிவமே இந்த நிலையை தரும்போது நாவல் எவ்வாறு இருக்கும் என்பதையும் சற்று ஊகித்து கொள்ள என்னால் முடிகிறது. இப்படைப்பிற்கு காமிக்ஸ் தழுவல் எல்லாம் அதிகம் என்பதாகவே தோன்றுகிறது. மலிவான திருப்பங்கள், ஆழமில்லாத பாத்திரப்படைப்புக்கள், அயரவைக்கும் ஊகங்கள் மற்றும் விளக்கங்கள், சுவாரஸ்யமிழந்து தளும்பி செல்லும் உச்சகட்டம் என ஒரு அமெச்சூர் எழுத்தாளரையே பெருமைப்பட வைக்கக்கூடியதாக இப்படைப்பு இருக்கிறது. காமிக்ஸ் ஆல்பத்தை பொறுத்தவரையில் அதற்கு சித்திரங்கள் வழங்கி கதையை தழுவி இருப்பவர் Miguel Lalor . கதைதான் இப்படி ஆகிவிட்டது என வாசகர்களை கைவிடாது சித்திரங்களையும் கதைக்கு இணையாக தந்து கலக்கி இருக்கிறார் மிகுவெல் லாலொர். சபாஷ். முதல் சுற்றில் ஒரு கதையை முடித்துவிட்டு இன்னொரு சுற்றையும் ஆரம்பித்து விட்டார் மிகுவெல் லாலோர் ... அது முன்னதைவிட மோசம். வத்திக்கனே உன் ரகசியங்களை நான் காப்பாற்றுகிறேன் இவ்வகையான படைப்புகளிலிருந்து தயவுகூர்ந்து என்னைக் காப்பாற்று ....



இத்தனைபேரை கொன்றது குறித்து உங்களிற்கு மனவருத்தங்கள் ஏதும் உண்டா?
இல்லை, நிச்சயமாக இல்லை. என் வாழ்வில் நான் பாவங்களை இழைத்திருக்கிறேன், கடவுளின் அருகில் நான் இருக்கும்போது அவருடன் பேசிக்கொள்ள எனக்கு ஏராளமான விடயங்கள் இருக்கிறது. ஆனால் இவர்களை கொலை செய்தது அதில் அடங்காது.

American Sniper திரைப்படம் முன்னிறுத்தும் பாத்திரமான Chris Kyle ஒரு பத்திரிகையாளரின் கேள்விக்கு அளித்த பதிலே மேலே நீங்கள் படித்தது. தேசபக்தியுடன் தீவிர வலதுசாரி சித்தாத்தங்களிற்காக வாழும் அமெரிக்கர்களிற்கு அல்லது அவ்விதமாக உலகில் வாழும் மக்களிற்கு அவர் ஒரு ஆதர்ச நாயகர்தான். இவ்வகையான வீரபுருஷர்கள் தம் நாட்டிற்கு அப்பால் நிகழ்த்தும் கொலைகள் வீரமென்றும், நாட்டிற்குள் நடத்தும் கொலைகள் சித்தப்பிறழ்வு என்றும் கூறப்படும்[ க்ரிஸ் கைய்லிற்கு நடந்ததை பாருங்கள்]. ஆனால் யுத்தம் என வருகையில் அங்கு மனித உயிர்கள் வெற்றிக்கு பின்பாகவே முதன்மை பெறுகின்றன.

க்ளிண்ட் ஈஸ்ட்வூட் தந்திருக்கும் திரைப்படம் க்ரிஸ் கைலின் அனுபவங்களை விபரித்த நூலை தழுவியது. மிகச்சுருக்கமாக கைலின் சிறுவயது வாழ்க்கையை திரையில் காட்டி கைய்லை நேரடியாக ஈராக்கிற்கு களமிறக்குகிறது திரைப்படம். அங்கு க்ரிஸ் என்ன செய்தார் என்பது ஒரு சாகச அனுபவமாக திரையில் உணரப்படக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலம் முடிவடைந்து வீடு திரும்பும் க்ரிஸ் கைய்ல்  குடும்ப வாழ்வில் கலந்து கொள்ள முடியாது போர்க்களத்திற்காக ஏங்கும் அகம் கொண்ட மனிதனாக யுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. இவற்றையெல்லாம் க்ரிஸ் கைய்லில் இல்லாதிருக்கும் ஈரத்தை போலவே இயக்குனர் க்ளிண்ட் ஈஸ்வூட் தந்திருக்கிறார். ஈராக்கின் வறள் புழுதிப்புயலிற்குள் சென்று வந்தாற்போல உணர்வு வறள் நிலமான இப்படம் இன்று ஈஸ்ட்வூட்டின் உச்சம் என்று சொல்லப்படுகிறது.

க்ரிஸ் கைலின் கள அனுபவங்களை ஒரு ஆக்சன் படம் போல திரையில் தந்திருப்பது ரசிகர்கள் சலிப்படையக்கூடாது என்பதற்காகவும், விறுவிறுப்பிற்காக என்றாலும் கூட எதிராளி ஒரு தீமை என்பதாகவே அவை அமைந்திருக்கின்றன. தீமை ஒன்றிற்கு எதிரான போராகவே க்ரிஸ் கைய்ல் தன் களப்போரை காண்கிறார். நான் கடவுள் அனுப்பி வைத்த ஒரு போர்வீரனாகவே என்னை ஈராக்கில் கண்டேன் என்றும் கைய்ல் ஒரு தருணத்தில் கூறியிருக்கிறார். கடவுள் எனும் விடயம் திரையில் இல்லாவிடிலும் எதிராளி தீமை, தீமை மட்டுமே எனும் க்ரிஸ் கைலின் எண்ணத்தை க்ளிண்ட் திரையில் சிறப்பாக கொணர்ந்திருக்கிறார். ஒரு இயக்குனர் எனும் வகையில் எதிராளியின் தரப்பு குறித்து ஒரு சிறு குரலையாவது அவர் முன்வைத்தாரா எனும் கேள்வி எனக்கு முக்கியமான ஒன்றாக படுகிறது. கண்டிப்பாக க்ரிஸ் கைய்ல் அப்படியான குரல்களை கேட்க விரும்பியிருக்க மாட்டார் எனவே க்ரிஸ் கைய்ல் குரல் மட்டும் ஒலிக்கும் படைப்பாகவே இது இருக்கிறது. அவ்வகையிலும் கூட கைய்லின் குரல் திரைக்காக இனிதாக்கப்பட்டிருக்கிறது என்பேன். க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது.

இதன் பின்பாக Kingsman பார்த்தேன். அதகளம் செய்திருக்கிறார்கள். Matthew Vaughn இயக்கத்தில் கிண்டல், எள்ளல், நகைச்சுவை, ஆக்சன், கிளுகிளுப்பு, சமூகம் மீதான மேலோட்டமான விமர்சனம் என ஆரம்பம் முதல் இறுதிவரை வேகமாக நகரும் ரகசிய ஏஜெண்டு படம். குறிப்பாக உச்சகட்டத்தில் டேனிஷ் இளவரசி நாயகன் எக்ஸிக்கு வழங்கும் பரிசு இருக்கிறதே ... காலின்  ஃபேர்த் மதுவகத்தின் கதவை பூட்டி விட்டு ஒழுக்கமே ஒருவனை மனிதனாக்குகிறது என்றுவிட்டு போடுவார் பாருங்கள் ஒரு சண்டை, போக்கிரி இளையதளபதி ஷட்டர் எல்லாம் நினைவில் டபாஷ் என வந்தது ... வில்லனின் பார்வைகூட டான் ப்ரவுன் நாவலான Inferno வை நினைவூட்டியது. சாமுவேல் ஜாக்சனின் உதவியாளினியாக வரும் பெண்மான் சோஃபியா பூடெல்லா, Dalmore 1963 வை விட கிக். எது எப்படி இருந்தாலும் வன்முறையை அழகாக தரும்போது அதை நாங்கள் எப்படியெல்லாம் ரசிக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றுதான். நிஜமான Kick-Ass இதுதான்.

2 comments:

  1. //க்ளிண்ட்டின் இயக்கத்தில் என்னை ஏமாற்றிய படமாக இது இருக்கிறது//

    அப்படியா?

    ReplyDelete
  2. இணையத்தில் சர்ச் காட்சி அது இது என்று பிட் பார்த்து கிங்ஸ்மேன் மேல் உண்மையிலேயே ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டது..... விரைவில் பார்த்து விட வேண்டும் :)

    ReplyDelete