Saturday, September 13, 2014

ஏறக்குறைய ஒரு புனிதன்


ஜானதிபதி வாலி ஷெரிடானிடம் இருந்து பதக்கமும், ராணுவத்தில் பதவி உயர்வும் பெறும் Betty  யை சிறப்பு ராணுவ நடவடிக்கை ஒன்றிற்காக சான் மிகுவெலுக்கு வரும்படி பணிக்கிறார் ஜெனரல் காரிங்டன். சான் மிகுவெலுக்கு செல்லும் வழியில் அவர்கள் பயணம் செய்யும் விமானம் கடத்தப்படுகிறது ... அடர் காடுகளிற்குள் SPADS விசேட அதிரடிப்படை பிரிவிலிருந்து விலகிச்சென்ற ராணுவத்தினர் கைகளில் பணயக்கைதிகள் ஆகிறார்கள் ஜெனரல் காரிங்டன் குழுவினர் ...

Betty யின் பெயரை தமிழில் எழுதுவதை போல ஒரு இம்சை இல்லை. ஒன்று பெட்டி அல்லது வெட்டி என்று எழுத வேண்டும். பெட்டி நாயகியின் பெயர் என்றால் வெட்டி என XIII - Mystery - Betty Barnowsky  ஆல்பத்திற்கு பெயரை வைக்கலாம். XIII மிஸ்டரி கதைவரிசையின் இந்த ஏழாவது ஆல்பத்தின் கதையை Joel Callède ம், சித்திரங்களை Sylvain Vallée ம் உருவாக்கியுள்ளார்கள்.

ஜனாதிபதியிடமிருந்து அசாத்திய வீரச்செயல்களிற்கான பதக்கம், அதன்பின்பாக ராணுவத்திடமிருந்து வரும் பதவியுயர்வு அதன் கூடவே வரும் அதிரடி நடவடிக்கைக்கான அழைப்பு என ஆரம்பமாகும் கதை, Betty க்கும் அவள் சகோதரிக்குமிடையில் இருக்கும் முறுகிய உறவையும் காட்டுகிறது. ஏன் அந்த இணக்கமற்ற சகோதர உறவு காட்டப்படுகிறது என்பதை வாசிப்பின் முடிவில் கேள்வியாக்கினால் Betty க்கு ஆதரவாக அன்பாக யாரும் இல்லை, அவள் தோள்சாய ஒரு இடமில்லை என்பதை வாசகர்களுக்கு சொல்லவே என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை. அதிரடி நடவடிக்கைக்கு செல்லும் முன்பாக Betty தான் கர்ப்பமாக இருப்பதையும் அறிந்து கொள்கிறாள்.

கருக்கலைப்பு என்பது Betty க்கு புதிதானது அல்ல. அதன் மூலம் அவமானங்களை அவள் வாழ்வில் சந்தித்து கடந்தே வந்திருக்கிறாள். கையில் ஒரு டாலர்கூட இல்லாது வீதிவீதியாக அவள் அலையும் ந்யூயார்க்கின் பனிவிழும் ஒரு இரவிலேயே அவள் ராணுவத்தில் இணைந்து கொள்வது எனும் முடிவிற்கு வருகிறாள். தற்கொலைக்கு பதிலாக அவள் ராணுவத்தை தெரிவு செய்து கொள்கிறாள். குடும்பமும், சமூகமும் அவளுக்கு வழங்க முடியாத ஒன்றை அவள் ராணுவத்தில் பெற்று கொள்கிறாள். அல்லது அவ்வாறான ஒரு பிரமையை அவள் தன்னுள் உருவாக்கி கொள்கிறாள். பெண்ணாக வெளியுலகில் ஒரு வாழ்வை அவளால் உறுதியாக அடையாளப்படுத்த  முடியாது போனாலும் ராணுவத்தில் பதவிகளின் உச்சங்களை தொட்டு அமரும் ஒரு வாழ்க்கை அவள் முன் இருக்கவே செய்கிறது. ஆனால் ராணுவத்தின் இன்னொரு முகத்தையும் அவள் காணும் வாய்ப்பு தென்னமரிக்க அடர்காடுகளில் அவள் அதிரடி நடவடிக்கைகளில்  முன்பு இயங்கியபோதும் பின் பணயக்கைதியாக இருக்கும்போது கிடைக்கவே செய்கிறது. ஆனால் தாய்மை என்பது பெண்களிற்கு உணரச்செய்வது வேறொன்று. அதன் அர்த்தத்தை கதையில் மேஜர் ஜோன்ஸ்,  மூன்றுமுறை கருக்களை கலைத்த அனுபவம் கொண்ட Betty க்கு அடையாளம் காட்டுகிறாள். ஜோன்ஸ் தன் வயிற்றில் பட்ட காயம் ஒன்று அவள் என்றுமே குழந்தை பாக்கியம் கிடைக்க பெறாதவளாக அவளை ஆக்கிவிடுகிறது என்பதை ஜோன்ஸ் தெரியப்படுத்தும்போது தன் கருவை கலைக்ககூடாது என்பதில் Betty உறுதியாகி விடுகிறாள்.

ஆகவே உணர்ச்சிகரமான இந்த சூழ்நிலையை சற்று எண்ணிப்பாருங்கள். கருவுற்ற ஒரு இளம்பெண், அடர்காடுகளில் தறிகெட்டு வாழும் முரட்டு மனிதர்கள் கையில் பணயக்கைதியாக! எப்படி அவள் அவர்கள் பிடியில் இருந்து தப்ப போகிறாள்? தன் கருவை அவள் எப்படி இவ்வகையான சூழலில் காப்பாற்ற போகிறாள்? இந்தக் கேள்விகளுக்கு கதாசிரியர் ஜொயெல் காலெட்டின்  கதை சொல்லும் பதில்கள் ஆழமும், அர்த்தமும் நீர்த்து போனவையாக உள்ளன. மிக உணர்ச்சிகரமாகவும், மனதை தொட்டுவிடும் வகையிலும் உருவாக்கியிருக்க வேண்டிய கதையை முரட்டு மூடர்கள் மத்தியில் அகப்பட்ட இளம்பெண்ணின் தத்தளிப்பு என்பதாக, அசட்டுத்தனமான சம்பவகோர்வைகளுடன் கதாசிரியர் வழங்கி இருக்கிறார்.

Betty யின் கருவுக்கு காரணமானவர் யார் என்பதை நண்பர்கள் இலகுவில் ஊகித்து விடலாம்.  XIII தொடரில் அதிக பெண்களை புணர்ந்தவர் யாரோ அவரே அக்கருவின் பிரம்மன். அதுகுறித்து கண்டிப்பாக அவருக்கு நினைவில் ஏதும் இல்லை. அவரின் அந்த நினைவாற்றல் மிகவும் பிரசித்தமானது என்பதை இங்கு சொல்லும் அவசியம் உண்டு. ஆனால் Betty ன் மனம் அவள் கருவுற்ற செய்தியை அறியுமுன் நாடும் உள்ளம் Armand de Preseau உடையதாக சொல்லப்படுகிறது. ஒரு இரவே அவன் மாளிகையில் தங்கினாலும் ஆர்மாண்ட் அவள்மீது பதித்த அந்த கனிவான பார்வையின் பின் அவள் உணர்ந்ததும், மெல்ல நடக்கும் தயக்கத்தின் மயக்கத்தில் புரிந்ததும் என்ன? எவ்வாறு அவள் தன் புகலிடத்தின் முகவரியை முன்னுணர்ந்தாள். அவள் விழிகள் இதயத்தின் ஆழங்களில் நீந்தும் உணர்வுகளை ஆழச்சென்று காணும் ஆற்றல் கொண்டவையா. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் சில்வெய்ன் வலே வரைந்திருக்கும் Bettyn விழிகளே இதற்கான பதில். அதே சமயம் கதையின் சித்திரங்கள் முழுதும் அதகளம் என்றும் இங்கு எழுதிவிட முடியாது.

ஜெனரல் காரிங்டன் பெண்டகனின் முக்கிய அதிகாரி. அவரை கடத்தி பணயக்கைதியாக்கி அமெரிக்க அரசிடமிருந்து சில விடயங்களை பெற்றுக்கொள்ள விழைபவர்கள் எப்படியான புத்திசாலிகளாக இருக்க வேண்டும். ஆனால் தென்னமரிக்காவின் அடர்காடுகளில் SPADS ஐ விட்டு விலகி வந்து ஆட்சிகவிழ்ப்பில் பங்கேற்றவர்களாக காட்டப்படும் ராணுவத்தினரிடம் புத்திசாலித்தனத்தை தவிர பாக்கி எல்லாமும் இருக்க்கிறது. குரூரம், வெறி, வக்கிரம், வன்முறை என பட்டியலிட்டால் இவற்றை எல்லாம் விஞ்சி செல்லும் முட்டாள்தனமே அவர்களிடம் கதையில் வீர்யமாக எழுந்து நிற்கிறது... இப்படியான முட்டாள்களிடமிருந்து தப்பி செல்லாவிடில் காரிங்டன் ஜெனரலாக இருந்து என்ன பயன் ஆனால் தப்பி செல்லும் முறைகளும் அதற்கான சந்தர்பங்களும், Betty ன் இளவயிறு குறிவைத்து தாக்கப்படும் தருணங்களும் கதையை ஒரு மட்டமான நாடகச்சுவைக்குள் மூழ்க வைக்கின்றன...

திருப்பங்கள் என்ற பெயரில் இக்கதையில் வருவது எல்லாம் திருப்பங்கள் என்றால் திருப்பங்களிற்கு என்ன பெயர் சொல்வதாம்?! கதையில் வரும் ஒரே மனதைதொடும் மனிதர் ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே. ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன். ஆர்மாண்ட் டெ ப்ரெஸோ மட்டுமே Betty தன் வாழ்வில் கண்ட அற்புதம். XIII Mystery கதை வரிசையில் மீண்டும் ஒரு மொக்கை.

7 comments:

  1. வணக்கம் நண்பரே,
    வித்தியாசமான தலைப்புடன் துவங்கிய உங்கள் காமிக்ஸ் அலசல் ஆழமானவை 13 ன் கதைகளை பொறுத்தவரை 13-ஐ போலவே சிக்கலான நினவைவில் வைத்துக்கொள்ள முடியாத, நிறைய சம்பவங்கள், களங்கள், வரலாற்று குறிப்புக்கள், முக்கியமாக கதாபாத்திர பெயர்கள் எல்லாவற்றையும் நினவவுக்கு கொண்டுவரவே முடியாது.
    இந்த நீண்டதொடர் ்மீது எல்லோருக்கும் ஈர்ப்பு பரவலாக இருந்தாலும் ஆழ்ந்துபடித்து, இந்த சூழ்நிலை சம்பவம் இங்கு ஏற்படகாரணம், இதற்கு எந்த பாகத்தில, நடந்தவைக்கு தொடர்புடயவை, என நினைவுக்கு கொண்டுவருவது குழப்பத்தில், தலைசுற்றலில், (எனக்கு) முடியும்.
    அதிதீவிர ஆர்வம், நல்ல ஞயாபகசக்தி, ஆழ்ந்துசிந்திக்கும்தன்மை, உள்ளவர்களால் மட்டுமே இந்ததொடரை அலசமுடியும், அந்தவகையில் உங்களை நிச்சயம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
    அதுவும் பிரஞ்சு மொழியில் படித்து சரிதானே புரிந்துகொண்டு கதைஓட்டத்தை நாடிபிடிப்பது சாதாரணகாரியமல்ல... நண்பரே..!
    இரண்டு மாதங்களுக்கு முன் பதிவிட்ட ‘க்ரீன்ஃபால்ஸ் திரும்புதல்’ பதிவும் ‘ஏறக்குறைய ஒரு புனிதன்’ பதிவும் சரி உங்கள் காதலின் அழத்தை (இரண்டு முன்று முறை படிக்கவேண்டியுள்ளது) அழகாக வெளிப்படுத்துகிறது... நண்பரே!

    //தமிழில் எழுதுவதை போல ஒரு இம்சை இல்லை. ஒன்று பெட்டி அல்லது வெட்டி //
    //அவள் தோள்சாய ஒரு இடமில்லை என்பதை வாசகர்களுக்கு சொல்லவே என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை //

    //முரட்டு மூடர்கள் மத்தியில் அகப்பட்ட இளம்பெண்ணின் தத்தளிப்பு என்பதாக, அசட்டுத்தனமான சம்பவகோர்வைகளுடன் கதாசிரியர் வழங்கி இருக்கிறார்.//

    //கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் சில்வெய்ன் வலே வரைந்திருக்கும் Bettyn விழிகளே இதற்கான பதில்//

    // தப்பி செல்லும் முறைகளும் அதற்கான சந்தர்பங்களும், Betty ன் இளவயிறு குறிவைத்து தாக்கப்படும் தருணங்களும் கதையை ஒரு மட்டமான நாடகச்சுவைக்குள் மூழ்க வைக்கின்றன//

    // திருப்பங்கள் என்ற பெயரில் இக்கதையில் வருவது எல்லாம் திருப்பங்கள் என்றால் திருப்பங்களிற்கு என்ன பெயர் சொல்வதாம்?!//

    .... இப்படி எழுத...ஆசிரியர் படங்களுக்கு அடியில் இதைதான் சொல்லவருகிறார், என நூல்பிடிக்கும் திறமையும், அதை சொல்ல அசாத்திய தைரியமும், கட்டாயம் வேண்டும்.

    ‘ அதுஎப்படி நீங்கள் இப்படி சொல்லலாம் ‘என படித்து கேட்க என்னிடம் புத்தகமும் இல்லை நீங்கள் கொடுத்தாலும் எனக்கு பிரஞ்சு மொழியே எப்படி இருக்கு என்று தெரியாது.
    பதிவு நீண்டுகொண்டேபோகிறது ஒன்றைமுடித்துக்கொள்கிறேன்
    தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்மந்தம் என்ற கேள்வி விடாமல் துரத்திகொண்டிருந்த போது, கடைசியாக சொன்னீர்கள் பாருங்கள்...
    // ரகசியங்கள் அறியாது அன்பு செய்பவன் காதலன். ரகசியங்கள் அறிந்து அன்பு செய்பவன் ஏறக்குறைய புனிதன்.//
    அட்டகாசம் உங்கள் சிந்தனையின் வெளிப்பாடு என்னை கைதட்டவைத்து விட்டது (கைதட்டல் கேட்கிறதா) நண்பரே...!!!

    நட்புடன்,
    மாயாவி.சிவா

    ReplyDelete
    Replies
    1. ஒரு விஷயம் கேட்க மறந்துவிட்டேன்...

      க்ரீன்ஃபால்ஸ் திரும்புதல்’-பாகம்-23
      ‘ஏறக்குறைய ஒரு புனிதன்’-பாகம்-24 எனில்...
      விரியனின் விரோதி-பாகம்-no என்ன ?
      அல்லது இந்த வரிசைகள் தவறா...?
      விளக்கம்...ப்ளிஸ்...

      Delete
  2. நண்பர் மாயாவி சிவா, தங்களின் கருத்துக்களிற்கு நன்றி. XIII கதைவரிசையின் கிளைக்கதைவரிசையே XIII மிஸ்டரி. ரத்தப்படலம் என தமிழில் அறியப்படுவது பிரதான XIII தொடர், அதில் இதுவரை 23 கதைகள் க்ரீன்பால்ஸ் திரும்புதலுடன் சேர்த்து வெளியாகி இருக்கிறது. XIII மிஸ்டரி மங்கூஸின் விரியனின் விரோதியில் ஆரம்பித்து Betty ன் கதைவரை 7 கதைகள் வெளியாகி இருக்கின்றன. என் பதிவின் கீழ் உள்ள XIII Mystery சுட்டி மூலம் பிற கதைகள் குறித்தும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். XIII மிஸ்டரி கதை வரிசையின் ஆறாவது ஆல்பமான பில் ஸ்டோக்கன் கதையை இன்னும் நான் படிக்கவில்லை என்பதால் அதை இன்னும் பதிவாக்கவில்லை.

    உங்கள் நேரத்தை தந்து நீங்கள் அளித்திருக்கும் நீண்ட கருத்துக்கு மீண்டும் நன்றிகள் நண்பர் மாயாவி சிவா.

    ReplyDelete
  3. மீண்டும் ஓர் அசத்தல் பதிவு நண்பரே!

    ReplyDelete
  4. There is a mistake in mongoose story,in our lion xiii collectors edition mongoose mentioned that he had an argument with Jason fly when he shoot him, but in viriyanin virothi he shot him without any dialogue when he entering the ship,guys have you noticed it?who did the mistake?our editor or problem is in the original story?

    ReplyDelete
  5. Forget to mention abt ur story description,nice one,increase the expectation of tamil version,keep rocking

    ReplyDelete
  6. காதலரே,

    கதை நல்லா இல்லைன்னாலும் படங்கள் நன்றாக இருக்கிறது என்பதால் இது கிராபிக் நாவலில் சேர்த்தி அல்லவா ? ;-)

    ReplyDelete