Monday, December 16, 2013

Imperium & The Hobbit: The Desolation of Smaug


Imperium

சுருக்கெழுத்து என்பது குறிந்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஒரு காலத்தில் காரியதரிசிகளிற்கும், பத்திரிகையாளர்களிற்கும் தட்டச்சுக் கலையுடன் சுருக்கெழுத்துக் கலையும் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தது. Robert Harris ன் நாவலான IMPERIUM ஐ படிக்கும்வரை சுருக்கெழுத்தை சீரான முறையில் உபயோகிப்பதை கண்டுபிடித்தவர் யார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

இம்பிரியம் என்பது அதிகாரம் என்பதை குறிக்கும் சொல்லாகும். பண்டைய ரோமில் இதுவே உச்ச அதிகாரத்தை குறிக்கும் சொல்லாக இருந்தது. சாதாரண செனெட்டராக இருந்து பின் இம்பிரியம் எனும் உச்ச அதிகாரத்தை கொண்ட Consul பதவியை அடைவது வரை பிரபல பேச்சாளரும், வழக்காடுனருமான Cicero வின் கதையை நாவல் கொண்டிருக்கிறது.

நாவலின் கதை சொல்லியாக Tiro. சிசோரோவின் அடிமை + காரியதரிசி. இவரே சுருக்கெழுத்து முறையையும் அதை தகுந்த விதத்தில் உபயோக்கிக்கும் விதத்தையும் கண்டுபிடித்ததாக நாவல் கூறுகிறது. Tironian Notes என அழைக்கப்படும் குறியீடுகளை இவர் உருவாக்கி சிசோரோவின் பேச்சுக்களை சுருக்கெழுத்து முறையில் பிரதி செய்தார்.

நாவலின் ஆச்சர்யமான அம்சம், இன்று அரசியலில் நாம் எதை கேவலம் எனக் கருதுகிறோமோ அது அன்று இருந்திருக்கிறது என்பதுதான். கொடும்பாவியில் இருந்து மேடைப்பேச்சு வரை, வாக்குகளை விலை கொடுத்து வாங்குவது முதல், ரவுடித்தனம் வரை என ஏறக்குறைய எல்லாமே அன்றைய ரோம் அரசியலில் இருந்திருக்கிறது.

காலங்கள் மாறினாலும், நாகரீகங்கள் மாறினாலும், மனிதகுலம் முன்னேற்றம் கண்டாலும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டியும், அதை சூழ உள்ள தந்திரங்களும், அதிகாரத்தை அடைவதற்காக ஒருவர் செய்யக்கூடிய செயல்களும் அதிக மாற்றத்தை கண்டிடவில்லை. காலம் எனும் மாற்றத்துடன் அதிகாரத்திற்கான வேட்கை ஒரு மாறிலியாக இருந்து கொண்டே இருக்கிறது.

எவ்வளவுதான் ஒரு மனிதன் நேர்மையான லட்சியங்களுடன் தன் அரசியல் பயணங்களை ஆரம்பித்தாலும் அதிகாரத்தை வெல்லுவதற்கு அவன் சமரசங்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் நாவல் தெளிவாக கூறுகிறது. ஊடவே கதை சொல்லியும் அடிமையுமான டைரோவின் வாழ்வையும் அது சிறிய சித்திரமாக வரைகிறது.

ராபார்ட் ஹாரிஸின் எழுத்துக்கள் வெகுஜன வாசிப்பிற்குரியவை. ஆனால் மிக சிறப்பான எழுத்துநடையை அவர் கொண்டிருக்கிறார். அவர் கதை சொல்லலில் ஆடம்பர அலங்காரங்கள் இல்லை. எடுத்த விடயத்திற்கு நேரே வாசகனை இட்டு செல்லும் எழுத்துக்கள் அவை.
பண்டைய ரோமின் அரசியல் சதுரங்க ஆட்டம் குறித்த ஒரு தெளிவான, எளிதான பார்வையை முன்வைக்கும் நாவல், பொம்பெய், சீசர் , ஹார்டென்சியஸ் போன்ற புகழ் பெற்ற வரலாற்று பாத்திரங்கள் மீதான ஒருவரின் பார்வையையும் மாற்றம் கொள்ள வைக்கிறது

The Hobbit: The Desolation of Smaug

மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக பீட்டர் ஜாக்சன் திரைக்கதை எழுதுவதில் அந்நிபுணர் உதவியை நாடவில்லை என்பது ஹாபிட் செய்த புண்ணியம்.

ஹாபிட்டில் எனக்கு சிறிது ஏமாற்றத்தை தந்தவற்றை முதலில் சொல்கிறேன். லார்ட் ஆஃப் த ரிங்ஸ் நாவலில் உள்ளதைப் போன்ற நிலவியல் வர்ணணைகள் ஹாபிட்டில் இல்லை. ஹாபிட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் என்னைக் கவர்ந்த நிலவியல் இப்பாகத்தில் என்னைக் கவரவில்லை.

நாவலில் மிர்க்வூட் மற்றும் எல்ஃபுகள் குறித்த பகுதிகள் சிறிது நீண்டவையாக இருக்கும் திரைக்கதையில் அவை சுருக்கப்பட்டுவிட்டன. இவையே எனக்கு சிறிய ஏமாற்றத்தை தந்தவை குறிப்பாக மிர்க்வூட்டில் நான் அதிகம் எதிர்பார்த்து இருந்தேன் என்பதும் காரணமாக இருக்கலாம்.

இதற்கு பதிலாக கண்டால்ஃப் தீய சக்தி ஒன்றினை தேடிச் செல்லும் பகுதி விரிவாக்கப்பட்டிருக்கிறது. புதிதாக காதல் இழை ஒன்றும் நெய்யப்பட்டு இருக்கிறது. லெகோலாஸின் சாகஸங்களும் விறுவிறுப்பை எடுத்துவருகிறது. இவை எல்லாம் நன்றாகவே இருக்கின்றன. நாவலைத் தாண்டியும் புதியதொரு அனுபவத்தை தருகின்றன.

திரைக்கதை படிப்படியாக வேகம் பெற்று செல்லும் வண்ணம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பாய்ந்தோடும் ஆற்றில் நடக்கும் சண்டைக் காட்சி அபாரம். நல்லதொரு கற்பனையில் அம்மோதல் காட்சி உருவாக்கப்பட்டு இருக்கிறது. லோன்லி மவுண்டனின் ஆழங்களினுள் ஸ்மொக்கின் பதுங்கிடம் வந்தததும் திரைப்படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது.

ஸ்மொக், அட்டகாசம், அற்புதம், அதகளம். நான் எதிர்பார்த்து சென்றதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்தது. ஸ்மொக்கின் சுவாலை வீச்சை ஆழ்ந்து ரசித்தேன். பல உலக திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கான உயர் விருதுகளை வாங்கும் திறமை தலைவரில் இருக்கிறது. நாவலில் இல்லாத ஒரு சம்பவத்தையும் உருக்கி ஊற்றி அதில் ஸ்மொக்கை முங்க வைத்திருக்கிறார்கள். பலே பலே பலே. இப்படியே கதையை கொண்டு சென்று திரையை இருளாக்கி விடுகிறார்கள். அடடா இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டுமே என முனகவும் வைத்து விடுகிறார்கள்.

மொத்தத்தில் ஹாபிட் 2 நல்லதொரு மிகைபுனை சாகசம். இச்சிறு நாவலை எப்படி மூன்று பாகங்களாக விரிவாக்கப் போகிறார்கள் என நான் எண்ணியிருந்த ஐயங்கள் எல்லாம் இன்றுடன் இல்லாமல் போய்விட்டன. ஹாபிட் எனும் சிறு நாவலையே மூன்று பாகங்களாக எடுக்க முடிகின்றபோது லார்ட் ஆஃப் த ரிங்ஸ் எனும் நாவலைக்கூட ஹாபிட்டை விட சற்று பெரிதானதாக எழுதியிருக்க முடியும் என்பதும் உண்மையே!

1 comment:

  1. முதல் பாகம் போல அவ்வளவு ஆர்வமாக இருக்குமா... இல்லை வழக்கம் போல முக்கிய கட்டத்தில் ப்ரேக் அடிச்சு இன்னொரு வருஷம் தேவுடா காத்திருக்க வச்சுடுவாங்களோன்னு நினச்சு பயந்துகிட்டே போய் பார்த்தேன்.... ஆனால், பீட்டர் ஜாக்சன் ஒரு சிறந்த திரைக்கதை சொல்லாடர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்... ஹாபிட் மற்றும் லார்ட் ஆப் த ரிங்க்ஸ் தொடருக்கு ஒரு EPIC Finale காத்திருக்கிறது.



    // மாதம்தோறும் நீட்டுவதிலும் சுருக்குவதிலும் சிறப்பு பாண்டித்துதுவம் பெற்ற ஒரு நிபுணர் அவர்களின் திறமைகளுடன் காலம் தள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். //

    அவரை பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்... சென்னை புத்தக கண்காட்சிக்கு தற்போதைய Talk of the Town அவர்தானாமே :P

    ReplyDelete