Thursday, January 17, 2013

முகம் தந்தவன் காதல்

முதல் காதலியின் முகத்தை மறப்பது மிக இலகுவானது. அதற்காக நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை, அந்தப் பொறுப்பை அயர்வற்ற கால்களுடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் தன் கைகளில் எடுத்துக் கொண்டுவிடும். ஆனால் ஜேசன் மக்லேனோ அல்லது XIII கதைவரிசையின் வாசகர்களோ ஸ்டீவ் ரோலண்டின் முகத்தை மறப்பது அந்தளவிற்கு இலகுவானதாக இருக்காது. ஏனெனில் மக்லேனின் முகத்தை நாம் பார்க்கும் ஒவ்வொரு கணமும் அதில் நாம் காண்பது ஸ்டீவ் ரோலண்டையே. இந்த விடயத்தை மிக இலகுடன் வரித்துக்கொண்ட அசட்டையுடன் நாம் மறந்து செல்ல பழகியிருக்கிறோம். அதேபோல் இன்று காமிக்ஸ் வாசகர் மத்தியில் பிரபலமாகிய XIII பச்சையை தன்னுடலில் முதலில் பதித்து சுமந்து வீழ்ந்தவனும் ஸ்டீவ் ரோலண்ட்தான். அதனாலேயே இன்று XIII எனும் பச்சை காமிக்ஸ் அட்டைகளில் தோன்றும் இடங்களில் எல்லாம் அவனுடைய அரூபப்புன்னகை  பின்னணியில் தன்னை விழியறியா மச்சமாக பதித்து நிற்கிறது. XIII க்கு முகம் தந்தவன் கதையையே XIII மிஸ்டரி கதைவரிசையின் ஐந்தாம் ஆல்பமும் விபரிக்கிறது.
ஜனாதிபதி வில்லியம் ஷெரீடானின் வரவை எதிர்பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அருகில் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களில் ஏதோவொன்றின் ஏதோவொரு அறையின் காற்றுவாசலை திறந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தொலையிலக்கு துப்பாக்கியை தீவிரமான முகத்துடன் வெளியே எடுக்கும் ஸ்டீவ் ரோலண்ட். அவன் மனதின் முனுமுனுப்பாக ஸ்டீவ், என்றாவது ஒரு நாள் நீ சரித்திரத்தில் இடம்பிடிப்பாய் என அவன் தாய் அவனிற்கு உரைத்த சொற்களின் உச்சாடனம். அங்கிருந்து காலத்தில் பின்னோக்கி பாயும் கதை என்பதாக ஸ்டீவ் ரோலண்ட் கதையை நிகழ்காலத்திற்கும் கடந்தகாலத்திற்குமிடையில் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு இழையாக சலிப்பின்றி சொல்கிறார் கதாசிரியர் Fabien Nury. இக்கதைக்கான சித்திரங்களை வழங்கியிருக்கிறார் Richard Guérineu.
காலத்தின் பின்னோக்கிய பார்வையில் சவுத்பர்க் எனும் புறநகரொன்றில் வாழும் வசதியான குடும்பம் ஒன்றின் வாரிசாக அறிமுகமாகிறான் பதினான்கு வயதின் முடிவை எட்டிக் கொண்டிருக்கும் ரோலண்ட். அவன் தாய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவளாக இருக்கிறாள். அவன் தந்தை தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் பிடிக்குள் தன்னை அடிமையாக்கி கொண்டவராக இருக்கிறார். தன் தாயை அதிகம் ஏற்றுக்கொள்ளாத ஒரு மகனாக சித்தரிக்கப்படும் ரோலண்ட், தன் தந்தை மீது கொண்ட ஆதர்சத்தாலும், அவன்மீது அவர் ஓயாது திணிக்கும் தீவிர இனவெறி மற்றும் வலதுசாரிக் கருத்துக்களாலும் இனவெறி ஊட்டப்பட்டு வளர்ந்த ஒருவனாக இருக்கிறான்.
கறுப்பினத்தவர் மீது ஸ்டீவ் ரோலண்ட் கொண்ட வெறுப்பானது அவனுடன் அவனுள் கூடவே வளர்ந்து வரும் ஒன்றாக கதையில் கூறப்படுகிறது. கறுப்பினத்தவர்களிற்கு வழங்கப்படக்கூடிய ஒரே நீதி வன்முறை மாத்திரமே எனும் மந்திரத்தின் ஓயா உச்சாடனன் அவன். கல்லூரி நாட்களில்கூட விளையாட்டுப் போட்டிகளில் கறுப்பினத்தவர்களிடம் தோற்றுப் போவதை அவன் விரும்புவது இல்லை. அனைத்திலும் அவன் முதல்வனாக இருக்க வேண்டும் இரண்டாமிடம் என ஒன்று இல்லை,  அது ஒன்றுமேயில்லை என்பது அவன் வாழ்க்கையின் உயிர்வரி. தன் வீழ்ச்சியின் உறுதியின் புலர்தலில்கூட அவனிற்கு துணைவருவது இந்த உயிர்வரிகள்தான் ஆனால் அவ்வரிகள் அவன் முதல்வன் இல்லை என்பதையே அவனிற்கு உணர்த்தி நகர்கின்றன. கதையின் இறுதிவரை தான் இளமையில் கொண்ட கருத்துக்களில் இருந்து மாற்றம் கொள்ளாத ஒருவனாகவே ஸ்டீவ் ரோலண்ட் இருக்கிறான். தாய்நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் எனும் தீவிர முனைப்பில் அவன் கதை நெடுக நிகழ்த்துவது இனவாதத்தின் வன்கவிதைகளையே. தன் கல்லூரி நாட்களில் சகோதரத்துவம் எனும் குழுவுடன் இணைந்து இனவாதப் போராட்டங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறான் ஸ்டீவ் ரோலண்ட். இந்த சந்தர்ப்பத்திலேயே அவன் தன் வருங்கால மனைவியான கிம் காரிங்டனையும் சந்திந்துக் கொள்கிறான்.
srஸ்டீவ் ரோலண்டின் தந்தை தன் சிந்தாந்தங்களின் நீட்சிக்காக எவ்வாறு அவனை பயன்படுத்திக் கொண்டாரோ அவ்வாறே தன் ரகசிய திட்டங்களிற்காக அவனை கிம் பயன்படுத்திக் கொள்கிறாள். ஸ்டீவின் பலவீனங்களை அவள் தவளையொன்றின் குறிதவறா நாக்குப்போல பற்றியிழுத்து தன் வலையினுள் அவனை அவனறியாவண்ணம் திசைப்படுத்திச் செல்கிறாள். ஏறக்குறைய அவன் முடிவினையும் அவளே முன்னெழுதி வைத்தாள் என்றுகூட கூறிடலாம். ஏனெனில் கிம், மங்கூஸை பரிந்துரைத்து சதியினுள் நுழைக்க அவள் தன் கணவனான ஸ்டீவ் மனநிலைமீது கொண்ட ஐயமும் ஒரு காரணமாகும். ஸ்டீவ்மீது கிம் கொண்ட காதல் இலகுவாக துடைத்துவிடக்கூடிய ஒரு அரிதாரப்படலம். ஸ்டீவுடன் இருக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் அவள் அதை பூசிக்கொள்ள வேண்டியது ஒரு கட்டாயம். தனது மகன் குறித்த அக்கறை அவள் பூசும் அந்தப் பூச்சை நியாயப்படுத்துவதாக காட்ட விழைகிறது. இருப்பினும் ஸ்டிவ் குறித்த தன் எண்ணங்களை அவனுடன் தீவிரமான தருணமொன்றில் நேர்மையுடன் அவள் பகிரவே செய்கிறாள். இந்த தருணமே கதையில் வாசகனை நெகிழ வைக்கும் பகுதியாகவும், சாதாரணமாக கடந்து செல்லககூடிய ஒரு அதிரடிக் கதையை அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதாக மாற்றிவிடுவதாகவும் இருக்கிறது. அது போலவே தன் வாழ்க்கையில் எங்கும் எப்போதும் பிறரால் பயன்படுத்திக் கொள்ளப்படும் மனிதனாகவும், தீவிர இனவெறியனாகவும் இருக்கும் ஸ்டீவ் ரோலண்ட் குறித்த ஒரு பண்பையும் அது அறிந்து கொள்ளச் செய்கிறது.
ஸ்டீவ் ரோலண்ட் என்னதான் ஒரு பாதகனாக இருந்தாலும், தன் மனைவியான கிம் அவன் வாழ்வில் இழைத்தது எல்லாம் துரோகம் என்பதை அவள் கூறி அவன் அறிந்தாலும், அவள்மீது அவன் கொண்ட அந்த முதல் காதலை அவன் இழப்பதேயில்லை. கிம்மின் சொற்கள் அவன் உயிரைப் பறித்த பின்பாகவும் கூட அவள்மீது அவன் கொண்ட காதலின் ஒளியில் மலர்ந்திட விழையும் மலரிதழ்மனம் அவனது. கிம் தன்னை பயன்படுத்தியிருந்தாலும்கூட, தன்னை நேசிக்கவேயில்லை முற்றாக வெறுக்கிறாள் என்பதை தெரிந்தபின்பாகவும்கூட அவள் என்றும் நலமாக இருக்க வேண்டும் என மனதார விரும்புபவன் அவன். கிம் மீது அவன் கொண்ட காதலிற்கு அவனுடைய இறுதி மூச்சுவரை உண்மையாக இருந்த ஸ்டீவ் ரோலண்ட், அந்த அரிதாரக் காதலின் கரங்களின் அணைப்பினிலேயே இறந்தும் போகிறான். அவன் இறந்து புதைக்கப்பட்டாலும், அன்பினில் சாந்திபெறா ஆவியென அவன் முகம் நடமாடிக் கொண்டேயிருக்கிறது. அந்த முகத்தில் அவன் கொண்டிருந்த உண்மையான காதலும் அரூபமான மச்சமாகவே புன்னைகத்து மறைகிறது. ஸ்டீவ் ரோலண்ட் சரித்திரத்தில் இடம்பிடிக்கவே செய்கிறான்……. காதலின்.

12 comments:

  1. இங்கே ஒரு துண்டு மட்டும் போட்டுவிட்டு, சாவகாசமான பிரிதொரு நாளில் ரசித்துப் படித்துக்கொள்கிறேனே?!

    உங்கள் பதிவுகள் பத்தோடு பதினொன்று ரகமில்லையல்வா, காதலரே?! :)

    ReplyDelete
    Replies
    1. உங்களிற்கு படிக்க தோன்றும்போது படித்திடலாம் நண்பரே :)

      Delete
  2. அயர்வற்ற கால்களுடன் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் காலம் தன் கைகளில் எடுத்துக் கொண்டுவிடும். //

    அல்லது கட்டிய கயிறின் முனை மூக்கில் இடிக்கும் முன்னரே... :)

    //இந்த தருணமே கதையில் வாசகனை நெகிழ வைக்கும் பகுதியாகவும், சாதாரணமாக கடந்து செல்லககூடிய ஒரு அதிரடிக் கதையை அவ்வளவு சாதாரணம் இல்லை என்பதாக மாற்றிவிடுவதாகவும் இருக்கிறது.//

    ஸ்டீவ் கிம் காதல் கதையானது கைதியொருவன் எட்டத் தெரியும் குயிலைப் பார்த்து ஏங்குவதை ஒத்ததே. எட்டத் தெரியும் குயிலை எண்ணி ஏங்குபவன் கண்ணுக்கு கிட்ட இருக்கும் கம்பி தெரியாது தான். ஆனாலும் கருப்பர்களை வெறுத்த ஸ்டீவின் முகம் கொண்ட ஜேசன், ஜோன்ஸ் மேல் காதல் கொள்வது சற்றே நகைமுரண் இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. @ILLUMINATI
      //ஆனாலும் கருப்பர்களை வெறுத்த ஸ்டீவின் முகம் கொண்ட ஜேசன், ஜோன்ஸ் மேல் காதல் கொள்வது சற்றே நகைமுரண் இல்லையா?//


      ஜேசன் மூளையில் தொட்ட தாக்குதலுக்கு பிறகு ஏற்பட்ட இரத்த படலத்தால் அவரது பங்கு இந்த கதையில் என்ன என்பதையும் அவர் இங்கே ஸ்டீவின் இடத்தில நடிக்கவந்த ஒரு TEMPORARY CHARACTER என்ற நினைவுகளை அவர் முற்றிலும் இழந்து விடுவதாலே இந்த நகைமுரணுக்கு காரணமாக இருக்குமோ??


      @K.K
      //கிம்மின் சொற்கள் அவன் உயிரைப் பறித்த பின்பாகவும் கூட அவள்மீது அவன் கொண்ட காதலின் ஒளியில் மலர்ந்திட விழையும் மலரிதழ்மனம் அவனது//

      அருமையான கவிதைத்துவமான விவரிப்பு!வார்த்தைகள் அழகு என்றால் கொள்ளை அழகு !

      இவ்வளவு உணச்சிமிக்க ஒரு காதல்கதை ஸ்டீவை சுற்றி புனையப்பட்டுள்ளது காமிக்ஸ் காதலர்களுக்கு ஒரு அற்புதமான TREAT!

      ANOTHER UNIQUE AND INTERESTING POST. I LOVED IT A LOT.நன்றி K.K .


      Delete
    2. கிம் தெரிந்துதான் எல்லா செயல்களையும் ஆற்றுகிறாள், ஆனால் ஸ்டீவ் அது வாழ்க்கையின் வரி என படித்துவிட்டு அடுத்த பக்கத்திற்கு நகர்கிறான், அவன் வாழ்வின் பக்கமெல்லாம் சதி வரிகளால் நிரம்பியிருக்கிறது, அவன் வாழ்க்கையின் ஒரே ஓய்விடம் அவன் காதல் ஆனால் அதுவும் போலிதான் என அவன் அறிந்தாலும் அந்த சரணாலயத்திலிருந்து வெளிச்செல்ல அவன் விரும்புவது இல்லை... காதல் என்றால் இருவரும் விரும்ப வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.... உண்மையில் காதலின் நீளம் அதன் தோல்வியில் இருக்கிறது, அதன் ஆழம் ஆண்களின் மனதில் இருக்கிறது.... :)

      மக்லேன் அங்கிள் ஒரு பெண்பித்தர், ஓட்டகத்திற்கு பிகினி அணிந்து விட்டாலும் அதையும் அவர் காதல் கொள்வார்.... :)

      @ விஸ்கி - சுஸ்கி, மக்லேன் அங்கிள் நினைவுகள் மறந்தாலும் காதல் செய்வதில் மறக்க மாட்டார், ஜெசிக்காவைக் கூட சைட் அடிப்பார் அவர் :) .... கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

      Delete
  3. மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள் காதலரே நன்றி :))
    .

    ReplyDelete
  4. #ஸ்டீவ் கிம் காதல் கதையானது கைதியொருவன் எட்டத் தெரியும் குயிலைப் பார்த்து ஏங்குவதை ஒத்ததே. எட்டத் தெரியும் குயிலை எண்ணி ஏங்குபவன் கண்ணுக்கு கிட்ட இருக்கும் கம்பி தெரியாது தான். ஆனாலும் கருப்பர்களை வெறுத்த ஸ்டீவின் முகம் கொண்ட ஜேசன், ஜோன்ஸ் மேல் காதல் கொள்வது சற்றே நகைமுரண் இல்லையா?#
    என்ன ஆச்சு உங்களுக்கு இலுமி?... ஜோன்ஸ் மீது காதல் கொண்டது ஸ்டீவ்வா? அவன் இறந்தபிறகுதான் ஜோன்ஸ் கதையில் வருகின்றாள்....

    ReplyDelete
    Replies
    1. //ஸ்டீவின் முகம் கொண்ட ஜேசன்//

      Delete
    2. மற்றவர்களின் காதல் பற்றிய விவாதம்னா சூப்பரா இருக்கும்.. அடி பின்னுங்க... :)

      Delete