Saturday, November 17, 2012

ஹுஆல்பை தீர்க்கதரிசி

வதனமோ சந்த்ர பிம்பமோ – 6

ஷெலர் கோட்டையை அண்மித்த பகுதிகளில் அமைதியாக வாழ்ந்திருந்த Hualpai இந்தியர்கள் வன்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். காலனல் க்ளிஃப்டனால் இத்தகவல் கிடைக்கப்பெறும் டெக்ஸ் தன் குழுவினருடன் ஷெலர் கோட்டையை நோக்கி பயணிக்கிறார்…..

அமெரிக்க பூர்வகுடிகள் மீதான ஒடுக்குமுறையின் வீர்யம் குறித்து வரலாறு தன் பக்கங்களில் இனவழிப்புக்கள் குறித்த பழகிப்போன கையாலாகா உணர்வுடன் வீற்றிருக்கிறது. ஒரு மண்ணின் பூர்வீகர்களை ஆக்கிரமிப்பாளர்கள் தம் வளத்திற்காக ஒடுக்கிய பெருமேற்கின் பேரவலம் அது. நிலத்திற்காகவும், கனிமங்களிற்காகவும், பல்வணிகங்களிற்காகவும் தாம் புது வாழ்வை ஆரம்பிப்பதற்காக வந்திறங்கிய நிலத்தின் குழந்தைகளை எந்தவிதக் மனக்கிலேசமுமின்றி ஆக்கிரமிப்பாளர்கள் அழித்தார்கள். பூர்வகுடிகளின் உணவுத்தேவைக்கான எருதுகள் கொன்று குவிக்கப்பட்டன. அவர்கள் வாழ்நிலங்களிலிருந்து வன்முறையாலும், மதிப்பளிக்கப்படாத நேர்மையற்ற ஒப்பந்தங்களாலும் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்கள். அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், தொன்மம், வாழ்வியல் முறை போன்றன ஆக்கிரமிப்பாளர்களின் வன்மைநிறை நடவடிக்கைகளால் அழிவுறவோ அல்லது  மாற்றம் கொண்டு காலநகர்வுடன் மறைந்து போவதற்கான ஆரம்ப அசைவுகளை முன்னெடுக்கவோ செய்தன. தாம் உதித்த மண்ணிலேயே வந்தேறிகளால் வரையறுக்கப்பட்ட குறுகிய குடியிருப்பு வலயங்களில் அவர்கள் மனிதப் பிறவிகளிற்கு விதிக்கப்படாத ஈன வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வந்தேறி ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான பூர்வகுடிகளின் எழுச்சிகள், போராட்டங்கள் அவர்களிற்கு வெற்றிகளையும் தந்தன ஆனால் அந்த வெற்றிகளின் வாழ்நாளானது அவர்கள் தம் வாழ்நாள் நெடுகிலும் சந்தித்த தோல்விகளிற்கு ஈடாகவேயில்லை. தம் உரித்து நிலத்தில் வாழும் விலங்குகளிற்கு இருந்த வாழ்க்கையின் சுதந்திரம்கூட அவர்களிற்கு மறுக்கப்பட்ட நிலையில் அனைத்தையும் இழந்து வாழ்ந்திருந்த அம்மக்களின் மனச்செவிகளில் நம்பிக்கை ஒளியை விருட்சமாக உயிர்க்க செய்யும் வார்த்தைகள் விதைகளாக விழுந்தால் அவ்வார்தைகளையும், அவ்வார்த்தைகளை கூறுபவர்களையும் அவர்கள் தம் தலைவர்களாக ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன. கையறு நிலையிலிருக்கும் மனிதர்கள் தாம் கரம்பற்றக்கூடிய ஒரு நம்பிக்கையை உதறிவிடுவார்களா என்ன.

தனக்கு வந்த தகவலையடுத்து ஷெலர் கோட்டையை நோக்கி விரையும் டெக்ஸ்கூட சாதாரண ஒரு ஆக்கிரமிப்பாளர் போலவே இங்கு சிந்திக்கிறார். தமக்கு நிகழக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து சிறிதும் அஞ்சாது ஹுஆல்பை இந்தியர்கள் வன்முறைகளில் இறங்குவதற்கான காரணம் என்ன எனும் கேள்வியை அவர் எழுப்புகிறார். இங்கு “நிகழக்கூடிய விளைவுகள்” என்பது ஒடுக்குமுறையின் பாசக்கார தோழனான வன்முறையிலான பதிலடி என்பது தெளிவான ஒன்று. எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் கிளர்ச்சிக்காரர்கள் குறித்து எழுப்பிடும் ஒரு கேள்வியாகக்கூட இது இருக்கலாம். டெக்ஸ் தான் எழுப்பிய கேள்விக்கான பதிலை ஷெலர் கோட்டையில் அறிந்து கொள்கிறார் ஆனால் அதற்கு முன்பாக ஹூஆல்பைகளின் வன்முறைக்கு சான்றான ஒரு நிகழ்வின் முடிவையும், அவர்களின் வன்முறையையும் அவர் நேராகவே காணவும் அனுபவிக்கவும் செய்கிறார். அந்தக் கணம் முதல் கொண்டே ஹூஆல்பை நாய்களிற்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என அவர் மனதிலும் அவர் குழுவினர் மனதிலும் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்களின் ஆன்மா கூத்தாட ஆரம்பித்து விடுகிறது. இந்தக் கூத்திற்கு உடந்தையாக டைகர் ஜாக், கூத்தை உலகின் அல்லது வாசகன் கண்களின் முன் நியாயப்படுத்த பயன்படும் பாத்திரமாக.

அமெரிக்க மண்ணின் பூர்வகுடிகள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்திருந்தவர்கள். இயற்கை தமக்கு வழங்கிய ஆதார வளங்களையும் அவர்கள் மிகவும் மதிக்கவே செய்தார்கள். இயற்கையின் சொற்களிற்கு காது கொடுப்பது அவர்களிற்கு வழக்கமாக இருந்தது. செவ்விந்தியக்குடிகளில் மனிதர்க்குரிய உலகிற்கு அப்பால் உள்ள உலகுகளுடன் தரிசனங்கள் வழியாக தொடர்பை ஏற்படுத்தும் ஆற்றல் கிடைக்கப் பெற்றவர்கள் அக்குடிகளின் மருத்துவர்களாக இருந்தார்கள். வெகுஜன இலக்கியங்களில் இவர்கள் சூன்யக்காரர்கள் எனும் நாமகரணம் சூட்டப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த மருத்துவர்கள் கனவுகள் வழியாகவும், தியானங்கள் வழியாகவும் உருவாகக்கூடிய ஒரு மோனநிலையில் அவர்கள் கொள்ளும் தரிசனங்களை நிஜவுலகிற்கான சம்பவங்களாக மொழிபெயர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் மோனங்களில் இழையெடுக்கும் காட்சிகளை மருத்துவர்கள் பேராத்மாக்கள் தமக்கு வழங்கிய கட்டளையாகவோ அல்லது செய்தியாகவோ உணர்ந்தார்கள். இந்தப் பேராத்மாக்கள் விலங்குகளின் உருக்களை பெற்றிருப்பதையும் அவர்கள் தரிசித்தார்கள். பேராத்மாக்கள் தமக்கு உணர்த்தியவற்றைக் கொண்டு தம் இனமக்களிற்கு ஆலோசனைகளையும், குணமாக்கல்களையும், வழிநடத்தல்களிற்கான உதவிகளையும் மருத்துவர்கள் நல்கினார்கள். வரவிருக்கும் காலத்தின் நிகழ்வுகள் குறித்து எதிர்கூறினார்கள். மருத்துவர்கள் மீது நம்பிக்கை கொண்ட பூர்வகுடிகளும் அவர்கள் எதிர்கூறல்களை நம்பினார்கள். அவர் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி செயற்படவும் செய்தார்கள். மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் தாம் வாழ்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்த ஹூஆல்பைகளின் காதுகளில் அவர்கள் எதிர்காலம் குறித்த தகவல்களை ஒரு எதிர்கூறி உரைத்தால், அவன் எதிர்கூறியவைகளில் ஒன்று அவர்கள் கண்களிற்கு முன்பாக நிஜமானால், தம் இனத்தை ஆக்கிரமிப்பவர்களிற்கு எதிராக அந்த எதிர்கூறியை தம் தலைமையாக கொண்டு அவர்கள் போராடா மாட்டார்களா என்ன!

ph1ஆனால் பூர்வகுடிகள் மத்தியில் தரிசன வாக்குகள் தந்த அனுபவத்திற்கும் மேலாக எதார்த்தம் வழங்கிய அனுபவம் கண்டவர்களும் இருக்கவே செய்தார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் வன்முறைகளின் கோரவுருக்களை தம் கண்முன் கண்டுணர்ந்து அகம் நனைந்து வந்தவர்கள் அவர்கள். தம் அனுபவங்கள் வாயிலாக தாம் கண்ட உண்மைகளை அவர்கள் ஒரு எதிர்கூறியின் தரிசனத்திற்கு எதிராக தம் மக்களிடம் எடுத்துக்கூறும்போது, ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடிக்க வேண்டும், எம் நிலமும், வாழ்வும் முன்போல் வளம் கொள்ள வேண்டும் எனும் வெறியில் இருக்கும் மக்கள் மத்தியில் அவர்கள் வார்த்தைகளே அவர்களிற்கு எதிரிகளாகி விடுகின்றன, அம்மக்கள் பார்வையில் அவர்களை துரோகிகளாக்கி விடுகின்றன. அவ்வகையான ஒரு முதியவரைத்தான் ஷெலர் கோட்டையில் சந்திக்கிறார் டெக்ஸ்.

கதையில் டெக்ஸ் அவரை முதிய சூன்யக்காரன் எனச் செல்லமாக விழிக்கிறார். பூர்வகுடி மருத்துவர்களின் செயல்முறைகள் சடங்குகளால் கட்டப்பட்டது. மந்திர உச்சாடனங்கள், பாடல்கள், நடனம், பலியிடல், மோனம், பேராத்மாக்களுடன் தொடர்பு எனக் கலவையாக அவை அமைந்திருந்தன. இயற்கை தந்த மருந்துகளால் மட்டுமன்றி பேராத்மாக்களின் உதவியாலும் அவர்கள் தம் குடிகளின் பிணிகளை நீக்க முயன்றார்கள். இயற்கையை தெய்வமாக ஏற்க மறுத்த கிறித்தவ மரபில் ஊறிவந்த ஆக்கிரமிப்பாளர்கள் மனதில் இந்த மருத்துவர்களின் நடவடிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியதோடு மட்டும் நின்று விடாது அவர்களிற்கு சூன்யக்காரர்கள் எனும் நாமத்தையும் எளிதாக பெற்றுத் தந்ததில் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும். தமக்கு எதிராக துர் ஆத்மாக்களை ஏவிவிடக் கூடியவர்களாக கருதப்பட்ட மருத்துவர்களிற்கு அவர்களால் வேறு பெயரை வழங்க முடியாதது அவர்கள் தப்பாக இருக்க முடியாதுதான்.

ஷெலர் கோட்டையில் டெக்ஸுடன் தனியே உரையாடும் முதிய சூன்யக்காரன், ஹூஆல்பைகளின் கலகத்திற்கான காரணம் என்ன என்பதையும் இன்னம் பத்து நாட்களிற்குள் நிகழப்போகும் ஒரு முக்கியமான சந்திப்பு குறித்தும் அவரிடம் கூறுகிறான். ஹூஆல்பைகளின் எழுச்சிக்கும், ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான அவர்களின் படைதிரட்டலிற்கும் காரணம் யார் என்பதை TEX Special 21 கதையான Le Prophète Hualpai ன் முதல் பக்கமே வாசகர்களிற்கு தரிசனமாக்கிவிடும். Hualapai சிகரங்கள் புடைசூழ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் அந்த பூர்வகுடி இளைஞன் பேராத்மா ஒன்றுடன் கொள்ளும் மோனத்தரிசனமே கதையின் ஆரம்ப பக்கங்களை அலங்கரிப்பவையாக இருக்கின்றன. அந்த தரிசனத்தில்  பேராத்மா அவனிற்கு வழங்கிய கட்டளையை நிறைவேற்றும் ஒருவனாகவே Manitary ஐ என்னால் இக்கதையில் காணமுடிகிறது.

மானிட்டாரி ஒரு அனாதை. அவன் என்றுமே வீரனாகவோ, பராக்கிரமியாகவோ இருந்தவனல்ல. அவன் ஒரு தனியன். தியானங்களில் ஆழ்ந்து துறவிபோல வாழ்ந்தவன். கதையின் ஒரு சந்தர்பத்தில் Wovaka என்பவருடன் மானிட்டாரியை டெக்ஸ் ஒப்பிட்டு பேசுவார். டெக்ஸ் இங்கு பேசுவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனம் என்பது கண்டதையும் கனாக்கண்டு உளறி வைப்பது என்பதாக இருக்கும். இது டெக்ஸின் பாத்திரப் படைப்பில் ஒரு முரணாக எனக்கு தோன்றியது. டெக்ஸின் ஏதாவது ஒரு கதையிலாவது பூர்வகுடி மருத்துவர்களின் தரிசனத்தை கேட்டு அவர் சிந்தித்ததே இல்லையா என்ன. இதே கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி எழுதிய இருளில் வரும் நிழலியே இவ்வகையான கனவு தரிசனம் ஒன்றிற்கு டெக்ஸ் காது கொடுப்பதை நான் படித்திருக்கிறேன். மானிட்டாரி பாத்திரத்தை உருவாக்க கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி, வோவாகாவினை ஆதர்சமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். வோவாகா கிரகணம் ஒன்றின் போது கூறிய எதிர்கூறல்கள், அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை இக்கதையில் மானிட்டாரிக்கு அணிவித்து இருக்கிறார் கதாசிரியர். ஆனால் வோவாகா அமைதியைப் போதித்தவர், பூர்வகுடிகளின் பழம்பெருமையும், வளமும், நிலமும் அவர்களை மீண்டும் வந்து சேரும்,ஆக்கிரமிப்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள், மரணித்த பூர்வகுடி வீரர்கள் உயிர்த்தெழுவார்கள் என அவர் எதிர்கூறினார். இவற்றை விரைவாக அடைவதற்கான வழியாக அவர் Ghost Dance ஐ உருவாக்கினார். கதையில் மானிட்டாரி அமைதியை போதிப்பதிலிருந்து வோவாகாவிடமிருந்து விலகிவிடுகிறான். அவன்கூறிய எதிர்கூறல் ஒன்று இயற்கை நிகழ்வாக விடிந்தபின் அவன்பின்பாக பூர்வகுடி போராளிகளும், மக்களும் அணிவகுக்க ஆரம்பிக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிற்கு எதிரான ஒரு பெரும்படையை தன் வன்முறை வழிகளால் திரட்ட ஆரம்பிக்கிறான் மானிட்டாரி.

ஹூஆல்பை கலகத் தலைவனான மானிட்டாரி குறித்தும் அவன் நடவடிக்கைகள் குறித்தும் அறிந்து கொள்ளும் டெக்ஸ், பத்து நாட்களிற்குள் மானிட்டாரியை ஆட்டத்திலிருந்து தூக்கி விடுவது எனும் முடிவிற்கு வருகிறார். தலைமையிழந்த போராட்டம் தள்ளாடி தளர்ந்து தடங்கலுற்று தடமிழக்கும் என்பது டெக்ஸின் கணிப்பு. ஆகவே டைகர் ஜாக்கும், டெக்ஸும் ஹூஆலாபை மலைக்கிராமம் ஒன்றில் வாழ்ந்திருக்கும் மானிட்டாரியை தேடி அப்பகுதிக்குள் ஊடுருவுகிறார்கள். கிட்டும், கார்சனும் ஹூஆல்பை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஒரு முக்கிய சந்திப்பை தடுப்பதற்காக  கிங்மேன் எனும் இடத்தை நோக்கி விரைகிறார்கள். அவர்கள் கதி என்னவாகிறது என்பதை தொடரும் சித்திரப்பக்கங்கள் வாசகர்களிடம் எடுத்தியம்புகின்றன.

அமெரிக்க பூர்வகுடிகள் மீது டெக்ஸ் வன்சொற்களை அதிகம் பயன்படுத்தும் ஒரு கதையை நான் படிப்பது இது முதல் தடவை. ஹூஆல்பைகள் குறித்து அவர் கொண்டுள்ள எண்ணம் அவர்கள் நாய்கள் என்பதாகவே இருக்கிறது. அப்படியாகத்தான் என்னால் உணர முடிந்தது. செவ்விந்தியர்களை எதிர்நாயகர்களாக கொண்ட ஒரு சாகசக் கதையில் அவர்களை நாய்களாக அழைப்பதிலும், நடத்துவதிலும் என்ன தப்பை நான் கண்டுவிட்டேன் என்பதுதான் நானே என்னிடம் கேட்கும் கேள்வி. இருப்பினும் டெக்ஸ் மீது இக்கதை நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும் ஒன்றானதாக இல்லை என்பதை நான் தயங்காமல் கூறுவேன். டெக்ஸ் நவஹோக்களின் தலைவராகவும், நவஹோக்கள் ஹூஆல்பைகளின் ஜென்ம விரோதிகளாக இருந்தாலும்கூட ஹூஆல்பைகள் குறித்த டெக்ஸின் இந்த ஆவேசமான மதிப்பீடு எனக்கு சங்கடத்தையே தந்தது.

ph2டெக்ஸின் கதைகளில் தோன்றும் எதிர் நாயகர்கள் வீர்யமற்றவர்களாக இருப்பின் அக்கதையானது எம் மனதில் பெரிதாக உருவாகும் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்து விடாமலேயே நகர்ந்து முடியும் தருணங்கள் உண்டு. இக்கதையின் எதிர்நாயகனான மானிட்டாரி பலவீனமான ஒருவனாகவே இறுதிவரை முன்னிறுத்தப்படுகிறான். டெக்ஸ் தன் வார்த்தைகளால் அடித்து வீழ்த்திய எதிர்நாயகனாகத்தான் மானிட்டாரியை என்னால் காண முடிகிறது. கதையில் அவன் பலம் என்பது அவன் பின்னால் திரண்ட பூர்வகுடிப் போராளிகள்தான். அப்போராளிகளிற்கும் டெக்ஸ் குழுவினர்க்குமிடையில் நிகழும் சந்திப்புக்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பை தந்தாலும் கதையின் போக்கில் அவையே சலிப்பை தருபவையாக இருக்கின்றன. இவ்வகையான ஊடுருவல் வகை கதைகளிற்குரிய எதிர்பாரா திருப்பங்களும், விறுவிறுப்பான சம்பவங்களும் இக்கதையில் அதிகம் இல்லை என்பதும் சலிப்பிற்கு மிக முக்கியமான காரணமாக அமைகிறது. வேதாளர் அல்லது டார்ஜான் போடும் சண்டைபோல வரும் காட்சியும் டெக்ஸின் பெருமையை உயர்த்துவதாக இங்கு அமையவில்லை. ஒட்டு மொத்த ஹூஆல்பைகளையும் இரண்டாம்தர அறிவிற்கு தள்ளிவிடாது சமமான வல்லவர்களாக கதாசிரியர் படைத்திருப்பாரேயெனில் கதை பற்றி எரிந்து வாசகனை உவகைத்தகனம் செய்திருக்ககூடும். ஆனால் டெக்ஸின் சுமாரான கதைகளில் ஒன்றாகவே இதனை வகைப்படுத்தக்கூடிய வகையில் இதன் கதை அமைந்திருக்கிறது. கார்சனின் அலம்பல்கள் ஒரு ஆறுதல் இருப்பினும் ஹூஆல்பைகளின் ரத்தம் நிலத்தில் தெறிக்க வேண்டும் எனக்கூறுவதில் கார்சன் டெக்ஸிற்கு போட்டியானவராகவே தோன்றுகிறார்.

ஆனால் சுமாரான கதைகளையும் விழிகள் அகன்று விரிய, கட்டங்களை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்து உள்ளெடுக்கும் வண்ணம் மாற்றியடிக்கும் மந்திரம் அறிந்த கலைஞர்களும் இருக்கிறார்கள். இக்கதையின் சித்திரக் கலைஞரான Corrado Mastantuono அரிதான அவ்வகைக் கலைஞர்களில் ஒருவர் என்பது இக்கதைக்கு கிடைத்த அதிர்ஷ்டநிகழ்வு. அவரை இக்கதையில் பணியாற்ற அமர்த்திய செர்ஜ் பொனெலிக்கு ஒரு பெருநன்றியை பேராத்மாக்களின் உலகை நோக்கி இத்தருணம் நான் அனுப்பி வைக்கிறேன். ஹூஆலாபை சிகரங்களுடன் ஆரம்பிக்கும் முதல் பக்கம் முதல் கொலராடா ஆற்றுடன் நிறைவுறும் இறுதிப்பக்கம் வரையில் வாசகன் சிலாகித்துக் கொண்டிருக்கும் வகையிலான சித்திரங்களை செதுக்கி பொருத்தி இருக்கிறார் இத்தாலிய சித்திரக் கலைஞர் கொராடோ மஸ்டாண்ட்யுவோனோ. அவரின் சித்திரங்கள் தீர்க்கமான, தெளிவான கோடுகளால் உருவானவை. மிடுக்கான உணர்வை வாசகனிடம் அவை இலகுவாக உணரச் செய்பவை. ஒரு காட்சியை வித்தியாசமான கோணங்களில் வரைவதில் மஸ்டாண்ட்யுவோனோ பக்கா கில்லாடி, அவர் சித்திரங்களின் சிறப்பம்சமும் அதுதான். கதையில் ஷெலர் கோட்டையில் முதிய சூன்யக்காரனுடன் டெக்ஸ் உரையாடும் தருணத்தில் அவர் வரைந்திருக்கும் சித்திரங்கள் இதற்கு அருமையான ஒரு உதாரணமாக அமைகின்றன.ஹூஆலாபை மலைப்பிரதேச நிலவியலை அவர் வரைந்து தந்திருக்குமழகு சிலிர்க்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும். அதேபோல அவர் நிழல்களை சித்திரங்களில் உலவவிடுவதன் வழி கதைநிகழும் சூழலின் ஒளிப்பிரசன்னத்தையும் அது தரக்கூடிய உணர்வுகளையும் வாசகர்களிடம் சிறப்பாக எடுத்து வருவதையும், கறுப்பு, வெள்ளை சித்திரங்களின் அழகை அந்த உத்தி வழி அவர் பூரணமாக்க விழைவதையும் ஒருவர் எளிதாக அவதானிக்க முடியும். கதையில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளிற்கு மஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்களும், கோணங்களும் வேகத்தையும், விறுவிறுப்பையும், உயிர்த்துடிப்பையும் வழங்கி அவற்றை வெகுவாக ரசிக்க வைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இக்கதை சுமாரான ஒன்றாக இருந்தாலும் அது சுமாரான ஒன்று எனும் முடிவை ஒருவர் எடுப்பதற்கு தயங்கிட காரணமாக அமைவது மாஸ்டாண்ட்யுவோனோவின் சித்திரங்கள் மட்டுமே. அவரின் சித்திரங்களை பார்த்து ரசிப்பதற்காகவேனும் படிக்க வேண்டிய டெக்ஸ் கதை இது என்பது நான் காணும் மோனத்தரிசனமாக இருக்கட்டும்.

23 comments:

 1. மீண்டும் ஒரு மஞ்சள் சட்டைகாரரின் கதையுடன் வந்துள்ளீர்... மஞ்சள் சட்டையாரின் கதைகள் எப்படியும் படிக்ககூடியதுதான் தமிழில் வரும்போது.. நன்றி...

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கதையை எந்த மொழியிலும் படிக்கலாம் ரமேஷ்... :) நன்றி எல்லாம் எதற்கு... ஒரு வருட சந்தா கட்டிவிடுங்களேன்... எனக்காக :)

   Delete
 2. வேவ்வேறு கதாசிரியர்களால்
  கதாபாத்திரத்தின்
  குணங்கள் சிதைக்கப்படுவது புதிதல்ல...

  ReplyDelete
  Replies
  1. சிதைப்பதும், மேன்மை பெறுவதும் எம் பார்வையிலும் தங்கியிருக்கும் நண்பரே...

   Delete
 3. தமிழில் வந்த
  பழி வாங்கும் புயல்!
  கழுகு வேட்டை!

  டெக்ஸ் கதைகளில்
  டெக்ஸின்
  குணாதிசயம் சிறப்பாக
  சித்தரிக்கப்பட்டிருக்கும்!

  ReplyDelete
 4. செவ்விந்தியர்கள் தொடர்பான கதைகள் பலவற்றிலும் ஒருபக்கச்சார்பு நிலையே எப்போதும் மேலோங்கி இருந்திருக்கிறது. டெக்ஸ் கதைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. டெக்ஸ் கதைகளில் செவ்விந்தியர்களை ஆதரிக்கும் கதைகளும் உண்டு, இது போன்ற கதாப்பாத்திரத்தின் குணாதிசத்தையே திசை திருப்பும் கதைகளும் உண்டு.
  தமிழில் வெளிவந்த டெக்ஸ் கதைகளான பழி வாங்கும் பாவை, தனியே ஒரு வேங்கை போன்ற கதைகளில் செவ்விந்தியர்களுக்காகவே போராடும் குணமுள்ளவராக டெக்ஸ் சித்தரிக்கப்பட்டிருந்தாலும்; வைகிங் தீவு மர்மம், லயன் ஜாலி ஸ்பெசலில் வெளிவந்த டெக்ஸ் கதை, இருளின் மைந்தர்கள் போன்ற கதைகளில் வெள்ளையர் அல்லாதோர் முட்டாள்களைப் போன்றும், எள்ளலுடனுமே சித்தரிக்கப்பட்டிருப்பார்கள்.

  டெக்ஸ் கதைகளை உற்று நோக்கினால், டெக்ஸின் பாத்திரம் பல நேரங்களில் கதையின் மைய இழை தொடர்பான ஆட்களைப் பொறுத்து, கதைக்கு கதை மாறும் என்பது தெரிய வரும். சில விதிவிலக்கான கதைகளும் இருக்கலாம். எப்படிப் பார்த்தாலும், இந்தத் தவறுகளிலும், ஒருபக்கச் சார்பு நிலைகளிலும் கதாசிரியரின் தவறு மட்டுமல்லாது, இதை தடுக்கத் தவறிய எடிட்டர்களின் பங்கும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. மேலும், இதுபோன்ற கதைகளில் வில்லன்கள் பலமற்ற ஏமாற்றுக்காரர்களாக இருப்பதும் ஆச்சரியமானதல்ல. மேலே கூறிய அனைத்துமே காணப்படும் ஒரு கதை தமிழ் வெளிவந்த டெக்ஸ் வில்லர் கதையான மந்திர மண்டலம். இம்மாதிரியான கதைகளில் கதையில் குறை இருந்தாலும், கொக்கரிப்புகளுக்கும் வாய்ச் சவடால்களுக்கும் குறைவிருக்காது.

   Delete
  2. தமிழில் வந்தா அதுல நெறைய இருக்குமே... :)

   Delete
 5. மொழிபெயர்ப்பில்
  சிதைக்கப்படுவதும்
  அதிகம்!

  சமீப உதாரணம்
  தங்க கல்லறை!

  ReplyDelete
  Replies
  1. முன்னைய பதிப்புடன் ஒப்பிடுவதால் உங்களிற்கு அப்படி தோன்ற வாய்ப்புகள் உண்டு :)

   Delete
 6. மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் காதலரே நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை
  முதல் பக்கத்தில் உள்ள மாந்திரீகனின் கண்கள் இரு மாறுபட்ட கண்களை மிக அழகாக வரைந்திருக்கிறார்
  ஹ்ம்ம்ம் வரிசையாக டெக்ஸ் கதை களாக போட்டு தாக்கிக்கொண்டே இருக்கிறீர்கள் ஹ்ம்ம்ம் நாங்கள் எப்பொழுது இவற்றை பார்ப்போமோ
  நீங்கள் கொடுத்து வைத்தவர்

  ReplyDelete
  Replies
  1. இதை நீங்கள் அனேகமாக மாசி மாதம் கண்டுவிடுவீர்கள் நண்பர் சிபி... :)

   Delete
 7. எனக்கு மிகவும் பிடித்த டெக்ஸ் வில்லரின் காமிக்ஸை பற்றிய பதிவு மிகவும் அருமை. தமிழில் மொழிபெயர்ப்பு எப்படி இருக்குமோ? பிப்ரவரி வரை பொறுத்துத்தான் பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் கதைகள் எளிமையான மொழிபெயர்க்க இலகுவான கதைகள் எனலாம்... ஆகவே அதிகம் ஏமாற்றம் இருக்காது என நம்பலாம்.... நம்பலாம் அவ்வளவே :)

   Delete
 8. இப்படியெல்லாம்கூட பதிவிட முடியுமா என பத்திக்கு பத்தி வியக்கவைக்கிறீர்கள்! 
  கதையோடு கூடவே வரலாற்று உண்மைகள் வேறு!
  எப்போதோ படித்து மறந்துபோன பல தமிழ் வார்த்தைகளை உங்கள் பதிவிலேதான் நினைவுகூற முடிகிறது!

  எப்படித்தான் முடிகிறதோ!!!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே... வார்த்தைகள் எம்முள் உறங்குகின்றன... அவ்வப்போது விழித்து வரிகொள்ளும் :)

   Delete
 9. இந்த பதிவை புத்தகம் (எமனின் ஏஜெண்ட்) வெளிவந்த பின்பு, போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இருந்தாலும் சிறப்பான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. நண்பரே சிகப்பாய் ஒரு சொப்பனம் வந்தபின்பும் இப்பதிவி இங்குதான் இருக்கும்.... தமிழில் வந்தபின்பு போடுவது என்றால் பதிவே போட முடியாது போய்விடுமே... :)

   Delete
 10. உங்கள் பதிவுகள் வரலாற்று உண்மைகளையும் பழங்குடியினர் முற்றிலும் அடக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட மக்களின் மீதான பார்வையையும் சோகம் கலந்து உரைக்கின்றன. வலுத்தவன் வகுப்பதே சட்டம்!

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் அச்சமுதாயம் இன்னும் கொஞ்சம் உயிர் பிடித்து வாழ்கிறார்கள்! நீதிக்கு மறைவில்லை!

   Delete
  2. நண்பர் ஜான் சைமன், அந்த இனத்தின் கதி இன்று அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை எனவே நான் கருதுகிறேன்..

   Delete
 11. http://duraithelegaleagle.blogspot.in/

  மலை அருவிகளில் சுற்றித்திரிபவன் ஒருவனின் blog...தமிழ்நாட்டிலேயே நீங்கள் பார்த்திடாத அழகிய மலை அருவிகள் எல்லாம் எத்தனை பாருங்கள்...

  for dynamic views

  http://duraithelegaleagle.blogspot.in/view/sidebar

  ReplyDelete