Sunday, September 16, 2012

குப்பைமேட்டு தேவதைக்கதை

க்ரிஸ் எனும் போதைமருந்து விற்கும் இளைஞன் அவன் செலுத்த வேண்டிய கடனை செலுத்தவியலா நிலையில் அவன் உயிரிற்கு கெடு விதிக்கப்படுகிறது. வேறு வழிகள் ஏதும் அறிந்திடாத க்ரிஸ் தன் தாயின் காப்புறுதி தொகை வழியாக இந்தக் கடனை அடைத்திடலாம் எனும் முடிவிற்கு வருகிறான். தன் தாயைக் கொல்வதற்காக அவன் கில்லர் ஜோ என்பவனின் சேவையை நாடுகிறான்....

சில திரைப்படங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும், உங்கள் மூச்சை நிறுத்தும், உங்கள் இதய துடிப்பை எகிறச்செய்யும் எனும் விளம்பர வரிகளுடன் வந்து மிகையான ஏமாற்றத்தை உங்ககளிற்கு அளித்து செல்லும். சில திரைப்படங்கள் வரிகளில் ஏதும் சொல்லிடாது தன் காட்சிகள் வழி உங்களை அதிர வைக்கும் ஆனால் Killer Joe திரைப்படம் தரும் அதிர்ச்சியானது சிறிது நீண்ட கணமொன்றை உங்களிடமிருந்து சுவீகரித்து அதன் அதிர்ச்சியை உங்கள் மனமெங்கும் கடத்தியவாறே இருக்கும். மனித சமூகத்தின் விழுமியங்களின் அழுகல் செயற்பாட்டை அது தன்னாலான வன்மையுடன் உங்கள் அறநிலைப்பாட்டுடன் மோதச்செய்து உங்களை அது நிலைகுலைய வைக்கும்.

டெக்ஸாஸ் பகுதியில் வாழ்ந்திருக்கும் ஒரு விளிம்புநிலைக் குடும்பத்தினை கதையின் மையமாக்கி வழமையாக எம் மனதில் படிந்து போயிருக்கும் அமெரிக்காவின் அழகான இல்லம் நல்லதொரு குடும்பம் எனும் பிம்பத்தை உறுதியாக தகர்க்கிறார்கள் இயக்குனர் Willam Friedkin மற்றும் திரைக்கதாசிரியர் Tracy Letts ஆகியோர். திரைக்கதாசிரியர் உருவாக்கி இருக்கும் அப்பாத்திரங்கள் எல்லாம் எதிர்காலம் என்னவென்ற கேள்விக்கு விடை ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். போதைப்பொருள் விற்பனைக் கடனில் உயிர் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் க்ரிஸ், மதுப்பிரியனான அவன் தந்தை ஆன்செல், தன் கணவனான ஆன்செலிற்கு தெரியாது பிறிதொரு ஆணுடன் உறவொன்றை பேணும் ஆன்செலின் இரண்டாவது மனைவியான சார்லா, சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலிருக்கும் க்ரிஸின் சகோதரி டொட்டி. இவர்கள் ஒவ்வொருவரின் பாத்திர படைப்புக்களுமே நாம் அதிகம் பார்த்திராத அல்லது அறிய விரும்பாத அல்லது அக்கறை காட்டாத, எம் பார்வைக்கு முன் வைக்கப்படாத அமெரிக்க மனித முகங்களாகும். அவர்கள் வாழ்விடங்களும் அவர்கள் வாழ்க்கையைப் போன்றே உருக்குலைந்த நிலையில் மிளிர்பவையாக இருக்கின்றன.  அவர்கள் வாழ்வில் கலந்திருக்கும் வன்முறையின் விகிதம் திரையில் தன்னை வெளிப்படுத்தும்போது ரசிகர்கள் ஒருகணம் அதிர்ந்துதான் மீளவேண்டியிருக்கிறது.

மிகவும் எதார்த்தமாக தந்தையும், மகனும் கொலை செய்வதற்கான நியாயங்களை துகிலுரி விடுதியிலிருந்து பேசி தீர்ப்பதும், பணத்தை சமமாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும் எனும் முடிவிற்கு வருவதும், கொலைஞன் ஜோ, முன்பணம் வேண்டும் என உறுதியாக கூறிட பணத்திற்கு பதில் டொட்டியை அவனிற்கு ஈடாக தர சம்மதிப்பதிலும் வாழ்க்கை என்பதன் ஓட்டத்தில் சிறியதொரு இளைப்பாற்றிக்காக எதையும் செய்திட ஒத்துக் கொள்ளும் சமூகமொன்றின் இருத்தலை இக்காட்சிகள் அங்கதத்துடன் சொல்லி செல்கிறது எனலாம். இக்காட்சிகளில் எல்லாம் உரையாடல்கள் மிகச் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. பாத்திரங்களின் மொழிநடை இயல்பாகவும் பின்னனி இசையானது மிகவும் அடங்கி காப்பி எந்திரத்தின் ஒழுகலின் ஒலியாகவும் நிகழ்வுகளின் சூழலிசையுணர்வை சிறப்பாக திரைக்கு முன்பாக கடத்திவருகின்றன.

கொலைஞன் ஜோ வித்தியாசமானதொரு மனிதன். அவன் காவல்துறையில் பணிபுரிந்தாலும் கூலிக்காக கொலைகளையும் செய்பவன். சட்டத்திற்கு புறம்பானவர்களை அவன் வெறுப்பான் என்பது ஒரு கட்டாயம் அல்ல. தன் கொலைத் தொழிலிற்குரிய விதிகளில் கறாரானவன். அவன் ரசனைகள் வேறுபட்ட உருக்களை அவன் கனவுகளில் எழுதி விட்டிருக்கின்றன. க்ரிஸின் தங்கை டொட்டியுடனான அவனது உறவு அவன் இச்சைகளின் நிர்வாண வடிவின் அகச்சித்திரம். ஆன்செலின் குடும்பம் உக்கிய நிலையில் இருந்தாலும் கூட அங்கு ஒரு விஷச்செடிபோல தன் வேர்களை உறுதியாக அவன் ஊன்றுவான். அவனுள் இருக்கும் வன்முறை அவன் அழகை போர்வையாக கொண்டிருக்கிறது. மிக மென்மையான மெலிதான கண்ணறியாப் போர்வை அது. அது கிழிபடும் தருணங்களில் நீங்கள் மட்டும் ஒரு வக்கிர வன்முறைக்காட்சிகளின் பிரியராக இல்லாத பட்சத்தில் உங்கள் நிலை சங்கடமான ஒன்றாகவே மாறியிருக்கும். இந்தக் கொலைஞன் ஜோ பாத்திரத்தின் உக்கிர நடனம் அரங்கேறும் உச்சக் கட்டக் காட்சி தன்னில் கொண்டிருக்கும் ஆரம்ப அமைதியானது அதன் வெளிக்காட்டலின்போது ஒருவனை அதே வன்மையுடன் தாக்க காத்திருக்கும் ஒன்றாகும்.

கதையில் எல்லாராலும் விரும்பப்படுவள் டொட்டி, அவள் ஒரு குப்பைமேட்டில் குடியேறிய தேவதைபோல. தனக்கேயுரிய தனித்த உலகில் சஞ்சரிக்கும் அவள் மனிதர்களின் சதிகளினுள் சிக்கி சற்று திணறித்தான் போகிறாள். அவள் மென்மையான குணம் அதன் எதிரான நிலையை அடையும் நிலையில் திரை இருண்டு மிகுதியை பார்வையாளர்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறது. வாழ்ந்ததும் உணர்ந்ததும் நரகமெனில் இனி என்ன வந்துதான் என்ன ஆகிடப் போகிறது எனும் நிலையை உணர அதிக கணம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாரிற்கும் இருந்திருக்காது எனலாம். ஆன்செல் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Thomas Haden Church ஒரு கையாலாக குடும்பத்தலைவனாக சிறப்பித்திருக்கிறார். முதல் மனைவியின் மரணத்தின் பின்பாக காப்புறுதி பணத்தை பெறச்செல்லும் இவரின் கோட் சூட்டின் தோள் பிணைப்பு கழன்று விழும் காட்சியில் சிரிப்பை அடக்கவே முடியாது. அதிகம் திரையில் காணமுடியாத நல்லதொரு நடிகர் இவர் எனலாம். ஷார்லாவாக நடித்திருக்கும் முன்னை நாள் கவர்ச்சிக் கன்னி Gina Gershon உச்சக்கட்டக் காட்சியில் மனதை கனக்க செய்வார். டொட்டியாக Juno Temple எனும் இளம் நடிகை, முக்கியமானதொரு பாத்திரம் ஆனால் அவர் அதிர்ச்சி தருவது அவர் அப்பாவியான இளம் தேகத்தினாலேதான்! கொலைஞன் ஜோவாக நடிகர் Matthew McConaughey, உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாமல் ஒரு எந்திரம் போல் இயங்கும் அழகான அரக்கன். இந்தப் பாத்திரத்தை உச்சக்கட்டக் காட்சியின் பின்பாகவும் ஒருவர் விரும்ப முடியும் என்றால் அவர் அதைவிட உக்கிரமானதொன்றை பார்த்திருக்கிறார் என பொருள்கொள்ளலாம். அசத்தலான பாத்திரம். மனிதன் கொன்று விட்டார்.

மிக ரகசியமாக செயற்படுத்தப்படும் திட்டமொன்றானது எதிர்பார்த்த விளைவுகளிற்கு மாறானவற்றை அளித்திடும்போது உருவாகும் குழப்பநிலையின் அழுத்தம் அது பாத்திரங்களில் ஏற்படுத்தும் நெரிசல், மோதல், இக்கட்டான அச்சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்காக பாத்திரங்கள் இயற்றிடும் செயல்கள், ஒவ்வொரு திட்டத்தின் பின்பாகவும் மறைந்திருக்கும் ரகசியங்கள் தம்முடன் எடுத்து வரும் உண்மைகளின் அழகற்ற உக்கிய முகங்கள், ஒவ்வொரு தோல்வியும் மனித சமூகத்தின் வீழ்ச்சியின் புகழை பறைசாற்றி செல்லும் தருணங்களாக பின்னி எடுத்திருக்கிறார் வில்லியம் ப்ரெய்ட்கின். பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் திரைப்படத்தில் உண்டு. குறிப்பாக பொரித்த கோழித்துண்டு ஒன்றின் வழியாக கில்லர் ஜோ நிகழ்த்தும் அந்த செயல் எல்லை தாண்டிவிட்டதோ என்ற உணர்வை அளிக்கிறது. இவ்வகையான தரக்குறைவான நிகழ்வுகளை திரைப்படுத்திதான் உண்மை நிலையைக் காட்டிட வேண்டுமா எனும் கேள்வியும் எழாமல் இல்லை. படைப்பாளிகளிற்கான சுதந்திரம் சமூகத்தின் புரையைக் கூறு போட்டுக் காட்டுகையில் அதன் உண்மையான வீச்சத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதே பரிதாபமான உண்மை என நான் உணர்கிறேன். இவ்வகையான வாழ்க்கைகள் உலகெங்கும் பரவி இருக்கலாம் ஆனால் அது குறித்து நான் அறிந்திட விரும்பியவானாக இல்லை என்பதும் உண்மை. நான் இன்னொரு உலகில் வாழ்கிறேன் எனக்கருகில் இருக்கும் பிறிதொரு உலகின் உண்மைகளை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. எக்ஸார்ஸிட்டைக்கூட ஒரு அமானுடக் கதை என கூறிச்செல்லலாம் ஆனால் கில்லர் ஜோ அதைத்தாண்டி உங்களை அதிர்ச்சியுறவைக்கும் ஒரு அமெரிக்க சமூகத்தை திரையில் வைத்து வேப்பிலை அடிக்கிறது என்பதுதான் நிஜம். மென்மையான உணர்வுகள், குணங்கள், உள்ளங்கள் கொண்டவர்களிற்கு இது ஏற்ற படம் அல்ல என்பதையும் நான் இங்கு கூறிவிடுகிறேன்.

23 comments:

 1. என்னைப்போன்ற வான் கோழிக்கு...
  மத்தியில் மயிலாக காட்சியளிக்கும்
  பதிவுலக சக்ரவர்த்தியே...இந்த எழுத்தில் ஒரு சதவீதம் கடனாக தரக்கூடாதா?

  ReplyDelete
  Replies
  1. உலக சினிமா ரசிகரே என் எழுத்து யாவும் உங்களிற்கே தந்தேன்.. எடுத்துக் கொள்ளுங்கள்... :) கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

   Delete
 2. சுவாரஸ்யமாய் இருக்குது கதை !
  Torrents தேடினேன் கிடைகவில்லையே !

  ReplyDelete
  Replies
  1. நண்பரே இதை நான் திரையில்தான் பார்த்தேன் எனவே தரவிறக்க சுட்டிகள் குறித்து நம் நண்பர்கள்தான் உதவ முடியும்.

   Delete
 3. வரிக்கு வரி அழகாக விளக்கி படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, கடைசிவரியில் 'இது மென்மையான குணம் கொண்டவர்களுக்கு ஏற்றதல்ல' என்றால் எப்படி நண்பரே?!

  உங்கள் எழுத்து நடை அப்படியே போகிறபோக்கில் படித்துவிட்டுப் போகிற ரகமல்ல!

  வண்ணம் பூசிய வார்தை ஜாலங்களுக்காக நிறையவே மெனக்கெட்டிருப்பதை பாராட்டாமல் இருக்க முடியாநு!

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துக்களிற்கு நன்றி.... வார்த்தை ஜாலங்களா !!!! :))

   Delete
 4. dont miss to see this movie fa meg pa for faen(turn me on damn it)

  my review here

  http://blogisdummy.blogspot.in/2012/09/fa-meg-pa-for-faen-turn-me-on-damn-it.html

  ReplyDelete
 5. thomas haden church நல்ல நடிகர். mcconaugheyக்கு உணர்ச்சிகள் வெளிப்படுத்தத் தெரியாது - மர நடிகர் :)
  உங்கள் விமரிசன நடை வழக்கம் போல் ரசனையுடன்.

  ReplyDelete
 6. Intha padam enakku nichayamaka pidikkathu...

  ReplyDelete
  Replies
  1. நண்பர் சாக்ரடீஸ்... சற்று மூர்க்கமான படம்தான்...

   Delete
 7. // குப்பைமேட்டு தேவதைக்கதை // என்று சொல்லிவிட்டு
  எங்களைப்போன்ற மென்மையான உணர்வுகள், குணங்கள், உள்ளங்கள் கொண்டவர்களிற்கு இது ஏற்ற படம் அல்ல என்று கூறியதை
  ஜீரணிக்க முடியவில்லை காதலரே ;-)

  Welcome Back
  .

  ReplyDelete
  Replies
  1. நான் சொன்னா பார்க்காம இருக்கலாமா... பாருங்க நண்பர் சிபி... :)

   Delete
 8. ஹாய்,

  1. நான் உங்கள் பிளாகில் உள்ள சினிமா கட்டுரைகளை வீட்டில் இணைய இணைப்பு வந்த பிறகு அநேகமாக பாதியை படித்து முடித்து விட்டேன். உங்கள் பிளாகை flipcard வியூவில் உருமாற்றி அதன் பிறகு மிக எளிதாக உங்களின் அனைத்து பதிவுகளையும் சில நிமிடங்களுக்குள் முழுமையாக ஒரு மேலோட்ட பார்வையை விட்டேன்.

  http://kanuvukalinkathalan.blogspot.in/view/flipcard

  கட்டுரைகளையும் மிக எளிதாக தேர்வு செய்து படித்து முடித்து விட்டேன். நீங்கள் template செட்டிங்ஸ் சென்று dynamic வியூவில் magazine அல்லது flipcard வியூவை உங்கள் டெம்ப்ளேட்டாக தெரிவு செய்து கொண்டால் பலரும் உங்களின் அனைத்து பதிவுகளை நிமிடத்திற்குள் பார்ப்பார்கள்.


  2. நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள்?

  3. http://www.bonjourtristesse.net/

  i like the above movie blog. In it read about fa meg pa for faen movie

  http://www.bonjourtristesse.net/2011/12/turn-me-on-goddammit-2011.html

  dont miss to download n see this movie...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் விரிவான கருத்துக்களிற்கும் பரிந்துரைகளிற்கும் நன்றி நண்பர் ka அவர்களே....

   Delete
 9. விமர்சகனையும் ரசிகனையும் இணைக்கும் பாலமாக உள்ளது உங்கள் எழுத்து . நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே

   Delete
 10. அட இலங்கையில் அண்மையில் நடந்த கொலை ஒன்று கூட கிட்டத்தட்ட இப்படித்தான். தகப்பனாரின் EPF பணத்தை திருட குடும்பத்தையே நஞ்சூட்டிக் கொலைசெய்துவிட்டு தப்பி பறக்கும் போது பட்சி பொலீசிடம் சிக்கிக்கொண்டது. இப்போது கூண்டில் என்ன செய்கின்றதோ தெரியவில்லை.

  hollywood.mayuonline.com

  ReplyDelete
  Replies
  1. எல்லா ஊரிலும் நடக்கும் மயூ... :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

   Delete
 11. I saw this movie yesterday..Awesome movie..Thanks for sharing some good movies.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றிகள் நண்பரே.

   Delete
 12. hi, I asked a question above. Once again I'm asking you.

  நீங்கள் எந்த நாட்டில் உள்ளீர்கள்?

  ReplyDelete
 13. Ka, நான் எந்த நாட்டில் இருக்கிறேன் என்பதற்கான பதில் என்ன மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை சொல்லுங்களேன்... :)

  ReplyDelete