Wednesday, February 1, 2012

அமெரிக்க காட்டேரி


உலகில் அதிகமாக விற்பனையாகும் புதினங்களை உற்பத்தி செய்திடும் படைப்பாளிகளில் ஒருவராகவே இன்னமும் திகில் கதை மன்னன் ஸ்டீபன் கிங் திகழ்கிறார். அவர் எவ்வளவு மோசமாக எழுதினாலும் அந்த எழுத்துக்களை ரசித்துப் படித்துவிட்டு தல பின்னிட்டார்ல என்று பாராட்டும் ரசிகர் கூட்டம் அவரிற்கு சர்வதேச ரீதியாக உண்டு. உண்மையில் இன்றைய ஸ்டீபன் கிங் எழுத்துக்களில் உள்ள திகில் மற்றும் பயங்கரம் என்னவென்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டு வருவதுதான். அவரின் சில படைப்புக்கள் காமிக்ஸ் வடிவத்திற்கும் மாற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் ஒரு காமிக்ஸ் படைப்பிற்காக பிரத்தியேகமாக எழுதியது American Vampire க்குதான் என இக்காமிக்ஸின் அறிமுகப் பக்கங்கள் தெரிவிக்கின்றன.

American-Vampire-2-variantScott Snyder என்பவரின் எண்ணத்தில் உதித்திட்ட கதைக்களமே அமெரிக்கன் வம்பயர் ஆகும். கிங்கிற்கு தெரிந்தவர் ஸ்னைடர் என்பதால் கிங் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். கிங் கூறியிருப்பதுபடி கதையின் பிரதான பாத்திரமான Skinner Sweet ன் பூர்விகத்தின் அடித்தளங்களை முழுமையாக அவர் உருவாக்கியிருக்கிறார். அந்த வகையில் அதிர்ஷ்டம் செய்தது வாசகர்களாகிய நாங்கள் மட்டுமல்ல அமெரிக்கன் வம்பயர் கதையும்தான்.

லாஸ் ஏஞ்சலீஸிற்கு கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவிலுள்ள ஆளரவமற்ற வனாந்தரமான பகுதி ஒன்றில் குவிந்திருக்கும் இருளை முரட்டுத்தனமாக குலைத்தவாறே வருகிறது ஒரு மோட்டார்வண்டி. வனாந்தரத்தின் ஒதுக்கமான ஒரு பகுதியில் தன் இயக்கத்தை நிறுத்திக்கொள்ளும் மோட்டார் வண்டியிலிருந்து கையில் விளக்குடன் இறங்குகிறது முக்காடு அங்கி அணிந்த ஒரு உருவம். அந்த உருவத்தின் நகங்களின் கூர்மை வனாந்தரத்தின் இருளைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கிறது. உருவத்தின் முக்காட்டினுள் நுழைந்த இருள் அங்கிருக்கும் இருளைக் கண்டு வேகமாக தன்னிடம் திரும்புகின்றது.

மோட்டார் வண்டியின் கதவை மெல்ல திறக்கிறது அந்த உருவம். திறந்த கதவினூடாக உயிரற்ற விழிகளுடன் வனாந்தரவெளியை வெறிக்கின்றன வண்டியில் அடுக்கப்பட்டிருக்கும் சடலங்கள். அருகில் இருக்கும் பள்ளமொன்றில் சடலங்களை இழுத்து வந்து வீசுகிறது முக்காடு உருவம். வண்டியிலுள்ள சடலங்களை தள்ளி முடித்த நிலையில் கிளம்ப தயாராகிறது முக்காடு. அப்போது பள்ளத்திலிருந்து இருளின் ஒரு விழுதை பற்றிக் கொண்ட முணுமுணுப்பாக ஏறிவருகிறது நலிந்த ஒரு குரல். ஒரு பெண்ணின் மரணவாசல் முனகல். இரக்கம் காட்டுங்கள் நான் சாகவில்லை என ஒலிக்கிறது அக்குரல். குரல் வந்த பெண்ணின் உடலில் ஆழமான காயங்கள். துளையிட்ட, கடித்துக் குதறிய, ஆழமாகக் கிழித்த. அவள் கண்மணி வானத்தில் மிதக்கும் பிறைபோல தோற்றம் கொள்கிறது. வான்பிறையும், நட்சத்திரங்களும் அவள் குரலைக் கேட்காதவைபோல மெளனமாக விழித்திருக்கின்றன……

AV1இப்படியாகத்தான் ஆரம்பமாகிறது அமெரிக்கன் வம்பயரின் கதை. புது ரத்தம் என பிரெஞ்சுமொழியில் பெயரிடப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் அமெரிக்கன் வம்பயர் கதையின் முதல் ஐந்து இதழ்களும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இதழிலும் இரு கதைகள். ஒன்று 1925ல் நிகழ்வது. மற்றையது 1880ல் ஆரம்பமாகி 1925களை நோக்கி வேகமாக நகர்வது. இத்தொகுப்பின் முக்கிய பாத்திரங்களாக ஸ்கின்னர் ஸ்வீட்டையும், பேர்லையும் முன்வைக்க முடியும். புதிய வகை காட்டேரி ஒன்றின் தோற்றம், இருவகை காட்டேரிகளிற்கு இடையிலான வன்முறை, இவற்றின் மத்தியில் அகப்பட்ட நல்மனம் கொண்ட ஒரு சாதாரண துணைநடிகையின் வாழ்க்கையின் பிறழ்வு என்பவற்றை சுவையாக கதை விபரிக்கிறது.

இருளான ஆரம்ப பக்கங்கள் கடந்தபின் பிராகசமான விளக்குகள் ஒளிரும் தாரகையுலகமான ஹாலீவூட்டிற்குள் வாசகர்களை கதையின் பக்கங்கள் அழைத்து செல்கின்றன. பேர்ல், ஹாதி எனும் இரு துணை நடிகைகளின் வாழ்க்கை அப்பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. சினிமா அவர்கள் மீது செலுத்தும் கவர்ச்சி. ஒரு சிறுவேடத்திற்காகவேனும் காத்திருக்கும் அவர்கள் ஆர்வம். பிரபலமான நடிகர்கள் மீது அவர்கள் கொண்டிருக்கும் மையல். நாளாந்த வாழ்க்கையின் சுமைகளை இவற்றை தாண்டியும் தாங்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் என 1925களில் வாழ்ந்திருக்ககூடிய இரு துணைநடிகைகளின் வாழ்வின் ஒரு சிறியகூறை அதிக வேகமின்றி கதை கூறுகிறது. வேகமற்ற கதையின் முக்கிய திருப்பமாக பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரின் இல்ல விருந்திற்கு பேர்ல் எதிர்பாராதவிதமாக அழைப்பு பெறும் நிகழ்வு அமைகிறது. இரவு விருந்திற்கு செல்லும் பேர்ல் அங்கு ரத்தவெறி கொண்டு காத்திருக்கும் சினிமா தயாரிப்பு பிரபலங்களிற்கு இரையாகிறாள். சினிமா தயாரிப்பில் இருப்பவர்கள் காட்டேரிகள் என்று சொல்லப்படுவதில் தவறேதும் இல்லையல்லவா.

இதன் பின்பாகத்தான் ஆரம்பப் பக்கங்களில் வரும் அந்தப் பிறை போன்ற கண்மணிகள் யாருடையவை என்பது தெரியவரும். அது அந்தக் கண்களினால் தெரியவருவதில்லை மாறாக பேர்ல் அவள் முதுகில் குத்திக் கொண்ட சூர்யகாந்தி மலர் பச்சையினால் அது வாசகர்களிற்கு புரியவைக்கப்படும். அந்த தருணம் கதையின் அருமையான திருப்பத் தருணங்களில் ஒன்று. ஆனால் பேர்லிற்கு அதிர்ஷ்டம் இன்னொருவன் வழியாக வருகிறது, அதை ஒருவர் அதிர்ஷ்டம் என அழைப்பது சரியாக இருக்குமேயெனில். அவன் தான் Skinner Sweet. அவன் தான் இப்பதிவின் தலைப்பு. அவன் தான் பேர்லையும் ஒரு காட்டேரியாக மாற்றுகிறான்.

ஆகவே ஸ்கின்னர் ஸ்வீட் எவ்வாறு ஒரு காட்டேரியாக மாறினான் என்பதை வாசகர்களிற்கு 1925லிருந்து 1880 க்கு காலப்பாய்ச்சல் மூலம் தாவி அவன் கதையைக்கூற ஆரம்பிக்கிறார்கள் கதாசிரியர்கள். கொள்ளை ,கொலைகளை தயங்காமல் செய்யும் ஒரு கூட்டத்தின் தலைவனான ஸ்கின்னர் காட்டேரியாக மாற வழிவகுத்த நிகழ்வுகள் அக்காலப் பகுதியில் கதையில் விபரிக்கப்படுகிறது. இப்பகுதியில் வெஸ்டெர்ன்களின் பாணியில் கதைகூறப்படுகிறது, இக்காமிக்ஸ் தொகுப்பின் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்றாக அதைக் குறிப்பிடலாம். அமெரிக்க மண்ணில் உருக்கொண்ட முதல் காட்டேரியாக கதையில் அறிமுகப்படுத்தப்படும் ஸ்கின்னர் ஸ்வீட்டிற்கும், அவனை தற்செயலாக காட்டேரியாக மாற்றிவிட்ட, ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த காட்டேரிகளிற்குமான பகையும், வெறுப்பும் அங்கிருந்து காலாகாலமாக தொடர ஆரம்பிக்கிறது. 1880களில் காட்டேரிகள் வங்கி உரிமையாளர்களாகவும், புகையிரதப்பாதையின் சொந்தக்காரர்களாகவும், அதிகாரம், தங்கம், பணம், போன்றவற்றின் மீதான தீர்க்கவியலாத் தாகம் கொண்ட முதலாளித்துவ வர்க்கமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இக் காட்டேரி முதாலளித்துவத்திற்கு எதிரான வன்முறை அராஜகவாதியான ஸ்கின்னர் ஸ்வீட் அறிமுகமாகும் தருணத்திலிருந்து கதை வேகம் கொள்ள ஆரம்பிக்கிறது.

AV2கொள்ளை, கொலை, குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கி மோதல்கள், எதிர்பாரா திருப்பங்கள் என திகிலும் விறுவிறுப்பும் கதையில் கூடிக்கொள்கிறது. ஐரோப்பிய புலம்பெயர் காட்டேரிகள் தம்மை தூய குருதி கொண்ட இனமாக காண்கிறார்கள். ஸ்கின்னர் அவர்களை பொறுத்தவரையில் களங்கமான குருதி கொண்டவன். களங்கமான குருதி கொண்டவனை தூய குருதி கொண்டவர்களால் அழிக்கவே முடிவதில்லை. ஏனெனில் ஸ்கின்னர் ஒரு புதுவகைக் காட்டேரி. ஆதிக் காட்டேரிகளின் பலவீனங்கள் அவனிடத்தில் இருப்பதில்லை. அவன் பலவீனங்கள் வேறானவை. அப்பலவீனங்களை கண்டுகொள்ள பெரும் தேடல் கொள்கிறார்கள் தூயகுருதிக் காட்டேரிகள். ஸ்கின்னர் ஸ்வீட் காட்டேரிகளின் பரிணாமத்தின் முதல்படியாக கதையில் சித்தரிக்கப்படுகிறான்.

காலஓட்டத்தில் தொடர்ந்து செல்லும் காட்டேரிகளிற்கிடையான யுத்தத்தில் பேர்லை தன் யுத்தத்தில் பயன்படும் ஒரு சதுரங்க சிப்பாயாக உபயோகித்துக் கொள்கிறான் ஸ்கின்னர். அவன் கடந்து வரும் பாதைகளில் எல்லாம் அவன் எதிரிகளின் கல்லறைக் கற்கள் சிறு செடியாக முளைத்து நிற்கின்றன. அவன் எதிரிகளின் பெயர்கள் வாடா மலர்களாக அவற்றின் மேல் பூத்திருக்கின்றன. அவன் மனமெல்லாம் புது எண்ணங்கள் வியூகங்கள் கொப்பளிக்கின்றன. அவற்றின் நிறைவின் வழி வழிந்தோடப்போகும் குருதி அவனை அக்கணமே மேலும் தாகம் கொண்டவனாக்குகிறது. பில் பண்டிங் எனும் எழுத்தாளர் கூறுவதாக ஸ்கின்னர் ஸ்வீட்டின் கதை காமிக்ஸில் அமைந்திருக்கிறது. ஸ்கின்னரின் சாகசங்களை அல்லது கொடூரச் செயல்களை நேரில் பார்த்த சாட்சியமாக பில் பண்டிங் இருக்கிறார். பில் பண்டிங்கின் நண்பனான காவல்துறை அதிகாரி கிம் புக்கும் கதையில் வரும் சிறப்பான ஒரு பாத்திரமே. உனக்கு வயதாகி விட்டது, நான் நித்யத்திற்கும் இளைஞன், மெதுவாக, இயல்பாக மனிதர்கள் இறப்பது போலவே நீ இறந்து போ, இதைத்தவிர சிறந்த வஞ்சம் என் கண்களிற்கு தெரியவில்லை என்று குறிப்பெழுதி பில் பண்டிங்கை ஸ்கின்னர் உறைய வைக்கும் தருணம் காட்டேரிக் கவித்துவமான தருணம்.

1206416-american_vampire_02_cover_by_rafaelalbuquerqueart_super1பேர்ல் தன் எதிரிகளை துவம்சம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ரத்தம் தனக்கு பிடித்த சித்திரங்களை அருகே வரைந்து கொள்கிறது. ஓவியர் Rafael Albuquerque படு அட்டகாசமாக சித்திரங்களை படைத்திருக்கிறார். குறிப்பாக ஒவ்வொரு இதழின் இறுதிப்பக்கத்திலும் வரும் சித்திரம் அசரவைக்கும் தன்மையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இம்முயற்சியில் அவர் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறார் என்று கூறிடலாம். அவள் எதிர்கொள்ளும் தருணங்கள் வழி தன் பலவீனங்கள் என்ன என்பதை அறிந்து கொள்கிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னரை சுற்றியிருக்கும் மர்மங்கள் இக்கதை தொகுப்பில் முற்றிலுமாக கூறி முடிக்கப்படவில்லை. அசைக்க முடியா நம்பிக்கையுடன் ஸ்கின்னர் தெருவொன்றில் நடந்து செல்கையில் இன்னுமொரு அசத்தலான திருப்பத்தை அறிமுகம் செய்து வைத்து கதையை நிறைவு செய்கிறார் கதாசிரியர். இருப்பினும் பேர்ல் இயல்பாகவே ரத்த வெறி கொண்ட ஒரு காட்டேரியாக கதையில் சித்தரிக்கப்படுவதில்லை. அவள் காட்டேரியாக மாற்றம் கொள்ளும்முன் அவளிடம் இருந்த மனிதநேயம் அவளை விட்டு நீங்காமலே இருக்கிறது. தன் எதிரிகளை துவம்சம் செய்து தீர்த்தபின் அமைதியான ஒரு இடம் தேடி ஒதுங்கி கொள்ளவே விரும்புகிறாள் பேர்ல். ஆனால் ஸ்கின்னர் அழிவு என்பதை அறிமுக அட்டையாக வினியோகிக்கும் ஒரு வெறியன். இனத்துவேஷன். இப்படியாக பேர்லிற்கும் ஸ்கின்னரிற்குமிடையில் அவர்கள் இறப்பதற்கு முன்பாகவே இருந்திட்ட மனித இயல்புகள் இறந்த பின்னும் மாறிடவில்லை என்பதாக கதை நகர்கிறது.

பீற்றிக்கொள்ளும் முன்னுரையில் கிங், ஒரு ரத்தக் காட்டேரி ஒருபோதும் இவ்வாறு இருத்தல் ஆகாது என பின்வருபவற்றைக் குறிப்பிடுகிறார். ப்ளடிமேரிகளை சுவைத்துக் கொண்டு இரவில் மட்டும் பணியாற்றும் தோல் வெளிறிய ஒரு துப்பறிவாளனாக. நீயூ ஆர்லியன்ஸை சேர்ந்த துக்கத்தில் தோய்ந்த ஒரு ஆண்விபச்சாரியாக. மனவழுத்தம் கொண்ட ஒரு விடலையாக. ஒளிகடத்தும் தோலும் மான்களை போல் கண்களையும் கொண்ட ஒரு வாலிபனாக. ஸ்கின்னரில் இந்தப் பண்புகள் இல்லை என்பது உண்மை. கிங் யார் யாரை குறிவைக்கிறார் என்பதும் ஓரளவு புரிகிறது. ஆனால் கிங் தனித்துக் கதையை உருவாக்கி இருப்பேரயானால் கதை இவ்வளவு விறுவிறுப்புடன் நகர்ந்திருக்காது என்பது அணில் ரத்தம் அருந்தி வாழும் காட்டேரிகளிற்கும் தெரிந்த விடயம். ஐந்து காமிக்ஸ் இதழ்கள் கொண்ட முதல் தொகுப்பை படித்து முடிக்கையில் அடுத்த தொகுப்பையும் படிக்கவேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்கு காரணமானவர் ஸ்காட் ஸ்னைடர் என்பதில் எனக்கு ஐயமில்லை. சித்திரங்களும் தரமாக இருக்கின்றன. ஆங்கில மொழியில் மூன்று தொகுப்புகள் வெளியாகி இருக்கின்றன. காட்டேரி + வெஸ்டெர்ன் அதிரடி விரும்பும் வாசக உள்ளங்கள் இம்முதல் தொகுப்பிற்காக டவுன்லோட் அய்யானாரை தாராளமாக நாடுங்கள். கதை உங்கள் ரத்தத்தினை அதிகம் உறிஞ்சாது. [***]

7 comments:

 1. அனேகமாக ஸ்கான் பண்ணப்பட்ட காப்பி எங்காவது போட்டு இருப்பாங்க. எடுத்து வாசிக்கிறேன்.

  இன்னும் நல்ல புத்தகங்கள் அறிமுகப்படுத்துங்க.

  ReplyDelete
 2. உங்கள் படங்கள் தமிழில் இருக்கே? எங்கயாவது தமிழில் போட்டிருக்காங்களா?

  ReplyDelete
 3. நண்பரே,

  இன்னொரு காமிக்ஸ் அறிமுகம் தடபுடல். டிசி காமிக்ஸின் துணை நிறுவனம் என்று பெயரெடுத்தாலும், அவர்களின் சூப்பர் ஹீரோக்கள் கதைகளை தவிர்த்து மற்ற துறைகளிலும் கோலோச்சிய பெருமை வெர்டிகோ விற்கு கட்டாயம் சேரும். அந்த வரிசையில் அமெரிக்கன் வாம்பயரும் நன்றாகவே வந்திருப்பது உங்கள் விமர்சன பதிவில் தெளிவாக தெரிகிறது.

  இணையத்தில் முதல் பாகம் 65 சதவிகித தள்ளுபடியில் கிடைப்பதை பார்த்தவுடன், ஆர்டரை போட்டு விட்டேன். படித்து விட்டு கருத்துகளை பதிகிறேன். காமிக்ஸ் அறிமுக பிரளயம் களைகட்டட்டும்.

  பி,கு.: கம்பேக் படித்த அந்த பாவபட்ட ஆத்மா, இப்படி கடித்து குதறபட்டிருக்கிறது மனம் வருத்தம் தந்தாலும், கெட்ட சகவசாசம் கொண்டவர்களின் நிலை இதுதானே என்று நம்மை சமாதானபடுத்தி கொள்ள வேண்டி இருக்கிறது. தீமை தவிர்.

  ReplyDelete
 4. Dear Friend,

  When you mentioned Stephen King, I'm bit worried. I believe, King lost his touch. Not only European Vampires, I too believe American vampires are a tad lower. ;)

  However, I will read this chronicle. You know, I'm a sucker for Vampires.

  ReplyDelete
 5. சாணித் தாள் ரசிகர்களுக்கு ஈடான ரசிகப் பட்டாளத்தைப் பெற்றிருக்கும் அமெரிக்காவின் சிங்கம் ஸ்டீபன் கிங்கை வணங்குகிறேன். :)

  //இன்றைய ஸ்டீபன் கிங் எழுத்துக்களில் உள்ள திகில் மற்றும் பயங்கரம் என்னவென்றால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நூல்களை அவர் எழுதி வெளியிட்டு வருவதுதான். //

  ஒரு நகரத்தையே ஒரு வாரத்துக்கு இட்லிக் கொப்புரைக்குள்ள போட்டு அடைச்சா என்ன ஆகும்ங்கற மாதிரியான திகில் கதைகளை எழுதும் அன்னாரை நீர் கிண்டல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும், சாக்கடையில் கூட சோக்குப் படம் காட்டும் தலைவரது திறமையை நீர் ஏளனம் செய்வதைக் கண்டு நான் கொதிப்படைகிறேன்.

  //களங்கமான குருதி கொண்டவனை தூய குருதி கொண்டவர்களால் அழிக்கவே முடிவதில்லை. ஏனெனில் ஸ்கின்னர் ஒரு புதுவகைக் காட்டேரி. ஆதிக் காட்டேரிகளின் பலவீனங்கள் அவனிடத்தில் இருப்பதில்லை. //

  புளிச்சுப் போன அதே ஐடியாவாய்யா.. :)

  காட்டேரிக் கதாப்பாத்திரங்களில் (நான் படித்தவரை) அருமையானதொரு பாத்திரம் Preacher எனும் காமிக்ஸில் வரும். எந்த விதமான ரத்த வெறியும் இல்லாத, நக்கலும் முட்டாள்தனமும் நிரம்பியதொரு சுவாரஸ்யமான பாத்திரம் அது. காட்டேரிக் கதாபாத்திரங்கள் குறித்து கூறி கிங் யாரைக் குறி வைக்கிறார் என்பது தெரிந்ததே. கதை நல்லா இருக்குன்னு சொல்றீர். ஆனா கிங் பேரக் கேட்டாலே காத தூரம் ஓடுற நிலைமையிலே நான் இருக்கிறேன். :)

  //http://lh3.ggpht.com/-8wnHYSa58JY/TyFV28pW0MI/AAAAAAAAC_8/KT2tIfpcNNU/s1600-h/American-Vampire-2-variant%25255B3%25255D.jpg//

  கம்பேக்க விட கலரமானவன்ல நானு..

  //http://lh4.ggpht.com/-Yx5IGKH2Wvk/TyFV6vEUiZI/AAAAAAAADAc/a9aR4JBxdFw/s1600-h/AV2%25255B4%25255D.jpg//

  ஏர் மெயில் கட்டணத்த விட என் பல்லு வேகமா உறிஞ்சும்லே...

  ReplyDelete
 6. என்னைப்பொறுத்தவரை, வேம்பையர் கதைகள், Zombie கதைகளைப்போல் எப்பவேணும்னாலும் படிப்பேன்ல :-) . . நோட்டு பண்ணி வெச்சிக்கீறேன். எப்புடி? போட்டோம்ல நாங்களும் டெம்ப்ளேட்டு கமெண்டு

  ReplyDelete
 7. ஹாலிவூட் ரசிகரே,தமிழ் பக்கம் எல்லாம் ஏதோ நாமும் எடிட்டராகலாம் என்ற நைப்பாசையில் நான் முயற்சிப்பதுதான்...:) ஆங்கிலத்தில் ஸ்கேன்ஸ் கிடைக்கும், விரும்பினா படிங்க.....

  ரஃபிக் வாங்க, படிச்சிட்டு இங்கு வந்து பிரிச்சு மேய்ங்க....நீங்க அக்குவேறா சுக்குவேறா அலசும் கமெண்டு பார்த்து நாளாச்சு....அட கம்பேக் படிச்சிபிட்டு ஐயா இதுவல்லோ காமிக்ஸ்னு ஆளாளிற்கு சிலாகிச்சுகிட்டு இருக்றாய்ங்க...எய்ஸ்னர் அவார்ட் கிடைக்கலாம்னு பலமா கத அடிபடுது....:) பழக்கட மொதலாளிய அவர் பொஞ்ச்சாதிகூட சந்தோஷமா இருக்கவிடாம கால் போட்டு இம்சை பண்றாய்ங்க.....கலிகாலம் முத்திப் போச்சுன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க....உங்க கமெண்டிற்கு டாங்க்ஸ் அன்பு நண்பரே.

  ஜோஸ், நான்கூட தயங்கி தயங்கித்தான் படிக்க ஆரம்பிச்சேன், ஆனா கத மோசமில்ல.... புதுசா அதிகம் இல்லைன்னாலும் வேகமாக கதை நகர்ந்திச்சு இல்ல நான் வேகமா படிச்சு தொலைச்சேன்.... படிங்க....கடிங்க...காட்டேரிகளிற்காக கண்ணீர் விடுபவரல்லா நீங்கள்....கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  இலுமி, சாணித்தாள் ப்ரதர்ஸ கிண்டலடிக்கும் உம்மை கண்டிக்கிறேன்....கிங்கிற்கு வேற வேல இல்ல எழுதிகிட்டே இருக்கணும், அத அப்படியே ஆயிரம் பக்க நாவலா போட்டு வாசக உயிரை அறுத்தெடுப்பார்கள் பதிப்பகத்தார். கிங்கால மாயாவி கத எழுத முடியுமா, ஸ்பைடர் கத எழுத முடியுமா அட ஒரு ஆர்ச்சி கத அவரால எழுத முடியுமா... நூறு ரூபால வருதுலே....பிச்சிகிட்டு ஓடப்போறீங்க....கிங்கா இல்ல சிவ்காசி சிங்கான்னு பாத்துப்புடலாம்லே... ஏனு நீரு சொல்ற பிரீச்சர் ஸ்டோரி தமிழ் காமிக்ஸ்ல வந்துண்டா இல்லியா... இல்லின்னா நம்ம ப்ளாக்ல போட்டோ போட்டி ப்லிமு காட்டுவோம்ல.... அப்டியே உருகிப்போய்டுவாங்கல நம்ப சாணி ப்ரதர்ஸ்....லே யார்டா அங்கின....ஒரு ப்ரீச்சர் போட்டா போட்டு, த செர்மன் பிகின்ஸ்னு தட்டிவிடுங்கல....நம்ப பசங்க பார்த்திட்டு உருண்டு வெளையாடட்டும்.... நீர் தந்த லிங்கு ஒன்னுமே வர்க்கு பண்ணுதில்ல ராசா....தந்தா டிரீக்டா போற மாதிரி தரணும்....இங்கின இருந்து தட்டினா அங்கின அங்கின இருந்து தட்டின இங்கின சிவனும் ஹரிபொட்டரும் ஒன்னு ஒத அறியாதர் சாணி ஃபேக்டரியில் மண்ணு.... ஏர் மெய்ல் எமன்லே.....புருனே சுல்தானாயே பெக்கர் ஆக்கிடும்லே....சாக்கிரத ராசா சாக்கிரத....:)சாணி சொசைட்டிய கிண்டல் பண்ணின உமக்கு நோ டாங்ஸ்லே....:) மேமேமேமேமேமே

  நண்பர் தேளு, நீங்க எப்டி வேணும்னாலும் அடிங்கலே....ஆனா ஆறு பார்சல் கதை எப்டி முடிஞ்சதுன்னு மட்டும் சொல்லிடுங்க.....:) கருத்துக்கு நன்றி நண்பரே...

  ReplyDelete