Saturday, January 14, 2012

மேன்மைதகு மேஃப்ளவரின் நாள் - XIII - 20


XIII-Le-jour-du-soleil-noir-232x300XIII ன் முதலாவது ஆல்பமான கறுப்பு சூரியனின் நாளினது அட்டைப்படத்தினையும் அதன் இருபதாவது ஆல்பமான மேஃப்ளவரின் நாளினது அட்டைப்படத்தினையும் ஒரு துவிச்சக்கர சிற்றிடைவெளி தந்திடும் அவகாசத்தில் ஒப்பிட்டு பார்த்திடுவோமேயானால், அவ்விரு ஆல்பங்களிற்கும் இடைப்பட்ட 27 வருடங்களின் தடமானது மக்லேன் மாமாவில் அழகான முதிர்ச்சியாக உருப்பெற்றிருப்பது பட்டென உறைக்கும்.

பணப்பெட்டிக்கு முன்பாக ஐயமும் ஆச்சர்யமும் கலக்கிய பார்வையுடன் உத்தரத்திலிருந்து தொங்கி வழியும் ஒளியின் கசிவில் அதிரடிக்குள் தன்னை இறக்கி கொள்ளவிருக்கும் மக்லேனையும் அவனை சுற்றியிருக்ககூடிய மர்மங்களையும் கேள்விகளையும் கறுப்பு சூரியனின் நாளினது அட்டைப்படமானது மங்கிய இருள் தன் தடத்தினுள் பொதித்து வைத்திருக்கும் ரகசியங்களின் கசியலாக ஒழுகவிட்டுக் கொண்டிருக்கிறது. XIII தொடரின் அறிமுகமற்ற வாசகன் ஒருவன் அறிந்திராத மக்லேனின் வாழ்க்கைபோல மக்லேனின் முகம் மங்கிய ஒளி தூவும் அந்த இருளில் சற்று நனைந்திருக்கிறது. பத்தொன்பது ஆல்பங்களின் கதை சொல்லல் வழியே மக்லேன் தான் யார் என்பதனை அடையாளம் கண்டபோதிலும் அவன் நினைவுகள் முற்றாக அவனிடம் திரும்பி வந்திடவில்லை. மக்லேன் தன் நினைவுகளை தேடும் வேட்டையின் ஆரம்பமாக வெளியாகியிருக்கும் இருபதாம் ஆல்பமான மேஃப்ளவரின் நாளின் அட்டைப்படத்தில் மக்லேன் மாமா ஷோக்காகத்தான் இருக்கிறார்.

பணப்பெட்டிக்கு பதிலாக பக்குவமானதொரு மடிக்கணிணி. கால்சட்டை பைகளிற்குள் நுழைத்திட்ட கைகள். பிரகாசம் ததும்பும் மக்லேன் மாமா வதனத்தில் புதியதொரு அதிரடிப் பயணத்திற்கு தயாரான உறுதி. அப்பயணத்தின் மிக முக்கியமானதொரு புள்ளியாக இருந்திடக்கூடிய மேஃப்ளவர் கப்பல் அலைகள் ஆவேசமாய் நுரைத்து ததும்பும் கடலில் சற்று சரிந்தே நிற்கும் நிலை. கருமை சூல் கொண்டு உடன் பிரசவிக்க பரிதவிக்கும் வானம். யாவும் வாசகர்களை எதிர்பார்க்க வைக்கிறது. என்னவாக இருக்கலாம் என கேட்க தூண்டுகிறது. மேலுள்ள இரு அட்டைப்படங்களிலும் உள்ளது வில்லியம் வான்ஸின் கையொப்பம்தான், இருபதாம் ஆல்பத்திற்குரிய அட்டைப்படத்தையும் அதில் ஒரிரு பக்கங்களையும் நட்புக்காக வரைந்து தந்திருப்பவரும் வான்ஸ்தான். ஆனால் புதிய தொடரிற்கு கதை மற்றும் சித்திரங்கள் வான்ஸ், வான்ஹாம் கூட்டணி அல்ல. புதிய அணிதான். கதைக்கு பொறுப்பாக Yves Sente. சித்திரங்களிற்கு பொறுப்பாக Youri Jigounov.

mf1fr-10142011PremiredecouvExclusiveXIIIT20ஈவ்ஸ் சென்ட்டிற்கு வான் ஹாம் ஆரம்பித்து வைத்து விலகிச் சென்ற காமிக்ஸ் தொடர்களை தன் கையில் பொறுப்பேற்பது என்பது புதிதல்ல. வான் ஹாமின் Thorgal தொடரை அவர் பொறுப்பு ஏற்று இதுவரை நான்கு ஆல்பங்களில் பணியாற்றியிருக்கிறார். இப்போது XIII அவர் கைகளிற்குள் வந்திருக்கிறது. Blake and Mortimer, Le Janitor ஆகிய பிரபலமான தொடர்களில் பணியாற்றியிருக்கிறார். இதில் Le Janitor அவர் கற்பனையில் உருவாகிய தொடராகும். யூரி ஜிகுனொவ் Alpha எனப்படும் சமகால உளவுத்தொடரிற்கு வரைந்த சித்திரங்கள் மூலம் பிரபலமானவர். ஈவ்ஸ் செண்ட் லொம்பார்ட் பிரசுரத்தின் ஆசிரியர் குழுவின் முக்கியமான பொறுப்பில் இருந்தபோது மொஸ்கோவில் இருந்து வந்த யூரி ஜிகுனொவ்வில் ஒரு நல்ல கலைஞனைக் கண்டுகொண்டு அவரை உள்ளெடுத்துக் கொண்டார். ஆல்பாவின் அசத்தல் ஓவியங்கள் ஜிகுனொவ்வின் திறமைக்கு சான்றாக திகழ்கின்றன. காமிக்ஸ் ரசிகர்களால் அதன் அழகிற்காக பெரிதும் விரும்பப்படுகின்றன.

கடலிற்கும் மக்லேனிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நினைவிழந்த நிலையில் கடற்கரையில்தான் மக்லேனின் கதை ஆரம்பித்தது. அவனைக் காப்பாற்றிய ஏப் மற்றும் சலி ஸ்மித் தம்பதியினர் வாழ்ந்திருந்த அதே Bar Harbor கடற்கரை வீட்டில் வசிப்பவனாக கதையில் அறிமுகமாகிறான் மக்லேன். தன்னால் மீட்டப் படமுடியா நினைவுகளை மீட்டெடுக்க அவன் உளவியல் மருத்துவரும் அட்ரா சக்க எனச் சொல்லக்கூடிய அழகை கொண்டவருமான டாக்டர் சூசான் லெவின்சனிடம் ஆலோசனைகளை பெற்றுக் கொள்கிறான். சூசான் லெவின்சனிற்கு மக்லேன் மாமாமேல் ஒரு ஈர்ப்பு இருப்பதாக காட்டப்படுவதன் மூலம் எதிர்வரும் ஆல்பங்களில் ஒன்று அவர் தியாகச்சாவையோ அல்லது பயங்கரமான துரோகத்தையோ நிகழ்த்துபவராக மாறிடலாம் என்பதை வாசக மனம் உருச்செய்யலாம். மக்லேனிற்கு மச்சம்ம்பா. அனுபவிக்க போகிறார். ஆனால் பாவம் இந்த ஆல்பத்தில் அனுபவிக்க கதை அவரை விடவில்லை.

உளவியல் டாக்டர் சூசான் அத்துறையில் பிரபலமான புரபசர் டக்ளஸின் சிகிச்சை மூலமாக மக்லேனிற்கு விமோசனம் கிடைக்குமா என முயல ஆரம்பிக்கும் அதே வேளையில் சூப்பர் பிகருப்பா இது எனக்கூறிடும் வகையில் அழகான சிட்டு, அல்வாவில் செய்த மொட்டு யூலியானா, கடற்கரை வீட்டில் மக்லேனை வந்து சந்திக்கிறார். தம் ரகசிய அமைப்பில் இணைந்து கொள்ளுமாறு மக்லேனை நட்புடன் அழைக்கிறார். ஆனால் மக்லேன் அந்த அழைப்பை ஏற்க மறுக்கவே யூலியானா அங்கம் வகிக்கும் USAFE எனப்படும் அமைப்பை சேர்ந்தவர்களால் மக்லேன் மாமாவின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவது தொடர்கிறது. அவன் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. எவ்வழியிலாவது மக்லேனை தம் அமைப்பிற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் எனும் ஒரு தீவிரத்துடன் செயற்படுகிறார்கள் USAFE குழுவினர்.

mf2புரபசர் டக்ளஸ் பெரியமனது வைத்து மக்லேனிற்கு சிகிச்சை தர முன்வருகிறார். மக்லேனின் மூளையில் மின் தூண்டல் மூலம் அவன் மறந்து போன நினைவுகளை மீட்க முடியுமா என அவர் முயல்கிறார். அவர் சிகிச்சையில் ஒரு சிறிய வெற்றி கிடைக்கிறது. மக்லேனிற்கு அவன் பால்ய கால நண்பனான ஜிம் ட்ரேக் என்பவன் பற்றிய சில நினைவுகள் திரும்புகின்றன. மதுவிடுதி ஒன்றில் தன் கவர்சியான மார்புகளை காட்டியவாறு நிற்கும் பரிசாரகியினை சட்டை செய்யாது புட்வெய்சர் பீரைக் குடிக்கும் மக்லேன், பின் தன் மீனவ நண்பன் ஒருவனின் உதவியுடன் பேஸ்புக்கில் ஜிம் ட்ரேக்கை தேடி, கண்டு பிடித்தும் விடுகிறார். ஜிம் ட்ரேக்கை தொடர்பு கொள்ளும் மக்லேன் அவனை சந்திக்க தான் ஆவலாக உள்ளதை தெரிவிக்கிறான். ஜிம் ட்ரேக்கும் அதே மனநிலையில் இருப்பதை கதையின் ஓட்டம் தெளிவாக்குகிறது. ஆனால் மக்லேன் மாமாவிற்கு அவரின் கடந்தகால நினைவுகள் திரும்பிவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் USAFE தன் அதிரடி நடவடிக்கைகளில் இறங்குகிறது…. பென்டகனும், FBI யும் மக்லேனை தீவிரமாக தேடும் வகையில் அது சதிகளை நிகழ்த்த ஆரம்பிக்கிறது….. கொலைக்குற்றம், மனநிலைபிறழ்ந்தவன் இவ்வகையான அபாண்டங்களை சுமந்து கொண்டு தன் நினைவுகளை மீட்க ஓட ஆரம்பிக்கிறான் மக்லேன்…. அடுத்த கட்ட ஓட்டம் ஆரம்பம். இந்த ஓட்டம் எத்தனை ஆல்பம் நீடிக்கும் என்பது வசூலிற்கே வெளிச்சம்.

மெய்னிலிருக்கும் அகுஸ்டாவில் ஆரம்பமாகும் கதை, ப்லிமுத், அரிசோனா பாலைவனம், பிரான்ஸின் அழகிய கிராமப்புறம், மேன்ஹாட்டன் என வேகம் பிடிக்கிறது. ஒவ்வொரு நிலப்பரப்பினதும் அழகை ஜிகுனொவ்வின் சித்திரங்கள் அழகுடன் தீட்டிச் செல்கின்றன. இந்த ஆல்பத்தின் மிகப்பெரிய பலம் ஜிகுனொவ்வின் சித்திரங்கள்தான். வான்ஸ் தந்த வரிகளை அப்படியே தத்தெடுத்தாலும் தன் பாணியில் அருமையாக இந்த ஆல்பத்திற்கான சித்திரங்களை ஜிகுனொவ் வழங்கியிருக்கிறார். இத்தொடரை இளமையாக கொண்டு செல்ல அவர் கைத்திறன் நிச்சயம் கைகொடுக்கும். கதையில் வரும் சிட்டுக்களை அவர் கவர்சியுடனும் அழகுடனும் படைத்திருக்கிறார். ஆனால் டார்கோட் படுபாவிகள் ஒரு சிட்டைக்கூட எதையும் காட்ட விடவில்லை. சூசானாவின் பாதங்களையும், யூலியானாவின் த்த்த்த்த்திரண்ட தயிர் போன்ற மார்பகங்களின் வெட்டையும் காட்டினால் மட்டும் போதுமா. ஆல்பத்தின் எட்டாம் பக்கத்தில் மேஜர் ஜோன்ஸ் கவர்ச்சி உடையுடன் கட்டிலில் சரிந்திருந்தவாறு மக்லேனிற்கு ஒரு தகவல் விடுப்பார். அழைப்பு எனலாம். எதற்கு எனக் கேட்டால் நீங்கள் உண்மையிலேயே நல்ல மனிதர்தான். வழமைபோலவே மக்லேனின் உலகம் அழகான பெண்களால் சூழப்பட்டிருக்கிறது.

ஆனால் கொலைஞர்களின் உலகம் அழகிய பெண்களால் நிறைந்திருக்கிறது. அறிமுகமாகும் USAFE குழு ஒவ்வொன்றிலும் அழகிய கொலைஞி ஒருவர் இருக்கிறார். ஏன் மக்லேனை தன் பக்கம் இழுத்துவிட இந்த அமைப்பு துடிக்கிறது என்பது கதையில் படிப்படியாக தெளிவாகிறது. இங்குதான் மேஃப்ளவர் கப்பலின் வரலாறு முக்கியமான ஒன்றாக ஆகிறது. அது என்ன என்பதை கதையிலேயே நண்பர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். அதற்கும் மக்லேன் மாமாவின் கதைக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதுதான் இந்த ஆல்பத்தின் முக்கியமான மர்மமாக இருக்கிறது. கதையை தொய்வில்லாமல் சொல்லியிருக்கிறார் ஈவ்ஸ் செண்ட். ஆனால் புதுமையான மாற்றங்கள் ஏதுமின்றி XIII மரபை அவர் தவறாது தொடர்ந்து வந்திருக்கிறார். ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், பெட்டி போன்றவர்கள் கவுரவ வேடத்தில் வருவது போல் வருகிறார்கள். பெண் கொலைஞிகளின் மனதிலோ அல்லது முகத்திலோ தழும்புகளை உருவாக்க மக்லேன் தவறுவதில்லை. இந்த ஆல்பத்திலும் அது உண்டு. இன்னொரு இரினா.

இந்த ஆல்பத்தில் வண்ணம் வழங்கும் பணியை செய்த Bérengère Marquebrecuq பாராட்டப்பட வேண்டியவர். கண்களிற்கு கவர்ச்சியான விருந்தாக அமைந்திடும் வண்ணம் சித்திரங்களிற்கு அவர் வண்ணங்களை தெரிவு செய்திருக்கிறார். அதிரடிகள் அதிகம் இல்லாத அதே போல் அலட்டல்கள் அதிகம் இல்லாத ஆல்பம் இது. பெண் கொலைஞிகள் உறுதியான பாத்திரங்களாக சித்தரிக்கப்படும் ஆல்பம் இது. வான்ஹாம்ன், வான்ஸ் அணி விட்டுச் சென்ற பணியை XIII ன் பாரம்பரியத்தை புதிய அணி செவ்வனே செய்திருக்கிறது. XIII ன் இருபதாவது ஆல்பம் நல்லதொரு ஆரம்பம். டார்கோட் ஈட்டிய வசூலிற்கு. மக்லேன் மாமாவின் கம்பேக்கிற்கு. [***]

24 comments:

  1. புதிய XIII வந்தாயிற்றா? படங்கள் colouring எல்லாம் நன்றாக இருக்கிறது. கதையும் நன்றாக இருந்தால் சரி.. ஸ்கேன் படங்களில் உங்கள் மொழிபெயர்ப்பு நன்றாக உள்ளது :). பதிவுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. நண்பர் விமலாகரன், இதற்கெல்லாம் எதற்கு நன்றி. இதெல்லாம் கடமை :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

      Delete
  2. Excellent post, my friend.

    They want to revive the storyline which is unique in many aspects. From ur writings, it seems they did a decent job.

    Poor Jason.

    ReplyDelete
    Replies
    1. அன்பு நண்பரே,

      இந்தக் கதையில் ஒரு கட்டத்தில் மக்லேனே கதவை அறைந்து சாத்தி இதுக்கு ஒரு முடிவே இல்லையா என அழுவார்..:) உண்மையிலேயே ஜேசன் பாவம்தான்... மசாலா கதைகள் மரபை சிறப்பாக கதை கடைப்பிடித்திருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

      Delete
  3. தேவாரம்January 14, 2012 at 8:09 PM

    நன்றி நண்பரே!! நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு காமிக்ஸ் போஸ்ட்!!பரவாயில்லையே உங்களிடம் இருந்து மூணு ஸ்டார் வாங்கியிருக்கிறார் XIII!! பெரிய விஷயமாச்சே!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவாரம்,

      இடைவெளி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று :)) ஓட்டைகள் இல்லாமல் இல்லை, ஆனால் கதையின் ஓட்டம் அதை மறக்க செய்துவிடும். இவ்வளவு பெரிய அமைப்பிற்கு மக்குலேனின் சினேகமான காலனல் ஜேம்ஸ் பற்றி தெரியாமல் போனது, செப் 11 ன் பின்பாகவுள்ள விமானநிலைய சோதனைக் கெடுபிடிகள் மத்தியில் மக்கு மாமா போலி பாஸ்போர்ட் காட்டி தப்புவது... இப்படியாக. ஆனால் இவற்றை பார்த்தால் கதையைப் படிக்க இயலுமா. XIII வரிசையில் 3 நட்சத்திரம் தரக்கூடிய கதைதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. கம்பேக் படித்து வைரஸ் காய்ச்சலில் படுத்திருப்பதாக சொல்கிறார்களே....:)

      Delete
  4. நண்பரே,ஆரம்பம் நன்றாகவே இருக்கிறதாக சொல்கிறீர். போகப் போகத் தான் தெரிய வரும். முதல் இதழையே மொக்கையாக போட dargaud என்ன டிசி காமிக்ஸா? :)

    ReplyDelete
    Replies
    1. டியர் இலுமி,

      உம் குசும்பு உம்மை விட்டு போகாது...:) போக போக பழைய குருடி ஆகாமல் இருந்தால் சரி. கருத்துக்களிற்கு டாங்ஸ்பா.

      Delete
  5. Wel'come back'!!! திரும்பவும் காமிக்ஸ் பதிவு கொண்டுவந்ததுக்கு... XIIIஇன் புதிய கூட்டணி எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது... கூடியவிரைவில் மொழி பெயார்ப்பை எதிர்பார்க்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரமேஷ்,

      ஆனால் கம்பேக் நன்றாக இல்லை என்பதாக சொல்கிறார்களே :) ஆம் கூடிய விரைவில் மயங்க செய்யும் மொழிபெயர்ப்பு வெளியாகிவிடும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

      Delete
  6. மொழி பெயர்ப்பு விரைவில் கிடைக்கும் என்று நினைக்கின்றேன். விஜயன் கூட XIII பற்றி ஒரு மர்மப் பதிவு இட்டுள்ளார். இந்த புத்தகத்தை தமிழில் வெளியிடும் வேலை ஆரம்பம் என்று நினைக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மயூரேசன்,

      பழக்கடையில் களேபரம் ஆகாமல் இருந்தால் சரி.. :) விஜயன் இட்ட பதிவல்ல மர்ம ஆசாமி விஜயன் போல் இட்ட பதிவு அது...வேலை ஆரம்பம் ஆனால் முடிக்க ஒரிரு வருடங்கள் ஆகிவிடும்.... தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

      Delete
    2. //பழக்கடையில் களேபரம்//

      அடுத்த லயன் அறிவிப்பை எதிர்பாருங்கள்.தலைப்பு: பழக்கடையில் களேபரம். :)

      Delete
  7. மயூரேசன் அண்ணாச்சி, உங்கள நினைச்சா எனக்கு ஆனந்தக் கண்ணீர் கொட்டுது. :)

    ReplyDelete
  8. ... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ரிஷவன்,

      என் நேர வசதியின்படி தங்கள் ப்ளாக் வருகிறேன். நன்றி.

      Delete
  9. தங்கள் பதிவு பதிவு போடத் தூண்டுகிறது. நன்றி.
    நானும் ப்ளாக் எழுதுகிறேன் என்ற பெயரில் பூராப் பயலுகளுடைய கழுத்துக்களை அறுத்துக் கொண்டு இருக்கிறேன். தயவு செய்து உங்க கழுத்தையும் கொண்டாந்து நீட்டுங்க. :)

    ReplyDelete
    Replies
    1. இதை எழுதி வேற அறிவிக்கணுமாக்கும்...:))

      Delete
  10. அட்ரா சக்க அடுத்த ரவுண்டு ஆரம்பமா

    சூப்பரப்பு ;-)
    .

    ReplyDelete
  11. நண்பர் சிபி,

    நாம் சக்கையாகமல் இருந்தால் சரி ..:) கருத்திற்கு நன்றி.

    ReplyDelete
  12. கதையில் வரும் சிட்டுகளும் உங்கள் விமரிசனமும் என்னை படிக்க தூண்டுகின்றன... :)

    ReplyDelete
    Replies
    1. சிட்டுக்கள் முக்கியம் என்பது பிரபஞ்ச உண்மை நண்பரே :)

      Delete