Sunday, June 5, 2011

ஃபர்ஸ்ட் கிளாஸ்


1962, அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் செபாஸ்டியன் ஷோ என்பவனைக் கண்காணிக்கும் சிஐஏ அவனிற்கு துணையாக செயற்படும் சில மனிதர்கள் சிறப்பான ஆற்றல்களை தம்மில் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறது. இவ்வகையான விசேட சக்தி கொண்ட மனிதர்கள் குறித்து விரிவாக அறிய விரும்பும் சிஜஏ சார்ல்ஸ் சேவியர் எனும் விரிவுரையாளரை தொடர்பு கொள்கிறது….

மார்வல் காமிக்ஸின் குறிப்பிடத்தக்க நாயகர்களில் X-Men களிற்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. 1963 களில் காமிக்ஸ் கதையொன்றில் அறிமுகமாக ஆரம்பித்த இந்நாயகர்களில் காணக்கிடைக்கும் X எனும் ஒரு குறிப்பிடத்தக்க மரபணு இவர்களை சாதாரணர்களிடமிருந்து வேறுபடுத்தி சிறப்பான ஆற்றல்களையும் சக்திகளையும் உடையவர்களாக சித்தரித்தது. பரிணாம வளர்ச்சியில் மனிதர்களை விட மேலான படியில் உள்ளவர்களே இந்நாயகர்கள். X-Men என இந்நாயகர்கள் அறியப்படும் முன்பாக அவர்களின் வரலாறு என்ன என்பதை சிறப்பாக திரைக்கு எடுத்து வருகிறது Matthew Vaughn இயக்கியிருக்கும் X-Men: First Class எனும் இத்திரைப்படம்.

1944களில் நாசிகளால் நிர்வகிக்கப்படும் யூத வதை முகாம் ஒன்றில் திரைப்படம் ஆரம்பிக்கும்போது இந்த யூத வதைமுகாம்களை விட்டால் ஹாலிவூட் பட்சிகளிற்கு வேறு வதைமுகாம்களே தெரியாதா எனும் எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் அந்த ஆரம்பமே படத்தின் மிக முக்கியமான ஒரு பாத்திரமான எரிக் என்பவனிற்கு வஞ்சம் எனும் பாதையில் பயணத்தை ஆரம்பித்து வைக்கிறது.

இதே ஆண்டு காலப்பகுதியில் நீயூயார்க்கின் வசதிபடைத்த புறநகர்பகுதியொன்றின் பெருமாளிகையில், பிறரின் மனதில் உள்ளவற்றை படித்தறியும் திறமை கொண்ட சேவியர் எனும் சிறுவனிற்கும், எந்தவொரு மனிதப்பிறப்பை போலவும் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ரேவென் எனும் சிறுமிக்கும் அறிமுகம் உருவாகிறது.

பின், கதை 1962க்கு தாவுகிறது. ஒரு புறம் எரிக் தன் மனதில் எரியும் வஞ்சத்தை தணிக்க அதிரடிப் பயணத்தை மேற்கொள்ளுகிறான். சேவியர் பல்கலைக்கழக மாணவனாக தன் வாழ்க்கையை தொடர்கிறான், பின் மரபணு மாற்றங்கள் குறித்த விடயங்களில் தேர்ந்த விரிவுரையாளானாகிறான். சந்தர்ப்பவசத்தால் சேவியர், எரிக் எனும் X-Men ன் இரு முக்கிய பாத்திரங்களும் எவ்வாறு சந்தித்துக் கொள்கின்றார்கள் என்பது பரபரப்பான ஒரு காட்சியில் பார்வையாளன் முன்வைக்கப்படுகிறது. இந்த இருவரிற்கும் இடையில் உருவாகும் நட்பு, அவர்களிற்க்கிடையில் உள்ள வேறுபாடுகள், அவர்கள் இணைந்து நடத்தும் போராட்டங்கள், அதன்பின் வரும் வலி கொண்ட பிரிவு என்பவற்றை சிறப்பான வகையில் திரைப்படம் கூறிச்செல்கிறது.

x-men-first-class-2011-17720-1235885239படம் ஆரம்பித்த கணம் முதலே உருவாகும் விறுவிறுப்பு அதன் இறுதிவரை குறையாதபடியிருக்கும் சிறப்பான இயக்கம் படத்தின் முதல் பலம். மிகச்சிறப்பான நடிகர் தெரிவு அதன் இரண்டாம் பலம். அதிரடி ஆக்‌ஷன்களை மட்டும் நம்பியிராது ரசிக மனங்களை சிறகொன்றின் ஸ்பரிச மென்மையுடன் தொட்டுவிடும் கதை மூன்றாம் பலம். சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் உபரிப் பலம்.

எரிக் எனும் மக்னெட்டோவிற்கும் சார்ல்ஸ் சேவியரிற்குமிடையில் உருவாகும் நட்பு மிகச்சிறப்பான வகையில் விபரிக்கப்படுகிறது. மக்னெட்டோ ஏன் மனிதர்களிற்கு எதிரானவனாக உருவாகிறான், சேவியரால் ஒரு தங்கை போல பாதுகாக்கப்படும் ரேவென் எனப்படும் மிஸ்டிக் ஏன் மெக்னெட்டோவுடன் இணைந்து கொள்கிறாள் எனும் சம்பவங்கள் தகுந்த காரணங்களுடன் விளக்கப்படுகின்றன. மனிதர்கள் மத்தியில் ஒளிந்து வாழக்கூடிய நிலையில் உள்ள X-Men கள் குறித்த பார்வையும் மனிதர்கள் அவர்கள்மீது கொள்ளும் வெறுப்பும் தயக்கமின்றி திரைப்படத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்நாயகர்களின் முன்னைய படைப்புக்களில் மக்னெட்டோவையும் அவன் குழுவையும் சிறிய எரிச்சலுடன் நாம் பார்த்திருந்தால் இத்திரைப்படம் அவர்கள் மீதான எம் பார்வையை திருத்திக் கொள்ளச் செய்கிறது.

அமெரிக்காவை ஒரு காலத்தில் பரபரப்பிற்குள் ஆழ்த்திய க்யூப அணு ஏவுகணை விவகாரத்தை முக்கியமான ஒரு திருப்பத்திற்காக சிறப்பாக திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் கதையை உருவாக்கியவர்கள். மிகைகற்பனைச் சதி ஒன்றை நாடாது ஏற்கனவே நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை கதையில் விறுவிறுபிற்காக உபயோகித்திருப்பது கற்பனையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது கூடவே அதன் விளைவுகளும் எதிர்பார்த்த வெற்றியை தந்திருக்கின்றன.

படத்தின் முக்கிய பாத்திரங்களான சேவியர் வேடத்தில் தோன்றும் James McAvoy, எரிக் வேடம்மேற்றிருக்கும் Michael Fassbender ஆகிய நடிகர்கள் மிகச்சிறப்பாக தம் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செபாஸ்டியன் ஷோவாக வரும் நடிகர் Kevin Bacon அற்புதமான ஒன்றாக அப்பாத்திரத்தை தன் திறமையால் மாற்றியிருக்கிறார். இவ்வகையான சிறப்பான நடிகர் தேர்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் சொல்லவே வேண்டியதில்லை. உச்சக்கட்டக் காட்சிகளில் வரைகலைக் கலைஞர்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள். அதேபோல் சமீபகாலத்தில் இவ்வளவு விறுவிறுப்பும் வேகமும் அழுத்தமும் நிறைந்த உச்சக்கட்டக் காட்சியை நான் திரையில் கண்டதில்லை.

X-Men பாத்திரங்கள் மீது நான் விருப்பு கொண்டவன் அல்ல. இத்திரைப்படத்திற்கு முன்பு வந்த அந்நாயகர்களின் திரைச் சாகசங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததுமில்லை. இந்நாயகர்கள் தோன்றும் திரைப்படம் ஒன்றை நான் இவ்வளவு ரசித்துப் பார்ப்பேன் என நான் எண்ணியதும் இல்லை. ஆனால் இத்திரைப்படம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டிருக்கிறது. X- Men:First class அதன் பெயரைப் போலவே ஃபர்ஸ்ட் கிளாஸ். [***]

ட்ரெயிலர்

17 comments:

 1. //X- Men:First class அதன் பெயரைப் போலவே ஃபர்ஸ்ட் கிளாஸ்//

  சன் டிவியில் வரும் டாப் டென் மூவீஸ் சினிமா பன்ச் போல இருக்குது இந்த கடைசி வரிகள்.

  கிங் விஸ்வா
  குங்ஃபூ பாண்டா (2011) - திரைவிமர்சனம்!!

  LITTLE BIG SOLDIER (2010) - ஆசிய சிங்கத்தின் ஒலக சினிமா - திரை விமர்சனம்!

  ReplyDelete
 2. முந்தய எக்ஸ் மென் படங்களின் அலுப்பு, கதாப்பாதிரங்களின் எண்ணவோட்டத்தையும் அவர்களின் குணாதிசயத்தையும் பற்றி அலசாமல் நேரே வெறும் சண்டைக் காட்சிகளை நோக்கி சென்றதனால் ஏற்பட்டது. இப்படத்தின் trailer பார்த்த உடனே கோட்டை விட்டதை இதில் சரியாக செய்திருக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை வந்தது. குறிப்பாக, சார்லஸ் சேவியர் மற்றும் Magneto வேடம் ஏற்றிருக்கும் நடிகர்கள் சிறப்பான தேர்வு. அந்த இரு பாத்திரங்களின் இயல்பையும் சிறப்பாக பிரதிபலித்து இருகிறார்கள். முக்கியமாக Magneto ஆக நடித்திருக்கும் Michael Fassbender மிகச் சரியான தேர்வு.

  ReplyDelete
 3. அட நல்லாருக்கா ... பாத்துருவோம். இங்க அடுத்த வாரம் தான் ரீலிஸ்

  ReplyDelete
 4. அதெப்படி உங்க ஊர்ல மட்டும் ஒலகத்துல யாருமே பாக்காத படமெல்லாம் ஒரு வாரத்துக்கு முன்னாடியே ரிலீஸாகுது?!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. விஸ்வா, நல்லவேளை பதிவின் தலைப்பை டாப் டென் என நான் வைக்கவில்லை :) சன் டிவிக்கே எல்லாப் புகழும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, எரிக்கின் பழி வாங்கும் படலம் படு அட்டகாசமாக இருக்கும், மைக்கல் பாஸ்வெண்டெர் ஸ்டைலிஷ்ஸாக அக்காட்சிகளில் நடித்திருப்பார். அவரையும் மிஞ்சி என்னை கெவின் பெகொனும்,ஜேம்ஸ் மக்அவொயும் கவர்ந்தார்கள். ஒரு சிறிய ஆச்சர்யம் அதாவது நட்புக்காக என்பார்களே அப்படி ஒரு பாத்திரம் உண்டு. ஒரு 20 செக்கனிற்கு, அட்டகாசமாக இருக்கும் :). தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் லக்கி லிமட், வாய்புக்கிடைத்தால் தவறவிடாதீர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  தலைவர் அவர்களே, உங்கள் ஊரில் குங்ஃபூ பேண்டா ரிலீஸ் ஆகியிருக்கிறது இங்கு இன்னமும் ஆகவில்லை :) அப்படித்தான் இதுவும் ஆனால் சென்ற வெள்ளியன்றே பெரும்பாலான நாடுகளில் இத்திரைப்படம் வெளியாகிவிட்டது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 6. எனக்கு எக்ஸ் மேனனின் .. ச்சீ . மென்னின் முதலிரண்டு பாகங்கள் பிடித்தன. ஆனால், அதற்குப்பின் பார்த்த படங்கள், மொக்கையாக மாறியதால் இப்பட வரிசையின் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். ஆனால் இப்படத்தைப் பார்க்கச் சொல்கிறீர்கள். ஒகே. பார்த்து விடுகிறேன்.

  ReplyDelete
 7. //ஒரு சிறிய ஆச்சர்யம் அதாவது நட்புக்காக என்பார்களே அப்படி ஒரு பாத்திரம் உண்டு. ஒரு 20 செக்கனிற்கு, அட்டகாசமாக இருக்கும்//

  யாரு wolverine ஆ? இவனுக அந்த கேரக்டர விட மாட்டானுகளே?

  ReplyDelete
 8. // அமெரிக்காவின் இறையாண்மைக்கு //

  ஹி ஹி ஹி

  எப்படி காதலரே இப்புடி

  ReplyDelete
 9. // X- Men:First class அதன் பெயரைப் போலவே ஃபர்ஸ்ட் கிளாஸ். [***] //

  கண்டிப்பாக பாத்திடுவோம் :))
  .

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. உண்மைய சொன்னா எனக்கு X Menல முதல் பாகம் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் பிடிச்சது.....மத்தது சுத்தம்......

  நீங்க எழுதியிருக்கிறத பாக்கும் போது அதகளமா இருக்கும் போலயே....

  முதல்ல இங்க ரீலஸ் ஆகட்டும்....நானே KF 2வே இன்னும் இங்க ரிலீஸ் ஆகலைன்னு கடுப்புல இருக்கேன்...

  ReplyDelete
 12. SUPER 8 SUPERB. Onkalukku nitchayam pudikkumnu nenaikiren Kadhalarey ..

  ReplyDelete
 13. All the anticipated movies have been good so far in this summer. Super8-um Enjoy pannunga...

  ReplyDelete
 14. அன்பு நண்பரே,

  ப்ரையன் ஸிங்கர் மிகத் திறமையாக திரைக்கதை எழுதியிருக்கிறார். எக்ஸ்மேன் முதல் பாகம் வரும்போதே ஐந்து பாகங்கள் வரை சிந்தித்து எழுதியிருக்கிறார்.

  இரு சூப்பர் ஹீரோக்களுக்கு இடையில் நட்பை மிக அழகாக விவரித்திருககிறார். லிங்கன் மெமோரியலின் படியில் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் காட்சி அருமையாக அமைந்திருக்கிறது.

  இந்த வரிசையில் வந்த பிரமாதமான திரைப்படம். நல்ல விமர்சனம். ட்ரைலரை பார்க்கும்பொழுதே இது உங்களுக்கு பிடிக்குமென்று நான் நினைத்தேன்.

  ReplyDelete
 15. காதலரே,

  இன்னும் படம் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை... ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று என்று தங்கள் விமர்சனம் மூலம் தெரிகிறது. எக்ஸ் மேன் பட வரிசையில் முதல் 3 பாகங்களை எடுத்து விட்டு, இனி அதில் வரும் தனிபட்ட கதாபாத்திரங்களை கொண்டு கதைகளை பிண்ணி கொண்டிருந்ததாக மட்டுமே படித்தேன்... அதன் மூலத்தை வைத்து இன்னொரு படத்தை நடுவில் திணித்து அசத்தியிருக்கிறார்கள் போல.

  மார்வலின் சமீபத்திய படங்கள் அவர்கள் எதிர்பார்ப்பையும் மிஞ்சும் அளவிற்கு வெற்றி பெற்று வருவது, டிஸ்னியுடன் ஐக்கியமானதன் விளைவா இல்லை, முன்பே தயாரான காரணமா என்று தெரியவில்லை. எது எப்படியே இனி மார்வல் படங்கள் ஒவ்வொன்றும் கல்லா நன்றாக கட்டும்.

  அது சரி, கதாபாத்திரவு தேர்வு பலம், இயக்கம் பலம், இசை பலம், காட்சிகள் பலம் என்று அடிக்கி விட்டு, பின்பும் 3 ஸ்டார்கள் தானா.... உங்கள் பட விமர்சனங்களில் 3 ஐ தாண்டிய ரேட்டிங்கை சமீபத்தில் நான் பார்த்த நியாபகமே இல்லை :)

  ReplyDelete
 16. நண்பர் கருந்தேள், X-Men முன்னைய திரைப்பட வரிசையை விட ரசிகர் மனதை இத்திரைப்படம் நெருங்கி வருகிறது, வசதிக்கேற்ப பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமி, அவரேதான் :)) ஆனால் அவர் கூறும் வசனம் அட்டகாசமாக இருக்கும்.. ஆங்கிலத்தில் :)) விட மாட்டீரே, கமெண்டில் ஸ்பாய்லர் அடிக்கும் இலுமி வாழ்க!வாழ்க!

  நண்பர் எராப ராஜா, நன்றி.

  நண்பர் சிபி, எதோ என்னால் ஆனது :) படத்தை பார்த்து மகிழுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கொழந்த, இங்கு மட்டும் என்ன வாழ்கிறதாம் :) போனால் போகிறது என அடுத்த வாரம் ரீலீஸ் செய்யப் போகிறார்கள் குங்க்ஃபூ கரடியை. இப்படம் உங்களைக் கவரும் சாத்தியம் உண்டு. பார்த்துவிட்டு கூறுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  அனானி அன்பரே, சூப்பர் 8 இங்கு வெளியானவுடன் பார்க்க வேண்டியதுதான். தகவலிற்கும் கருத்திற்கும் நன்றி.

  ஜோஸ், தமிழில் இப்படத்திற்கு என்ன தலைப்பு வைத்தார்கள் என்பதை நீங்கள் கூறாததைக் கண்டித்து [நீங்கள் ஆங்கிலத்தில் கண்டுகளித்திருந்தாலும் கூட] சிட்டுக்கள் கீழுதடு சுவைக்கும் போராட்டத்தை ஆரம்பிக்கப் போகிறேன் :) அருமையான நட்பு ஒன்று அதன் பாதையை விட்டு விலகுவதை சிறப்பாக கூறியிருந்தார்கள் எனக்கு அது பிடித்திருந்தது. தங்களையும் இப்படைப்பு கவர்ந்திருப்பது மகிழ்ச்சியே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ரஃபிக், அன்றே கூறினேன் டிக்கெட் புக் செய்து இளம் தோழிகளுடன் இப்படத்தை பார்க்கும்படி, உடனே அதனை நிறைவேற்றுங்கள் :) ஆனால் டிஸ்னியின் பெயர் எதிலுமே வராமல் பார்த்துக் கொள்கிறார்கள். கில்லாடி மார்க்கெட்டிங். மூன்று நட்சத்திரங்களிற்கு மேல் என்பது இளைய தளபதியின் படங்களிற்கு மாத்திரமே :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete