Monday, November 22, 2010

தாத்தா சுட்டா தப்பாது


பிரான்ங் மோசஸ் [Bruce Willis], CIAன் அதிரடி ஏஜெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். தனது ஒய்வு வாழ்க்கையை சலிப்பின் துணையுடன் வாழ்ந்திருக்கும் பிரான்ங்கிற்கு, அவனிற்கு ஓய்வூதியத்தை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் சாரா எனும் பெண்மீது ஒரு ஈர்ப்பிருக்கிறது.

250px-Warren_Ellis_Red_3_cover சாராவுடன் தொலைபேசியில் உரையாடுவதும், முளைவிடும் அவகாடோ விதை ஒன்றை கரிசனையுடன் பார்த்துக் கொள்ளுவதும், சலிப்பு ஊறிய அவன் வாழ்வின் முக்கியமான தருணங்களாக இருக்கின்றன. இவ்வாறான நிலையில் பிராங் மோசஸின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து அவனைத் தீர்த்துக்கட்ட முயல்கிறது ஒரு அதிரடிக் குழு.

இந்த அதிரடிக் குழுவானது CIA வினாலேயே அனுப்பப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளும் பிராங் மோசஸ் இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்குகிறான். CIA ன் புதிய தலைமுறை எஜெண்டுகளின் அசுர நடவடிக்கைகளை மோசஸ் முறியடித்து உண்மையைக் கண்டடைய அவனிற்கு துணை வருகின்றனர் மேலும் சில ஓய்வு பெற்ற CIA ஏஜெண்டுகள்….

திரைப்படத்தின் அதே பெயரைக் கொண்ட காமிக்ஸ் கதையொன்றின் ஒரு வரி மையக்கதையை தழுவி இயக்குனர் Robert Schwentke இயக்கியிருக்கும் RED திரைப்படத்தில் முதலில் விசிலடிக்க வைக்கும் அம்சம் அதில் இடம்பெறும்- நம்புவதற்கு சற்று சிரமமான – அதிரடி ஆக்‌ஷன். இரண்டாவது விசில் அதில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான நடிகர்களின் தெரிவிற்கு. மூன்றாவது விசில் எந்த பந்தாவுமில்லாமல் இப்படி ஒரு ஆக்‌ஷன் காமெடியில் அலட்டிக் கொள்ளாமல் அசர வைக்கும் விதத்தில் கலக்கி எடுத்திருக்கும் மார்கன் ஃப்ரீமேன், ஜான் மால்கோவிச், ஹெலன் மிரென் போன்ற பண்பட்ட கலைஞர்களிற்கு.

red-2010-18717-839584313 ரெட், காமிக்ஸ் கதையானது Warren Ellis ஆல் எழுதப்பட்டு ஓவியங்கள் Cully Hamnerல் உருவாக்கப்பட்டன. தன்னைக் கொல்ல உத்தரவிட்ட CIA யின் உயரதிகாரிகளை தனியாளாக துவம்சம் செய்யும் ஒரு ஓய்வு பெற்ற CIA ஏஜெண்டின் கதையை கொடுமையான வன்முறையுடனும் ரத்தத்துடனும் கூறும் மூன்றுபாக காமிக்ஸ் கதை அது. நகைச்சுவை என்பது அக்காமிக்ஸில் தவறியும் இடம்பெற்றிருக்காது. தன் வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை எழுத உதவியவர்களையும், அந்தப் பக்கங்களையும் CIA எவ்வாறு தந்திரமாக துடைத்தெடுக்க முயல்கிறது என்பதை அக்கதை கூறிச் செல்லும். ஆனால் காமிக்ஸின் திரைவடிவத்தில் நிறைய மாற்றங்கள், ஆச்சர்யம் தரும் போனஸாக சிறப்பான நகைச்சுவை என்பவற்றை காமிக்ஸை படித்த அன்பர்கள் காணமுடியும். [இக்காமிக்ஸை படிக்க வாய்ப்பளித்த இலுமினாட்டி அவர்களிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்- கனவுகளின் காதலன் விளம்பர சேவை]

எக்ஸ்பெண்டபிள்ஸ் திரைப்படத்தில் திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி அகன்ற மொட்டை மாமா ப்ருஸ் வில்லிஸிற்கு, நீண்ட நாட்களின் பின்பாக அவரின் மொட்டைத் தலைக்கு பொருந்திப் போகும் அழகான ஒரு விக் போல வந்து அமைந்திருக்கிறது பிராங் மோசஸ் பாத்திரம். ஓய்வு பெற்ற சிஐஏ ஏஜெண்டாக சலிப்புடன் தன் வாழ்க்கையை கடத்தும் பிராங்கிற்கு, வெளியுலகுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பிராங் பாத்திரத்தின் தவிப்பை உணர்த்தும் தருணங்களில் சிறப்பான நடிப்பை வழங்குகிறார் மொட்டை மாமா ப்ருஸ். தன் வீட்டை சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் கிறிஸ்துமஸ்கால அலங்காரங்களுடன் ஜொலிக்க தன் வீடு மட்டும் தன் தலையைப் போலவே மொட்டையாக இருப்பதை அவர் உணரும் தருணத்தில் திரையில் அவர் வழங்கும் அந்தப் பார்வை அட்டகாசம்.

red-2010-18717-637927801 பிராங்கின் வீட்டினுள் புகுந்து அவனைக் கொலை செய்ய முயலும் குழுவுடனான மோதல் காட்சிகளிலேயே, அக்காட்சிகளில் கலந்திருக்கக்கூடிய தடிப்பான அபத்தத்திலேயே ரசிகர்கள் இது எவ்வகையான படம் என்பதை தெளிந்து உஷாராகிவிட வேண்டும். இந்த உணர்தலே படத்தை மேற்கொண்டு ஜாலியாக ரசிக்க உதவும். இல்லையேல் அந்த மோதலுடனேயே திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விடுவது நல்லது. படத்தில் இருக்கும் அட்டகாசமான ஆக்‌ஷனிற்கு அளவெடுத்து தைத்த கையுறைபோல் பொருந்தி துள்ள வைக்கின்றன, பின்னணி இசையும் அதனுடன் கூடவே இழையும் பாடல்களும்.

திரைப்படம் முழுவதிலும் ப்ருஸ் வில்லிஸ் அடக்கி வாசித்திருக்கிறார். ஆச்சர்யப்படத்தக்க வகையில் அது அருமையான ஒரு விளைவை வழங்கியிருக்கிறது. ப்ருஸ் மட்டுமல்லாது படத்தின் முக்கியமான நடிகர்கள் யாவரிற்கும் சிறப்பான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் தத்தமது பாத்திரங்களை அருமையாக செய்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமேனிற்கு மட்டும் கொஞ்சம் வாய்ப்பு குறைவாக உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் சிட்டு ஒன்றின் பின்னழகை ரசிப்பவராக மார்கன் ஃப்ரீமேன் காந்தச் சிரிப்பால் கவர்கிறார்.

கிறுக்கு குணம் படைத்த முன்னாள் ஏஜெண்டாக வரும் ஜான் மால்கோவிச் படத்தில் வழங்கும் நடிப்பு சிரிப்பை அள்ளுகிறது. அவரது அதீத கற்பனைகளும், காரணப்படுத்தல்களும், கொலைவெறியும் அவரை பிற பாத்திரங்களிலிருந்து தனிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. சிஐஏன் ஓய்வு பெற்ற பெண் ஏஜெண்ட் விக்டோரியாவிற்கும் [Helen Mirren] KGB ன் ஏஜெண்டாகவிருந்த இவானிற்கும் இடையில் இருக்கும் காதல் அழகாக காட்டப்படுகிறது. இவானாக நடித்திருக்கும் நடிகர் Brian Cox சிறிய வேடம் எனிலும் கவர்ந்திழுக்கிறார். மோசஸின் கதையை முடிக்கும் பொறுப்பை ஏற்கும் சிஐஏ ஏஜெண்டான வில்லியம் கூப்பர் வேடத்தில் வரும் நடிகரான Karl Urban மிக அட்டாகாசமன ஒரு தெரிவு. அவரின் கம்பீரமும், கவர்ச்சியும் திரையை அதிரடிக்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் காமெடி கலவையாக திரைப்படம் இருந்தாலும் ஓய்வு பெற்ற மனிதர்கள் தம் சலிப்பான வாழ்விலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகளை மெலிதாக கோடிட்டு காட்டுகிறது திரைப்படம். சலிப்பான வாழ்விலிருந்து விடுபட மீண்டும், அதிரடி, காதல் போன்றவற்றில் தயங்காது இறங்கிடும் ஓய்வு பெற்ற பாத்திரங்களை திரைக்கதை முன்னிறுத்துகிறது. தர்க்கரீதியான கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காது குஷியாக பார்த்து மகிழ வேண்டிய திரைப்படமாகவே ரெட் இருக்கிறது. மேலும் இப்படத்திலிருந்து அடியேனைப் போன்ற ஆக்‌ஷன் திரைப்பட விசிலடிச்சான் குஞ்சுகள் பெற்றுக் கொள்ளக்கூடிய ஜென் தத்துவம் என்னவெனில் சிஐஏ தாத்தா சுட்டால் குறி தப்பாது என்பதாகும். [**]

ட்ரெயிலர்

15 comments:

  1. //தன் வீட்டை சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் கிறிஸ்துமஸ்கால அலங்காரங்களுடன் ஜொலிக்க தன் வீடு மட்டும் தன் தலையைப் போலவே மொட்டையாக இருப்பதை அவர் உணரும் தருணத்தில் திரையில் அவர் வழங்கும் அந்தப் பார்வை அட்டகாசம்.//

    ஹாஹா,குசும்புயா உமக்கு...
    படம் நன்றாக இருப்பது குறித்து மகிழ்ச்சி.ஆனா,காமிக்ஸின் வேகம் வர வாய்ப்பே இல்ல. :)
    ப்ரூஸ் வில்லிஸ் அருமையான நடிகர். டை ஹார்ட் ஐந்தாம் பாகத்திலும் வயதான ஒருவனை கொஞ்சம் காமெடியுடன் முன்னிறுத்தி இருப்பார்.
    இருங்களே, சீக்கிரம் இதோட ஒரிஜினல் காமிக்ஸ் பத்தி எழுதி உங்கள கொல்லுறேன் ;)

    ReplyDelete
  2. வழமை போலவே அருமையாக தொகுத்துள்ளீர்கள். அசத்தல்

    ReplyDelete
  3. காதலரே,

    வழமை போல ஸ்டார் காஸ்ட் மற்றும் பழைய நடிப்பின் பேரிலுள்ள ஈர்ப்பால் நானும் இந்த படத்தின் டிவிடியை வாங்கியதோடில்லாமல் நம்ம பயங்கரவாதியை வேற வாங்க வைத்தேன் (இந்தியாவில் படம் இந்த வாரம்தான் ரிலீஸ் ஆகுது). ஆனால் இந்த ரெட் படமானது நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ரெட் படத்தை விட மொக்கையாக இருந்தது சற்றே ஏமாற்றத்தை அளித்தது.

    ReplyDelete
  4. இந்த டீமிடமிருந்து இன்னும் நிறைய நிறைய எதிர்பார்த்தேன். நண்பர்களுக்கு இந்த படம் ஒக்கே தான் என்றாலும் என்னை பொறுத்தவரையில் வெகு சுமாரே.

    ReplyDelete
  5. John Malkovich is very adorable in this entertaining fun movie. a neat review.

    ReplyDelete
  6. தமிழ் கிராமபடங்களில் வரும் கோயில் நெருப்பு மேல் நடத்தல், கூழ் உற்றும் நிகழ்வு, அதுபோல் ப்ருஸ் வில்லிஸ் படங்களில் வரும் கிறிஸ்துமஸ், ஒரு துப்பாக்கி ஓரே ஒரு கடைசி தோட்டா, வாக்கி டாக்கி & CIA.

    English - RED **
    Tamil - RED -*


    :-)

    ReplyDelete
  7. தவிர்க்க முடியாத சில காரணங்களால் இணைய பக்கம் வர முடியவில்லை நண்பரே ,
    இதோ வந்தும் விட்டேன் படித்தும் விட்டேன். பகிவுக்கு நன்றி
    விரைவில் RED பார்த்து விடுவேன்.
    அதே போல் unstoppable பார்த்தே விட்டேன். சரியான விமர்சனம் தான் உங்களடையது.
    நன்றி

    ReplyDelete
  8. சீராக ஓடும் நதி போன்ற அழகிய நடையில் எழுதுவது உங்கள் சிறப்பம்சம். ஒரு திரைப்படம் பற்றிய விமர்சனத்தை நீங்கள் தொடங்கும் விதம் என்னைக் கவர்ந்த ஒன்று. இந்தப் பதிவிலும் அந்த அழகியல் அப்படியே இடம்பிடித்துள்ளது.

    நன்றி காதலரே.

    ReplyDelete
  9. நண்பர் இலுமினாட்டி, காமிக்ஸின் வேகம் இல்லை என்றாலும் தொய்வில்லாமல் கதை நகர்கிறது. உங்கள் கொலை முயற்சிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் nis, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, அதிகம் எதிர்பாராமல் இப்படத்திற்கு சென்றேன் ஆச்சர்யப்படும் விதத்தில் படம் என்னைக் கவர்ந்தது. நீங்கள் அஜீத் ரசிகர் என்பதற்காக மொட்டை மாமா ப்ருஸை ஓரங்கட்டுவது நியாயமாகுமா, இது அடுக்குமா :) //நம்ம பயங்கரவாதியை வேற வாங்க வைத்தேன்// அது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் எஸ். கே. நன்றி.

    ReplyDelete
  10. நண்பர் புதுவை சிவா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் வேல்கண்ணன், வாய்ப்புக் கிடைக்கும்போது பாருங்கள் ஜாலியாக நேரத்தை கழிக்க உதவும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் செ. சரவணக்குமார், உங்களை விடவா அழகாக எழுதிவிடப்போகிறேன் :) தங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. நண்பர் R.Kamal, நீங்கள் கூறுவதோடு முற்றிலும் உடன்படுகிறேன். அட்டகாசமான மால்கோவிச் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. //தன் வீட்டை சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் கிறிஸ்துமஸ்கால அலங்காரங்களுடன் ஜொலிக்க தன் வீடு மட்டும் தன் தலையைப் போலவே மொட்டையாக இருப்பதை அவர் உணரும் தருணத்தில் திரையில் அவர் வழங்கும் அந்தப் பார்வை அட்டகாசம்.//

    சூப்பரப்பு :))
    .

    ReplyDelete
  13. // அவரின் மொட்டைத் தலைக்கு பொருந்திப் போகும் அழகான ஒரு விக் போல வந்து அமைந்திருக்கிறது //

    அவர் மேல என்ன கோவம் காதலரே ;-)
    .

    ReplyDelete
  14. நண்பர் சிபி, அவர்மேல் என்ன கோபம்! ஒரு ஜாலிக்காக எழுதுவதுதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete