Saturday, July 16, 2011

ஹாரிபொட்டரும் ஏமாற்றக் குவளையும்!


உணவு உண்ணும் போதும், உறங்கச் செல்லும் முன்பாகவும் தொலைக்காட்சியில் அன்றைய செய்தி நறுக்குகளைப் பார்ப்பது எனக்கு வழக்கமாகிக் கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதியின் வரவு குறித்தும், அதன் வரவின் முன்பாகவும் பின்பாகவும் தவறமால் தொற்றிக்கொள்ளும் அந்த ஹாரிஜூரம் குறித்தும் குறிப்பிடத்தக்க நறுக்குகளை தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தவறாத பிரார்த்தனைபோல் ஒளிபரப்பி தம்மையும் ஹாரிஜூரத்தின் பரப்பிகளாக மாற்றி அகமகிழ்ந்தன.

அந்நறுக்குகளின் வழி ஹாரி மிகப்பிரம்மாண்டமான ஒரு ரசிகர் உலகத்தை இன்னமும் தன் கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்றாகவே எனக்கு தோன்றியது. ஹாரிபொட்டரின் நிறைவுப்பகுதியின் சர்வதேச முதற்காட்சிக்கு இங்கிலாந்தில் கூடிய சர்வதேச ரசிகர் கூட்டம், அதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இடம்பெற்ற நள்ளிரவுக் காட்சிகளின் பின்பான ரசிகர்களின் எதிர்வினைகள் யாவும் ஹாரிபொட்டரின் இறுதிப்பகுதியின் புகழை மட்டுமே பாடின அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் புகழ் பாடப்பட்ட எதிர்வினைகளை மட்டுமே காட்டின. யாவரும் ஒரு உலகலாளவிய வியாபாரத்தில் அறிந்தோ அறியாமலோ பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றாக எனக்கு தோன்றியது ஆனால் இவ்வியாபாரத்தின் லாபத்தில் மட்டும் யாவர்க்கும் பங்கு கிடைப்பது இல்லை.

ஹாரிபொட்டர் இறுதி நாள் படப்பிடிப்பின் பின்பாக தான் கண்ணீர் விட்டு அழுததாக ஹாரிபொட்டர் வேடமேற்ற நடிகர் டானியல் ராட்க்ளிஃப் ஒரு பேட்டியில் கூறுவதை நான் பார்த்தேன். டானியல், நீங்கள் மட்டும் அழவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா இல்லை அனுதாபக் கண்ணீரா என்பது குறித்து எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இத்துடன் திரைப்படத்தொடர் முடிந்ததே என்பது என்னைப் பொறுத்த வரையில் ஆனந்தக் கண்ணீரிற்கான ஊக்கிதான்.

இவ்வளவு புகழ்ச்சிகளின் மழையிலும், பாராட்டுக்களின் அரவணைப்பிலும், ரசிகர்களின் பித்துவத்திலும் ஊறித்திளைத்த ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதி, வரைகலை உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சில காட்சிப் படைப்புக்களையும், செவ்ரெஸ் ஸ்னேப் சம்பந்தமான உணர்சிகரமான தருணங்களையும், அவ்வப்போது அருமையாக ஒலிக்கும் இசையையும் தவிர்த்து என்னைப் போன்ற ரசிகன் ஒருவனின் எதிர்பார்ப்பின் இறுதிக் குவளையையும் ஏமாற்றத்தால் மட்டுமே நிரப்பும் மந்திரத்தையே தன்னில் கொண்டிருக்கிறது. வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் அழிக்கப்படுகையில் அவன் பலவீனமுறுவதைப் போலவே இத்திரைப்படமும் தன் பலத்தை இழந்து கொண்டே இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இடிந்து நொறுங்கிக் கொண்டேய்ய்ய்ய்ய்ய்ய்யிருக்கும் மந்திரவாதிகளின் கல்லூரி, விறுவிறுப்பற்ற மோதல் காட்சிகள், முகத்தில் இழுப்பொன்று இழுத்துக் கொண்டே குச்சிப்பொடி மந்திரம் காட்டும் ஹாரி மற்றும் அவன் சகாக்கள், பெண் சாயம் பூசிய குரலில் தன் மேலங்கியை தடவிக் கொண்டு நாகினிப் பாம்பை தன் பின்னால் இழுத்துச் செல்லும் அபத்தமான ஒரு வோல்டெர்மோர், இழு இழுவென இழுக்கப்படும் உச்சக்கட்டக் காட்சிகள் என மேலதிகமாகவும் சில குவளைகளை ஏமாற்றத்தால் நிரப்பும் சக்தி வாய்த்திருப்பது இத்திரரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. அன்புத் தம்பி ஹாரி, RIP. [*]

6a00e5510dc3dd88330120a5718d0f970b-800wiகடந்த நாட்களில் Tim Powers எழுதிய The Anubis Gates எனும் புதினத்தை படித்து முடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. காலத்தில் பயணித்தல் எனும் கருவை எடுத்துக் கொண்டு டிம் பவர்ஸ் ஒரு சுவையான நாவலை 1983 களில் எழுதியிருக்கிறார் என்பதுதான் இந்நாவலைப் படித்து முடித்த பின்பாக எனக்கு தோன்றிய எண்ணமாகும்.

1983ல், டாரோ கொச்ரான் எனும் செல்வந்தனால் இங்கிலாந்திற்கு வருவிக்கப்படுகிறான் 19ம் நூற்றாண்டு இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்து நூல்களை எழுதும் பிராண்டேன் டொய்ல் எனும் எழுத்தாளன், காலத்தில் பயணிக்கும் ஒரு உத்தியை அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கண்டு பிடித்திருக்கும் செல்வந்தன் டாரோ, 19ம் நூற்றாண்டை நோக்கி சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்க விரும்புகிறான். இப்பயணிகளிற்கு 19ம் நூற்றாண்டின் இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்த ஒரு வழிகாட்டியாக இருக்க பிராண்டேன் டொய்ல் வேண்டிக் கொள்ளப்படுகிறான். செல்வந்தன் டாரோவின் நிபந்தனைகளிற்கு சம்மதித்து காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் [ கதையில் தாவுதல் எனும் சொல்லே பிரயோகிக்கப்படுகிறது] பிராண்டன் டொய்ல், எதிர்பார்க்க முடியாத சம்பவங்களின் நிகழ்வுகளால் மீண்டும் 1983க்கு திரும்ப இயலாது 1811ல் இங்கிலாந்தில் அகப்பட்டுக் கொள்கிறான். பிராண்டன் டொய்லின் கதை என்னவானது என்பதை மரபான கதை சொல்லலில், விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் கதாசிரியர் டிம் பவர்ஸ்.

காலத்தில் பயணம் செய்தல் குறித்த தர்க்க பூர்வமான வாதங்களை நாவலில் – ஒரு அத்தியாயம் தவிர்த்து- அதிகமாக முன்வைக்காதது என் போன்ற வாசகனிற்கு டிம் பவர்ஸ் வழங்கியிருக்கும் ஒரு வரம். மிகவும் தெளிவான எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான கதை சொல்லலை நகைச்சுவையுடன் இந்நாவலில் கையாண்டிருக்கிறார் டிம் பவர்ஸ்.

எகிப்திய கடவுள்கள் மற்றும் தொன்மம், மந்திரவாதிகள், கறுப்பு மாந்தீரிகம், நரநாய்கள், கூடுவிட்டு கூடு பாய்தல், ரகசிய சகோதரத்துவங்கள், 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பிச்சைக்கார மற்றும் திருடர் குழு தலைவர்களின் அட்டகாசமான நடவடிக்கைகள், மந்திரத்தால் உருவாக்கப்படும் மனித நகலிகள் என படிக்க படிக்க சுவையையும் வியப்பையும் அத்தியாத்திற்கு அத்தியாயம் தவறாமல் கதையை நகர்த்துகிறார் டிம் பவர்ஸ். கதையின் இறுதி அத்தியாயம் வரை பிராண்டேன் டொய்ல் குறித்த மர்மத்தை அவர் வாசகனிடம் சரியாக ஊகிக்க விடுவதேயில்லை. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிஜக் கவிஞர்களையும், 19ம் நூற்றாண்டின் முன்பான எகிப்தின் வரலாற்றையும் தகுந்த வகையில் அவர் கதைகூறலில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில மரபிலக்கிய பாணியில் கூறப்பட்டிருக்கும் இக்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. டிம்பவர்ஸ் மாயப்புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதுடன் இவர் எழுதிய On Stranger Tides எனும் நாவலே பிரபல கடற்கொள்ளையன் ஜாக் ஸ்பாரோவின் சமீபத்திய திரைப்படத்தின் திரைக்கதைக்கு உதவியாக அமைந்தது என்பதும் உபரியான தகவல்களாகும்.

Sunday, July 10, 2011

அரியணை ஆட்டம்


மாயப்புனைவு ஒன்றினது ஆரம்ப பக்கங்கள் அதனைப் படிக்க ஆரம்பிக்கும் வாசகன் மனதை விளைச்சலிற்கு தயாராகவுள்ள உள்ள ஒரு நன்னிலம் போல் அரவணைத்துக் கொள்ளல் வேண்டும். வாசகன் மனதில் அந்த ஆரம்ப பக்கங்கள் விதைக்கும் எதிர்பார்ப்புகளே அவனை ஆர்வத்துடன் தொடரும் பக்கங்களை நகர்த்திட பெரிதும் உதவுகின்றன. பரந்த ஒரு வாசகப் பரப்பை கொண்டிருக்கும் மாயப்புனைவுவானது தன்னை ஏனைய மாயப்புனைவுகளில் இருந்து வேறுபடுத்திக் கொள்ளவும், அந்த வேற்றுமைகளை வாசகனிடம் சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டிய தன்மையை கொண்டதாகவும் இருத்தல் அதன் வெற்றிக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். George R.R. Martin படைத்திருக்கும் A Song of Ice and Fire நாவல் தொடரின் முதல் புத்தகமான A Game of Thrones மாயப்புனைவொன்றின் பணியை கச்சிதமாக செய்து முடிக்கிறது.

ஏழு ராஜ்யங்களின் மன்னனாக முடி சூடிக்கொண்ட ராபார்ட் பராத்தியோன் அகால மரணமடைந்துவிட, அவன் அரியணையை கைப்பற்றி அதிகாரத்தை தம் வசப்படுத்திக் கொள்ள பிரபுக் குடும்பங்களினிடையே நடக்கும் போட்டியே இம்முதல் பாகத்தின் பிரதான அம்சமாகும். ஆனால் அப்போட்டியானது மன்னன் ராபார்ட்டின் மரணத்தின் முன்பே ஆரம்பமாகி இருக்கிறது.

பனிக்காலமோ, வசந்த காலமோ எல்லைகள் இன்றி நீண்டு செல்லக்கூடிய ராஜ்யமொன்றின் வடக்குப் பகுதியில் பனிக்கட்டியாலான எல்லைச்சுவரிற்கு அப்பால் இருக்கும் அடர் வனமொன்றில் ஆரம்பிக்கும் கதை, அவ்வனத்தில் நிகழும் அசம்பாவிதங்கள் மூலமாக வாசகன் மனதில் மாயத்தின் மர்மத்தை மெல்லிய இழையொன்றால் முடிச்சாக்கி விடுகிறது. வழமையான மாயப்புனைவுகளில் காணக்கிடைப்பது போல் விந்தை மனிதர்களும், அதிசய சக்திகளும், வினோத சிருஷ்டிகளும் பக்கத்திற்கு பக்கம் ஜார்ஜ் மார்ட்டினின் கதையில் காணக்கிடைப்பதில்லை. ஆனால் மாயமும் மந்திரமும் உண்டு என்பதை வாசகன் மனதில் ஒரு சந்தேகமாக ஊன்றி விட்டு, யதார்தமாக கதையை நகர்த்த ஆரம்பித்து விடுகிறார் கதாசிரியர் மார்ட்டின்.

பிரபுக்களின் குடும்பங்கள் வழியாக நாவலில் கதையை நகர்த்தி செல்கிறார் மார்ட்டின். பாத்திரங்களின் பெயர்களே அத்தியாயங்களின் தலைப்பாக இடம்பிடித்துக் கொள்ள ஏழு ராஜயங்களின் ஆரம்ப வரலாற்றையும், அதன் ஆதிகுடிகளான வனக்குழந்தைகள் எவ்வாறு அழிக்கப்பட்டார்கள் என்பதையும், வனக்குழந்தைகளின் அழிப்பின் பின்பாக ஏழு ராஜ்ஜயங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த ராஜ குடும்பமான டார்காரெயன்களினது அழிப்பையும், ஏழு ராஜ்யங்களின் தற்கால மன்னனான ராபார்ட் பராத்தியோன் எவ்வாறு இறுதி டார்காரெயன்களை வெற்றி கொண்டு அரியணையைக் கைப்பற்றினான் என்பதனையும் தொய்வுகள் ஏதுமின்றி விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார் மார்ட்டின்.

வழமையாக மாயப்புனைவில் காணப்படாத குரூரமும், ரத்தமும், காமமும், அதிகாரத்திற்கான வெறியும் வெகு இயல்பாக கதையின் வரிகளில் குடியேறி வாசகன் ஆர்வத்துடன் பக்கத்தை திருப்ப செய்து விடுகிறது. வார்த்தைகளையும், வரிகளையும் கண்டிப்பான முறையில் கதையிலிருந்து விலகாதவாறு எழுதுவதில் மார்ட்டின் அபார வெற்றி விடுகிறார். மிக முக்கிய நாயகர்களாக அறிமுகமாபவர்களிற்கு அவர் வழங்கும் முடிவுகள் வாசகர்களிற்கு அதிர்ச்சியை எதிர்பாராச் சுவையாக வழங்குமெனில் அவையே அடுத்து நடக்கப்போவது என்ன எனும் ஆர்வத்தனலையும் அவர்கள் மனதில் உப்பி ஊதி விடுகின்றவையாக அமைகின்றன.

A_Game_of_Thrones_Genesis_Art01

கதையின் முதல் பாகத்தில் பலபாத்திரங்கள் அறிமுகமானலும் என் மனதைக் கவர்ந்த சில பாத்திரங்கள் குறித்து சில வரிகளை எழுதி விடுகிறேன். கதை ஆரம்பிக்கும் வடக்கு ராஜயத்தின் ஆண்டகையான ஸ்டாக் பிரபுவிற்கு திருமண பந்தம் இன்றி பிறந்த பையான ஜொன் ஸ்னோ, கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே என் மனதைக் கவர்ந்து விட்டான். திருமண பந்தமின்றி பிறக்கும் குழந்தைகளிற்கு குடும்ப பெயரிற்கு பதிலாக ஸ்னோ [ Snow ] எனும் பெயர் பொதுவான ஒரு பெயராக வடக்கு பகுதி ராஜ்யத்தில் வழக்கத்தில் இருந்து வருகிறது. தன் தந்தையின் அருகில் வாழ்ந்தாலும் கூட தான் முழு உரிமைகளும் அற்ற ஒருவன் என உணர்ந்த நிலையில் வாழ்ந்து வரும் ஜொன் ஸ்னோ பாத்திரம் மனதில் இலகுவாக பதிந்து விடுகிறது. அதேபோல் கதையில் இடம்பிடிக்கும் அமானுடங்களை எதிர் கொண்டு வெல்லும் முதல் பாத்திரமாக ஸ்னோ சித்தரிக்கப்படுகிறான். கதையில் மாயத்தின் மந்திரத்தின் பங்கு சிறிதுதான் ஆனால் அவை பிரசன்னமாகும் தருணங்கள் அருமையாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. மன்னன் ராபார்ட்டின் அகால மரணத்தின் பின்பாக நிகழும் அரியணைக்கான போட்டியில் நிகழும் யுத்தங்களில் கலந்து கொள்வதை தெரிவு செய்யாது பனியாலான நீண்ட எல்லைச் சுவரின் பின்பாக காத்திருக்கும் அடர்ந்த ஒரு குளிர்காலத்தையும் அது தன்னுடன் எடுத்து வரக்கூடிய அபாயங்களையும் அமானுடங்களையும் எதிர்த்துப் போராட தயாராகி நிற்கும் ஸ்னோ கதையின் சிறப்பான பாத்திரங்களில் ஒருவன் ஆவான்.

டார்காரெயன்கள் ராஜ வம்சத்தின் இறுதி இளவரசியாக அறிமுகமாகும் டேனி [Daenerys] , தன் சகோதரனுடன் ஒடுங்கிய கடல் தாண்டிய பென்டோஸ் எனும் தேசத்தில் வாழ்ந்து வருபவள். தான் மூதாதையர் இழந்த ஏழு ராஜ்ஜயங்களையும் மீண்டும் வென்று மன்னனாக முடிசூட வேண்டும் என்பது டேனியின் சகோதரனான விசெரிஸில் ஒரு வெறியாகவே வளர்ந்து வருகிறது. பதின்மூன்று வயதான தன் தங்கையை குதிரைப் பிரபு ஒருவனிற்கு மணம்முடித்து வைத்து குதிரைப்பிரபுவின் வீரர்களையும் உதவியையும் பெற்று ஏழு ராஜ்யங்களை கடல் கடந்து சென்று வென்றிடும் வெறியோடு அலையும் இறுதி ட்ராகன் என தன்னைக் கூறிக் கொள்ளும் விசெரிஸ், அதற்காக தன் தங்கையை குதிரைப் பிரபுவோடும், அவன் வீரர்களோடும், அவ்வீரர்களின் குதிரைகளோடும் புணர வைக்க சிறிதும் தயங்காதவன். ஆனால் குதிரைப் பிரபுவை திருமணம் செய்து கொள்ளும் டேனி மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள். திருமணப் பரிசாக அவளிற்கு வழங்கப்பட்ட மூன்று ட்ராகன் முட்டைகள் தம்மில் ஒரு ரகசிய மர்மத்தை வசீகர வண்ணமாக பொதித்து வைத்திருக்கின்றன. டேனி எதிர்பார்த்த எல்லாம் அவளிற்கு கிடைக்கிறதா என்பதை விட டேனி எவ்விதமான ஒரு ஆளுமையாக மாற்றம் கொள்கிறாள் என்பதுதான் இப்பாகத்தின் உச்சபட்ச ஆச்சர்யம். குதிரை பிரபுக்களை தொடரும் ஜனங்களின் வினோத பண்பாடுகள், பென்டோஸ் தேசத்தின் பல இன மக்களின் ஆச்சர்யமான வழக்கங்கள், கறுப்பு மந்திரம், காமம், ரத்தம் என அட்டகாசமாக செல்லும் இப்பகுதி கதையில் தனியாகவே கூறிச்செல்லப்பட்டாலும் நாவலின் அனைத்துப் பகுதிகளையும் அடித்துப் போட்டு விடும் சுவையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. கதையில் ட்ராகன்கள் இருக்கிறதா என என் நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பினார், படு அட்டகாசமான, நாவலின் இறுதி அத்தியாயத்தில் அதற்கு விடை இருக்கிறது என்பதுதான் அவரிற்கு என் பதில். இந்நாவலின் மிகச்சிறப்பான பாத்திரமாக டேனி உருப்பெற்று நிற்பதும் அந்த இறுதி அத்தியாயத்தில்தான்.

iron-throneமன்னன் ராபார்டின் மனைவி செர்ஸி, லேனிஸ்டர் எனும் பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்தவள். லேனிஸ்டர் குடும்பம் கதையில் வீரமும், சதிக்குணமும் கொண்ட ஒரு குடும்பமாகவே சித்தரிக்கப்படுகிறது. செர்ஸியுடன் கூடப் பிறந்த சகோதரன்களில் ஒருவன் குள்ளன். அவன் பெயர் தியோன். குள்ளனாக இருப்பதால் தன் தந்தையால் ஒதுக்கப்படும் தியோன் கதை நெடுகிலும் வாசகன் மனதில் உயர்ந்தவனாகிக் கொண்டே செல்வான். ஒதுக்கப்பட்டவர்களை அரவணைத்துக் கொள்ளும் அவன், தனக்குரிய அங்கீகாரத்தை ஒதுக்கபட்ட இனத்தின் வழியாகவே வென்றெடுப்பான். நகைச்சுவையும், யதார்த்தமும், மனதை தொடும் உணர்வுகளுமாக இப்பாத்திரம் அருமையான ஒன்றாக கதையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஜார்ஜ் மார்டினின் எழுத்துக்கள் சற்று அவதானத்தை வேண்டும் வகையை சார்ந்தது. அவரின் வரிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அர்த்தங்களையும் உணர்ந்து படிக்கையில் கதையைப் படித்தல் ஒரு சுகமான அனுபவமாக மாறி புத்தகத்தை பிரியமான ஒன்றாக மாற்றியடிக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்களிலேயே மான் கொம்புகள் வயிற்றில் புதைந்து உடைந்த நிலையில் இறந்து கிடக்கும் பனி ஓநாய் ஒன்றினதும் அதன் பரிதவிக்கும் குருளைகளையும் வைத்தே கதை எப்படி நகரும் என்பதை காட்டியிருப்பார் மார்ட்டின் [ ஓநாய் மற்றும் மான் ஆகியவை கதையில் இடம் பிடிக்கும் இரு பிரதான குடும்பங்களின் இலச்சினைகள் ஆகும் ]. யார் நல்லவர், யார் கெட்டவர் எனும் எண்ணங்களிற்கே இடம் தராத வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியின் முன்பாக எந்த மனிதனும் ஞானியல்ல என்பதை தெளிவாக்குகிறார் மார்டின். ஓற்றர்கள், தளபதிகள், யுத்தங்கள், யுத்த தந்திரங்கள், விலை மாதர்கள், சதிகள், எதிர்பாரா திருப்பங்கள், அமானுடங்கள், வேறுபட்ட கடவுள் நம்பிக்கைகள் என வாசகனை முழுமையாக திருப்திபடுத்தும் இந்நாவல் மாயபுனைவுகளை விரும்பும் ரசிகர்கள் தவற விடக்கூடாத ஒன்று என்பேன். [****]

மார்டினை படித்து முடித்ததும் அவர் தொடர் நாவலின் இரண்டாம் பாகத்தை படிக்க மனம் விரும்பினாலும் மாயப்புனைவை படிக்காது வேறொன்றை படிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு வந்திருந்தேன். ஸ்டீபன் கிங்கை நான் தற்போது படிப்பது இல்லை. அவரின் சில நாவல்கள் எனக்கு பிடித்தவையாக இருந்தாலும் அவர் தற்போது எழுதும் நாவல்கள் என் ரசனையை தாண்டியுள்ளவையாக இருக்கின்றன என்பதை நான் அனுபவத்தால் உணர்ந்திருந்தேன். ஆனால் இன்றும் அவர் நாவல்கள் பெஸ்ட் செல்லர்களாகிக் கொண்டுதான் இருக்கின்றன. அவரின் எழுத்தை ரசிப்பதற்கென நிரந்தரமாக ஒரு மாபெரும் ரசிகர் படையே உள்ளது போலும். நண்பர் ஒருவர் கிங்கின் Bag of Bones படித்துக் கொண்டிருக்கிறேன் அதன் ஆரம்ப பக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என அந்நாவலை எனக்கு பரிந்துரைத்தார். நல்ல நாவல் என ஒன்றை ஒருவர் பரிந்துரைக்கையில் அதனை முயற்சி செய்து பார்ப்பது எனக்கு பிடித்தமான காரியங்களில் ஒன்றாக எப்போதும் இருக்கிறது. எனவே அந்நாவலைப் படிக்க ஆரம்பித்தேன்.

9780340951422Bag of Bones நாவலின் கதை, தன் மனைவியை பறிகொடுத்த ஒரு கதாசிரியனின் உணர்வுகளை அதன் ஆரம்ப பக்கங்களில் விரிக்கிறது. தன் மனைவியின் மரணத்தின் பின்பாக அவள் தன்னிடம் கூறாது மறைத்திருந்த ஒரு விடயம் கதாசிரியன் மைக் நூனான் மனதை சந்தேகத்தால் அரித்தாலும் தன் மனைவியைப் பிரிந்த ஏக்கமும், அவள் மீதான அவன் அன்பும் அப்பக்கங்களில் சிறப்பாக கூறப்படுகின்றன. இந்நிலையில் கதாசிரியனான மைக் நூனானிற்கு கற்பனை தடை உருவாகி அவனால் புதிய படைப்புக்களை உருவாக்க முடியாத சூழ்நிலை ஒன்று உருவாகிறது. ஓய்வை நாடும் மைக், தான் வாழும் நகரத்தை விட்டு தன் விடுமுறைக்கால வாசஸ்தலமான Sara Laughs எனும் வீட்டிற்கு செல்கிறான். அங்கு சென்ற சிறிது காலத்திலேயே அவ்வீட்டில் அவன் தனியாளாக இல்லை என்பதை நிரூபிக்கும் சில சம்பவங்கள் நிகழ்ந்தேறி விடுகின்றன.

இந்த முதல் திருப்பத்திற்கு வருவதற்கே வாசகன் ஏறக்குறைய 170 பக்கங்களை தாண்டி வர வேண்டியிருக்கிறது, அதன் பின்கூட வேகமாக சில தருணங்களிலேயே கதை நகர்கிறது என்பது வேதனையானதே. மனதை தொடும் சில பக்கங்கள் இருந்தாலும், குழந்தை ஒன்றின் மீதான ஏக்கத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தும் அருமையான சில தருணங்கள் இருந்தாலும், சாரா லாஃப்ஸ் எனும் அவ்வீட்டில் இருக்கும் மர்மங்கள் விடயத்திலும் திகிலிலும், அதற்கான காரணங்களிலும் சலிக்க வைத்து விடுகிறார் ஸ்டீபன் கிங். மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி எம்மை அழைத்து செல்லும் ஒருவர் ஒரு மோசமான சிட்டை எமக்கு அறிமுகப்படுத்தும் போது உருவாகும் அந்த உணர்வு ஸ்டீபன் கிங்கின் பாக் ஆஃப் போன்ஸின் இறுதிப் பக்கங்களில் உத்தரவாதமாக கிடைக்கிறது. இக்கதையை படித்ததால் ஏற்பட்ட ஒரு நன்மை என்னவெனில் ஸ்டீபன் கிங் எனும் பிரபல எழுத்தாளரின் படைப்புக்களை இனி நான் படிக்கவே போவதில்லை எனும் உறுதியான தீர்மானம்தான். [*]

Saturday, June 11, 2011

காலச்சக்கரம்: உலகத்தின் விழிகள் முதல் ஒளியின் நினைவுகள் வரை

wot02-the-great-hunt

எழுதியவர்.....ஜோஸ்ஷான்

காலச் சக்கரம் சுழல்கிறது, யுகங்கள் வந்து செல்கின்றன, நினைவுகள் வரலாறாகின்றன.. வரலாறு தொன்மமாக மாறுகிறது, தொன்மம் பழங்கதைகளாகிறது. பழங்கதைகள் மறைந்து புதிய யுகம் துவங்குகிறது. மூன்றாம் யுகம் என சிலரால் அழைக்கப்பட்ட ஒரு யுகத்தில், வரவிருக்கும் ஒரு யுகத்தில், ஏற்கனவே கடந்து சென்ற ஒரு யுகத்தில் பாண்டிச்சேரியின் பொந்து ஒன்றின் மீதாக ஒரு காற்று எழுந்தது. அந்த காற்று ஆரம்பம் அல்ல. காலச்சக்கரத்தின் சுழற்சிகளிற்கு ஆரம்பம் என்பதோ முடிவென்பதோ கிடையாது. ஆனால் அது ஒரு ஆரம்பமே…..

பாண்டிச்சேரியில் ஒரு பொந்து இருக்கிறது. அதில் என் நண்பர் ஒருவர் வசித்து வருகிறார். பொந்து என்றவுடன் முயல், கிளி, ஹாபிட்டுகள், ஆந்தைகள் வாழும் பொந்தாக அந்தப் பொந்தை கற்பனை செய்து கொள்ளாதீர்கள். என் நண்பர் வாழ்ந்து வரும் பொந்தில் பயங்கரமான வசதிகள் உண்டு. ஹோம் சினிமா, காபரே, காசினோ, காக்டெயில் பார், குளியல் அறை… காவல் துறையில் முறையீடு செய்யாத பணிப்பெண்கள், ஒரு அரிய நூலகம் என அப்பொந்தில் சொகுசிற்கு குறைவில்லை. அங்குள்ள பஞ்சணையின் மென்மை அறியா உலகப் பைங்கிளிகளும் உண்டோ என்பது மூன்றாம் யுகத்தின் முதுமொழி.

wotcoverநல்லதொரு இளம் மழைநாளில் மழையைப் பார்க்காமலேயே அதை தன் அகக் கண்களால் கண்டவாறு நூல்களை படிப்பது அவரிற்கு பிடித்தமானது. அவ்வேளையில் அவர் புகைக்கும் சுங்கானிலிருந்து வெளியாகும் புகையானது கற்பனையின் மேகக்கூட்டமாக பொந்தின் மேல் உலாச்செல்வதுண்டு. மழைமேகங்களும், புகைமேகங்களும் இணைந்து இழைய உருவாகும் அந்த மங்கிய ஒளியில் அவர் இதழ்கோடிகளில் பூக்கும் சிறு புன்னகை கவர்ச்சியின் இலக்கணமாக கொள்ளப்படலாம். ஆனால் அதை அவர் மென்மையாக மறுத்துவிடுவார். அவரிடம் இருக்கும் சுங்கான் நீண்டது. அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. ஆதிமொழியில் அதில் வரிகள் உண்டு.

மழை தெரியும் ஜன்னலின் அருகில் சரா கண்டத்து விந்தை மிருகமொன்றின் தந்தத்தால் உருவாக்கப்பட்ட சாய்வு நாற்காலியில் அமர்ந்து அவர் கற்பனை உலகினுள் வாழ்ந்திருப்பார். அருகில் உள்ள சிறிய மேசையில் நிலாக்கல்லில் உருவாக்கப்பட்டு வண்ணக் கற்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் வாசனைச் சரக்குகள் கலக்கப்பட்ட இதமான சூடு கொண்ட திராட்சை மது அவர் இதழ்களின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும். இவ்வாறான அவரின் இனிய வாழ்க்கையில் ஒரு இடையூறு சிதறிய ஒரு எரிமலைக்குழம்புத் துளியாக அவர் மேல் வந்து இறங்கியது.

அரிய நூல்களை, ஓய்வுநாள் சந்தைகளில் தேடிப் பார்த்து வாங்குவதில் அவர் ப்ரியம் கொண்டவர். நூல்களின் பின்னட்டைகளின் இருக்கும் பெண் நாவலாசிரியைகளின் நிழற்படங்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் அந்நூல்கள் அருமையானவை என்பதை தீர்க்கதரிசனமாக கூறும் திறமை அனுபவத்தால் அவரிடம் கைகூடியிருந்தது. இவ்வாறாக அவர் சேகரித்த அரிய நூல்கள் பொந்து நூலகத்தின் இடப்பரப்பை முழுமையாக பிடித்துக்கொண்டு, பொந்தின் பொதுவெளியில் தன் ஆக்கிரமிப்பை நிகழ்த்த ஆரம்பித்த வேளையில்தான் பொந்தில் நீ அல்லது புத்தகங்கள் எனும் ஒரு எல்லையை அவர் அன்பு அன்னை கொண்டு வந்தார். பின்னட்டை நாவலாசிரியைகளை பிரிய வேண்டிய வேதனை அவரை புதிய விதையொன்றின் நுண்ணிய வேர்களாக துளைபோட ஆரம்பித்த கணமது. பின்னட்டையில் நிழற்படங்கள் இல்லாத அரிய நூல்களை அவர் தானம், விற்பனை, தகனம் செய்ய ஆரம்பித்தார். சந்தைகளிலும், ஆதி நூலகங்களிலும் தேடித் தேடி அவர் சேகரித்து வைத்திருந்த நூல்களை பிரிவதென்பது காதலியைப் பிரிவதை விட வலியை தருவதாகவே அவர் உணர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் அவரது சேகரிப்பில் இருந்த The Wheel of Time எனும் பெருந்தொடர் நாவலின் மீது அவர் கவனம் வீழ்ந்தது.

459px-Re-learning_the_sword_03gallery_19580_109_156923Perrin_wolvesசுவைக்காமல் கனியை எறியாதே, ருசிக்காமல் கன்னியை துரத்தாதே, படிக்காமல் நூலை வீசாதே என முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். கனி என்றால் ஒரு அல்லது இரு கடி, கன்னி என்றால் ஒரு அல்லது இரு….., நூல் என்றால் ஒரு பத்து அல்லது நூறு பக்கம் என்பதை அவர் எல்லையாக கொண்டிருந்தார். காலச்சக்கரத்தை அவர் படிக்க ஆரம்பித்தார். முதல் ஐம்பது பக்கங்களை தாண்டியபின்பாக அவர் மீளாப்பிரமை ஒன்றில் நுழைந்திருந்தார். அதன் சுழற்சியில் இருந்து அவர் இன்னமும் வெளிவரவில்லை. சிட்டு ஆய்வாளாராக மரங்களின் மென்பச்சை பாசி படர்ந்த கிளைகளில் தன் உடலைக் கிடத்தி விழியை அகல விரித்துக் காலத்துடன் காய்ந்து கொண்டிருந்த தன் நண்பரும் இந்த புதிய உலகில் வாழ வேண்டி அவரிடம் காலச்சக்கர சுழலில் சிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

பங்குனியில் கிளைகளில் சிட்டுக்கள் அமர்வது அரிதான ஒன்றாக மாற ஆரம்பித்திருந்தது. நான் ஒளிந்திருக்கும் கிளைகளை சிட்டுக்கள் ஏனோ தவிர்க்கின்றன எனும் ஒரு உணர்வு இலைகளின் நாடிகளில் ஊர்ந்து செல்லும் எறும்பின் பாதத்தின் குறுகுறுப்பாய் என்னுள் ஊர்ந்தது. இதனால் என் வாசிப்பில் ஒரு வெறுமை உருவாகி இருந்தது. தொடர்சியாக நீளும் ஒரு வரியில் விழும் வெட்டுப்போல. என்ன வாசிக்கலாம் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாத ஒரு நிலை. அப்போது நண்பர் கூறினார், காலச்சக்கரத்தை படியுங்களேன் என்று. இன்றுவரை அதன் சுழற்சியில் இருந்து என்னால் மீண்டு வர இயலவில்லை…..

ஒளிக்கும், இருளிற்குமான போராட்டம் என்பது மிகைபுனைவுகளின் ஒரு முக்கிய கூறாக இருந்து வருகிறது. ஒளி என்பதை நன்மை என்பதாகவும் இருள் என்பதை தீமையாகவும் ஒருவர் உருவம் செய்து கொள்ளக்கூடும். அதுவே சரியாகவும் இருக்கக்கூடும். இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் வெவ்வேறு கதைகளாக வடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒளியின் ஆசிபெற்று போராடுபவர்கள், இருளின் ஆக்கிரமிப்பில் போராடுபவர்கள், இவை இரண்டிற்குமிடையில் சிக்கி கொண்டவர்கள், இருள், ஒளி, நன்மை, தீமை என்பதன் கருத்தாக்கத்தால் பாதிக்கப்படாதவர்கள் என பாத்திரங்கள் பல வகைகளாக உருவாக்கப்படுகிறார்கள். எம் ரசனைக்கேற்ப பாத்திரங்களை எம்மால் ரசிக்கவோ அல்லது அப்பாத்திரத்தை சிறப்பான ஒன்றாகவோ நாம் கருதிக்கொள்ள முடிகிறது. இங்கு ஒளியும் இருளும் ஒருவரின் ரசனைக்கும் தேர்விற்கும் தடையாக வருவதில்லை. ஒளியைப் போலவே இருளிலும் உயிர் இருக்கிறது. அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் பெரும்பாலான போராட்டங்கள் ஒளியின் பார்வையிலேயே விவரிக்கப்படுகின்றன. ஒரு வாசகனின் ரசனை அவனை ஒளியின் பிரகாசமான வீதிகளிலோ அல்லது இருளின் ரகசிய நிலவறைகளினுள்ளோ அவன் காத்திருந்த சுவையைக் காட்டிடக்கூடும்.

180px-Min622px-ElayneAviendhaநகரங்களின் சுவடு படாத ஒரு மலையோர கிராமத்தில் வாழ்ந்து வரும் சாதாரணமான மூன்று இளைஞர்கள், இரு இள நங்கைகள் ஆகியோரின் வாழ்க்கையானது விதி இழைக்கும் கோலத்தால் எவ்வாறு மாற்றம் கொள்ள ஆரம்பிக்கிறது என்பதும் அந்த விதிக்கோலத்தில் இழைக்கப்படும் நெய்தல்களால், அது உருவாக்கும் வடிவங்களால் அவர்களை சுற்றியுள்ள உலகம் எவ்வாறு உருமாற்றம் கொள்கிறது என்பதும் The wheel of Time எனும் மிகைபுனைவு நாவல் வரிசையின் மையமான அம்சமாக உள்ளது என்பது என் புரிதல். ராண்ட் அல்தோர், மாத்ரிம் கோதன், பெரின் அய்பேரா எனும் இளைஞர்கள், எக்வின் அல்வெர், நிய்னெவ் அல்மெய்ரா எனும் நங்கைகள், இவர்களை பிரதான பாத்திரங்களாகக் கொண்டே எமொன்ட்ஸ் ஃபீல்ட் எனும் கிராமத்தில் கதையை தன் மாய வரிகளில் ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Robert Jordan.

பனிக்காலம் முடிவடையாமல் நீண்டு சென்று முன்வசந்தத்தை உறைய வைத்துக் கொண்டிருக்கும் காலம். தங்கள் பண்ணையில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மதுவை எமொண்ட்ஸ் ஃபீல்டில் கொண்டாடப்படவிருக்கும் முன்வசந்த வருகை விழாவிற்காக ராண்டும் அவன் தந்தையும் குதிரைகளில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஆளரவமற்ற மலைப்பாதையில் வீசும் குளிர்காற்றானது அவர்கள் இருவரும் அணிந்திருக்கும் மேலங்கிகளினுள் தம் உறைந்த கரங்களை செலுத்தி அவற்றைக் களைந்துவிட முயன்று கொண்டிருக்கிறது. ராண்டின் உள்ளுணர்வில் தான் கண்கானிக்கப்படும் உணர்வானது அந்தக் குளிரையும் தாண்டிய நுண்ணிய வருடலாக உணரப்படுகிறது. தான் கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ராண்ட், நள்ளிரவை அங்கியாக அணிந்து கரும்புரவி ஒன்றன் மீது அமர்ந்திருக்கும் ஒரு உருவத்தைக் காண்கிறான். தன் தந்தைக்கும் அவ்வுருவத்தை அவன் காட்ட முயற்சிக்கும்போது அந்த உருவம் காணாமல் போய்விடுகிறது. அந்த உருவமானது அவன் கண்களிற்கு மட்டுமே புலனாகக்கூடிய ஒன்றாகவே வாசகனிற்கு அறிமுகமாகிறது. ஆனால் காலச்சக்கரத்தின் ஆரம்பம் இதுவல்ல ஏனெனில் அதற்கு ஆரம்பமோ முடிவுகளோ கிடையாது…..

645px-NynaeveEgwene645px-Siuan2இருளிற்கும் ஒளிக்குமான போராட்டம் ஒன்றில் மனம் பிறழ்ந்த நிலையில் லுஸ் தெரென் தான் வாழும் உலகை சிதைத்துப் போடும் நிகழ்வுடனேயே காலச்சக்கரத்தின் அந்த ஆரம்பம் தொடங்குகிறது. அந்த ஆரம்பத்தை படிக்கும்போது இது என்ன குழப்ப வலையாக இருக்கிறதே எனும் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். ஆனால் அதை சில பக்கங்களில் ஆசிரியர் முடித்துவிட, விதியின் கோலத்தினுள் வாசகன் அப்பாவியாக காலடி எடுத்து வைக்கிறான்.

தர்க்கமோ, வாதமோ இப்பெருந்தொடரை அனுபவிக்க உதவப்போவதில்லை. ஏனெனில் சறுக்கல்கள் கொண்ட தொடர்தான் இது. மாறாக ஆசிரியர் தன் வரிகளில் வடிக்கும் உலகத்தை அதில் வாழும் மனிதர்களை, விந்தையான ஜீவன்களை எம்மால் கற்பனையில் உயிர்கொடுக்க முடிந்தால் இத்தொடரின் சுவை சிறப்பான ஒன்றாக இருக்கும்.

வேகக்கதைப் பிரியர்களிற்கானதல்ல இக்கதை. இக்கதையின் வேகம் வாசகனின் கற்பனையின் வேகவீச்சாலேயே தீர்மானிக்கப் படக்கூடிய ஒன்றாக அமைந்து விடுகிறது. அந்த உலகின் அழகும் கவர்ச்சியும் அதில் பொதிந்திருக்கும் இருளும் சாகசங்களும் அவனால் உருவாக்கப்படுவதே. ராபார்ட் ஜோர்டானின் வரிகள் அவன் கற்பனையில் அந்த உலகை சிருஷ்டிப்பதை இலகுவாக்கின்றன. அவன் தன் மனத்திரையில் தீட்டும் கற்பனைக் காட்சிகளின் எழிலை ஜோர்டானின் வரிகள் மெருகூட்டி தருகின்றன. வசியம் நிரம்பிய புதை மணலில் சிக்குபவனை போல ஒரு மாய உலகிற்குள் வாசகன் அனுவனுவாகச் சிக்குகிறான். அம்மாயவுலகத்தின் அறிமுகத்தில் சற்றே மூச்சுத் திணறும் அவன் பின் முழுமையாக அதை உள்வாங்க ஆரம்பிக்கிறான். அம்மாயவுலகத்தில் அவனும் ஒரு பிரஜையாகிப் போகிறான்.

ஜோர்டான் சிருஷ்டித்திருக்கும் அம்மாயவுலகம் மூன்று திசைகளில் கடலை எல்லையாகக் கொண்ட ஒரு பெரும் நிலப்பரப்பாக விரிகிறது. அவ்வுலகில் கடவுள் என்ற சொல்லை ஜோர்டான் உபயோகப்படுத்துவதில்லை. தெய்வங்களோ, தெய்வ வழிபாடுகளோ, ஆலயங்களோ அப்பெரு நிலத்தின் அடையாளங்களாக காணக்கிடைப்பதில்லை. ஆனால் சாத்தான் அவ்வுலகில் இருக்கிறான். உலகை படைத்தவர் எவரோ அவரே காலச் சக்கரத்தையும் இயக்குபவர் என ஒருவரை குறிப்பிடுகிறார் ஜோர்டான். அவரை சிருஷ்டிகர்த்தா என அவ்வுலகம் குறிப்பிடுகிறது.

சிருஷ்டிகர்த்தாவினால் அவன் சீடர்களுடன் சிறைவைக்கப்படுகிறான் இருளன். அவன் சிறையின் கதவுகள் பல பாதுகாப்பு முத்திரைகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டிருக்கின்றன. அவன் கரங்கள் உலகை தீண்டாது யுகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் யுகங்களின் கடப்புடன் இருளனின் சிறையின் முத்திரைகள் தம் வலிமையை இழக்க ஆரம்பிக்கின்றன. இருளனின் கரங்கள் வலிமை இழந்த முத்திரைகளை தாண்டி உலகினை தொட்டுப் பார்க்க தொடங்குகின்றன. காலச்சக்கரத்தை உடைத்து யுகத்தினை நிறுத்தி இருள் யுகத்தினை தனதாக்கும் தருணம் நெருங்கிவிட்டதை உணர ஆரம்பிக்கும் இருளன், தன் சீடர்களையும், அழிவை விரும்பும் இருளுயிரிகளையும், கொடூர பிறப்புக்களையும் தன் கனவின் ஆரம்ப கோலங்களை வரைபவர்களாக உலகில் உலாவரக் கட்டளையிடுகிறான். தன் திட்டத்திற்கு தடையாக இருக்கக்கூடிய மூன்று இளைஞர்களை தன் பக்கம் இழுத்துக் கொள்வதே அவன் நோக்கம். இருளன் எவ்வாறு அந்த மூன்று இளைஞர்களையும் தன் பக்கம் இழுக்க விரும்புகிறானோ அதேபோல் அந்த இளைஞர்களை ஒளியின் பாதையில் இட்டுச் செல்ல போராட தயாராகிறார்கள் ஒளியின் போராளிகள். ஒளியின் ஆசி பெற்ற போராளிகளிற்கும், இருளனின் ஏவலர்களிற்குமிடையிலான இப்போராட்டம் ஆரம்பிக்கும் இடம்தான் எமொண்ட்ஸ் ஃபீல்ட் கிராமம்.

Moiraine_Damodred672px-Lan_salibaகாலசக்கரத்தின் ஒவ்வொரு பாகமும் அதன் முக்கிய நாயகர்களான ராண்ட், மாத், பெரின், எக்வின், நிய்னெவ் ஆகியோரின் வியக்கதகு ஆளுமை மாற்றங்களையும், அவை உருவாக்கும் விளைவுளையும் சுவையுடன் எடுத்து வருகிறது. இந்தக் கதையின் முக்கிய பாத்திரமாக ராண்டையே ஜார்டான் முன்னிறுத்துகிறார். முன்னொரு யுகத்தில் தன் சொந்தங்களை அழித்து, உலகைச் சிதைத்தவனான லுஸ் தெரெனின் புதிய பிறப்பாக ராண்ட் கதையில் சித்தரிக்கப்படுகிறான். நாவல் தொடரின் மூன்றாம் பாகத்தில் அவன் குறித்த தீர்க்கதரிசனங்கள் சிலவற்றை நிகழ்திக்காட்டும் ராண்ட், த ட்ராகண் ரீபார்ன் ஆகவே பின்பு அழைக்கப்படுகிறான். அந்த பெயரைப் பெறவும் அதனை தக்க வைத்துக் கொள்ளவும் ராண்ட் நிகழ்த்தும் சாகசங்கள் சிறிதல்ல.

காலச்சக்கரத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்று முழுமுதற்சக்தி. சிருஷ்டியின் இயங்கு சக்தியாக இது கொள்ளப்படுகிறது. இந்த முழுமுதற் சக்தியானது எப்போதுமே இருவகையாக பிரிந்திருக்கிறது. ஆண்களால் கையாளப்படும் ஒரு பங்கு, பெண்களால் கையாளப்படும் ஒரு பங்கு என்பதாக அது பிரிக்கப்படுகிறது. ஆண்களினால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடின் எனவும், பெண்களால் கையாளப்படும் சக்தியின் பங்கானது சைடார் எனவும் பெயர்கொள்ளப்படும். பாதாளத்தில் புதையும் முன்பு இருளன் ஆண்கள் கையாளும் சக்தியில் தீமையை கலந்து விடுகிறான்.

ஆண்கள், பெண்கள் சிலரில் மட்டுமே இச்சக்தியை பயன்படுத்தி அதன் ஆற்றலை உபயோகப்படுத்தும் இயல்பு காணக்கிடைக்கும். ஆண்களால் கையாளப்படும் சக்தியின் பகுதியில் இருளனின் கறை படிந்திருப்பதால் அதன் தொடர்சியான உபயோகமானது ஒருவனை மனப்பிறழ்வு கொள்ளச் செய்து, விபரீதமான செயல்களிற்கு அது வழி வகுக்கும். லுஸ் தெரெனினால் நடாத்தப்பட்ட உலக சிதைப்புக்கு இதுவே காரணமாக கொள்ளப்படுகிறது. ராண்ட் அவனின் புதிய பிறப்பாக இருக்கும் பட்சத்தில் அவனை இருள் வழி இழுத்து தன் பக்கத்தை உறுதிப்படுத்த இருளன் முயல்கிறான் அதேபோலவே ராண்டிற்கு மனப்பிறழ்வு ஏற்படாத வகையில் அவன் முழுமுதற்சக்தியை உபயோகிக்க அவனை வழிநடத்தி இருளனை எதிர்த்துப் போராட வருபவர்கள் தான் ஏஸ் செடாய்க்கள். அதற்காக எவ்வித வழிமுறைகளையும் உபயோகிக்க தயங்காதவர்கள் அவர்கள். ஏஸ் செடாய்க்கள் முழுமுதற் சக்தியின் பெண்பங்கு சக்தியை உபயோகப்படுத்தி நீர் நிலம் நெருப்பு காற்று ஜீவஆவி என்பவற்றை தமக்கு சாதகமாக வளைத்து பயன்படுத்தும் திறமை படைத்தவர்கள். இவர்களின் பகடையாட்டத்தில் சிக்கிய ராண்ட் என்னவாகிறான், அவன் பால்யகால சிநேகிதங்கள் என்னவாகிறார்கள் என்பதை ஒரு வாசகன் மனக்கண்களில் உணரும் அளவிற்கு ஜார்டானின் வரிகள் அமைகின்றன.

296px-MyrddraalSeamas583px-Trolloc_salibaஒரு மலையோர கிராமத்தில் ஆரம்பிக்கும் இக்கதையானது அக்கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பாக அதன் எல்லைகளை விரித்துக் கொண்டே செல்கிறது. புதிய நிலங்கள், ராஜ்யங்கள், மனிதர்கள், தொன்மங்கள் அவர்களின் வேறுபட்ட பண்பாடுகள் என பரந்த வாசிப்பை இக்கதையின் வாசகர்களிற்கு ஜார்டான் அளித்துக் கொண்டேயிருக்கிறார். நீர் என்பது அரிதான ஒன்றாக இருக்கும் அய்ல் தேச மக்கள், எந்த இடத்திலும் நிரந்தரமாக தங்காத டிங்கர்கள் எனப்படும் ஜிப்சிகள், விருட்சங்களை பாடல் பாடியே குணப்படுத்தும் கட்டிடக் கலை வல்லுனர்களான ராட்சத ஓகியர்கள், கடல் மீதே தம் வாழ்வின் பெரும்பகுதியை நிகழ்த்தும் ஆழிசனங்கள், இருளனின் அடிபொடிகளை எல்லையை மீற விடாது போராடும் பிலைத் எல்லை கோட்டை நாடுகளை சேர்ந்த வீர இனங்கள், தமக்குரிய மண்ணை உரிமைகோரியபடியே கடல்கடந்து வரும் சீன்சான் ராஜ்யத்தினர் என பலதேச மக்களின் பண்பாடு மிகவும் விரிவாக கதையில் விபரிக்கப்படும்.

ஒரு நாட்டு மக்களின் பண்பாடுகள் குறித்து, அவர்கள் வாழ்வியல் குறித்து விபரமான தகவல்களை தருவதன் மூலம் அம்மக்களை மிக ஆழமாக வாசகன் மனதில் பதித்து விடுகிறார் ஜார்டான். ஒருதேசத்தின் நிலவியல் மீதான அவரின் வரிகள் அம்மண்ணின் சுவாசத்தை படிப்பவர்கள் மேல் படர வைக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. திருமணமான பெண்கள் பொட்டு வைத்துக் கொள்ளும் பண்பாடு மல்கிய்ர் எனும் பிரதேசத்தில் இருந்ததாக கதையில் ஒரு பகுதி இருக்கிறது. கருணா நாச்சிமான் எனும் ஏய்ஸ் செடாய் ஒரு பாத்திரமாக இடம் பெறுவார். பிலைத் எல்லை நாடொன்றின் மன்னனின் சகோதரி இவர். இவ்வாறாக பலவின மக்கள் மீதான கலாச்சார பண்பாட்டு வாழ்வியல் முறை ஒப்பீடுகளை நிகழ் உலகத்துடன் வாசகர்கள் நிகழ்த்தி மகிழலாம்.

அய்ல் தேசத்தில் ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது சாதாரணமான ஒன்று, நிர்வாணம் என்பது அய்ல்களிற்கு சங்கடம் தராதது. அய்ல் இனத்தவர் நிர்வாணத்தையும் உடையாகவே கருதுகிறார்கள். சீய்யெனார் தேசத்தில் குளியல் தொட்டியில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே நீராடலாம், நிர்வாணமாக. இவ்வகையான உயரிய பண்பாடுகள் படைத்த பல தேசங்கள் எம்முலகில் இல்லாமல் போய்விட்டதே என நல்ல மனம் கொண்ட வாசகர்களை விம்மச்செய்துவிடுகிறார் கதாசிரியர் ஜோர்டான்.

409px-Fain_salibaஅய்ல் தேசத்தை சேர்ந்தவர்களின் கவுரவம் மற்றும் கடமை குறித்த பண்பாடுகள் தலையை கிறுகிறுக்க வைப்பவை. கதைத்தொடரில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. பெண்கள் அதிகாரம் கொண்டவர்களாக, சக்தி படைத்தவர்களாக, வீரத்துடன் எதிர்த்துப் போராடுபவர்களாக, புத்தியும் தந்திரமும் கொண்டவர்களாகாவே பெரிதும் சித்தரிகப்படுகிறார்கள். பெண்களை பெருமைப்படுத்தும் ஒரு கதைத்தொடராக இது இருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. ஏய்ஸ் செடாய்களின் சதிகளும், திட்டங்களும் வியக்க வைப்பவை. ஏறக்குறைய சிஐஏ போல் இயங்கும் தன்மையை ஏஸ் செடாய்களின் தலைமையகமான வெள்ளைக்கோபுரம் கொண்டிருக்கிறது. மன்னர்களிற்கு, ராணிகளிற்கு ஆலோசனை, ஒப்பந்தங்களை இயற்றல், வேவு, ஆள்கடத்தல், கொலை என நல்லவர்களா தீயவர்களா என முடிவெடுக்க இயலாத பண்புகளை கொண்டவர்களாக அவர்கள் பாத்திரப்படுத்தப்பட்டிருப்பார்கள். இவ்வகையில் எதிர்பாராத பல திருப்பங்களை கதைக்கு தருபவர்களாக ஏய்ஸ் செடாய்க்கள் இருக்கிறார்கள். எமொண்ட் ஃபீல்டில் இருந்து வெளியேறும் இரு இளநங்கைகளும் பலமான சக்தி கொண்ட ஏய்ஸ் செடாய்களாக பின் உருப்பெறுவார்கள். அவர்கள் நிகழ்த்தும் சாகசங்கள் சில சமயங்களில் கதை நாயகர்களின் சாகசங்களை விட சிறப்பாக இருக்கும்.

கதையின் முக்கிய நாயகனாக ராண்ட் காட்டப்பட்டாலும், அவன் விதியிழையுடன் பின்னிப் பிணைந்த தோழர்களான பெரின் மற்றும் மாத் அவனைவிட சில பாகங்களில் வாசகர்களை கவர்ந்து விடுவார்கள். பெரின், ஓநாய்களுடன் உரையாடும் சக்தி கொண்டவன். அவன் உரையாடல்கள் எண்ணப் பரிமாற்றம் மூலமே நிகழும். மனிதத் தன்மை அதிகம் கொண்ட ஒருவனாகவே பெரின் சித்தரிக்கப்படுகிறான். அவனில் உள்ளிருக்கும் மிருகத்தை அவன் கட்டுப்படுத்த முயன்று கொண்டே இருப்பான். அவன் காதலி பின் மனைவியாக வரும் பைய்லுடனான அவன் ஊடல்கள் ரசிக்கப்படக்கூடியவை. அவன் முரட்டு ஆகிருதிக்கு எதிரானதாக அவன் உள்ளம் அமைந்திருக்கும்.

786px-Jeremy_Saliba_aiel_take_2Ogier_elder_rpgதொடரில் என் அபிமான பாத்திரமாக மாறிப்போனவர் மாத். சூதாட்டம், மது , மங்கை , மோதல் என பின்னி எடுக்கும் பாத்திரம் இது. மாத்தின் பாத்திரம் இப்படி ரசிக்கப்படும் ஒன்றாக மாறும் என்பது எதிர்பார்க்கவியலாத ஒன்று. கூடவே மாத் வரும் பகுதிகளில் நகைச்சுவையும் சிறப்பாக இருக்கும். இக்கதை வரிசையில் மாத்தை விட சிறப்பான நாயகனாக யாரும் எனக்கு தோன்றவில்லை. பகடையால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாயகன், தன் வாழ்க்கையையே சூதாட்டமாக எண்ணி விளையாடுவதை ஜோர்டான் தன் மாய வரிகளால் எழுதி செல்கிறார். அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் பகடைக் காயைப் போல மாத்தை உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கும், இவ்விளையாட்டில் இருந்து மாத் வெற்றி வீரனாக வெளிவரும் காட்சிகள் அதிரடியானவை, விசிலடிக்க வைப்பவை. அல்ட்டாராவின் ராணியான டைலின் மாத்துடன் கொள்ளும் காதல் அபாரமான ஒன்றாக இருக்கும். மாத் பாத்திரத்திற்கு இப்படியான ஒரு வரவேற்பு கிடைக்கும் என ஜார்டானே எதிர்பார்த்திருக்க மாட்டார்.

Darkhound532px-Draghkarநாயகர்கள் இப்படி எனில் அவர்களை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வில்லன்கள் இருக்க வேண்டுமே. வெள்ளையங்கியிணர், ட்ரொலொக்குகள் [மனித விலங்கு கலப்பினம்], இவர்களை வழி நாடாத்தும் மிர்ட்ரெய்ல்கள் எனும் விழிகளற்ற பிறப்புக்கள், ரத்தக்காட்டேரிகளை ஒத்த டிராக்ஹார்கள், கொல்லவே இயலாத கொலம் எனும் பிறவி, சாம்பல் மனிதர் எனும் உயிரற்ற கொலைஞர்கள், பாதாள நாய்கள் என பலர் நாயகர்களை கலங்க அடிப்பார்கள். இதில் ஆரம்ப நாவல்களில் கலக்கி எடுத்த ட்ரொலொக்குகள் பின்னையவற்றில் ஒதுக்கி வைக்கப்படுவார்கள் என்பது ஒரு குறை. ட்ரொலொக்குகள் முதல் பாகத்தில் அறிமுகமாகும் காட்சிதான் கதையையே ஒரு திருப்பத்திற்கும் வேகத்திற்கும் இட்டுச் செல்லும். அவர்களின் ரசிகனான எனக்கு இது திருப்தியை அளிக்காவிடிலும் பலவகையான சக்திகளை கொண்ட இருளனின் சீடர்கள், மொரிடின், சைதார் கெரான், படான் ஃபெய்ன் எனும் பாத்திரங்களினால் ஜார்டான் வாசகர்களை வியக்க வைக்க தவறுவதேயில்லை. அதேபோல் கதையில் இடம்பெறும் சிறிய பாத்திரங்களைக்கூட எதிர்பாராத விதத்தில் மறக்கமுடியாத பாத்திரங்களாக்கி விடுவதும், அவர்களை பிரதானமான பாத்திரங்களாக மாற்றிவிடுவதிலும் ஜார்டானிற்கு நிகர் ஜார்டான்தான். 1880 பாத்திரங்கள் இத்தொடரில் உண்டு என்கிறது ஒரு தகவல். ஆனால் அந்த உலகில் வாழ்பவர்களுக்கு அந்த எண்ணிக்கை ஒரு பொருட்டேயில்லை. எதிர்பாராத சந்தர்பங்களில் படு அதிரடியான திருப்பங்களை மிகவும் எளிதாக தந்து விடும் வல்லமையும் ஜார்டானிற்கு உண்டு. அது அவர் கதைகூறலின் தனித்தன்மை. அதேபோல் பல சமயங்களில் அவரின் வரிகள் அடடா போடப் படக்கூடிய அர்த்தங்களை தரக்கூடியவையாக இருக்கும்.

auteurs-robert-jordanஜார்டானின் கதையுலகில் அரூப உலகம் அல்லது கனவு உலகம் என அழைப்படக்கூடிய தெல்லொரென்ரெய்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கனவுகளில் பயணித்தல், கனவுகளில் சந்தித்தல், தேடுதல் வேட்டை நடாத்தல், வேவு பார்த்தல் என அது ஒரு மயங்கவைக்கும் பகுதியாக அமையும். ஸ்தூல உடலுடன் கனவுலகில் நுழையும் வித்தைகூட இருக்கிறது. தர்க்கங்களில் இறங்காது படித்து செல்ல வேண்டிய பகுதியிது. மிகைபுனைவில் தர்கம் என்ன தர்க்கம்!! மாற்றுலகில் நுழையக்கூடிய வாயிற்கதவுகள், ஒரிடத்திலிருந்து பிறிதொரு இடத்திற்கு தனியாக அல்லது ஒரு சேனையுடன் பயணிக்ககூடிய பயணவாயில்கள், வாளில்லாத வாள், காலநிலையை மாற்றியமைக்ககூடிய பாத்திரம் இப்படியாக எத்தனையோ எத்தனையோ. எழுதித் தீராது. அது என்னால் இயலாத காரியம்.

மொத்தத்தில் இன்று நான் மூன்றாம் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். ஜார்டானின் வர்ணனைகள் என்னை அந்த உலகில் ஒரு பிரஜையாக்கி விட்டன. அவரின் வர்ணனைகள் நீண்டவை. இது அவரின் பலம் அதேபோல் சில சமயங்களில் பலவீனம். ஆனால் அவரின் எழுத்தை சுவைத்தவர்கள் அச்சுவையை வேறெங்கும் காண்பது என்பது சிரமமான ஒன்று. மொழியை அழகாக்கி, ருசியூட்டி அதில் வாசகனை கரைத்துவிடும் மந்திரவாதம் ஜோர்டானின் எழுத்துக்களில் இருக்கிறது. அவரின் இழப்பு மாயபுனைவுகளின் பேரிழப்பு. இக்கதைதொடரில் இதுவரை வெளியாகிய பகுதிகளை படித்து முடித்துவிட்டுத்தான் வேறு படைப்புக்களை படிப்பது என்பது என் தீர்மானம். அத்தீர்மானத்திலிருந்து நான் நழுவிச் செல்லாதவாறு கதை என்னைக் கட்டிப்போட்டிருக்கிறது. இக்கதை தொடரின் பதினொரு பகுதிகளை எழுதி முடித்தபோது ஜார்டான் இயற்கை எய்தி விட்டார். முழுமுதற்சக்தியில் அவர் ஆன்மா சாந்தியடையட்டும். அன்னார் விட்டுச் சென்ற குறிப்புக்களுடன் இத்தொடரை தற்போது எழுதி வருபவர் பிராண்டான் சாண்டர்சன் எனும் மிகைபுனைவு எழுத்தாளர் ஆவார். மொத்தம் 14 பாகங்கள் கொண்ட இத்தொடரின் சுழற்சி அதன் பின்பாக நின்று விடுமா என என்னைக் கேட்டால் இப்பதிவின் முதல் பராவை பதிலாக நான் உங்களிற்கு வழங்குவேன். ஜார்டானின் வரிகளை தழுவியவை அவை. காலச்சக்கரம் வாசிப்பில் ஒரு புதிய அனுபவத்தின் சுவையை எனக்கு அளித்து வருகிறது. இது என் அனுபவம். வாசகர்களின் சுவைகளும் அனுபவங்களும் வேறுபடக்கூடியவையே. The Wheel weaves as the Wheel wills

Sunday, June 5, 2011

ஃபர்ஸ்ட் கிளாஸ்


1962, அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் செபாஸ்டியன் ஷோ என்பவனைக் கண்காணிக்கும் சிஐஏ அவனிற்கு துணையாக செயற்படும் சில மனிதர்கள் சிறப்பான ஆற்றல்களை தம்மில் கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்கிறது. இவ்வகையான விசேட சக்தி கொண்ட மனிதர்கள் குறித்து விரிவாக அறிய விரும்பும் சிஜஏ சார்ல்ஸ் சேவியர் எனும் விரிவுரையாளரை தொடர்பு கொள்கிறது….

மார்வல் காமிக்ஸின் குறிப்பிடத்தக்க நாயகர்களில் X-Men களிற்கு முக்கியமான ஒரு இடம் உண்டு. 1963 களில் காமிக்ஸ் கதையொன்றில் அறிமுகமாக ஆரம்பித்த இந்நாயகர்களில் காணக்கிடைக்கும் X எனும் ஒரு குறிப்பிடத்தக்க மரபணு இவர்களை சாதாரணர்களிடமிருந்து வேறுபடுத்தி சிறப்பான ஆற்றல்களையும் சக்திகளையும் உடையவர்களாக சித்தரித்தது. பரிணாம வளர்ச்சியில் மனிதர்களை விட மேலான படியில் உள்ளவர்களே இந்நாயகர்கள். X-Men என இந்நாயகர்கள் அறியப்படும் முன்பாக அவர்களின் வரலாறு என்ன என்பதை சிறப்பாக திரைக்கு எடுத்து வருகிறது Matthew Vaughn இயக்கியிருக்கும் X-Men: First Class எனும் இத்திரைப்படம்.

1944களில் நாசிகளால் நிர்வகிக்கப்படும் யூத வதை முகாம் ஒன்றில் திரைப்படம் ஆரம்பிக்கும்போது இந்த யூத வதைமுகாம்களை விட்டால் ஹாலிவூட் பட்சிகளிற்கு வேறு வதைமுகாம்களே தெரியாதா எனும் எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் அந்த ஆரம்பமே படத்தின் மிக முக்கியமான ஒரு பாத்திரமான எரிக் என்பவனிற்கு வஞ்சம் எனும் பாதையில் பயணத்தை ஆரம்பித்து வைக்கிறது.

இதே ஆண்டு காலப்பகுதியில் நீயூயார்க்கின் வசதிபடைத்த புறநகர்பகுதியொன்றின் பெருமாளிகையில், பிறரின் மனதில் உள்ளவற்றை படித்தறியும் திறமை கொண்ட சேவியர் எனும் சிறுவனிற்கும், எந்தவொரு மனிதப்பிறப்பை போலவும் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் கொண்ட ரேவென் எனும் சிறுமிக்கும் அறிமுகம் உருவாகிறது.

பின், கதை 1962க்கு தாவுகிறது. ஒரு புறம் எரிக் தன் மனதில் எரியும் வஞ்சத்தை தணிக்க அதிரடிப் பயணத்தை மேற்கொள்ளுகிறான். சேவியர் பல்கலைக்கழக மாணவனாக தன் வாழ்க்கையை தொடர்கிறான், பின் மரபணு மாற்றங்கள் குறித்த விடயங்களில் தேர்ந்த விரிவுரையாளானாகிறான். சந்தர்ப்பவசத்தால் சேவியர், எரிக் எனும் X-Men ன் இரு முக்கிய பாத்திரங்களும் எவ்வாறு சந்தித்துக் கொள்கின்றார்கள் என்பது பரபரப்பான ஒரு காட்சியில் பார்வையாளன் முன்வைக்கப்படுகிறது. இந்த இருவரிற்கும் இடையில் உருவாகும் நட்பு, அவர்களிற்க்கிடையில் உள்ள வேறுபாடுகள், அவர்கள் இணைந்து நடத்தும் போராட்டங்கள், அதன்பின் வரும் வலி கொண்ட பிரிவு என்பவற்றை சிறப்பான வகையில் திரைப்படம் கூறிச்செல்கிறது.

x-men-first-class-2011-17720-1235885239படம் ஆரம்பித்த கணம் முதலே உருவாகும் விறுவிறுப்பு அதன் இறுதிவரை குறையாதபடியிருக்கும் சிறப்பான இயக்கம் படத்தின் முதல் பலம். மிகச்சிறப்பான நடிகர் தெரிவு அதன் இரண்டாம் பலம். அதிரடி ஆக்‌ஷன்களை மட்டும் நம்பியிராது ரசிக மனங்களை சிறகொன்றின் ஸ்பரிச மென்மையுடன் தொட்டுவிடும் கதை மூன்றாம் பலம். சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் உபரிப் பலம்.

எரிக் எனும் மக்னெட்டோவிற்கும் சார்ல்ஸ் சேவியரிற்குமிடையில் உருவாகும் நட்பு மிகச்சிறப்பான வகையில் விபரிக்கப்படுகிறது. மக்னெட்டோ ஏன் மனிதர்களிற்கு எதிரானவனாக உருவாகிறான், சேவியரால் ஒரு தங்கை போல பாதுகாக்கப்படும் ரேவென் எனப்படும் மிஸ்டிக் ஏன் மெக்னெட்டோவுடன் இணைந்து கொள்கிறாள் எனும் சம்பவங்கள் தகுந்த காரணங்களுடன் விளக்கப்படுகின்றன. மனிதர்கள் மத்தியில் ஒளிந்து வாழக்கூடிய நிலையில் உள்ள X-Men கள் குறித்த பார்வையும் மனிதர்கள் அவர்கள்மீது கொள்ளும் வெறுப்பும் தயக்கமின்றி திரைப்படத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்நாயகர்களின் முன்னைய படைப்புக்களில் மக்னெட்டோவையும் அவன் குழுவையும் சிறிய எரிச்சலுடன் நாம் பார்த்திருந்தால் இத்திரைப்படம் அவர்கள் மீதான எம் பார்வையை திருத்திக் கொள்ளச் செய்கிறது.

அமெரிக்காவை ஒரு காலத்தில் பரபரப்பிற்குள் ஆழ்த்திய க்யூப அணு ஏவுகணை விவகாரத்தை முக்கியமான ஒரு திருப்பத்திற்காக சிறப்பாக திரைப்படத்தில் கையாண்டிருக்கிறார்கள் கதையை உருவாக்கியவர்கள். மிகைகற்பனைச் சதி ஒன்றை நாடாது ஏற்கனவே நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை கதையில் விறுவிறுபிற்காக உபயோகித்திருப்பது கற்பனையின் நம்பகத்தன்மையை அதிகரிக்கவே செய்கிறது கூடவே அதன் விளைவுகளும் எதிர்பார்த்த வெற்றியை தந்திருக்கின்றன.

படத்தின் முக்கிய பாத்திரங்களான சேவியர் வேடத்தில் தோன்றும் James McAvoy, எரிக் வேடம்மேற்றிருக்கும் Michael Fassbender ஆகிய நடிகர்கள் மிகச்சிறப்பாக தம் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். செபாஸ்டியன் ஷோவாக வரும் நடிகர் Kevin Bacon அற்புதமான ஒன்றாக அப்பாத்திரத்தை தன் திறமையால் மாற்றியிருக்கிறார். இவ்வகையான சிறப்பான நடிகர் தேர்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்றே. கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் சொல்லவே வேண்டியதில்லை. உச்சக்கட்டக் காட்சிகளில் வரைகலைக் கலைஞர்கள் பின்னி எடுத்திருக்கிறார்கள். அதேபோல் சமீபகாலத்தில் இவ்வளவு விறுவிறுப்பும் வேகமும் அழுத்தமும் நிறைந்த உச்சக்கட்டக் காட்சியை நான் திரையில் கண்டதில்லை.

X-Men பாத்திரங்கள் மீது நான் விருப்பு கொண்டவன் அல்ல. இத்திரைப்படத்திற்கு முன்பு வந்த அந்நாயகர்களின் திரைச் சாகசங்கள் என்னை பெரிதும் கவர்ந்ததுமில்லை. இந்நாயகர்கள் தோன்றும் திரைப்படம் ஒன்றை நான் இவ்வளவு ரசித்துப் பார்ப்பேன் என நான் எண்ணியதும் இல்லை. ஆனால் இத்திரைப்படம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டிருக்கிறது. X- Men:First class அதன் பெயரைப் போலவே ஃபர்ஸ்ட் கிளாஸ். [***]

ட்ரெயிலர்

Sunday, May 29, 2011

மப்பு மறதி


ஸ்டூ, தன் திருமணத்தை தாய்லாந்தில் ஒழுங்கு செய்கிறான், இதனையடுத்து அவன் நண்பர்களான ஃபில், டூக், ஆலன் தாய்லாந்திற்கு பயணமாகிறார்கள். லாஸ்வெகாஸின் குடிக்கும்மாள நினைவுகளை இன்னமும் பசுமையாக மனதில் வைத்து திகிலுறும் ஸ்டூ, பிரம்மச்சர்ய துறப்பு விருந்தை நிராகரித்து வருகிறான். ஆனால் தன் நண்பன் ஃபில்லின் ஓயாத வற்புறுத்தலினாலும் தன் காதலி அளித்த ஊக்குவிப்பினாலும் ஒரு பீர் குடிப்பது எனும் முடிவிற்கு நண்பர்களுடன் உடன்படுகிறான் ஸ்டூ. இவ்விருந்தில் கலந்து கொள்ள தன் காதலியின் சகோதரனான டெடியையும் அவன் உடன் அழைத்து செல்கிறான்.

கடற்கரை ஒன்றில், ஏகாந்தமான மாலைப் பொழுதில் பழங்கதைகளையும் நினைவுகளையும் ஸ்டூவின் காதலி குறித்த விமர்சனங்களையும் பகிர்ந்தபடியே பிரம்மச்சர்ய துறப்பு விருந்து ஆரம்பிக்கிறது. மறு நாள் காலையில் கண் விழிக்கும் நண்பர்கள் தாம் ஒரு ஹோட்டல் அறையில் இருப்பதையும், மணமகளின் சகோதரனான டெடி அறையிலிருந்து காணாமல் போயிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள்…..

சிலவேளைகளில் அதிகமாக மதுவை உள்ளெடுத்துவிடும் நற்பிரஜைகள் ஒரு குறிப்பிட்ட கணத்தின் பின்பாக தம்மை சுற்றி என்ன நடந்தது என்பதை முற்றாக மறந்து விடுவது வழமையான உலக நடப்புக்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்நற்பிரஜைகளின் நண்பர்களும், துரதிர்ஷ்டவசமாக அந்த நற்பிரஜைகளின் மனைவிகளும் அக்கணத்தின் பின்பாக என்ன நடந்தது என்பதை அந்த நற்பிரஜைகளிடம் படு குசாலாக விபரிப்பார்கள். அந்த நற்பிரஜைகளும் இவற்றையெல்லாம் நானா செய்தேன் என்பதுபோல் விழிகளை அகல விரித்தபடியே நம்பமுடியாத உணர்வுடன் அவற்றை உள்வாங்கிக் கொண்டிருப்பார்கள். சில சமயங்களில் தாம் அவ்வாறு எல்லாம் செய்யவில்லை என பலவீனமான ஒரு மறுப்பையும் அவர்கள்முன் வைப்பார்கள். இந்நிலையில் சில கைத்தொலைபேசி நிழற்படங்களோ, ஆல்லது வீடியோ பதிவுகளோ அந்நற்பிரஜைகளின் மறுப்புக்களை தவிடு பொடியாக்கி விடும் ஆதாரங்களை தம்மில் கொண்டிருக்கும். தம் வயதுக்கு குறைவான பெண்களை மடியில் இருத்தி கன்னங்களை தடவிக் கொடுத்தல் [ இது ஒரு குற்றமா], ஆடைகளை களைந்து விட்டு வீதிகளில் நடந்து செல்லல், மாமனாரை சட்டையை பிடித்து உலுக்கல் [ இது மப்பில் செய்ததுதானா என்பது சந்தேகத்திற்குரியது] போன்றன இவ்வகையான செயல்களிற்கு சில உதாரணங்கள் ஆகும். The Hangover திரைப்படங்களும் இவ்வகையான சம்பவங்களை கொண்டே காவாலித்தனமான நகைச்சுவையுடன் திரைக்கதைகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன.

இத்திரைப்படத்தின் முதல் பாகம் தந்த வெற்றி இயக்குனர் Todd Phillips ஐ இன்று எ டாட் பிலிப்ஸ் மூவி என டைட்டிலில் போடுமளவு பிரபலமாக்கி விட்டது. வெற்றி பெற்ற முதல் பாகத்தின் அதே சூத்திரம், அதே நடிகர்களுடன், சம்பவம் நடக்கும் இடத்தை மட்டும் தாய்லாந்திற்கு குறிப்பாக தென்னாசியாவின் கேளிக்கை தலைநகரமென புகழ்பெற்ற பாங்காக்கிற்கு மாற்றியிருக்கிறது திரைக்கதை.

தாம் எவ்வாறு இந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம்? டெடி எங்கே போனான் ? நேற்று இரவு என்னதான் நடந்து தொலைத்தது? என மனதில் மப்புக் கலையாமல் எழும்பும் வினாக்களிற்கு விடையறியும் தேடல்களை நகைச்சுவையுடன் திரைக்கு இட்டு வருகிறது த ஹாங் ஓவர் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி. கேளிக்கை நகரமான பாங்காக்கின் ஜல்சா விடுதிகள், ஆடை அவிழ்ப்பு நடன நங்கைகள், பச்சை குத்தும் நிலையம், துறவி மடம், பொலிஸ் நிலையம், நட்சத்திர ஹோட்டல்கள் என தேடல்கள் நீள, உண்மையான மர்மம் என்ன என்பதை அறிய வழமைபோலவே பார்வையாளன் இறுதி வரை கெட்ட கெட்ட நகைசுவைக்கு சிரித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

very-bad-trip-2-2011-19762-2058544496திரைப்படத்தின் மூன்று முக்கிய நடிகர்கள் என ஆலன் வேடம் ஏற்றிருக்கும் ஸாக் கலிபியானகிஸ், சோவ் பாத்திரத்தில் வரும் நடிகர் கென் ஜியோங், ராலிங் ஸ்டான்ஸ் மேற்கோட்டு அணிந்த ஒரு குரங்கு போன்றவர்களை குறிப்பிடலாம். ஸாக் கலிபியானகிஸ் திரையில் தோன்றினாலே பார்வையாளர்கள் சிரிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். மனிதரிற்கு பெண் ரசிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது என்பதை திரையரங்கினுள் கணீர் என சிதறிய சிரிப்பொலிகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. அப்பாவித்தனத்துடன் அவர் அடிக்கும் கூத்துக்கள் ரசிக்க வைக்கின்றன ஆனால் கலிபியானாகிஸ் புதுமையாக எதையும் செய்து விடவில்லை. புற்தரையில் கொண்டு வந்து படகை நிறுத்தி விட்டு மிக இயல்பாக நங்கூரம் வீச அவரால் மட்டுமே முடியும்.

சர்வதேசக் கேடியாக வரும் கென் ஜியோங், அருமையாக செய்திருக்கிறார். அவர் கோபம் கொள்ளும் சமயங்களில் எல்லாம் வெடிச்சிரிப்புத்தான். வணக்கம் கூறி வரவேற்கும் ஹோட்டல் பணிப்பெண்களை அவர் உதறித்தள்ளும் அழகு அருமை. அவரின் உடல் அங்கங்களில் ஒன்று திரையரங்கை வெடித்து சிதற வைக்கும் சிரிப்பலைகளை உருவாக்கியது என்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

ஒரினச்சேர்க்கை ஈர்ப்பு கொண்ட குரங்காக வரும் அந்த குரங்கு பல காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறது. அக்குரங்கின் கில்லாடித் தனங்களை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்வதே சுவாரஸ்யமாக இருக்கும். குரங்கு கூட முகபாவனைகளை உணர்ச்சியுடன் எடுத்து வரும்போது ஏன் ஒத்தக்கண் ரவியால் இது முடியவில்லை எனும் சோகமான கேள்வி ஒரு போத்தல் பீர் அடிக்கலாம் எனும் தீர்மானத்திற்கு என்னை இட்டுச் செல்கிறது.

முலைகள், பிருஷ்டங்கள், ஆண்குறி, பெண்குறி என அனைத்து ரசிகர்களினதும் ஆவலை இறுதியில் தீர்த்து வைக்கிறார் இயக்குனர் டாட் பிலிப்ஸ், ஆனால் இப்பாகத்தில் புதிதாக ஏதும் சிறப்பாக உண்டா என்றால் அதற்கு விடை, இல்லை என்பதுதான். வேண்டுமானால் ஜாலியாக வாழக்கூடிய தருணங்களை திருமணத்தின் பின்பாக இழக்க வேண்டுமா எனும் கேள்வியை பார்வையாளார்கள் தம்மில் எழுப்பிப் பார்த்துக் கொள்ளலாம். முதல்பாகத்தைவிட நகைச்சுவையும் கற்பனையும் இப்பாகத்தில் குறைவாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். என்னைக் கேட்டால் டாட் பிலிப்ஸ் இப்பாகத்துடன் ஹாங் ஓவர்களிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைப்பது சிறப்பானது. Bud பீரை லாஸ் வேகாஸில் குடித்தாலும், பாங்காக்கில் குடித்தாலும் சுவை அதிகம் மாறுபடப்போவதில்லை. இத்திரைப்படமும் அப்படியே. அதே மப்பு ஆனால் ஜாலி கம்மி. [**]

ட்ரெய்லர்

Wednesday, May 18, 2011

இளமையின் ஊற்று


pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-17560-1415865127அஞ்செலிக்கா [Penélope Cruz] எனும் தன் முன்னாள் காதலியின் தந்திரத்தால் கொடுங்கடற்கொள்ளையனான BlackBeard [Ian Macshane] ன் கப்பலில் அடிமையாக்கப்படுகிறான் பிரபல கடற்கொள்ளையனான கேப்டன் Jack Sparrow [Jhonny Depp]. ஜாக் ஸ்பாரோ நீண்ட காலம் உயிர்வாழ வேண்டுமெனில் நித்திய வாழ்வை மனிதர்களிற்கு வழங்கக்கூடிய இளமையின் ஊற்றை நோக்கி தன்னை இட்டுச் செல்ல வேண்டுமென அவனை மிரட்டுகிறான் கடற்கொள்ளையன் கருந்தாடி…..

சிறுவயது முதலே கடற்கொள்ளையர்களின் மீதான மோகம் மனதை பீடித்த அன்பர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் வந்தே விட்டது. கடற்கொள்ளையர்களின் ரசிகர்கள் அனைவரினதும் மனதுகளை பூரணமாக திருப்திப்படுத்தும் வகையில் Pirate of The carribean: On Stranger Tides அமைந்திருக்கிறது எனலாம். Tim Powers அவர்கள் எழுதிய ஒரு நாவலை உசாத் துணையாக கொண்டு இத்திரைப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Rob Marshall.

படம் ஆரம்பித்த கணம் முதலே விறுவிறுப்பும் பற்றிக் கொள்கிறது. இளமையின் ஊற்றை நோக்கி ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள், கருந்தாடி என மூன்று குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகவேகமாக பயணிக்க ஆரம்பிக்க திரைப்படத்திலும் வேகம் தொற்றிக் கொள்கிறது. நாயகன் ஜாக் ஸ்பாரோ வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் ஆரம்பக் காட்சியே அமர்க்களம். அது முதல் கொண்டு படம் நிறைவு பெறும் வரையில் அடி வெளுத்து வாங்கியிருக்கிறார் ஜாக் ஸ்பாரோவான நடிகர் ஜானி டெப். அவரின் உடல் மொழி, வசனங்களை வழங்கல், சேஷ்டையான முகபாவங்கள் என்பவற்றை சேர்த்து அவர் வழங்கியிருக்கும் நடிப்பு இதுவரை வந்த பாகங்கள் அனைவற்றிலும் அவர் காட்டியிருக்ககூடிய திறமையை இலகுவாக பின்னடையச் செய்து விடுகிறது. ஜானி டெப்பின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ரசிக்கும் ஒரு படைப்பாக இது அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. உனக்கு ஒரு தங்கையும் அவளிற்கு ஒரு நாயும் இருந்தால் என் தேர்வு நாயாகவே இருக்கும் என நாயகி அஞ்செலிக்காவிடம் கூறுவதற்கு சிரிப்பு வெடிக்கிறது எனில் ஒரு நீர் வீழ்ச்சியில் இருந்து அவர் குதிக்க வேண்டிய தருணத்தில் அவர் அடிக்கும் கூத்திற்கு அரங்கமே குமுறிக் குமுறிச் சிரிக்கிறது. ஜாக் ஸ்பாரோ தனியனாக நின்று படத்தை சுவைக்க செய்திருக்கிறார். Bravo Jhonny Depp.

ஜாக் ஸ்பாரோ இப்படியென்றால் அவருடன் போட்டி போடும் பாத்திரமாக மின்னுபவர்கள் கடற்கொள்ளையர்களான கருந்தாடியும், Barbosa [Geoffry Rush] வும். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளுடன் திகில் கடற்கொள்ளையனாக கருந்தாடி. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரான இயான் மக்‌ஷேன் தன் கம்பீரமான நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார். கருந்தாடி சிரித்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது. அருமையான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகாது. தன் மனதில் பழிதீர்க்கும் வஞ்சம் ஒன்றை ரகசியமாக ஏந்திக் கொண்டு தன் ஒரு காலையும், கருமுத்தையும்- Black Pearl - பறிகொடுத்த நிலையில் இங்கிலாந்து மன்னரின் கடற்படையில் இணைந்து கொள்ளும் கேப்டன் பார்போசா தன் பங்கிற்கு நகைச்சுவையில் பின்னி எடுத்திருக்கிறார். அவர் அரச ஊழியத்தில் இருப்பதால் அணிந்து கொள்ளும் டோப்பாவும், முகவலங்காரமும் சிரிப்போ சிரிப்பு. ராஜ விசுவாசத்தை ஊட்டி துவண்டிருக்கும் கடற்படையினரை உற்சாகமூட்டும் தருணம் நிச்சயமாக கடற்கொள்ளையர்களால் விசிலடிக்கப்படும் தருணமாக அமையும்.

pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-2011-17560-1925004355நடிகர்கள் ஒரு புறம் பின்னி எடுக்கிறார்கள் எனில் மறுபுறம் கதை இது எப்படி சாத்தியம் எனும் கேள்விகளிற்கு விடை தேட நேரம் தராத வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. திருப்பம் மாறி திருப்பமாக கதை ஓடிக் கொண்டே இருக்கிறது. கடற் கன்னிகள் குறித்த தொன்மத்தில் மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டிருக்கும் கடற்கன்னிகளிற்குரிய பகுதி அட்டகாசம். கடற்கன்னிகளை பிடிக்கும் அந்தக் காட்சி அருமையான விறுவிறு ஆக்‌ஷன். அதேபோல் பாதிரிக்கும் ஒரு கடற்கன்னிக்கும் இடையில் உருவாகும் காதல், தனித்த ஒரு சிறு கவிதையாக உருக்கொண்டுவிடுகிறது. உண்மையிலேயே மனதை கலங்க வைக்கும் சில தருணங்களை அந்த சிறுகாதல் திரையில் விரித்து செல்கிறது. இதே வேளையில் கடற்கன்னிகளை இடுப்பிற்கு கீழே மீன் வடிவில் உருவாக்கிய கலைஞர்களிற்கும், அவர்களில் இளமையான மார்புகளை பலவிதமான தந்திரங்களால் காட்டாமல் செய்த படக்குழுவினர்க்கும் பாரிஸ் கடற்கன்னிகள் ரசிகர் மன்ற சார்பில் வன்மையான கண்டணங்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நாகரீகங்களையும், விடயங்களையும் மதம் எனும் பெயரில் அழித்தொழித்த ஸ்பானிய ஆக்கிரமிப்பின் நீட்சியாகவே இப்படத்தில் ஸ்பானியர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். படத்தின் இறுதிப்பகுதி, ஆக்‌ஷன், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பம் என ரசிகர்களை வியக்கவைத்துக் கொண்டே செல்கிறது. படத்தின் முடிவில் இத்திரைப்பட வரிசை தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கான நம்பிக்கை ரசிகர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. இவ்வகையான தொடர்ச்சிகளாக அவை இருக்கும் பட்சத்தில் அத்தொடர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள நான் தயார்.

அடடா, இதுவரையில் படத்தின் நாயகியான அஞ்செலிக்கா குறித்து இப்பதிவில் எழுதவில்லையே என சில பெனிலோப்பே க்ருஸ் அம்மிணி ரசிகர்கள் விசனமுறலாம். இதோ! ச்வீட் நெத்தலி கெய்ரா க்னைட்லி இனி தான் கடற்கொள்ளையர்களின் கப்பலில் ஏறப்போவதில்லை என மறுத்துவிட அவரிற்கு பதிலாக ஸ்பானிய வதங்கல் பூசணி பெனிலோப்பே க்ருஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவ்வளவு சுவையான அம்சங்கள் இருக்கிறதே என்பதற்கு திருஷ்டிப் பரிகாரமாக அவர் இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. உற்சாகமும், இளமையும், கவர்ச்சியும், நளினமும் பொங்கோ பொங்கெனப் பொங்கி, கடற்கொள்ளையர் கப்பல் தளத்தில் சசரஸா நடனமாட வேண்டிய பாத்திரத்தில் மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்து விட்டு தூக்கத்திற்கு தயாரானவர் போல் தன் திறமையை காட்டியிருக்கும் பெனிலோப்பே க்ருஸை என்னவென்பது. பெனிலோப் தயவு செய்து அடுத்த பாகம் என ஒன்றிருந்தால் அதில் நடிக்காதீர்கள். மேனியலங்காரத்தையும் மீறி உங்கள் தளர்ந்த மார்புகளும், சுருக்கம் விழ ஆரம்பித்த விழிகளும் வன் கவிதை பாடுகின்றன அம்மிணி.

மிக அரிதாகவே ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சியாக வரும் பாகங்கள் அதன் முதல் பாகத்தை விஞ்சக்கூடும், இத்திரைப்படம் அந்த நிலையை எட்டவில்லை எனிலும் அதன் அருகாமையில் வந்து நிற்கிறது. வழமை போலவே ஹான்ஸ் ஸிம்மர் தன் இசையால் பின்னி எடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு, காட்சி மற்றும் அரங்க அலங்காரங்கள், நடிகர்களின் உடையலங்காரங்கள், நகைச்சுவை கலந்த வசனங்கள் என்பன கடற்கொள்ளையர் உலகில் எம்மை பிணைத்துக் கொள்ள சிறப்பாக உதவுகின்றன. கடற்கொள்ளையர்களின் ரசிகர்களை எல்லாம் இளமை ஊற்றில் ஒரு முக்கு முக்கி எடுப்பதில் இத்திரைப்படம் ஜாலியான வெற்றி காண்கிறது. [***]

ட்ரெயிலர்

யானைக்கு நீரூற்றல்


ஜாக்கோப் ஜான்கோவ்ஸ்கி மிருகவைத்தியத் துறையில் பட்டப்படிப்பை தொடரும் ஒரு மாணவன். தன் பெற்றோரின் அகால மரணத்தின் பின்பாக நடுத்தெருவிற்கு வரும் ஜாக்கோப், புதிய வாழ்வொன்றை ஆரம்பிக்கும் எண்ணத்தில் ஓடும் ரயில் வண்டி ஒன்றில் ஏறுகிறான். அவன் ஏறிய அந்த ரயில் வண்டியில் பென்ஸினி பிரதர்ஸ் எனும் சர்க்கஸ் கம்பனி ஊர் ஊராக பயணம் செய்து வருகிறது. சர்க்கஸ் கம்பனியின் முதலாளியை சந்திக்கும் ஜாக்கோபிற்கு சர்க்கஸில் வித்தை காட்டும் விலங்குகள் நலத்தை பராமரிக்கும் பொறுப்பு தரப்படுகிறது….

கடந்தகாலத்தில் நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்வுகளைப் பேசும் திரைப்படங்கள், அந்த நிகழ்வுகளை மறக்கமுடியாத ஒரு பாத்திரம் சமகாலத்தில் இருந்து அந்நிகழ்வுகளை அசைபோடுவதாக ஆரம்பிக்கும் ஒரு வழக்கம் இருந்து வருகிறது. இயக்குனர் Francis Lawrence இயக்கியிருக்கும் Water for Elephants திரைப்படமும் இவ்வழக்கத்திலிருந்து தன்னை விலக்கி கொள்ளவில்லை. Sara Gruen எனும் அம்மிணி எழுதிய, திரைபடத்தின் அதே பெயரைக் கொண்ட நாவலைத் தழுவியே இத்திரைப்படத்திற்கான திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இரவு ஓடிக்கொண்டிருக்கும் நேரம், சர்க்கஸ் கம்பனி ஒன்று தன் கதவுகளை மூடிவிட்டு உறங்க ஆரம்பிக்கும் தருணத்தில் அக்கம்பனிக்கு முன்பாக நின்று கொண்டிருக்கிறார் ஒரு வயோதிபர். சர்க்கஸ் ஊர்வலத்தை காண ஆவலுடன் இருக்கும் அந்த வயோதிபரை பரிவுடன் உள்ளே அழைத்து செல்கிறான் அந்த சர்க்கஸின் முதலாளி. வயோதிபர் மடத்தில் இருந்து யாரிற்கும் சொல்லிக் கொள்ளாமல் நழுவி வந்திருக்கும் அந்த வயோதிபர் மதுவின் அரவணைப்புடன் தன் கடந்தகாலத்தை அந்த சர்க்கஸ் கம்பனியின் முதலாளியிடம் கூற ஆரம்பிக்கிறார். வயோதிபராக கதையைக் கூற ஆரம்பித்த ஜாக்கோப் பட்டப்படிப்பு மாணவணாக தன் கல்லூரிக்கு செல்ல தன் வீட்டில் ஆயத்தமாகும் காட்சியுடன் கடந்தகால நிகழ்வுகள் திரையில் உருப்பெற ஆரம்பிக்கின்றன.

இளம் வயது ஜாக்கோபாக திரையில் வருபவர் காதல் காட்டேரி Robert Pattinson அவர்கள். அவருடைய வாழ்வே பெற்றோரின் மரணத்தின் பின் முற்றாக மாறிவிட, அவர் தன் பெற்றோர்களுடன் வாழ்ந்த வீடும் வங்கியால் திருப்பி எடுத்துக்கொள்ளப்பட, ரயில்பாதையின் ஓரமாக வாழ்க்கையை தேடிச்செல்லும் ஜாக்கோப் பாத்திரத்தில் அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். ஜாக்கோபின் வாழ்க்கையானது தண்டவாளங்களின் மேல் உருண்டு வருகையில் ஓடிச் சென்று அதில் அவன் ஏறிக்கொள்கிறான். அந்த ரயிலில் பயணம் செய்யும் சர்க்கஸே அவன் புதிய வாழ்வாக மாறிவிடுகிறது.

water-for-elephants-2011-15532-1106891936திரைப்படத்தின் கதை நிகழும் காலம் 1931. அமெரிக்கா பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்ட காலமது. இக்காலத்தில் ஒரு சர்க்கஸ் கம்பனியின் நிலை என்னவாக இருக்கும் என்பதை தொடரும் சம்பவங்கள் திரையில் விரிக்கின்றன. அன்றாட பாட்டிற்கே திண்டாடும் மக்கள் சர்க்கஸை காண வருவது என்பது குறைவாகவே இருக்கிறது. இது சர்க்கஸ் கம்பனியிகளின் வருமானத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பல சர்க்கஸ் கம்பனி முதலாளிகள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி தப்புகிறார்கள். சர்க்கஸ் ஊழியர்களும், வித்தைக்காரர்களும், விலங்குகளும் கிழிந்த கூடாரங்களுடன் காய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஊழியப் பட்டுவாடா செய்ய முடியாத நிலையில் ஓடும் ரயிலில் இருந்து ஊழியர்கள் வீசி எறியப்படுகிறார்கள். இவ்வகையான நிகழ்வுகளையும் மீறி சர்க்கஸ் மனிதர்களின் வாழ்வானது வலியும் வேதனையும் இளைப்பாறலும் மகிழ்ச்சியும் கொண்ட பயணமாகவே இருக்கிறது. இவ்வாழ்க்கையினை சிறிதளவில் தொட்டிக் காட்டிச் செல்கிறது திரைப்படம். அவ்வகையில் அமெரிக்கா பொருளாதார வீழ்ச்சியின் போது சர்க்கஸ் கம்பனிகள் குறித்த மெலிதான ஒரு வரலாற்றுப் பார்வையாக இத்திரைபடம் அமைகிறது.

சர்க்கஸ் கம்பனி ரயிலில் ஏறும் ஜாக்கோப், அந்த சர்க்கஸ் கம்பனி முதலாளியான ஆகஸ்டினால் விரும்பப்படுபவானாகிறான். ஆகஸ்ட் நிலையற்ற சுபாவம் கொண்டவன், எந்த கணத்திலும் அவன் குணம் சடுதியாக மாறிவிடக்கூடியதாக இருக்கிறது. தேவைக்கு அதிகமானவர்களை தன் குண்டர்களை வைத்து ரயிலி இருந்து தூக்கி எறியும் ஆகஸ்ட், கொலை செய்யக்கூட தயங்காத வெறிநிலையை சிலநொடிகளில் எட்டிவிடக்கூடியவன். அதேவேளையில் தன் தவறை உணரும் சமயங்களில் அவன் தனக்குள் தானே ஒடுங்கிப் போபவனுமாக இருக்கிறான். தன் சர்க்கஸ் கம்பனி நொடிந்து விடக்கூடாதே எனும் எண்ணமும், பார்வையாளார்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும் நிலையும் அவனை அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டே இருக்கின்றன. அவன் ஒரு யானை போல, அவன் பலம் என்ன என்பது அவனிற்கே தெரிவதில்லை. அவன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக இருந்து வந்த குதிரை ஒன்றின் கால் பாதிப்பிற்குள்ளாக அதனை சாகடிக்க வேண்டிய நிலை உருவாகிறது. இதன் பின்பாக ரோஸி எனும் யானையை விலைக்கு வாங்கி அதனை தன் சர்க்கஸின் நட்சத்திர அம்சமாக ஆக்கவிரும்பும் ஆகஸ்ட் அதனை பராமரிக்கும் பொறுப்பை ஜாக்கோபிடம் தருகிறான். ஆகஸ்ட் பாத்திரத்தில் தன் பங்கை இயலுமானவரை சிறப்பாக செய்திருப்பவர் நடிகர் Christophe Waltz. படத்தின் மிகச்சிறப்பான திறமை இவரே ஆனால் அவருடைய பாத்திரம் மனதில் ஒட்ட மறுக்கிறது.

de-l-eau-pour-les-elephants-2011-15532-1524809140ரோஸி எனும் யானையை ஜாக்கோப் பராமரிக்க ஆரம்பிக்கும் கணத்தில் இருந்து ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவுடன் அவன் நெருங்க ஆரம்பிக்கிறான். இவர்கள் இருவரினதும் செயல்களையும் மிக அமைதியுடன் அவதானித்து வருகிறான் ஆகஸ்ட். அவன் மனதில் சந்தேகம் மெல்ல மெல்ல உருப்பெற ஆரம்பிக்கிறது. ஆகஸ்டின் முரட்டுத்தனம், ஏறக்குறைய ஒரு அடிமையாக வாழும் நிலை என்பன ஆகஸ்டின் மனைவியான மர்லெனாவை மென்மையான ஜாக்கோப்பின் கரங்களினுள் கொண்டு சேர்க்கிறது. ரோஸியின் ரகசியத்தை புரிந்து கொள்ளும் ஜாக்கோப் அதனை பயிற்சி அளிக்கும் முறையை ஆகஸ்டிடம் தெரிவிக்கிறான். மீண்டும் பென்ஸாணி பிரதர்ஸ் சர்க்கஸ் வரவேற்பை பெற ஆரம்பிக்கிறது. தொடரும் சில நிகழ்வுகளால் சர்க்கஸை விட்டு ஓடுகிறார்கள் ஜாக்கோபும், மர்லெனாவும். அவர்கள் காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை மீதி திரைப்படம் கூறுகிறது.

திரைப்படத்தின் போஸ்டரை ஒரு முறை பாருங்கள், கிறங்கி நிற்கும் ஒரு காதல் ஜோடி, அவர்களின் பின்னால் அந்தப் பெண்ணின் கணவன் மற்றும் ரோஸி எனும் யானை. இவர்களின் பின்னணியில் மங்கிய பிரகாசத்தில் ஒளிரும் ஒரு சர்க்கஸ். ஒரு போஸ்டரிலேயே கதை அழகாக கூறப்பட்டுவிட்டது இல்லையா. ஆனால் இயக்குனர் பிரான்ஸிஸ் லாரன்ஸால் இக்கதைக்கும், பாத்திரங்களிற்கும் வேண்டிய உணர்வுகளையோ, ஜீவனையோ அதற்குரிய முறையில் வழங்கிட முடியவில்லை என்பதுதான் உண்மை. மிக முக்கியமாக உறவுகளிற்கு இடையில் பரிமாறப்படும் உணர்வுகளில் உயிர்ப்பு என்பது முழுமையானதாக இல்லை. ராபார்ட் பாட்டின்ஸனிற்கும் மர்லெனா பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் நடிகையான Reese Witherspoon க்குமிடையில் ஜோடிப் பொருத்தம் என்பது ஏணி வைத்தாலும் எட்டிப் பார்க்க மறுக்கிறது. அருமையான ஒரு பாத்திரத்தின் கனம் தாளாமல் ராபார்ட் பாட்டர்ஸன் திணறுகிறார். திறமையான இயக்குனர்களின் கைகளில் அவர் நல்லதொரு கலைஞராக உருவாகும் வாய்ப்புண்டு. ரீஸ் வித்தர்ஸ்பூனிற்கு என்ன நடந்தது, கணவனை தாண்டி வந்து புதிய காதலில் குதிக்கும் ஒரு பெண்ணாக எம்மை கலங்கடிக்க வேண்டிய அவர் எரிச்சலைதான் உருவாக்குகிறார். ஒரே ஒரு ஆறுதல் யானை ரோஸி. நடிகர் கிறிஸ்டோபர் வால்ட்ஸிற்கு நிகராக கூறக்கூடிய பாத்திரம் அதுதான், தேவர் அவர்களின் திரைப்படங்களில் வருவதுபோல ஒரு முக்கிய திருப்பத்தையும் யானை ரோஸி செய்து தணிகிறது.

வழமையாக இவ்வகை காதல் திரைப்படங்களிற்கு வழங்கப்படும் மெழுகுவர்த்திகளை உருகச்செய்யும் இசை, அருமையான ஒளிப்பதிவு என்பன திறமையற்ற இயக்கத்தால் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. யானைகளிற்கு நீரோ அல்லது விஸ்கியோ வார்த்தால் அது உங்கள் காதலை காப்பாற்றலாம் ஆனால் இந்த திரைப்படத்தை எதுவுமே காப்பாற்றவில்லை. [*]

ட்ரெயிலர்