Showing posts with label David Yates. Show all posts
Showing posts with label David Yates. Show all posts

Saturday, July 16, 2011

ஹாரிபொட்டரும் ஏமாற்றக் குவளையும்!


உணவு உண்ணும் போதும், உறங்கச் செல்லும் முன்பாகவும் தொலைக்காட்சியில் அன்றைய செய்தி நறுக்குகளைப் பார்ப்பது எனக்கு வழக்கமாகிக் கொண்டு வருகிறது. கடந்த இரு வாரங்களில் ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதியின் வரவு குறித்தும், அதன் வரவின் முன்பாகவும் பின்பாகவும் தவறமால் தொற்றிக்கொள்ளும் அந்த ஹாரிஜூரம் குறித்தும் குறிப்பிடத்தக்க நறுக்குகளை தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் தவறாத பிரார்த்தனைபோல் ஒளிபரப்பி தம்மையும் ஹாரிஜூரத்தின் பரப்பிகளாக மாற்றி அகமகிழ்ந்தன.

அந்நறுக்குகளின் வழி ஹாரி மிகப்பிரம்மாண்டமான ஒரு ரசிகர் உலகத்தை இன்னமும் தன் கைக்குள் வைத்திருப்பது ஆச்சர்யமான ஒன்றாகவே எனக்கு தோன்றியது. ஹாரிபொட்டரின் நிறைவுப்பகுதியின் சர்வதேச முதற்காட்சிக்கு இங்கிலாந்தில் கூடிய சர்வதேச ரசிகர் கூட்டம், அதனைத் தொடர்ந்து பல நாடுகளில் இடம்பெற்ற நள்ளிரவுக் காட்சிகளின் பின்பான ரசிகர்களின் எதிர்வினைகள் யாவும் ஹாரிபொட்டரின் இறுதிப்பகுதியின் புகழை மட்டுமே பாடின அல்லது தொலைக்காட்சி ஊடகங்கள் புகழ் பாடப்பட்ட எதிர்வினைகளை மட்டுமே காட்டின. யாவரும் ஒரு உலகலாளவிய வியாபாரத்தில் அறிந்தோ அறியாமலோ பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது ஆச்சர்யமான ஒன்றாக எனக்கு தோன்றியது ஆனால் இவ்வியாபாரத்தின் லாபத்தில் மட்டும் யாவர்க்கும் பங்கு கிடைப்பது இல்லை.

ஹாரிபொட்டர் இறுதி நாள் படப்பிடிப்பின் பின்பாக தான் கண்ணீர் விட்டு அழுததாக ஹாரிபொட்டர் வேடமேற்ற நடிகர் டானியல் ராட்க்ளிஃப் ஒரு பேட்டியில் கூறுவதை நான் பார்த்தேன். டானியல், நீங்கள் மட்டும் அழவில்லை என்பதை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா இல்லை அனுதாபக் கண்ணீரா என்பது குறித்து எனக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் இத்துடன் திரைப்படத்தொடர் முடிந்ததே என்பது என்னைப் பொறுத்த வரையில் ஆனந்தக் கண்ணீரிற்கான ஊக்கிதான்.

இவ்வளவு புகழ்ச்சிகளின் மழையிலும், பாராட்டுக்களின் அரவணைப்பிலும், ரசிகர்களின் பித்துவத்திலும் ஊறித்திளைத்த ஹாரிபொட்டர் திரைப்படத்தின் நிறைவுப் பகுதி, வரைகலை உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சில காட்சிப் படைப்புக்களையும், செவ்ரெஸ் ஸ்னேப் சம்பந்தமான உணர்சிகரமான தருணங்களையும், அவ்வப்போது அருமையாக ஒலிக்கும் இசையையும் தவிர்த்து என்னைப் போன்ற ரசிகன் ஒருவனின் எதிர்பார்ப்பின் இறுதிக் குவளையையும் ஏமாற்றத்தால் மட்டுமே நிரப்பும் மந்திரத்தையே தன்னில் கொண்டிருக்கிறது. வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் அழிக்கப்படுகையில் அவன் பலவீனமுறுவதைப் போலவே இத்திரைப்படமும் தன் பலத்தை இழந்து கொண்டே இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கிறது.

இடிந்து நொறுங்கிக் கொண்டேய்ய்ய்ய்ய்ய்ய்யிருக்கும் மந்திரவாதிகளின் கல்லூரி, விறுவிறுப்பற்ற மோதல் காட்சிகள், முகத்தில் இழுப்பொன்று இழுத்துக் கொண்டே குச்சிப்பொடி மந்திரம் காட்டும் ஹாரி மற்றும் அவன் சகாக்கள், பெண் சாயம் பூசிய குரலில் தன் மேலங்கியை தடவிக் கொண்டு நாகினிப் பாம்பை தன் பின்னால் இழுத்துச் செல்லும் அபத்தமான ஒரு வோல்டெர்மோர், இழு இழுவென இழுக்கப்படும் உச்சக்கட்டக் காட்சிகள் என மேலதிகமாகவும் சில குவளைகளை ஏமாற்றத்தால் நிரப்பும் சக்தி வாய்த்திருப்பது இத்திரரைப்படத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று. அன்புத் தம்பி ஹாரி, RIP. [*]

6a00e5510dc3dd88330120a5718d0f970b-800wiகடந்த நாட்களில் Tim Powers எழுதிய The Anubis Gates எனும் புதினத்தை படித்து முடிக்கும் வாய்ப்புக் கிட்டியது. காலத்தில் பயணித்தல் எனும் கருவை எடுத்துக் கொண்டு டிம் பவர்ஸ் ஒரு சுவையான நாவலை 1983 களில் எழுதியிருக்கிறார் என்பதுதான் இந்நாவலைப் படித்து முடித்த பின்பாக எனக்கு தோன்றிய எண்ணமாகும்.

1983ல், டாரோ கொச்ரான் எனும் செல்வந்தனால் இங்கிலாந்திற்கு வருவிக்கப்படுகிறான் 19ம் நூற்றாண்டு இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்து நூல்களை எழுதும் பிராண்டேன் டொய்ல் எனும் எழுத்தாளன், காலத்தில் பயணிக்கும் ஒரு உத்தியை அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கண்டு பிடித்திருக்கும் செல்வந்தன் டாரோ, 19ம் நூற்றாண்டை நோக்கி சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்க விரும்புகிறான். இப்பயணிகளிற்கு 19ம் நூற்றாண்டின் இங்கிலாந்துக் கவிஞர்கள் குறித்த ஒரு வழிகாட்டியாக இருக்க பிராண்டேன் டொய்ல் வேண்டிக் கொள்ளப்படுகிறான். செல்வந்தன் டாரோவின் நிபந்தனைகளிற்கு சம்மதித்து காலத்தில் பின்னோக்கிப் பயணிக்கும் [ கதையில் தாவுதல் எனும் சொல்லே பிரயோகிக்கப்படுகிறது] பிராண்டன் டொய்ல், எதிர்பார்க்க முடியாத சம்பவங்களின் நிகழ்வுகளால் மீண்டும் 1983க்கு திரும்ப இயலாது 1811ல் இங்கிலாந்தில் அகப்பட்டுக் கொள்கிறான். பிராண்டன் டொய்லின் கதை என்னவானது என்பதை மரபான கதை சொல்லலில், விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார் கதாசிரியர் டிம் பவர்ஸ்.

காலத்தில் பயணம் செய்தல் குறித்த தர்க்க பூர்வமான வாதங்களை நாவலில் – ஒரு அத்தியாயம் தவிர்த்து- அதிகமாக முன்வைக்காதது என் போன்ற வாசகனிற்கு டிம் பவர்ஸ் வழங்கியிருக்கும் ஒரு வரம். மிகவும் தெளிவான எளிமையான ஆனால் புத்திசாலித்தனமான கதை சொல்லலை நகைச்சுவையுடன் இந்நாவலில் கையாண்டிருக்கிறார் டிம் பவர்ஸ்.

எகிப்திய கடவுள்கள் மற்றும் தொன்மம், மந்திரவாதிகள், கறுப்பு மாந்தீரிகம், நரநாய்கள், கூடுவிட்டு கூடு பாய்தல், ரகசிய சகோதரத்துவங்கள், 18ம் நூற்றாண்டு இங்கிலாந்தின் பிச்சைக்கார மற்றும் திருடர் குழு தலைவர்களின் அட்டகாசமான நடவடிக்கைகள், மந்திரத்தால் உருவாக்கப்படும் மனித நகலிகள் என படிக்க படிக்க சுவையையும் வியப்பையும் அத்தியாத்திற்கு அத்தியாயம் தவறாமல் கதையை நகர்த்துகிறார் டிம் பவர்ஸ். கதையின் இறுதி அத்தியாயம் வரை பிராண்டேன் டொய்ல் குறித்த மர்மத்தை அவர் வாசகனிடம் சரியாக ஊகிக்க விடுவதேயில்லை. 19ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த நிஜக் கவிஞர்களையும், 19ம் நூற்றாண்டின் முன்பான எகிப்தின் வரலாற்றையும் தகுந்த வகையில் அவர் கதைகூறலில் உபயோகித்துக் கொண்டிருக்கிறார். ஆங்கில மரபிலக்கிய பாணியில் கூறப்பட்டிருக்கும் இக்கதை ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை வழங்கும் என்பது என் தாழ்மையான கருத்து. டிம்பவர்ஸ் மாயப்புனைவு எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதுடன் இவர் எழுதிய On Stranger Tides எனும் நாவலே பிரபல கடற்கொள்ளையன் ஜாக் ஸ்பாரோவின் சமீபத்திய திரைப்படத்தின் திரைக்கதைக்கு உதவியாக அமைந்தது என்பதும் உபரியான தகவல்களாகும்.

Saturday, November 27, 2010

தம்பி ஹாரி, டீ இன்னும் வரல


ஹாரி பொட்டரின் பரமவைரியான வோல்டெர்மோரின் பலம் நாளிற்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மந்திரவாதிகளின் தலைமையகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வோல்டெர்மோர், ஹாரியை தீர்த்துக்கட்ட எல்லாவகையான நடவடிக்கைகளிலும் இறங்குகிறான். இந்நிலையில் வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் ரகசியமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை கண்டுபிடித்து அழிப்பதற்கான தேடலை தன் நண்பர்களுடன் ஆரம்பிக்கிறான் ஹாரிபொட்டர்…

சிறுவர்களாக இருந்து வனப்பு மிக்க இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் மந்திரவாதிகளான ஹாரி, ரொன், ஹெர்மியோன் ஆகியோர் பெரியவர்களின் உதவிகளை நம்பியிராது, தம் முயற்சிகளாலும், திறமைகளினாலும் தீமையின் உச்சசக்தியை எதிர்த்து வெல்லவேண்டியிருப்பதை இயக்குனர் David Yates இயக்கியிருக்கும் Harry Potter and The Deathly Hallows திரைப்படம் திரையில் விரிக்கிறது.

இந்தப் போராட்டத்தின் மத்தியில் அந்த மூன்று இளம் மந்திரவாதிகளின் நட்பு, காதல், ஒற்றுமை என்பவற்றிற்கு ஏற்படும் சோதனைகளும் அதனை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டு தாண்டி வருகிறார்கள் என்பதும் படத்தின் பெரும்பகுதியாக முன்னிறுத்தப்படுகிறது.

ஒரு புறம் தன் பக்கம் ஆட்களையும், அதிகாரத்தையும் பெருக்கி கொள்ளும் வோல்டெர்மோர், தனது எதிரியான ஹாரியின் கதையை முடிக்க அனைத்து வழிகளையும் நாடி ஓட, மறுபுறம் வொல்டர்மோரின் உயிர்க்கூறுகள் மறைந்திருக்கும் பொருட்களிற்கான தேடலை நிகழ்த்துகிறார்கள் இளம் மந்திரவாதிகள்.

படத்தின் ஆரம்பம் அட்டகாசமாகத்தான் இருக்கிறது. ஹாரிக்கு 17 வயதாகி விடுமுன்பாக அவனைப் போட்டுத் தள்ளுவதற்காக வோல்டெர்மோர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் இருளும், திகிலும் கலந்து நிற்கிறது. நாகினி வேடத்தில் நடித்திருக்கும் பாம்பிற்கு இம்முறை ஆஸ்கார் நிச்சயம். சீறலிலும், உடல்மொழியிலும் நாகினிக்கு இணை நாகினிதான். ஆனால் பின்புவரும் காட்சிகளில் திரைப்படம் தன் வேகத்தை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்துவிடுகிறது.

ரொன் வீட்டுத் திருமணத்தில் இடம்பெறும் தாக்குதலின் பின்பாக மூன்று இளம் மந்திரவாதிகளும் ஆரம்பிக்கும் பயணம் ஜவ்வுபோல் இழுக்கிறது. பொறுமைக்கு சோதனை நிகழ்த்துகிறது.ரொன் தன் மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்க, ஹாரியும், ஹெர்மியோனும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். விறுவிறுப்பாக நகர்த்தி செல்லப்பட்டிருக்க வேண்டிய இப்பகுதியின் அளவிற்கதிகமான நீளமும், சுவாரஸ்யமிழந்த காட்சிகளும் ரசிகனை திரைப்படத்திலிருந்து விலத்தி எடுத்து செல்லும் மந்திரச் சொல்லை உச்சரித்து விடுகின்றன. நாவலின் இறுதிப்பகுதி இரண்டு பாகங்களாக திரைவடிவில் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அவசியம் என்ன எனும் கேள்வி மனதில் எழுகிறது [ துட்டு ஹாரி,துட்டு]. வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஜே. கே . ராலிங் ஆகியோரின் காதுகளில் சில்லறைகளின் இடை நிறுத்தாத ஹார்மோனி இசைத்துக் கொண்டேயிருப்பதை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. நல்லவேளையாக நான்கு பாகமாக எடுக்காமல் விட்டார்களே என்று களிப்புறுவதை தவிர வேறு வழியில்லை.

harry-potter-et-les-reliques-de-la-mort-partie-1-2010-15564-1138766867 ஹெர்மியோனை ஹாரி உதட்டில் ஆழமாக முத்தமிடும் காட்சி கற்பனையான ஒன்றாக இருந்தால் கூட மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ரொன்னைக் கொலைவெறி கொள்ள வைக்க வேண்டும் என்பது காரணமாக இருந்தாலும்கூட இந்த அளவிற்கு சென்றிருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. அந்த இரு பாத்திரங்கள் மீதும் வாசகனாக நான் கொண்டிருந்த மதிப்பு இதனால் சேதமுற்றது.

நல்ல நடிகர்களின் திறமைகள் இந்த அத்தியாயத்திலும் சிறப்பான விதத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் எல்ஃபுகள் வரும் காட்சிகள் ஜாலியாக இருக்கின்றன. டாபி எனும் எல்ஃபின் முடிவு நெகிழ வைக்கிறது. பின்னணி இசை கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்திருக்கிறது. பின்னணி இசைக்காகவே இத்திரைப்படத்தை ஒரு முறை பார்த்து தொலைக்கலாம். சில துரத்தல் காட்சிகளில் கமெராவின் அசைவும், வேகவும் அசரவைக்கிறது. அதிரடிக் காட்சிகள் எல்லாவற்றையும் அடுத்த பாகத்தில் மறைத்து வைத்திருக்கிறார்கள், இப்பாகத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை.

ஹாரி பொட்டரை அழிக்க உதவும் ஒரு முக்கியமான பொருளை வோல்டெர்மோர் தன் தேடலின் வழி கையகப்படுத்துவதுடன் திரைப்படம் நிறைவுறுகிறது. அசர வைக்கும் விளம்பர உத்திகள், மரண வசூல், திரையரங்குகளில் தள்ளுமுள்ளு என வெளியாகிய ஒரு வார காலத்தினுள்ளேயே ஹாரி பொட்டர் ஜூரத்தை தீவிரமாக்கிய இத்திரைப்படம் என்னைப்போன்ற ரசிகர்களிற்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. தம்பி ஹாரி, டீ இன்னும் வரல! [*]

ட்ரெயிலர்