Saturday, November 27, 2010

தம்பி ஹாரி, டீ இன்னும் வரல


ஹாரி பொட்டரின் பரமவைரியான வோல்டெர்மோரின் பலம் நாளிற்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மந்திரவாதிகளின் தலைமையகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வோல்டெர்மோர், ஹாரியை தீர்த்துக்கட்ட எல்லாவகையான நடவடிக்கைகளிலும் இறங்குகிறான். இந்நிலையில் வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் ரகசியமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை கண்டுபிடித்து அழிப்பதற்கான தேடலை தன் நண்பர்களுடன் ஆரம்பிக்கிறான் ஹாரிபொட்டர்…

சிறுவர்களாக இருந்து வனப்பு மிக்க இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் மந்திரவாதிகளான ஹாரி, ரொன், ஹெர்மியோன் ஆகியோர் பெரியவர்களின் உதவிகளை நம்பியிராது, தம் முயற்சிகளாலும், திறமைகளினாலும் தீமையின் உச்சசக்தியை எதிர்த்து வெல்லவேண்டியிருப்பதை இயக்குனர் David Yates இயக்கியிருக்கும் Harry Potter and The Deathly Hallows திரைப்படம் திரையில் விரிக்கிறது.

இந்தப் போராட்டத்தின் மத்தியில் அந்த மூன்று இளம் மந்திரவாதிகளின் நட்பு, காதல், ஒற்றுமை என்பவற்றிற்கு ஏற்படும் சோதனைகளும் அதனை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டு தாண்டி வருகிறார்கள் என்பதும் படத்தின் பெரும்பகுதியாக முன்னிறுத்தப்படுகிறது.

ஒரு புறம் தன் பக்கம் ஆட்களையும், அதிகாரத்தையும் பெருக்கி கொள்ளும் வோல்டெர்மோர், தனது எதிரியான ஹாரியின் கதையை முடிக்க அனைத்து வழிகளையும் நாடி ஓட, மறுபுறம் வொல்டர்மோரின் உயிர்க்கூறுகள் மறைந்திருக்கும் பொருட்களிற்கான தேடலை நிகழ்த்துகிறார்கள் இளம் மந்திரவாதிகள்.

படத்தின் ஆரம்பம் அட்டகாசமாகத்தான் இருக்கிறது. ஹாரிக்கு 17 வயதாகி விடுமுன்பாக அவனைப் போட்டுத் தள்ளுவதற்காக வோல்டெர்மோர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் இருளும், திகிலும் கலந்து நிற்கிறது. நாகினி வேடத்தில் நடித்திருக்கும் பாம்பிற்கு இம்முறை ஆஸ்கார் நிச்சயம். சீறலிலும், உடல்மொழியிலும் நாகினிக்கு இணை நாகினிதான். ஆனால் பின்புவரும் காட்சிகளில் திரைப்படம் தன் வேகத்தை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்துவிடுகிறது.

ரொன் வீட்டுத் திருமணத்தில் இடம்பெறும் தாக்குதலின் பின்பாக மூன்று இளம் மந்திரவாதிகளும் ஆரம்பிக்கும் பயணம் ஜவ்வுபோல் இழுக்கிறது. பொறுமைக்கு சோதனை நிகழ்த்துகிறது.ரொன் தன் மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்க, ஹாரியும், ஹெர்மியோனும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். விறுவிறுப்பாக நகர்த்தி செல்லப்பட்டிருக்க வேண்டிய இப்பகுதியின் அளவிற்கதிகமான நீளமும், சுவாரஸ்யமிழந்த காட்சிகளும் ரசிகனை திரைப்படத்திலிருந்து விலத்தி எடுத்து செல்லும் மந்திரச் சொல்லை உச்சரித்து விடுகின்றன. நாவலின் இறுதிப்பகுதி இரண்டு பாகங்களாக திரைவடிவில் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அவசியம் என்ன எனும் கேள்வி மனதில் எழுகிறது [ துட்டு ஹாரி,துட்டு]. வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஜே. கே . ராலிங் ஆகியோரின் காதுகளில் சில்லறைகளின் இடை நிறுத்தாத ஹார்மோனி இசைத்துக் கொண்டேயிருப்பதை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. நல்லவேளையாக நான்கு பாகமாக எடுக்காமல் விட்டார்களே என்று களிப்புறுவதை தவிர வேறு வழியில்லை.

harry-potter-et-les-reliques-de-la-mort-partie-1-2010-15564-1138766867 ஹெர்மியோனை ஹாரி உதட்டில் ஆழமாக முத்தமிடும் காட்சி கற்பனையான ஒன்றாக இருந்தால் கூட மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ரொன்னைக் கொலைவெறி கொள்ள வைக்க வேண்டும் என்பது காரணமாக இருந்தாலும்கூட இந்த அளவிற்கு சென்றிருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. அந்த இரு பாத்திரங்கள் மீதும் வாசகனாக நான் கொண்டிருந்த மதிப்பு இதனால் சேதமுற்றது.

நல்ல நடிகர்களின் திறமைகள் இந்த அத்தியாயத்திலும் சிறப்பான விதத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் எல்ஃபுகள் வரும் காட்சிகள் ஜாலியாக இருக்கின்றன. டாபி எனும் எல்ஃபின் முடிவு நெகிழ வைக்கிறது. பின்னணி இசை கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்திருக்கிறது. பின்னணி இசைக்காகவே இத்திரைப்படத்தை ஒரு முறை பார்த்து தொலைக்கலாம். சில துரத்தல் காட்சிகளில் கமெராவின் அசைவும், வேகவும் அசரவைக்கிறது. அதிரடிக் காட்சிகள் எல்லாவற்றையும் அடுத்த பாகத்தில் மறைத்து வைத்திருக்கிறார்கள், இப்பாகத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை.

ஹாரி பொட்டரை அழிக்க உதவும் ஒரு முக்கியமான பொருளை வோல்டெர்மோர் தன் தேடலின் வழி கையகப்படுத்துவதுடன் திரைப்படம் நிறைவுறுகிறது. அசர வைக்கும் விளம்பர உத்திகள், மரண வசூல், திரையரங்குகளில் தள்ளுமுள்ளு என வெளியாகிய ஒரு வார காலத்தினுள்ளேயே ஹாரி பொட்டர் ஜூரத்தை தீவிரமாக்கிய இத்திரைப்படம் என்னைப்போன்ற ரசிகர்களிற்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. தம்பி ஹாரி, டீ இன்னும் வரல! [*]

ட்ரெயிலர்

27 comments:

  1. தங்கள் பார்வை நல்லாயிருக்கு....

    ஹரி போட்டரில் ஏற்பட்ட தவறை பார்க்கணுமுன்னா இங்கே வாங்க...

    http://mathisutha.blogspot.com/2010/11/hollywood-2.html?utm_source=BP_recent

    ReplyDelete
  2. மொத்தத்தில் படம் வேலைக்கு ஆவலையா?:-)

    ReplyDelete
  3. அழகாக விமர்சித்துள்ளீர்கள்.

    ம்ம், இப்படியான படங்களை 1ம் பாகம், 2ம் பாகத்துடன் நிறுத்தியிருக்கலாம், தொடர்ந்து ஒரு கருப் பொருளை வைத்து எடுத்தால், நீங்கள் கூறியது போல ஜவ்வுபோல இழுபட வேண்டியது தான்.

    ReplyDelete
  4. Thodarthu 6partaiyum paartha enaku intha murai 7vathu partai paarka aarvamillai.eppadiyum 8vathu paartilthaan kadhai mudiyapokirathu.

    Padivu mikka nandru

    ReplyDelete
  5. //ஹெர்மியோனை ஹாரி உதட்டில் ஆழமாக முத்தமிடும் காட்சி கற்பனையான ஒன்றாக இருந்தால் கூட மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ரொன்னைக் கொலைவெறி கொள்ள வைக்க வேண்டும் என்பது காரணமாக இருந்தாலும்கூட இந்த அளவிற்கு சென்றிருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. அந்த இரு பாத்திரங்கள் மீதும் வாசகனாக நான் கொண்டிருந்த மதிப்பு இதனால் சேதமுற்றது.//

    அதே அதே.. அதவும் நிர்வாணமா..
    அந்த கதாப்பாத்திரங்களின் குலைவு அது.

    ReplyDelete
  6. //தம்பி ஹாரி, டீ இன்னும் வரல!//

    Exactly.. :)

    ReplyDelete
  7. காதலரே,
    படத்திற்கு போய் தூங்கியது தான் மிச்சம். டீயும் வரல வடையும் போச்சு

    ReplyDelete
  8. ஆஹா ஓஹோ

    என்று இருந்த நான்

    "அப்படியே ஷாக்காயிட்டேன் "(வடிவேலு பாணியில்)

    ReplyDelete
  9. //அதே அதே.. அதவும் நிர்வாணமா..
    அந்த கதாப்பாத்திரங்களின் குலைவு அது.//
    நாவலை பலமுறை படித்தவன் என்பதால் கூறுகிறேன். அந்தப் பொய்த்தோற்றம் வேல்டெமோரின் (Voldemort-ன் சரியான உச்சரிப்பு)ஒரு உயிர்நிலை தன்னை ரோன் அழிக்காமல் இருக்க வேண்டிக் காட்டியதே.

    வோல்டெமோருக்கு தமிழ்ப் பதிவர்களின் scruples புரியாது.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. நண்பர் ம.தி.சுதா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் எஸ்.கே, இப்படம் என்னைக் கவரவில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஐத்ருஸ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் MSK, தங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் லக்கி, தூங்கி விட்டீர்களா! பின்னணி இசை தூங்கவிட்டதா :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் விக்கி உலகம், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி :)

    நண்பர் dondu, நீங்கள் கூறியபடி உச்சரிப்பு வோல்டெமோர் என்பது மிக்க சரியானதே நன்றி. நானும் நாவலைப் படித்திருக்கிறேன். அக்காட்சியும் கற்பனை என்பது புரியாமல் இல்லை. ஹாரி, ஹெர்மியோன் ஆகிய இரு பாத்திரங்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பு அக்காட்சியால் பாதிக்கப்பட்டது. உங்களைப்போல் அதனை என்னால் இலகுவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதை எனக்குள்ள சுதந்திரமாக எண்ணிக் கொள்கிறேன் .
    //// வோல்டெமோருக்கு தமிழ்ப் பதிவர்களின் scruples புரியாது.// இவ்வரிகளை தேவையற்றவையாகவே நான் உணர்கிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  11. காதலரே,

    நான் இதுவரையில் ஒரு ஹாரி பாட்டர் (பாட்டனுக்கு மரியாதை தரும் விதத்தில் பாட்டர்?) படம் கூட பார்த்ததில்லை. நம்முடைய பயங்கரவாதி அந்த நாவலை எல்லாம் வாங்கி வாங்கி படிப்பார். சென்ற வாரம் நாங்கள் எங்களுடைய மொக்கை பட சங்கத்தில் என்ன படம் செல்லலாம் என்று யோசிக்கும்போது பிரபல பதிவராகிய அந்த மொக்கை பட சங்க உறுப்பினர் "ஹாரி போட்டார் போலாம் பாஸ்" என்று சொல்ல, நாங்களும் படை சூழ கிளம்பினோம்.

    பாதி படத்தில் எழுந்து வந்துவிடலாமோ என்று கூட நினைத்தோம். (பின் சீட்டில் ஒரு ஆண்டி சரமாரியாக கதையை சொல்லிக்கொண்டே வந்தார்கள், நாவலில் இப்படி இருக்கும், அடுத்து இவன் பாம்பால் தாக்கக்ப்படுவான் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வர மற்றொரு பதிவர் கடுப்பாகி விட்டார்).

    இதற்க்கு முந்தைய வாரத்தில் நாங்கள் பார்த்த ஸ்கைலைன் படம் எவ்வளவோ பரவாயில்லை என்றே தோன்றியது. இதில் இந்த வியாழன் அன்று நார்னியா 3D சிறப்பு காட்சி வேறு. அது எப்படி இருக்கோ என்று உள்ளூர ஒரு பயம்.

    மற்றவர்களுக்கு எப்படியோ, ஒரு சாதாரண ரசிகனை இந்த படம் ஈர்க்கவில்லை என்பது கண்கூடு. ஆனால் வசூலில் இது மகா சாதனைகளை செய்துவருவதை கண்டால் நம்முடைய ரசனைதிரமை மீது ஒரு கேள்விக்குறி வருவதை தவிர்க்கமுடியவில்லை.

    ஸ்கைலைன் படத்தில் கூட இரண்டு மூன்று சீன்கள் (அந்த சீன்கள் அல்ல) நன்றாகவே இருந்தன. இந்த படத்தில் ஒரு காட்சியை தவிர மற்றவை அனைத்தும் சுமாறே.

    ReplyDelete
  12. ஆனாலும் எங்களுடைய மொக்கை பட சங்கதிர்க்கே இந்த படம் பிடிக்கவில்லை என்றால், மற்றவர்கள் கதி என்ன?

    ஒரு மொக்கை பட கும்பலுக்கே இந்த படம் மகா மொக்கையாக இருக்கு என்றால் அப்போ இது எவ்வளவு மகா மொக்கை என்று யோசித்து பாருங்கள்.

    ReplyDelete
  13. நண்பர் விஸ்வா, ஹாரி பாட்டர் பெயரை வைத்தே வசூல் செய்து விடுகிறார்கள். அதுவும் ஒரு வாரத்தினுள். ஆசிரியை நாவல் வரிசையை தொடர தனக்கு ஒரு எண்ணம் இருப்பதாக கூறியிருக்கிறாராம் எனவே ஜாக்ரதையாக இருப்பது நல்லது. நாவல் வரிசை நன்றாக இருக்கும். நார்னியா 3 ஐ பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன். நாம் மொக்கை என்கிறோம் பிறர் திரைப்படவரிசையிலேயே இதுதான் சிறந்தது என்று சாதிக்கிறார்கள். அவரவர் ரசனைக்கேற்ப கருத்துக்கள் மாறுபடலாம் இருப்பினும் மனதில் ஒரு வலி உருவாகமல் இல்லை- இது சிறந்த படம் எனக் கேட்கையில் :) தங்கள் விரிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. விருதகிரி பார்க்க மாட்டீர்களா.

    ReplyDelete
  14. // விறுவிறுப்பாக நகர்த்தி செல்லப்பட்டிருக்க வேண்டிய இப்பகுதியின் அளவிற்கதிகமான நீளமும், சுவாரஸ்யமிழந்த காட்சிகளும் ரசிகனை திரைப்படத்திலிருந்து விலத்தி எடுத்து செல்லும் மந்திரச் சொல்லை உச்சரித்து விடுகின்றன.//

    புக்கிலேயே அப்படி தான் தல.
    இந்த படங்களை விட புக் அருமையாக இருக்கும் என்றாலும்,கடைசி பாகம் ரொம்ப மட்டம்.
    ஆனால், கடைசி இரண்டு பாகத்தில், புக்கின் போக்கில் போகாமல் ஏதோ மாற்றம் செய்யப் போவதாய் சொன்னார்கள்.அப்படி எதுவும் இருப்பதாய் தெரியவில்லையே! ஒருவேளை,எட்டாம் பாகத்தில் எதுவும் இருக்குமா என்று தெரியவில்லை.இருந்தால், நான் பார்க்கலாம்.

    //நல்லவேளையாக நான்கு பாகமாக எடுக்காமல் விட்டார்களே என்று களிப்புறுவதை தவிர வேறு வழியில்லை.//

    ஹாஹா... :)

    ReplyDelete
  15. //நண்பரே. விருதகிரி பார்க்க மாட்டீர்களா//

    நண்பரின் மூலம் சமீபத்தில் கேப்டனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது - வேறொரு விஷயமாக. அப்போது விருதகிரி பற்றி கேட்டேன்.

    விரைவில் ஒரு ஸ்பெஷல் ஷோ அர்ரெஞ் செய்கிறேன் என்று சொன்னார். காத்திருக்கிறேன். அந்தப்படம் லியாம் நீசன் நடித்த TAKEN படத்தின் ஒரு மூலத்தை மைய்யமாக கொண்ட கதை என்று சொல்கிறார்கள்.

    ReplyDelete
  16. நண்பர் இலுமினாட்டி, என்னைக் கேட்டால் ஐந்தாம் பாகம் முதலே கதையானது சற்று நீண்டு போக ஆரம்பித்துவிட்டது என்பேன். ஆனால் ஏழு நாவல்களும் சிறப்பாக இருந்தன எனக்கூறும் வாசகர்கள் உண்டு :) அடுத்த பாகத்தில் மாற்றங்கள் உண்டு என்று என சொல்லியே திரையரங்கிற்கு எம்மை வரவைத்து விடுவார்கள்.

    விஸ்வா, இங்கு முன்பு விஜயகாந்த் திரைப்படம் வெளியாகிறது என்றால் எமக்கு கொண்டாட்டம்தான். இப்போது இங்கு அவர் படத்தை வெளியிடுவதில்லை. அவர் ரசிகர் மன்றமும் இவ்விடயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறது. நிச்சயமாக லியம் நீசனை விட விஜயகாந்தின் வசனங்கள் அட்டகாசமாக இருக்கும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  17. I am sorry to say this,you didnt understand the knot of the story,its one of the great movie in its installment.i am really sorry did u read the books of it or not? when u write review plz go thro all of it!

    ReplyDelete
  18. நல்ல பகிர்வு

    ReplyDelete
  19. அனானி அன்பரே, உங்களிற்கு பிடித்திருக்கிறது. என்னைக் கவரவில்லை. எனக்கு புரியாத கதையின் அந்த முடிச்சை தயவுசெய்து நீங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளலாமே. திரைப்படம் குறித்த பதிவிற்கு நாவல்களை படித்திருக்க வேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லையே :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    roshaniee, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  20. // [ துட்டு ஹாரி,துட்டு]. வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஜே. கே . ராலிங் ஆகியோரின் காதுகளில் சில்லறைகளின் இடை நிறுத்தாத ஹார்மோனி இசைத்துக் கொண்டேயிருப்பதை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. நல்லவேளையாக நான்கு பாகமாக எடுக்காமல் விட்டார்களே என்று களிப்புறுவதை தவிர வேறு வழியில்லை. //

    ரொம்ப நொந்து நூடுல்ஸ் ஆகின மாதிரி தெரிகிறது காதலரே :))
    .

    ReplyDelete
  21. // தம்பி ஹாரி, டீ இன்னும் வரல //

    தலைப்பே ரொம்ப சூடாக இருக்கிறது காதலரே உங்களைப்போல :))
    .

    ReplyDelete
  22. நண்பர் சிபி, இங்கு இப்போது அடிக்கும் குளிரில் சூடாக இல்லாவிடில் சற்று சிரமம்தான். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  23. ’அரை ரத்த இளவரசன்’ படம் பார்த்து மண்டை காய்ஞ்சு போய், த்யேட்டர்ல குறட்டை விட்டு தூங்குனதுனால இந்த படத்துக்கு போகவே கூடாதுன்னு எப்பயோ முடிவெடுத்தாச்சு. நாம வடை போச்சேன்னு இருந்தாலும், வார்னர் ப்ரதர்ஸ் ஏற்கனவே 600 மில்லியன் கல்லா கட்டிட்டாய்ங்க...

    ReplyDelete
  24. நண்பர் பிரசன்னா ராஜன், அதற்குள்ளாகவா 600 மில்லியன்... அடக் கடவுளே!

    ReplyDelete
  25. 8வது பாகத்துக்கு
    “ ஹாரி பாட்டரும் சப்ப மேட்டரும்” னு பேரு வெக்க சொல்லுங்க!:) ஜே கே ரெவ்லிங்கோட பாட்டி நம்ம அம்புலிமாமா படிச்சு சொன்ன கதையதான் அந்த அம்மணி நாவலா எழுதி இருக்கு! நம்ம ஆளுங்க ஆ ன்னு வாய பொளந்துகிட்டு பாராட்டுறாங்க நண்பரே :(

    ReplyDelete
  26. நண்பர் Cap tiger, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி :)

    ReplyDelete
  27. Intha Dondu thaan anony-yaa vanthirukku...

    aana.. intha anany vera

    ReplyDelete