
சர்வதிகார ஆட்சிகளாலும், அதன் பின் நிகழ்ந்த கப்சா புரட்சிகளாலும் அல்லல்பட்ட தென்னமெரிக்காவின் சிறு நாடுகளில் ஒன்று கொஸ்டா வேர்ட். NSAயின் இயக்குனன் ஜியோர்டினோவின் கொடூரக் கொலைஞர்களின் சதிப்பொறிகளிலிருந்து வெற்றிகரமாகத் தப்பிக்கும் மக்லேன், அமெரிக்காவை நீங்கி தன் முன்னாள் காதலி[மனைவி!] மரியா ஜனாதிபதியாகவிருக்கும் கொஸ்டா வெர்ட் நாட்டை வந்தடைகிறான்.
கொஸ்டா வெர்ட் நாட்டின் அண்டை நாடான சன் மிகுவெலில் தஞ்சம் புகுந்திருந்த ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், கேணல் ஏமஸ் ஆகியோர் அங்கு நிகழ்ந்து விட்ட எதிர்பாராத அசம்பாவிதங்களினால் கொஸ்டா வெர்ட் நாட்டில் மக்லேனிற்கு முன்பாகவே வந்து தஞ்சம் அடைந்திருக்கின்றனர்.
தாங்கள் தேடும் மக்லேன் கோஷ்டி, கொஸ்டா வெர்ட்டில் தங்கியிருப்பதை அறிந்து கொள்ளும் அமெரிக்க அரசு உடனடியாக அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி கொஸ்டா வெர்டின் ஜனாதிபதி மரியாவிடம் கேட்டுக் கொள்கிறது. மக்லேன் கோஷ்டியுடன் கொஸ்டா வெர்டில் சிறை வைக்கப்பட்டிருக்கும் காலஞ் சென்ற சர்வதிகாரி ஓர்ட்டிஸின் ஆசைநாயகி, அம்சமான அழகி பெலிசிடி பிரவுனையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் அமெரிக்க அரசு வேண்டுகிறது.
தங்கள் வேண்டுகோளை நிறைவேற்றத்தவறும் பட்சத்தில் கொஸ்டா வெர்ட் நாட்டிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அமுலிற்கு கொண்டு வரும் எனவும் மரியாவிற்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை செய்கிறது.
தன் நாட்டினை மேலும் சிக்கலுக்குள் மாட்டி வைக்க விரும்பாத மரியா, அமெரிக்காவின் வேண்டுகோளிற்கு இணங்க அவர்கள் கேட்ட நபர்களை கொஸ்டா வெர்டிலிருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கச் சம்மதிக்கிறாள்.
ராணுவச் சிறையொன்றில் கைது செய்து வைக்கப்பட்டிருந்த மக்லேன் கோஷ்டி மற்றும் பெலிசிடி பிரவுன் ஆகியோரைக் சளைக்காமல் கொட்டும் மழையில் பலத்த ராணுவப் பாதுகாப்புடன் அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க எடுத்துச் செல்கிறார்கள் கொஸ்டா வெர்ட் வீரர்கள். செல்லும் வழியில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் மக்லேன் கோஷ்டியும், பெலிசிட்டி பிரவுனும் கடத்தப்பட்டு விடுகிறார்கள்.
தங்களை ஒர் பழிவாங்கும் குழுவாக அடையாளம் காட்டிக்கொள்ளும் இனம் தெரியாத ஆயுததாரிகள், தாங்கள் கடத்திச் சென்றவர்களை விடுவிக்க வேண்டுமானால் அதற்குப் பதிலாக பெருந்தொகைப் பணம் பணயத்தொகையாக தங்களிற்கு தரப்பட வேண்டும் என அமெரிக்க தூதரகத்திடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள். இதனை அறிந்து கொள்ளும் மரியா கடத்தப்பட்டவர்களை தேடுவதற்கான நடவடிக்கைகளில் தன் வீரர்கள் உடனடியாக இறங்குவார்கள் என அமெரிக்கத் தூதுவரிடம் தெரிவிக்கிறாள்.
மக்லேன் கோஷ்டியைக் கடத்திச் சென்ற ஆயுததாரிகள் தங்கள் நிஜ முகத்தை அவர்களிற்கு வெளிப்படுத்தும் போது ஆச்சர்யத்தால் அதிர்ந்து போகிறது மக்லேன் கோஷ்டி. கொஸ்டா வெர்டில் தங்களிற்கு நெருக்கமானவர்களின் அட்டகாசமான ஏற்பாட்டில் நடைபெற்ற நாடகம்தான் இந்தக் கடத்தல் நடவடிக்கை என்பதையும் அக்கோஷ்டி அறிந்து கொள்கிறது.
மாண்டோகிறிஸ்டோ அணைக்கு அருகில், செயற்கை ஏரி ஒன்றின் நெருக்கத்திலுள்ள ஒர் தங்குமிடத்திற்கு மக்லேன் கோஷ்டியை அழைத்துச் செல்கிறார்கள் அந்த ஆயுததாரிகள். இயற்கையின் எழில் காதலுடன் ஆக்கிரமித்திருக்கும் அப்பகுதியில் அவர்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறான் ஷோன் முல்வே. மக்லேன் கோஷ்டி ஏரிப்பகுதியில் சுதந்திரமாக உலாவ ஆரம்பிக்க பெலிசிடி பிரவுன் மட்டும் ஆயுததாரிகளினால் தனியாக அடைத்து வைக்கப்படுகிறாள்.
இவ்வளவு நாட்களாக கொஸ்டா வெர்டில் தான் தேடி அலைந்து கொண்டிருந்த ஓர் ரகசியம் குறித்து மக்லேன் கோஷ்டிக்கு விளக்கும் ஷோன், அந்த ரகசியம் மண்டோகிறிஸ்டோ ஏரியில், ஐம்பது மீற்றர் ஆழத்தில் அமிழ்ந்திருக்கிறது எனும் தகவலை தான் கண்டுபிடித்துவிட்டதையும் அவர்களிடம் கூறுகிறான். இதேவேளை தனியாக சிறை வைக்கப்படிருந்த பெலிசிட்டி, தன் கவர்ச்சியால் ஒர் காவல் வீரனை மயக்கி அங்கிருந்து தப்பித்துச் சென்று விடுகிறாள்.
ஆயுததாரிகளிடமிருந்து தப்பிய பெலிசிட்டி நேரடியாக கொஸ்டா வெர்டின் CIA பொறுப்பதிகாரி ஸ்பென்ஸரிடம் தஞ்சமடைகிறாள். தனக்குப் பணமும், பாஸ்போர்ட்டும் சிஐஏ தந்து உதவுமானால் மக்லேன் கோஷ்டியின் இருப்பிடத்தை தான் காட்டித்தருவதாக அவள் ஸ்பென்சருடன் பேரம் பேசுகிறாள். பெலிசிட்டியின் பேரத்தை ஸ்பென்ஸர் ஏற்றுக்கொள்கிறான்.
பெலிசிட்டி, மக்லேன் கோஷ்டியின் இருப்பிடத்தை ஸ்பென்சரிற்கு காட்டித்தருகிறாள். ஸ்பென்ஸர் அமெரிக்க தலைமையகத்தை தொடர்பு கொண்டு இப்புதியதகவலை தெரிவிக்கிறான். இந்த தகவலை அறியும் ஜியோர்டினோ, ஜெனரல் விட்டேக்கரிடம் உடனடியாக காமாண்டோ குழுவொன்றை ரகசியமாக கொஸ்டா வெர்டிற்கு அனுப்பி வைத்து மக்லேன் கோஷ்டியின் கதையை முடிக்கச் சொல்கிறான். இதனை மறுத்து விடும் ஜெனரல் விட்டேக்கர் தான் ஜியோர்டினோவின் சதிகளில் இனி பங்கு கொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கிறான்.
இதனால் சற்றும் அசந்து போகாத ஜியோர்டினோ சிஐஏயின் தலைவருடன் ஒர் புதிய திட்டத்தை உருவாக்குகிறான். சிஐஏயின் ரகசிய அதிரடி அணியொன்றை கொஸ்டா வெர்டிற்கு அனுப்பி வைத்து மாண்டோகிறிஸ்டோ அணையை சிதறடிக்க செய்வதே அத்திட்டம்.
வெடிப்பினால் உருவாகும் வெள்ளப் பேரழிவில் அணைக்கு அருகிலிருக்கும் பல கிராமங்கள் நீரில் மூழ்கும், வெள்ளத்தில் அகப்பட்டு மக்லேன் கோஷ்டியும் பரலோகம் செல்வார்கள், பேரழிவைத் தொடர்ந்து நாட்டில் ஏற்படும் பதட்ட நிலையைப் பயன்படுத்தி மரியாவின் ஆட்சியை வீழ்த்தி, அமெரிக்க கைப்பாவை அரசொன்றை கொஸ்டா வெர்ட்டில் நியமிக்கலாம் என்பன அத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் ஆகும். அத்திட்டத்திற்கு ஜியோர்டினோ ஆப்பரேஷன் மாண்டோகிறிஸ்டோ எனப் பெயர் சூட்டி மகிழ்கிறான்.
பெலிசிட்டி தப்பி ஒடியதால் மாண்டோகிறிஸ்ரோ ஏரியில் மூழ்கி அங்கு அமிழ்ந்திருக்கும் ரகசியத்தினை தேடும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுகிறது. மக்லேனும், மேஜர் ஜோன்ஸும் ஏரி நீரில் மூழ்குகிறார்கள். இதே ஏரியின் அடியில் மாண்டோகிறிஸ்ரோ அணையைத் தகர்ப்பதற்காக குண்டுகளை வைக்க சிஐஏயின் ரகசிய அதிரடிப்படை நபர்கள் ஏற்கனவே மூழ்கியிருப்பதை பாவம் அவர்கள் அறியமாட்டார்கள்….
XIII காமிக்ஸ் தொடரின் 16வது ஆல்பமான OPERATION MONTECRISTO விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாத ஓர் கதை சொல்லலை தன்னகத்தே கொண்டிருக்கிறது. மக்லேன் கோஷ்டியை ஆயுததாரிகள் கடத்துவதிலிருந்து கதையின் முடிவு வரை, சில தருணங்களை தவிர்த்து தொய்வில்லாது தெளிவாகக் கதையை நகர்த்தியிருக்கிறார் வான் ஹாம். பெலிசிட்டி ஆயுததாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற பின்பாக கதையின் வேகம் அதிகரிக்கிறது. மக்லேனும், ஷோன் முல்வேயும் உணர்சி தெறிக்க உரையாடும் தருணங்கள் கதையின் வேகத்திற்கு தடை போடும் தருணங்களாக அமைந்து விடுகின்றன.
கடந்த ஆல்பங்களில் ஜியோர்டினோ சொல்வதெற்கெலாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்த ஜெனரல் விட்டேக்கர், ஜியோர்டினோவின் கூட்டணியிலிருந்து பிரிந்து செல்வதை, XIII காமிக்ஸ் தொடரின் இரண்டாம் சுற்றின் முடிவை முன்னறிவிக்கும் திருப்பங்களில் ஒன்றாக எடுத்துக் கொள்ளலாம்.[நீரினடியிலிருக்கும் பிறிதொரு திருப்பத்தை கதையைப்படிக்கும்போது நீங்களே தெரிந்து கொள்வீர்கள்]
கதையின் இறுதிப்பக்கங்களில் மக்லேன் அணியினரிற்கு ஓர் இழப்பு ஏற்படுகிறது. வாசகர்களிற்கு உணர்ச்சிகரமான தருணத்தை தர விரும்பி வான் ஹாம் இதனை உருவாக்கியிருக்கலாம். ஆனால் இது தேவையற்ற ஓர் இழப்பு என்பதே என் தாழ்மையான கருத்து.
ஜெனரல் காரிங்டனின் பாத்திரம் கதையிலும், சித்திரத்திலும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. காரிங்டனை வான்ஸ் மிக எடுப்பாக வரைந்திருக்கிறார். ஜனாதிபதி மரியா, மேஜர் ஜோன்ஸ் என எந்தப் பெண் வந்தாலும் கூச்சமில்லாமல் அணைத்துக் கொள்கிறார் மக்லேன். மக்லேனிற்கு ஜேசன் ஃப்ளை, கெலி பிரையன் போன்ற பெயர் வரிசைகளில் ஜெமினி கணேசன் எனும் பெயரையும் சூட்டி மகிழவே மனம் விரும்புகிறது. பெலிசிட்டி இந்த ஆல்பத்தின் கவர்ச்சி வினியோகத்திற்கு பொறுப்பேற்றிருக்கிறார். பெலிசிட்டிக்கு வயதுதான் கொஞ்சம் அதிகம் மிகுதியெல்லாம்……தாராளம். மக்லேன் எந்தப் பெண்ணிற்கு அருகில் சென்றாலும் மூஞ்சியை நீட்டும் மேஜர் ஜோன்ஸ், அழகு.
கொட்டும் மழையில் இடம்பெறும் கடத்தல் காட்சி, இயற்கை எழில் சூழ்ந்த மாண்டோகிறிஸ்டோ ஏரிக்காட்சிகள், நீரடிக் காட்சிகள் என வான்ஸ் கலக்கியிருக்கிறார். ஆனால் நீரடி மோதல் காட்சிகளில் பாத்திரங்களை சரியாக அடையாளப் படுத்திக் கொள்ள வாசகன் பக்கங்களை மீண்டும் மீண்டும் பார்த்து சிரமப்பட வேண்டியிருக்கிறது.
XIII காமிக்ஸ் தொடரின் 16வது ஆல்பம் அது வெளியாகுமுன்பே கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒன்று, டார்கோட் தளத்தில் சில வருடங்களின் முன்பாக XIIIன் ஆல்பங்களிலேயே அதிகம் விற்பனையான ஆல்பம் என்று அறிவிக்கப்பட்ட ஒன்று. இவற்றைத் தாண்டி XIIIன் இரண்டாவது சுற்றில் தேறிய அரிதான ஆல்பங்களில் ஒன்று. [***]
எஞ்சியிருக்கும் இரு ஆல்பங்கள் குறித்தும் சுருக்கமாக கூறுவதே நல்லது என்று எண்ணுகிறேன். முடிவைத் தொட்டுவிட்ட தொடர் ஒன்றின் மர்மங்களை உடைக்காது இருப்பதே சாலச்சிறந்தது.
XIII.17- மக்ஸிமிலியனின் தங்கம்
கொஸ்டா வெர்ட்டில் அபாயங்களை முறியடிப்பதில் வெற்றி கண்ட மக்லேன் குழுவினர், ஏரியின் அடியில் கண்டெடுத்த ரகசியத்துடன் கொஸ்டா வெர்ட் நாட்டை நீங்கி மெக்ஸிக்கோவிற்கு செல்கின்றனர். பசுபிக் கரைகளின் அருகிலிருக்கும் ஒர் பகுதியில் ஜெனரல் காரிங்டனிற்கு வேண்டிய ஒருவனின் விடுதியில் ரகசியமாக மறைந்திருக்கின்றனர் மக்லேன் குழுவினர்.
தன்னுடன் இணைந்து செயற்பட மறுத்து விட்ட ஜெனரல் விட்டேக்கரை தீர்த்துக் கட்ட உத்தரவுடுகிறான் ஜியோர்டினோ. இக்கொலை முயற்சி ஏற்படுத்தும் விளைவுகள் ஜியோர்டினோவை மக்லேன் கோஷ்டியைத் தேடி மெக்ஸிக்கோ நோக்கி செல்ல வைக்கின்றன.
தாங்கள் ஏரியில் கண்டெடுத்த ரகசியத்தின் உதவியுடன் மக்லேன் குழுவானது மெக்ஸிக்கோவில் அவர்கள் தேடி வந்த பொருள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்கிறது. அப்பொருளைத் தேடி மெக்ஸிக்கோவின் ஆளரவமற்ற அபாயமான மலைப்பகுதிக்கு விரைகிறார்கள் அவர்கள். இவர்களை ரகசியமாகப் பின் தொடர்கிறது மெக்ஸிக்கோ கொள்ளைக் கோஷ்டி ஒன்று….
இந்த ஆல்பம் குறித்து பெரிதாகக் கூற எதுவுமில்லை. கதையில் எதிர்பாராதது ஆல்பத்தின் இறுதிப்பக்கத்தில் ரீ எண்ட்ரியாகும் ஒரு பெண்பாத்திரம். முன்னைய ஆல்பம் ஒன்றில் இப்பாத்திரம் மீது ரசிகர்கள் கொண்ட பிரியத்தை உடைக்கும் மீள்வருகையாக அது அமைந்து விடுகிறது. வான்ஸின் ஓவியங்களில் ஊசி மலைக்காட்சிகள் சிறப்பாக இருக்கிறது. காமிக்ஸ் தொடரின் இறுதி ஆல்பத்திற்கு முன்பான ஆல்பத்தில் கோட்டை விட்டிருக்கிறார் வான் ஹாம். வலுவற்ற கதை கொண்ட இந்த ஆல்பம் ரசிகர்களை ஏமாற்றவே செய்யும். [**]
XIII.19- இறுதிச் சுற்று
பத்திரிகையாளன் டேனி வெளியிடும் இரு புத்தகங்கள் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது. மெக்ஸிக்கோவில் மறைந்திருக்கும் மக்லேன் குழுவையும், அவர்களை முடித்து விடுவதற்காக அங்கு சென்றிருக்கும் ஜியோர்டினோவையும், விசாரணை ஒன்றின் முன்பாக நிறுத்துவதற்காக உடனடியாக அமெரிக்க மண்ணிற்கு எவ்வழியிலாவது கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு ஒர் ஏஜெண்டிடம் ஒப்படைக்கப்படுகிறது. இப்பணியை நிறைவேற்ற மெக்ஸிக்கோ கிளம்பிச் செல்கிறார் அந்த ஏஜெண்ட்.
மெக்ஸிக்கோவில் இருக்கும் மக்லேன் குழுவை தீர்த்துக்கட்ட ஜியோர்டினோ, மெக்ஸிக்கோ மாபியா கும்பல் என்பன முழுவீச்சில் இறங்க, அமெரிக்காவில் நடக்கவிருக்கும் விசாரணையில் சில முக்கிய சாட்சிகள் பங்கு கொள்ளவே கூடாது என விரும்புகிறான் அதிகாரத்தின் உயர் மட்டத்திலிருக்கும் ஒர் நபர். தன் விருப்பத்தை நிறைவேற்ற அவன் கூலிக்கமர்த்திக் கொள்வது மேன்மைமிகு கொலைகாரி இரினாவை….
பல வருடங்களாக XIII காமிக்ஸ் தொடரின் ரசிகர்கள் ஏங்கிக் கிடந்த அதன் இறுதி ஆல்பம் முதல் பாதியில் பரபரப்பாக நகர்கிறது. திடீர் திருப்பங்களிற்கும், ஆக்ஷனிற்கும் குறைவேயில்லை. ஆல்பத்தின் பின்பாதி விசாரணைக் காட்சிகளில் தன்னை மூழ்கடிக்கிறது. ஆல்பத்தின் இறுதிப்பக்கத்தை படித்து முடிக்கும் போது “அட இவ்வளவுதானா” என்ற முனகல் வருவதைத் தவிர்க்க முடியாது.
தொடர் நெடுகிலும் முன்னைய ஆல்பங்களில் வாசகர்கள் அறிந்திருந்த தகவல்கள் மீண்டும் கூறப்படுகிறது. தமிழில் கதையை ஒரே தொகுப்பில் படிக்கப்போகும் வாசகர்களை இது சற்றுச் சலிப்படையவே வைக்கும். ஏஜெண்ட் XIIIன் அடையாளம் உறுதி செய்யப்படுகிறது இருப்பினும் அவனின் முன்னைய நினைவுகள் அவனிற்கு திரும்பவில்லை. ஆனால் கதையை வேறு ஓர் தளத்தில் தொடர்ந்து கொண்டு செல்வதற்குரிய சாத்தியத்தையும்! மர்மத்தையும்!! ஆல்பம் தன்னுள் கொண்டிருக்கிறது.
கதையின் நெகிழ்வான தருணம், கடற்கரையில் ஏஜெண்ட் XIIIஐ நினைவிழந்த நிலையில் காப்பாற்றிய தம்பதிகள் தங்கள் இறப்பின் பின்னும் கூட அவனிற்கு தரும் ஓர் அன்பு நிறைந்த, ஆச்சர்ய வடிவில் வருகிறது.
வான்ஸும், வான் ஹாமும் தங்கள் பணியை இயன்றளவு செய்திருந்தாலும் கூட XIIIன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை இந்த ஆல்பம் முழுமையாக நிறைவு செய்து விடவில்லை என்பதே உண்மை. தமிழ் ரசிகர்கள் மனதில் தொடரின் முடிவு தரும் எதிர்வினைகளையும், XIII எனும் நாயகன் மேல் அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தின் உருமாற்றத் தெறிப்புகளையும் தமிழ் தொகுப்பின் வரவின் பின் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். [***]
XIII காமிக்ஸ் தொடர் போன்று வாசகர்களை பரவலாகச் சென்றடைந்து வெற்றி பெற்ற காமிக்ஸ் தொடர்கள் காமிக்ஸ் வரலாற்றில் அதிகமில்லை. அதே போன்று காமிக்ஸ் சந்தையை XIIIக்கு முன், XIIIக்கு பின் எனவும் பிரித்துக் கொள்ளலாம்.
காமிக்ஸ் சந்தைக்கு அது கண்டிராத வகையில் விளம்பரப் பிரசார நுட்பங்களை அறிமுகம் செய்து வைத்த பெருமை XIII தொடரிற்கு உண்டு. அதன் படிப்படியான வளர்ச்சி இன்று Dan Brown நாவல்களின் விளம்பரங்கள், மற்றும் பிரபல சினிமா தயாரிப்புக்களிற்கு செய்யப்படும் விளம்பரங்கள் போன்று காமிக்ஸ் ஆல்பங்களிற்கும் விளம்பரங்கள், ட்ரெயிலர்கள் உருவாக்கப்படுகின்றன. வெகுஜன ஊடகங்களில் புதிய ஆல்பங்களின் வருகை, வெளியீடு போன்றவை குறித்த செய்திகள் வருவதற்கு தவறுவதே இல்லை.
சுருக்கமாக கூறினால் காமிக்ஸ் துறை நன்றாக இயங்குகிறது. பல்வேறுபட்ட காமிக்ஸ் பதிப்பகங்களிற்கிடையிலான போட்டியின் விளைவாக மிகச் சிறப்பான படைப்புக்கள் வாசகனை வந்தடைகின்றன. கிராபிக் நாவல்களின் தரமும், உள்ளடக்கமும் அசத்துகிறது. மங்கா வகை தனக்கென ஓர் தனியிடத்தையும் வாசகர் வட்டத்தையும் உருவாக்கி வெற்றி நடை போடுகிறது.
XIII காமிக்ஸ் தொடரின் வாசகர்களில் ஒருபகுதியினர் அவர்களிற்கு கிடைக்கக்கூடிய பலதரப்பட்ட காமிக்ஸ் பிரதிகளின் வாசிப்பின் மூலம் XIIIன் வாசிப்பனுபவத்தை கடந்து சென்று விடுகிறார்கள். புதிய படைப்புக்களின் வாசிப்பனுபவம் XIII தந்திருந்த வாசிப்பனுபவத்தை சில வேளைகளில் ஒரு படி கீழே இறக்கி விடுகிறது. இவ்வகை வாசகர்களிற்கு இப்போது XIII என்பது சிறந்த ஓர் வாசிப்பனுபவமோ அல்லது குறிப்பிடத்தக்க காமிக்ஸ் தொடரோ அல்ல.
ஆனால் XIIIக்கு இன்றும் வாசகர்கள் கிடைத்த வண்ணம் இருக்கிறார்கள். XIIIஐ புதிதாய் கண்ட வாசகனை அத்தொடர் தன்பால் கவர்ந்திழுக்கும் மந்திரத்தை தன்னுள் கொண்டதாகவே இருக்கிறது. தொடர் ஆரம்பித்து இருபத்தி ஐந்து வருடங்களாகியும் இன்றும் வெளிவரும் புதிய பதிப்புகள் XIII தொடரிற்கிருக்கும் கிராக்கியை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இது தொடரும்.
இனியும் XIII என்பதனை ஓர் அதிர்ஷ்டமில்லாத எண் என்று முழுமையாகக் கூறிவிட முடியுமா என்ன?!
ஒன்று, இரண்டு….XIII நிறைவடைந்தது.
நண்பர்கள் அனைவரிற்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.