Showing posts with label L'ombre Du vent. Show all posts
Showing posts with label L'ombre Du vent. Show all posts

Saturday, August 29, 2009

காற்றின் நிழல்


1945, ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்தத்திற்கு பின்பான காலப்பகுதி. சிறுவன் டானியல் தன் குழந்தைப் பருவத்திலேயே தன் அன்னையை இழந்தவன். புத்தகசாலை ஒன்றை நடத்தி வரும் தன் தந்தையுடன் அவன் வாழ்ந்து வருகிறான்.

தாயின் மரணத்தின் பின்னும் டானியலால் தன் தாயை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் உறங்கப் போகுமுன்பாக அறையில் உறையும் இருளில், தன் கண்களை மூடியவாறே தன் தாயுடன் அவன் மெல்லிய குரலில் உரையாடிக் கொள்கிறான்.

ஒர் நாள் அதிகாலையில் தன் படுக்கையில் விழித்தெழும் டானியல், தன் தாயின் முகத்தை தன்னால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லையே எனத் தேம்பி அழுகிறான். அவனை தன் அரவணைப்பில் எடுத்துக் கொள்ளும் அவன் தந்தை, டானியலை ரகசியமான ஒர் இடத்திற்கு தான் அழைத்துச் செல்லப் போவதாக தெரிவிக்கிறார்.

பனிமூட்டம் மூச்சு முட்ட ஆக்கிரமித்திருக்கும் தெருக்களின் வழியாக, டானியலை அழைத்து செல்லும் அவன் தந்தை, மிகப்பழமையான தோற்றம் கொண்ட கட்டிடம் ஒன்றிற்கு அவனை இட்டுச் செல்கிறார். அந்தக் கட்டிடம்தான் மிகச் சிலரிற்கே தெரிந்த, மறக்கப்பட்ட நூல்களின் கல்லறை என்றும் அவனிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

அக்கல்லறைக்கு முதல் தடவையாக வருபவர்கள் எவரும் அங்கிருந்து தனக்கென ஒர் புத்தகத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டுமென்பது ஒர் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. பரந்து கிடக்கும் சமுத்திரமாக தோன்றும், தூசி படிந்த புத்தகத் தட்டுக்களில் ஆர்வத்துடன் தன் தேடலை ஆரம்பிக்கிறான் டானியல். அவன் தேடலின் முடிவாக அவன் ஒர் புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறான். அப்புத்தகத்தின் பெயர் காற்றின் நிழல் என்பதாகும்.

யூலியன் கராக்ஸ் எனும் எழுத்தாளனால் எழுதப்பட்ட அப்புத்தகத்தை தன் வீட்டிற்கு எடுத்து வரும் டானியல் அதனைப் படிக்க ஆரம்பிக்கிறான். புதிய விடியலொன்றின் துவக்கம் வரை டானியல் அந்நாவலைப் படிக்கின்றான். அக்கதை அவனை மயக்கி விடுகிறது.

சில வேளைகளில் ஆர்வம், எங்களையும் மீறி முன்னே ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். காற்றின் நிழல், டானியலிற்கு தரும் வாசிப்பு அனுபவம் அவனை கராக்ஸ்ஸின் ஏனைய நாவல்களைத் தேடி ஓடச்செய்கின்றது. ஆனால் கராக்ஸின் நாவல்களோ எங்கும் கிடைக்காதவையாக இருக்கின்றன. ஒர் மர்மமான ஆசாமி கராக்ஸின் நாவல்களை எவ்வழியிலாவது பெற்று, அப்பிரதிகளை எரித்து அழித்து விடுகிறான் என்பதும் புத்தக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக இருக்கிறது.

நாவல்களை நாடி ஓடும் டானியலின் தேடல் கராக்ஸ் பற்றி அறிந்து கொள்வதாக திசை மாறும் போது, அது உதிர்ந்து போன சுவர்களுடன் முடிவதாக இருக்கிறது. அத்தேடல் அவனை பார்வையிழந்த அழகி கிளாரவின் மேல் அவன் கொள்ளும் முதல் மையலுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சாத்தியமற்ற அம்மையலின் தோல்வி அவனை பெண்களை விட்டு விலகியிருக்க செய்கிறது. கராக்ஸ் குறித்த அவன் தேடலும் தற்காலிகமாக ஒர் ஓய்வை அடைகிறது.

0753819317.01.LZZZZZZZ இம்மையல் டானியல் மீது வரைந்து விட்ட வடுக்களும், காயங்களும், பார்சலோனா தெருக்களில் மதுவில் தன்னை மறந்து வாடும் பெர்மானை அவனிற்கு நண்பனாக தருகின்றன. பெர்மான் தன் வாழ்வின் குரூரமான ஞாபகங்களையும், அனுபவங்களையும் தாண்டி மகிழ்வுடன் வாழ முயற்சிக்கிறான்.

ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களின் சாயம் பெர்மானின் மனதில் இன்னமும் அகலாது அதன் ஈரத்துடன் இருக்கிறது, தெருவில் முடங்கிக் கிடந்த தன் வாழ்வை மீண்டும் துளிர்க்க வைத்த டானியலிற்கும், அவன் தந்தைக்கும் அவன் மிக விசுவாசமாக நடந்து கொள்கிறான். டானியலின் தந்தையின் புத்தகசாலையில் இவர்கள் பணி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வருடங்கள் நகர்கின்றன. ஆனால் வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகம் அல்லவா. ஒர் நாள் தந்தையின் புத்தகசாலையில் யாரோ ஒருவன் விட்டுச் செல்லும் ஒர் கருகிய போட்டோ அவர்கள் அனைவரின் வாழ்வையுமே புரட்டிப் போட்டு விடுகிறது.

காதல், மர்மம், நட்பு, கொஞ்சம் வரலாறு என சுவையாக செல்கிறது கதை. கதையில் தொடரும் டானியலின் வாழ்க்கையை, காராக்ஸின் வாழ்கையோடு ஒப்பிடாது வாசகர்கள் பக்கங்களை நகர்த்த முடியாது. கராக்ஸின் கதை, டானியலின் கதை என இரு காலங்களில் பயணிக்கிறது கதை. கதையில் வரும் அனேகமான பாத்திரங்கள் உண்மையான அன்பை தொலைத்தவர்களாகவும், அதனைக் கண்டடைய விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள்.

முதியவர்கள் சக்கை போல் ஒதுக்கப்பட்டிருக்கும் முதியோர் இல்லங்களிலும் சரி, பணியாட்கள் நிறைந்த செல்வந்த மாளிகைகள் ஆனாலும் சரி, உண்மையான அன்பும், காதலும், அக்கறையும் சில சமயங்களில் அவற்றின் கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் தாண்டித்தான் இருக்கின்றன போலும்.

கதையில் அனைவராலும் அஞ்சப்படும் கொடிய பொலிஸ் அதிகாரியாக வருபவன், ஃப்யூமெரோ. தன் லாபம் கருதி சந்தர்பங்களிற்கு ஏற்ப தான் சேர்ந்திருக்கும் அமைப்புக்களை அவன் மாற்றிக் கொண்டேயிருக்கிறான். அவன் வாழ்வில் உண்மையான அன்பு என்றுமே அவனிற்கு கிடைத்ததில்லை. கதையில், அவன் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று நம்பிய அன்பை தன்னிடமிருந்து பறித்தவர்களை அழித்து விடுவதற்காக ஓயாது ஓடுகிறான். இந்த ஓட்டம் அவனை அன்பு என்பதனையே முற்றாக மறக்கச் செய்துவிடுவது எவ்வளவு வேதனையானது.

4 கவிதை தோய்த்த வரிகளாலும், மிக அழகான கதை சொல்லும் பாணியாலும், எதிர்பாராத திருப்பங்கள் வழியாகவும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் நாவலாசிரியர் Carlos Ruiz Zafon. நாவலின் இறுதிப் பகுதி வரை அவர் கராக்ஸ் குறித்த மர்மத்தை இறுக்கமாக எடுத்து செல்வதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். முதலில் ஸ்பானிய மொழியில் வெளியான இந்நாவல் பின்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒர் படைப்பாகும்.

ஸ்பெயின் நாட்டில் இடம் பெற்ற சிவில் யுத்தத்தின் கொடூரங்களையும், அதன் பின்பான காலப்பகுதியில் காவல் துறையின் வன்முறைகளையும் கதாசிரியர் நாவலின் பாத்திரங்களின் நினைவுகள் வழி சித்தரித்து செல்கின்றார். கதையில் இடம் பெறும் துணைப்பாத்திரங்களை மிகச்சிறப்பான முறையில் படைத்து அவர்களை மறக்க முடியாத பாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார் அவர். பெர்மான் பாத்திரம் தும்பைப் பூ போல் எம் மேல் ஒட்டிக்கொள்ளும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.

தோட்டாக்களை விடவும் ஞாபகங்கள் கொடியவை. ஆனால் ஒருவர் மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பும், அக்கறையும், அவர்களை எந்த ஒர் இருண்ட நரகத்திலிருந்தும் மீட்டு வரக்கூடிய ஒர் மந்திர இழையை அவர்களிற்கு அளித்து விடுகிறது என்பதை அழகாக சொல்லிச் செல்கிறது காற்றின் நிழல். அன்பின் நிழலும் காற்றின் நிழலைப் போன்றதுதானா?