1945, ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்தத்திற்கு பின்பான காலப்பகுதி. சிறுவன் டானியல் தன் குழந்தைப் பருவத்திலேயே தன் அன்னையை இழந்தவன். புத்தகசாலை ஒன்றை நடத்தி வரும் தன் தந்தையுடன் அவன் வாழ்ந்து வருகிறான்.
தாயின் மரணத்தின் பின்னும் டானியலால் தன் தாயை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு இரவிலும் உறங்கப் போகுமுன்பாக அறையில் உறையும் இருளில், தன் கண்களை மூடியவாறே தன் தாயுடன் அவன் மெல்லிய குரலில் உரையாடிக் கொள்கிறான்.
ஒர் நாள் அதிகாலையில் தன் படுக்கையில் விழித்தெழும் டானியல், தன் தாயின் முகத்தை தன்னால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லையே எனத் தேம்பி அழுகிறான். அவனை தன் அரவணைப்பில் எடுத்துக் கொள்ளும் அவன் தந்தை, டானியலை ரகசியமான ஒர் இடத்திற்கு தான் அழைத்துச் செல்லப் போவதாக தெரிவிக்கிறார்.
பனிமூட்டம் மூச்சு முட்ட ஆக்கிரமித்திருக்கும் தெருக்களின் வழியாக, டானியலை அழைத்து செல்லும் அவன் தந்தை, மிகப்பழமையான தோற்றம் கொண்ட கட்டிடம் ஒன்றிற்கு அவனை இட்டுச் செல்கிறார். அந்தக் கட்டிடம்தான் மிகச் சிலரிற்கே தெரிந்த, மறக்கப்பட்ட நூல்களின் கல்லறை என்றும் அவனிற்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அக்கல்லறைக்கு முதல் தடவையாக வருபவர்கள் எவரும் அங்கிருந்து தனக்கென ஒர் புத்தகத்தை சுவீகரித்துக் கொள்ள வேண்டுமென்பது ஒர் முறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. பரந்து கிடக்கும் சமுத்திரமாக தோன்றும், தூசி படிந்த புத்தகத் தட்டுக்களில் ஆர்வத்துடன் தன் தேடலை ஆரம்பிக்கிறான் டானியல். அவன் தேடலின் முடிவாக அவன் ஒர் புத்தகத்தை தேர்ந்தெடுக்கிறான். அப்புத்தகத்தின் பெயர் காற்றின் நிழல் என்பதாகும்.
யூலியன் கராக்ஸ் எனும் எழுத்தாளனால் எழுதப்பட்ட அப்புத்தகத்தை தன் வீட்டிற்கு எடுத்து வரும் டானியல் அதனைப் படிக்க ஆரம்பிக்கிறான். புதிய விடியலொன்றின் துவக்கம் வரை டானியல் அந்நாவலைப் படிக்கின்றான். அக்கதை அவனை மயக்கி விடுகிறது.
சில வேளைகளில் ஆர்வம், எங்களையும் மீறி முன்னே ஓடும் தன்மை கொண்டதாக இருக்கும். காற்றின் நிழல், டானியலிற்கு தரும் வாசிப்பு அனுபவம் அவனை கராக்ஸ்ஸின் ஏனைய நாவல்களைத் தேடி ஓடச்செய்கின்றது. ஆனால் கராக்ஸின் நாவல்களோ எங்கும் கிடைக்காதவையாக இருக்கின்றன. ஒர் மர்மமான ஆசாமி கராக்ஸின் நாவல்களை எவ்வழியிலாவது பெற்று, அப்பிரதிகளை எரித்து அழித்து விடுகிறான் என்பதும் புத்தக ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் விடயமாக இருக்கிறது.
நாவல்களை நாடி ஓடும் டானியலின் தேடல் கராக்ஸ் பற்றி அறிந்து கொள்வதாக திசை மாறும் போது, அது உதிர்ந்து போன சுவர்களுடன் முடிவதாக இருக்கிறது. அத்தேடல் அவனை பார்வையிழந்த அழகி கிளாரவின் மேல் அவன் கொள்ளும் முதல் மையலுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. சாத்தியமற்ற அம்மையலின் தோல்வி அவனை பெண்களை விட்டு விலகியிருக்க செய்கிறது. கராக்ஸ் குறித்த அவன் தேடலும் தற்காலிகமாக ஒர் ஓய்வை அடைகிறது.
இம்மையல் டானியல் மீது வரைந்து விட்ட வடுக்களும், காயங்களும், பார்சலோனா தெருக்களில் மதுவில் தன்னை மறந்து வாடும் பெர்மானை அவனிற்கு நண்பனாக தருகின்றன. பெர்மான் தன் வாழ்வின் குரூரமான ஞாபகங்களையும், அனுபவங்களையும் தாண்டி மகிழ்வுடன் வாழ முயற்சிக்கிறான்.
ஸ்பெயின் நாட்டின் சிவில் யுத்த காலத்தில் நிகழ்ந்த கொடூரங்களின் சாயம் பெர்மானின் மனதில் இன்னமும் அகலாது அதன் ஈரத்துடன் இருக்கிறது, தெருவில் முடங்கிக் கிடந்த தன் வாழ்வை மீண்டும் துளிர்க்க வைத்த டானியலிற்கும், அவன் தந்தைக்கும் அவன் மிக விசுவாசமாக நடந்து கொள்கிறான். டானியலின் தந்தையின் புத்தகசாலையில் இவர்கள் பணி அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. வருடங்கள் நகர்கின்றன. ஆனால் வஞ்சம் என்பது என்றுமே தீராத தாகம் அல்லவா. ஒர் நாள் தந்தையின் புத்தகசாலையில் யாரோ ஒருவன் விட்டுச் செல்லும் ஒர் கருகிய போட்டோ அவர்கள் அனைவரின் வாழ்வையுமே புரட்டிப் போட்டு விடுகிறது.
காதல், மர்மம், நட்பு, கொஞ்சம் வரலாறு என சுவையாக செல்கிறது கதை. கதையில் தொடரும் டானியலின் வாழ்க்கையை, காராக்ஸின் வாழ்கையோடு ஒப்பிடாது வாசகர்கள் பக்கங்களை நகர்த்த முடியாது. கராக்ஸின் கதை, டானியலின் கதை என இரு காலங்களில் பயணிக்கிறது கதை. கதையில் வரும் அனேகமான பாத்திரங்கள் உண்மையான அன்பை தொலைத்தவர்களாகவும், அதனைக் கண்டடைய விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள்.
முதியவர்கள் சக்கை போல் ஒதுக்கப்பட்டிருக்கும் முதியோர் இல்லங்களிலும் சரி, பணியாட்கள் நிறைந்த செல்வந்த மாளிகைகள் ஆனாலும் சரி, உண்மையான அன்பும், காதலும், அக்கறையும் சில சமயங்களில் அவற்றின் கட்டுப்பாடுகளையும், எல்லைகளையும் தாண்டித்தான் இருக்கின்றன போலும்.
கதையில் அனைவராலும் அஞ்சப்படும் கொடிய பொலிஸ் அதிகாரியாக வருபவன், ஃப்யூமெரோ. தன் லாபம் கருதி சந்தர்பங்களிற்கு ஏற்ப தான் சேர்ந்திருக்கும் அமைப்புக்களை அவன் மாற்றிக் கொண்டேயிருக்கிறான். அவன் வாழ்வில் உண்மையான அன்பு என்றுமே அவனிற்கு கிடைத்ததில்லை. கதையில், அவன் தனக்கு கிடைத்திருக்க வேண்டியது என்று நம்பிய அன்பை தன்னிடமிருந்து பறித்தவர்களை அழித்து விடுவதற்காக ஓயாது ஓடுகிறான். இந்த ஓட்டம் அவனை அன்பு என்பதனையே முற்றாக மறக்கச் செய்துவிடுவது எவ்வளவு வேதனையானது.
கவிதை தோய்த்த வரிகளாலும், மிக அழகான கதை சொல்லும் பாணியாலும், எதிர்பாராத திருப்பங்கள் வழியாகவும் கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார் நாவலாசிரியர் Carlos Ruiz Zafon. நாவலின் இறுதிப் பகுதி வரை அவர் கராக்ஸ் குறித்த மர்மத்தை இறுக்கமாக எடுத்து செல்வதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறார். முதலில் ஸ்பானிய மொழியில் வெளியான இந்நாவல் பின்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒர் படைப்பாகும்.
ஸ்பெயின் நாட்டில் இடம் பெற்ற சிவில் யுத்தத்தின் கொடூரங்களையும், அதன் பின்பான காலப்பகுதியில் காவல் துறையின் வன்முறைகளையும் கதாசிரியர் நாவலின் பாத்திரங்களின் நினைவுகள் வழி சித்தரித்து செல்கின்றார். கதையில் இடம் பெறும் துணைப்பாத்திரங்களை மிகச்சிறப்பான முறையில் படைத்து அவர்களை மறக்க முடியாத பாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார் அவர். பெர்மான் பாத்திரம் தும்பைப் பூ போல் எம் மேல் ஒட்டிக்கொள்ளும் இயல்பு கொண்டதாக இருக்கிறது.
தோட்டாக்களை விடவும் ஞாபகங்கள் கொடியவை. ஆனால் ஒருவர் மீது நாம் கொள்ளும் உண்மையான அன்பும், அக்கறையும், அவர்களை எந்த ஒர் இருண்ட நரகத்திலிருந்தும் மீட்டு வரக்கூடிய ஒர் மந்திர இழையை அவர்களிற்கு அளித்து விடுகிறது என்பதை அழகாக சொல்லிச் செல்கிறது காற்றின் நிழல். அன்பின் நிழலும் காற்றின் நிழலைப் போன்றதுதானா?
நேர்த்தியான பதிவு இப்பதிவை படித்தப்பின் 'காற்றின் நிழலில்'
ReplyDeleteஇளைப்பாற மனம் ஏங்குகிறது நண்பரே.
காதலரே, முதல் முறையாக ஒரு நாவலின் அறிமுகமா... பிய்த்து உதறி விட்டீர்கள்.
ReplyDeleteபோரின் கோர நாக்குகள்தான் மனிதர்கள் மத்தியில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எத்தனை புத்தகங்கள் மட்டும் கதைகளை படித்தாலும் அதில் பாதியையாவது நாம் உணர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.
நாவலுக்குல்லே இன்னொரு நாவல், இரண்டு தனிபட்ட நபர்களின் வாழ்க்கை பயணம் என்று கதையை அருமையாக பின்னியிருக்கிறார் போலிருக்குது கதாசிரியர்.
காற்றின் நிழல் அருமையான தலைப்பு.... அது எப்படி சாத்தியம் என்று புத்தகத்தை புரட்டி பார்க்கும் ஆவலை உண்டு பண்ணுகிறது. அனேகமாக வெகுநாள் கழித்து நான் தேடி பார்க்க தூண்டும் ஒரு நாவலாக, உங்கள் பதிவு ஆர்வத்தை தூண்டிவிட்டது காதலரே.
// தோட்டாக்களை விடவும் ஞாபகங்கள் கொடியவை //
மனதில் தங்கி விட்ட வரிகள்.
கனவுகளின் காதலர் தளம், இப்போது பல தரப்பட்ட விமர்சனங்களை பார்க்கும் தளமாக வளர்ந்து கொண்டு செல்கிறது. அமர்க்களமாக தொடருங்கள்.
அன்பு நண்பரே,
ReplyDeleteஒரு நாவலை பற்றிய விமர்சனம் சற்றும் நான் எதிர்பார்க்க வில்லை. படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நாவலை வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி படித்து விடுகிறேன்.
மிகச் சீரான நடையில் கதையின் மர்மம் கெடாவண்ணம் அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு சித்திர கதை விமர்சனங்களுக்கான தளத்தை வேறு தளத்திற்கு கொண்டு போயிருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
நாவல் விமர்சனமா?? ஆகா.. கலக்கல்.. அருமை நண்பரே.. நாவல்களை வாசிக்கும் அளவிற்கு இப்போதெல்லாம் நேரம் இல்லை. என்றாலும் அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே
ReplyDeleteMr J comics
காதலரே,
ReplyDeleteஆங்கில நாவல்களை எல்லாம் எனக்கு படிக்கும் அளவிற்கு என்னிடம் ஆங்கில புலமை கிடையாது நண்பரே , இப்போது தான் தக்கி முக்கி ஆங்கில காமிக்ஸ் படித்து ரசிக்கும் அளவிற்கு வந்துள்ளேன் .
உங்களை எல்லாம் பார்த்தால் ஒரு பக்கம் எனக்கு பொறாமை கூட வருகிறது . அனைத்தி நாவல்களையும் படித்து அனுபவிக்கிறீர்கள் . இது தமிழில் வந்தால் மட்டுமே என்னால் படிக்கச் முடியும் .
இப்போதைக்கு உங்கள் நாவல் விமர்சனம் மூலமே எனக்கு இதை அனுபவிக்க முடிகிறது . நன்றி நண்பரே .
அன்புடன் ,
லக்கி லிமட்
உலவல்
நல்ல பகிர்வு நண்பரே.
ReplyDeleteநண்பர் வேல்கண்ணன் அவர்களே, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. காற்றின் நிழலில் இளைப்பாறும் வாய்ப்பு உங்களிற்கு நிச்சயம் கிடைக்கும்.
ReplyDeleteரஃபிக், உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் ஊக்கத்தால்தான் இதனைப் போன்ற பதிவுகள் சாத்தியமாகின்றன. தொடர்ந்த உங்கள் உறுதியான
ஆதரவிற்கு நன்றி நண்பரே.
ஜோஸ், உங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. வலைப்பூவை ஆரம்பித்ததிலேயிருந்து ஒரு நாவல் குறித்தாவது எழுதிட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இன்று உங்கள் கருத்தைப் பார்க்கும் போது புத்தகங்கள் குறித்து தொடர்ந்து எழுதுவதற்குரிய ஒர் நம்பிக்கை வலுப்பெறுகிறது அருமை நண்பரே.
நண்பர் ஜே, உங்களின் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
நண்பர் லக்கிலிமட் அவர்களே, நீங்களும் அனைத்து நாவல்களையும் விரைவில் படிக்கத்தான் போகிறீர்கள். உங்கள் கருத்துக்களை பதிந்து சென்றமைக்கு நன்றி நண்பரே.
நண்பர் பா.ராஜாராம் அவர்களே, நல்ல பகிர்வினை அங்கீகரித்தமைக்கும், கருத்துக்களை பதிந்தமைக்கும் நன்றி நண்பரே.