அமெரிக்காவின் ஜனாதிபதியைக் கடத்தி வந்து தன் திட்டமொன்றை வெற்றிகரமாக நடாத்தவிருந்த ஜெனரல் காரிங்டனின் முயற்சியானது அவரே எதிர்பார்த்திராத சம்பவங்கள் சிலவற்றால் வேறு திசையில் நகர்ந்து விடுகிறது. அமெரிக்க மண்ணில் தொடர்ந்தும் இருக்க முடியாத இக்கட்டான நிலையில் ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ், கேணல் ஏமஸ் ஆகியோர் கோஸ்டா வெர்ட்டிற்கு அருகிலிருக்கும் சிறிய நாடான SAN MIQUELக்கு தப்பிச் செல்கிறார்கள். அங்கு அவர்களை தன் இல்லத்தில் தங்க வைத்து தஞ்சம் தருகிறான் வாழைத் தோப்புக்களின் அதிபதியான ஆர்மண்ட் என்பவன்.
தனது நலன் விரும்பிகளுடன் தப்பிச்செல்ல மறுத்து விடும் மக்லேன் ஜியோர்டினோவினால் NSAன் ரகசியக் கட்டிடம் ஒன்றில் அடைத்து வைக்கப்படுகிறான். மக்லேனை மிக ரகசியமாக விசாரிப்பதற்காக அமெரிக்க நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள் குழு ஒன்று தயாராகிறது. தேசத்தின் நலன் கருதி இவ்விசாரணையானது ராஜாங்க ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.
நியூயார்க் டெய்லியில் பயிற்சி பத்திரிகையாளானாக பணியாற்றுகிறான் இளைஞன் டேனி பின்கெல்ஸ்டீன். அதே பத்திரிகையில் பணியாற்றிய டேனியின் சகோதரனான ரொன்னும், ரொன்னின் சகாவான வரென் கிளாஸும் மூன்று ஆண்டு ஆய்வுகளின் பின்னணியில் மக்லேன் விவகாரம் குறித்த ஒர் துப்பறியும் அறிக்கையை* தயாரித்திருந்தார்கள்.[ * XIII MYSTERY, இக்காமிக்ஸ் தொடரின் 13வது ஆல்பம்]
ஆனால் மர்மமான முறையில் அந்த இரு பத்திரிகையாளர்களும் உயிரிழந்துவிட, அவர்கள் பாடுபட்டு தயாரித்த அறிக்கையும் எங்கென்று தெரியாமல் காணாமல் போய்விடுகிறது. தன் சகோதரனின் பணியை தொடரும் நோக்கில் NSAன் மறைவிடங்களை ரகசியமாகக் கண்காணித்து வருகிறான் டேனி. இதனைக் கண்டுபிடித்துவிடும் NSA அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி டேனியை நியூயார்க் டெய்லிப் பத்திரிகையின் வேலையிலிருந்து தூக்கி எறிந்து விடுகிறார்கள்.
யாருமே உதவ வழியற்ற நிலையில் NSAன் மரணப்பிடியில் இருக்கும் மக்லேன் மீதான ரகசிய உயர்மட்ட விசாரணை ஆரம்பமாகிறது. விசாரணையில் மக்லேனிற்கு எதிராக சாட்சியங்களும், வாதங்களும் வலுப்பெறுகின்றன. இது நாள் வரையில் தான் சிறிது சிறிதாக சேகரித்து வந்த தன் அடையாளம் மெல்ல மெல்ல ஒர் கேள்விக்குறியாக தன்முன் நிலைபெறுவதை கண்டு குழம்பிப் போகிறான் மக்லேன். உண்மைகள் வேஷமாக உருமாறும் அதிசயம் அவனை உடைக்க ஆரம்பிக்கிறது.
விசாரணையை முன்னின்று நடாத்தும் ஜியோர்டினோ, மக்லேன் உண்மையான மக்லேன் அல்ல என்று வாதிடுகிறான். விசாரணையின் முடிவில் ஷோன் ஓ நீல் எனப்படும் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த தீவிரவாதியாக நிரூபிக்கப்படும் மக்லேன், அமெரிக்க தேசத்திற்கு எதிராக அவன் இழைத்த பயங்கரவாதச் செயல்களிற்காகவும், அமெரிக்க நாட்டிற்கு அவன் ஒர் தொடர்ந்த அச்சுறுத்தல் என்றும் கருதப்பட்டு, அவன் வாழ்வின் எஞ்சிய நாட்கள் அனைத்தையும் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அரிசோனா சிறையில் கழிக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
மக்லேனிற்கு வழங்கப்பட்ட தண்டனையையடுத்து, ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் அவனை ஒர் காரில் அரிசோனா சிறைக்கு அழைத்து செல்கிறார்கள். அந்தக் காரை பின் தொடர ஆரம்பிக்கிறான் இளைஞன் டேனி. செல்லும் வழியில் டேனியின் கார் மக்கர் பண்ண, அவன் உதவிக்கு வந்து சேர்கிறாள் அழகான பெண் ஜெசிக்கா. ஜெசிக்காவின் காரில் மக்லேன் ஏற்றிச் செல்லப்படும் காரை மீண்டும் பின் தொடர ஆரம்பிக்கிறான் டேனி, தன்னருகில் அமர்ந்து வரும் ஆபத்தை உணராமலே.
மக்லேனை ஏற்றிச் செல்லும் வண்டி, செல்லும் வழியில் ஆளரவமற்ற ஒர் பகுதியில் நிறுத்தப்படுகிறது. மக்லேனை சிறைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தீர்த்துக் கட்டி விடவேண்டுமென்பது ஜியோர்டினோவின் ரகசிய உத்தரவு. தப்பிச் செல்ல முயன்ற தீவிரவாதி சுட்டுக் கொலை என்று செய்தி வழங்குவது அவர்கள் திட்டம்.
காரிலிருந்து இறங்கிய மக்லேன், அவன் முன்னே சிரித்துக் கொண்டிருக்கும் மரணத்தை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை தொலைவிலிருந்து தொலைநோக்கி மூலம் அவதானிக்கும் டேனி கொதிக்கிறான். அரச அதிகாரிகளின் உரிமைகள் பற்றிய அவன் கருத்தினைக் கேட்கும் ஜெசிக்கா அவனிற்கு பதில் அளிப்பதற்காக தன் துப்பாக்கியை டேனியை நோக்கி உயர்த்துகிறாள்.
துப்பாக்கி முனையில் இளைஞன் டேனியையும் மக்லேன் நிற்கும் இடத்திற்கு அழைத்து வருகிறாள் அழகி ஜெசிக்கா. தான் தொடர்ந்தும் NSA ஏஜெண்டுகளால் கண்காணிக்கப்பட்டு வந்திருப்பதை தாமதாக அறிந்து கொள்கிறான் டேனி. இந்த வேளையில் அவர்கள் நிற்கும் இடத்தை நோக்கி பறந்து வருகிறது ஓர் ஹெலிகாப்டர்.
அந்தரத்தில் நிலைகொள்ளும் ஹெலியிலிருப்பவர்கள் ஒலிபெருக்கி மூலமாக தாம் FBI சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கிறார்கள். கீழே நிற்பவர்களை தங்கள் ஆயுதங்களை கைவிடும்படி அறிவுறுத்துகிறது ஒலிபெருக்கி குரல். ஹெலியின் கீழ் நிற்கும் நபர்கள் ஆயுதங்களை தரையில் வீசுகிறார்கள். மக்லேனை சிறைக்கு எடுத்து செல்லும் அதிகாரிகளில் ஒருவர் நிலைமையை தெளிவுபடுத்த விரும்பி ஹெலியை நெருங்குகிறார்.
ஹெலியில் இருந்த காமாண்டோக்களின் இயந்திரத் துப்பாக்கிகளின் இசை அப்பகுதியை நனைக்கிறது. மக்லேனை அழைத்து சென்ற அதிகாரிகளில் இருவர் அந்த இசைக்கு இரையாகிவிட எஞ்சியிருந்த ஒருவனை ஜெசிக்கா தீர்த்துக் கட்டுகிறாள்.
நடப்பது என்ன என்று அறிய விழையும் மக்லேனின் முகத்தில் மயக்க மருந்து தெளிக்கப்படுகிறது. ஜெசிக்கா, டேனி, நினைவிழந்த மக்லேன் சகிதம் அந்திச் சூரியனை நோக்கி பறக்க ஆரம்பிக்கிறது அந்த ஹெலிகாப்டர்.
நடந்த சம்பவத்தின் தகவல் ஜியோர்டினோவிற்கு தெரிய வருகிறது. தேசத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மக்லேனைக் காணும் இடத்தில் அவன் கதையை முடித்துவிடும்படி தன் வேட்டை நாய்களிற்கு உத்தரவு வழங்குகிறான் ஜியோர்டினோ.
ஹெலியில் மயங்கிய நிலையில் பயணித்த மக்லேன் அவன் நினைவு திரும்பும் போது தான் ஒர் பனாமாக் கப்பலில் இருப்பதை அறிந்து கொள்கிறான். தன்னை அங்கு கடத்தி வரச் செய்த நபர் யார் என்பதை அவன் அறியும்போது அவன் ஆச்சர்யம் மேலும் அதிகரிக்கிறது. தன் வசீகரமான கொலைப் புன்னகையுடன் மக்லேனை தன் கப்பலிற்கு வரவேற்கிறாள் இரினா.
தான் ஆரம்பித்திருக்கும் ஓப்பந்தக் கொலைகாரர்களிற்கான சர்வதேச வலைப்பின்னல் அமைப்பொன்றைப் பற்றி மக்லேனிற்கு அழகாக விளக்குகிறாள் ஒப்பந்தக் கொலைகளை உலக மயமாக்கிய இரினா. மிகவும் தேர்ந்த கொலைகாரியான ஜெசிக்கா, NSAவிற்காக டயான் எனும் பெயரில் பணியாற்றி வந்தாலும் அவள் தனக்காகவும் ரகசியமாகக் காரியங்களை ஆற்றுபவள் என்பதை மக்லேனிற்கு அவள் தெரிவிக்கிறாள். வரவிருக்கும் விடியலில் மக்லேன் தன் இருப்பினை சில மணிநேரம் நீடிக்க விரும்பினால் அவனுடைய முழுச்சக்தியும் அவனிற்கு இன்றியமையாத ஒன்றாகவிருக்கும் என புதிர் போடுகிறாள் அவள்.
அலைகளின் ஈரத்துடன் விடியும் மறுநாள் காலையில் கப்பலின் மேற்தளத்திற்கு அழைத்து வரப்படுகிறான் மக்லேன். மக்லேனுடன் தான் ஆடப்போகும் மரண விளையாட்டைப் பற்றி அவனிற்கு விரிவாகக் கூற ஆரம்பிக்கிறாள் இரினா.
இரினாவின் சர்வதேச ஒப்பந்தக் கொலைகாரர் அமைப்பில் இணைந்து கொள்ள விரும்புகிறார்கள் மூன்று புதிய கொலைகாரர்கள். அவர்களை தன் அமைப்பில் இணைத்துக் கொள்ளுவதற்கு முன்பாக அவர்கள் மூவரின் திறமைகளையும் எடை போட விரும்புகிறாள் இரினா.
மக்லேன் சரியாக காலை ஆறு மணிக்கு ஒர் சிறிய மோட்டார் படகில் கலிபோர்னியாவின் கரைகளை நோக்கி தப்பலாம். அச்சிறிய படகில் எரிபொருள் கரையை அடைவதற்கான தூரத்திற்கு அளவாகவே நிரப்பப்பட்டிருக்கிறது. அப்படகில் ஒர் வெடிகுண்டு ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கரையை அடையும் தூரம் நெருங்கியதும் அவ்வெடிகுண்டு தானாகவே வெடித்து படகைச் சிதறடிக்கும். சரியாக மதியம் பனிரெண்டு மணிக்கு மூன்று புதிய கொலைகாரர்களும் மக்லேனை வேட்டையாடுவதற்காக கப்பலில் இருந்து ஒர் ஹெலிகாப்டரில் கிளம்புவார்கள்.
மக்லேனின் உயிரைக் கவர்வதற்கு அவர்களிற்கு அன்றிரவு ஒன்பது மணி வரை அவகாசம் வழங்கப்படும். ஆனால் அந்த நேர அவகாசத்தினுள் அவர்கள் மக்லேனின் இன்னுயிரை இழக்கச் செய்யாவிடில் அவர்கள் விட்ட இடத்திலிருந்து ஜெசிக்கா, மக்லேன் வேட்டையை தொடர்வாள். மக்லேன் ஒர் கில்லி என்பதை இரினா நன்கு அறிவாள் எனவே அவனின் வல்லமைக்கு ஒர் தடையாக இளைஞன் டேனியையும் சிறிய மோட்டார் படகில் அவனுடன் தப்பிச் செல்ல அனுப்பி வைக்கிறாள்.
டேனியனதும் மக்லேனினதும் கரங்கள் நீண்ட சங்கிலி ஒன்றில் இணைக்கப்பட்டிருக்கும் விலங்குகளில் மாட்டப்படுகிறது. தன் உயிரினைக் காப்பாற்ற வேண்டி கலிபோர்னியாவின் கரைகள் நோக்கி கடலோட ஆரம்பிக்கிறான் மக்லேன். தங்கள் கரங்களில் மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளினுள்ளே, அவர்கள் இருக்கும் இடத்தைக் காட்டித்தரும் ஒர் கருவி மிக ரகசியமாக தேர்ந்த கொலைகாரி ஜெசிக்காவினால் பொருத்தப்பட்டிருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை…..
XIII சம்பந்தமான கடந்த பதிவுகளில் நாங்கள் பார்த்த ஆல்பங்களில்[ 11, 12] மக்லேன் தன் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காக பக்கங்களை தானம் செய்து விட்டு, கதைகளின் இறுதிக் கட்டத்தில் ஏதோ ஒர் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் அதிரடி ஆக்ஷனில் இறங்குவார். இவ்வாறு அதிரடி ஆக்ஷனில் இறங்கும் மக்லேன் எக்கச்சக்கமாக ஆபத்தில் மாட்டிக் கொண்டுவிட யாராவது வந்து கடைசி நேரத்தில் அவரைக் காப்பாற்றுவார்கள். அதிரடியில் இறங்கும் மக்லேனும் உயிர்களை அனாவசியமாக பறித்து விடக்கூடாது என்பதில் அக்கறை உள்ளவராகவே சித்தரிக்கப்பட்டிருப்பார்.
ஆனால் XIII காமிக்ஸ் தொடரின் 14வது ஆல்பமான Secret Defense மேற்கூறிய தன்மைகளிலிருந்து விடுபட்டு ஏறக்குறைய முழுமையான ஒர் திருப்பத்தை XIIIன் ரசிகர்களிற்கு வழங்குகிறது. 43 பக்கங்கள் கொண்ட இந்த ஆல்பத்தில் 15 பக்கங்கள் முற்று முழுதாக மக்லேனின் இடைவிடாத அதிரடி ஆக்ஷனிற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. 1980களின் சர்வதேசக் காமாண்டோ ராம்போவே முக்காடு போட்டுக் கொள்ளும் அளவிற்கு ஆக்ஷன் திமிறிப் பாய்கிறது இந்தப் பக்கங்களில்.
மக்லேனிடமிருந்து நீண்டகாலமாக இவ்வகையான ஆக்ஷனிற்காக ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்கள் ஆல்பத்தை கீழே வைத்து விட்டு விசிலடிக்கலாம், கைதட்டலாம், பல்டி அடிக்கலாம். மக்லேன் உங்களை ஏமாற்ற மாட்டார். இந்தப் 15 பக்கங்களினுள் மூன்று உயிர்களிற்கு அவர் மோட்சத்திற்கு அப்பால் டிக்கட் புக் பண்ணி விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தன் அடையாளம் குறித்த சந்தேகம் திரும்பி விட்ட நிலையில், மக்லேன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடும் ஓட்டம் பரபரப்பாக ஆல்பத்தில் கூறப்படுகிறது. ஆல்பத்தில் நெகிழ்வான தருணங்கள் என இரு தருணங்களைக் குறிப்பிடலாம். ஒன்று ஷோன் முல்வே வழங்கும் ஒர் சாட்சியம். இரண்டாவது மேஜர் ஜோன்ஸ், மக்லேனுடன் தொலைபேசியில் உரையாடும் கட்டம். மேஜர் ஜோன்ஸ் தன் மனதில் ரகசியமாக வைத்திருக்கும் மக்லேன் மீதான மென்மையான அந்தக் காதலை எந்தவித ஆர்பாட்டங்களுமின்றி அழகாக சொல்லி விடுகிறது ஓரே ஓர் சிறிய சித்திரக்கட்டம். அந்த சித்திரத்தில் மேஜர் ஜோன்ஸின் கண்களைப் பார்க்க மறக்காதீர்கள்.
ஆல்பத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் மக்லேனின் எரிச்சல்தரும் விசாரணைக்காட்சிகள், முடிந்திருக்க வேண்டிய ஓர் தொடரை எவ்வாறு மேலும் சில ஆல்பங்களிற்கு வெற்றிகரமாக இழுத்தடிக்கலாம் என்று கதாசிரியர் வான் ஹாம் வாசகர்களிற்கு தரும் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் அவர் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் அமைத்திருக்கும் இந்தக் கதை வேகமான ஒன்று என்பதில் ஐயமில்லை. கதையின் முடிவில் கூட ஒர் சஸ்பென்ஸை வைத்து அடுத்த ஆல்பத்தின் எதிர்பார்ப்பை கூட்டுகிறார் அவர்.
ஓரிகன் எல்லைக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மேற்கு கலிபோர்னியாவின் மலைக்காடுகளில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளில் தன் திறமையைப் பின்னிப் பிழிந்தெடுக்கிறார் ஓவியர் வான்ஸ். குறிப்பாக மலைக் குன்றின் உச்சியிலிருந்து மக்லேன் குளிரான காட்டாற்றுக்குள் பாயும் காட்சியை விரிக்கும் சித்திரங்கள் அருமை. அழகி ஜெசிக்கா மற்றும் இரினாவின் அழகிய உடல்களையும் வாசகர்களின் கண்களிற்கு விருந்தாக்குகிறார் வான்ஸ்.
நல்ல கதை ஒன்றை தேடுவதை மறந்துவிட்டு, பரபர விறுவிறு ஆக்ஷனிற்காகப் படித்தால் இந்த ஆல்பத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிக்கலாம். ஆனால் கதையைப் படிக்கும் போது உங்கள் விரல்கள் உங்களையறியாமலே உங்கள் காதுகளை தடவிப் பார்க்க முயன்றால் அது இயல்பான ஒன்று என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். [***]
அன்பு நண்பர் ரஃபிக்கிற்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீங்கள் தொடர்ந்து எழுதி வரும் XIII பதிவுகளுக்கு சைட்பாரில் லிங்க் கொடுத்தால் பழைய பதிவுகளை படிக்க விரும்புவோருக்கு உதவியாக இருக்குமே!
ReplyDeletePLEASE CONSIDER!
அப்புறம் அடுத்த பாகம் பற்றி எழுதும் பொழுது கண்மணி ஜெசிக்காவின் குளியலைறை கவர்ச்சி படம் தவறாமல் வெளியிட வேண்டுமென்பது எமது உத்தரவு!
தலைவர்,
அ.கொ.தீ.க.
போன பின்னூட்டத்தில் சொல்ல மறந்து விட்டேன்!
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட்டு அண்டு செகண்டு ஆல்ஸோ!
தலைவர்,
அ.கொ.தீ.க.
அருமை.
ReplyDeleteரஃபிக்கிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அவர் பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சு :)
காதலரே, XIII ன் அடுத்த கட்ட விமர்சனம் ஆரம்பம் போலவே.... முழுவதும் படித்து விட்டு திரும்ப கருத்து பதிய வருகிறேன்.
ReplyDeleteஅதற்கு முன், பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள், உற்ற தோழரே.
அன்பர் பின்னோக்கி: வாழ்த்துகளுக்கு நன்றிகள் நண்பரே. ஒரு வழியாக பதிவொன்றை இட்டு விட்டேன். காத்திருக்க வைத்ததற்கு மன்னிக்கவும் :)
உங்கள் மொழிபெயர்ப்பு அருமை...சிறப்பான மொழிநடையில் அருமையான பதிவு. இரத்தபடலம் மீதான பரபரப்பை அதிகபடுத்துகிறது உங்கள் பதிவு
ReplyDeleteThanks for another fantastic one…
ReplyDeleteதலைவர் அவர்களே, ஏற்கனவே சைட்பாரில் லேபல் பகுதியில் XIII சுட்டியைக் க்ளிக்கினால் அது தொடர்பான அனைத்துப் பதிவுகளும் கடை விரிக்கும். இருப்பினும் அடுத்த மக்லேன் பதிவில் சிறப்புச் சுட்டி ஒன்றை வழங்குகிறேன். கண்மணி ஜெசிக்கா அவர்களின் கவர்ச்சிப் படங்கள் எல்லை மீறியதாலேயே இம்முறை தணிக்கைகுழு தலைவர் ஜோஸ் அதனை வெளியிட அனுமதி மறுத்து விட்டார். வரும் முறை என்ன செய்வாரோ, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.
ReplyDeleteநண்பர் பின்னோக்கி அவர்களே நன்றி. ரஃபிக் பதிவு இட்டிருக்கிறார். அது காதல் பதிவு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரஃபிக், உங்களிற்கு எப்போது இயலுமோ அப்போது கருத்துப் பதியுங்கள். நன்றி எனும் பெரிய வார்த்தை எல்லாம் எதற்கு, ஓர் பீர் போதுமே :) அன்பு நண்பரே.
நண்பர் சிவ், ஊக்கம் தரும் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ரமேஷ், கனிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
அன்பு நண்பரே
ReplyDeleteஇந்த முறை ஆக்ஷன் 13-ன் களமிறங்கியுள்ளீர்கள். வழக்கம்போல் மொழிபெயர்ப்பு அபாரம்.
அட்டைபடம் அட்டகாசமாக இருக்கிறது. அது ஆங்கில மொழிபெயர்ப்பா? தமிழில் படிக்கதான் காலம் பிடிக்கும் போலிருக்கிறது.
உங்கள் மொழி பெயர்ப்பு பக்கங்களுக்கு தனி இரசிகர் சங்கம் உருவாகி வருகிறது. கலக்குங்கள்.
dear friend,i've read 13 parts of this series and i want to read the rest.if you have the ebooks,please provide the link.thank you.
ReplyDeleteஜோஸ், அட்டைப்படம் பிரெஞ்சு மொழியில் வெளியான ஆல்பத்தின் அட்டைப்படமே. மொழிபெயர்பு ஏதோ என்னால் இயன்றளவு செய்கிறேன் உங்கள் பாராட்டுக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி அவர்களே, என்னிடம் இந்தப் புத்தகங்களிற்குரிய லிங்குகள் இல்லை. பதிவைப்படிக்கும் நண்பர்கள் யாராவது லிங்குகளை வழங்கினால்தான் உண்டு. உங்களிற்கு உதவமுடியாமைக்கு வருந்துகிறேன் நண்பரே.
Friend,
ReplyDeleteGreat post as usual...
Regards,
Mahesh
What a poetic translation!
ReplyDeleteGreat!
நண்பர் மகேஷ்குமார் உங்கள் ஊக்கம்தரும் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDelete