Monday, November 16, 2009

அகச்சிறையின் இசை

ஆண்ட்ரே பிலிப்போவின் கரங்கள் நடனமிடும் ஒர் இறகைப்போல் காற்றில் அசைகின்றன. அவன் உள்ளம் அரங்கில் வழியும் இசையின் உன்னதத்தில் சங்கமித்து பயணிக்கிறது. மேடையில் இசைத்துக் கொண்டிருக்கும் இசைக்குழுவினை தானே அற்புதமாக வழிநடாத்திக் கொண்டிருப்பதாக தன்னை மறக்கிறான் ஆண்ட்ரே....

முப்பது வருடங்களின் முன்பு மொஸ்கோவின் பிரபலமான BOLCHOI கலையரங்கின் இசைக்குழுவினை வழி நடாத்துபவனாக[Orchestra Conductor] இருந்தவன் ஆண்ட்ரே. ரஷ்ய இசைமேதையான TCHAIKOVSKIன் இசை வடிவங்களை தன் இசைக்குழுவைக்கொண்டு உள்ளங்கள் உருகி வழியும் வகையில் இசைக்க செய்வதில் பிரபலமாக இருந்தவன். அவனுடைய இசைக்குழுவில் பங்குவகித்த பெரும்பாலான கலைஞர்கள் யூத இனத்தை சேர்ந்தவர்கள்.

ஆண்ட்ரேயின் இசைக்குழுவிலிருந்த யூத இனக்கலைஞர்களை அவன் விலக்கிக்கொள்ள வேண்டும் என்று LEONOID BREJNEV [சோவியத் ஒன்றியத்தின்அரசியல் தலைவர்-1964/1982] விடுத்த அதிகாரமான வேண்டுகோளை ஆண்ட்ரே நிராகரித்ததன் காரணமாக அவன் வகித்து வந்த பதவியிலிருந்து அவன் தூக்கி எறியப்படுகிறான் அவன் இசைக்குழுவும் அவனுடன் சேர்த்து வெளியேற்றப்படுகிறது.

ஆண்ட்ரேயின் வாழ்வும், அவனுடைய இசைக்குழுவின் கலைஞர்களுடைய வாழ்வும் இசையைத் தொலைத்துவிட்டு சாதாரண வாழ்வின் வேறுவகையான சாத்தியங்களை கண்டுகொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

தான் இசைக்குழுவை வழி நடாத்துபவனாக பணிபுரிந்த புகழ்பெற்ற பொல்ச்சொய் கலையரங்கிலேயே ஒர் துப்பரவுத் தொழிலாளியாக பணியாற்ற வேண்டிய நிலைக்கு வந்து விடுகிறான் ஆண்ட்ரே. மீண்டும் தனக்கு ஒர் வாய்ப்புத்தரும்படி அவன் வேண்டும் போதெல்லாம் அவன் வேண்டுகோள் தட்டிக் கழிக்கப்படுகிறது. அவமானம் தன்னுள் ஊறிய நிலையில் ஒதுக்கப்பட்டவனாக தன் வாழ்க்கையை தொடர்கிறான் ஆண்ட்ரே.

le-concert-2009-18222-1779609275 ஆண்ட்ரே கலையரங்கை சுத்தம் செய்யும் வேளைகளில் அங்கு இடம்பெறும் இசை நிகழ்ச்சிகளின் ஒத்திகைகளை ரகசியமாக ரசிக்கிறான். அந்த இசைக்குழுக்களையும் அவை இசைக்கும் இசையையும் தானே வழிநாடாத்துவதாக அவன் மனம் அவனைக் கற்பனையில் சுகம் காணச் செய்கிறது.

ஆண்ட்ரே கலையரங்கினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடாது இசைக்கனவுகளில் லயித்திருப்பதைக் கண்டுபிடித்துவிடும் கலையரங்கின் இயக்குனர் அவனைக் கடுமையாகக் கண்டிக்கிறார். உடனடியாக தன் அலுவலகத்தை ஒழுங்கான வகையில் சுத்தம் செய்யும்படி ஆண்ட்ரேயிற்கு உத்தரவு இட்டுவிட்டு வெளியேறுகிறார் அவர்.

மறுப்பேதும் பேசாது இயக்குனரின் அலுவலகத்தை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே. இவ்வேளையில் இயக்குனரிற்கு ஒர் தொலைநகல் வந்து சேர்கிறது. இயக்குனர் அங்கு இல்லை எனும் தைரியத்தில் அத்தொலைநகலைப் படிக்க ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே. பாரிஸின் புகழ்பெற்ற சாத்துலே கலையரங்கிலிருந்து [Théatre du Chatelet] வந்திருக்கும் தொலைநகல் அது என்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

லாஸ் ஏஞ்சல்ஸ் பில்ஹார்மொனிக் இசைக்குழு தங்கள் கலையரங்கில் நிகழ்த்தவிருந்த இசைநிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதால் இன்னமும் இருவாரங்களிற்குள் ஒர் இசைநிகழ்ச்சியை பொல்ச்சொய் கலையரங்கின் இசைக்குழு பாரிஸில் நடாத்தி தர முடியுமா எனும் கேள்வியுடன் அந்த தொலைநகலை அனுப்பி வைத்திருக்கிறார் சாத்துலே கலையரங்கின் இயக்குனர் துப்ளேசி.

தொலைநகலைப் படித்து முடிக்கும் ஆண்ட்ரே அதனை தன் சட்டைப்பையினுள் வைத்துக்கொள்கிறான். பொல்ச்சொய் கலையரங்கின் இயக்குனரின் கணணியிலிருந்து அத்தொலைநகலின் மின்னஞ்சல் வடிவத்தையும் அவன் அழித்து விடுகிறான். அவன் மனதில் ஒர் திட்டத்தை உருவாக்க ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே.

le-concert-2009-18222-2110179862 கலையரங்கில் தன் வேலை முடிந்ததும் தன் நண்பன் ஷாஷாவைச் சென்று சந்திக்கிறான் ஆண்ட்ரே. ஷாஷா ஆண்ட்ரேயின் இசைக்குழுவில் ஒர் இசைக்கலைஞனாக இருந்தவன். தற்போது ஒர் ஆம்பூலன்ஸ் சாரதியாக பணியாற்றுகிறான் ஷாஷா.

கலையரங்க இயக்குனரின் அலுவலகத்திலிருந்து தான் அபகரித்து வந்த தொலைநகலை ஷாஷாவிற்கு காட்டும் ஆண்ட்ரே, கலையரங்கின் சோப்ளாங்கி இசைக்குழுவிற்கு பதிலாக தாம் பாரிஸ் செல்கிறோம் என்கிறான். ஆண்ட்ரேயிற்கு பித்து முற்றி விட்டதோ என்பதைபோல் அவனை நோக்குகிறான் ஷாஷா.

ஆண்ட்ரேயும், ஷாஷாவும் தங்கள் இசைக்குழுவின் நிர்வாகியாக முன்பு பணிபுரிந்த இவானைச் சென்று சந்திக்கிறார்கள்.

இவான் மொஸ்கோ கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிவேர்களில் ஒருவன். தங்கள் வாழ்க்கை இந்நிலைக்கு வர இவானும் ஒர் வகையில் காரணம் என்று அவனோடு சூடாக வாதிடும் ஆண்ட்ரேயும், ஷாஷாவும் இவானை இசைக்குழுவின் பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சம்மதிக்க வைத்துவிடுகிறார்கள்.

கேட்பவர்கள் எல்லாரையும் அவர்கள் மரணம்வரை சிரிக்க வைக்கும் தன் அட்டகாசமான பிரெஞ்சுமொழியில் சாத்துலே கலையரங்கை தொடர்பு கொள்ளும் இவான், தன்னை பொல்ச்சொய் கலையரங்கின் இயக்குனராக அறிமுகம் செய்து கொள்கிறான். தங்கள் இசைக்குழு பாரிஸில் இசைநிகழ்ச்சியை நடாத்துவதற்கான நிபந்தனைகளை அவர்களிடம் கண்டிப்பான தொனியில் விளக்கும் இவான், சாத்துலே கலையரங்கம் தன்னை தொடர்பு கொள்வதற்காக தன் கைத்தொலைபேசி இலக்கத்தையும் அவர்களிற்கு வழங்குகிறான்.

le-concert-2009-18222-651423408 இவானுடனான சந்திப்பின் பின் ஆண்ட்ரேயும், ஷாஷாவும் சிதறிப்போய்விட்ட தங்கள் இசைக்குழுவின் கலைஞர்களை ஒன்று கூட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள்.

அதில் பெரும்பாலான இசைக்கலைஞர்கள் பலவருடங்களாக இசைக்கருவிகளை தொட்டதில்லை. காலத்தின் நடையில் அவர்கள் தங்கள் இசைக்கருவிகளையும், இசைநிகழ்ச்சியின்போது அணியும் அழகான ஆடைகளையும் என யாவற்றையும் இழந்தவர்களாக இருக்கிறார்கள்.

இசைக்கலைஞர்கள் எனும் நிலையிலிருந்து பலவிதமான மாற்றங்களை நியாயமற்ற புறக்கணிப்பால் சந்தித்துவிட்ட அக்கலைஞர்களை பாரிஸ் இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்ள சம்மதிக்க வைக்கிறார்கள் நண்பர்களிருவரும்.

இவானின் நிபந்தனைகளை வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ளும் சாத்துலே கலையரங்கம், பொல்ச்சொய் இசைக்குழு என்ன இசை நிகழ்சியை பாரிஸில் வழங்கப்போகிறது என்பதை அறிய விரும்புகிறது.

கடந்த முப்பது வருடங்களாக தன் ஆன்மாவினுள்ளே என்றும் தான் இசைத்துக் கொண்டிருக்கும் சாய்க்கோவ்ஸ்கியின் Violin Concerto எனும் இசைவடிவை இசைக்கப் போவதாகக் தெரிவிக்கிறான் ஆண்ட்ரே. அத்துடன் அந்த இசைவடிவில் இடம்பெறும் பிரதான வாத்தியமான வயலினை இசைப்பதற்கு புகழ்பெற்ற இளம் பிரெஞ்சுக் கலைஞியான ஆன் மேரி ஜாக்கே மட்டுமே தனக்கு வேண்டும் என்பதையும் அறியத்தருகிறான். சாத்துலே கலையரங்கம் ஆன் மேரியை ஒப்பந்தம் செய்யத்தவறும் நிலையில் தன்னால் இந்த இசைநிகழ்ச்சியை நடாத்த முடியாது என்பதையும் ஆண்ட்ரே தெளிவாக்குகிறான்.

பிரபலமான வயலின் இசைக்கலைஞியான ஆன் மேரி, பெற்றோர்களற்ற ஒர் அனாதை. அவளை மிகச் சிரத்தையுடன் வளர்தெடுத்து அவள் இசைத் தொழிலையும் நிர்வகித்து வருகிறாள் கில்லென் எனும் பெண்மணி. தன் பெற்றோர்கள் குறித்து ஆன் மேரி அறிந்து கொள்ள விரும்பினாலும் அவர்கள் சம்பந்தமான எந்த தகவல்களையும் அவளால் பெற்றுக்கொள்ள இயலாமலிருக்கிறது.

le-concert-2009-18222-1635666421 தான் வழங்கும் இசைநிகழ்ச்சிகளில் அவள் இசைக்கும் இசையின் மூலமாக தன் பெற்றோர்களின் அரவணைப்பை கண்டடைய வேண்டும் என மனதில் ஏங்குபவள் ஆன் மேரி. சாய்க்கோவ்ஸ்கியின் இசைவடிவங்களை தன் வயலினில் இசைப்பதற்கு தயக்கம் கொண்டவளாகவும் அவள் இருக்கிறாள்.

சாத்துலே கலையரங்கம் அவளை தொடர்பு கொண்டதை அறியும் ஆன் மேரி இசைநிகழ்ச்சியை வழங்குவது ஆண்ட்ரே பிலிப்போவ், மற்றும் பொல்ச்சொய் இசைக்குழு என்பதால் அதில் கலந்து கொள்ள சம்மதிக்கிறாள்.

மொஸ்கோவில் உருவாகும் பல சிக்கல்களை சாமாளித்து பாரிஸ் வந்து சேர்கிறது ஆண்ட்ரேயின் பொல்ச்சொய் இசைக்குழு. தாங்கள் தங்கப் போகும் விடுதியை வந்தடைந்ததும் தங்களிற்கு உடனடியாக முன்பணம் வேண்டும் எனத் தகராறு செய்கிறார்கள் இசைக்குழுவின் கலைஞர்கள். அவர்களிற்கு முன்பணம் வழங்கப்பட பாரிஸின் இரவினுள் கலந்து போய்விடுகிறார்கள் அவர்கள்.

பாரிஸிற்கு இசைக்குழு வந்ததிலிருந்து எந்த ஒத்திகையுமே நடைபெறவில்லை என்பதால் கோபம் கொள்ளும் சாத்துலே கலையரங்கின் இயக்குனர் துப்ளேசி ஆண்ட்ரேயுடன் சினந்து கொள்கிறார். இசைக்கலைஞர்கள் கலையரங்கிற்கு சமூகமளிக்காவிடில் இசைநிகழ்ச்சியையே தான் ரத்து செய்வேன் என மிரட்டுகிறார். ஷாஷா அவரை சாந்தப்படுத்துகிறான்.

வயலின் கலைஞர்கள் நிரம்பி வழியும் பாரிஸில் தன்னை மட்டும் சிறப்பாக ஆண்ட்ரே ஏன் தெரிவு செய்தான் என்பதை அறிய விரும்பும் ஆன் மேரி அவனை இரவு உணவு விருந்துக்கு அழைக்கிறாள். அழகான ஒர் உணவு விடுதியில் சந்தித்துக்கொள்கிறார்கள் இருவரும். ஆனின் கேள்விகளிற்கு பதில் அளிக்க ஆரம்பிக்கிறான் ஆண்ட்ரே. முப்பது வருடங்களின் முன் தன் இசைக்குழுவில் வயலின் வாசிப்பவளாக இருந்த லியா எனும் பெண்பற்றிக் கூற ஆரம்பிக்கிறான் அவன்.

le-concert-2009-18222-1849931152 ஆண்ட்ரேயின் வலி நிறைந்த சொற்களை கேட்கும் ஆன் மேரி, ஆண்ட்ரேக்கு தேவையானவள் லியாதான் தானில்லை என்கிறாள். ஓர் மருத்துவனைப் பார்த்து ஆண்ட்ரே அவனைக் குணப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை தருகிறாள். ஆண்ட்ரேயின் இசை நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்பதனை ஆண்ட்ரேக்கு திட்டமாக அறிவித்துவிட்டு உணவு விடுதியை விட்டு வெளியேறுகிறாள் அவள்.

பல வருடங்களாக மது அருந்தும் பழக்கத்தை நிறுத்தியிருந்த ஆண்ட்ரே அன்று மீண்டும் மது அருந்த ஆரம்பிக்கிறான். வோட்கா மது அவன் உடலில் ஏற ஏற, தனியே அமர்ந்திருக்கும் ஆண்ட்ரேயின் விழிகளில் அவன் உள்ளத்தின் வலிகள் இசைக்கும் இசை கண்ணீராக வழிகிறது…

பாரிஸ் நகரில் எங்கென்று தெரியாது ஓடிப்போய்விட்ட பொல்ச்சொய் இசைக்கலைஞர்கள், இசைநிகழ்வில் இணைய மறுத்து விட்ட ஆன் மேரி, இசை நிகழ்ச்சியை ரத்து செய்வதாக மிரட்டும் துப்ளேசி, பின்பு எவ்வாறுதான் அந்த அற்புதமான இசை நிகழ்ச்சி நடந்தது என்பதை நீங்கள் அறிய விரும்பினால் Le Concert எனும் இந்தப் பிரெஞ்சுத் திரைப்படத்தைப் பாருங்கள்.

முப்பது வருடங்களாக ஒடுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒர் இசைக்கலைஞனின் உள்ளத்தில் சிறைப்பட்டுக் கிடந்தவற்றின் விடுதலையையும், தன் அடையாளத்தை தேடிக் கொண்டிருக்கும் ஒர் இசைக்கலைஞியின் தேடலையும் இசையின் மூலம் ஒரே மேடையில் இணையவைக்கிறது திரைப்படத்தின் கதை.

படத்தின் பெரும்பகுதியை சிலாவிக் மக்களின் அலட்டிக் கொள்ளாத வாழ்க்கை முறையினால் உருவாகும் நகைச்சுவை ஆக்கிரமித்துக் கொண்டாலும் பின்பு கதையில் இணையும் ஆன் மேரி பற்றிய மர்மம் கதையைக் கனமாக்குகிறது.

le-concert-2009-18222-480178255 திரைப்படத்தின் முற்பாதியில் மொஸ்கோவில் சிதறிக்கிடந்த இசைக்குழுவை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கும், அவர்களை பாரிஸ் அழைத்து வருவதற்கும் நடைபெறும் தகிடுதத்தங்கள் சிரிப்போ சிரிப்பு. அதிலும் இசைகுழு கலைஞர்களிற்கு விமானநிலையத்தில் வைத்தே போலிப் பாஸ்போர்ட்டுகளையும், விசாக்களையும் வழங்கும் அந்தக் காட்சி கொஞ்சம் ஓவர் என்றாலும் சிரிப்பை பார்வையாளர்களிடம் வஞ்சகமின்றி அள்ளுகிறது. படத்தின் பிற்பாதி மனதை நெகிழ வைக்கும் உணர்ச்சிகரமான தருணங்களால் பார்வையாளனை ஆக்கிரமிக்கிறது.

தன் மென்மையான நடிப்பால் மனம் கவரும் ஆண்ட்ரே(Alexi Guskov), மலைக்கரடிபோல் தோற்றமளிக்கும் குழந்தை மனம் கொண்ட ஷாஷா(Dimitri Nazarov), உச்சக் கட்ட இசைநிகழ்ச்சியின்போது தன் கண்களாலும், முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளாலும் அசர வைக்கும் ஆன் மேரி(Mélanie Laurent), படபட பட்டாசாக வெடிக்கும் துப்ளேசி(François Berléand) என பாத்திரங்களில் பெரும்பான்மையானோர் தங்கள் திறமையை அற்புதமாக நிரூபித்தாலும் எல்லாரையும் மீறி உள்ளத்தை அள்ளுபவர் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிவேரான இவான்(Valeri Barinov).

மொஸ்கோவில் இடம்பெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டங்களிற்கு காசு கொடுத்து ஆட்களைச் சேர்த்தல், ஆளை அடித்து விழுத்தும் அட்டகாசமான பிரெஞ்சு உச்சரிப்பு, உலகை மாற்றியமைக்கப் போகும் கம்யூனிஸ்ட் கட்சி ஆவணங்களை!!! பாரிஸில் கம்யூனிஸ்ட் காம்ரேடிடம் கையளித்தல், உச்சக்கட்ட இசைநிகழ்வின்போது புதுமை ஒன்றை நிகழ்த்தச் சொல்லி கடவுளிடம் சவால் விடல், பாரிஸ் உணவு விடுதியில் இடுப்பு நடனம் பார்த்து ஏமாறுதல் என அவர் வரும் காட்சிகளை எல்லாம் சிரிப்பால் அதிரவைக்கிறார் அவர். [நேரில் அவரைக் கண்டால் அவரை இறுக அணைத்து அவர் கன்னத்தில் ஒர் முத்தம் வைப்பதாக நான் தீர்மானித்திருக்கிறேன்.]

le-concert-2009-18222-103395645 திரைப்படமானது இசைநிகழ்ச்சியை மையமாகக் கொண்டாலும் பார்வையாளனைக் கடைசித்தருணம்வரை ஏங்க வைக்கிறார் இசையமைப்பாளர் Armand Amar. ஏங்கிக்கிடந்த ரசிகனிற்கு இறுதியில் அவர்தரும் விருந்து அபாரம். இறுதிக்காட்சியில் இசைக்கப்படும் சாய்க்கோவ்ஸ்கியின் Violin Concerto, மெதுவாகத் திரையைவிட்டு அரங்கினுள் இறங்கி, பார்வையாளனை அருகில் நெருங்கி, அவனைத் தன் கரங்களில் தழுவி, அவனுள் நுழைந்து காட்சி இசை ரசிகன் என எல்லாவற்றையும் இசை எனும் ஒன்றாக்கிவிடுகிறது.

Le Concert எனும் இத்திரைப்படம் ஓர் மாபெரும் கலைப்படைப்போ அல்லது உலக மகா விருதுகள் வென்ற படைப்போ அல்ல ஆனால் சாதாரண ஓர் ரசிகனின் மனதை வருடிக் கொடுத்து அவன் மென் உணர்வுகளிற்கு புத்துயிர்ப்பு அளிக்கும் ஒர் படைப்பு. திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகன் மனதில் ஒர் புன்னகையை தந்தனுப்பும் சாதாரணமான ஓர் படைப்பு. அதனை அற்புதமாக படைத்திருக்கிறார் இயக்குனர் Radu Mihaileanu.

உண்மையான இசைக்கலைஞன் ஒருவனின் ஆன்மாவினுள்ளே சிறைப்பட்டிருக்கும் இசை தன்னை விடுவிக்கும்போது அந்த இசைக்கலைஞனையும் அது விடுவித்துவிடுகிறது. இந்த இரு விடுதலைகளின் சங்கமத்தில் உருவாகும் விளைவானது இந்த உலகையே உன்னதத்தின் உச்சத்திற்கு இட்டுச் செல்லும் தன்மை கொண்டதாகவேயிருக்கிறது. [***]

பிரெஞ்சு ட்ரெயிலர்

செய்க்கோவ்ஸ்கியின் Violin Concerto- இரவின் அமைதியில் ஒருமுறை கேட்டுத்தான் பாருங்களேன்

6 comments:

  1. யாருங்க அந்த பச்சை சட்டை? பாக்க நல்லா காமிடியா இருக்காரு...

    ReplyDelete
  2. அன்பு நண்பரே,

    படம் பார்க்க வேண்டுமென்ற ஆவலை தூண்டி விட்டீர்கள். ப்ரென்ஞ் வார்த்தை விளையாட்டுகள் துணையெழுத்துகளில் அவ்வளவாக புரிவதில்லை. டாக்ஸி படத்திலேயே அவ்வளவு இருக்கின்றன என நண்பர் சொல்லி அறிந்து கொண்டேன்.


    ஆக இந்த படத்தை பார்க்க சில நாட்கள் தள்ளிப் போட வேண்டியதுதான். நிறைய அறிமுகப்படுத்துங்கள். சில வார்த்தை விளையாட்டுகளை நேரமிருப்பின் புரிய வையுங்கள். நல்ல பதிவு.

    ReplyDelete
  3. நண்பரே,
    என்றும் உங்களின் வரிகளில் வெளிப்படும்
    விறுவிறு இந்த பதிவிலும் குறையவில்லை.
    பதிவை படித்து விட்டு படம் பார்க்கும் வரை
    தூக்கம் பிடிக்காது. ஆனால் நீங்கள் இணைத்த
    இந்த இசையும் இதை செய்துவிட்டது. ஒருமுறை என்ன பலமுறை ஒலிக்க விட்டேன். மனம் தான் இன்னும் இன்னும் ஒருமுறை என்கிறது. படம் பார்த்தபின் குறையுமா என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நண்பர் சிவ், பச்சை சட்டை= ஷாஷா அவருடைய நடிப்பும் சிறப்பாக இருக்கும்.

    ஜோஸ், கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன் அவர்களே, படத்தின் இறுதிக்கட்டத்தில் இந்த இசை இணைந்து கொள்ளும்போது அது தரும் அனுபவம் சொல்ல முடியாதது. கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  5. நன்றி! படத்தை பார்க்கத்தூண்டும் அழகான விமர்சனம். வாழ்த்துக்கள்! தொடர்ந்து நல்ல படங்களை விமர்சியுங்கள்! பயனுடையாதக இருக்கிறது.:)

    ReplyDelete
  6. நண்பர் ash அவர்களே, என் மனம் கவரும் படங்கள் குறித்து தவறாமல் எழுதுவேன், உங்கள் வாழ்த்துக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete