Showing posts with label Summer Wars. Show all posts
Showing posts with label Summer Wars. Show all posts

Thursday, June 17, 2010

இளவேனில் யுத்தங்கள்


கென்ஜி, கணிதத்தில் அசாத்திய திறமை கொண்ட ஒரு கல்லூரி மாணவன். ஒஸ் [OZ] எனப்படும் இணைய மெய்நிகர் யதார்த்த உலகில் [Virtual Reality World] அங்கம் வகிப்பதுடன் ஒஸ் உலகின் பராமரிப்பு விடயங்களிலும் அவன் பங்கேற்று வருகிறான்.

ஒஸ், உலகெங்கிலும் உள்ள பல கோடி அங்கத்தினர்களை அவதார் வடிவில் தன்னகத்தே கொண்டிருக்கிறது. இணையம், தொலைபேசி, என்பவற்றின் வழியாக ஒஸ் உலகுடன் ஒருவர் இணைந்து கொள்ள முடியும். ஒஸில் பல்நாட்டு பெரு நிறுவனங்களும், நிர்வாக அமைப்புக்களும் கூட அங்கம் வகிக்கின்றன.

கென்ஜியின் கல்லூரியில் கல்வி பயிலும் அழகிய மாணவியான நட்சுகி, இளவேனில் கால விடுமுறையின்போது தனக்காக பணியாற்றும் வாய்ப்பை கென்ஜிக்கு வழங்குகிறாள். மிகவும் ஆர்வத்துடன் நட்சுகிக்காக வேலைபார்க்க சம்மதிக்கும் கென்ஜி இதற்காக நட்சுகியின் பாட்டி வாழ்ந்து வரும் ஊரிற்கு பயணமாகிறான்.

நட்சுகியின் பாட்டி வாழ்ந்து வரும் பசுமையான ஊரை அடையும் கென்ஜி, நட்சுகியின் பாட்டிக்கு விரைவில் 90 வயது பூர்த்தியாக இருப்பதையும், அதற்காக ஒரு சிறப்பு பிறந்ததின விருந்து ஏற்பாடாகியுள்ளதையும் அறிந்து கொள்கிறான். நட்சுகியின் குடும்ப உறுப்பினர்கள் யாவரும் இந்த விருந்திற்காக பாட்டியின் பழமைவாய்ந்த பாரம்பரிய வீட்டில் ஒன்று கூடுகிறார்கள்.

தக்க தருணமொன்றில் கென்ஜியை தன் பாட்டிக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள் நட்சுகி. கென்ஜி தன் காதலன் எனவும், எதிர்காலத்தில் அவனையே தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் நட்சுகி, பாட்டிக்கு அறிவிக்கிறாள். மேலும் கென்ஜி அமெரிக்கா சென்று கல்வி கற்றவன் எனவும், ஒரு கவுரவமான குடும்பத்தை சேர்ந்தவன் என்றும் பாட்டியிடம் அடுக்குகிறாள். இந்த அறிமுகம் கென்ஜிக்கு அதிர்ச்சியை தருகிறது.

summer-wars-2010-19781-895596730 தன் பாட்டியின் உடல் நலம் மோசமாக இருந்த ஒரு சமயத்தில்,பாட்டியின் உடல் நலம் தேறுவதற்காக தான் சொன்ன ஒரு பொய்யே, தான் இப்போது ஆடும் நாடகத்திற்கு காரணம் என்பதை கென்ஜிக்கு புரிய வைக்கிறாள் நட்சுகி. முதலில் தயங்கினாலும் நட்சுகியின் காதலனாக சில நாட்கள் நாடகமாட சம்மதிக்கிறான் கென்ஜி.

கென்ஜியின் பெற்றோர்கள் வேலையே கதி என்று ஓடுபவர்கள். இந்தக் காரணத்தால் கென்ஜிக்கு குடும்பம் ஒன்றின் அன்பான அரவணைப்பு இல்லாமல் வளரவேண்டிய கட்டாயம். தனிமை உணர்வுடன் வாழ்ந்து வந்த கென்ஜிக்கு, ஏராளமான உறவினர்களைக் கொண்ட நட்சுகியின் குடும்பம் மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் அளிக்கிறது. தன் நாட்களை இனிமையாக கழிக்க ஆரம்பிக்கிறான் கென்ஜி. ஆனால் ஒஸ் உலகில் கென்ஜியின் அவதாரை உபயோகித்து உள்ளே நுழைந்த ஒரு தீயசக்தி, அந்த உலகை ஹேக்[Hack] செய்துவிடுகிறது.

ஒஸ் தாக்கப்பட்ட நிகழ்வு ஜப்பானில் பரபரப்பான செய்தியாகிவிடுகிறது. கென்ஜிதான் இந்த பாதகச் செயலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் பரவலாக நிலவுகிறது. தொலைக்காட்சியில் கென்ஜியின் போட்டோவை தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் கென்ஜி குறித்த உண்மையான விபரங்களை நட்சுகியின் குடும்பம் அறிந்து கொள்கிறது. நட்சுகியின் காதலன் என கென்ஜி ஆடும் நாடகமும் முடிவிற்கு வருகிறது. கென்ஜியிடம் அன்பும், பரிவும் காட்டி மகிழ்ந்த நட்சுகி குடும்பத்தினர் அவனை வெறுக்க ஆரம்பிக்கின்றனர்.

ஒஸ் உலகில் புகுந்த செயற்கை அறிவாண்மையான [Artificial Intelligence] லவ் மெஷின், தன் மோசமான நடவடிக்கைகளை அவ்வுலகில் தொடர்கிறது. இதனால் பல மக்களின் சாதாரண நாள் வாழ்கை பாதிப்படைகிறது. ஜப்பானின் பல நகரங்களில் குழப்ப நிலை உருவாகிறது. தேசத்தின் மீது அதிகப்பற்றுக் கொண்ட நட்சுகியின் பாட்டி, நாட்டில் உருவாகிய குழப்ப நிலையை எவ்வழியிலாவது தீர்த்து வைக்க வேண்டுமென விரும்புகிறாள். ஆனால் தொடரும் சில சம்பவங்களினால் தன் பிறந்த தினத்திற்கு முன்பே அவள் இறந்து போகிறாள்.

summer-wars-2010-19781-152714463 பாட்டியின் மரணம் அவர் வீட்டில் மகிழ்ந்திருந்த எல்லோரையும் பாதிக்கிறது. நட்சுகியின் பாட்டியின்மீது மிகவும் மதிப்பு கொண்டிருந்த கென்ஜி, பாட்டியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக நட்சுகியின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ஒஸில் நுழைந்துவிட்ட லவ் மெஷினை ஒழித்துக்கட்டுவது என முடிவெடுக்கிறான். ஆனால் லவ் மெஷினோ உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்லும் வகையில் தன் காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறது…..

Mad House Studio வால் தயாரிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படமான Summer Wars, இன்றைய உலகில் வேகமாக அர்த்தமிழந்து கொண்டிருக்கும் குடும்ப உறவுகள், அன்பு நிறைந்த சொந்த பந்தங்கள் என்பவற்றின் அவசியம் குறித்து பேசவிழைகிறது. வேறுபாடுகளை புறந்தள்ளி, ஒற்றுமையாக இணைந்து செயற்படுவதன் மூலமே தடைகளை வெற்றிகரமாக கடக்கலாம் என்பதனையும் உணர்த்த முற்படுகிறது. இயக்குனர் Mamouru Hosoda திரைப்படத்தை திறமையாக இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் அதில் அடாது நிறைந்திருக்கும் இளமை உணர்வு. மேலும் அந்த உணர்வுடன் கைகோர்க்கும் குறும்பு மற்றும் நகைச்சுவை என்பன படத்தை பார்ப்பவர்களை இளமையாக உணர வைக்கின்றன அல்லது இளமையை எண்ணி ஏங்க வைக்கின்றன. அனிமேஷனில் கூட இளமை ஆட்டம் போடுகிறது. ஒஸ் உலகின் அறிமுகம், கென்ஜி மற்றும் நட்சுகி ஆகியோர் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சிகளில் இளமையின் பசுமை மனங்களை வருடிக் கொடுக்கிறது. இளமையான வேகத்தில் பறக்கிறது படம்.

summer-wars-2010-19781-531171158 நட்சுகியின் பாட்டி வீட்டில் கென்ஜி சந்திக்கும் பாத்திரங்கள் சுவாரஸ்யமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. கென்ஜியையும், நட்சுகியையும் குடும்ப அங்கத்தினர்கள் கலாய்க்கும் காட்சிகள் ஜாலியான கலகலப்பு. குறும்பு செய்வதையே கடமையாகக் கொண்ட வாண்டுகள், தன் குடும்பத்தின் வீரபிரதாபம் பற்றி பேசும் மாமா, போர்க்குணம் கொண்ட சிறுவன் கசுமா, நட்சுகியை தன்னிடம் இருந்து அபகரித்து விட்டான் என கென்ஜி மீது கோபமாக இருக்கும் பொலிஸ் மச்சான் என ரசிக்க வைக்கும் பாத்திரங்கள் திரைக்கதையை அலங்கரிகின்றன. பாட்டிக்கும் அவளது அமெரிக்க ரிட்டர்ன் பேரனிற்குமிடையில் இருக்கும் அன்பு வெளிப்படும் தருணத்தில் அழகின் மென்மை சாரலாக எட்டிப் பார்க்கிறது. அதேபோல் மனதை நெகிழ வைக்கும் கவித்துவமான காட்சிகளும் படத்தில் உண்டு.

இருப்பினும் ஒஸ் உலகில் ஏற்படும் அசம்பாவிதங்களிற்கும், பாட்டியின் மரணத்திற்குமிடையில் திரைப்படத்தின் வேகம் கணிசமான அளவு குறைந்து விடுகிறது. ஒஸ் உலகில் அவதார்களிற்கு இடையில் நிகழும் போட்டிகளும், மோதல்களும் படத்தின் இறுதிப்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இது இளம் தலைமுறைக்கு உவப்பானதாக அமைந்தாலும், ஜப்பானிய அனிமேஷன் படங்களிற்குரிய அபாரமான கற்பனை வளத்திலிருந்து ஒரு படி இறங்கிய உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.

Summer Wars திரைப்படம் Miyazaki ன் திறமையில் மயங்கிக் கிடக்கும் நெஞ்சங்களை முழுமையாகத் திருப்திப்படுத்தாத போதிலும் கூட, அதிலிருக்கும் இளமையாலும், அன்பாலும் அவர்களை சற்றுக் கவர்ந்து விடவே செய்கிறது. [**]

ட்ரெயிலர்