
Jose Maria வும், Rosa வும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு பொருளாதார நிர்ப்பந்தங்களினால் தொழில் தேடி வந்து குடியேறியவர்கள். சமூகத்தின் மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த டொரெஸ் தம்பதியினரின் பிரம்மாண்டமான வீட்டில் ரோஸா ஒரு பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறாள்.
ஹோசே மரியா ஸ்பெயினில் தங்கி வேலை பார்பதற்கான தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாத ஒரு சட்டவிரோதக் குடியேறி. இருப்பினும் அவன் கட்டிட நிர்மாண ஸ்தலங்களில் ஒரு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறான்.
டொரெஸ் தம்பதியினர் பயணங்களின்போது தம் வீட்டை ரோஸாவின் கண்காணிப்பில் விட்டுச் செல்லும் வேளைகளில் ரோஸா தன் காதலன் ஹோசே மரியாவை அவ்வீட்டிற்குள் அழைத்து வந்து காதல் கொண்டு மகிழ்கிறாள்.
டொரெஸ் தம்பதியினரின் மூன்று மாடிகளைக் கொண்ட அவ்வீட்டின் பலபகுதிகள் ஆள்நடமாட்டமில்லாத பகுதிகளாக இருப்பதை ஹோசே வியப்புடன் அவதானிக்கிறான். தான் தங்கியிருக்கும் சிறு அறையில் ஆறுபேர்கள் நெருக்கடித்துக் கொண்டு வாழவேண்டிய உண்மையை அவன் டொரெஸ் வீட்டின் வெறுமையான விஸ்தாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறான்.
ஹோசே இயல்பிலேயே கோபக்காரன். தன் கோபத்தைக் கட்டுப்படுத்த தெரியாதவன். ஸ்பெயின் நாட்டு சமூகத்தால் கண்ணியமற்ற வகையில் அவன் நடாத்தப்படுவது அவனிற்கு பெரும் ஆத்திரத்தை தருகிறது. இந்நிலையில் தன் அன்புக் காதலியான ரோஸாவை இரு நபர்கள் கிண்டல் செய்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஹோசே அவர்கள் இருவரையும் தேடிச் சென்று அடித்து விடுகிறான். இது பற்றிய புகார் ஹோசே பணிபுரியும் இடத்தை எட்ட, ஹோசேயின் மேற்பார்வையாளர் அவனை வேலை நீக்கம் செய்து விடுகிறார்.
மேற்பார்வையாளர் தன் காதலி ரோஸா குறித்து தவறாகப் பேசியதை மனதில் வைத்திருந்த ஹோசே மறுநாள் மேற்பார்வையாளனை தேடிச் சென்று அடிக்கிறான். துரதிர்ஷ்டவசமாக ஹோசேயின் அடியினால் மேற்பர்வையாளன் கட்டிடத்தின் உயரத்திலிருந்து கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறந்து போகிறான். பொலிசார் இக்கொலைக்கு காரணமான ஹோசேயை வலைவிரித்து தேட ஆரம்பிக்கிறார்கள். செல்வதற்கு எந்த இடமும் அற்ற ஹோசே யாரிற்கும் [ரோஸாவிற்குகூட] தெரியாது டொரெஸ் தம்பதிகளின் வீட்டில் வந்து ஒளிந்து கொள்கிறான்….
தம் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக பிறந்த நாட்டை விட்டு வேறு நாடுகளில் பிழைக்க வரும் கடைநிலைத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனைகள் எண்ணிலடங்காதது. அதிலும் பிழைக்க வரும் நாட்டில் சட்டபூர்வமாக தங்குவதற்குரிய ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் வாழ்க்கை நரகத்தைவிட மோசமானதாகவே இருக்க முடியும். பூக்கள் மலர்வதுபோல் அவர்களின் வாழ்க்கையில் வேதனைகள் மலர்ந்தபடியே இருக்கின்றன. அவ்வகையான இருவரின் வேதனையான கதையையே ஸ்பானியத் திரைப்படமான Rabia [வெறி] தன்னுள் கொண்டிருக்கிறது.
காதல், திகில், பொருளாதார அகதிகள் குறித்த சமூகத்தின் பார்வை என திரைக்கதை விரிகிறது. திரைப்படத்தின் பெரும்பாலான பகுதிகள் டொரெஸ் தம்பதிகளின் வீட்டினுளேயே படமாக்கப்பட்டிருக்கிறது. வீடு என்பது சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள், வெளிவேடங்கள், சுரண்டல்கள் என்பவற்றோடு இரு குடியேறிகளையும் ஏறக்குறைய ஒரு தடுப்புச் சுவர்போல் சூழ்ந்து நிற்கிறது.
ஹோசே பணிபுரியும் இடத்திலேயே அவன் பிறநாட்டவன் என்பது வன்மமாக அவனது மேற்பார்வையாளனால் ஹோசேக்கு வலியுறுத்தப்படுகிறது. சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் வேலை பார்ப்பதற்குரிய ஆவணங்கள் அவனிடம் இல்லாத நிலையிலும் கூட அவனை வேலைக்கமர்த்தி சுரண்டும் மேற்பார்வையாளன் ஹோசேயை சக மனிதனாக பார்க்கத் தவறுகிறான்.
ஹோசே ஸ்பெயின் நாட்டில் இருப்பது உழைப்பதற்காகவே எனவே அவன் யந்திரம்போல் இயங்க வேண்டுமென மேற்பார்வையாளன் எதிர்பார்க்கிறான். ஹோசேயின் காதலி குறித்து கண்டபடி பேசுவதற்கும் அவன் தயங்குவதில்லை. இந்தப் பாத்திரம் வழி ஸ்பெயின் நாட்டில் பொருளாதார அகதிகள் எதிர்கொள்ளும் அவலநிலையை திரைக்கதை முன்வைக்கிறது ஆனால் இவற்றை அவற்றின் முழு வீச்சற்ற நிலையிலேயே திரைப்படத்தில் உணரக்கூடியதாக இருக்கிறது.
ஹோசேக்கு நேர் எதிரானவளாக, அடங்கிப் போபவளாக, அதிகம் எதிர்த்துப் பேசாதவளாக ரோஸா இருக்கிறாள். டொரெஸ் தம்பதிகள் நல்ல மனிதர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஹோசேயைப் போலன்றி தன் வேலைக்காக சில சமரசங்களை செய்து கொள்வதற்கு ரோசா தயங்குவதில்லை. டொரெஸ் தம்பதியினரின் மகன் அவளை பலாத்காரம் செய்தபோதிலும் தன் வேதனைகளை தனக்குள் முடக்கி வாழப் பழகுகிறாள் ரோஸா.
ஹோசே, யாரிற்கும் தெரியாது டொரெஸ் தம்பதியினரின் வீட்டினுள் நுழைந்தபின் அவன் பார்வை வழியாக மேல்தட்டு குடும்பம் ஒன்றின் கதை பார்வையாளன் முன் உருப்பெறுகிறது. திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்படும் தருணம் இதுவே. மேல்தட்டுக் குடும்பத்தின் வாழ்க்கையோடு, தன் காதலி ரோஸாவின் சோகத்தையும், அவள் கண்ணீரையும், வீட்டின் சுவர்களைக் கடந்து வரும் வலி நிறைந்த அவள் வேதனைகளையும் மெளனமான வலியுடன் தாங்கிக் கொள்ள ஆரம்பிக்கிறான் ஹோசே.
நாட்கள் செல்ல செல்ல, டொரெஸ் தம்பதிகளின் வீட்டினுள் வசிக்கும் எலிகள் போலவே ஹோசேயும் வாழப் பழகிக் கொள்கிறான். எலிகள் அவனிற்கு நெருக்கமானவையாக தோன்றுகின்றன. படிப்படியாக அவனும் அவ்வீட்டின் ஒரு எலியாகி விடுகிறான். மனிதர்களிடமிருந்து ஒளிந்திருக்கிறான், உணவுகளை திருடி உண்கிறான். நிழலான மூலைகளில் கழிவகற்றுகிறான். வீட்டின் இண்டு இடுக்குகளில் புகுந்து வாழ்கிறான். ஆனால் அவன் கைக்கெட்டிய தூரத்தில் அவன் காதல், அவன் அன்பை தன் வயிற்றில் சுமந்தவண்ணம் அவனை எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு அருகாமையிலும் அவன் உணரவேண்டிய அன்பின் தூரம் மிகவும் நீண்டதாகவிருக்கிறது. அது அவனை அன்பின் வலியில் ஒடுங்கச் செய்கிறது.
இவ்வகையான உணர்சிகரமான திரைக்கதை, ஹோஸே மறைந்து வாழ்வதற்காக டொரெஸ் தம்பதியினர் வீட்டினுள் நுழைந்ததும் ஒரு த்ரில்லராக மாற்றம் கொள்ள ஆரம்பித்து விடுகிறது. ஹோசே எப்போது மாட்டிக் கொள்வானோ? இதனால் என்ன நடக்குமோ? தன் கோபத்தை அடக்கத் தெரியாத ஹோசே அவன் கண்முன் காதலி ரோஸா படும் வேதனைகளைப் பார்த்து என்ன பதிலடி தருவானோ என பதட்ட உணர்வொன்று நெகிழ்வான உணர்வுகளையும் மீறி மனதை ஆக்கிரமிக்கிறது.
வலிமையான இந்த த்ரில்லர் தன்மையே திரைப்படத்தில் மனதை நெகிழவைக்கும் தருணங்கள் அளிக்கும் உணர்வுகளை சக்தியற்றதாக்கி விடுகிறது. ஒரே வீட்டினுள் இரு பொருளாதாரா அகதிகளின் வேறுபட்ட வாழ்க்கையை உணர்ச்சிகரமாக சித்தரிக்க விழையும் திரைப்படம் ஒரு த்ரில்லராகவே இங்கு வெற்றி பெறுகிறது.
ஹோசே[Gustavo Sanchez Parra], ரோஸா[Martina Garcia], எனும் பிரதான பாத்திரங்கள் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தன்னுடன் வீட்டினுள் வசித்திருந்த எலி மரணமடைந்தபின் அதனை ஹோசே தன் பல் ஒன்றுடன் பெட்டியில் வைத்து புதைப்பது, ஒரே வீட்டில் இருந்தபடியே ரோஸாவுடன் தொலைபேசியில் உரையாடுவது, தன் குழந்தையை தன் கைகளில் பெற்று ஹோசே கூறும் வார்த்தைகள் போன்றன மனதை கலங்க வைக்கும் தன்மை கொண்டவை. இனிமையான பின்னனி இசையும் உணர்வுகளிற்கு துணை சேர்க்கிறது. படத்தை நல்லவகையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர் Sebastien Cordero.
வீட்டில் வாழும் எலிகளைக் கொன்றொழிப்பது போலவே ஹோசே போன்ற மனிதர்களின் வாழ்க்கையை சமூகம் தினமும் அழித்துக் கொண்டிருக்கிறது. அம்மனிதர்களின் வாழ்க்கையை சற்று எண்ணிப் பார்க்கும்போது சபிக்கப்பட்ட அந்த மனிதர்களைவிட எலிகள் சுதந்திரமாக வாழ்ந்து மடிகின்றன என்ற உணர்வு மேலோங்குகிறது. சமூகம் உருவாக்கிய எலிகள், ஒடுங்கிய எல்லைகளினுள் உயிர் வாழ ஓய்வின்றி ஓடிக் கொண்டேயிருக்கின்றன. [**]
ட்ரெயிலர்