Showing posts with label STEPHEN DALDRY. Show all posts
Showing posts with label STEPHEN DALDRY. Show all posts

Friday, July 24, 2009

படித்துக்காட்டாத கவிதை


1958. மேற்கு ஜெர்மனி. பள்ளி விட்டு வீடு திரும்பும் இளைஞன் மைக்கல்[ DAVID CROSS ], வழியில் சுகவீனம் அடைகிறான். பலமாக பெய்து கொண்டிருக்கும் மழையில் இருந்து ஒதுங்கி, ஒர் கட்டிடத்தின் தாழ்வாரப் பகுதியில் அடைக்கலம் தேடுகிறான். அவனின் நிலையைக் கண்டு இரங்கி, மைக்கலை அவனுடைய வீடு வரை பாதுகாப்பாக கூட்டிச் செல்கிறாள், டிராம் வண்டியில் டிக்கட் பரிசோதகராக பணிபுரியும் பெண்னான ஹனா(KATE WINSLET ).

மூன்று மாத காலமாக நோயுடன் போராடிய பின் உடல் நலம் பெறும் மைக்கல், ஹனாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்பி மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைக் காண வருகிறான். வீட்டை விட்டுப் பணிக்காகக் கிளம்பும் முன், ஹனா உடை மாற்றுவதைக் காணும் மைக்கல் அவள் பால் ஈர்க்கப்படுகிறான். ஹனாவும் அவனை தன் காதலனாக ஏற்றுக் கொள்கிறாள்.

வேலையில் சிறப்பாக செயற்பட்டதால் ஹனாவிற்கு பதவி உயர்வு கிடைக்கிறது. அவள் அலுவலகப் பிரிவிற்கு பதவி உயர்தப்படுவதாக அவளின் உயரதிகாரி தெரிவிக்கிறார். அன்று மைக்கலுடன் சற்று ஆவேசமாக நடந்து கொள்கிறாள் ஹனா. சில நாட்களின் பின் அவளைத் தேடி வரும் மைக்கல் அவள் வீட்டைக் காலி செய்து விட்டு சென்றிருப்பதைக் கண்டு உடைந்து போகிறான்.

1966. சட்டக் கல்வி மாணவனாக இருக்கும் மைக்கல், தன் பேராசிரியர் ஒருவருடன் நீதிமன்றத்தில் நிகழும் வழக்கு ஒன்றை காணும் பார்வையாளனாக கலந்து கொள்கிறான். ஆஷ்விட்ஸ் யூத வதை முகாம்களில் காவலர்களாக செயற்பட்ட சிலரிற்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு அது. குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மத்தியில் தன் காதலி ஹனாவும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான் மைக்கல்…..

1995ல் பெர்லினில் தன் அபார்ட்மெண்ட் ஜன்னலினூடாக தெருவில் செல்லும் டிராம் வண்டி ஒன்றினைக் கண்டு கொள்ளும் மைக்கல் ( RALPH FIENNES ) தன் கடந்த காலத்தை நினைவு கூர்வதாக ஆரம்பிக்கிறது கதை.

பதினைந்து வயதில் பெண் உடல் ஒர் மகத்தான ரகசியமாக இருக்கும். மைக்கலும் அந்த ரகசியத்தை அறிய விரும்பி ஹனாவுடன் காதலில் வீழ்ந்து விடுகிறான். முதலில் காமம் என்று ஆரம்பிக்கும் உறவு படிப்படியாக வேறு ஒர் திசைக்கு திரும்புகிறது. தன்னுடன் காதல் செய்யும் முன்பாக மைக்கலை தனக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டச் சொல்கிறாள் அவள்.

the_reader01 அவள் விரும்பியபடியே அவளிற்கு பல புத்தகங்களைப் படித்துக் காட்டி, வார்த்தைகள் எனும் மந்திரம் மூலம் அவளைச் சிரிக்க, கனவு காண, குதூகலிக்க, நொருங்கி அழ வைக்கிறான் மைக்கல். காதல் செய்யும் கட்டிலிலும் சரி, குளியல் தொட்டியிலும் சரி, அவளிற்கான அவன் வாசிப்பு தொடர்கிறது. டின் டின் காமிக்ஸ் ஒன்றைக் கூட அவன் ஹனாவிற்கு படித்துக் காட்டுவான். அவன் வாசிக்கும் ஒவ்வொரு சொல்லையும் ஹனா பசியில் இரை தேடும் ஒர் விலங்கினைப் போன்று உள்ளெடுத்துக் கொண்டிருப்பாள்.

தன்னிடம் ஒர் வார்த்தை கூட சொல்லாமல் சென்று விட்ட ஹனா, நாஸிகளின் வதை முகாமில் மரணத்திற்கு அனுப்ப அவள் தேர்ந்தெடுக்கும் பெண்களை, அவளிற்கு புத்தகங்களை வாசித்துக் காட்டப் பணித்தாள் என்பதை மைக்கல் நீதிமன்றத்தில் அறியும் போது, ஹனா அவனிடம் இது வரை சொல்லாத ஒர் ரகசியம் எதுவென்பதை அவன் புரிந்து கொள்கிறான்.

அந்த ஒர் ரகசியத்தை நீதிமன்றத்திற்கு முன் வெளிப்படுத்த விரும்பாத ஹனா, அதற்கு விலையாக நீதிமன்றத்தால் ஆயூள் தண்டனையைப் பெற்றுக் கொள்கிறாள்.

வழக்கு நடைபெறும் தருணத்தில் ஹனாவினைச் சிறையில் காணச் செல்லும் மைக்கல் அவளைக் காணாமலே திரும்பி வந்து விடுகிறான். கடந்த காலத்தில் தன் கடமையெனக் கருதி அவள் செய்த செயல்கள், அவள் மேல் அவன் கொண்ட காதலை எரித்து விட்டனவா இல்லை தான் செய்த செயல்களை எந்த மன்னிப்பும் வேண்டாது தைரியமாக ஒத்துக் கொள்ளும் ஹனா போன்ற ஒருத்தியுடன் தான் காதல் கொண்டோமே என்பதை சமூகம் அறியும் போது இவனும் அவளுடன் சேர்ந்தவனே என அச்சமூகம் தந்து விடும் ஒழுக்க நீதி தீர்ப்புக்கு அஞ்சியா என்பது நீரின் அடியில் ஒடும் தடமாகும்.

பருவங்கள் ஓடுகின்றன, மணமாகி, ஒர் பெண் குழந்தைக்கு தகப்பனாகி, விவாகரத்தாகி, தன் தகப்பனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள ஊர் திரும்புகிறான் மைக்கல். அங்கு அவன் அறையில் ஹனாவிற்கு அவன் படித்துக் காட்டிய புத்தகங்களைக் காண்கிறான் அவன், அவன் படித்துக் காட்டிய ஒவ்வொரு பக்கங்களும் ஹனாவின் ஒவ்வொரு ஸ்பரிசங்களை அவனிற்கு நினைவு படுத்துகின்றன. இதனால் உந்தப்படும் அவன், புத்தங்களை தான் வாசித்து, அதனை ஒலி நாடாவில் பதிவு செய்து சிறையிலிருக்கும் ஹனாவிற்கு அனுப்பி வைக்கிறான்.

6a00d83451d69069e201053625e896970b-800wi வெளியுலகில் இருந்து எந்த தொடர்பும் இல்லாது சிறையில் வாடிக் கொண்டிருக்கும் ஹனாவிற்கு, பூக்காத செடி ஒன்று மொட்டுக்கள் விட்டதைப் போன்று மாறிவிடுகிறது சிறை வாழ்க்கை. மைக்கலின் குரல்களின் வழி வெள்ளமாக பெருகும் சொற்களில், சிறையின் தனிமையை மூழ்கடிக்கிறாள் அவள். சிறையில் உள்ள நூலகத்தில் மைக்கல் படித்துக் காட்டும் புத்தகங்களை எடுத்து வந்து, அவன் குரல் விதைக்கும் சொற்களை ஆசையுடன் தடவிப் பார்க்கிறாள். ஆனால் மைக்கல் அவளைப் பற்றியோ அல்லது தன்னைக் குறித்தோ எதையும் கேட்காதவனாகவும், சொல்லாதவனாகவும் இருக்கிறான். தன் வாழ்வில் முதல் முறையாக, மைக்கலுடன் உரையாடுவதற்காக எழுதப் பழக ஆரம்பிக்கிறாள் ஹனா.

அவள் மைக்கலிற்கு எழுதும் கடிதங்களிற்கு அவன் பதிலளிப்பதில்லை. சாகசக் கதைகள் வேண்டாம் காதல் கதைகளை அனுப்பு என எழுதுகிறாள் ஹனா. முதுமை அவளை ஆட்கொள்கிறது. அவள் விடுதலை பெறும் நாளும் நெருங்குகிறது.

விடுதலை நாள் அன்று ஹனாவை அழைத்து செல்ல வரும் மைக்கலிற்கு ஹனா தரப்போகும் அதிர்சி என்ன என்பதை படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

BERNHARD SCHILINK எனும் ஜெர்மனிய எழுத்தாளரின் THE READER எனும் நாவலைத் தழுவி இப்படம் உருப்பெற்றிருக்கிறது. ஜெர்மனியில் நடந்த யூதர் மீதான கொடுமைகள் மீது, புதிய தலைமுறையின் பார்வையை, ஜெர்மனி நாடு ஏற்றுக் கொண்ட அவமானத்தை, ஒர் கண்டிப்பான ஆட்சியாளன் கீழ் எதுவும் செய்ய முடியாது இருந்து விட்ட மக்களின் குறுகலை, உண்மைக் குற்றவாளிகள் யார் என்ற கேள்விக்கான பதிலை, சமூக ஒழுக்க நெறிகள் அனுமதிக்காத காதல் ஒன்றின் வழியாக காட்ட முயன்றிருக்கிறது திரைப்படம்.

the-reader-jpg நாஸிகளின் கீழ் தடுப்பு முகாம்களில் பணி புரிந்த பெண் காவலராக கேட் வின்ஸ்லெட், இவரின் நடிப்பை பற்றி கூறுவதை விட, ஹனா பாத்திரம் இவரிற்கு ஆஸ்காரை வாங்கித் தந்தது என்று கூறி விடலாம். கலங்க வைக்கும் நடிப்பு. சிறையில் தன்னைக் காண வரும் மைக்கல் கேட்கும் கேள்விகளிற்கு அவர் தரும் பதில்கள் மிக நேர்மையானவை, அத்தருணத்தில் அவர் முகத்தில் கொண்டு வரும் உணர்ச்சி அற்புதம். என் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என அவர் நீதிபதிக்கு விடுக்கும் கேள்வி, நீதிபதிக்கு மட்டுமானதல்ல.

இளைய மைக்கலாக வரும் டேவிட் குரொஸ் எனும் ஜெர்மனிய இளைஞரின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது, ஹனாவிற்காக நிலக்கரி எடுத்து வரும் வேளையில் அவர் முகத்தில் கரி பட்டு விடும், அதனைக் கண்ணாடியில் பார்த்து விட்டு ஹனாவைப் பார்த்து அவர் சிரிக்கும் சிரிப்பு, மறக்க முடியாதது. ஹனாவின் கடந்த காலத்தை அறிந்த பின் அவளைக் காண விரும்பியும் அதனைத் தவிர்க்கும் கட்டங்களில் அவரின் நடிப்பு இவர் ஒர் இளம் நடிகரா என்று கேட்க வைக்கிறது. ரால்ப் ஃபியனை பற்றிச் சிறப்பாக கூற ஏதுமில்லை.

வதை முகாம் ஒன்றில் குவிந்திருக்கும் காலணிகளும், திறந்திருக்கும் அடுப்பின் கதவுகளும் மெளனமாக கதைகள் சொல்கின்றன. மிக சிறப்பான ஒளிப்பதிவு. குறிப்பாக ஹனாவின் அறைக் காட்சிகள். படத்தினை சிறப்பாக இயக்கியிருப்பவர் STEPHEN DALDRY எனும் ஆங்கில இயக்குனர் ஆவார்.

குற்றவாளிகள், துரோகிகள் என எம்மால் சுலபமாக மற்றவர்களை கூறிவிடவோ, இகழவோ முடிகிறது, ஆனால் அவர்கள் வாழ்ந்த தருணங்களின் மீது நாம் வாழ்ந்திருப்போமேயானால் அப்பட்டங்கள் எமக்கும் சிறப்பாக பொருந்தியிருக்கும் என்பதைக் கண்டு கொள்ளலாம். படத்தில் ஹனா குறித்து இளைஞனாக இருக்கும் மைக்கல் ஒர் கவிதை எழுதுவான், அந்தக் கவிதை அவனால் என்றும் அவளிற்கு படித்துக் காட்ட முடியாத கவிதையாகவே போய் விடுகிறது. (***)