
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது.
மைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையை வெளியிட உரிமை பெற்றிருக்கும் நிறுவனமானது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிழல் எழுத்தாளனை [Ewan McGregor] ஆடம் லாங்கின் சுயசரிதையை எழுதும் பணியில் நியமிக்கிறது.
அப்பணியை ஏற்பதற்கு முதலில் அந்த நிழல் எழுத்தாளன் தயங்கினாலும், அதன் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் அவனை ஈர்க்க, ஆடம் லாங்கின் நினைவுகளை எழுத்தில் பதிப்பதற்காக அவன் அமெரிக்காவிற்கு கிளம்பிச் செல்கிறான்.
விமான நிலையத்தில் அமெரிக்கா நோக்கி செல்லும் விமானத்திற்காக காத்திருக்கும் நிழல் எழுத்தாளன், பார் ஒன்றில் விஸ்கியைச் சுவைத்தவாறே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்க்கிறான். அச்செய்தி அறிக்கையின் வழி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங், CIAன் சட்ட விரோதமான ஆட்கடத்தலிற்கு துணைபோனார் எனும் சூடான தகவல் வெளியாகியிருப்பதை அவன் அறிந்து கொள்கிறான்.
நீண்ட விமானப் பயணத்தின் பின், அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் அமைந்திருக்கும் ஆடம் லாங்கின் கடற்கரையோர வீட்டை வந்தடைகிறான் நிழல். நிழலை ஆடம் லாங்கின் வீட்டில் வரவேற்கும் ஆடம் லாங்கின் உதவியாளர், அவனது பணி குறித்த விபரங்களை அவனிற்கு அறியத் தருகிறாள். பின்பு உதவியாளர் ,மைக் மக்காரா எழுதிய பக்கங்களை நிழலைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறாள்.
மைக், எழுதிய பக்கங்களைப் படித்துப் பார்க்கும் நிழல், அது வாசகர்களைக் கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று கருதுகிறான். சுயசரிதையை மீண்டும் புதிதாக எழுத ஆரம்பிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறான். அன்றிரவு விமான நிலையத்தில் வைத்து அவனிற்கு ஆடம் லாங் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். இந்நிகழ்வின் பின் தீவில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றில் தனக்கென ஏற்பாடாகியுள்ள அறைக்குச் சென்று பயணக் களைப்பு காரணமாக நன்றாக உறங்கிப் போகிறான் நிழல்.
மறுநாள் காலை ஆடம் லாங்கின் வீட்டில் அவரைச் சந்திக்கும் நிழல், சுயசரிதையை தன் பாணியில் எழுத ஆரம்பிக்கிறான். இவ்வேளையில் சர்வதேச நீதிமன்றம் ஆடம் லாங்கிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் இவ்விசாரணைக்கு தன் பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதம் தெரிவிக்கிறது. ஆடம் லாங்கினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆடம் லாங்கிற்கு எதிராக சாட்சியம் கூற முன் வருகிறார்.
இத்தகவல்கள் யாவும் ஆடம் லாங்கிற்கு அதிக அழுத்தத்தை தருகின்றன. நிழல் மீது அவர் சீறிப்பாயும் சந்தர்பங்களையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும் இவற்றைச் சகித்துக் கொண்டு தன் பணியைத் தொடர்கிறான் நிழல்.
ஆடம் லாங் குறித்த புதிய தகவல்கள் மனித உரிமை ஆர்வலர்களை அவர் வீட்டிற்கு முன்பாக ஆவேசமான ஆர்ப்பாட்டத்தில் குதிக்க வைக்கின்றன. சர்வதேச செய்தி சேனல்களில் ஆடம் லாங்கின் தலை பகடைக் காயாகிறது. இவ்வேளையில் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றால் அங்கே தான் கைது செய்யப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்ற நிலையில், அமெரிக்க அரசிடம் தனக்கு ஆதரவு வேண்டுவதற்காக நியூயார்க் நகரத்திற்கு உடனடியாகப் பயணமாகிறார் ஆடம் லாங்.
விடுதியில் தங்கியிருக்கும் நிழலிற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களால் ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக அவனை ஆடம் லாங்கின் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறாள் ஆடம் லாங்கின் உதவியாளர். நிழல் தங்கிக் கொள்வதற்கு கடலில் மூழ்கி இறந்து போன மைக் மக்காராவின் அறை ஒதுக்கப்படுகிறது.
பணியை ஏற்றுக் கொண்ட நாள் முதலே, மைக் மக்காரா எழுதிய சுயசரிதை குறித்த ஒரு சந்தேகமான உணர்வைத் தன்னுடன் கொண்டிருக்கும் நிழல், மைக் மக்காராவின் அறையை ஒரு நாள் சோதனை செய்யும் போது, சில போட்டோக்களையும், ஆடம் லாங்கின் ஆரம்ப கால கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒரு மறைவிடத்திலிருந்து கண்டுபிடிக்கிறான்.
மைக் மக்காரா எழுதிய சுயசரிதையின் சில பக்கங்களையும், ஆடம் லாங்கின் கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிழல், அவற்றில் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டு கொள்கிறான். இந்நிகழ்வுகள் தரும் உந்துதலில் மைக் மக்காராவின் உடல் கரை ஒதுங்கிய கடற்கரைப் பகுதியைத் தேடிச் செல்கிறான் நிழல். வழியில் அவனிற்கு கிடைக்கும் சில தகவல்கள் மைக் மக்காராவின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல எனும் ஐயத்தை அவன் மனதில் விதைக்கிறது. தொடரும் அவன் தேடல்கள் அதிர வைக்கும் ஒரு உண்மையின் திசையை நோக்கி வேகமாக அவன் நிழலை நகர்த்த ஆரம்பிக்கின்றன….
பிரபல எழுத்தாளர் Robert Harris எழுதிய The Ghost எனும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது The Ghost Writer எனும் இத்திரைப்படம். சமகால உலக அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையின் மூலம் சிறப்பான ஒரு அரசியல் த்ரில்லரை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Roman Polanski .
பிரபலங்களின் சுயசரிதைகளை எழுதும் பெரும்பாலான நிழல் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியே வருவதில்லை என்பதைப் போலவே இத்திரைப்படத்திலும் நிழலின் பாத்திரத்திற்கு பெயர் வழங்கப்படவில்லை!!
அரசியல் உள்குத்தல்கள், பழிவாங்கல்கள், அந்தர் பல்டிகள் என அரசியல் சூழலைக் கூறு போடும் திரைக்கதை, ஈராக் போர், அதன் விளைவுகள், அகில பிரபஞ்ச நாட்டாமையான CIAன் சட்ட விரோத நடவடிக்கைகள் என்பவறையும் தன்னுடன் அணைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் கையாலாகத்தனம் குறித்து நிழல் வழியாக சூடான விமர்சனம் ஒன்றையும் தயங்காமல் அது முன் வைக்கிறது.
ஈராக் போரில் அமெரிக்காவுடன் தோள் கொடுத்து நின்ற இங்கிலாந்துப் பிரதமர் டானி பிளேயரை நோக்கி கலைஞன் ரோமான் பொலான்ஸ்கி எழுப்பும் ஒரு கேள்வியாகவும் இத்திரைப்படம் உருப்பெறுகிறது. திரைப்படத்தில் பியர்ஸ் புரொஸ்னான் ஏற்றிருக்கும் ஆடம் லாங் பாத்திரத்தின் அசல், டானி பிளேயர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.
திரைப்படத்தில் நிழல் எழுத்தாளனாக வரும் இவான் மக்கிரகோரின் பாத்திரம் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒன்றாகும். அதனை அழகான முறையில் நடித்துக் காட்டியிருக்கிறார் மக்கிரகோர். ஆனால் ஆடம் லாங் பாத்திரத்தில் வரும் பியர்ஸ் புரொஸ்னான் பின்னி எடுத்திருக்கிறார். நீண்ட நாட்களின் பின் அவரின் முக்கியமான வேடமாக ஆடம் லாங் பாத்திரத்தைக் கூறலாம்.
மனைவியால் வெறுக்கப்பட்டு, மனித உரிமை ஆர்வலர்களால் கொலைகாரன் எனத் தூற்றப்பட்டு, தன் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ள ஒரு முன்னாள் பிரதமர் பாத்திரத்திற்குரிய அழுத்தம், கோபம், வெடிப்பு என்பவற்றைப் பிரமாதமாக திரையில் கொணர்கிறார் பியர்ஸ் புரொஸ்னான். தன் ஜெட் விமானத்தில் வைத்து தன்னைக் குற்றம் சாட்டும் நிழல் மீது அவர் சீறிப்பாயும் பாய்ச்சல், ஆவேசமான புலிப் பாய்ச்சல்.
திரைப்படத்தின் முன்பாதி மிகவும் நிதானமான வேகத்துடனேயே நகர்கிறது. இருப்பினும் சந்தேகங்களையும், மர்மங்களையும் பார்வையாளன் மனதில் திரைக்கதை விதைத்துக் கொண்டே செல்கிறது. மைக் மக்காராவின் மறைவிடத்தில், நிழல், போட்டோக்களைக் கண்டெடுத்த பின் படத்தில் வேகம் தொற்றிக் கொள்கிறது.
கதையின் ஒரு தருணத்தில் ரசிகர்கள் மர்ம முடிச்சை அவிழ்த்து விடுவதற்கு தோதாக ஒரு வாய்ப்பை வழங்குவார் இயக்குனர். ரசிகர்களும் நிழலைவிட வேகமாக தரவுகளைத் தொடர்புபடுத்தி மர்ம முடிச்சை தாங்கள் அவிழ்த்து விட்டதாக புளகாங்கிதம் அடைவார்கள். அவ்வகை ரசிகர்களிற்கு இறுதியாக பொலான்ஸ்கி வைக்கும் ஆப்பு. வெரி நைஸ் ஆப்பு.
இறுதிக் காட்சி வரை மர்மத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர். இறுதிக் காட்சி கசப்பானாது. மனதைக் கனக்க செய்வது. உண்மைக்கு அருகில் அது ஏளனச் சிரிப்பைச் சிந்தியபடியே நிற்கிறது. The Ghost Writer திரைப்படம் நிதானமாக ரசிக்கபட்டு அதன் முழுச் சுவையுடன் சுவைக்கப்படவேண்டிய ஒரு சிறப்பான அரசியல் த்ரில்லர். [***]
ட்ரெயிலர்
