
1933களின் அமெரிக்கா. சிறையிலிருந்து வெளியேறிய ஜான் டிலிஞ்சர் [ Jhonny Depp ], தன் சகாக்கள் சிலரையும், ஒர் சிறை மீட்பின் மூலம் துணைக்கு சேர்த்துக் கொண்டு, சிக்காகோ பகுதிகளிலுள்ள வங்கிகளை கொள்ளையடிக்க ஆரம்பிக்கின்றான்.
பெடரல் அதிகாரியான எட்கார் கூவர், டிலிஞ்சரை மக்கள் எதிரி நம்பர் 1 ஆக அறிவித்து, அவனைக் கைது செய்வதற்கு பொறுப்பாக மெல்வின் பெர்விஸ் [Christian Bale] எனும் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியை நியமிக்கிறார்.
அமெரிக்காவின் மோசமான பொருளாதார சரிவிற்கு காரணமான வங்கிகளிற்கும், நிலைமையை சரிவரக் கையாளமலிருந்த அரசின் காவல் துறைக்கும் சவால் விட்டதன் மூலமாக மக்களின் மனதில் சிறிதளாவது இடம்பிடித்துக் கொண்ட குற்றவாளியாக இருக்கிறான் ஜான் டிலிஞ்சர்.
ஒர் சாதாரணக் குற்றவாளியிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் Michael Mann. பொலிசாரின் டிலிஞ்சர் தேடல் வேட்டையை, 1930களின் அமெரிக்காவை அப்படியே நுணுக்கமாக, கார்கள் முதல் துப்பாக்கிகள் வரை, எங்கள் கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அவர்.
டிலிஞ்சர் மனித உயிர்கள் மேல் மதிப்பு கொண்டவனாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறான். வங்கி கொள்ளை ஒன்றின் போது, அங்கு பணம் வைப்பிலிட வந்த ஆசாமியைப் பார்த்து நான் வங்கியின் பணத்தை கொள்ளையிடுபவன், உன் பணத்தை பத்திரமாக்கு என்று கூறும் காட்சி அவன் எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒர் சிறு உதாரணம்.
காவல் துறையால் தேடப்படும் ஒர் குற்றவாளியின் காதல் வாழ்க்கை கூட விரைவாக இருக்க வேண்டும் என்பது போல் டிலிஞ்சர், வில்லி [ Marion Cotillard ] இருவரிற்கும் இடையில் மலரும் காதல் வேகமானது. நம்பமுடியாதது. ஆனால் தன் இறுதி வரை தன்னுடன் அக்காதலை எடுத்துச் செல்லும் டிலிஞ்சரும், வில்லியும் நெகிழ வைக்கிறார்கள்.
வில்லி பாத்திரம் ஆரம்பத்தில் பெரிதாக தோன்றாவிடிலும், இறுதிக் கட்ட பொலிஸ் விசாரணைக் காட்சிகளில் அடி மேல் அடி வாங்கி சித்தரவதையுறும் அவர், தன்னை அடித்த பொலிஸ்காரனை கண்களில் பார்த்து பேசும் வசனங்களில் எங்கோயோ போய் விடுகிறார்.
மெல்வின் பெர்விஸ் என்ற கண்டிப்பான பொலிஸ் அதிகாரி பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல், இறுகிய முகம், குறைவான பேச்சு என சிறப்பாக செய்திருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான முறைகளை கையாள வேண்டிய நிர்ப்பந்தங்களில் அவர் மெளனமாக உள்ளுக்குள் முறிவதை சிறப்பாக காட்டியிருப்பார். அடிவாங்கி நடக்க முடியாமல் இருக்கும் வில்லியை கழுவல் அறைக்கு அவர் தூக்கி செல்லும் தருணம் அற்புதம். கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் டிலிஞ்சரை நேரில் சந்திக்கும் தருணத்தில் கூட மிக அமைதியாக பண்பட்ட நடிப்பை வழங்குகிறார் பேல். தன் சக அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றவாளியை ஒர் துரத்தலின் பின் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டுக் கொல்லும் காட்சியும், அதற்கு முன்பான மோதலும் உறைய வைக்கும்.
ஜான் டிலிஞ்சர் பாத்திரத்தில் ஜானி டெப், அருமையாக செய்திருக்கிறார். வங்கிக் கொள்ளைகள், கைது செய்யப்படும் போது நிருபர்களிற்கு தரும் கூலான பேட்டி, தன் காதலி வில்லியை பொலிசார் கைது செய்து விடும் போது எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும் காட்சி. தன்னை கைது செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் விசேட பிரிவின் அலுவலகத்திற்குள் நுழைந்து, பேஸ் பால் ஸ்கோர் கேட்கும் காட்சி, இறுதியில் திரை அரங்கில் ஒர் படத்தின் வசனங்களில் ஆழ்ந்து போகும் காட்சி என அவர் வித்தியாசமான டெப்.
காவல் துறையின் பல வெற்றிகளிற்கு பின்னாக இருப்பது துரோகம் போலும். படத்தின் இறுதிக் காட்சியில் தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவ்வெற்றியை பார்த்தவாறே ஒர் துரோகம் மெளனமாக நடந்து செல்கிறது. உயிர் பிரியும் கடைசித் தருணத்தில் தன் காதலிக்காக டிலிஞ்சர் சொன்ன வார்த்தைகளை ,சிறையில் இருக்கும் வில்லியிடம் டிலிஞ்சரை சுட்ட பொலிஸ் அதிகாரி கூறுவதுடன் நிறைவடைகிறது படம். கண்களில் சற்று ஈரம் எட்டிப்பார்க்கும் முடிவு அது.
மைக்கல் மானின் மிகச்சிறந்த படம் எனக் கூற முடியா விடிலும் கூட, பாதிப் படம் கடந்த பின்னும் ஒர் பார்வையாளனை கதையுடன் ஒன்ற வைக்க முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் அவர். Heat க்கு பின்பாக அவரின் சிறந்த படம் இது என்பது என் கருத்து. ( *** )
