
“எனக்கு அந்தப் பணம் வேண்டியிருந்தது” நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட கேள்விக்கு குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த Edward Pierce தந்த பதில் நகைப்புக்குரியதான எளிமையை கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பணத்தை கவர்வதற்கு அவன் சென்றிருக்ககூடிய எல்லைகள் எளிமை கொண்டவை அல்ல.
1854ல் ரஷ்யாவிற்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தன் நேச நாடுகளின் துணையுடன் யுத்தத்தில் இறங்கியிருந்தது. இந்த யுத்தம் Crimean War என்றழைக்கப்படுகிறது. களமுனையில் போரிட்ட இங்கிலாந்து வீரர்களிற்கு சம்பள பட்டுவாடா பணமானது அக்காலப்பகுதியில் மிக வேகமான போக்குவரத்து முறையாகவிருந்த புகையிரதம் வழியாக தங்கப்பாளங்கள் வடிவில் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
London Bridge புகையிரத நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் தென்கிழக்குகரைகளில் அமைந்திருக்கும் Folkestone ஐ நோக்கி பயணிக்கும் ரயிலில், பொதிகளிற்கான தனி ரயில்பெட்டியில் நிறுவப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பான, நம்பத்தகுந்த, Chubb நிறுவனத்தின் தயாரிப்பான பாதுகாப்பு பெட்டகங்களில், அக்கால பெறுமதிப்படி 12000 £ மதிப்பு கொண்ட இந்த தங்கப்பாளங்கள் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி எடுத்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
அந்த இரு பாதுகாப்பு பெட்டகங்களையும் தகுந்த முறையில் திறப்பதற்கு நான்கு சாவிகள் உபயோகிக்கப்பட்டன. இந்த நான்கு சாவிகளும் மூன்று வெவ்வேறான நபர்களின் பாதுகாப்பான பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. இந்த இரு பாதுகாப்பு பெட்டகங்களையும் திறப்பதற்கு சாவிகளை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில், அசாத்தியமான கொள்ளை ஒன்றை மேற்கொள்ள திட்டம் வகுக்கும் சூத்திரதாரியான எட்கார் பிய்யர்ஸின் முதல் நகர்வானது, வெவ்வெறு நபர்களிடம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகளை கவர்ந்து கொள்வது என்பதாகவே Michael Crichton எழுதியிருக்கும் The Great Train Robbery நாவல் ஆரம்பமாகிறது.
1855ல் இங்கிலாந்தில் இடம்பெற்ற Great Gold Robbery ன் தகவல்களை ஆதாரமாக கொண்டு தன் மெச்சத்தகுந்த கற்பனையினால் இக்கற்பனைக் கதையை உருவாக்கியிருக்கிறார் மைக்கேல் கிரைட்டன். உண்மையான சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களின் பெயர்களில் சிறிய மாற்றங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ஆனால் கதையில் இடம்வகிக்கும் பெரும்பாலான தகவல்களும், நிகழ்வுகளும் அக்கால வரலாற்றில் இடம் வகிப்பவையே.
பியர்ஸ், பாதுகாப்பு பெட்டக சாவிகளை அணுகிச்செல்ல எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒவ்வொரு தருணத்திலும் நாவலாசிரியர் மைக்கேல் கிரைட்டன், விக்டோரியா காலத்து இங்கிலாந்து சம்பந்தமான தகவல்களை தாரளமாக ஆனால் கதையானது தன் பாதையிலிருந்து நழுவிக் கொள்ளாத வகையில் சுவையாக பரிமாறுகிறார்.
மதுபான விடுதிகளில் இடம்பெறும் நாய்-எலிச் சண்டைகள் முதல், கவுரவமான குடும்பங்களில் திருமண வயதை எட்டியும் தகுந்த மணமகன் கிடைக்காத பெண்கள் வரை, பாலின நோய்கள் முதல், சிறுவர் விபச்சாரம்[ அக்காலப்பகுதியில் சகஜமான ஒன்று] மற்றும் விக்டோரியா காலப்பகுதியில் உயர்மட்ட சமூகத்தின் பெருமைமிகு புழங்குமிடங்களை தைரியமாக ஆக்கிரமிப்பு செய்த மேல்தட்டு விலைமாதர்கள் மேலும் அதற்குரிய காரணங்கள் வரை, தப்பிச் செல்ல முடியாதென கருதப்பட்ட இங்கிலாந்து சிறைகள், பாடல்கள் பாடி வேடிக்கையான கேளிக்கையாக பொதுமக்களால் ரசிக்கப்பட்ட மரணதண்டனைகள், குறுகிய கழிவறைகளில் தம் உடல்களை ஒடுக்கி படுத்துறங்கிய மனிதர்கள், லண்டனின் நகரமயமாக்கம், புகையிரத சேவையின் அறிமுகம், அதன் அபரித வளர்ச்சி. ஸ்காட்லாண்ட்யார்ட்டின் வளர்ச்சி, இறக்கும் மனிதர்களின் உடல்களை சிறிது காலம் காக்க வைத்து பின்பாக புதைக்கும் வினோதமான வழக்கம் என விக்டோரியா கால இங்கிலாந்தின் சமூக, பொருளாதார, வரலாற்று பார்வையாகவும் கிரைட்டனின் நாவல் இருக்கிறது. கிரைட்டனின் அடிக்க முடியாத கதைசொல்லும் பாங்கிற்கு இந்நாவல் ஒரு மிகச்சிறந்த சான்று.
தங்கப் பாளங்களை கொள்ளை அடிக்கும் நிகழ்வைவிட அதனை நிறைவேற்றுவதற்காக எட்வர்ட் பிய்யர்ஸ் இயற்றும் திட்டங்களே நாவலின் பெரும் விறுவிறுப்பாக அமைகின்றன. ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்பாராதவிதமாக தடைகள் வந்து சேரும்போதும் அவற்றை எட்வர்ட் பிய்யர்ஸ் சமயோசிதமாக எதிர்கொள்ளும் விதம் அப்பாத்திரத்தின் மீதான கவர்ச்சியை கதை நெடுகிலும் அதிகரித்தபடியே செல்கிறது. ஒவ்வொரு சாவியையும் அணுகுவதற்காக பிய்யர்ஸ் ஆற்றும் செயல்கள் பரபரப்பின் உச்சம். அதுவும் லண்டன் பிரிட்ஜ் புகையிரத நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டக சாவிகளை அணுகுவதற்காக நடாத்தப்படும் திட்டம்போல் திக்திக் தருணத்தை சமீபகாலத்தில் நான் படித்துணர்ந்ததில்லை.
கொள்ளையின் சூத்திரதாரியான எட்வார்ட் பிய்யர்ஸ், அவனது சகா Agar, புகைபோக்கிகளை துப்புரவு செய்பவனாக இருந்த Clean Willy, வங்கி அதிகாரிகளான Henry Fowler, Trent, பிய்யர்ஸின் ஆசைநாயகி Miriam, புகையிரதக் காவலன் Burgees, வங்கி அதிகாரி Trentன் மகளான Elizabeth போன்ற பாத்திரங்களை கதையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் கிரைட்டன். இப்பாத்திரங்கள் நாவலில் மிகவும் உயிர்ப்புடன் உலாவருகின்றன.
எட்வார்ட் பிய்யர்ஸ் தன் தேவைகளிற்காக அணுகும் விளிம்பு நிலை மனிதர்கள் வழி அவர்களின் வாழ்க்கை குறித்த ஒரு சித்திரத்தை நாவலில் இலகுவாக கிறுக்குகிறார் கிரைட்டன். வங்கி அதிகாரிகளான ட்ரெண்ட் மற்றும் ஃபவுலர் வாயிலாக மேல்தட்டு சமூகம் குறித்த பார்வை நாவலில் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு வேறுபட்ட சமூக நிலையிலிருந்த மனிதர்களையும் சரியாக புரிந்து கொண்ட நிலையில் அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒருவனாகவே எட்கார் பிய்யர்ஸை காணமுடிகிறது.
ஒரு சமூகமானது தன் வளர்ச்சிக்கான அடிகளை நவீனத்துவத்தை நோக்கி எடுத்துச் செல்லும்போது அந்த சமூகத்தினுள் ஒரு கூறாக உறையும் குற்றசமூகமானது அவ்வளர்ச்சியால் ஒடுக்கப்பட்டு அழிவை எட்டிவிடாது தானும் நவீனத்துவத்தை நோக்கி தன் வளர்சியை கொண்டுசெல்கிறது என்பதும் நாவலால் உணர்த்தப்படும் ஒன்றாகும்.
குற்றங்களும், குற்றவாளிகளும் விளிம்பு நிலை சமூகத்தின் உற்பத்தியாக மட்டுமே இருக்கக்கூடும், கல்வியறிவு பெற்ற, மேல்தட்டு மக்களிடமிருந்து அவை உருவாவதில்லை என்று அக்காலத்தில் நிலவியிருந்த ஒரு கருத்தை உலுக்கிப் பார்ப்பதாகவும் கதையில் எட்கார் பிய்யர்ஸின் பாத்திரம் அமைந்திருக்கிறது.
கிரைட்டனின் Sphere, Next, State of Fear ஆகிய நாவல்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்து நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி முடிவில் அந்த எதிர்பார்ப்பை மங்கவைப்பதாக நிறைவுபெறும். ஆனால் இதற்கு மாறாக இந்நாவல் ஆரம்பம் முதல் இறுதிவரை தன் சுவையையும் விறுவிறுப்பையும் சிறப்பாக தக்கவைத்துக் கொள்கிறது.
தெளிவான, நகைச்சுவையை சற்று கலந்த கிரைட்டனின் கதைசொல்லல் , சுவையான தகவல்கள் என்பன நாவலை எந்த தருணத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. நாவலின் இறுதிப் பக்கம்வரை சஸ்பென்ஸை கடத்திச் செல்வதில் பெரும் வெற்றி காண்கிறார் கிரைட்டன். இதுவரை நான் படித்த கிரைட்டனின் நாவல்களிலேயே The Great Train Robbery எனக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. உண்மையான நிகழ்வு ஒன்றின் பின்னனியில் இவ்வளவு ரசமான நாவலைத் தர முடியுமா என பிரம்மிக்க வைக்கிறார் கிரைட்டன். நாவல் வெளிவந்து இன்று 35 வருடங்கள் ஓடிச்சென்ற பின்பாகவும் அருமையான ஒரு த்ரில்லரின் வாசிப்பனுபவத்தை நாவல் முழுமையாக தருகிறது. கிரைட்டனின் நாவல்களில் தவறவிடக்கூடாத ஒன்றாகவே இந்நாவலை என்னால் பார்க்க முடிகிறது.
1979ல் இந்நாவல் The First Great Train Robbery எனும் பெயரில் திரைப்படமாக வெளியாகியது [அமெரிக்காவில் இத்திரைப்படம் நாவலின் தலைப்பிலேயே வெளியாகியது]. பிரபல நடிகர்களான Sean Connery, Donald Sutherland ஆகியோர் முறையே எட்கார் பிய்யர்ஸ் மற்றும் ஆகார் ஆகிய பாத்திரங்களை திரையில் ஏற்க நாவலாசிரியர் மைக்கல் கிரைட்டனின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவானது. [***]
