Showing posts with label Joe Carnahan. Show all posts
Showing posts with label Joe Carnahan. Show all posts

Thursday, June 24, 2010

Aய்சலக்கா டீம்


அமெரிக்க ராணுவத்தின் அதிரடிப்படைத் துருப்புக்களில் அசகாய சூரர்களாக செயற்பட்டு வருகிறது ஒரு நால்வரணி. Hannibal [Liam Neeson] என்பவன் தலைமையில், Face [Bradley Cooper] , B.A [Quinton Jackson], Murdock [Sharlto Copley] எனும் மூவர் இணைந்து செயற்பட்டு வரும் இக்குழு A – Team என்று அழைக்கப்படுகிறது.

ஈராக் யுத்தத்தில், ஜெனரல் மாரிசன் எனும் அதிகாரியின் கீழ், தம் ஆற்றல்களை சிறப்பான முறையில் பயன்படுத்தி செயற்பட்ட இந்த நால்வரணி, தம் சேவை முடிந்து நாடு திரும்பவுள்ள நிலையில் CIA அமைப்பைச் சேர்ந்த Lynch [Patrick Wilson]எனும் நபர் ஹனிபலை வந்து சந்திக்கிறான்.

பாக்தாத்திலிருந்து மிக ரகசியமாக போலி டாலர் நோட்டுக்கள் பெருந்தொகையாக சதாமிற்கு நெருங்கியவர்களால் கடத்தப்படவுள்ளதை ஹனிபலிற்கு தெரிவிக்கிறான் சிஐஏ அதிகாரியான லின்ச். இப்போலி டாலர் நோட்டுக்களால் விளையக்கூடிய தீங்குகள் குறித்தும் ஹனிபலிற்கு விளக்குகிறான் அவன்.

யாரும் அறியாத வண்ணம், ஹனிபல் குழுவினர் பாக்தாத்திற்குள் நுழைந்து, போலி டாலர் நோட்டுக்களை எடுத்துச் செல்லும் கொள்கலனை வழியில் மடக்கி, கைப்பற்றி வரவேண்டுமென ஹனிபலிடம் கேட்டுக் கொள்கிறான் சிஐஏ அதிகாரியான லின்ச்.

இதனையடுத்து ஜெனரல் மாரிசனுடன் லின்ச் கூறியது குறித்து கலந்தாலோசிக்கும் ஹனிபல், ஏ- டீம் பாக்தாத்திற்குள் நுழைய அவர் அனுமதிக்க வேண்டுமென வேண்டுகிறான். முதலில் இத்திட்டத்திற்கு ஆதரவு தர மறுக்கும் ஜெனரல் மாரிசன், பின் அரை மனதுடன் இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டுகிறார். இந்த திட்டமானது, ஹனிபல் குழு, சிஐஏ அதிகாரி லின்ச், ஜெனரல் மாரிசன் ஆகியோர் மட்டுமே அறிந்த ஒரு திட்டமாக செயற்படுத்தப்படுகிறது.

l-agence-tous-risques-2010-6677-1103997864 குறித்த ஒரு இரவில், அருமையான திட்டமிடல் ஒன்றின் உதவியுடன் பாக்தாத் நகரில் புகுந்து, போலி டாலர் நோட்டுக்களை கடத்திச் செல்லும் கொள்கலனை அபகரித்து, ஜெனரல் மாரிசனின் தளத்திற்கு எடுத்து வருகிறது ஹனிபல் குழு. வெற்றிகரமாக இத்திட்டத்தை நிறைவேற்றிய ஹனிபல் குழுவை வரவேற்க வரும் ஜெனரல் மாரிசன், அவர் பயணிக்கும் வண்டியில் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

ஹனிபல் குழுவினர் பாக்தாத்தில் இருந்து கைப்பற்றி வந்திருந்த போலி டாலர் நோட்டுக்களை கொண்ட கொள்கலனும் குண்டு வைத்து தகர்க்கப்படுகிறது. ஆனால் அந்த கொள்கலனில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி டாலர் நோட்டுக்களை அச்சடிக்கும் தகடுகளை அமெரிக்க ராணுவத்தில் செயற்பட்டுவரும் Black Forest எனும் அமைப்பை சேர்ந்தவர்கள் கையகப்படுத்திக் கொண்டு மறைந்து விடுகிறார்கள்.

ஜெனரல் மாரிசனின் கொலை, மற்றும் போலி டாலர் நோட்டு அசம்பாவிதம் குறித்து நடாத்தப்படும் ராணுவ நீதி விசாரணையில், இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஹனிபல் குழுவினர் அனைவரினதும் ராணுவ பதவிகள் பறிக்கப்பட்டு, அவர்களிற்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது. இதனையடுத்து ஹனிபல் குழுவைச் சேர்ந்த நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருக்கும் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள்.

ஹனிபல் குழுவிற்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டு ஆறு மாதங்களின் பின், சிறையிலிருக்கும் ஹனிபலை மிக ரகசியமான முறையில் வந்து சந்திக்கிறான் சிஐஏ அதிகாரி லின்ச். ஹனிபலும், அவன் குழுவினரும் சிறையில் வாடக் காரணமான பிளாக் ஃபாரஸ்ட் குழுவின் தலைவன் Pike குறித்த சில தகவல்களை ஹனிபலிற்கு தருகிறான் சிஐஏ அதிகாரி லின்ச்…..

l-agence-tous-risques-2010-6677-976880361 பின் ஹனிபல் குழுவினர் எவ்வாறு சிறையில் இருந்து தப்பி, ஜெனரல் மாரிசன் கொலை மற்றும் கள்ள டாலர் நோட்டு விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் உண்மைக் குற்றவாளிகளை உலகிற்கு அம்பலப்படுத்துகிறார்கள் என்பதை கலகலப்பும் ஆக்‌ஷனும் கலந்து திரையில் கூறுகிறது The A – Team திரைப்படத்தின் மீதிக் கதை.

ஏ டீம் திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியபோது, வழமை போலவே இன்னொரு சொதப்பல் இதோ என்ற எண்ணமே மனதை ஆக்கிரமித்தது. எனவே திரைப்படத்தைக் காணச் சென்ற போதும் அது குறித்த அதிக எதிர்பார்ப்புக்களை நான் கொண்டிருக்கவில்லை. ஆனால்… ஆச்சர்யம்! ஆச்சர்யம்!

1980களில் புகழ் பெற்றிருந்த ஒரு தொலைக்காட்சித் தொடரை அதே பெயரில் திரைக்கு வெற்றிகரமாகக் கடத்தியிருக்கிறார்கள். காதில் பூ வைப்போர் சங்க ஆக்‌ஷன்களை, நகைச்சுவை கலந்து வழங்கி ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைப்பதில் சிறப்பான வெற்றி அடைந்திருக்கிறார் இயக்குனர் Joe Carnahan.

ஏ டீமில் இடம்பெறும் ஹனிபல், ஃபேஸ், பிஏ, மற்றும் மெர்டொக் ஆகிய பாத்திரங்களை கலகலப்பு நிறைந்ததாக உருவாக்கி அப்பாத்திரங்களை ரசிகர்கள் மனதில் எளிதில் ஒட்டிக் கொள்ளச் செய்து விடுகிறார்கள். குறிப்பாக மிகவும் முரடனாக அறியப்பட்ட பிஏ பாத்திரம் சிறைத்தண்டனையின் பின் அமைதியின் உருவாக மாறி வருவது நன்றாக பொருந்திப் போகிறது. வாயில் சுருட்டைக் கடித்தபடியே கெட்ட கெட்ட திட்டம் தீட்டும் ஹனிபல் வேடத்தில் லியம் நீஷன் அழகாக செய்திருக்கிறார். அட்டகாசமான சிரிப்பு அவருடையது. உச்சக்கட்ட ஆக்‌ஷனில் கொள்கலன் ஒன்றிற்குள் அவர் போடும் சிறு ஆக்‌ஷன் தூள் மாமே தூள்.

l-agence-tous-risques-2010-6677-1970485591 பிளேபாய் ஃபேஸ், தடிமுரடனாக இருந்து சாந்த சொரூபியான பிஏ, தன் கிறுக்கு விளையாட்டுக்களால் கலகலப்பாக உலாவரும் மெர்டொக் என அப்பாத்திரங்களை ஏற்றிருக்கும் நடிகர்கள் யாவரும் அருமையான தெரிவு. பாத்திரங்களை உணர்ந்து கலகலப்பும், களிப்புமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள் நடிகர்கள்.

குறிப்பாக பிஏவும், மெர்டொக்கும் பின்னியிருக்கிறார்கள். விமானத்தில் பிஏ ஏற மறுப்பதும். தூக்க மருந்து தந்து விமானத்தில் பயணம் செய்யும் பிஏ கண்விழிக்கும்போது அடிக்கும் கூத்துக்களும் சிரிக்க வைக்கின்றன. அழகான மங்கை ஜெசிக்கா பியல் அவர்களின் பாத்திரம் ஒரு டோட்டல் வேஸ்ட் என்பதை இங்கு மனவருத்தத்துடன் குறிப்பிட வேண்டியிருக்கிறது. பிளாக் ஃபாரஸ்ட் அமைப்பின் தலைவனாக வரும் Pikeன் வில்லத்தனங்கள் அட்டகாசம்.

படத்தில் இடம்பெறும் பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் காதில் பூச்சுற்றும் ரகம். ஆனால் இவ்வகையான ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாது ஏ டீமை உருவாக்க முடியுமா என்பதுதான் கேள்வி. ஹனிபல் அறிமுகமாகும் ஆரம்ப ஆக்‌ஷன் காட்சி, பிராங்பர்ட்டின் வங்கி கட்டிடங்களில் நிகழும் அசர வைக்கும் ஆக்‌ஷன் காட்சி என்பன அபாரம். மாறாக இறுதி ஆக்‌ஷன் சிறிது ஏமாற்றத்தை தருகிறது. வானிலிருந்து கீழே விழும் டாங்கியில் நடக்கும் ஆக்‌ஷன் ஹிஹிஹி்!!!! படத்தில் கூடவே ஓடிவரும் ஜாலியான நகைச்சுவை, காதில் பூச் சுற்றல்களை புறந்தள்ள உதவுகிறது. சிஐஏ குறித்த கிண்டல்களை தயக்கம் காட்டாது அங்காங்கே அள்ளி தெளித்திருக்கிறார்கள்.

லாஜிக்கெல்லாம் பார்த்து மண்டையை உடைக்காமல், ஜாலியாகப் பார்த்து, ரசித்து, வாய்விட்டு சிரித்து அழுத்தங்களை ஒரு கணம் மறப்பதற்கு உதவும் இந்த ஏ டீம் ஒரு ஜாலி Aய்சலக்கா டீம். [**]

ட்ரெயிலர்