
சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்தபோது தமக்குள் பரிச்சயத்தை ஏற்படுத்திக்கொண்ட டேனியும், விக்டரும், ஆட்கடத்தல் மூலம் பணம் சம்பாதிக்க ஆவலாக உள்ளனர். ஆட்கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணத்தில் தமது அடிமட்ட வாழ்க்கையை மாற்றிக் கொள்வது என்பது இரு முன்னாள் சிறைக்கைதிகளின் விருப்பமாகவுமிருக்கிறது.
இதற்காக டேனியும், விக்டரும், நகரின் பணக்காரர்களில் ஒருவனின் மகளான ஆலிஸை திட்டமிட்டு கடத்தி வருகிறார்கள். கடத்தி வந்த ஆலிஸை கட்டிலில் கட்டி, விலங்கிட்டு, நிர்வாணமான நிலையில் அவளை போட்டோக்கள் பிடித்து, அப்போட்டோக்களை ஆலிஸின் தந்தையிடம் அனுப்பி வைத்து, ஆலிஸினை விடுவிப்பதற்காக பெருந்தொகைப் பணத்தை அவள் தந்தையிடம் கேட்கிறார்கள்.
இரு கடத்தல்காரர்களின் திட்டமும் அவர்கள் எதிர்பார்த்த திசையில் நகர ஆரம்பிக்கிறது. ஆனால் கடத்தப்பட்ட பெண்ணான ஆலிஸ் குறித்த ஒர் உண்மையை விக்டரிற்கு தெரியாது தன் மனதில் புதைத்து வைத்திருக்கிறான் டேனி. மேலும் தன்மீது முழு நம்பிக்கை வைத்திருக்கும் விக்டர் அறியாது பிறிதொரு திட்டத்தையும் செயற்படுத்த விரும்புகிறான் அவன்….
வெற்றிகரமான முறையில் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு கடத்தல் திட்டம், அதில் சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் எதிர்பார்த்திராத வகையில் வேறு திருப்பங்களை நோக்கி நகர்வதை விறுவிறுப்பாக சொல்கிறது The Disappearance of Alice Creed எனும் பிரிட்டிஷ் திரைப்படம். சிறப்பாக கதையை எழுதி, திரையில் கதையை தொய்வின்றி நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் J Blakeson .
திரைப்படத்தின் ஆரம்பத்தில், முதல் பத்து நிமிடங்களிற்கு ஒரு வார்த்தைகூட இல்லாது காட்சிகள் நகர்ந்து செல்கின்றன. அக்காட்சிகளே திரைப்படம் எவ்வகையானது என்பதற்கு கட்டியமாக அமைந்து விடுகின்றன. திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியானது அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மூடிய கதவுகளின் பின்னே நிகழ்வதாக படமாக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் டேனி, விக்டர், ஆலிஸ் ஆகிய மூவரைத் தவிர திரைப்படத்தில் வேறு பாத்திரங்கள் கிடையாது.
எனவே இம்மூன்று பாத்திரங்களின் உறவுகள் மற்றும் உணர்வுகள் மீது திரைக்கதை வலிமையாக காலை ஊன்றிப் பயணிக்கிறது. நம்பிக்கையும், துரோகமும் இம்மூன்று பாத்திரங்களிற்கு இடையிலும் ஒரு நாணயத்தின் பூவாகவும், தலையாகவும் மாறி மாறி விழுந்து கொண்டேயிருக்க அதன் வழியே பரபரப்புடன் கதையை நகர்த்துகிறார் இயக்குனர். நம்பிக்கைக்கும், துரோகத்திற்குமிடையில் பாத்திரங்களின் முகங்களும் தொடர்ந்து மாறிக் கொண்டே செல்கின்றன.
கடத்தியவர்கள், கடத்தப்பட்டவள்; இவர்களிற்கிடையில் உள்ள ரகசியங்கள் பார்வையாளர்களை எட்டும்போது படத்தின் மிக முக்கிய பாத்திரமான துரோகம் தன் முகத்தை காட்ட ஆரம்பிக்கிறது. படுக்கை அறையில் அடைபட்டுக் கிடக்கும் ஆலிஸைப் போலவே துரோகமும் தன் வெற்றியைத் தேடி தந்திரமாக நகர்கிறது.
டேனியின் திட்டங்கள் தெரிய வரும்போது, டேனியின் திட்டங்கள் வெற்றி பெறுமா இல்லை திறமைசாலியான விக்டரிடம் அவன் மாட்டிக் கொள்வானா எனும் பதட்டம் உருவாகிறது. பின் டேனியின் உண்மை முகம் தெரியும்போது, டேனியின் திட்டத்தை விக்டர் கண்டு பிடிக்க வேண்டுமே என்ற ஆவல் எழுகிறது.
இந்த இரு கடத்தல்காரர்களிற்கிடையில் மாட்டிக் கொண்ட ஆலிஸ், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எவ்வழியிலாவது தான் தப்பிக்க வேண்டுமென்று துடிப்பவள். இரு கடத்தல்காரர்களின் பலவீனங்களையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் ஆலிஸ் தயங்குவதில்லை. இரு ஆண்களையும் வீழ்த்தி ஆலிஸ் வெற்றி காண்பாளா என்ற கேள்வியும் ஒரு தருணத்தில் எழுகிறது. இவ்வாறாக தருணத்திற்கு தருணம் ஒவ்வொரு பாத்திரத்தின் பக்கமாக பார்வையாளனை தற்காலிகமாக சாய்த்து விடுவதில், கதையை திரையில் கூறியவிதமானது வெற்றி காண்கிறது.
திரைப்படத்தில் ஆலிஸாக வேடமேற்றிருக்கும் நடிகை Gemma Arterton சிறப்பாக தன் வேடத்தை செய்திருக்கிறார். கடத்தல்காரர்களின் கண்களிற்கு முன்பாக தன் உடல் உபாதைகளை தீர்க்கும் வேளையில் அவர் வேதனையாலும், அவமானத்தாலும் குறுகுவது மனதை உருக்கிவிடுகிறது. கடத்தப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் உணர்வுகளை தன்னால் இயன்றளவு திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெமா. இந்த இளம் நடிகையை இவ்வாறன ஒரு வேடத்தில் காண்பது ஆச்சர்யமே. அதேபோன்று அவர் பாத்திரமும் இறுதிவரை பார்வையாளர்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
நம்பிக்கைத் துரோகி டேனியாக வேடமேற்றிருக்கும் நடிகர் Martin Compston தன் திட்டங்களை பச்சோந்திபோல் நகர்த்திச் செல்லும் நடிப்பில் கவர்கிறார். விக்டரிடம் தன் ரகசியங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர் செய்யும் தகிடுதித்தங்கள் பல சமயங்களில் விறுவிறுப்பு, சில சமயங்களில் சிரிப்பு. இருப்பினும் அவர் நடிப்பில் முழுமையற்ற தன்மையொன்றை உணர முடிகிறது என்பதே உண்மை.
படத்தின் பார்வையாளனை, தான் தோன்றும் முதல் வினாடியே கவர்ந்து, அந்தக் கவர்ச்சியை படத்தின் இறுதித் தருணம் வரை வெற்றிகரமாக கடத்திச் செல்கிறது விக்டர் பாத்திரம். மிக இயல்பாக, ஒரு அவதானம் நிறைந்த, திறமையான கடத்தல்காரனை திரையில் நடித்துக் காட்டியிருக்கிறார் நடிகர் Eddie Marson. அவர் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளே பார்வையாளனை கதையின் பிடியை உணர வைத்து விடுகின்றன. அட்டகாசமாக செய்திருக்கிறார் எடி என்றால் அது மிகையில்லை.
படத்தில் குளோஸ் அப் காட்சிகள் அதிகமாக காணப்படுகின்றன. பாத்திரங்களின் உணர்வுகளையும், கதையின் பதட்டத்தையும், அழுத்தத்தையும் பார்வையாளன் பக்கம் சிறப்பாக எடுத்துவர அக்காட்சி அமைப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன. படத்தின் இறுதிக்காட்சியில் வரும் பின்னனி இசையில் பியானோவும், வயலினும் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. டேனியும், விக்டரும் சம்பந்தப்பட்ட அக்காட்சியின் பின்னனி இசையானது மனதை தொட்டு, திரையில் ஓடும் காட்சிக்கு மேலும் உயிர்ப்பை வழங்குகிறது. உச்சக்கட்டக் காட்சிகளில் திருப்பத்திற்கு மேல் திருப்பம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, பார்வையாளனை இருக்கைகளில் கைகளைக் கசக்கிய நிலையில் கட்டிப் போடுகிறது. இருப்பினும் இறுதி முடிவை ஏற்கனவே பார்த்தது போல் மனதில் தோன்றும் எண்ணத்தை விலக்கி விட முடியவில்லை.
குறைந்த செலவில், சாமார்த்தியமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் இத்திரைப்படம், தேவையற்ற மிகைப்படுத்தல்களை புறந்தள்ளி ஒரு சிறப்பான த்ரில்லரை ரசிகர்களிற்கு வழங்குகிறது. இதன் வழி தரமான த்ரில்லர்களின் வரிசையில் தன் இடத்தை தேடிக் கொள்ளவும் அது முயல்கிறது. [***]
ட்ரெயிலர்
