
1941, நாஸிக்களின் ஆதிக்கத்தில் ஆழ்ந்து போயிருக்கும் பிரான்ஸ் நாடு. நாஸிக்களின் கண்களில் இருந்து மறைந்து வாழும் யூதர்களை கண்டுபிடிப்பதற்காக ஹிட்லரால் நியமிக்கப்பட்டிருக்கிறான் காலனல் ஹான்ஸ் லாண்டா ( Christophe Waltz ).
லாண்டா மிகுந்த புத்திசாலி. நயமாகப் பேசி தகவல்ளைப் பெற்றுக் கொள்வதில் வல்லவன். ஜெர்மானியர்கள் போன்று சிந்திக்காது யூதர்கள் போல் சிந்திப்பவன். கொலை செய்யத் தயங்காதவன்.
ஒர் வீட்டில் நடைபெறும் தேடுதல் வேட்டையின் போது சொஸானா (Mélanie Laurent) எனும் யூத இனத்தை சேர்ந்த இளம் பெண் அவன் பிடியிலிருந்து தப்பி ஒடி விடுகிறாள். அப்பெண்ணின் குடும்பத்தையே தன் வீரர்களால் கொன்று குவித்து விடுகிறான் ஹான்ஸ் லாண்டா.
அமெரிக்க லெப்டினண்ட் அல்டோ ரெய்ன் (Brad Pitt) தலைமையில் பிரான்ஸிற்கு ரகசியமாக வருகிறது ஒர் அமெரிக்க யூத வீரர்கள் குழு. இவர்கள் நோக்கம் இயலுமானவரை நாஸிக்களை கொன்று குவிப்பது. வருடங்கள் ஓட ஓட வெற்றிகரமாகவும், ரகசியமாகவும், நாஸிக்களின் வயிறுகளில் இவர்களின் பெயரைக் கேட்டாலே சிலவித மாற்றங்களை உண்டாக்கி விடும் வண்ணம் இயங்கிக் கொண்டிருக்கும் அல்டோவின் குழு, ஒர் ரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஆங்கிலேய உளவாளிகளுடன் கை கோர்க்கிறது.
இங்கிலாந்திற்காக ரகசியமாக உளவு பார்க்கும் ஜெர்மன் நடிகையான பிரிட்ஜிட்டின் தகவல் படி, பாரிஸில் இடம்பெறவிருக்கும் ஒர் திரைப்படத்தின் முதல் திரையிடலில் நாஸிக்களின் பல உயர் அதிகாதிரிகள் கலந்து கொள்வார்கள் என்பது அல்டோ குழுவிற்கு தெரிய வருகிறது. இவ்வுயர் அதிகாரிகள் குழுவில் டாக்டர் கேய்பல்ஸ், ஹிட்லர் ஆகியோரும் அடங்குவர்.
திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கு இமானுவல் எனும் பெண்ணொருத்தியால் நிர்வகிக்கப்படுகிறது. பிரிட்ஜிட்டின் உதவியுடன் திரையரங்கினுள் நுழைந்து அதனை டைனமைட்கள் மூலம் வெடிக்க வைத்து தவிடு பொடியாக்கி விடுவது என திட்டம் தீட்டுகிறான் அல்டோ. படம் திரையிடப்படும் திரையரங்கின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக ஹான்ஸ் லாண்டா நியமிக்கப்படுகிறான். தன் மனதில் ஹான்ஸ் லாண்டா குறித்த ஆறாத வஞ்சத்தை வளர்த்துக் கொண்டே, இம்மானுவல் எனும் பெயரில் திரையரங்கை நிர்வகித்து வரும் யூதப் பெண்ணான சொஸானா இத்தருணத்தினை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தனக்கென ஒர் ரகசிய திட்டத்தை உருவாக்குகிறாள்.
ஒர் தனி வீடு, காற்றில் அசையும் கொடிகளின் மீது துவைத்த துணிகளைக் காயப் போடும் ஒர் இளம் பெண், அருகில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் அவள் தந்தை, தீடிரென தூரத்தில் புழுதியைக் கிளப்பியவாறு வீட்டை நோக்கி வரும் நாஸி ஜீப்புக்கள் என செர்ஜியோ லியோனின் வெஸ்டர்ன் படங்களினை நினைவூட்டும் ஆரம்பக்காட்சி, பிண்ணனி இசை, காட்சி அமைப்பு என வெஸ்டர்ன் படங்களின் சாயல் படத்தில் தாராளமாக உண்டு.
படத்தின் கதை ஜந்து அத்தியாயங்களில் கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில் வீடொன்றிற்கு விசாரணைக்காக வரும் ஹான்ஸ் லாண்டா வீட்டின் உரிமையாளனை விசாரிக்கும் அந்தக் காட்சியே லாண்டாவைப் பற்றி முழுதும் கூறிவிடுகிறது. அதே போல் படத்தினைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைக்கிறது.
புத்திசாலித்தனமான வசனங்களாலும், நீண்ட உரையாடல்கள் மூலமாகவும் காட்சித் தருணங்களின் அழுத்தத்தை அதிகரிப்பதுடன், பார்வையாளர்களையும் அந்த அழுத்தத்தினை உணர வைத்து விடுகிறார் இயக்குனர் Quentin Tarantino. ஆனால் இது எல்லா அத்தியாயங்களிற்கும் பொருந்திப் போகவில்லை என்பது வேதனை. வன்முறைக் காட்சிகளின் உக்கிரத்தை அவற்றினுள் இழையும் நகைச்சுவை மூலம் தணியச் செய்திருக்கிறார் டாரண்டினோ. இறுதி அத்தியாயம் ரசிகர்களை பரபரக்க வைக்கும் ஒர் அத்தியாயம். எண்ணற்ற எதிர்பாராத திருப்பங்கள் மூலம் ரசிகனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார் இயக்குனர். எந்த ஒர் கணத்திலும் பார்வையாளன் மனதில் நினைத்திருக்கும் ஒவ்வொர் முடிவையும் தகர்க்கிறது திரைக்கதை. இறுதியில் வரலாற்றையும் சற்று மாற்றி விடுகிறது.
நாஸிக்களை கொல்வதற்காக பிரான்ஸ் வரும் அல்டோ குழுவினரின் வீரதீர செயற்பாடுகளான, நாஸிக்களின் மண்டைத்தோலை வெட்டி எடுத்தல், பேஸ்பால் பேட்டால் தலையை அடித்து மூளையை சிதறச் செய்தல் போன்றவை நாஸிக்கள் மீது பார்வையாளர்களை இரக்கம் கொள்ள வைத்து விடுகின்றன. அல்டோ பாத்திரத்தில் வரும் பிராட் பிட் எவ்வளவு முயன்றாலும் அப்பாத்திரத்துடன் ஒன்றிப் போகாது அன்னியப்படுகிறார்.
படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஹான்ஸ் லாண்டா. மென்மையான பாவனையும், குள்ள நரித்தனமும், மயக்கும் சிரிப்பும் சற்றுக் கோமளித்தனமும் ஒருங்கே இணைந்த அப்பாத்திரத்தினை சுவைத்து சுவைத்து செய்திருக்கிறார் ஆஸ்திரிய நடிகரான கிறிஸ்டோப் வால்ட்ஸ். இவ்வருட கேன்ஸ் விழாவில் சிறந்த ஆண் நடிகரிற்கான விருதினை இப்படத்தில் நடித்ததற்காக அவர் பெற்றிருக்கிறார். இத்தாலிய திரைப்படக் கலைஞர்களாக திரையரங்கில் நுழையும் அல்டோ குழுவினர்க்கும், ஹான்ஸ் லாண்டாவிற்குமான உரையாடல் காட்சியில் அவர் நடிப்பில் பின்னி எடுத்திருப்பார். அவர் உடல் மொழி அவரை ஒர் அப்பாவி போன்று தோற்றுவித்து அவர் ஏற்றிருக்கும் வில்லன் பாத்திரத்தை சிறப்பாக்குவதில் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
திரையிடப்படும் திரைப்படத்தில் ஜெர்மனிய வீரனொருவனின் துப்பாக்கி குண்டுகளிற்கு பலியாகி விழும் அமெரிக்க வீரர்களைக் கண்டு ஹிட்லர் மகிழ்ச்சியுற்று இவ்வருடத்தின் சிறந்த திரைப்படம் இதுதான் என கேய்பல்ஸைப் பாராட்ட கேய்பல்ஸ் ஆனந்தக் கண்ணீர் விடும் காட்சி செம காமெடி. படத்தில் மனதினை நெகிழ வைக்கும் ஒரே ஒர் பாத்திரம் யூதப் பெண்ணாக வரும் மெலானி. அவளின் வாழ்க்கை அவளை புன்னகைக்க வைத்த தருணங்கள் மிக அரிதே. வஞ்சத்தின் மூலம் புன்னகைக்க நினைத்த அவளின் முடிவு எதிர்பாராதது.
இறுதிக்காட்சியில், வழமையான டாரண்டினோ பாணியில் அல்டோ ஒர் காரியத்தை ஆற்றி விட்டு இதுதான் என் மாஸ்டர் பீஸ் என்பார். ஆனால் இத்திரைப்படம் நிச்சயமாக டாரண்டினோவின் மாஸ்டர் பீஸ் அல்ல. (**)
