பூமியில் பனி யுகம் தன்னாதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. மனியின் [MANNY] ஜோடியான எலி [ELLIE] கர்ப்பமான நிலையில் பிரசவ காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் குட்டிக்காக ஒர் அழகிய பனிப்பூங்காவை உருவாக்குகிறான் மனி.
மனியின் நண்பனான டியாகோ, குடும்ப வாழ்க்கை என்பது தனக்கு ஒத்துப் போகாது என்று கூறி, தனியே தன் வாழ்வை தான் தொடரப் போவதாகக் கூறி பிரிந்து செல்கிறான்.
இவர்களின் நண்பனான சிட், தானும் ஒர் குடும்பத்தை உருவாக்கி மகிழ்வாக வாழ வேண்டும் என ஏங்குகிறான். பனிக்குகை ஒன்றில் தவறுதலாக விழும் சிட், அங்கு தனியே விடப்பட்டிருக்கும் மூன்று ராட்சத முட்டைகளை தன் குழந்தைகள் எனக் கூறி எடுத்து வந்து விடுகிறான்.
முட்டைகளை பாதுகாப்பாக தன்னிடத்திற்கு எடுத்து செல்லும் சிட் முட்டைகளுடன் செல்லம் கொஞ்சி விட்டு உறங்கிப் போகிறான். அவன் கண் விழிக்கும் போது முட்டைகள் பொரித்து வெளிவந்த மூன்று அழகிய டைனோசார் குட்டிகள் சிட்டை தங்கள் தாய் என எண்ணி பாச மழை பொழிகின்றன. அக்குட்டிகளை பொறுப்பாக வளர்க்க முடிவு செய்கிறான் சிட்.
இதற்கிடையில் மறைவிடத்தில் தான் இட்ட முட்டைகளை தேடி வருகிறது மம்மி டைனோசார். தான் முட்டைகளை இட்ட இடத்திலிருந்து அவை காணாமல் போனது கண்டு மம்மி டைனோசார் கோபம் கொள்கிறது. தன் வாரிசுகளைக் களவாடிய களவாணி யாரென்று அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பிக்கிறது மம்மி டினோசார்.
தேடல் வேட்டையின் போது சிட்டையும், மூன்று டைனோசர் குட்டிகளையும் கண்டு கொள்ளும் மம்மி டைனோசார், அவர்களை தன் வாயில் கவ்விக் கொண்டு தான் வாழும் பிரதேசத்திற்கு சென்று விடுகிறது.
தங்கள் அன்பு நண்பன் சிட்டைக் காப்பாற்ற நிறைக் கர்ப்பமாகவுள்ள எலியுடன் கிளம்புகிறார்கள் மனியும், டியாகோவும். அவர்களிற்கு அறிமுகமில்லாத டைனோசார்களின் புதிய உலகில் நுழையும் அவர்களிற்கு உதவிக்கு வந்து சேர்கிறான் பக் [BUCK].
வழமை போன்றே கூரான பற்கள் கொண்ட அணிலான ஸ்கிராட் ஒர் பருப்பை கைப்பற்றுவதற்காக எடுக்கும் பிரம்ம பிரயத்தனங்களுடன் ஆரம்பமாகிறது படம். இதில் அவரிற்கு போட்டியாக ஒர் பெண் அணிலை சேர்த்திருக்கிறார்கள், இவர்களிற்கிடையிலான மோதல்களும் பின்னர் அது காதலாக மாறுவதும் தனி டிராக். அவர்களின் டாங்கோ நடனம் செம சூடு.
குடும்பம், நட்பு, தாய்ப்பாசம் என செண்டிமெண்ட் பனியை அள்ளித் தூவியிருக்கிறார்கள். சிட் பாத்திரம் குடும்பத்திற்காக ஏங்கி, டைனோசார் குட்டிகளை பாசத்துடன் வளர்ப்பதும், மம்மி டைனோசாருடன் தன் வளர்ப்பு குழந்தைகளின் நற் பழக்கங்களிற்காக மோதுவதும், குட்டி டைனோசார்களின் மனதைக் கொள்ளை போட அவர்கள் இருவரும் போட்டி போடுவதும் அருமை. தன் குட்டிகளுடன் சேர்த்து சிட்டையும் தன் அரவணைப்பில் உறங்க வைக்கும் மம்மி டைனோசார் நெகிழ வைக்கிறார்.
படத்தில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடும் பாத்திரம் பக். இலையால் மூடிய ஒற்றைக் கண், ருடி எனும் வெள்ளை டைனோசாரின் பல்லில் செய்த வாள் என ஜாக் ஸ்பாரோ கெட்டப்பில் கிறுக்குத்தனமான சேஷ்டைகளில் கதற அடிக்கிறார். காப்டன் ஆஹாப் மொபிடிக்கின் மேல் கொண்ட வஞ்சம் போல், முன்பு நடந்த ஒர் மோதலின் போது தன் ஒரு கண்ணை வாங்கி விட்ட கொடூர வெள்ளை டைனோசாரான ருடியின் மேல் பக் கொண்டுள்ள வஞ்சம், ருடியின் குரலைக் கேட்கும் போதெல்லாம் பக் தரும் ரியாக்ஷன் என தன் தனி ஸ்டைலால் மிகச்சிறந்த பாத்திரமாக மிளிர்கிறார் அன்பு நைனா பக்.
கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரசவ வேதனையில் துடிக்கும் எலி, அவளை கொன்று தின்று விட முன்னேறும் கொடிய சிறிய டைனோசார்கள், அவற்றினை தடுத்து தாக்கும் மனி, டியாகோ, எரிமலைக் குழம்பு ஆற்றில் தன் உயிரிற்காக போராடும் சிட், அவனைக் காப்பாற்ற, பறக்கும் டைனோசாரில் தன் எடுபிடி சிஷ்யர்களுடன் பறக்கும் பக் என இப்படியான ஒர் அசத்தல் ஆக்ஷனை சமீப காலத்தில் நான் பார்க்கவில்லை. அந்த பறக்கும் டைனோசார்கள் சேஸிங் காட்சி தூள்.
புதிதாகப் பிறக்கும் அந்த மமூத் யானைக்குட்டி அழகோ அழகு. பக் எடுக்கும் ஒர் கலக்கலான முடிவுடன் டைனோசார்கள் உலகை விட்டு தாங்கள் வாழும் பகுதிக்கு நண்பர்கள் திரும்புவதுடன் நிறைவடைகிறது படம். மகிழ்சியாலும், களிப்பாலும் எங்கள் மனமும் நிறைவடைகிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருப்பவர் CARLOS SALDANHA. பனி யுகத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர்.
நண்பர்கள் யாவரும் பார்த்து மகிழ வேண்டிய சிறப்பான சித்திரம். (****)
கெட்ட ஆட்டம் போட
