
அழகிய இளம்பெண்ணான சோனியா, இத்தாலியிலிருக்கும் துயுரின் நகரில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் அறைகளை சுத்தம் செய்யும் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறாள். பிரம்மச்சாரிகளின் மாலை சந்திப்பு ஒன்றில் அவள் Guido வுடன் அறிமுகமாகிக் கொள்கிறாள்.
சில வருடங்களிற்கு முன்பாக தன் மனைவியை இழந்த கிய்டோ, அவனது பொலிஸ் பதவியை உதறிவிட்டு மாளிகை ஒன்றை காவல் காப்பவனாக பணியாற்றுகிறான். பெண்களை இலகுவாக தன் வாழ்க்கையில் அனுமதிக்காத கிய்டோ, சோனியாமீது உண்மையான பிரியம் கொள்கிறான். அவளை தான் காவல் காக்கும் மாளிகைக்கு அழைத்து செல்கிறான். ஆனால் எதிர்பாராத ஒரு அசம்பாவிதம் அவர்களிற்காக அந்த மாளிகையில் காத்திருக்கிறது….
அசம்பாவிதத்தின் பின்பாக வரும் La Droppia Ora [The Double Hour], எனப்படும் இத்தாலிய திரைப்படத்தின் பகுதியானது இளம்பெண் சோனியாவின் மனம் ஆடும் ஆட்டத்தில் பார்வையாளனை ஒரு சுழல்போல் இழுக்க ஆரம்பிக்கிறது. சோனியாவின் கடந்தகாலம் குறித்த சில தகவல்கள் அவள் மீதான நல்லபிப்பிராயத்தை சந்தேகத்திற்குரியதாக்கின்றன. நிகழ்ந்த அசம்பாவிதத்திற்கும் சோனியாவிற்கும் இடையில் இருந்திருக்ககூடிய தொடர்பு குறித்த ஐயம் மனதில் விதைக்கப்படுகிறது.
புதிர்களும், வினோதமான நடத்தையை வெளிப்படுத்தும் பாத்திரங்களையும் கொண்ட திரைப்படத்தின் இப்பகுதியானது த்ரில்லர் நிலையிலிருந்த திரைப்படத்தை பராநார்மல் நிலைக்கு மெதுவாகக் கடத்துகிறது. சோனியா குறித்த குழப்பங்களை திரையில் விரிக்கும் கதையானது, திரைக்கு அப்பால் எடுத்து வரும் கேள்விகளையும், சலிப்பையும் தகர்த்தெறிகிறது முதற்பகுதியில் வரும் அந்த திருப்பம்.
அந்த திருப்பம், ஒரு தந்திரமான கதை சொல்லல் எவ்வாறு ஒரு ரசிகனை ஏமாற்றமுடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறது. அதேவேளையில் திரைப்படத்தின் புதிரான முதற்பகுதி குறித்த சிறந்த விளக்கமாகவும் அந்த திருப்பம் அமைகிறது. இவ்வாறாக பார்வையாளனை ஏமாற்றிய இயக்குனர் Giuseppe Capotondi யின் திறமைமீது சற்றுக் கோபமும் ஏற்படுகிறது. படம் இவ்வளவுதானா என்ற கேள்வியும் உருவாகிறது. ஆனால் தொடரும் திரைப்படத்தின் இரண்டாம் பகுதி உணர்ச்சிகளால் ரசிகர்களை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது.
ஒரு பெண்ணின் மீது நிஜமான பிரியம் கொண்ட ஆணொருவனின் கதை அது. காதல், காமம், பொறாமை, ஏமாற்றம், எனும் அவன் உணர்வுகளோடு பார்வையாளனை தேடிவருகிறது கதை. சோனியா குறித்த உண்மைகள் யாவையும் அவன் அறிந்திருந்தபோதிலும் கூட அவளுடன் தன் வாழ்வைக் கழிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து ஏங்கும் ஒருவனின் கதை அது.
புத்திசாலித்தனமும், நடைமுறை யதார்த்தமும் ,உணர்வுகளாலும், மனதில் கனிந்த துணையை தேடிக்கொள்ளும் விருப்பாலும் புறந்தள்ளப்படும் சந்தர்பங்கள் பல உண்டு. அந்த ஆணும் அதற்கு விதிவிலக்கானவன் அல்ல. ஆனால் அவன் காணும் முடிவு ஆண் ரசிகர்களை கலங்கடிக்கும். அந்த முடிவு ஆண்களை சற்று பெருமை கொள்ளவும் வைக்கும். திரைப்படத்தின் இப்பகுதியில் சோனியா வேடத்தில் நடித்திருக்கும் Kseniya Rappoport, கிய்டொ வேடத்தில் நடித்திருக்கும் Flippo Timi ஆகிய கலைஞர்கள் சிறப்பான பங்கை ஆற்றியிருக்கிறார்கள். படத்தில் ரசிகனைக் கட்டிப்போடும் பகுதி இதுதான் என்பதில் ஐயமில்லை.
ஒரு பெண்மீது கொண்ட நேசத்தால் ஆணொருவன் தன் வாழ்க்கையை மீண்டும் அர்தமற்றதாக, முன்பிருந்ததைவிட மோசமானதாக ஆக்கிக்கொள்கிறான். ஆனால் அவன் அந்தப்பெண் மேல் கொண்ட பிரியமே, அவளின் புதிய வாழ்வின் மகிழ்ச்சி தெறிக்கும் கணங்களாக, புன்னகைகளாக நிழற்படங்களில் பதிவு பெறுகிறது. தனக்கு இந்த வாழ்வை வாழ்வதற்குரிய வாய்ப்பை தந்த அந்த ஆண் குறித்த வருத்தங்கள், வேதனைகள் நிழற்படத்தில் இருக்கும் பெண்ணின் கண்களின் இறந்த பாலையாகவே இருக்கிறது. [**]
இத்தாலிய மொழி ட்ரெயிலர்
