Showing posts with label Expendables. Show all posts
Showing posts with label Expendables. Show all posts

Thursday, August 19, 2010

ஒதுக்கப்பட்டவர்கள்


“எந்தப் பிரபல இயக்குனரும் என்னுடன் பணியாற்ற விரும்பியதில்லை. அது என் சாபம். எனவே மற்றவர்களைவிட நான் அதிகமாக பாடுபடவேண்டியிருந்தது. மற்றவர்களைவிட நான் அதிக தோல்விகளை சந்திக்க வேண்டியுமிருந்தது”…ஸ்டாலோன் ஒரு பேட்டியில்.

எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படத்தைப் பார்க்கும் வேளையில் என்னை மிகவும் உலுக்கியது என்னவெனில் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் முகத்தில் குடிகொண்டிருந்த அந்த சோகமான அயர்ச்சியே ஆகும். அந்த அயர்ச்சியை தன்னால் இயலுமானவரை பார்வையாளர்களிடம் கடத்திவிடாதவகையில் அவர் போராடியிருக்கிறார். இது அவரின் நடிப்பிற்கும், இயக்கத்திற்கும் பொருந்தும்.

இன்றைக்கு 25 வருடங்களிற்கு முன்பாக ஆக்‌ஷன் திரைப்படங்களின் தீவிர ரசிகனாக இருந்த என்னை தன் பங்கிற்கு மகிழ்வித்த அதே ஸ்டாலோனை இன்று திரையில் எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று. ஸ்டாலோன் மட்டுமல்ல ROCKY 4ல் அவருடன் தன் உயிரிற்காக மோதிய Dolph Lundgren கூட மாறித்தான் போய்விட்டார். ராக்கி 4ல் இந்த இரு நடிகர்களிற்குமிடையில் நிகழும் அந்த உச்சக்கட்ட மோதலிற்காகவே அத்திரைப்படத்தை நான் பலதடவை திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.

என்பதுகளின் இறுதியிலும் தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் என்னை ஆக்கிரமிப்பு செய்த ஆக்‌ஷன் நாயகர்களான Chuck norris, Carl Weathers, Dolhp Lundgren, Steven Segal, Jean-Claude Van Damme போன்ற நடிகர்கள் இன்றைய ஹாலிவூட் ஆக்‌ஷன் படைப்புக்களிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அவ்வகையில் அவர்கள் எக்ஸ்பெண்டபில்கள்தான். அதனை எனக்கு நினைவுபடுத்துவதாக இந்தப்படம் அமைந்திருந்தது. நடிகர் ஸ்வார்ஸ்னேகர் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் அவரைப்போல் புகழ் பெற்றிராத ஏனைய நாயகர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை என்னால் கேள்வியாக மட்டுமே ஆக்க முடிகிறது.

சில வருடங்களிற்கு முன்பு வெளியாகிய ராக்கி மற்றும் ராம்போ ஆகிய திரைப்படங்களின் இறுதிப்பாகங்கள்! தந்த நம்பிக்கை தரும் வெற்றியே ஸ்டாலோனை எக்ஸ்பென்டபில்ஸ் திரைப்படத்தை இயக்கத் தூண்டியது எனலாம். எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படம் சமகால ஆக்‌ஷன் திரைப்படங்களின் தரத்துடன் எந்த வகையிலும் போட்டி போடுவதற்காக உருவாக்கப்படவில்லை. என்பதுகளில் கோலோச்சிய ஒருவகை மிகைத்தன்மை வாய்ந்த ஆக்‌ஷன் சினிமா குறித்த ஒரு நினைவூட்டலாக இந்தப்படம் இருக்கிறது. அந்தவகை சினிமாவின் ரசிகர்களை மீள வெல்ல முடியுமா என்ற ஒரு கேள்வியாகவும் திரைப்படம் அமைகிறது.

தென் அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் சர்வதிகாரியாக செயற்படும் ஒரு ராணுவ ஜெனரலையும், அவனிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரு முன்னைநாள் CIA ஏஜெண்ட்டையும், ஒரு இளம் பெண்ணிற்காக வேரறுக்கிறது ஒரு கூலிப்படை குழு. இங்கு பெண்ணிற்காகவென்பது காதல் அல்லது இரக்கம் என்பதனைத் தாண்டி கையறு நிலையில் உள்ளவர்கள் குறித்த அறம் சார்ந்ததாகவும், கூலிப்படையினரின் சபிக்கப்பட்ட ஆன்மாக்களிற்கு ஒரு தற்காலிக விமோசனத்தை வழங்கும் காரணியாகவும் உள்ளது என்று கொள்ளப்படலே பொருத்தமானதாக இருக்கும்.

திரைப்படத்தின் முதல் ஆக்‌ஷன் காட்சியே அது எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்டிவிடுகிறது. அதற்குப் பின்பாக மனதில் உருக்கொண்ட அதீத எதிர்பார்ப்புக்களை உதறிவிட்டே படத்தை பார்க்க வேண்டும். இல்லையேல் ஏமாற்றம் என்பது திரைப்படத்தின் முடிவில் நிச்சயமான ஒன்றாகவிருக்கும்.

ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம்போல் முகச்சாயல் கொண்ட ஒரு கடற்கொள்ளையனை ரத்தப் பஸ்பமாக்குவதுடன் கோலாகலமாக ஆரம்பமாகும் திரைப்படம், அத்திரைப்படத்தில் பங்கேற்றிருக்கும் அனைத்து நடிகர்களிற்கும் தமது திறமையைக் காட்ட சமமான வாய்ப்பை தந்திருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஜேசன் சாட்ஹேம் மாத்திரமே நடிகர் கும்பலில் மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்படுகிறார். சில வேளைகளில் ஸ்டாலோனையும் விட என்றால் அது மிகையல்ல.

expendables-unite-speciale-2010-17756-2065527183 திரைப்படத்தின் பாத்திரங்களில் ஸ்டாலோனிற்கும், ஜேசன் சாட்ஹேமிற்குமிடையில் உள்ள பொருத்தம் இயல்பிற்கு மிகநெருங்கியதாக இருக்கிறது. திரைப்படத்தின் எந்த ஒரு தருணத்திலும் அந்தப் பொருத்தமானது வலிய திணிக்கப்பட்ட ஒன்றிற்கான உணர்வை அளிக்கவில்லை. ஜேசன் சாட் ஹேமிற்கு திரைப்படத்தின் சில சிறப்பான அதிரடி ஆக்‌ஷன்களை தூக்கி தந்திருக்கிறார் ஸ்டாலோன். ஆனால் ஜேசன் சாட்ஹேம் இன்றைய தலைமுறைக்குரிய ஆக்‌ஷன் ஹீரோ என்பதை நாம் மறந்துவிடலாகாது. புதிய தலைமுறைக்கு வழிவிட்டு தான் ஒதுங்கி கொள்வதாகக்கூட ஸ்டாலொனின் இந்த ஆக்‌ஷன் தியாகங்களை அர்த்தம் செய்து கொள்ளலாம்.

தனது வயது குறித்தும், குறைந்துவரும் தன் வேகம் மற்றும் ஆற்றல் குறித்தும் ஸ்டாலோன் திரைப்படத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அடியாள் ஸ்டீவ் ஆஸ்டினிடம் சரமாரியாக அடிகளை வாங்கிவிட்டு “என்னைப் பின்னி எடுத்துவிட்டான்” என்று கூலாகச் சொல்கிறார். இவைதான் இத்திரைப்படத்தில் ஸ்டாலோனை யதார்த்தத்தை உணர்ந்த ஒரு நாயகனாக முன்னிலைப்படுத்துகிறது.

பெரும்பாலும் தனிமையான வாழ்க்கை கொண்ட கூலிப்படையினரின் அவலநிலை குறித்தும் திரைப்படம் பேசுகிறது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தனி இனமாக அவர்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதுவே தொழில் முறை நட்பு என்பதை மீறி தமக்கு எதிராக செயற்பட்டவர்களைக்கூட மன்னித்து, அரவணைத்து அவர்கள் தங்களிற்கிடையில் பேணும் நட்பின் ஆதாரமாக இருக்கக்கூடும். இந்தக் கூலிப்படையினரின் வாழ்க்கையின் சில கூறுகளாவது ஒதுக்கப்பட்ட ஆக்‌ஷன் நாயகர்களின் வாழ்வில் பிரதிபலிக்காமல் இருக்க முடியுமா என்ன.

மொட்டை மாமா ப்ரூஸ் வில்லிஸ், கவர்னர் ஸ்வார்ஷ்னேகர், ஸ்டாலோன் ஆகிய மூவரும் திரைப்படத்தில் தோன்றும் தருணம் மிக சொற்ப நேரமே திரையில் நீடிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் தமக்குள் ஒருவர் குறித்து ஒருவர் பரிமாறிக் கொள்ளும் கிண்டல்கள் அபாரம். இந்த தருணத்தை நான் மிகவும் ரசித்தேன். இவன் ஜனாதிபதியாக விரும்புகிறான் என்று ஸ்வார்ஷ்னேகரைப் பார்த்து ஸ்டாலோன் அடிக்கும் கிண்டல் சூப்பர்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆக்‌ஷன் விருந்து தடையின்றி தொடர்கிறது. திகட்ட திகட்ட பார்வையாளனிற்கு ஆக்‌ஷன் ஊட்டப்படுகிறது. திரைப்படமும் சரி உச்சக்கட்ட ஆக்‌ஷன் காட்சிகளும் சரி எந்தவித கேள்விகளுமின்றி பார்க்கப்பட வேண்டியவையாகும். திரைப்படத்தை நோக்கி தர்க்கரீதியான கேள்விகளை முன்வைப்பதை விடுத்து இருபது வருடங்களிற்கு முன்பாக எப்படி ஒரு ஆக்‌ஷன் படத்தை ரசித்திருப்பேனோ அவ்வாறே இத்திரைப்படத்தை நான் ரசித்தேன்.

திரைப்படத்தில் இறுதித் தருணங்களில் “நீங்கள் மீண்டும் வருவீர்களா” எனக் கேட்கப்படும் கேள்விக்கு ஸ்டாலோன் தரும் பதில் “நான் உன்னை விட்டு அதிக தொலைவில் இருக்கமாட்டேன்” என்பதாகவிருக்கும். ஸ்டாலோனின் உண்மையான ரசிகர்களிற்கு அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருக்கும். [**]