Showing posts with label District 9. Show all posts
Showing posts with label District 9. Show all posts

Sunday, September 20, 2009

தகரத்தில் பூக்கும் ரோஜாக்கள்


இருபது வருடங்களிற்கு முன்பாக தென்னாபிரிக்காவின் ஜோகானாஸ்பெர்க் நகரத்தின் மீது செயலிழந்து விடுகிறது வேற்றுக் கிரகவாசிகளின் ஒர் விண்கலம். செயலிழந்த விண்கலத்தின் உள்ளே நுழையும் அதிகாரிகள் அங்கு மிகப் பலவீனமான நிலையில் இருக்கும், இறால் போல் தோற்றமளிக்கும் வேற்றுக் கிரகவாசிகளைக் காண்கிறார்கள்.

வேற்றுக் கிரகவாசிகளின் கலம், அது அந்தரத்தில் நிற்குமிடத்தை விட்டு நகர முடியாததால், அதன் கீழே இருக்கும் ஒர் நிலப்பகுதியில் இறால்களை அடைக்கலம் தந்து தங்க வைக்கிறார்கள் அதிகாரிகள். அந்த முகாம் டிஸ்டிரிக் 9 என அழைக்கப்படுகிறது.

இருபது வருடங்களின் பின்பாக டிஸ்டிரிக் 9 ஒர் தகரக் கொட்டகைச் சேரியாகவே மாறிவிட்டிருக்கிறது. இறால்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இறால்கள் முகாமை விட்டு வெளியேறி விடாத வண்ணம் பலத்த காவல் அங்கு நிலவுகிறது. முகாமினுள் புகுந்து விட்ட கொடிய நைஜீரிய ஆயுதக் கும்பல் ஒன்று இறால்களின் அப்பாவித்தனத்தினால் பூனை உணவு வியாபாரத்தில் கொழித்து வளர்கிறது.

கால ஓட்டத்தில் இறால்கள் குறித்த நகர மக்களின் அபிப்பிராயம் இரக்கத்திலிருந்து இனவெறுப்பாக மாறிவிட்டிருக்கிறது. இறால்கள் நகரத்திலிருந்து வேறு எங்கேயாவது சென்று தொலையட்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டிருக்கிறார்கள் அவர்கள்.

எனவே இறால்களை டிஸ்டிரிக் 9லிருந்து வெளியேற்றி, வேறு ஒர் பகுதியில் தங்கவைக்கும் பொறுப்பை MNU எனும் நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்கிறது. அந்நடவடிக்கைக்கு தலைமை தாங்க Wikus Van Der Merwe எனும் அதிகாரியையும் நியமிக்கிறது.

District600 MNUவின் ஆயுதப் பிரிவு, மற்றும் சில அதிகாரிகள் துணை வர டிஸ்டிரிக் 9க்குள் நுழையும் விக்கஸ், அங்கு பரிதாபமான நிலையில் வாழும் இறால்களிடம் அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்லப் போகும் தகவலைக் கூறி அவர்களை அதற்கு இணங்க வைக்க முயல்கிறான்.

ஒர் இறாலின் தகரக் கொட்டகையில் நடக்கும் தேடலில், இறால்கள் ரகசியமாக மறைத்து வைத்திருந்த திரவக் குடுவையொன்றைக் கண்டெடுக்கும் விக்கஸ், அதனை திறந்து பார்க்க முயல்கையில் அதிலிருந்த திரவத்தை தன் முகத்தின் மீது தவறுதலாக தெளித்துக் கொள்கிறான்.

4a681f124e226 டிஸ்ரிக் 9 ஐ விட்டு வெளியேறும் விக்கஸின் உடல் மாற்றம் காண ஆரம்பிக்கிறது. மருத்துவமனையில் தன் உடலை பரிசோதித்துப் பார்க்கும் விக்கஸ் தான் ஒர் இறாலாக மாறிக் கொண்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறான்.

விக்கஸின் நிலை பற்றி அறிந்து கொள்ளும் MNU அவனை தன் பரிசோதனைக் கூடத்திற்கு எடுத்து வந்து, அவன் விருப்பத்திற்கு எதிராக அவன் மேல் ஆய்வுகளை மேற்கொள்ளுகிறது.

விக்கஸின் உடலில் வேற்றுக்கிரக உயிரினதும், விக்கஸினதும் மரபணுக்கள் சமனிலை அடைந்திருக்கும் தருணத்தில் அவன் உடல் உறுப்புக்களை அகற்றி கொள்ளை லாபம் பார்க்க விரும்புகிறது MNU. MNUவின் காவலிருந்து தப்பும் விக்கஸ், செல்ல வேறு இடம் எதுவுமின்றி அடைக்கலம் தேடிச் செல்லும் இடம் டிஸ்டிரிக்ட் 9 ஆகவிருக்கிறது..

ஒர் விபரணக்கதை போல், பேட்டிகள் மற்றும் ஆவண ஒளிப்பதிவுகள் வழி தம் பரிதாபமான நிலைகளிலிருந்து விடுதலை பெற விரும்பும் விக்கஸ் மற்றும் கிறிஸ்டோபர் எனும் இறால் ஆகியோரின் போரட்டத்தை திறம்பட திரையாக்கியிருக்கிறார் இயக்குனர் Neill Blomkamp.

நட்புக்கரம் நீட்டும் வேற்றுக் கிரக உயிர் அல்லது மனித குலத்தை அழிக்க வந்த வேற்றுக் கிரக உயிர் எனும் வழக்கத்தினை தவிர்த்து, மனிதருக்கு அடங்கிப் போய், அடக்கு முறைக்குள்ளாகும் வேற்றுக் கிரகவாசிகளை அறிமுகம் செய்திருக்கிறார் இயக்குனர்.

அவர்களிற்குரித்த தகுதியான வாய்ப்புக்கள் வழங்கப்படாது அவலத்தில் விடப்படும் ஒர் இனமானது தன் விடுதலைக்கு வழி தேடுவது இயல்பானது, இதில் விக்கஸும் தன் சுய நலம் கருதி இணைந்து கொள்வதை விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறார் ப்லம்காம்ப்.

வேற்றின வெறுப்பு, அகதி முகாம்களின் உள்ளே தனி ராச்சியம் நடத்தும் வன்முறைக் கும்பல், அகதிகளைக் தன் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் அமைப்பு போன்ற சமகால விடயங்களை திரைக்கதையில் நேர்த்தியாக சேர்த்திருக்கிறார் அவர்.

டிஸ்டிரிக்ட் 9க்குள் விக்கஸ் நுழைந்தபின் படத்தின் வேகம் அதிகரித்து விடுகிறது. சிறப்பான திருப்பங்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை படத்தின் பலம். ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் மனதை நெகிழ வைக்கும் காட்சிகளும் இடையே வந்து படத்தினை கூடுதலாக ரசிக்க செய்து விடுகின்றன.

ஆரம்பத்தில் இறால்களை ஏமாற்றி, பின்பு அவர்களிடமே தஞ்சமடைந்து தன் சுயநலத்திற்காக எதையும் செய்ய தயாராகவிருக்கும் பாத்திரத்தில் சிறப்பாக செய்திருக்கிறார் நடிகர் Sharlto Copley. ஆரம்பத்தில் பார்வையாளனின் வெறுப்பையும், பின்பு இரக்கத்தையும் சம்பாதிக்கும் அவர் இறுதியில் மனங்களை நெகிழச் செய்து விடுகிறார்.

d9-christopher வேற்றுக்கிரக இறால்கள் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டவை என்று நம்புவது சிரமம். அவ்வளவு இயல்பாக [நடித்து] இருக்கிறார்கள். அவர்கள் கண்களில் கூட உணர்சிகளைக் காட்டி விடும் நுட்பம் பாராட்டுக்குரியது.

ஆகாயத்தில் ஒரு கமெரா, தோளில் பயணிக்கும் ஒர் கமெரா என வேகமான கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவும், எடிட்டுங்கும் சிறப்பாக இருக்கிறது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டாலும் தன் தரத்தினால் ரசிகர்களை அசத்திப்போட்டு விடும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் தான் ஒருவராக இருப்பதில் பீட்டர் ஜாக்சன் பெருமைப்படுவார் என்பது நிச்சயம்.

தன் சொந்த இடத்திற்கு திரும்பிச் செல்லவே முடியாத இனங்களின் வேதனைகளை வேலிகள் கொண்டோ, எல்லைகள் மூலமோ தணித்திட முடியாது. இருக்கும் நிலத்திலேயே வேர் பிடித்து விருட்சமாகி விடும் வேதனையது. இறால் ஒன்று, குப்பைகளில் தேடி எடுத்த தகரங்களில் உருவாக்கும் ரோஜாக்களில் கூட தன் துணையின் மீதான அன்பும், அவளை அணைக்க முடியவில்லையே ஏக்கமும் கலந்தேதான் இருக்கிறது. (****)

நண்பர்களிற்கு என் ரம்ழான் பெருநாள் வாழ்த்துக்கள்.