Showing posts with label Daniel monzon. Show all posts
Showing posts with label Daniel monzon. Show all posts

Wednesday, September 15, 2010

சிறையறை - 211


ஸ்பெயின் நாட்டு சிறையொன்றில், சிறைக்காவலனாக புதிய வேலையொன்றை தேடிக்கொள்ளும் Juan, தான் பணியை பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டிய நாளிற்கு ஒரு நாள் முன்பாக அவன் பணியாற்றவிருக்கும் சிறையை ஆவல்மிகுதியால் பார்வையிட வருகிறான்.

துரதிர்ஷ்டவசமாக, Malamadre எனும் சிறைக்கைதியின் தலைமையில், கைதிகளின் உக்கிரமான போராட்டம் ஒன்று சிறையில் அன்று வெடிக்கிறது. கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கும் பகுதியின் முழுக்கட்டுப்பாடும் சிறைக்கைதிகளின் பக்கம் வந்துவிட, அப்பகுதியினுள் அகப்பட்டுக்கொண்ட ஹுவான், தான் சிறையில் புதிதாக அடைக்கப்பட்ட ஒரு கைதிபோல், போராடும் சிறைக்கைதிகளிடம் நடிக்க ஆரம்பிக்கிறான்.

நீதி அமைப்புக்களின் தீர்ப்பின் பின்பாக சிறையில் தம் வாழ்க்கையை கழிப்பதற்காக அடைக்கப்படும் மனிதர்களின் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து பார்வையாளர்களின் கவனத்தை திருப்ப முற்படுகிறது Celda 211 எனப்படும் இந்த ஸ்பானிய மொழித் திரைப்படம். பொதுவாக சிறையில் வாடும் விஐபி அல்லாத கைதிகளின் போராட்டங்கள் பற்றி அதிகம் வெளியே தெரிய வருவதில்லை. அப்படியே வெளியே வந்தாலும் சிறிய, முக்கியத்துவம் இழந்த செய்திகளாக அவை அமுக்கப்பட்டு போகின்றன. அக்கலகங்கள் ஏன் உருவாகின்றன என்ற கேள்விகளும் அதிக எண்ணிக்கையில் உரக்க எழுப்பப்படுவதில்லை. [ நான்கூட இது குறித்து சிந்தித்ததில்லை]

தமக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளிற்கு எதிராக, வேறுவழிகளற்ற நிலையில் வன்முறைப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் சிறைக்கைதிகளின் மத்தியில் ஒரு புதிய சிறைக்காவலனை அங்கம் கொள்ளச் செய்வதன் வழியாக, அவன் பார்வை மூலம் அக்கைதிகளின் கோரிக்கைகளில் இருக்ககூடிய நியாயங்களையும், சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களும் மனிதர்களுமே என்பதையும் உணர்த்த முயல்கிறது திரைப்படம்.

சிறைக்கைதிகளின் தற்கொலை, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் மனித தன்மையற்ற வன்முறைகள், தண்டனை முறைகள், கைதிகளின் நியாயமான கோரிக்கைகளிற்கு காது கொடுக்காது சிறை அதிகாரிகளிற்கு சாதகமாக செயற்படும் நீதி அமைப்பு என்பவற்றினை திரைக்கதையில் விபரித்து தமது வாழ்வை சிறையில் நொருக்கும் மனிதர்கள் குறித்த ஒரு பார்வையை திரைப்படம் வழங்குகிறது.

சிறையில் இடம்பெறும் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளிற்கு தமது சுயலாபத்திற்காக இடம்தரும் சிறை அதிகாரம் குறித்த மெலிதான விமர்சனமும் திரைப்படத்தில் உண்டு. இவ்வகையான கண்மூடல்களால் மட்டுமே சிறையை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம் எனச் செயற்படும் சிறை அதிகாரிகளின் கையாலாகத்தனத்தை இது வெட்டவெளிச்சமாக்குகிறது.

Celda-211 சிறைக்கைதிகளின் போராட்டத்தை அடக்க, கட்டுக்குள் கொண்டுவர நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகள், ரகசிய பேரங்கள், பொய்கள், துரோகங்கள் என்பன எந்த ஒரு அதிகாரமும் தமெக்கெதிரான போராட்டங்களை எதிர்கொள்ளும் நரித்தனமான முறைகளிலிருந்து விலகிச் சென்றுவிடவில்லை. சிறை உடைப்புக்கள்போல் சிறையில் நடைபெறும் கலகங்களும் அதன் பின்பான உண்மைகளும் பரபரப்பாக ஊடகப்படுத்தபடுவதில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. திரைப்படத்திலும்கூட ஊடகங்கள் உண்மை நிலையை அறிய திணற வேண்டியிருப்பது யாதார்த்த நிலையை சற்று தொட்டுப் பார்க்கிறது. கைதியோ, காவலனோ அதிகாரத்தின் வெற்றி என்பதற்கு முன்பாக எல்லா உயிர்களும் துச்சமே என்பதை கதை தெளிவாக்குகிறது.

கைதிகளோடு இணைந்து போராடுபவனாகவும், சிறை அதிகாரிகளிற்கு போராட்டம் குறித்த தகவல்களை ரகசியமாக வழங்குபவனாகவும் இருக்கும் ஹுவான், தொடரும் அசம்பாவிதங்களினால் கைதிகளின் போராடத்தை தானே முன்னின்று நடத்துபவனாக உருவெடுக்கிறான். ஆனால் அவன் அவ்வாறு மாறுவதற்கு வலி நிறைந்த சம்பவம் ஒன்று காரணமாகிவிடுகிறது. தன்னால் உணரப்படும் வலிகள் மட்டும்தான் இன்னொருவனின் நியாயமான கோரிக்கை குறித்து ஒருவனை சிந்திக்கவைக்க முயலும் என்பது வேதனையான ஒன்றுதான். ஆனால் சிறை அதிகாரிகளின் பக்கம் இருந்து கைதிகளின் பக்கம் வரும் வலிமிகுந்த ஹூவான் பாத்திரத்தை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் முன்பின் அறியாத ஹுவானின் மீது சிறைக்கைதி மலாமாத்ரே கொள்ளும் நம்பிக்கை நம்பக்கூடியதாக இல்லை.

ஆரம்பத்தில் சற்று வேகமாக செல்வது போல் பிரம்மையை தந்தாலும் சிறப்பான ஒரு த்ரில்லராக திகழ்ந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் வீர்யம் இழந்த திருப்பங்களாலும் இயக்குனர் Daniel Monzon ன், விறுவிறுப்பை படிப்படியாக இழக்கும் கதைசொல்லலாலும் தனது உக்கிரத்தை இழந்து நிற்கிறது. பிரதான பாத்திரங்களான ஹூவான், மலாமாத்ரே பாத்திரங்களை ஏற்றிருக்கும் கலைஞர்களான Alberto Ammann மற்றும் Luis Tosar ஆகியோரின் நடிப்பு பார்வையாளனை தூரத்தில் நிற்க வைக்கிறது. உணர்ச்சிகரமான காட்சிகளில் தட்டுப்பாடாக இருக்கும் உணர்ச்சிகள், படத்தின் வேகத்திற்கு தடையாகும் தேவையற்ற, அர்த்தம் குறைந்த பிளாஷ்பேக்குகள் என்பன எல்லாம் சேர்ந்து ஸ்பெயின் நாட்டின் 8 தேசிய விருதுகளை[Goya] வென்ற படைப்பா இது என்ற ஐயத்தை மனதில் பலமாக எழுப்புகின்றன.

சிறை அறைகளின் சுவர்களில் மனிதர்களால் கிறுக்கப்பட்டிருக்கும் சில கிறுக்கல்கள் வெறும் கிறுக்கல்கள் அல்ல, வலிநிறைந்த, சிதைந்து போன மனித வாழ்க்கை சரிதங்களின் உயில்கள் அவை. சிறையறை 211ன் சுவரிலும் உயில்கள் வாழ்கின்றன. (**)

ட்ரெயிலர்