Showing posts with label Anton Corbijn. Show all posts
Showing posts with label Anton Corbijn. Show all posts

Wednesday, December 1, 2010

அமெரிக்கன்


சுவீடனில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த ஒப்பந்தக் கொலைஞனான ஜாக்[George Clooney], அவனைக் கொலை செய்ய எடுக்கப்படும் ஒரு முயற்சியிலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துக் கொள்கிறான். இந்தக் கொலைச்சதியின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறியும் பொறுப்பை தனக்கு ஒப்பந்தங்களை வழங்கும் பவேல் என்பவனிடம் ஒப்படைக்கும் ஜாக்,சிறிது காலம் தலைமறைவாக இருப்பதற்காக இத்தாலியின் மலைக்கிராமம் ஒன்றிற்கு வந்து சேர்கிறான்…

Martin Booth எனும் நாவலாசிரியர் எழுதிய A Very Private Gentelman எனும் நாவலினைத் தழுவி, இயக்குனர் Anton Corbijn இயக்கியிருக்கும் The American திரைப்படமானது ஒரு பரபரப்பான அதிரடி த்ரில்லர் அல்ல. ஒப்பந்தக் கொலைகாரன் ஜாக், தலைமறைவாக வாழ்ந்திட வந்து சேரும் மலைக் கிராமத்தில் வாழ்ந்திருக்கும் அமைதியை திரைப்படமும் தன்னுள் இழுத்துக் கொண்டிருக்கிறது.

மலைக்கிராமத்திற்கு புதியவனாக வந்து சேரும் ஜாக், அக்கிராம மக்களால் அமெரிக்கன் என அழைக்கப்படுகிறான். காலையில் அவன் செய்யும் உடற்பயிற்சி முதல், மாலையில் சந்தேகப் பார்வையுடன் ஒடுங்கிய தெருக்கள் வழியாக நடந்து அவன் தன் வீடு திரும்புவதுவரை, ஜாக்கின் சந்தேகம் பீடித்த தினசரி வாழ்வின் உயிரற்ற தன்மையை படத்தின் மெதுவான ஓட்டம் கனமாக மாற்றியடிக்கிறது.

வழக்கமாக தனது காந்தக் கவர்ச்சியாலும், அதிசயிக்க வைக்கும் உடல் மொழியாலும் ரசிகர்களை தன் பக்கம் இழுத்துவிடும் க்ளுனி, பிறரை அதிகம் நெருங்காமல், உணர்ச்சிகளை வெளியே காட்டிக் கொள்ளாத கொலைஞன் வேடத்தில் இதைவிட சிறப்பாக செய்துவிட முடியாது. இருப்பினும் அவரது தீவிர ரசிகர்கள்கூட அவரின் இந்தப் பாத்திரப்படைப்பை முழுமையாக ஏற்றுக்கொள்வார்களா என்பது ஐயத்திற்குரிய ஒன்று. அந்தளவிற்கு உணர்வுகள் விறைத்த நடிப்பை திரைப்படத்தில் வழங்கியிருக்கிறார் க்ளுனி. ஆனால் பெண்களுடான காட்சிகளில் மட்டும் அவரிடம் குடியிருக்கும் அந்தக் கவர்ச்சி இயல்பாகவே வெளிப்பட்டு மனதை கொஞ்சம் ஆறுதல் செய்கிறது. படத்தின் தயாரிப்பிலும் க்ளுனிக்கு பங்கிருக்கிறது.

the-american-2010-18065-1849181211

ஒரு கொலைஞனின் நுட்பத்தைக் காட்டும் காட்சிகளாக, ஜாக் புதிதாக தயாரிக்கும் ஒரு துப்பாக்கி குறித்த கணங்களும், அத்துப்பாக்கியை ஒரு ஆற்றங்கரை அருகில் பிறிதொரு கொலைகாரியுடன் சோதித்துப் பார்க்கும் சந்தர்பத்தையும் குறிப்பிட்டு சொல்லலாம். அதிலும் ஆற்றங்கரை அருகில் துப்பாக்கியை சோதித்துப் பார்க்கும் தருணங்களில் மனது திக்திக் என்கிறது.

மலைக்கிராமத்தின் மதகுருவானவர்க்கும், ஜாக்கிற்குமிடையில் ஆத்ம பரிசோதனைக்கான வாயில் ஒன்று திறக்கிறது. ஆனால் ஆன்மீக வழியில் பிராயிசித்தம் தேடுவதற்குப் பதிலாக ஜாக் காதல் வழியாக தன் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள விருப்பம் கொள்கிறான். கிராமத்தின் விலைமாது ஒருத்தியுடன் ஆரம்பமாகும் உடல்பசி தீர்த்தலானது மெல்ல மெல்ல ஜாக்கில் காதலாக உருக்கொள்ள ஆரம்பிக்கிறது. இந்தக் காதலிற்காக ஜாக் தன் கடந்த காலத்தை இழப்பானா என்பதும், ஜாக்கை கொலை செய்ய முயன்றவர்கள், முயல்பவர்கள் யார் என்பதும் திரைக்கதையை முன்னே நகர்த்திச் செல்கின்றன.

திரைப்படத்தின் கதையில் ஏற்கனவே சுவைத்த ஒன்றின் உணர்வை பெறுவது தவிர்க்க இயலாதது. படத்தைப் பார்த்து முடிப்பதற்கு அசாத்திய பொறுமையும் தேவை. ஒரிரு தருணங்களை தவிர்த்து படத்தில் பரபரபிற்கு இடமில்லை. இப்படியாகவே கதை நகரும், இப்படியாகவே கதை முடியும் என்பதை இலகுவாக ஊகித்து விட முடிகிறது. கொலைஞனின் வாழ்வில் எல்லாக் கணங்களும் பரபரப்பாக இருப்பதில்லை ஆனால் அக்கொலைஞன் தீராத சந்தேகத்துடன் தன் நாட்களை பாரமாக சுமந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதை படம் இயல்பாக உணர்த்த முயல்கிறது.

அழிந்துபோகும் நிலையிலிருக்கும் ஒரு வகை பட்டாம் பூச்சியை குறியீடாகக் கொண்டு சில கவித்துவமான காட்சிகளை இயக்குனர் படைத்திருக்கிறார். [ஜாக்கை கூட பெண்கள் மிஸ்டர் பட்டர்ஃப்ளை என்று படத்தில் அழைக்கிறார்கள்]. விலைமாதுவிற்கும், ஜாக்கிற்குமிடையிலான காதல் காட்சிகள் மனதை வருடுகின்றன. ஆனால் க்ளுனி திரைப்படத்தை நீக்கமற நிறைத்திருந்தும் அவரால்கூட திரைப்படத்தை தூக்கி நிறுத்திட முடியவில்லை. க்ளூனியின் அதிதீவிர ரசிகர்களும், பொறுமையின் அழகை ரசிப்பவர்களும் இந்த வேகம் துறந்த அமெரிக்கனை ரசிக்க முடியும். [**]

ட்ரெயிலர்