
லாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது.
ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனி அடர்ந்த தெருக்களில் விபத்துக்குள்ளாகி, ஸ்தலத்திலேயே உயிரிழக்கிறான். இந்த தகவலை அறியும் ஜார்ஜ் உடைந்து போகிறான். ஜிம்மின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஜார்ஜ்ஜிற்கு, ஜிம்மின் குடும்பத்தினரால் அதற்குரிய அனுமதி மறுக்கப்படுகிறது. தன் நெருங்கிய தோழியான சார்லொட்டிடம் ஒடிச் சென்று தன் மனதின் வேதனைகளை கண்ணீரால் வடிக்கிறான் ஜார்ஜ்.
ஜிம் இல்லாத ஜார்ஜின் வாழ்க்கையானது அதன் அர்த்தமும், சுவையும் இழந்த ஒன்றாகி விடுகிறது. திட்டமிட்ட காரியங்களை ஆற்றும் ஒரு யந்திரம் போன்று தன் வாழ்வை நகர்த்துகிறான் ஜார்ஜ். தொடரும் வாழ்க்கையில் சலிப்படையும் அவன், தன் வாழ்வை முடித்துக் கொள்வது எனத் தீர்மானிக்கிறான். புதிய காலை ஒன்றில் தன் வாழ்வின் இறுதி நாளை ஆரம்பிக்கிறான் ஜார்ஜ்.
தான் பணியாற்றும் கல்லூரிக்குச் செல்லும் ஜார்ஜ், கல்லூரி அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசியுடன் இனிமையாக உரையாடுகிறான். வழமையாக தன்னுடன் அதிகம் பேசாத ஜார்ஜ்ஜின் இந்த மாற்றம் அவளிற்கு வியப்பை அளிக்கிறது. ஜார்ஜ்ஜை ஆச்சர்யம் நிரம்பிய விழிகளால் பார்க்கிறாள் அவள்.
தன் வகுப்பறைக்கு செல்லும் ஜார்ஜ் தன் வழமையான முறையிலிருந்து விலகி, தன் மனதிற்கு நெருக்கமான வகையில் மாணவர்களிற்கு பாடம் எடுக்கிறான். ஆனால் மாணவர்கள் இந்த மாற்றத்தினால் உவகை கொண்டவர்களாக மாறிவிடவில்லை. கெனி எனும் மாணவன் மட்டும் பாடம் முடிவடைந்த பின் ஜார்ஜை தேடி வந்து உரையாடுகிறான். ஜார்ஜ் பாடம் நடத்திய விதம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனக் கூறுகிறான். ஜார்ஜ் தன்னுடன் ஏதாவது பருக வேண்டுமென அழைப்பு விடுக்கிறான். அந்த அழைப்பை மறுத்து விடுகிறான் ஜார்ஜ்.
தன் முன்னை நாள் காதலியும் இன்னாள் நண்பியுமான சார்லொட்டை கடைசியாக ஒரு தடவை சந்திக்க விரும்புகிறான் ஜார்ஜ். சர்லொட், மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள். மது, அவள் வாழ்வில் அவளிற்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருக்கிறது.
சார்லொட்டிற்காக ஜின் போத்தல்கள் சிலதை வாங்க ஒரு அங்காடிக்குச் செல்லும் ஜார்ஜ், அங்கு கார்லோஸ் எனும் அழகிய ஆண் விலை மகனைக் கண்டு கொள்கிறான். கார்லோஸுடன் உரையாடும் ஜார்ஜ், அந்த உரையாடல் மனம் திறந்த ஒரு உரையாடலாக அமைந்திருப்பதை உணர்ந்து ஆச்சர்யம் கொள்கிறான்.
அங்காடியின் கார் பார்க்கிங்கில் தன் காரில் சாய்ந்தவாறே அழகான சூரிய அஸ்தமனஸ்தை கார்லோஸுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்கிறான் ஜார்ஜ். தன் வாழ்க்கையில் சாதாரண தருணங்களைக் கூட அவன் ரசிக்கத் தவறியிருப்பது அவனிற்கு புரிகிறது. ஜார்ஜின் மென்மையான, கண்ணியமான குணத்தைக் கண்டு அவனிற்கு சில சேவைகளை செய்ய முன் வருகிறான் கார்லோஸ். ஆனால் ஜார்ஜ் அதனை மறுத்து தன் வீடு திரும்புகிறான்.
தன் வீட்டிற்கு திரும்பும் ஜார்ஜ், தற்கொலைக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிக்கிறான். தனக்கு நெருக்கமானவர்களிற்கு கடிதங்களை எழுதி அவற்றை மேசையின் மீது ஒழுங்காக வைக்கிறான். தன் காரின் சாவி, பத்திரங்கள், சொத்து ஆவணங்கள் போன்றவற்றையும் அம்மேசையில் அழகாக பரப்புகிறான். தன் வீட்டில் பணி புரியும் பணிப்பெண்ணிற்கு ஒரு தொகைப் பணத்தை குளிர் பதனப் பெட்டியினுள் வைக்கிறான்.
தன் வாயில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, எந்த நிலையில் உடலை இருத்தி தற்கொலை செய்ய வேண்டுமென்பதை முயன்று பார்க்கிறான் ஜார்ஜ். இவ்வேளையில் சார்லொட்டிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, சார்லொட்டிற்காக வாங்கிய ஜின் போததல்களுடன் அவளைக் காண கிளம்பிச் செல்கிறான்.
சார்லொட்டின் வீட்டில் ஜார்ஜ் அவளுடன் மதுவைச் சுவைக்கிறான், உணவருந்துகிறான், நடனமாடுகிறான். ஜார்ஜ், இறந்து போன ஜிம் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பினால் பொறாமை கொள்ளும் சார்லொட் அவனுடன் வாக்குவாதம் செய்கிறாள். தன்னுடன் அவன் வாழலாம் என்கிறாள். பின் தன் செயலிற்காக மன்னிப்புக் கேட்கிறாள். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு அன்பு தனக்கு கிடைக்கவே கிடைக்காது என வருந்தும் அவளைத் தேற்றும் ஜார்ஜ், அவளை லண்டனிற்கு திரும்பிச் செல்லும் படி கூறி அவள் வீட்டிலிருந்து விடை பெறுகிறான்.
தன் வீட்டில் இறுதியாக ஒரு ஸ்காட்ச்சை சுவைக்க விரும்பும் ஜார்ஜ், ஸ்காட்ச் போத்தல் காலியாக இருப்பதைக் காண்கிறான். தான் வழமையாகச் செல்லும் மதுபான விடுதிக்கு சென்று ஒரு போத்தல் ஸ்காட்ச்சை ஆர்டர் செய்கிறான். இவ்வேளையில் அந்த மதுபான விடுதியின் உள்ளே நுழைகிறான் ஜார்ஜின் மாணவனான கெனி.
கெனியைக் காணும் ஜார்ஜ் தன் வாழ்வை முடிக்கும் முன்பாக கெனியுடன் உரையாட விரும்புகிறான். ஸ்காட்ச் போத்தல் ஆர்டரை ரத்துச் செய்து விட்டு இரண்டு ஸ்காட்சுகளிற்கு ஆர்டர் செய்கிறான்.
ஸ்காட்சை சுவைத்தவாறே இருவரும் உரையாடுகிறார்கள், உரையாடல் அவர்களை நெருக்கம் ஆக்க ஆரம்பிக்கிறது. ஜார்ஜ் ஒரு மென்மையான மனிதன் என்பதனை கெனி அறிந்து கொள்கிறான். இதன் பின் விடுதிக்கு அருகிலிருக்கும் கடலில் இருவரும் நீந்துவதற்காக செல்கிறார்கள்.
தங்கள் உடைகளைக் களைந்து பிறந்த மேனியாக இருவரும் அலைகளில் மூழ்கி மகிழ்கிறார்கள். அலைகளுடன் விளையாடி முடிந்ததும் ஜார்ஜின் வீட்டிற்கு இருவரும் திரும்புகிறார்கள். வீட்டிலும் பீர்களை அருந்தியவாறே அவர்களின் உரையாடல் தொடர்கிறது. இரவு அமைதியாகக் கழிகிறது. கெனியுடன் பேசியவாறே மது தந்த அயர்ச்சியில் மயங்கிப் போகும் ஜார்ஜ் சில மணிநேரம் கழித்து விழித்து எழுகிறான்.
வீட்டின் வரவேற்பு அறையிலிருக்கும் சோபாவில் கெனி சுருண்டு படுத்திருப்பதை ஜார்ஜ் காண்கிறான். கெனி அவன் கைகளில் ஜார்ஜ்ஜின் துப்பாக்கியோடு தூங்கிப் போயிருக்கிறான். சோபாவை நெருங்கி கெனியின் கைகளிலிருந்து துப்பாக்கியை எடுக்கும் ஜார்ஜ், கெனியை போர்வையால் ஆதரவோடு போர்த்து விடுகிறான். மரணம் என்பது இனி அவனிற்கு தேவையற்றது. அவன் புதிய வாழ்வை ஆரம்பிக்க விரும்புகிறான்… ஆனால்!? அந்த மனதை நெகிழ வைக்கும் முடிவைத் திரைப்படத்தில் காணுங்கள்.
Christopher Isherwood என்பவர் எழுதிய நாவலைத் தழுவி A Single Man எனும் இந்த மென்மையான உணர்வுகள் உயிர்க்கும் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல Fashion Designer ஆன Tom Ford. 1962களில் கதை நிகழ்கிறது. தன் அன்பின் பிரிவால் வாழ்வின் சுவையை இழந்த மென்மையான மனிதன் ஒருவனின் இறுதி நாளை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறது கதை. தன் மரணத்தை நோக்கி அவன் செல்ல செல்ல, வாழ்க்கையானது அதன் ரகசிய ருசியை அவனிற்கு புகட்ட ஆரம்பிப்பதை மேகம் போன்ற மென்மையுடன் காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் உரையாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. அதே போல 1960களை இவ்வளவு அழகுடனும், மோஸ்தருடனும் ரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தியிருப்பதை இதுவரையில் நான் திரையில் கண்டதில்லை. ஒவ்வொரு காட்சியும், அதில் வரும் ஒவ்வொரு பொருளும் தன் அழகை பூரணமாக வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட். இக்காட்சிகளுடன் ஒட்டிக் கொள்ளும் இனிமையான திரை இசையானது மனதை அனுமதியின்றிக் கொள்ளை கொள்கிறது.
ஜார்ஜ் பாத்திரத்தில் ஒன்றியிருக்கும் நடிகர் Colin Firth க்கு இயக்குனர் டாம் ஃபோர்ட் படத்தில் வழங்கியிருக்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. படத்தில் தனித்து தெரிகிறார் காலின் ஃபேர்த். மென்மையான குணம் கொண்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் பாத்திரத்தில் பாந்தமாக நடித்துச் செல்கிறார் அவர். அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படத்தில் அவரின் தோற்றத்தையே அசர வைக்கும் ஆடைகளுடன் படு ஸ்டைலாக காட்டியிருக்கிறார்கள். நான் பார்த்து ரசித்த காலின் ஃபேர்த்தின் பாத்திரங்களில் ஜார்ஜ் பாத்திரம் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. அவரது சிகையலங்காரமும், அழகான மூக்குக் கண்ணாடி வழி அவர் வீசும் மென்மையான பார்வையும் வசீகரிக்கிறது.
காலின் ஃபேர்த்தும் அவர் காதலனும் தோன்றும் ப்ளாஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. சார்லொட் பாத்திரத்தில் தோன்றும் ஜூலியான் மூர் சிறிது நேரம் காட்சிகளில் தோன்றினாலும் மனதைக் கவர்கிறார். கதை நடந்த காலத்தில் பரபரப்பாகவிருந்த கியூபா ஏவுகணை விவகாரம் மனித மனங்களில் அரசு இயந்திரம் எவ்வாறாக பயத்தை விதைத்து அதன் வழி சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை வளர்க்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
மிகச் சிறப்பான ஒளிப்பதிவுடன், 1960களின் உணர்வுகளை ரசிகனின் மனதில் பதிக்கும் வண்ணங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தின் அழகே, திரைப்படம் தர வேண்டிய உணர்வுகளிலிருந்து பார்வையாளனை சற்று விலகிச் செல்லவும் வைத்து விடுகிறது. காட்சியில் விரியும் அழகின் செறிவு அந்த தருணத்தில் பார்வையாளனைக் கட்டிப் போட்டாலும், படைப்பு உருவாக்கும் உணர்வுகள் மனதில் ஆழமாக இறங்குவதற்கு அதுவே தடையாகியும் விடுகிறது. இருப்பினும் டாம் ஃபோர்ட்டின் முதல் முயற்சி, மென் உணர்வுகளை உள்ளடக்கிய நல்லதொரு படைப்பாகவே அமைகிறது. [***]
ட்ரெயிலர்
