Showing posts with label 6174. Show all posts
Showing posts with label 6174. Show all posts

Saturday, January 18, 2014

6174

பூமியின் மேலே இரு விண்கற்கள் புவிநிலை வட்டப்பாதையின் இரு குறித்த புள்ளிகளில் நிலைபெற்று புவியை வலம்வர ஆரம்பிக்க... வடகொரிய மற்றும் ரஷ்ய போர்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மூன்றாம் உலகப்போரிற்கான சாத்தியம் ஒன்றினை உருவாக்க நகர... தொன்மம் ஒன்றின் பரமரகசியமானது உலகிற்கு தன் முகம் காட்டும் ஆயத்தங்களில் இறங்குகிறது... மனித குலத்தின் அழிவு என்பதே முடிவு என இயங்கும் இச்சக்திகளின் ஆவேச ஆட்டத்திலிருந்து மனிதகுலத்தை காத்திட யாரால்தான் முடியும்? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என பாசத்துடன் முன்வந்து ஒரு நிபுணர் குழுவை தன் 6174 நாவலில் களமிறக்கி இருக்கிறார் நாவலாசிரியர் சுதாகர். அறிந்ததை கொண்டு அறியாததை அறியும் தேடலில், வாழ்ந்திருந்த நம்பிக்கைகள் இறக்க புதிய நம்பிக்கைகள் தொன்மங்களுடன் உயிர்துளிர்க்கும் புனைவில்; வரலாறு, தொன்மம், அறிவியல், சர்வதேச ராஜதந்திர அரசியல், உளவுத்துறைகள், ரகசியக்குழுக்கள், அங்காங்கே தூவப்பட்டிருக்கும் நுட்பமான நகைச்சுவை என இப்பட்டியலை இன்னம் நீளவைக்கும் அளவிற்கு  தன் படைப்பை பல்லம்சங்களால் நிரப்பியிருக்கிறார் சுதாகர்.

நாவலின் ஆரம்பத்தில் கதையானது அழகான சிட்டுக்கள் மத்தியில் தனியாக விடப்பட்ட ஒரு அப்பாவி கணவனின் விழிகளைப்போல காலம்விட்டு காலம் தாவுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பாயும் கதையின் காலம், இடம், வேளை என்பவற்றை ஒரு கனமாக எடுத்திடாது கதையோட்டத்துடன் கலந்துவிடுவது இப்பகுதியில் வாசகர்களிற்கு நலமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கதையின் ஓட்டத்தில் தான் உருவாக்கிய காலப்பாய்ச்சல்கள் எல்லாவற்றிற்குமான காரணங்களை கதையில் விளக்கிவிடுகிறார் சுதாகர். இந்தக் காலப்பாய்ச்சல்களினூடு கதையின் பிரதான பாத்திரங்கள் சென்னையில் ஒன்று கூட கதையும் பாய்ச்சல்களிலிருந்து ஓய்வுபெற்று முன்னோக்கி சீராக நகர ஆரம்பிக்கிறது.

6174ன் ஆரம்ப பக்கங்களில் சுதாகரின் கதைசொல்லும் பாணி அல்லது அவரின் புனைவு மொழியுடன் ஒன்றிட எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது அந்தக் கதைசொல்லும் பாணியுடன் என்னால் உடனடியாக ஒன்றிட முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு 150 பக்கங்களின் பின்பாக அவருடைய நடையுடன் என்னால் ஒன்றிட முடிந்தது. இடறல்கள் ஏதும் இல்லாமல் கதையோட்டத்துடன் கைகோர்த்திட முடிந்தது. சுதாகரின் கதைமொழி இளமையாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அதனுடன் என்னை இணைத்துக் கொள்ள நானும் என்னை இளமையாக்கிகொள்ள வேண்டியிருந்தது. இளமைகள் ஈடாகிவிட்டநிலையில் ஓட்டத்தில் தடையேதுமிருக்கவில்லை.

சிதம்பரம் முதல் சிதம்பலம்வரை, மயன் முதல் மாயன்வரை உள்ள தொடர்புகளையும் மேலும் இதுபோன்ற பிற தகவல்களையும் படிப்படியாக வாசகன் முன் பரிமாற ஆரம்பிக்கிறார் சுதாகர். அனகொண்டா எல்லாம் எங்கள் ஊர் சிட்டிசன் என்கிறார். எதிர்த்து ஏதும் மனதில் கேள்வி எழுந்தால் அகராதியை ஆதாரமாக கொண்டு மிரட்டுகிறார். இப்படியாக அவர் அள்ளிப் போடும் தகவல் கோலங்கள் உருவாக்கும் சுவாரஸ்யமானது கதையை வேகமாக நகர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. தேடி எடுத்த தகவல்களை எல்லாம் சீரான பொருத்தத்துடன் தக்க இடங்களில் இடம்பெறசெய்த சுதாகர் பாராட்டிற்குரியவர்.

கதையானது 150 பக்கங்களை தாண்டி கருஞ்சுழி எண் குறித்த விளக்கத்தை எட்டியபின்பாக நாவல் தன் வேகத்தை அதிகரித்து விடுகிறது. மிங்குனிற்கு செல்லும்வரை நாவலின் பக்கங்களை வேகமாக புரட்டுவது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. விறுவிறுப்பாக, எளிதான மொழியில், புரியும்விதமாக இப்படியான ஒரு கதையை தமிழில் சொல்ல முடியும் என சுதாகர் அடித்து சொல்லும் பகுதியாக நாவலின் மத்திய பகுதி அமைகிறது. தமிழ் நாவல்களில் சாதாரணமாக கையாளப்படும் அறிவியல் தகவல்களின் ஆழத்தை இன்னும் ஆழமாக்கிவிட்டு அதை இலகுவாக புரிந்திட செய்வதில் சுதாகர் சிறப்பாக செயற்பட்டு இருக்கிறார். ஆனால் மிங்குனை அடைந்தபின் கதை பகோடாவையும், குளத்தையும், பாதாளத்தையும் சற்று அதிகமாக சுற்றி சுற்றி வருகிறதோ எனும் ஒரு தொய்வையும் நாவல் ஏற்படுத்தியது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

மூலக்கூறுகளின் பொருண்மைகளை தரவாக்கி அதன் வழியாக தனிநபரை இனம்காணல், செயற்கை குரல் ஒன்றை புத்திசாலித்தனமாக உருவாக்கல் என சுதாகர் புதிய நுட்பங்களால் திகிலூட்டுகிறார். தோலிற்கு கீழே பதிக்கும் நுண்கருவிகள் பற்றி பேசும் சுதாகர் தமிழ் செய்யுள்களாலும், பாடல்களாலும், வடிவக்கணிதத்தாலும் புதிர்களையும் போடுகிறார். போட்ட புதிர்களை என்னைப்போன்ற வாசகர்களிற்காக அவிழ்க்கவும் செய்கிறார். அவர் செய்யுள் புதிர்களை அவிழ்க்கும்போது என் தமிழ் புலமை குறித்த எண்ணமும் அவிழ்ந்து கீழே வீழ்ந்து விடுகிறது. இத்தரைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது மிக எளிமையான சொற்களிலான செய்யுள்களே எனும்போது தமிழை தவறவிட்ட ஏக்கம் மெதுவாக மனதில் வடிவக்கணித கோலம் போடுகிறது. அவர் நாவல் தமிழை போற்றுகிறது என்றால் அது மிகையல்ல.

சுதாகர் தன் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட தகவல்களை விளக்குவதில் உள்ள எளிமை அவரின் பலம் என்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு தகவலை தந்துவிட்டு அதை நீங்களே தேடிப்பார்த்து கொள்ளுங்கள் என வீட்டுவேலை தரும் கறாரான ஆசிரியபண்பும் அவரிடம் இருக்கிறது. 1908 ல் சைபீரியாவின் சுங்குஸ்காவில் என்ன நடந்தது என்பதை தேடி அறிந்தால் மட்டுமே சுதாகர் தன் நாவலில் முன்வைக்கும் பேரழிவு குறித்த ஒரு மனச்சித்திரத்தை வாசகன் தன்னுள் உருவாக்கி கொண்டு அந்த பரபரப்புடன் நாவலை தொடர முடியும். இவ்வகையில் நாவலாசிரியனும், வாசகனும் இணைந்து களப்பணியாற்றக்கூடிய பண்பையும் இந்நாவல் கொண்டிருக்கிறது எனலாம்.

சீலகந்தா மீன்கள் பற்றிய வரலாற்றை கதையில் சுவையாக தருகிறார் சுதாகர். ஏன் அந்த மீன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான விளக்கங்களுடனும் கூடவே நேஷனல் ஜியோகிராபிக் அம்மீன் குறித்து நிகழ்த்திய மிக ரகசியமான ஆய்வு ஒன்றைப்பற்றிய  விபரங்களுடனும். அவர் வழங்கியவற்றை படித்தபின் யார் இந்த சீலகந்தா, அவர் எப்படியிருப்பார் என அறிந்துகொள்ளாவிடில் என் தலைக்குள் புகுந்த வண்டு வெளியேறாது என்பது உறுதியானது. கூகிள் இமேஜை தட்டி அதில் வந்த போட்டோவை பார்த்தால்.. சீலகந்தா... நம்புங்கள் காஜல் அகர்வால் இடையை எவ்வளவு கரிசனையுடன் ஒரு ரசிகர் வர்ணிப்பாரோ அப்படியாக சீலகந்தாவை கதையில் வர்ணித்திருக்கிறார் சுதாகர். இதற்காக சீலகந்தா இனமே அவரிற்கு கடமைப்பட்டு இருக்கிறது.

இவ்வாறாக சற்று பெரிதான எதிர்பார்ப்பை வாசகன் மத்தியில் உருவாக்கும் நாவல் அதன் முழுமையானநிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறதா எனக் கேட்டால் எனது பதில்; முழுமையாக அந்த எதிர்பார்ப்பு நாவலில் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான். அனந்த், ஜானகி இருவரும் அன்னியர்களாக இருந்தாலும் கூட கதையோட்டத்தில் பெரிதான தாக்கங்கள் உருவாகி இருக்குமா என்பது ஒரு கேள்வி. லெமூரியர்கள் புரிந்து கொள்ள எடுக்கும் நேரம் குறித்த நுட்பமான நகைச்சுவை.. ஏன் இவள் லெமூரியாவை கட்டி அழுகிறாள், கிழம் ராவுகிறது போன்றவற்றில் இல்லை. எனக்கு சுதாகரின் நுட்பமான நகைச்சுவைதான் இணக்கமானதாக இருக்கிறது. ஐராவதி நதி இன்னம் முழுமையாக ஆய்வுக்குட்படாத நதி அதன் ஆழத்தில் மர்மமான ஜீவன்கள் வாழ வாய்ப்புண்டு எனும் சுதாகரின் வரிகள் கதையின் உச்சக்கட்டத்தில் தரும் ஆச்சர்யம் கதையை சிறிது பலவீனமாக்குகிறது. தொன்மங்கள், ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பெளதிக வகுப்பறை, டாம் க்ளான்ஸி என விரியும் அந்த கூட்டு உச்சக்கட்டத்தில் நாவல் என்னை விட்டு சற்று விலகி சென்றது என்பதுதான் உண்மை. இதை நான் நேர்மையாக சொல்வதே தமிழ் வாசக பரப்பில் இவ்வளவு துணிச்சலுடன் இப்படியான ஒரு நாவலை தயங்காது முன் வைத்த சுதாகரிற்கு நான் தரும் உண்மையான பாராட்டும் உற்சாகமுமாக இருக்ககூடும். இதே சமயத்தில் சகட்டு மேனிக்கு மேற்கத்தைய எழுத்துக்களுடன் சுதாகரின் எழுத்தை ஒப்பிட்டு அவர் படைப்பின் மீது நியாயமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் பதிவுகளையும் ஒரு வாசகர் அவதானமாக கையாள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பின்பாக உள்ள ஆட்பலமோ, பணப்பலமோ, விளம்பரபலமோ சுதாகரிடம் இல்லை. தன் ஓய்வு நேரத்தில் தன் படைப்புக்கான தேடல்களை செய்து தன் நாவலை அவர் சிறுக சிறுக உருவாக்கி இருப்பார் என்றே நம்புகிறேன். அந்த உழைப்பும் அர்ப்பணமும் அவர் நாவலில் நான் கண்ட சில குறைகளை தாண்டியும் மதிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன். சுதாகரின் உழைப்பிற்குரிய வரவேற்பும், உற்சாசகமும், பாராட்டுமே அவரை மேலும் செய்யுள்களால் புதிர்போட வைக்கும். இவ்வகையான நாவல் ஒரு நல்ல ஆரம்பம். ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார் சுதாகர், அது பெருந்தீயாக மாறி டான் ப்ரவுன்களை எரிக்கட்டும்.