தமிழ் நாவல் வகைகளில் சரித்திரப் புனைகதைகள், என் முதிரா இளம் பருவத்தில் நான் விரும்பிப் படித்தவைகளாகும். அவற்றில் இருந்த சாகசங்களும், காதலும், சிருங்காரமும் என்னை அவ்வகை நாவல்களுடன் மிகவும் நெருக்கமாக்கின. வரலாறு என்பது அந்த வயதில் முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. இன்றைய கருத்துக்கள்படி அந்நாவல்களில் வரலாறு அதிகம் இருந்ததில்லை என்பதாகிறது.
அன்றைய வாசக ரசனைக்கு அக்கதைகளில் கூறப்பட்ட வரலாறு போதுமானதாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அளவே போதும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் நான் இன்று எந்த ஒரு கனமான நாவலையும் தயக்கமின்றி அணுகுவதற்கு, அந்த சரித்திர புனைகதைகளுடனான என் நெருக்கமே எனக்கு உதவியாக இருக்கிறது.
சாண்டில்யனையும், கல்கியையும் விரும்பிப் படித்த எனக்கு விக்கிரமனையும், கோவி.மணிசேகரனையும் நெருங்க முடியவில்லை. இன்றுவரை இதற்கான காரணம் என்ன என்பது என்னால் கண்டறியப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அன்றைய சரித்திரப் புனைவுகளில் நா. பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் சற்று வேறுபட்டது என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன். மணிபல்லவத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்பதை அறியும் என் ஆவல் அண்மையில் நிறைவேறியது.
மணிபல்லவம் நாவலைப் படித்து முடித்தபோது, அந்நாவலிலும் இன்று தமிழ் மசாலா சினிமாவின் உச்ச நாயகர்களிற்காக உருவாக்கப்படும் கதை ஒன்றிலும் இருக்ககூடிய ஒற்றுமைகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும். சோழர் ஆட்சியில், சித்திரை மாதத்தில், இந்திரவிழா விமர்சையாக கொண்டாடப்படும் பூம்புகார் பட்டிணத்தில் இடம்பெறும் மல்யுத்தப் போட்டி ஒன்றிலேயே கதையின் நாயகனான இளங்குமரன் வாசகர்களுடன் அறிமுகமாகிறான்.
இளங்குமரன் அழகன், செந்நிறமேனிக்கு சொந்தக்காரன், மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் இயல்பு அவனுடன் கூடவே பிறந்திருக்கிறது என ஒரு கதாநாயகனிற்குரிய லட்சணங்களை தவறாமல் இளங்குமரனிற்கு அளித்திருக்கிறார் நா.பா. பூம்புகாரில் இருக்கும் வீரர்களை அடித்து வீழ்த்தி, அந்நகரின் ஆண்மையை பரிகாசித்து சவால்விடும் யவன மல்லன் ஒருவனை நாவலின் ஆரம்ப பக்கங்களில் புரட்டி எடுக்கிறான் இளங்குமரன். என்ன ஆச்சர்யம்! அப்போட்டியை பல்லக்கு ஒன்றினுள் இருந்தவாறே பார்த்து வியக்கும் ஒரு அழகுப் பைங்கிளி, இளங்குமரன் வீரத்திலும், அழகிலும் தன் இதயத்தை பறிகொடுத்து விடுகிறாள். அந்த அழகியின் பெயர் சுரமஞ்சரி, செல்வம் கொழிக்கும் குடும்பத்தை சேர்ந்தவள் அவள். தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் விசிலடியும், கனவுப் பாடலொன்றில் அருமையான குலுக்கல்களும் இடம்பெறும். அவை கதையில் இல்லை என்பது குறையாக தோன்றவில்லை.
அது மட்டுமா! அழகி சுரமஞ்சரியின் அன்பை தூக்கி எறிகிறான் நாயகன் இளங்குமரன். செல்வமும், அழகும் அவனைப் பொறுத்தவரையிம் மதிப்பில்லாதவை என்பதை வாசகன் அறிந்து கொள்கிறான். பெற்றோர்கள் இல்லாத அனாதையாக அருட்செல்வ முனிவரால் சிறுவயது முதலே வளர்க்கப்பட்டு, நீலநாக மறவர் எனும் ஒப்பற்ற வீரரின் படைச்சாலையில் யுத்தப் பயிற்சிகளில் தேர்ந்த நாயகன் இளங்குமரனை கதையில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இளங்குமரனின் அழகு, வீரம், குணாதிசயங்கள் என ஏதாவது ஒன்றை எந்த ஒரு பாத்திரமாவது உயர்த்திப் பேசியபடியே இருக்கிறது. இளங்குமரனை ஒழித்துக் கட்ட விரும்பும் நகைவேழம்பர் மற்றும் பூம்புகாரின் எட்டிப் பட்டம் பெற்ற வணிகரான பெருநிதிச் செல்வர் ஆகிய இருவரையும் இந்த புகழும்- ஜால்ரா- கூட்டத்திலிருந்து பிரித்து அடையாளம் காணமுடிகிறது.
இந்நிலையில் தமிழ் மசாலா சினிமாவின் தீவிர ரசிகர்கள், இளங்குமரனை ஒழித்துக் கட்ட துடிக்கும் வணிகரான பெருநிதிச்செல்வரின் மகளே இளங்குமரன் அன்பிற்காக ஏங்கும் சுரமஞ்சரி என்பதை நான் எழுதாமலேயே ஊகித்திருப்பார்கள். சரித்திர புனைகதைகளின் தவறவிடக்கூடாத வழக்கம்போன்று செல்வந்த அழகி சுரமஞ்சரி மட்டுமல்ல, இளங்குமரனின் பால்யகால நண்பனான கதக்கண்ணனின் தங்கையான முல்லைக்கும் கூட இளங்குமரன் மேல் அன்பு [காதல்] இருக்கிறது. ஆனால் முல்லை அழகில் சுரமஞ்சரியை விட ஒரு படி குறைவானவளாகவும், செல்வத்தில் அதிக படிகள் குறைவானாவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஆகவே இளங்குமரனின் மனம் எந்தப் பெண் பக்கம் சாயும் என்பதும் ஒரு மர்மமாக!! கதை நெடுகிலும் நீண்டு[ இழுத்துக் கொண்டு] செல்கிறது.
சுரமஞ்சரி, முல்லை ஆகிய இருபெண்களும் இளங்குமரனிற்காக ஏங்குகிறார்கள், கண்ணீர் சிந்துகிறார்கள், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுகிறார்கள், சரித்திர நாவல்களில் இடம்பெறும் பெண்களின் குணங்களை அவர்கள் கடந்து சென்றார்களில்லை. முடிவில் இவ்விரு பெண்களும் இளங்குமரனிற்காக தியாகம் செய்யவும் தயங்கினார்களில்லை. தமிழ் சமுதாயம் பார்த்து பெருமை கொள்ளும் வண்ணமே இந்த இரு நாயகிகளும் நா.பாவால் இழைத்து இழைத்து செதுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் முல்லைக்கு வழங்கப்பட்டிருக்கும் முடிவு என் மனதையே நெகிழ்த்தி விட்டதெனில், கதை தொடராக கல்கி வார இதழில் வெளிவந்தபோது முல்லைக்காக வாசக, வாசகிகள் கண்ணீர் வடித்திருப்பார்கள் என்பது உறுதி. விசாகை போன்ற பெண் துறவிகளை இவ்வகையான கதைகளிலேயே இன்று காணமுடியும் போலும்.
தந்தை, தாய் யாரென்பதை அறியாது, வம்புகளை வீணே வாங்கி வரும் இளைஞனான இளங்குமரனை, பூம்புகாரின் பெரும் வணிகரான பெருநிதிச்செல்வர் ஏன் அழிக்க முற்படவேண்டும்? இதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக வாசகர்கள் இளங்குமரனோடு மணிபல்லவத் தீவிற்கு பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக சண்டைகளில் வீரனாக இருந்த இளங்குமரன், ஞானமே உண்மையான வீரம் என்பதை கண்டுணர்ந்து சான்றோனாக மாறுவதை வாசகர்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது.
விறுவிறுப்பாக ஆரம்பமாகிய நாவலில், மூன்றாம் பருவமான வெற்றிக்கொடி, நாங்கூர் அடிகள் எனும் ஞானச் செல்வரிடம் இரு வருடங்கள் தங்கியிருந்து அறிவு எனும் ஒளியை இளங்குமரன் தன்னுள் ஏற்றிக் கொண்டபின் ஆரம்பமாகிறது. சமயவாதங்கள், தத்துவ வாதங்கள் செறிந்த ஒரு பகுதியாக இது இருக்கிறது. இன்றைய வாசிப்பில் வாசகனை சற்று வியப்பிலாழ்த்துவதாகவும், விறுவிறுப்பான கதை சொல்லலிருந்து வேகம் குறைந்த நிலைக்கு கதையை எடுத்து செல்லவதாகவும் இப்பகுதி அமைந்திருக்கிறது. நிச்சயமாக இப்பருவம் அக்கால வாசகர்கள் மத்தியில் உயர்ந்த வரவேற்பை பெற்றிருக்கும் என எண்ணுகிறேன். இப்பகுதியை கடப்பதில் எனக்கு சிரமமிருந்தது என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். வாயைத் திறந்தாலே தத்துவமாக கொட்டும் இளங்குமரனை இன்றைய ஒரு தளபதியுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பினாலும், தத்துவமும், தருக்கமும் குறுக்கே நிற்கின்றன.
தான் படித்த இலக்கியங்கள் வழி நா.பா அவர்கள் தன் நாவலின் வரிகளில் சிருஷ்டித்திருக்கும் பூம்புகாரானது ஒரு பரபரப்பான பல்பொருள் கண்காட்சியை பார்த்தது போன்ற உணர்வையே இன்று வழங்கக்கூடியதாகவிருக்கிறது. பூம்புகாரின் வனப்புடன் அதன் மங்கிய பக்கங்களையும் மெலிதாக கோடிட்டுக் காட்டிய நா.பா, அந்த மங்கிய பக்கங்களை பிரகாசம் கொண்டதாக மாற்ற துடித்திட்ட கதையின் நாயகனான இளங்குமரனை, இறுதியில் சாதாரண ஒரு குடும்பஸ்தனாக அதே பூம்புகார் நகர தெருக்களில் வாசகனிடமிருந்து பிரியாவிடை பெறச்செய்வதென்பது வேதனையான ஒரு நிகழ்வே.
கதையில் இல்லாமல் போயிருக்கும் சிருங்காரம், நா.பாவிற்கும் அவ்வகையான வருணனைகளிற்கும் வெகுதூரம் என்பதற்கு சான்று பகர்கிறது. ஆனால் மிகவும் நீண்ட எண்ண உரையாடல்கள் வாசிப்பின் ஒரு எல்லைக்குமேல் அயர்ச்சியை உருவாக்குகின்றன. இருப்பினும் வாசகனிற்கு நல்ல தகவல்களை சொல்ல வேண்டும் எனும் நா.பாவின் ஆர்வத்திற்கு முன்பாக அவர் மீது மதிப்பை மட்டுமே என்னால் உருவாக்கி கொள்ள முடிகிறது [ நான் படித்த அவரின் படைப்பு மணிபல்லவம் மட்டுமே ]. நாவலின் பல பகுதிகளிலும் அவர் சுவையான , அரிய தகவல்களை தந்து செல்கிறார். நூழிலாட்டு, வல்வில்வேட்டம், போன்ற சொற்கள் எதை உணர்த்துகின்றன என்பதை அறிதல் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. வில்லாதி வில்லன் எனும் சொற்றொடர் மூலம் இன்று நாம் உணர்ந்து கொள்ளும் அர்த்தமும் அச்சொற்றொடரிற்கு நா.பா நாவலில் தந்திருக்கும் அர்த்தத்தையும் ஒப்பிடும்போது எனக்கு என்னவோ செய்தது.
நாவலின் மூன்றாம் பாகத்தை தாண்டிய பின்பாக, அத்தியாயங்கள் தேவையற்று நீண்டு செல்வதான ஒரு உணர்வு தோன்றிவிடுகிறது. மன்னர்களையும், ராணிகளையும், இளவரசிகளையும், யுத்தங்களையும் பேசிடாது பூம்புகார் பட்டிணத்தில் வாழ்ந்திருந்த ஒரு சாதரண இளைஞனின் வாழ்க்கை கதையை தன் கற்பனையின் மூலம் புனைவாக்கியிருப்பதும், அக்கதையில் இடம்பெறும் சமய, தத்துவ வாதங்கள் மற்றும் நல்ல சுவையான தகவல்கள் என்பனவுமே வழமையான சரித்திரப் புனைவுகளிலிருந்து மணிபல்லவத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. மணிபல்லவம் வாரத் தொடராக வெளிவந்த காலத்தில் மகத்தான வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்றுகூட அதற்கான ரசிகர்களை கொண்டிருந்தாலும் இன்றைய வாசிப்பில் மணிபல்லவம் பெரிதான பரவசங்கள் எதையும் வழங்கிவிடவில்லை என்பதை பூம்புகாரின் வன்னிமன்ற காபலிகையான பைரவி என் கழுத்தை நெரித்தாலும் தயங்கிடாமல் கூறிடுவேன்.
