வாழ்க்கை ஒரு கமெரா, அதன் முன்பாக நாமெல்லாம் நடிகர்கள்- ஜுவாமி குத்தானந்தா
மக்கு லேன்! இந்தப் பெயரைக் கேட்டாலே தமிழ் கூறும் நல்லுலகைச் சேர்ந்த காமிக்ஸ் ரசிகர்களின் இரக்கம் அலையடிக்கும் இதயங்களிலெல்லாம் பாலைவனத்தில் தனியே அலையும் ஒரு பூனையின் கேவலான மியாவ் சத்தம் மெதுவாக எழுந்து மறையும்.
சொத்தைப் படலம்! எனும் பிரபல காமிக்ஸ் தொடரின் நாயகனே மக்கு லேன். கடற்கரையில் ஓவராகப் பீரடித்து விட்டு மயங்கி கிடந்த மக்கு லேனிற்கு, தன் முற்கால நினைவுகள் மறந்து போய் விடுகின்றன. நாய் ஒன்றை நெடுங்காலமாக வளர்க்க விரும்பும் முதிய தம்பதியினர் நாய்க்கு பதிலாக மக்கு லேனைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள்.
மக்கு லேனின் இடது பிருஷ்டத்தில் III என்றும் வலது பிருஷ்டத்தில் XXX என்றும் பச்சைகள் குத்தப்பட்டிருக்கிறது. ஒரு மாலை பீரடிப்பதற்காக மக்கு லேன் கடற்கரைக்கு சென்று விடுகிறான். கடலின் அலைகளாவது தன் நினைவுகளைத் தன்னிடம் எடுத்து வராதா என்றவாறே பீரில் மூழ்குகிறான் மக்கு லேன்.
ஃபுல்லாக ஏற்றியபின் முதிய தம்பதியினரின் வீட்டிற்கு பிரியாணிப் பார்சல்களுடன் திரும்பும் மக்கு லேன், வீட்டிலிருந்த தன் உடமைகளுடன் முதிய தம்பதி கம்பி நீட்டி விட்டிருப்பதை, மறுநாள் மதியம் மப்பு தெளிந்து எழும்போது அறிந்து கொள்கிறான். அவர்களைத் தேடி ஆவேசமாக தன் தேடலை ஆரம்பிக்கிறான் ஹீரோ மக்கு லேன். இதுவே சொத்தைப் படலத்தின் சுருங்கிய கதைச் சுருக்கம்!
மக்கு லேன் தன் தேடலின்போது கண்டு கொள்ளும் மர்மங்களும், அவன் நடாத்தும் அதிரடிகளும், கதையில் ஒட்டுத்துணி கூட உடலில் இல்லாது காட்சி தரும் ஓவரேஜ் அம்மிணிகளும் இக்காமிக்ஸ் தொடரை தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் நம்பர்1 காமிக்ஸ் தொடர் ஆக்குவதில் பெரும் பங்கு வகித்தன.
மக்கு லேன், தமிழ் காமிக்ஸ் ரசிகர்களின் சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார், இளைய தளபதி, மருத்துவர்,ஆட்டோக்காரன், பால்காரன், பக்கத்து வீட்டு பையன்[ காலேஜில் படிக்கும்] என எல்லாவும் ஆனான். மக்கு லேனிற்காக ஒரு கோவில் அவன் ரசிகர்களால் உருவாக்கபட்டது.
எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் தமிழ் காமிக்ஸுலகம் மக்கு லேனின் பெயரைக் கேட்டாலே திடுக்கிட்டு விழித்தெழும். வந்திருச்சா, எப்ப வரும், என்ன இந்த தபாவும் வரல்லியா என சோம்பலான மந்திரப் புன்னகையில் தோய்த்த கேள்விகளை அது எழுப்பும். பின்பு மீண்டும் வழமை போலவே தூங்கச் சென்று விடும். மீண்டும் திடுக்கிட்டு விழித்தெழலாம் எனும் நம்பிக்கையுடன்.
மக்கு லேன் ஹீரோவாக அதிரடிக்கும் சொத்தைப்படலம் காமிக்ஸ் தொடரானது, தமிழில் வெளிவரும் ஒரு டஜனிற்கு மேற்பட்ட காமிக்ஸ் இதழ்களிலேயே மிகவும் பிரபலமான தேவாங்கு காமிக்ஸில் வெளியாகியது [தேவாங்கின் படத்தை மட்டும் பார்க்கவும்]. நல்ல ரசனை கொண்ட தேவாங்கு காமிக்ஸின் ஆசிரியர் அத்தொடரை தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்ததையிட்டு இன்றும் ரசிகர்கள் அவரிற்கு நன்றி கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
சொத்தைப் படலம் சூடான வடை போல் விற்றது. உள்ளத்தை உருக்கும் மக்கு லேனின் கதை ரசிகர்களை தாக்கியது, தலைகீழாகத் திருப்பி அடித்துப் போட்டது. என்றும் அவர்கள் மனதில் கூடவேயிருந்தது.
குறிப்பாக தேவாங்கு காமிக்ஸ் சொத்தைப் படலம் கதைக்காக உபயோகித்த விசேட கறுப்பு மை, பல சமயங்களில் கதையின் காட்சிகளை வாசகனே தன் மனக் கண்ணில் ஊகத்தோற்றம் கொள்ள வைக்கும் ஒரு உத்தியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல உதவியது. கதையின் மிக முக்கியமான வில்லியான புளிச்சட்டியின் மார்பகங்களின் அளவுகள் குறித்து இதனால் வாசகர்களிடையே ஒரு பிரளயமே உருவானது. இறுதியாக புளிச்சட்டி ஒரு ஆண் என்பதை தேவாங்கு காமிக்ஸ் ஆசிரியர் அறிவித்து இப்பிரளயத்தை தீர்த்து வைத்தார் என்பது குத்து டைம்ஸ் வாசகர்கள் அறிந்ததே.
சொத்தைப் படலம் தொடரிற்காகவே எக்ஸ்குளுசிவாக வரவழைக்கப்பட்ட சாணித்தாள்களில் அச்சடிக்கப்பட்ட கதை, ரசிகர்களின் கண்களிற்கும், ஆன்மாவிற்கும், மூக்கிற்கும் மறக்கவே முடியாத விருந்தானது. அடுத்த இதழ் எப்போது வரும் என ரசிகர்கள் தங்கள் விரல் நகங்களை கடிக்க ஆரம்பித்தார்கள். நகம் வெட்டியின் விற்பனை இதனால் கணிசமாக கீழே வந்தது. பிரபல நடிகை த்ரிஸ், குளியல் அறையில் ரகசியமாக சொத்தைப் படலம் கதையைப் படித்துக் கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பு உண்டானது.
இலைகள் உதிர்ந்து காற்றில் பறந்து சென்றபின்பாக வரும் குளிர்காலத்தில் கரடிகள் நீண்ட உறக்கத்திற்கு செல்வதுபோல் தேவாங்கு காமிக்ஸ் காலத்திற்கு காலம் ஒரு சின்ன பிரேக் எடுப்பதுண்டு. தொடர்ச்சியாக நான்கு அல்லது ஐந்து மாதங்களிற்குள் குறைந்தது அறுபது காமிக்ஸ் இதழ்களை வெளியிட்டு சாதனை படைக்கும் தேவாங்கு, படீரென எதுவும் சொல்லாமல் உறங்கிப் போவதுண்டு.
தேவாங்கு காமிக்ஸின் வரலாறு அறிந்தவர்கள் அது மீண்டும் விழித்தெழும் என்று நன்கு தெரிந்தவர்களே. தேவாங்கின் இந்த தூக்கங்களை அறிந்திருந்தும் அதன் ரசிகர்கள் தேவாங்கின் மீது வைத்திருக்கும் அன்பும், மதிப்பும், ஈடுபாடும் என்றும் குறைந்ததில்லை. ஆனால் தேவாங்கோ ரசிகர்களின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளாது உறக்கமும், விழிப்புமாக தன் ரூட்டில் ஜாலியாகச் சென்று கொண்டேயிருந்தது.
இவ்வாறாக தேவாங்கு விழிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில்தான் அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியது. சொத்தைப் படலம் – அம்போ ஸ்பெஷல் – முன்பதிவிற்கு மட்டும் – கலெக்டர்ஸ் எடிசன் – முன் பணம் திருப்பித் தரப்படமாட்டாது! ஒரு சிறிய தொகை விலையுடன், ஏராளமான பக்கங்களுடன், உலகிலேயே முதல் முதலாக முழுத்தொகுப்பாக சொத்தைப் படலத்தை வெளியிடப் போவதாக விளம்பரம் செய்தார் தேவாங்கு காமிக்ஸின் ஆசிரியர்.
ஏறக்குறைய பாதிக் கதையில் தொங்கிக் கொண்டிருந்த சொத்தைப் படல ரசிகர்கள், அம்போ ஸ்பெஷலை முன்பதிவு செய்ய ஆரம்பித்தார்கள். முன் பதிவு செய்தவர்களின் திரு நாமங்கள் தேவாங்கு காமிக்ஸின் பக்கங்களில் இடம் பிடித்து அந்த ரசிகர்களை நோபல் பரிசு வென்ற உணர்ச்சியைப் பெற வைத்தன. ஆனால் அவர்களின் அந்த உணர்ச்சி எவ்விதமாக அவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகப் போகிறது என்பதை பாவம் அந்த அப்பாவி ரசிகர்கள் அறிந்திருக்கவில்லை[ ரொம்ப நல்லவங்க, எத்தனை வருசமானாலும் வெய்ட் பண்ணுவாங்க!]
அம்போ ஸ்பெஷலை அறிவித்து வருடங்கள் உருண்டோடின. அதற்காக காத்திருந்த ரசிகர்கள், பள்ளி விட்டு, கல்லூரி சென்று, வேலை கிடைத்து திருமணமாகி, அவர்களின் குழந்தைகள் வேட்டைக்காரன் சூப்பர் படம்பா என அவர்களை உசுப்பேற்றியபோதும் கூட அம்போ ஸ்பெஷல் வருவதாக இல்லை. ஆனால் அது வரும் என்று தேவாங்கின் இதழ்களில் விளம்பரம் வந்தவண்ணமேயிருந்தது.
உணர்ச்சிவசப்பட்ட சில தீவிரமான ரசிகர்களின் மடல்களை அடுத்து தேவாங்கின் ஆசிரியர் 99999 முன்பதிவுகள் கிடைத்தாலே அம்போவை வெளியிட முடியும் என அறிவித்தார். இதுவரையில் 99998 முன்பதிவுகள் மட்டுமே கிடைத்திருப்பதையும் அவர் வேதனையுடன் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். விளம்பரங்கள் செய்து ரசிகர்களைப் பிடிப்பதில் அவரிற்கு அதிக இஷ்டமில்லை என்பதால் சொத்தைப் படலத்தின் தீவிர ரசிகர்கள் சிலர் தாமே முன் வந்து அதற்கான விளம்பரங்களை செய்ய ஆரம்பித்தார்கள்.
தாங்கள் வசிக்கும் தெருவெங்கிலும் அம்போ ஸ்பெஷலிற்கான விளம்பரங்களை அந்த ரசிகர்கள் இட்டார்கள். இன்றும் கூட அந்த அமைதியான தென்றல் முத்தமிடும் தெருக்களிற்கு நீங்கள் சென்றால், இன்று ஒட்டிய போஸ்டரின் பசுமையுடன் அந்த விளம்பரங்கள் மின்னிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.[ இந்த இயக்கத்தை தொடக்கி வைத்த ரசிகர், காத்திருந்தது போதும் என்று வேலை தேடச் சென்று விட்டதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் அறிவிக்கின்றன]
சொத்தைப் படலத்தின் அருமை பெருமைகளைக் குறித்து ரசிகர் கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. இதில் ஒரு ரசிகர் அல்பானிய மொழியில் வெளியான சொத்தைப் படலத்தின் கதைச் சுருக்கங்களை கதாகலாட்சேபமாக நடாத்தினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சொத்தைப் படலத்தை வாங்கி உங்கள் எதிரிகளிற்கு வழங்குங்கள், திருமணவிழாவில் சொத்தைப்படலத்தை பரிசளியுங்கள், பிறந்த நாள் விழாவா பீரடிக்காதீர்கள் சொத்தைப் படலம் ட்ரீட் வழங்குங்கள், புது வருடத் தீர்மானமா, 25 சொத்தைப் படலத்திற்கு ஆர்டர் தாருங்கள் பின்பு இமய மலைக்குச் செல்லுங்கள் என ரசிகர்கள் புயலானார்கள். ஆனால் இதோ, இதோ வருகிறேன் என்ற சிட்டு, அந்த நைட் வராமல் விட்டதைப்போல் இதுவரை அம்போ வரவேயில்லை.
அண்மையில் நிகழ்ந்தேறிய தலையணைக் கண்காட்சி சமயம் அம்போ ஸ்பெஷல், சர்ப்ரைஸ் சாக்கலெட்டாக வெளிவரும் என பல ரசிகர்கள் நம்பியிருந்தார்கள் அதனால் அவர்கள் தூக்கம் போனதுதான் சர்ப்ரைஸ் சாக்கலெட்டாக எஞ்சி இருந்தது. இறுதியாக முட்டாள்கள் தின அல்லது உழைப்பாளிகள் தின மாதங்களிற்குள் அம்போ வெளிவரும் என்கிறார்கள் காமிக்ஸ் துறையில் பழத்தை அதன் கொட்டையுடனேயே சாப்பிடும் நிபுணர்கள்.
அம்போ வெளிவருவதை மையமாகக் கொண்டு சில தீய சக்திகள் பந்தய சூதாட்டங்களில் இறங்கியிருப்பதும் இப்போது புலானய்வுப் பத்திரிகையான பூந்தொட்டி மூலம் தெரிய வந்திருக்கிறது. வெளிவரும் என பெட் கட்டியவர்கள் வயிற்றில் புளிச் சுனாமி இப்போதே உருவாக ஆரம்பித்து விட்டது என்கிறது ஒரு குருவி. புத்திசாலி வாசகர் ஒருவர் அம்போ வெளிவராவிடில் தன் மனைவியை விவாகரத்து செய்வேன் என்று மனைவியின் காதலனிடம் பந்தயம் கட்டியிருக்கிறார். எது எப்படியோ, இந்த டெட் லைனிற்குள்ளாவது அம்போ ஸ்பெஷல் வருமா இல்லை அதுவும் அம்போதானா என்பதுதான் காமிக்ஸ் ரசிகர்கள் மனதில், பாக்தாத்தின் கார் குண்டு போல் ரகசியமாக ஒளிந்திருக்கும் கேள்வி.
குத்து டைம்ஸ்க்காக ஜுவாமி குத்தானந்தா
