Thursday, August 5, 2010

முத்தமிட நேரமில்லை


அமெரிக்காவின் உளவுத்துறையை சேர்ந்த ராய் மில்லர்[Tom Cruise], விச்சிட்டா விமானநிலையத்தில் ஜூன்[Cameron Diaz] எனும் அழகிய நங்கையுடன் அறிமுகமாகிக் கொள்கிறான். ராய் கவர்ந்து செல்லும் ஒரு புதிய கண்டுபிடிப்பை தம் கையகப்படுத்துவதற்காக அமெரிக்க உளவுத்துறையும், ஸ்பெயின் ஆயூத விற்பனைக் கோஷ்டி ஒன்றும் அவனை விடாது துரத்துகின்றன. ராயின் சாகச ஓட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இணைந்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறாள் அழகிய நங்கை ஜூன்….

டாம் குருஸின் தற்போதைய வயது 48. கமரொன் டயஸிற்கு வெறும் 38 மட்டுமே. சில வருடங்களிற்கு முன்பு இவர்களை சூழ்ந்திருந்த கவர்ச்சி, புகழ், வெற்றி என்பன இன்றையதினத்தில் அவை எட்டவேண்டிய உச்சத்தை அடைந்தோ அடையாமலோ படிகளில் கீழே இறங்க ஆரம்பித்துவிட்டன.

இயக்குனர் James Mangold இயக்கியிருக்கும் Knight and Day திரைப்படத்தில் குருஸும், டயஸும் தமக்குள் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளும் ஆரம்பக்காட்சிகள் இதற்கு சான்று பகர்கின்றன. குருஸினதும், டயஸினதும் தொலைந்து கொண்டிருக்கும் கவர்ச்சிகளே விமானநிலையத்தில் தம்மை அறிமுகம் செய்து கொள்வதுபோல் ஒரு உணர்வு மனதை ஆக்கிரமிக்கிறது.

ஆனால், பறக்கும் விமானத்தினுள், டாய்லெட்டிற்குள் நுழைந்து, அங்கிருக்கும் முகக்கண்ணாடியில் தன் பிம்பத்துடன் டாம் குருஸை மடக்குவது சம்பந்தமாக கமரொன் டயஸ் உரையாட ஆரம்பிக்கும்போது அவரின் அந்த எஞ்சியிருக்கும் கவர்ச்சி திறமையாக தன் கைகளை பார்வையாளன் தோள்மேல் போட்டுவிடுகிறது. நம்பவே முடியாத வகையில் மனதிற்குள் நுழைகிறார் டயஸ். அவரது துறுதுறுப்பும், செயற்கையான இளைமையும் மனதை மெதுவாக கவர்கிறது. ஆனால் பார்வையாளனை நெருங்குவதற்கு டாம் குருஸ் சற்று நேரம் எடுத்துக் கொள்கிறார். கிறுக்குத்தனமான செய்கைகளோடு அவர் பார்வையாளனை நெருங்கிவரும் வேளையில் திரைப்படம் பாதி ஓடிவிடுகிறது.

திரைப்படத்தில் புதிதாக சொல்லிவிட ஏதுமில்லை. தப்பி ஓடும் உளவாளியுடன் சந்தர்ப்பவசத்தால் இணைந்து கொள்ளும் ஒரு பெண், ஆரம்பத்தில் உளவாளியின் செய்கைகளை வெறுக்கும் அப்பெண் பின் அவன் மீது காதல் வயப்படல், பின்வரும் ஒரு தருணத்தில் அந்த உளவாளியின் நிஜமுகம் தெரிய வரும்போது காதலை தூக்கி எறிந்து அப்பெண் அவனைப் பிரிந்து செல்லல், பின் அந்த உளவாளியின் நிஜமான நிஜ முகமும் அவனின் செயல்களிற்கான அர்த்தங்களும் புரிய வரும்போது அந்த உளவாளியை அப்பெண் தன் உயிரை துச்சமென மதித்து தேடிச்செல்லல், தீயவர்களிற்கு சொர்க்கத்திற்கு டிக்கெட்டுகள். நிலைநாட்டப்படும் நீதி. ஈரமான முத்தத்துடன் இனிமையான சுபம்.

night-and-day-2010-18526-972215141 அமெரிக்கா, ஆஸ்திரியா, ஜெர்மனி, ஸ்பெயின் என நாடுவிட்டு நாடு பாய்கிறது படம். விரைவாக நகர்த்தப்படும் திரைக்கதையும், மெலிதான நகைச்சுவையும், க்ருஸ்-டயஸ் ஜோடிகளிற்கிடையில் வியக்கத்தக்கவகையில் உருவாகி ரசிகனை கட்டிபோடும் கவர்ச்சியும் அதலபாதாளத்திற்கு சென்றிருக்கவேண்டிய திரைப்படத்தை கைகொடுத்து காப்பாற்றியிருக்கின்றன.

விமானொமொன்றை வீதியில் இறக்கி பின் அதனை சோளவயலில் கவிழ்த்தாலும் க்ருஸும், டயஸும் அவ்விமானத்திலிருந்து சில சிராய்ப்புக்களுடன் மட்டும் தப்பிப்பார்கள். இந்த ஆக்‌ஷனை பார்த்தபோது நான் என் காதுகளை தடவிவிட்டுக் கொண்டேன். இருப்பினும் திரைப்படத்தில் பின்பு இடம்பெறும் பெரும்பாலான ஆக்‌ஷன் காட்சிகள் கிராபிக்ஸ் உதவியுடனேயே உருவாக்கப்பட்டிருந்தாலும் ரசிக்கக்கூடியதாகவிருக்கின்றன. குறிப்பாக ஸ்பெயினில் காளை மாடுகள் துரத்தலின் மத்தியில் இடம்பெறும் சேஸிங், அமெரிக்காவின் ஹைவேயில் இடம்பெறும் ஆக்‌ஷன் என்பன சிறப்பாக இருக்கின்றன.

ஒவ்வொரு தடவையும் பெரிதாக ஒரு ஆக்‌ஷன் வரும் சமயத்தில் கமரொன் டயஸை மயக்கமூட்டி வேறொரு நாட்டில் விழிக்கவைப்பார் குருஸ். இதனால் அந்த ஆக்‌ஷன் காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறாது. குருஸ் தன் அசாத்திய திறமையால் எதிரிகளை வீழ்த்திவிட்டார் என்பதை பார்வையாளன் ஊகிக்கவேண்டியதுதான். இது ஆக்‌ஷன் காட்சிகளின் செறிவிலிருந்து திரைப்படத்தை மீட்டாலும் ஆக்‌ஷன் பிரியர்களிற்கு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது.

காதல் காட்சிகளில் முத்தம் கொடுக்ககூட நேரமின்றி ஓடுகிறார்கள் குருஸும், டயஸும். அவர்களின் கவர்ச்சி இன்னமும் மொத்தமாக அவர்களிடமிருந்து ஓடிவிடவில்லை. அவர்களிருவரினதும் குறும்புகளையும், நளினங்களையும் ரசிக்க முடிகிறது. குருஸை விட கமரொன் தன் பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். நீண்ட நாட்களின் பின் அவரை என்னால் எரிச்சல் இன்றி ரசிக்க முடிந்தது. அழகான மாலை வேளையொன்றை குஷியாக்கும் இத்திரைப்படம் ரசிகர்களை ஜாலியான மனநிலையில் துரத்தி அடிக்கிறது. [**]

[வயதான நடிகைகளின் ரசிகர் சங்கங்கள் என்ற பெயரில் செயற்படும் கூலிப்படையினர் முன்பாக என் எழுதுகோல் தலைகுனியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் :))]

ட்ரெயிலர்

17 comments:

  1. முதன்மை கருத்துக்களுக்கு சொந்தக்காரன் - நாந்தான்.

    படம் ஓக்கேதான். தாம் ரசிகர்களே இவ்வாறுதான் சொல்கிறார்கள்.

    ReplyDelete
  2. //வயதான நடிகைகளின் ரசிகர் சங்கங்கள் என்ற பெயரில் செயற்படும் கூலிப்படையினர் முன்பாக என் எழுதுகோல் தலைகுனியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் //

    காதலரின் எழுது கோல் தலை குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது. குனியாது.

    ReplyDelete
  3. இன்ட்லியில் ஏதோ பிரச்சினை. சரியாக தெரிய மறுக்கிறது. காதலர் கவனிக்கவும்.

    ReplyDelete
  4. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கு ,புதிதாக வரும் படங்களுக்கு மட்டுமன்றி முன்பு வந்த படங்களுக்கும் விமர்சனம் எழுதுங்கள் ப்ளீஸ் ,தமிழில் வாசித்த பின்புதான் படம்பார்க்க கொஞ்சமாவது விளங்குது , வாரத்துக்கு ஒரு முறையாவது எழுதுங்கள் .
    கிருஷ்

    ReplyDelete
  5. அருமை நண்பரே, மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. //இன்ட்லியில் ஏதோ பிரச்சினை. சரியாக தெரிய மறுக்கிறது. காதலர் கவனிக்கவும்.//

    ஆமாம்...

    எனக்கும் இண்ட்லியில் ஏதோ பிரச்சனை! ஜனநாயக கடமையை ஆற்ற முடியவில்லை!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  7. //[வயதான நடிகைகளின் ரசிகர் சங்கங்கள் என்ற பெயரில் செயற்படும் கூலிப்படையினர் முன்பாக என் எழுதுகோல் தலைகுனியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் :))]//

    வயதான நடிகைகளைக் கண்டால் உமது எழுதுகோல் குனியாது! நிமிர்ந்து நேராக நிற்கும் என்பதை நாம் நன்கறிவோம்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. பாஸ்..
    அங்க மட்டுமில்ல. இங்கயும் வரவர நடிகைகள்ளாம் கெக்கே பிக்கே பேசுறது ட்ரெண்டா இருக்கு கவனிச்சிங்களா.
    அது என்ன "முத்தமிட நேரமில்லை". மொழிபெயர்ப்பு செஞ்ச ஹாட்லி சேஸ் நாவல் மாதிரி. எங்க இருந்துதான் பிடிப்பிங்கலோ

    ReplyDelete
  9. //ஈரமான முத்தத்துடன் இனிமையான சுபம்.//

    மிச்ச எல்லாத்தையும் விடுங்க.இது இல்லாத படத்த விரல் விட்டு எண்ணிடலாம்.

    படம் நல்ல action entertainer னு தான் எல்லோரும் சொல்றாங்க.ஆனா,லாஜிக்..வழக்கம் போல லேது.விடுங்க.சால்ட் படத்துக்கு இது பரவாயில்லயாமே..
    ஹீரோ ஹீரோயின் ரெண்டு பேரும் கிழடாயிட்டங்கனு சொல்லி தான் தெரிஞ்சுக்கனுமா என்ன? :)

    ReplyDelete
  10. தலைப்பு ரொம்ப நல்லாயிருக்கு. கண்டிப்பா படம் பார்த்திடுறேன்.

    ReplyDelete
  11. விஸ்வா, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. கூலிப்படையினர்க்கு எதிரான போராட்டத்தில் தங்கள் வழங்கியிருக்கும் ஆதரவிற்கு நன்றி.

    நண்பர் கிரிஷ், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சரவணக்குமார், மிக்க நன்றி நண்பரே.

    தலைவர் அவர்களே, எழுதுகோல் பாகுபாடு காட்டக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் :))

    நண்பர் கொழந்த தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, அது இல்லாவிடில் படத்தை நீங்கள் ஒரு பிடி பிடித்துவிடுவீர்களே. லாஜிக் என்ன லாஜிக், சும்மா ஜாலியா ரசிக்க வேண்டிய படமிது. சால்ட் இன்னமும் பார்க்கவில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பின்னோக்கி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. //. அழகான மாலை வேளையொன்றை குஷியாக்கும் இத்திரைப்படம் ரசிகர்களை ஜாலியான மனநிலையில் துரத்தி அடிக்கிறது//

    தல இதுக்கு என்னோட ‘கவித’யே தேவலாம் போலயிருக்கே. ஒன்னியும் புர்ல.

    ஆனா படம் பல்பு.

    ReplyDelete
  13. நண்பர் ஹாலிவூட் பாலா, விட்டுத்தள்ளுங்கள் இன்னொரு படம் வராமலா போகப்போகிறது :)) ஆனா எனக்கு ஜாலியா டைம் கழிந்தது.

    ReplyDelete
  14. ரொம்ப நல்ல விமர்சனம்.கேமரூன் டயஸின் வயசை எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க?

    ReplyDelete
  15. // முத்தமிட நேரமில்லை //

    காதலரே எப்பவுமே அதே நினைவு தானா :))

    .

    ReplyDelete
  16. // [வயதான நடிகைகளின் ரசிகர் சங்கங்கள் என்ற பெயரில் செயற்படும் கூலிப்படையினர் முன்பாக என் எழுதுகோல் தலைகுனியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் :))] //

    யாரையோ போட்டு தாக்குறீங்க அப்புடீன்னு தெரியுது

    ஆனா இதை கண்ணா பின்னா வென்று வழி மொழிகிறேன்
    .

    ReplyDelete
  17. நண்பர் சி.பி. செந்தில்குமார், கமரூன் டயஸின் வயதை ரசிகர் மன்ற தலைவர் டயஸ்தாஸ் அவர்களிடம்தான் கேட்டறிந்தேன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, எப்போதும் அதே நினைவுதான் :)) என்னைத் தாக்க கூலிப்படையை அமர்த்தியிருக்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள். நிம்மதியாக பீர் வாங்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete