Monday, August 8, 2011

சூப்பர் 8


லிலியான் எனும் புறநகரொன்றில் நிகழும் ரயில் விபத்தொன்றின் பின்பாக அந்த சிறிய நகரில் மர்மமான சில சம்பவங்கள் அரங்கேற ஆரம்பிக்கின்றன. இச்சம்பவங்கள் அந்நகர மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைப்பவையாக அமைகின்றன. இந்த ரயில் விபத்தைக் குறித்த ஒரு ரகசியத்தை வெளியே விடாது காத்து வருகிறது ஒரு சிறார் குழு….

அமைதியான ஒரு புறநகர், சூட்டிகையான ஒரு நண்பர் குழு, துவிச்சக்கரவண்டி உலாக்கள், சிறு நகரை சல்லடை போட்டுத் தேடும் ராணுவம், இவற்றின் மத்தியில் மறைந்திருக்கும் ஒரு மர்மம் போன்ற அம்சங்கள் Super 8 திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், இயக்கிய அருமையான படைப்பான E.T. யிலும் காணக்கிடைக்குமெனினும் சூப்பர் 8 திரைப்படமானது அதன் பார்வையாளர்களிற்கு வழங்கிடும் திரையனுபவம் அதனின்றும் வேறுபட்ட ஒன்றாகவே இருக்கிறது.

சூப்பர் 8, திரைப்படத்தின் முக்கிய கவர்ச்சி அம்சங்களாக அதன் இயக்குனர் J.J. Abrams திரையில் கொணர்ந்திருக்கும் மனித உறவுகள் குறித்த மென்மையான விபரிப்பு, உற்சாகம் துள்ளும் ஒரு சிறுவர் குழு அதன் நடவடிக்கைகள், இனிமையான பின்னனிப் பாடல்களுடன் அழகாக படமாக்கப்பட்டிருக்கும் 70களின் அந்திமம் என்பவற்றைக் கூறலாம்.

மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள் அற்ற திரைப்படத்தின் மர்மமுடிச்சுகூட ஒரு ஆறுதல் எனலாம். ஆனால் அந்த மர்மமுடிச்சை சூப்பர் 8ன் சிறப்புக்களில் ஒன்றாக கருத இயலாதவாறே அதன் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. குடும்ப உறவு, நட்பு, காதல் எனும் பிரதான வீதிகளில் நகரும் கதையை விறுவிறுப்பாகவும் வேகமாகவும் நகர்த்திட அந்த மர்மமுடிச்சு இயக்குனரிற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது. அதில் பிரம்மித்திட ஏதும் இல்லை. இயக்குனரின் பிரதான இலக்கு ரசிகர்களின் மனங்களின் ஆழத்தில் துயிலும் மென்மையான உணர்வுகளிற்கு தூண்டில் போடுவதாகவே அமைகிறது. அவரின் அத்தூண்டில் சரியாகவே வீசப்பட்டிருக்கிறது எனலாம். மாறாக மர்மமுடிச்சிற்கும் மனிதர்களிற்குமிடையில் இருக்ககூடிய உறவானது மனதை தொடும் ஒன்றாக திரைக்கதையில் உருவாக்கப்படவில்லை.

தனக்கான ஒரு இடத்தை நோக்கி திரும்பல் அல்லது வீடு செல்லல் என்பதனை திரைக்கதையின் இழைகளில் ஒன்றாக கொண்டிருக்கிறது சூப்பர் 8. திரைப்படத்தில் வரும் சிறுவன் ஜோ, சிறுமி ஆலிஸ் ஆகிய இருவரும் தம் அன்னையரை இழந்தவர்கள். ஜோவின் தாய், தொழிற்சாலை விபத்தொன்றில் பலியாகிவிடுகிறாள். ஆலிஸின் தாய் தன் குடிகாரக் கணவனுடன் வாழ விரும்பாது அவனை விட்டு விலகிச் சென்று விடுகிறாள். தாயன்பு வெறுமையான இரு வீடுகளில் வாழும் இரு சிறார்களாக இவ்விரு பாத்திரங்களும் கதையில் காட்டப்படுகிறார்கள்.

ஜோவிற்கும், ஆலிஸிற்கும் அவர்களின் தந்தைகளிற்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வின்மை என்பதன் அரூப சுவர்களை கொண்டதாகவே அவர்கள் வீடுகளும் அமைந்திருக்கின்றன. இச்சுவர்களுடனான மோதலே இவ்விரு சிறுவர்களையும் அச்சுவர்களிற்கு வெளியே அல்லது அச்சுவர்கள் மறையும் தருணத்தில் உற்சாகமாக இயங்க செய்கின்றன. தம்மிருவர் இடையேயும் ஒரு அந்தரங்க வெளியை உருவாக்க உந்துகின்றன.

super-8-2011-20233-1562492729இயக்குனர் ஏப்ராம்ஸ் இச்சிறார்கள் எதிர்கொள்ளும் வெறுமையான கணங்களையும், சிறுவர்களின் தந்தைகளிற்கும் சிறுவர்களிற்குமிடையில் உரையாட முடியாமல் துடிக்கும் பாசத்தையும், அக்கறையையும், இவ்விரு சிறார்களும் சந்திக்கும் போதெல்லாம் அவர்கள் இடையில் முளைவிடும் ஈர்ப்பையும் மிகவும் அழகாக திரைப்படுத்தியிருக்கிறார்.

கனமான வெறுமை அழுத்தும் வீடுகளிலிருந்து விடுபட்டு நட்பையும், சாகசத்தையும், விருப்புடன் தேடி ஒடும் இந்த இரு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் நோக்கி ஈர்க்கப்படுவது என்பது இயல்பான ஒன்றாகவே தெரிகிறது. தம் தந்தைகள் இடும் தடைகளைத் தாண்டியும் அவர்கள் தம் சந்திப்புக்களை தொடர்வதற்கு காரணம் அந்த சந்திப்பில் அவர்கள் உணரும் அன்பான ஒரு வெளியே. இந்த அன்பும் அக்கறையுமே இறுதியில் ஆலிஸை காப்பாற்றுவதற்காக ஜோவை ஓட வைக்கிறது. அதற்காக அவன் எதிர்கொள்ள வேண்டிய ஜீவன் அவன் உயிரை எடுத்துவிடலாம் என்பதை அவன் அறிந்தே தன் நண்பர்களுடன் ஆலிஸை தேடிச் செல்கிறான்.

இவ்வாறான ஒரு நண்பர் குழுவில் இடம்பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் குணாதிசயங்களுடன் ரசிக்க வைத்து விடுகிறார் இயக்குனர் ஏப்ராம்ஸ். அவர்கள் கூடும் போதெல்லாம் உற்சாகம் அங்கு கும்மியடிக்க ஆரம்பித்து விடுகிறது. சூப்பர் 8 கமெரா ஒன்றின் உதவியுடன் குறும்படத்தை இயக்கும் சார்ல்ஸ், வெடி நிபுணன் கேரி, குறும்படத்தில் டிடெக்டிவ் பாத்திரமேற்று நடிக்கும் மார்ட்டின் என ஒவ்வொருவரும் தனி ரகமாக சிரிக்க வைக்கிறார்கள். வயதிற்கு மீறிய உரையாடல்களை நிகழ்த்தி உயிரை வாங்கும் சிறுவர்கள் நிறைந்த படைப்புக்களில் இருந்து சூப்பர் 8 வேறுபடுவது ரசிகனிற்கு கிடைத்த அதிர்ஷ்டம்தான். இச்சிறார்களின் குடும்பங்கள் வழியேயும், நகரில் வாழும் மக்கள் வழியேயும் சிறிய புறநகர் சமூகமொன்றின் வேறுபட்ட மனநிலைகளையும் ஏப்ராம்ஸ் மெலிதாக காட்டியிருக்கிறார்.

திரைப்படம் நிறைவடைந்த பின்பாக சிறுவன் சார்லஸ் இயக்கிய திகில் குறும்படம் பார்வைக்கு வரும். அது அட்டகாசமான ஒரு அனுபவமாக அமையும். அதேபோல் சிறுமி ஆலிஸாக வேடமேற்றிருக்கும் Elle Fanning, சார்ல்ஸின் திரைப்பட காட்சி ஒன்றிற்கான ஒத்திகையில் தன் துணைவனான டிடெக்டிவ்வை பிரிய மறுத்து உரையாற்றுமிடத்தில் அவர் முகத்தில் வந்துவிழும் உணர்வுகளின் தொகுப்பு அசர வைக்கிறது.

இழப்புக்களின் பின்பாகவும் வாழ்க்கையை தொடர்ந்திட வேண்டியதன் அவசியத்தையும், அன்பான உறவு மற்றும் நட்பின் பெறுமதிகளையும் வலியுறுத்துவதாக சூப்பர் 8 திரைப்படத்தின் இறுதிப்பகுதி அமைந்திருக்கிறது. நெருக்கடிகள் சில வேளைகளில் உறவுகளை எதிர்பாராத வகைகளில் புதுப்பித்து தருகின்றன. கையெட்டும் தூரத்தில் இருந்த பாசத்தை எட்டியணைக்கவும், ஆரத்தழுவிடவும் செய்கின்றன. தனக்கான ஒரு கூட்டை நோக்கி திரும்பும் எந்த ஜீவனும் அங்கிருக்கும் வெறுமைக்காக வேகம் காட்டுவதில்லை. தனக்கென அங்கிருக்கும் அன்பும், பாசமுமே அதன் வீடு திரும்பலை காலகாலத்திற்கும் இனிமையான ஒரு அனுபவமாக ஆக்ககூடும். ரசிகர்களின் மனதில் ஏக்கம் சுற்றிப் புதைத்திருந்த ஒரு ரகசியமான வீடு திரும்பலை மீண்டும் மேற்பரப்புகளிற்கு இட்டு வருவதிலும், அவர்கள் தம் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைப்பதிலும் சூப்பர் 8 சுபமாக வீடு திரும்பியிருக்கிறது. [**]

ட்ரெய்லர்

11 comments:

  1. ட்ரைலர் பாக்கும் போது ETயின் சாயல்கள் நெறைய இருப்பதாக பட்டது. உங்க விமர்சனத்த பாத்தா படம் நெடுக நெறைய ஸ்பீல்பெர்கிஷ்தனம் இருக்கும் போல, அப்பா - மகன் உறவு, சிறார்கள் குழு - இது மாதிரி..

    ET - மறக்கவே முடியாத திரை அனுபவம். எந்த நாட்டு சின்ன பசங்க பாத்தாலும் பிற உயிரினங்களின் பால் அன்பு செலுத்தும் குணம் நிச்சயம் வளரும்....சங்கரை இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று சொல்லும் ஆட்கள என்ன பண்றது ?
    (எனக்கும் ஸ்பீல்பெர்கின் மேல சில விமர்சனங்கள் உண்டு..இருந்தாலும் )

    படம் அதுக்குள்ள அங்க வந்திருச்சா ??

    Rise of the apes - எப்படி இருக்கு ?

    ReplyDelete
  2. நண்பரே!ரொம்ப நாள் கழித்து நல்ல படத்துக்கு விமர்சனம் எழுதியுள்ளீர்கள்.
    உங்களிடம் தமிழ் விளையாடுகிறது.

    ReplyDelete
  3. நண்பர் கொழந்த, சூப்பர் 8 காலதாமதமாகவே இங்கு சென்ற வாரம் வெளியாகி இருக்கிறது. இந்த வாரம் ரைஸ் ஆஃப் தி ஏப்ஸ் வெளியாக இருக்கிறது. தமிழகத்தில் வெளியாகிவிட்டதாக அறிந்தேன் நீங்கள் இன்னமும் பார்க்கவில்லையா! E.T. ஐ யார்தான் மறக்க முடியும், விமர்சனம் தாண்டி, ஸ்பீல்பெர்க் நல்ல ஜனரஞ்சக படைப்புக்களை தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    உலக சினிமா ரசிகரே, மிகவும் சிறந்த படம் என்று கூற முடியாவிடிலும் மென்மையான உணர்வுகளை தழுவிடும் வகையில் சூப்பர் 8 சோடை போகவில்லை. இத்திரைப்படம் குறித்த மிகையான புகழ்ச்சிகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. தங்களின் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  4. அது ஏன்னு தெரியலை. நீங்க கொடுக்கற இந்த ஸ்டாரோடு எனக்கு ஒத்துப் போறதேயில்லை.

    காண்ட்ராஸ்ட்.

    ReplyDelete
  5. ஆமா.. வழக்கமா தமிழ்ல தலைப்பு கொடுக்கறா மாறி... எதுனா..

    எட்டுக்கால் பூச்சி,

    ஏப்ரஹாமின் எட்டு, அருமையான தட்டு-ன்னு ஏன் கொடுக்கலை?

    ReplyDelete
  6. அப்ப இந்த படத்த பார்க்கலாம்ன்றீங்க :-) .. . ரைட்டு பார்த்துருவோம் - டெம்ப்ளேட் பின்னூட்டம் நம்பர் 1093024

    ReplyDelete
  7. மணியடி முதலாளிAugust 9, 2011 at 6:57 AM

    Vada !

    ReplyDelete
  8. ரோலான்ட் எமரீக்August 9, 2011 at 7:00 AM

    //மைக்கல் பே மற்றும் ரோலன்ட் எமிரிக்தனங்கள்//

    ஏ யாருப்பா அது என்னை வம்புக்கு இசுக்குறது ? பட்டா இண்டிபெண்டன்ஸ் டே செகண்ட் பார்ட் ரிபப்ளிக் டே எடுத்துக்கினு கீறேன். ஹாரிசன் போர்டோட பல்செட் தொலைஞ்சி போச்சு. திருடுனது - ஆண்ட்ரோமீடா ஏலியன் . ஏன்? எதுனால? எப்புடி? வெள்ளைத்திரையில் காணுங்கள். பட இறுதியில், கடைசி ஷாட்ல, கிளின்ட் ஈஸ்ட்வுட் ஜட்டியைத் திருடிக்கினு ஓடுற இன்னொரு ஏலியன் - அது தேர்ட் பார்ட் - ஜட்டிக்குள் ஜம்புலிங்கம்.

    ReplyDelete
  9. நண்பர் நன்றி, உங்களிற்கு ஸ்டாரு ஒவ்வாமை எனும் வியாதி இருக்க வாய்ப்பிருக்கிறது :) டாக்டர் மாலினியை உடனே அனுகவும். தண்ணீர் தாங்கி ராக்கெட்டு என்பதுதான் இந்தப் பதிவின் உண்மையான தலைப்பு என்பதை வாசக நண்பர்களிற்கு பேரன்புடன் அறியத்தருகிறோம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நன்றி :))

    நண்பர் கருந்தேள், கண்டிப்பாக நீங்கள் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.. :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    மணியடி மொதலாளி, உங்களிற்கில்லாத வடயா.

    ரோலண்டு, நீங்க இன்னும் உசிரோடவா இருக்கீங்க.. அய்யோ போச்சுடா சாமி..விரைவில் இன்னொரு உலக அழிவா...

    ReplyDelete
  10. சினிமா ஆர்வம் இல்லாதவனையும் ஈர்க்கின்றன உங்கள் விமர்சனங்கள்

    ReplyDelete
  11. я ходила на этот фильм,мне не понравилось

    ReplyDelete