Monday, February 22, 2010

ஒரு நரியின் கதை


ஒரேயொரு ஊரில், ஒரு நரி தன் காதல் மனைவி பெலிசிட்டியுடன் இன்பமான வாழ்வை வாழ்ந்து வருகிறது. நரியின் தொழில் திருடுதல் என்பது எமது சிறு வயது முதலே பிரபலமானதொரு வடைக் கதை மூலம் எம் மனதில் பதிக்கப்பட்டிருக்கிறது. திருவாளர் நரியும் தன் உயிர் வாழ்தலிற்காக திருட்டுத் தொழிலைக் கன கச்சிதமாக செய்து தன் வாழ்க்கையை ஓட்டுகிறார். இவ்வேளையில் தான் கர்ப்பமுற்று இருப்பதை நரியாரிடம் தெரிவிக்கிறாள் அவர் அன்பு மனைவி பெலிசிட்டி.

நரியார் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு விட்டு வேறு ஏதாவது வேலையொன்றைத் தேடிக் கொள்ள வேண்டுமென அவரிடம் வேண்டுகோள் வைக்கிறாள் பெலிசிட்டி. வருடங்கள் ஓடுகின்றன. தன் திருட்டுத் தொழிலைக் கைவிட்டு, அதிக வருமானம் தராத, பத்திரிகைகளில் பத்தி எழுதும் வேலை பார்க்கிறார் நரியார்.

அவரின் மகனான ஆஷ் அவரின் எதிர்பார்புகளிற்கு ஏற்ற வகையில் இல்லை எனும் ஒரு குறை அவர் உள் மனதில் வளை தோண்டி இருக்கிறது. ஆஷும் தன் தந்தையை சற்று முறைத்துக் கொள்பவனாகவே இருக்கிறான்.

தாங்கள் தற்போது வசித்து வரும் சிறிய வளையிலிருந்து வசதியான இடமொன்றிற்கு மாற விரும்பும் நரியார், வக்கீலான தன் நண்பண் வளைக்கரடியை சந்தித்து ஒரு மரத்தை வாங்குவது குறித்துப் பேசுகிறார்.

வக்கீலான வளைக்கரடியோ அம்மரம் பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய பொல்லாத மூன்று பண்ணையார்களின் பண்ணைகளின் எல்லைக்கருகில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அம்மரத்தை வாங்குவது நல்ல திட்டமல்ல என ஆலோசனை வழங்குகிறது. இதனால் நரியாரிற்கும், அவர் வக்கீல் வளைக்கரடியாரிற்குமிடையில் சில கர் புர் உரையாடல்கள் உருவாகின்றன. இருப்பினும் இறுதியில் அம்மரத்தையே வாங்குவது என முடிவாகிறது.

the-fantastic-mr-fox-2009-13384-1861116550 தான் வாழ்ந்து வந்த வளையை நீங்கி, தன் குடும்பத்துடன் புதிய மரத்தின் கீழுள்ள வசதியான இடமொன்றில் குடி புகுகிறார் நரியார். அழகான வீடு, ஓவியங்கள் வரையும் மனைவி, அமைதியான வாழ்க்கை என நாட்கள் நகர்கிறது. இவ்வேளையில் பெலிசிட்டியின் சகோதரனின் மகனான கிறிஸ்டோபர்சன், நரியாரின் வீட்டில் சில நாட்கள் தங்கிச் செல்வதற்காக வந்து சேர்கிறான்.

நரியாரின் வீட்டிற்கு வந்த கிறிஸ்டோபர்சனின் நடவடிக்கைகள் கலக்கலாக இருக்கின்றன. தியானம், யோகா, கராத்தே, விளையாட்டு என அதிரடிக்கிறான் அவன். இதனால் நரியாரிற்கு கிறிஸ்டோபர் மீது ஒரு தனி மரியாதை ஏற்பட்டு விடுகிறது. இது ஆஷிற்கு பொறாமையை உருவாக்கி விடுகிறது. இது போதாதென்று ஆஷின் பெண் நண்பியும் கிறிஸ்டோபரின் மீது காதல் வயப்பட்டு விடுகிறாள். இவையெல்லாம் சேர்ந்து ஆஷை கிறிஸ்டோபர் மீது எரிந்து விழ வைக்கின்றன.

இவ்வாறாக நாட்கள் நகர்கின்றன. ஆனால் நரியாரோ இரவுகளிற்காக காத்திருக்கிறார். அவர் மனதில் ஒரு மாஸ்டர் பிளான் கருக்கொண்டு இருக்கிறது. இந்த மாஸ்டர் பிளானை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக கைலி எனும் பைக்கீரியை அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

fantastic-mr-fox-2010-13384-1761536942 இரவின் அமைதியில் வீட்டிலிருந்து யாரிற்கும் தெரியாமல் நழுவும் நரியாரும், கைலியும் முதல் இரவு பண்ணையார் பொகிஸ் அவர்களின் பண்ணையில் தடைகளைத் தாண்டிப் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டுகிறார்கள். பொகிஸின் கோழிகளை அமுக்குகிறார்கள். பின்வரும் இரவுகளில் பன்ஸின் பண்ணையில் வாத்துக்கள், பீன்ஸின் பண்ணையில் வான்கோழி, ஆப்பிள், ஆப்பிள் மது [Cider] போன்றவற்றையும் அள்ளிக் கொள்கிறார்கள்.

தன் வீட்டில் வந்து குவியும் உணவுப் பொருட்களைக் கண்டு சந்தேகம் கொள்ளும் நரியாரின் மனைவி பெலிசிட்டி, நரியாரை எச்சரிக்கிறாள். ஆனால் அவளிடமிருந்து உண்மையை மறைக்கும் நரியார், தான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு செல்வதாகக் கூறி தன் திருட்டுக்களைத் தொடர்கிறார். தொடரும் இரவுகளில் கிறிஸ்டோபர்சனையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.

பொகிஸ், பன்ஸ், பீன் ஆகிய மூன்று பண்ணையார்களும் தங்கள் பண்ணைகளில் நடந்து வரும் திருட்டுக்களால் கொதித்துப் போயிருக்கிறார்கள். அவசரக் கூட்டமொன்றைக் கூட்டும் அவர்கள் இந்தக் கொடுமையான திருட்டுச் செயல்களிற்குப் பொறுப்பான களவாணியை போட்டுத் தள்ளுவது என முடிவெடுக்கிறார்கள்.

தங்கள் பண்ணைகளினைச் சுற்றி தேடுதல் வேட்டை நடாத்தும் பண்ணையார்கள் மரத்தின் கீழ் அமைந்திருக்கும் நரியாரின் வீட்டைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். புதர்களிற்குப் பின் துப்பாக்கிகளுடன் மறைந்திருக்கும் அவர்கள், நரியார் தன் வீட்டிலிருந்து வெளியே வரும் வேளையில் அவரை நோக்கிப் பலத்த துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறார்கள்.

பறந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள் நரியாரின் வாலைக் கொத்தி எடுக்கின்றன. வாலிழந்த நரியாக தன் வீட்டிற்குள் ஓடுகிறார் நரியார். தரையில் வீழ்ந்து கிடக்கும் நரியாரின் வாலை எடுத்து அதனை ஒரு கழுத்துப் பட்டி போல் அணிந்து கொள்கிறார் பண்ணையார் பீன். ஊடகங்களில் இந்த வேட்டை சூடான செய்தியாகிறது. நேரடி ஒளிபரப்புகள் ஆரம்பமாகின்றன.

fantastic-mr-fox-2010-13384-931378523 தன் வீட்டிற்குள் ஓடி ஒளிந்த நரியாரை ஒழித்துக் கட்டாமல் ஓய்வதில்லை எனும் வைராக்கியத்தோடு மரத்தின் கீழ் நிலத்தைக் கிண்ட ஆரம்பிக்கிறார்கள் பண்ணையார்கள்….. நரியாரை ஒழித்துக் கட்டுவதில் அவர்கள் வெற்றி கண்டார்களா, தன் வாலை நிலத்தில் வீழ்த்திய பண்ணையார்களை நரியார் தோற்கடித்தாரா என்பதை நீங்கள் அறிய விரும்பினால் Fantastic Mr.Fox திரைப்படத்தினைப் பாருங்கள்.

Roald Dahl என்பவர் எழுதிய சிறுவர் நாவலைத் தழுவி இந்த Stop Motion அனிமேஷன் திரைப்படத்தை முழுமையாகத் தன் பாணியில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் Wes Anderson.

ஸ்டாப் மோஷன் அனிமேஷன் ஆனது நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் உருவாகும் அனிமேஷன் படங்களுடன் ஒப்பிடுகையில், அதன் அசைவுகளில் ஒரு நிறைவற்ற தன்மை கொண்டதாகவே தோற்றம் தரும். ஆனால் இத்திரைப்படத்தின் உண்மையான நிறைவே அந்த நிறைவற்ற தன்மையிலேயே அடங்கியிருக்கிறது என்பதை படைப்பினை முழுமையாக பார்க்கும்போது ஒருவரால் புரிந்து கொள்ள முடியும்.

உலோகங்களால் உருவாக்கப்பட்ட பொம்மை என்புகளின் மேல் மிருகங்களின் ரோமத் தோல்கள் போர்த்தி அவற்றின் அசைவுகளைப் படமாக்கியிருக்கிறார்கள். ரோமச் சிலிர்ப்பும், கண்களுமே பாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளை காட்டுபவையாக அமைந்திருக்கின்றன.

19187416.jpg-r_760_x-f_jpg-q_x-20091022_033317 நரியின் வாழ்க்கையை அவதானித்தால் அது மனித வாழ்க்கையை சித்தரித்திருப்பதை நாம் உணர முடியும். அதே போல் நரியாரிற்கும் கொடுமையான பண்ணையார்களிற்குமிடையில் நடக்கும் போராட்டமானது, வாழ்வதற்காக திருட வேண்டிய நிலையிலுள்ள ஒரு வர்க்கத்திற்கும், திருடப்பட்ட- வசதி படைத்த வர்க்கத்திற்குமிடையிலான ஒரு போராட்டமாகவே உருப்பெறுகிறது. இவ்வர்க்கப் போராட்டம் முடிவற்ற ஒன்று என்பதனை திரைப்படம் சூசகமாக தெரிவிப்பதில் வெற்றி காண்கிறது.

படத்தின் இறுதிக் காட்சிகளில் வரும் அந்த ஓநாய்க்கு, நரியார் பேசும் ஆங்கிலமோ, லத்தீனோ புரிவதில்லை. ரஷ்ய மொழியில்! அதனை நோக்கி சில வசனங்களை வீசுகிறார் நரியார். ஓநாய் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. பாட்டாளிகள் தம் முஷ்டியை இறுக்கி, தம் கைகளை உயர்த்தி சைகை செய்வது போல நரியார் ஓநாயைப் பார்த்து சைகை செய்கிறார். பனிபடர்ந்த மலைகளைப் பிண்ணனியாக கொண்டு நிற்கும் அந்த கறுத்த ஓநாய் பதிலுக்கு தானும் அதே சைகையை செய்து விட்டு கம்பீரமாக நடந்து மறைகிறது. இது படத்தின் பாட்டாளிகள் டச்.

திரைப்படத்தின் வசனங்கள், இசை என்பன மிகச் சிறப்பாக இருக்கின்றன. கதை ஓட்டத்துடன் ஆங்கில பாப் பாடல்களை ஒலிக்க விட்டிருக்கிறார் இயக்குனர். பண்ணையார் வீடுகளில் திருடப் போகும் சமயம் வரும் பின்னனி இசை எகிறிக் குதிக்கிறது. கூர்மையான, நகைச்சுவை கலந்த வசனங்கள் காட்சிகளிற்கு சுவையை அதிகரிக்கின்றன.

the-fantastic-mr-fox-2009-13384-1624721018 அனிமேஷன் ஒரு புறமிருக்க அதற்குப் பின்னனியாக வரும் காட்சிகள் மிகுந்த ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆரம்பக் காட்சியில் ஆப்பிள் மரமொன்றில் சாய்ந்தபடியே நரியார் ஒரு ஆப்பிளை ஸ்டைலாக கடிக்க, அவரைச் சுற்றியுள்ள இடத்தையெல்லாம் அந்திச் சூரியன் தன் செங்கதிர்களால் செங்குழம்பாக அடித்துவிடும் காட்சி அருமை.

fantastic-mr-fox-2010-13384-301723013 குரல், ஒரு பாத்திரத்திற்கு எவ்விதமாக உயிரூட்டக்கூடும் என்பதற்கு மிகச் சிறப்பான சான்று நரியாரின் பாத்திரமாகும். நரியாரிற்கு குரல் வழங்கியிருப்பவர் பிரபல நடிகர் George Clooney. ஏற்றம், இறக்கம், வேகம், மென்மை, கிண்டல் என கலந்து கட்டி நரியாரை, க்ளுனியாக மாற்றி அடிக்கிறது திறமை வாய்ந்த அந்தக் கலைஞனின் குரல். பெலிசிட்டிக்கு நடிகை Meryl Streepம், வளைக்கரடிக்கு நடிகர் Bill Murrayம், காவல் கார எலிக்கு நடிகர் Williem Dafoeம் குரல் வழங்கி உயிர்ப்பித்திருக்கிறார்கள். மெரில் ஸ்டிரீப்பின் குரலில் பெலிசிட்டி ஐஸ்க்ரீமாகப் பேசுகிறார்.

அன்பான கணவனாக, தந்திரமான திருடனாக, மகனுடன் பொருதும் தந்தையாக, பண்ணையார்களை எதிர்த்துப் போராடும் போராளியாக நரியார் பாத்திரம் வெளுத்து வாங்குகிறது. நரியாரின் ட்ரேட் மார்க்கான விசிலடியும், நாக்கைச் சுருட்டி அவர் எழுப்பும் ஒலியும் கலக்கலாக இருக்கிறது.

நரியார் தனது முக்கியமான திட்டங்களை எல்லாம் பைக்கீரிக்கு விளக்கும்போது பைக்கீரியின் கண்கள் சொருகிக் கொள்ளும் தருணங்கள் அட்டகாசம். இளைய தலைமுறையின் பிரதிநிதிகளாக ஆஷும், கிறிஸ்டோபர்ஸனும் அலட்டிக் கொள்ளாமல் அசத்துகிறார்கள்.

fantastic-mr-fox-2010-13384-1654698214 படத்தின் பிரதான பாத்திரங்களைத் தவிர்த்து என மனதைக் கவர்ந்து கொண்டவர் பண்ணையார் பீனின் ஆப்பிள் மதுக் களஞ்சியத்தின் காவற்காரனாக வரும் எலியார். குறைந்த நேரமே படத்தில் வந்தாலும் செக்க சிவந்த கண்களுடன், தனது விரல்களை சொடுக்கியவாறே, படு ஸ்டைலான ஒரு நடையுடன், வில்லுக் கத்தியால் அந்த எலி செய்யும் வில்லத்தனம் மயக்குகிறது. தன் வாழ்வின் தேடல் என்ன என்பதை அறியாது, எஜமான விசுவாசத்திற்காக தன் உயிரை விடுகிறது அப்பாத்திரம். எலியாரின் உயிர் பிரியும் வேளையில் அவரிற்கும் நரியாரிற்கும் இடையில் இடம் பெறும் அந்த சிறு உரையாடல் மனதைத் தொட்டு விடுகிறது.

நரியார் திரைப்படத்தில் அணியும் செம்பழுப்பு வண்ணம் கொண்ட வெல்வெட் கோட் சூட் இயக்குனர் ஆண்டர்சனிடமும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா! ஆனால் அதுதான் உண்மை. தனது வழமையான பாணியிலிருந்து விலகாது [ பிரச்சினைகள் கொண்ட குடும்பம், தகராறு நிறைந்த தந்தை மகன் உறவு, இவற்றில் ஏற்படும் மாற்றங்கள்] அவர் இயக்கியிருக்கும் இந்த அனிமேஷன் திரைப்படம் ஆழமான பார்வைக்குரிய ஒன்றாக இருந்தபோதிலும், குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை கழிக்க கூடியதொரு படைப்பாகவும் அமைந்து விடுவது அதன் சிறப்பம்சம். வெஸ் ஆண்டர்சன் ஒரு தந்திரமான இயக்குனர்- நரியாரைப் போலவே! [****]

ட்ரெயிலர்

8 comments:

  1. அன்பு நண்பரே

    எவ்வளவு எழுதினாலும் இன்னும் மீதமுள்ளதாக தோன்றுகிறதல்லவா? இதுதான் இப்படத்தின் வெற்றி என நினைக்கிறேன். படங்கள் தேர்வு வெகு நேர்த்தியாக உள்ளது.

    இப்படத்திற்கு ஒரு ஆஸ்கார் கிடைத்தால் நமக்கு கிடைத்தது போல மகிழ்வோம். பார்க்கலாம்.

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்.
    நரியாரின் சேட்டைகளுக்காகவும் எலியாரின் வில்லதனத்திற்க்காகவும் படத்தை பாத்துடுவோம்.

    ReplyDelete
  3. சமீபத்தில் தான் பார்த்தேன் இந்த படத்தை. செம கலாய் திரைப்படம். இது ஒரு வகையில் பெரியவர்களுக்காக எடுக்கபட்ட சிறுவர் கதை. ஸ்டாப் மோஷன் அனிமேசன் இந்த 3டி யுகத்தில் கண்களுக்கு பழக மறுத்தாலும், படம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் அது ஒரு வித்தியாசமான அனுபவமாக மாறி விட்டது. நல்ல பதிவு கனவு. ஓட்டு போட்டாச்சு. அப்படியே பாலுமகேந்திரா பற்றி என் பதிவில் எழுதியுள்ளேன். முடிந்தால் வந்து கமெண்டுங்கள்...

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்..... dvdrip காக காத்திருக்கேன்....

    ReplyDelete
  5. ஐ ஜாலி . .இந்த மாதிரிப் படங்கள் (அனிமேஷன், ஸ்டாப் மோஷன், டூ டி, த்ரீ டி முதலியன) எனக்கு மிகவும் பிடிக்கும் . .இந்தக் கதையைப் படித்தபோது, அந்த நரியுடன் ஒரு சுற்றுலா சென்று விட்டு வந்தது போலவே இருந்தது . .குறிப்பாக, அந்த எஜமான - தொழிலாளி வர்க்கம் குறித்த பகுதி என்னை மிகவும் கவர்ந்தது . . இப்படத்தைப் பார்க்காமல் இருக்க முடியாது . . அட்டகாசம் !!

    ReplyDelete
  6. ஜோஸ், ஆம் எவ்வளவு கதைத்தாலும் தீராதது போல இப்படம் குறித்து சொல்லிக் கொண்டு போகலாம். ஆஸ்கார் கிடைத்தால் நானும் மகிழ்வேன். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் கைலாஷ், பாருங்கள் ரசிப்பீர்கள். சிறப்பான படைப்பு. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பிரசன்னா ராசன், நேர வசதிப்படி வந்து படித்துவிட்டு என் கமெண்ட்களை பதிகிறேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

    ரமேஷ், கனிவான கருத்துக்களிற்கு நன்றி. பார்த்து மகிழுங்கள்.

    நண்பர் கருந்தேள், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து சுவைத்துப் பார்ப்பீர்கள். தவறவிடாதீர்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. காதலரே,
    நானும் இந்த படம் பார்த்து விட்டேன். அருமையாக இருந்தது.நீங்கள் கூறியது போல் காவற்காரனாக வரும் எலியார் பாத்திரம் என்னையும் கவர்ந்தது.

    அன்புடன்,
    லக்கி லிமட்
    பயன்படுத்தி பாருங்கள்

    ReplyDelete
  8. நண்பர் லக்கி லிமட், காவற்காரன் பாத்திரம் உங்களையும் கவர்ந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete