ஜெனொவா நகரின் யுத்தத்தில், யுத்தக் கைதியாக்கப்பட்ட மார்க்கோ போலோ, நகரின் சிறையில் அடைக்கப்படுகிறான். சிறையில் தன் பிரயாண அனுபவங்களை சக கைதிகளிடம் விடுவிக்கிறான் மார்க்கோ. கைதிகள் மத்தியில் மார்க்கோவின் பயணக் கதைகள் புகழ் பெறுகின்றன.
இந்நிலையில் சிறையில் மார்க்கோவை அணுகுகிறான் அதே சிறையில் கைதியாக இருக்கும் Luigi Rustichello De Pise. மார்க்கோவின் பயண அனுபவங்களை ஒர் புத்தகமாக எழுதலாம் எனப் பரிந்துரைக்கிறான் ருஸ்டிசெல்லோ. அவன் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளும் மார்க்கோ அவனிற்கு தன் நீண்ட பயணத்தின் அனுபவங்களை கூறுகிறான்.
1298ல் Devisement Du Monde [மார்க்கோ போலோவின் பயணங்கள்] எனும் பெயரில் பிரெஞ்சு மொழியில் அந்நூல் வெளியாகி பரபரப்பான வாசனைக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்படுகிறது. வெனிஸ் நகர மக்கள் அந்நூலில் விபரிக்கப்பட்ட எண்ணற்ற விபரங்களையும் விளக்கங்களையும் சந்தேகக் கண்ணுடனே பார்த்து அந்நூலை Il Millione [The million ] எனச் செல்லமாக அழைத்தனர். 13ம் நூற்றாண்டின் முக்கிய நூல்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.
சில வருடங்களின் பின் முதியவனாகிவிட்ட மார்க்கோவிற்கு, ருஸ்டிசெல்லோவிடம் இருந்து ஒர் மடல் வருகிறது. மார்க்கோவின் பயண அனுபவங்களை மீண்டும் தான் எழுத விரும்புவதாக தன் விருப்பத்தை தெரிவிக்கிறான் ருஸ்டிசெல்லோ. ஆனால் இதுவரை மார்க்கோ சொல்லியிராத, சொல்லியிருந்தும் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்று கருதி விலக்கப்பட்ட விடயங்கள் யாவையும் இந்நூலில் அப்பட்டமாக தான் எழுத விரும்புவதாகவும் அவன் அறியத்தருகிறான்.
முதல் நூல் பெற்றுத்தந்த பிரபல்யமும், புகழும், புளுகன் என்ற பட்டப் பெயரும் மார்க்கோவிற்கு போதுமானதாக இருக்கும் நிலையில் மார்க்கோ தன் கதையை மீண்டும் கூற ஆரம்பிக்கிறான்..
பெற்றோரிற்கு ஒரே மகனான மார்க்கோ, வெனிஸ் நகரில் வணிகத்தில் சிறந்து விளங்கும் கவுரவமான போலோக்களின் குடும்பத்தை சேர்ந்தவன். தன் சகோதரன் மத்தியோ போலோவுடன் வெனிஸ் நகரை விட்டு வணிகத்திற்காக கிளம்பிச் சென்ற அவன் தந்தை நிக்கோலோ போலோ பல வருடங்கள் ஆகியும் வெனிஸ் திரும்பவில்லை. அவர்களைப் பற்றிய தகவல்களும் கிடைக்கவில்லை. தன் தாயின் மரணத்தின் பின் போலோ ஒர் ஆயாவினால் வளர்க்கப்படுகிறான்.
சிறப்பான கல்வி மார்க்கோவிற்கு அளிக்கப்பட்டாலும் அதில் ஈடுபாடு காட்டாது, துறைமுகத்தின் சேரிப்பகுதிகளில் வாழும் சிறுவர்களுடன் தன் நாட்களை கழிக்கிறான் மார்க்கோ. அவர்களுடன் சேர்ந்து திருடவும் செய்கிறான். வனப்புமிகு வெனிஸின் வறிய மக்களின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்க்கிறான்.
ஒரு நாள் பாவமன்னிப்பு பெறுவதற்காக ஆலயத்திற்கு செல்லும் மார்க்கோ, அங்கு இலாரியா எனும் அழகியைக் காண்கிறான். அவள் மேல் மையல் கொண்டுவிடும் மார்க்கோவை மயக்கி, முதியவனான தன் கணவனை கொலை செய்யத் தூண்டுகிறாள் இலாரியா.
துரதிர்ஷ்டவசமாக மார்க்கோ அக்கொலையைச் செய்யாமலே பழி அவன் மேல் விழுகிறது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் மார்க்கோ.
சிறையிலிருந்து மார்க்கோவின் திட்டத்தால் தப்பிய முதிய யூதன் ஒருவனின் உதவியாலும், நீண்ட காலத்திற்குப் பின் நாடு திரும்பியிருக்கும் தன் தந்தையின் செல்வாக்காலும் மார்க்கோவிற்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்கிறது. ஆனால் மார்கோ வெனிஸ் நகரை விட்டு வெளியேறி விடவேண்டும் என்ற நிபந்தனையும் விடுதலைக்கு துணை வருகிறது.
மொங்கோலிய சக்கரவர்த்தியும், ஜெங்கிஸ் கானின் பேரனுமான குப்ளாய் கானின் வேண்டுகோளிற்கிணங்க நூறு கத்தோலிக்க மதகுருக்களை அவனிடம் அழைத்து செல்ல விரும்பும் நிக்கோலோ போலோ தன் சகோதரன் மத்தியோவுடன், மார்க்கோவையும் சேர்த்துக் கொண்டு நீண்டதொரு பயணத்தை ஆரம்பிக்கிறான்…..
வெனிஸிலிருந்து கடல் மார்க்கமாக ஜெருசலேமின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் நகரான ஆக்ரை அடைந்து, பின் அங்கிருந்து கித்தாயில் [சீனா] அமைந்திருக்கும் மொங்கோலிய ராஜ்ஜியத்தின் தலைநகர் ஹான்பலிக் [பெய்ஜிங்]வரை மார்க்கோ போலோ குழுவினர் மேற்கொண்ட நீண்ட தரை வழிப் பயணத்தை, வாசகர்களை வசியம் செய்து விடும் தன் கதை சொல்லலினால் நாவலின் முதல் பாகத்தில் [ பிரெஞ்சு மொழிப் பதிப்பு] அனுபவிக்க வைத்திருக்கிறார் கதாசிரியர் Gary Jennings .
கதையின் நாயகன் மார்க்கோ போலோ அல்ல, மார்க்கோ விபரிக்கும் பயண அனுபவங்களே கதையின் நாயகனாகி விடுகிறது. கதாசிரியரும் மார்க்கோவை ஒர் கதாநாயகனாகக் காட்டவில்லை, நீண்ட ஒர் பயணத்தின் அனுபவங்களை வியப்புடனும், ஆர்வத்துடனும் உள்ளெடுத்துக் கொள்ளும் பயணியாகவே மார்க்கோ காணப்படுகிறான்.
நாவலின் முதல் பாகத்தின் முக்கிய பாத்திரங்களாக மார்க்கோ, நிக்கோலோ, மத்தியோ, மற்றும் இவர்களுடன் பயணம் செய்யும் மூக்குத்துளை எனும் பெயர் கொண்ட அடிமை ஆகியோரைக் குறிப்பிடலாம். நிக்கோலோ, மத்தியோ ஆகியோர் பணம் செய்வதில் கண் கொண்ட வணிகர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். மார்க்கோ, சாகசங்களையும், புதிய அனுபவங்களையும், பெண் அழகுகளையும் தேடி விரையும் இளைஞனாக காட்டப்படுகிறான். வினோதமான பழக்கங்களைக் கொண்ட அடிமையான மூக்குத்துளை, கதையில் வரும் மாந்தர்களையும், கதையைப் படிக்கும் மாந்தர்களையும் அவர்களின் அதிர்ச்சிகளின் எல்லைகளை விரிவாக்குவதற்கென்றே உருவாக்கப்பட்டிருக்கிறான்.
நீண்ட இந்தப் பயணத்தில் அவர்கள் கடந்து செல்லும் பல்வேறுபட்ட நகரங்கள், பாலைவனங்கள், நீர் நிலைகள், மனிதர்கள், அவர்களின் வாழ்க்கை முறை, மிருகங்கள், தாவரங்கள், வைத்திய முறைகள் என்பவை குறித்த, மிகுந்த தேடலுடனான தெளிவான தகவல்களைத் தந்து கதையின் பக்கங்கள் ஒவ்வொன்றையும் ருசித்துப் படிக்க செய்திருக்கிறார் ஜென்னிங்ஸ். இந்நாவலிற்காக அவர் மார்க்கோ போலோ பயணம் செய்த வழியே பயணித்து அனுபவங்களையும், தன் தேடலையும் செறிவாக்கினார்.
சாகசம், நகைச்சுவை, சிருங்காரம், தீர்க்கமான தகவல்கள் எனும் கலவையுடன் வரலாற்றையும், தன் அற்புதமான கற்பனையையும் சேர்த்து ஜென்னிங்ஸ் தந்திருக்கும் நாவல் பிரம்மிக்க வைக்கிறது.
[சிலுவைப்போரின் எச்சமாக இருக்கும் ஆக்ர் நகரின் அலங்கோலங்கள், துர் மாந்தீரிகம், ஹானின் சிற்றரசரிற்கு தங்கள் காலில் கட்டிய சிறிய பட்டுப் பைகளில் பாக்தாத்தின் சுவையான செர்ரிப் பழங்களை எடுத்து செல்லும் புறாக்கள், பிரம்மிக்க வைக்கும் பாக்தாத்தின் அழகு, மலைக்க வைக்கும் பாக்தாத் சந்தை, சிறுவர் தொழிலாளர்களைக் கொண்ட கம்பள தொழிற்சாலை, குற்றவாளிகளை எண்ணையில் பொரித்தெடுக்கும் பாக்தாத்தின் சட்டங்கள், பசி தாங்காது தங்கள் காதுகளையே வெட்டிப் புசிக்கும் பாலைவனக் கொள்ளையர், காதல் விளையாட்டுக்களில் கனவுலகம் திறக்கும் மருந்து, ரசவாதம், ஆட்டுத்தோலில் செய்த காற்றுப்பைகளில் மிதக்கும் தெப்பங்கள், சமர்க்கண்டுவிற்கு உப்பு விற்க செல்லும் சோழ நாட்டவர் இப்படி ஏராளமான தகவல்களை பக்கத்திற்கு பக்கம் தந்து வாசகனை மயக்கிவிடுகிறார் ஆசிரியர்.]
வாசகர்களை பிரம்மிக்க வைப்பதோடு மட்டுமல்லாது அதிர்ச்சி அடையவும் வைக்கிறார் ஜென்னிங்ஸ். வெனிஸ் நகர மக்களினதும், கத்தோலிக்க மதத்தினதும் கட்டுப்பாடான மத மற்றும் வாழ்க்கை ஒழுக்க நெறிகள், மார்க்கோ தன் பிரயாணத்தில் கடந்து செல்லும் பிரதேசங்களில் அர்த்தமிழந்து அடிபட்டு போவதை தெளிவாகக் காட்டுகிறார் ஜென்னிங்ஸ்.
நாவலில் மதங்கள் குறித்த, சில இனங்கள் குறித்த, சில கருத்துக்களும், சம்பவங்களும் மென்மையான உள்ளம் கொண்ட வாசகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. ஆனால் இவற்றை எளிதாக தூக்கி எறிந்து விடவும் முடியாது என்பதுதான் சிக்கல்.
சிருங்காரம் என்பது ஒர் கலை எனில், அதனை வர்ணிப்பதிலே, அதனை வக்கிரமின்றி அதன் பூரண அழகுடன் எழுதுவதிலே ஜென்னிங்ஸ் ஒர் மகா கலைஞன். ஆனால் பயணத்தில் கடந்திடும் பகுதிகளில் காணக்கிடைக்கும் வேறுபட்ட சிருங்கார வகைகளும், வழக்கங்களும் வாசகனை அதிர்ச்சிக்குள்ளாக்கும் என்பது தெளிவு.
சில சிருங்கார வகைகள் எல்லை மீறியது என்று எண்ண வைத்தாலும், உலகத்தில் இல்லாத [இன்றும்] ஒன்றை ஜென்னிங்ஸ் கற்பனை செய்து வாசகனின் இச்சையை தீர்க்க முயலவில்லை என்பதை உறுதியாக கூறிடலாம். சிருங்காரத்தை தாண்டிப் பார்க்கையில் ஒர் அற்புதமான, சுவையான வாசிப்பனுபவம் தரும் நாவல் இது என்பதில் ஐயமில்லை.
ஹரி ஜென்னிங்ஸ் அமெரிக்காவை சேர்ந்த ஒர் நாவல் ஆசிரியர் ஆவார். இவர் எழுதிய அஸ்டெக் எனும் நாவலிற்கு கிடைத்த வரவேற்பும் விமர்சனங்களும் இவரை பிரபலத்தின் பிரகாசத்தினுள் இட்டு வந்தது. இவரின் நாவல்கள் தீர்க்கமான தகவல்களிற்கும், சரித்திர விபரங்களிற்கும் பெயர் போனவையாகும். மிகுந்த தேடல்களின் பிண்ணனியில் தன் கதைகளை இவர் உருவாக்கியிருக்கிறார். அஸ்டெக் நாவல்களிற்காக பன்னிரெண்டு வருடங்கள் மெக்ஸிக்கோவில் தங்கியிருந்தார். அமெரிக்காவை சேர்ந்த வரலாற்று நாவலாசிரியர்களில் முக்கியமான ஒருவராக கருதப்படும் ஜென்னிங்ஸ், 1999ல் இதய நோயால் காலமானார்.
ஜென்னிங்ஸ் 1984ல் ஆங்கிலத்தில் வெளியிட்ட The Journeyer எனும் இந்நாவல் இருபத்தி நான்கு வருடங்களின் பின் பிரெஞ்சு மொழியில் MARCO POLO – Les Voyages Interdits எனும் தலைப்பில் இரு பாகங்களாக வெளியாகியிருக்கிறது [பதிவு முதல் பாகம் தந்த அனுபவத்தில் எழுதப்பட்டது]. காலத்தின் ஓட்டத்தில் கதையின் சுவை அதிகரித்திருக்கிறதே தவிர சற்றும் குறையவேயில்லை. தரமான எழுத்தின் சிறப்பம்சம் அதுதானே நண்பர்களே.
மனிதர்களின் மனங்களிலே ரகசியப் பயணங்கள் மலரிதழ்களின் அடியில் மறைந்திருக்கும் நுண்ணிய நீர்த்திவலைகள் போல் ஒளிந்திருக்கின்றன. தங்கள் கனவுப் பயணங்களை செய்து முடித்தவர்கள் பேறு பெற்றவர்கள். அதனை நிறைவேற்ற இன்னமும் வாய்ப்புக் கிடைக்கப் பெறாதவர்களின் கனவுகள் அவர்கள் செய்ய விரும்பும் பயணங்களைப் போலவே நீண்டவைதானே.
உலகத்தின் கூரை என அழைக்கப்பட்ட Buzai Gumbad எனும் உயர்ந்த மலைப்பகுதியில் பனிக்காலம் முடிவடைந்து, இலைதுளிர் காலம் ஆரம்பித்திருக்க, குளிரில் விறைத்திருந்த அமு தாரியா நதி அதன் துயில் கலைந்து ஓட, அந்த நதியை தேடி வந்திருக்கும் பருவ காலப் பறவைகளின் குரல்களில் உண்டாகும் சங்கீதத்தை, அவற்றின் சிறகுகளின் அசைவில் உருவாகும் காற்றில் கலந்திருக்கும் உவகையையும், மென்குளிரையும் மார்க்கோ உணர்ந்ததைப்போலவே நானும் உணர்ந்தேன். அந்த நதியின் அருகில் நானும் கண்மூடி இருந்தேன். [*****]
நண்பர் ஜோஸிற்கு என் சிறப்பு நன்றிகள்.
மீ த ஃபர்ஸ்ட்டு!
ReplyDeleteமார்கோ போலோ பற்றி சரித்திரத்தில் படித்ததோடு சரி! மற்றபடிக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!
இந்த குப்ளா கான்-ங்கறவரு ராணி காமிக்ஸ்-ல ஜேம்ஸ்பாண்ட் கதையில வில்லனா வருவாரே, அவருதானே?
தலைவர்,
அ.கொ.தீ.க.
மீ த செகண்டு ஆல்ஸோ!
ReplyDeleteஅதே மாதிரி மார்கோ போலோ-ங்கறது ஒரு சரக்கு பேருதானே?
அய்யய்யோவ்...! என்ன அடிக்க வர்றாங்கோவ்...!
தலைவர்,
அ.கொ.தீ.க.
நல்ல பதிவு கனவுகளின் காதலரே,
ReplyDeleteதொழில்நுட்ப்பம் வளர்ந்த இன்றய சூழ்நிலையிலும் கடற்பயணம் என்பது ஆபத்தாகதான் இருக்கிறது. அன்றய காலகட்டத்தில் கடற்பயணம் மேற்கொண்ட மார்கோ போலோ பாராட்டுக்கு உறியவர் தான்.
பழைய தமிழர்களும் இத்தகைய பயனங்களை மேற்கொண்டு இருந்து இருக்கலாம்..ஆனால் பிற்காலத்தில் வருபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவான நூல்களை யாரும் (ருஸ்டிசெல்லோ போல்) எழுத்திடவில்லை என்பது நமக்கு இழப்பே...
அன்பு நண்பரே,
ReplyDeleteதமிழ்நாட்டில் தஞ்சாவூருக்கும் போலோ வந்து சென்றிருக்கின்றார். மொழி தெரியாத வெளிநாட்டவர் எவ்வாறு நம்மை அப்போது அவதனித்திருக்கின்றார் என்பது தெரியாலேயே போய்விட்டது. இவரது சவப்பெட்டி தொலைந்து போனது வரலாற்று புதிர்களில் ஒன்று.
பெரிய அளவில் புகழ் பெறாமலேயே போன ஒரு கதைசொல்லியின் விவரங்களை தேடிப்பிடித்து எழுதியதில் உங்களின் உழைப்பு தெரிகிறது.
பட்டுப்போன்று மென்மையாக வழுக்கி செல்லும் வரிகளில் மார்க்கோ போலாவின் பயணங்களை எழுதி, பல்வேறு உணர்ச்சிகளை அதில் கொண்டு வந்திருப்பார் கதாசிரியர்.
மிக மிக விசித்திரமான, அறிந்து கொள்ள வேண்டிய மனிதர் மார்க்கோ போலொ.
நல்ல விமர்சனம். கூடுதல் உழைப்பு எடுத்திருக்கும். மிக பிரமாதமாக வந்திருக்கிறது.
காதலரே,
ReplyDeleteமார்க்கோ போலோ பற்றி பள்ளி பாட புத்தகங்களில் படித்ததோடு சரி... பின்பு அவரின் பயண கட்டுரைகளில் பலவித அனுபவங்களை பற்றி அவர் விவரித்திருக்கிறார் என்று படித்தது உண்டு. அந்த விடயங்களை சுவைபட சற்று கற்பனை கலந்து சாதித்திருக்கிறார் போல ஜென்னிங்ஸ்.
நாவல்கள் எழுதுவதற்காக அந்த சரித்திர ஸ்தலங்கள், மற்றும் பயணங்களை தானும் மேற்கொண்டு ஒரு எழுத்தாளர் நிஜமாக்கியிருப்பதே, அவரின் அர்ப்பணிப்பு பணியை விவரிக்கிறது. பின் அவர் எழுத்துகளிள் வர்ணணைகள் ஜாலம் செய்வது வாஸ்தவமான விசயம்தான்.
// சமர்க்கண்டுவிற்கு உப்பு விற்க செல்லும் சோழ நாட்டவர் //
நம் தேசத்தினரை பற்றி அடுத்தவர் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டத்தில் நாமிருக்கிறோம் போங்க...
// பிரம்மிக்க வைக்கும் பாக்தாத்தின் அழகு, மலைக்க வைக்கும் பாக்தாத் சந்தை //
ஹ்ம்ம்... இப்படி எழுத்தாளர்களால் வர்ணிக்கபட்ட சரித்திர புகழ் வாய்ந்த நகரம் இப்போது அரசியல் சூழ்நிலையில் பிய்த்து எறியபட்டது மனதை கணக்க செய்கிறது.
எழுத்துகள் நிறைந்த நாவல்கள் மீது எனக்கிருக்கும் அலர்ஜியை உங்கள் விமர்சனங்கள் சீக்கிரத்தில் மாற்றி விடும் போல. ஏற்கனவே வாங்கி வைத்த காமிக்ஸ் படிக்க நேரம் தேடி கொண்டிருக்கையில், உங்கள் புண்ணியத்தில் விரைவில் நாவல்களையும் தருவித்து திண்டாட போகிறேனோ... :)
// மனிதர்களின் மனங்களிலே ரகசியப் பயணங்கள் மலரிதழ்களின் அடியில் மறைந்திருக்கும் நுண்ணிய நீர்த்திவலைகள் போல் ஒளிந்திருக்கின்றன.... அந்த நதியின் அருகில் நானும் கண்மூடி இருந்தேன். //
என்னை அந்த கட்டத்தை நினைவுகூற வைத்த வர்ணனை.
அதிரடியை அமர்க்களமாக தொடருங்கள், கனவுலகளின் செல்லமே :)
மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, குப்ளா கான் எனும் பெயர் ஒர் காலத்தில் கேட்பவர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது. ஜேம்ஸ்பாண்டை கொஞ்சம் பயம் காட்ட வேண்டாமா. உண்மையிலேயே மார்க்கோபோலோ என்று சரக்கிற்கு பெயர் வைத்த நபரிற்கு அபார கற்பனை சக்தி. குறைந்த செலவில் உலகம் முழுக்க சுற்றி வருவதற்கு ஒரே வழி என்று சொல்லாமல் சொல்கிறார். குறும்பான கருத்துக்களிற்கு நன்றி தலைவர் அவர்களே.
ReplyDeleteநண்பர் சிவ், நீங்கள் கூறுவது உண்மையே. தமிழர்களின் பயண வரலாறு குறித்த பதிவுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
ஜோஸ், இப்பதிவு வருவதற்கு மூலகாரணமே நீங்கள் தானே. பட்டுப்பாதையில் பயணம் செய்த பயணிகளை தன் பட்டு வரிகளால் மறக்க முடியாது செய்து விட்டார் ஜென்னிங்ஸ்.
மார்க்கோ ஐரோப்பாவிற்கு எடுத்து வந்த இரு முக்கியமான விடயங்கள்
1- நிலக்கரி
2- காகிதப் பணம்
மார்க்கோ பிரயாணம் செய்யவில்லை மற்றவர்களின் கதைகளைக் கேட்டு புளுகினார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.
தன் தந்தையின் மேல் கொண்ட அன்பின் பேரில் வெனிஸில் San Lorenzo எனும் ஆலயத்தில் ஒர் கல்லறையில் அவரை அடக்கம் செய்தார் மார்க்கோ. தன் உடலையும் அங்கேயே அடக்கம் செய்திட வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது. அவ்வாறே செய்தார்கள். 16ம் நூற்றாண்டின் இறுதியில் தேவாலயத்தின் திருத்த வேலைகளில் மார்க்கோவின் கல்லறை காணாமல் போனது. அவர் இன்னும் அந்த ஆலயத்திற்குள்தான் எங்கோ இருக்கிறார் என்கிறார்கள் சிலர். என்னைக் கேட்டால் அவர் பயணம் செய்யப் போய் விட்டார் என்பேன். சும்மா இருக்கும் டான் பிரவுன் நண்பர் ஜோஸை நாயகனாக வைத்து 13 மணிநேர டைம் பிரேமிற்குள் இது குறித்த நாவல் ஒன்று எழுத வேண்டுகிறேன்.
ரஃபிக், எம்மைப் பற்றி பிறர் நல்லவிதமாக சொன்னால் நல்லதுதானே. எங்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டாமா.
பாக்தாத் மட்டுமல்ல சரித்திரத்தின் பாதையில் புகழோடு இருந்த நகரங்கள் பல மண்ணோடு உறங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
நீங்கள் நாவல்களை படித்தால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நண்பரே. ஆனால் உங்களை நீங்க்ள் வற்புறுத்திப் படிக்காதீர்கள். அது தானாகவே வரும்.
என்னது செல்லமேயா!! நீங்கள் எதற்கோ மிக கடுமையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உறுதி :))
ஏக் பஞ்சணை.. ஏக் பைங்கிளி I SAY.
நண்பரே,
ReplyDeleteரே ஜென்னிங்க்ஸ் அவர்களின் புத்தகம் ஒன்றை நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இருக்கிறேன். அந்த புத்தகத்தை படிக்கும்போது தான் ஆசிரியர்கள் தங்களின் புத்தகத்தை எழுத எவ்வளவு ஆண்டுகள் கஷ்டப் படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அந்த புத்தகம் நமக்கு காமிக்ஸ் வாயிலாக ஏற்கனவே பரிச்சயப் பட்ட ஒன்று என்பதால் லயித்து படிக்க முடிந்தது. ஆனாலும் ஓரிரு இடங்களில் சிறிது அலுஉப்பு தட்டியதை மறுக்க இயலாது.
பதிவுக்கு நன்றி.
காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
குரங்கு குசலாவை தெரியுமா?
அருமையான தெளிந்த நீரோடை போன்ற நடை. பாராட்டுக்கள்.
ReplyDeleteநண்பர் காமிக்ஸ் காதலன் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி.
ReplyDelete//இந்த குப்ளா கான்-ங்கறவரு ராணி காமிக்ஸ்-ல ஜேம்ஸ்பாண்ட் கதையில வில்லனா வருவாரே, அவருதானே?//
ReplyDeleteஅவரே தாங்க. அதாவது ஐய்வரின் மனைவியை நிர்வாணமாக கட்டி தொங்க விட்ட அதே குப்ளா கான் தான் காஷ்மீரில் 007 என்ற கதையின் வில்லன்.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
//மார்க்கோ பிரயாணம் செய்யவில்லை மற்றவர்களின் கதைகளைக் கேட்டு புளுகினார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்...//
ReplyDeleteஇதனைப் பற்றி சமீபத்திஇல் எங்கேயோ படித்த நியாபகம் இருக்கிறது. National geographic magazine இதழில் என்று நினைக்கிறேன். அருமையான கோர்வையான தகவல்களுக்கு நன்றி.
தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்
தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்
நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteஅமேசன்.காம்.......இதோ வந்திட்டேன். ஒரு புத்தகம் எனக்கு வேண்டும் ;)
ReplyDeleteநண்பர் ஜே அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, தலைநகரில் அலைந்த காலங்களில் விகாராமகாதேவி பூங்காவிற்கு அருகிலிருக்கும் நூலகமே எங்கள் அமேசன்.காம், அதன் சுற்றுப்புறத்தின் எழில் உண்மையிலேயே மயங்க வைப்பது.
ReplyDelete